Skip to content
Home » ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #8 – ஆனந்தரங்கர் பார்த்து வியந்த அதிசயங்கள்!

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #8 – ஆனந்தரங்கர் பார்த்து வியந்த அதிசயங்கள்!

ஆனந்தரங்கர் பார்த்து வியந்த அதிசயங்கள்!

பட்டப்பகலில் நட்சத்திரம் தெரிவது, பூசணி அளவு வால்நட்சத்திரம் விழுவது இவற்றையெல்லாம் நேரில் பார்த்த ஆனந்தரங்கர் அதிசயித்துப் போகிறார்.

இப்படியான வால் நட்சத்திரத்தின் பெயரை தூமகேது என்றும் குறிப்பிடுகிறார். புறநானூற்றுக் கவிஞன் கபிலர், ‘தூமம் தோன்றினும்’ எனக் குறிப்பிடுகிறார். இன்னொரு கவிஞரான கூடலூர்கிழார் ‘தலைநாள் மீன்’ எனக் குறிப்பிடுகிறார். திருப்பாதிரிப்புலியூர் தலம் குறித்துப் பாடிய திருநாவுக்கரசர் ‘இருசுடர் வீழினும்’ என்கிறார். இதற்குத் தூமகேதுவும் விண்மீனும் எனப் பொருள் தரப்படுகிறது.

வால் நட்சத்திரம் குறித்துத் தனது ‘சாதாரண வருஷத்து தூமகேது’ கவிதையில் பாடியுள்ள பாரதி, ‘தீயர்க்கெல்லாம் தீமைகள் விளைத்துத் தொல்புவியதனை துயர்க்கடலில் ஆழ்த்தி நீ போவை’ என்கின்றார்; ‘பொய்யோ மெய்யோ?’ எனக் கேள்வி கேட்கிறார். இப்படியான ஐயம் ஆனந்தரங்கருக்குள்ளும் இருந்தது.

தூமகேது வால்நட்சத்திரம் விழுவது ‘விபரீத காலம்’ என்று அஞ்சுகிறார். இவருடன் வால்நட்சத்திரம் பார்த்த பிரெஞ்சு அதிகாரி சேன்ழாக்-ம் ‘ஆமாம் இதெல்லாம் கலகத்திற்கான சிக்னல்’ என்கிறார். ‘இப்படியெல்லாம் சகுனம் பார்க்கும் வழக்கம் உங்கள் நாட்டிலும் இருக்கிறதா?’ என்று ஆச்சரியத்துடன் கேட்கிறார் ஆனந்தரங்கர்.

பீரங்கியில் இருந்து சீறிப்பாயும் தீக்குடுக்கையும், இராமாயணத்தில் குறிப்பிடப்படும், அக்னி நட்சத்திரமாகத் தெரிகிறது. ஆனந்தரங்கர் அதிசயிக்கிறார்.

இதோ அவரது எழுத்துக்களில் இப்படியாக:

1743 டிசம்பர் 19 மார்கழி 8 வியாழக்கிழமை

இற்றைநாள் சாயங்காலம் நாலு மணிக்குக் கண்ட அதிசயமென்ன வென்றால் இதுவரைக்கும் பத்துநாளாய்ப் பட்டப்பகலிலே நக்ஷத்திரம் கண்டுகொண்டு வந்தது. பிற்பாடு இரண்டு நக்ஷத்திரம் கண்டுகொண்டு வந்தது. அதென்னமோ விபரீதமென்றும் பட்டம்பகலிலே நக்ஷத்திரம் காணுகிறது ஆச்சரியமாயிருக்கிறதென்று சொன்னார்கள்.

அப்படியிருக்க இற்றைநாள் சாயங்காலம் நாலு மணிக்கு வாயு மூலையிலே ஒரு நக்ஷத்திரம் பூசணிக்காய் பருமனிலே எரிந்துகொண்டு விழுந்தது. அதை இந்தப் பட்டணத்திலுள்ள பேர்களெல்லாரும் கண்டார்கள் ஆனதினாலே என்ன விபரீதம் பிறக்குமோ தெரியாது என்று சகலமான பேரும் சொல்லிக்கொண்டார்கள். இப்படிப் பட்டம் பகலிலே நக்ஷத்திரம் எரிந்து விழுந்தது ஒரு காலங்களிலேயுமில்லை என்றதாக சகல சனங்களும் சொல்லிக் கொண்டார்கள்.

1743 தெசம்பர் 29 மார்கழி 21 ஆதிவாரம்

சாயங்காலம் மேற்கே ஒரு நக்ஷத்திரம் வால் முளைத்த நக்ஷத்திரம் கண்டது. அதை தூமகேதுவென்று சொன்னார்கள். இது நல்ல நாளைக்குக் காணாதாம். இதினாலே என்ன காலக்கேடோ தெரியாதென்று வெகுசனங்கள் அங்கலாய்த்தார்கள்.

1744 பிப்ரவரி 11 மாசி 3 செவ்வாய்க்கிழமை

… பட்டம்பகலிலே நக்ஷத்திரம் கண்டதும், பட்டம்பகலிலே நக்ஷத்திரம் விழுந்ததும் வால்முளைத்த நக்ஷத்திரம் பிரம்மாண்டமாய் இரண்டேற்றக்கால் அவ்வளவு உயரம் தூபம் போலே வால் காண்கிறதும் இதுகளெல்லாம் ஒரு விபரீத காலங்களுக்குக் காணுமென்கிறதாய் முந்நாளையிலே பெரியோர்கள் சொல்லுவார்கள். அதற்கு ஏஷ்யமாகக் காண்கிறது போலேயிருக்கிறது.

முன் மார்கழி மாதம் 18ந்தேதி மேற்கண்ட வாள்முளைத்த நக்ஷத்திரம் முன்னே கண்டபோது சூட்சுமமாய்க் கண்டு பிற்பாடு வரவர நாளுக்கு நாள் விர்த்தியாய் வளர்ந்து கொண்டே வருகிறது. இன்றைய தினம் வாலினுடைய பிரமாணம் இரண்டேற்றக்கால் பிரமாணம் உண்டுபோல் காண்கிறது.

1747 மார்ச்சு 24 பங்குனி 14 சுக்கிரவாரம்

இற்றைநாள் நானும் முசியே சேன்ழாக்கும் சவாரி போய் முத்தியப்பிள்ளை தோட்டத்திலே வந்திறங்கினோம். அப்போது சாயங்காலமாகி அரை நாழிகை உண்டு. அப்போது ஈசானிய மூலையிலே யிருந்து நயிகுதி மூலையாய் ஒரு நக்ஷத்திரம் பனைமவ்வளவு நிலத்திலே யெரிந்து விழுந்தது. எதனுடைய வெளிச்சம் இப்படியென்று சொல்ல மாட்டேன். ஒரு பூரணச்சந்திரன் பிரகாசம் போலேயிருந்தது. என்னோடு கூட பார்த்த முசியே சேன்ழாக்கு சொன்னது இதனுடைய சிக்னல் கலகமானாலும் நடந்து வெகுசனம் சாவார்களென்று சொன்னதற்கு நான் உங்களுக்குள்ளேயு மிந்தச் சாடை சொல்லுகிறது உண்டா என்று கேட்டதற்கு எங்களுக்குள்ளேதான் முன்னே சொல்லுகிறது பார்த்துச் சொன்னார் தப்புகிறத்தில்லை யென்று சொன்னான்.

1748 செப்டம்பர் 8 ஆவணி 27 ஆதிவாரம்

…நானும் வழுதாவூர் வாசற்படியே போய் அந்த குந்தானி பீறங்கி சுடுகிறது பார்த்தேன். துரையுமங்கே வந்தார். ஆனால் குந்தானி பீறங்கியிலே அந்த நூற்று முப்பத்தாறு றாத்தலிருக்கிற தீக்குடுக்கையை வைத்து தாழச்சுடுகிறது. அந்த தீக்குடுக்கை ஆகாசட்டுக்கு முசந்து அங்கேயிருக்கிற ஒழுகரைக்கு வட பாரிசமிருக்கிற மேட்டுக்கும் பேரிலேயிருக்கிற தண்டின் பேரிலே விழுகிற விசித்திரமும் அந்த தீக்குடுக்கை போகும்போது நெறுப்பு கக்கிக்கொண்டு போகிறதும் த்வனியும் பார்த்தால் முன் அக்கினி நக்ஷத்திரமென்று முன் ராமாயணங்களிலே சொல்லியிருக்குதே அதுதானிது என்கிறது மல்லாமல் சுவாமி உண்டாக்கப்பட்ட இடி விழுகிறது பார்த்து யிருக்கிறோம். கேட்டுமிருக்கிறோம். அதற்கு பதில் மனுஷன் சிரிஷ்டித்த இடியென்று எண்ணினே யல்லாமல் பின்னை ஒன்றும் யெண்ணநானல்ல. இது புறப்படும் போது ஒரு சப்தம். அப்பால் விழும்போது ஒரு சப்தம். விழுந்த பிற்பாடு வெடிக்கும்போது ஒரு சப்தம். இப்படி மூன்றுவிதமாயுண்டாகி யிருக்கிறது.

(தொடரும்)

பகிர:
கோ. செங்குட்டுவன்

கோ. செங்குட்டுவன்

விழுப்புரத்தில் பிறந்து வளர்ந்து வசித்து வருபவர். ஊடகத்துறையில் 20 ஆண்டுகாலம் செய்தியாளராகப் பணியாற்றியவர். கலை, இலக்கியம், பண்பாடு மற்றும் வரலாற்று அமைப்புகளில் பங்கேற்று இயங்கி வருபவர். 'சமணர் கழுவேற்றம்', 'கூவம் - அடையாறு - பக்கிங்காம்: சென்னையின் நீர்வழித்தடங்கள்' உள்ளிட்ட நூல்களை எழுதியிருக்கிறார். தொடர்புக்கு : ko.senguttuvan@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *