Skip to content
Home » ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #7 – புதுச்சேரியில் வீசிய புயற் காற்று

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #7 – புதுச்சேரியில் வீசிய புயற் காற்று

புதுச்சேரியில் வீசிய புயற் காற்று

நவம்பர் மாதத்து மழை நமக்குப் புதிதல்லவே! அதிலும் குறிப்பாக 2015ஆம் ஆண்டு நவம்பர் மாதத்துப் பெருமழையை கடலூர், சென்னைவாசிகள் அவ்வளவு எளிதில் மறந்துவிட மாட்டார்கள்!

கடலோர நகரமான புதுச்சேரிக்கும் புயற்காற்று, அதனூடானப் பெருமழை, மிகவும் அறிமுகமான ஒன்றுதான். தானே (2011), நீலம் (2012), வர்தா (2016), கஜா (2018) ஆகிய அண்மையப் புயற்காற்றுகள், புதுச்சேரியைத் தொட்டும் உலுக்கியும் சென்றவை!

இப்படித்தான், 1916 நவம்பர் 22இல் வீசிய பெரும்புயல் புதுவையைப் புரட்டிப் போட்டது. இதுபற்றி பாரதியின் ’புயற்காற்று’, ‘பிழைத்த தென்னந்தோப்பு’, ‘மழை’ ஆகிய கவிதைகள் குறிப்பிடத்தக்கன. மேலும் இதுதொடர்பாக, 1916 டிசம்பர் 11 சுதேசமித்திரனில் வெளியான பாரதியின் பின்வரும் கட்டுரையும் குறிப்பிடத்தக்கதாகும்:

புயற்காற்று

வெள்ளிக்கிழமை திருக்கார்த்திகை.

முதலாவது குடிசைகள் வேண்டும். குடிசையில்லாமலும், பிழைப்பில்லாமலும் சில ஜனங்கள் குடியோடிப் போவதாக முத்யாலுப்பேட்டை முதலிய இடங்களிலிருந்து செய்தி கிடைக்கிறது.

சில இடங்களில் தரையோடு கிடக்கும் மரங்களை வெட்டும்போது அடியிலே மனிதவுடல் அகப்படுகிறது. வெள்ளவாரிப் பக்கத்தில் மரத்தடியில் ஒரு குழந்தையின் கால் அகப்பட்டது. உடலில் மற்றப் பகுதி காற்றிலே போய்விட்டது. முத்தியாலுப் பேட்டையிலும், மரத்தை ஏலத்தில் எடுத்தவர் வெட்டிப் பார்க்கும்போது கீழே குழந்தையுடல் கிடந்தது.

நெல்லித்தோப்பு

நெல்லித்தோப்பு என்ற கிராமம் புதுச்சேரிக்கு மேற்கே இரண்டு மைல் தூரத்திலிருக்கிறது. இங்கு புயற்காற்றுக்கு முன்னிருந்த வீடுகளின் தொகை சுமார் 450. இவற்றில் அடியோடே அழிந்துபோன வீடுகள் 50. சேதப்பட்டன பல. ஜனச்சேதம் 5 பேர். 3 ஸ்திரீ. ஒருகுழந்தை. ஒருமனிதன். அனைத்துமிழந்து, நிர்கதியாக நிற்போரின் தொகை ஐம்பதுக்கு மேலுண்டு. கால்நடைச் சேதம் 26-க்கு மேல். பெரும்பாலும் ஒரே மிராசுதாரின் உடைமை.

அங்கிருந்து மேற்கே சுமார் ஒன்றரை மைல் தூரம் போனால், உழவர்கரைப் பறைச்சேரி என்ற கிராமம். இவ்வூரில் புயற்காற்றுக்கு முன்னிருந்த வீடுகள் சுமார் 300. இப்போது மிச்சமிருப்பது 4. மற்ற 296 வீடும் காற்றிலே போய்விட்டன. ஜனச்சேதம் 4 பேர். ஒரு மனிதன். 2 ஸ்திரீகள், ஒரு குழந்தை.

கருவடிக்குப்பத்து பறைச்சேரி

முத்தியாலுப்பேட்டைக்கு மேற்கே கருவடிக்குப்பம். இதை ஜனங்கள் கரடிக்குப்பம் என்று சொல்வார்கள். இங்குள்ள வீடு தொண்ணூறும் புயற்காற்றிலே அழிந்து போயின. புயற்காற்றுக்கு மறுநாள் புதுச்சேரியில் இலேசான மழை பெய்தது. அந்த மழை கருவடிக்குப்பத்தில் பலமாகப் பெய்ததாகவும் அதனால் சில கால்நடைகள் மடிந்ததாகவும் தெரிகிறது.

உபகாரம்

முத்தியாலுப்பேட்டையிலும், வேறு சில இடங்களிலும் ஹாஜி மஹமதுஹனீப் ஸாஹீப் என்ற பட்டணத்து வியாபாரியின் தர்மங்கள் பிரபலமாக நடக்கின்றன. இவருடைய வியாபார ஸ்தலத்துக் கெதிரே (முத்யாலுப் பேட்டையில்) புயற்காற்றுக்கு மறுநாள் விடியற்காலத்தில் ஏழைகளுக்குக் கஞ்சி வார்க்கும் பொருட்டாக மூட்டிய அடுப்பு இன்னும் அவிக்கவில்லை. வேறு பல ஜனோபகாரிகள் தத்தம்மால் இயன்ற உதவி செய்து வருகிறார்கள்.

வீடு

பள்ளத்து வீதியில் புயற்காற்றடித்தபோது ஒரு கிழவன் மரம் விழுந்து செத்துப் போனான். அவன் வீட்டைப் பார்க்கப்போனபோது வழியெல்லாம் இடிசுவர். இடிசுவர்களைத் தாண்டி அப்பாலே போனால், அங்கே அந்தக் கிழவனின் மனைவி தன்னுடைய ’வீடு இதுதான்’ என்று காண்பித்தாள். ஒரே ஒரு சிறிய கதவும், அதன்மேலே இரண்டு தென்னை மரங்களும் விழுந்து கிடந்தன. அதுதான் வீடு. வீடே அவ்வளவுதான். மற்ற மண்பொடியெல்லாம் காற்றிலும் மழையிலும் போய்விட்டது. அந்த ஒற்றைக் கதவு மாத்திரம் தென்னை மரங்களின் பாரத்தால் பறந்து போகவில்லை.

சிறு களவு

குடிசைகள் விழுந்தவுடனே மண்பாண்டங்கள் நொறுங்கிப்போயின. எனினும் சில இடங்களில் துணி மூட்டையும் மிஞ்சியிருந்தது. அது களவு போனதாகப் பல ஏழை வீடுகளில் துலங்குகிறது! புயற்காற்று, களவை அடித்துக்கொண்டு போகவில்லை.

நெருப்பு மழை

வானத்திலிருந்து நெருப்புத் துண்டுகள் சில ஸமயங்களில் விழுமென்பது நவீன வான சாஸ்திரம் படிப்பவருக்கு நன்றாகத் தெரிந்த விஷயமே. ஸாதாரண காலங்களில் எரி நக்ஷத்திரங்களாக வந்து விழுந்து காற்றோடு கலந்து போகிற கோளங்கள், சில ஸமயங்களில் கட்டித்துண்டுகளாக மண்மேல் எரிந்துகொண்டு விழும். புயற்காற்றடித்த இரவில் அவ்விதமான நெருப்புமழை சில இடங்களில் பெய்ததாக வதந்தி யுண்டாகிறது. கூடப்பாக்கத்தில் சில மரங்கள் கரிந்து போயிருப்பதாகவும், மற்றும் சில இடங்களில் மனிதர் உடல்வெந்து போயிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதில் எத்தனை தூரம் உண்மையோ தெரியவில்லை. (நன்றி: காலச்சுவடு, டிசம்பர் 2015)

இதோ இன்றைக்குச் சரியாக 277 ஆண்டுகளுக்கு முன்பு, இதே நவம்பர் மாதத்தில் புதுச்சேரியில் ஒரு பெருங்காற்று அடித்தது. அடுத்தடுத்து இரண்டு பெருங்காற்று அடித்தாலும் இந்த ’அற்பிசி 21 போல இல்லை’ என்பது ஆனந்தரங்கரின் ஆதங்கம்:

1745 நவம்பர் 4 அற்பிசி 21 வியாழக்கிழமை

அஸ்தமித்தவுடனே துவக்கி, பெருங்காற்றடித்தது. அந்தக் காற்று வியாழக்கிழமை நாள் ராத்திரி முப்பது நாழிகையும் அடித்தது. ஆனால், இந்தக் காற்றினுடைய பிரதாபம் இன்ன மட்டென்று ஒருவிதமாய்ச் சொல்லக்கூடாது.

அதெப்படி யென்றால், இந்த முப்பது நாழிக்குள்ளே பட்டணத்திலே ஒரு மரமாகிலும் தப்பவிடாமல் ஊரிலே உண்டான மரங்களெல்லாம் படுகாடாய் விழுந்து போனதும், சிறிது மரங்களை முறுக்கி முறித்துப்போட்டதும், அதுவுமல்லாமல் பட்டணங்களுக்குள்ளே தோட்டந்துரவுகள், தென்னை மரம், மா மரங்கள் எப்பேர்ப்பட்ட மரமும் ஒன்றாகிலும் தப்பாமல் படுகாடாய் விழுந்து போச்சுது. அதினாலே வெகுபேர் கெட்டுப் போனார்கள்.

இதல்லாமல் உப்பாற்றிலே அவரவருக்கு மனைவிட்டு, அவரவர்கள் கல்வீடும் கூரை வீடுமாய் அவரவர் சக்திக்கான சரமாய்க் கட்டிக்கொண்டு குடியிருந்தார்கள். அப்படியிருக்கச்சே இந்தப் பெருங்காற்றிலே மேல்வெள்ளம் வந்து உப்பாற்றுத் தண்ணீர் வெளியே போகத்தக்கதாய்க் கட்டியிருந்த மதகு மூடியிருக்கச்சே அந்த மதகைப் பிடுங்கிக் கொண்டு அந்த வெள்ளம் ஓடிற்று. அந்த வெள்ளத்திலே வீடுகள் வந்து விழுந்து உப்பாற்றிலே கட்டியிருந்த வீடுகள் பேரிலே ஒருமுழ வெள்ளம் வந்து விழுந்து அங்கே கட்டியிருந்த மூன்று தெருவும் படுகாடாய் விழுந்துபோய், வீடுகள் வெள்ளத்திலே முழுகிப்போய் அந்த வெள்ளத்திலே வீடுகளை அடித்துப் போனதும், மாடுகள் கன்றுகள் செத்ததும், மனுஷர் செத்ததும் இப்படியாக வெகு சேதப்பட்டு அந்த வெள்ளம் இப்படி பட்டணத்து மேலே திரும்பினபடியினாலே பள்ளத்துத் தெருக்களிலேயெல்லாம் அரை மட்டும் தண்ணியும் பெருந்துடை மட்டும் தண்ணியும் நின்றபடியினாலே பள்ளத்தாக்கிலே யிருந்த வீடுகளெல்லாம் அநேகமாய் விழுந்து போச்சுது.

இதல்லாமல் இந்தக் காற்றிலே காக்காய், குருவிகள், பின்னையு மிருக்கப்பட்ட பட்சிகள் அநேகமாய் தெருவுக்குத் தெரு செத்து மிதந்தது மட்டுமிதமில்லை. இதல்லாமல் பட்டணத்துக்கு வெளியே யிருக்கப்பட்ட தோட்டந் துரவுகள் சகலமும் அடியோடே விழுந்து போய்விட்டது. வீடு வாசல்களும் அநேகஞ் சேதம்.

இதல்லாமல் அவரவரது வெளியிலே யிருக்கப்பட்ட ஆடுமாடுகள் ஒன்றாகிலும் தப்பிப்பிழைப்பதற் கிடமில்லாமல் தரந்தரமாய் உளைந்து போச்சுது. அந்தச் செத்த ஆடுகளைப் பட்டணத்துக்குள்ளே அவரவர் வாங்கி வந்து வீடுகளிலே காயப்போட்ட படியினாலே அதுகள் காய்கிறதுக்கு இடமில்லாமல் மழையிலே நனைந்துப் பட்டணமெல்லாம் தெருவுக்குத் தெரு பிண நாற்றமாய் இரண்டு மூன்றுநாள் மட்டுக்கும் வீதியிலே புறப்படக்கூடாமல் இப்படி அவஸ்தைப்பட்டுப் போச்சுது.

ஆனால், திருவுள எத்தனத்தாலே பொழுது விடிந்தவுடனே காற்றும் மழையும் நின்றுபோக படியினாலே ஒரு சாமத்துக்குள்ளே எல்லா தண்ணீரும் வாங்கிப் போய் அவரவர் வீடு வாசலும் தப்பித்ததல்லாமல் மறுநாளைக்கும் அப்படி காற்று அடித்ததால் பட்டணத்திலே ஒரு வீடாகிலும் தப்பமாட்டாது. … சுவாமி காத்தார்.

1745 நவம்பர் 23 கார்த்திகை 12 செவ்வாய்க்கிழமை

ராத்திரி ஒருசாம மட்டும் காற்றடித்தது. ஆனால் முன் அற்பிசி 21 அடித்த காற்றிலே நாற்பதிலே ஒருபங்கு காணும். மறுபடியுமிப்போ எதிர்காற்று அடிக்கக் காரணமே தென்றால் …அமாவாசை கேட்டை நக்ஷத்திரம் செவ்வாய்க் கிழமையும் ஒன்றாய்க்கூடின படியினாலே காற்றுக்கு யோகமிருக்குதென்று சொன்னார்கள். அந்தப்படிக்கு சாஸ்திரம் தப்பாமல் சாடையாய் அடித்துவிட்டது. முந்தின காற்று அடிக்கிறபோது ஒருத்தராகிலும் அறிந்து சொன்னதில்லை. இந்தவிசை சனங்களெல்லாரும் பயந்திருந்தார்கள். சுவாமி தயவு பண்ணினார்.

1745 நவம்பர் 28 கார்த்திகை 16 சனிவாரம்

காலமே ஏழுமணிக்குத் துவக்கி மறுநாள் ஆதிவாரம் பொழுது விடிந்து ஒன்பது மணிக்கு மட்டுக்கும் பெருங்காற்றடித்தது. ஆனால் அந்தக் காற்று மிக்க பலமாய்த்தானே அடித்தது. ஆனால் அற்பிசி 21 அடித்த காற்றிலே முக்கால்வாசி மட்டென்று சொல்லலாம். அது அரைவாசி உண்டென்று சகல சனங்களுக்கும் தோணப்பட்டது. என்னத்தினாலே என்றால் முந்தினக் காற்றுக்குப் பட்டணத்திலே உள்ள மரங்கள் தோட்டந் துரவிலும் அகப்பட்ட மாவடை மரவடைகள் சகலமும் படு சூரணமாய்ப் போச்சுது. ஆகபடியினாலே அந்த விசை அடித்த காற்று தெரியாமலிருந்தது. ஆகிலும்…

(தொடரும்)2

பகிர:
கோ. செங்குட்டுவன்

கோ. செங்குட்டுவன்

விழுப்புரத்தில் பிறந்து வளர்ந்து வசித்து வருபவர். ஊடகத்துறையில் 20 ஆண்டுகாலம் செய்தியாளராகப் பணியாற்றியவர். கலை, இலக்கியம், பண்பாடு மற்றும் வரலாற்று அமைப்புகளில் பங்கேற்று இயங்கி வருபவர். 'சமணர் கழுவேற்றம்', 'கூவம் - அடையாறு - பக்கிங்காம்: சென்னையின் நீர்வழித்தடங்கள்' உள்ளிட்ட நூல்களை எழுதியிருக்கிறார். தொடர்புக்கு : ko.senguttuvan@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *