புதுச்சேரி ஆளுநரிடம் பெரிய துபாஷித்தனத்திற்கு வருகிறவர்கள் கிறிஸ்தவர்களாக இருக்கவேண்டும் என்பது எழுதப்படாத விதி. பெரிய துபாஷியாக இருந்த கனகராய முதலியார் மறைவுக்குப் பிறகு அந்த இடத்திற்கு ஆனந்தரங்கர் வருவார் எனும் பேச்சு பலமாக எழுந்தது. அப்போது கிறிஸ்தவ மதத்திற்கு மாற வேண்டும் என்று பல நேரங்களில் அவருக்கு நெருக்கடிகள் தரப்பட்டன.
இந்த நேரத்தில் ஆனந்தரங்கருக்கும் சம்பா கோவில் பாதிரியார் கேர்துக்கும் இடையே நடந்த நீண்ட உரையாடல் முக்கியத்துவம் பெறுகிறது.
‘நீர் கிறிஸ்துவரானால் வேறே இடமில்லாமல் சமஸ்தான பேரும் இந்தப் பட்டணத்துள்ளே ஆவார்களென்று’ பாதிரியார் சொல்ல, ஆனந்தரங்கரோ, ‘இந்தப் பட்டணத்துக்குள்ளே கிறிஸ்துவராயிருக்கிற பேர்கள் ஒரு பங்கும் மற்றப் பதினைந்து பங்கும் தமிழராயிருக்கிறார்கள். இதல்லாமல் கிறிஸ்துவருக்குள்ளே ஐஸ்வர்யந்தனாகவும் அதிகாரத்துடனேயும் இருக்கிறது, கனகராய முதலியார் கூட்டம். அண்ணன் தம்பிகள் தவிர மற்ற கிறிஸ்துவர்கள் எல்லாரும் பிச்சைக்காரர்கள்’ என்றும்…
பட்டணத்தில் உள்ள கிறிஸ்தவர் மற்றும் தமிழர் பொருளாதார நிலைமைகளை எல்லாம் விளக்கிய ஆனந்தரங்கர், ‘சமஸ்தான பேர்களும் தமிழராயிருக்கச்சே நானொருத்தனும் கிறிஸ்துவனானால் அவர்களெப்படி ஆவார்கள்?’ என்றும் எதிர்க் கேள்வி கேட்டிருக்கிறார்.
ஆனாலும் ஆனந்தரங்கரை விடாத பாதிரியார், ‘கையாலாகாத ஆளாக இருந்தாலும் அந்த இடத்தில் கிறிஸ்துவர் இருக்கவேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம். நீர் கிறிஸ்துவராவதற்குச் சம்மதித்தால் குடுத்தியேர் (துபாஷி) உத்தியோகத்தில் இருக்கச் சம்மதிப்போம். இல்லாவிட்டால் இந்த உத்தியோகத்துக்கு கிறிஸ்துவர்தான் வேண்டும் என்று எங்களால் ஆன அத்தனைப் பிரயத்தினத்தையும் பண்ணுவோம்’ என்று மிரட்டும் தொனியில் பேசியபோது,
‘இந்த உத்தியோகம் வேணுமென்று நானொருக்காலும் பிரார்த்திக்கவில்லை. இந்த உத்தியோகம் நீ பார்க்க வேணுமென்று துரை பிரார்த்தித்தப் படியினாலே பார்த்து வருகிறேன். எனக்குப் பல்லக்கு, அறிக்கை. அதிகாரம், வியாபாரம் எல்லாம் ஏதோ இந்த கவர்னர் வந்துதான் கொடுத்ததாக நினைக்க வேண்டாம். என் தந்தை காலத்தில் இருந்தே கிடைத்து வருகிறது. தலைமைப் பதவி வேண்டும் என்றால் கனகராய முதலி இருக்கும் போதே இச்சித்து வாங்கியிருப்பேன்’ என்றெல்லாம் பாதிரியாரின் முகத்தில் அறைந்தாற் போல் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பியிருக்கிறார் ஆனந்தரங்கர்.
அடுத்தநாள் ஆளுநர் துப்ளேக்சை சந்தித்த ஆனந்தரங்கப்பிள்ளை, இந்த உரையாடலைச் சொல்லியிருக்கிறார், இதைக் கேட்ட ஆளுநர், ‘அதை அப்படியே உமிழ்ந்துப் போடு’ என்று சொன்னதுதான் இதில் உச்சக்கட்டம்!
ஆனந்தரங்கப்பிள்ளை தன் ஆயுட்காலம் முழுமைக்கும் பதவிக்காக மதம் மாறுவதில்லை என்பதில் உறுதியாக இருந்தார்.
அந்த வகையில் 1747 செப்தம்பர் 20 தேதியிட்ட ஆனந்தரங்கரின் நீண்ட உரையாடல் குறித்தப் பின்வரும் பதிவு முக்கியத்துவம் பெறுகிறது.
1747 செப்தம்பர் 20 புரட்டாசி 7 புதவாரம்
நாலரை மணி அடித்த பிற்பாடு புறப்பட்டுச் சம்பா கோவிலிலே இருக்கப்பட்ட சுப்பிரியேர் பாதிரி கடுதியண்டைக்குப் போய் நான் வந்த சேதியை அறிக்கைவிட்டு, அதன் பேரிலே பிரகாசன் வந்து அவருடைய காம்பிராவிலே ஒண்டியாயிருக்கிறாரென்று சொன்னதின் பேரிலே நான் போய் உபசாரம் பண்ணி, ஆசாரம் பண்ணினவிடத்திலே இதென்ன மோட்ட வாசலோ, நீரேது இவ்விடத்துக்கு வந்தது. உமக்கு சரீரத்திற்கு என்ன உபாதி? இப்போது ஆரோக்கியமாயிருக்குதோ வென்று கேட்டார்.
உங்களுடைய ஆசீர்வாதம் என்னிடத்திலே பரிபூரணமாயிருக்கச்சே எனக்கு ஆரோக்கியமாயிருக்கிறதற்குத் தடையென்ன விருக்கிறது என்று பதில் சொன்னேன். ஓ, எங்களுடைய ஆசீர்வாதம் உனக்கென்னத்துக்கு? ஓ! அது உனக்குப் பிராமணருடைய ஆசீர்வாதமென்று சொன்னார்.
அதற்கு உத்தரவு என்னுடைய சுபாவமெல்லாம் சமணாயெண்ணி நடந்து கொள்கிறதே யல்லாமல் அப்படி பேதமாக ஒருக்காலும் எண்ணுகிறதில்லை என்கிறது நானிதுவரைக்கும் நடந்து கொள்ளுகிற காரியங்களிலேயும் உங்களுடைய உபதேசிமார் மற்றப்பேர் உன்னண்டையிலே வந்து காரியபாபம் சொல்லிக்கொண்டிருக்கிற சங்கதிகளிலே நான் நடந்துகொள்ளுகிற சம்மதி முதலானது அவர்கள் வந்து உங்களுடனே சொல்லியிருக்கிறது. நீங்களும் கேள்விப்பட்டு உங்கள் மனதுக்குத் தெரிந்தே இருக்கும். அப்படி எப்போதும் நீங்களும் என் பேரிலே பரிபூரண தயவுபண்ணி நடப்பித்துக் கொண்டு வந்தீர்கள். இப்போது கொஞ்ச நாளாய் என் பேரிலே உஙகள் மனதுக்குப் பேதமாகத் தோற்றப்பட்டிருக்கிறதே என்று எண்ணிக்கொண்டிருக்கிறனே யல்லாமல் வேறே ஒருவிதமாய் எண்ணவில்லை யென்று சொன்னேன்.
அதற்கு அவர்கள் என்னவிதமாய் நடந்தாலும் கிறிஸ்துவமானால் எங்கள் மனதுக்கு நம்பிக்கையும் விசுவாசமுமிருக்கும். இதுவுமல்லாமல் இந்தக் கும்பினீர், குர்த்தியேர் உத்தியோகம் வராததற்கு முன்னமே உன் புத்தியும விசுவாசமும் எங்கள் மதத்தின் பேரிலே உண்டாயிருந்ததும் மெய்தான். இந்த உத்தியோகம் கைக்கு வந்த பிற்பாடு கொஞ்ச நாளாய் தமிழர் கோவில்களை ரொம்பவும் பிரபலம் பண்ணுகிறதும் அதற்கு ரொம்ப ஆதிக்கமும் பிராமணர்களுக்குப் பிரபலமும் தமிழருக்கெல்லாம் பொங்குதலும் கிறிஸ்துவருக்கெல்லாம் மக்கினதும் இப்படியாக இருக்கிறதென்று சொன்னார்.
கிறிஸ்துவர்களுக்கும் தமிழர்களுக்கும் மற்றப் பேர்களுக்கும் மூன்று வருஷமாய்க் கப்பல் காடிகள் வராமல் தொழில்துறையில்லாமல் கரிப்புனாலேயும் பணத்துக்கு அரைப்படி அரிசி விக்கச்சே மக்கின மதனனிச்சியாய் உண்டாய்ப் போச்சுது. ஒருத்தர் உண்டாக்க வேணுமா, இந்த மட்டுக்கும் பட்டணம் நிற்கிறது. முசியே துய்ப்ளேக்ஸ் மகாராசா ஒருத்தன் இந்தச் சமயத்தில் இந்தப் பட்டணத்துக்குத் துரையாயிருந்த படியினாலே நிருவாகத்துக்கு வந்ததென்று சொன்னதற்கு,
முசியே துய்ப்ளேக்ஸ் உன் பேரிலே பட்சமல்லாவென்று சொன்னார்.
இவர் மாத்திரம் என்ன, எங்கள் தகப்பனார் நாள்முதல் என்நாள் இருபத்து மூன்று வருஷம் பிடித்து, கனகராய முதலியார் குடுத்தியேர் என்று பேர் மாத்திரமல்லாமல் அவருக்கு நடப்பிக்கிறதைப் பார்க்கிலும் இந்த மட்டுக்கும் பின்னையும் மூன்று பங்கு அதனமாய் மரியாதை அதிகாரங்கூட நடந்து வருகிறதே யல்லாமல் இந்தத் துரை மாத்திரம் நடப்பிக்கிறானேன்றும் இந்த குடுத்தியேர் உத்தியோகம் வந்த பிற்பாடு எனக்கு அதிகாரம் நடக்கிறதென்று எண்ணத்தேவையில்லை என்று சொன்னதற்கு,
மெய்தான் அபத்தமல்ல, நீ பெரிய மனுஷன் பிள்ளை, உங்களுக்கு இரண்டு தலைமுறையாய் மேன்பாடும், மரியாதையும், பிரதிஷ்டையும், அதிகாரமும் துரைகளுடைய சனுவு பிரீதி உண்டாகி நடந்து வருவதை சமஸ்தான பேர்களும் அறிவார்கள். நாமும் அறிவோம். கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் நீ கிறிஸ்துவரானால் வேறே இடமில்லாமல் சமஸ்தான பேரும் இந்தப் பட்டணத்துக்குள்ளே ஆவார்களென்று சொன்னார்.
அதற்கு நான் ஐயா, நீங்களிப்படி சொல்லுகிறது மெத்த சரியாயிருந்தது. இந்தப் பட்டணத்துக்குள்ளே கிறிஸ்துவராயிருக்கிற பேர்கள் ஒரு பங்கும் மற்றப் பதினைந்து பங்கும் தமிழராயிருக்கிறார்கள். இதல்லாமல் கிறிஸ்தவருக்குள்ளே ஐஸ்வரியந்தனாகவும் அதிகாரத்துடனே இருக்கிறது, கனகராய முதலியார் கூட்டம். அண்ணன் தம்பிகள் தவிர மற்ற கிறிஸ்துவர்கள் எல்லாரும் பிச்சைக்காரர்கள். இப்போதுதான் சிறிது நாளாக வெள்ளைக்காரர் தெருவிலேயும் துபாசித்தனங்கள் பண்ணியும் யாதொரு பேரும் வருகிறதிலே திரிந்து சிறிது பேர்கள் அன்னவஸ்திரங்களுக்கு அத்தாக்ஷி இல்லாமலும் வீடு வாசல் கல்லாலே கட்டிக்கொண்டும் ராசாவாய், ஐம்பது, நூறு, இருநூறு, முன்னூறு ஆஸ்திகளுண்டா யிருக்கிறது. மற்ற பேரெல்லாம் சேவகத்தனத்திலே யிருக்கிற பேரும் கூலிவேலை செய்கிற பேருமாக இருக்கிறார்களென்கிறது தங்கள் சித்தத்திற்குத் தெரிந்திருக்கிறதே.
தமிழரிலே அப்படியல்ல. கும்பினீர் வர்த்தகம் பண்ணுகிற பேர் கடற்கரையிலே, சாவடியிலே, கோட்டையிலே புடவைக்கிடங்கு, இரும்புக் கிடங்கு, அரிசி, கோதும்பை முதலான கிடங்குகள் கோட்டைக்குச் சேரண்டையிலே, கோட்டை, சில வெல்லம் போடுகிற பேர் உள்பட பெரிய பெரிய உத்தியோகங்களிலே இருக்கிற பேர்கள் மற்றப்படி பட்டணத்துக்குள்ளே அவரவர்கள் தனித்தனியாய் பதினாராயிரத்துக்கு, இருபதினாயிரமாகச் சரக்குகள் அழைப்பித்து கோன்சேல்காரர் மற்றுமுண்டான வெள்ளைக்காரருக்குத் தேவையான சரக்குகள் கொடுக்கிறவர்கள் எல்லாரும் தமிழர். குண்டுகிராமக் குத்தகை பண்ணுகிறவர்கள் முதலாய்ச் சமஸ்தான பேர்களும் தமிழராயிருக்கச்சே நானொருத்தனும் கிறிஸ்துவனானால் அவர்களெப்படி ஆவார்கள்?
அதல்லாமல் என் பமிய் (பேமிலி), என் சாதி என் கை சாப்பாடே யல்லாமல் வேறே சாப்பாட்டுக்கு அவகாசமில்லாமலிருக்கிறவர்களானால், நான் சற்றுக் கையை முடக்கினால் அவர்களுக்கு ஆதரவில்லை. ஆதலால், அவர்களிதுலே வர்த்தகர் பண்ணுகிறவர்கள் எல்லாரும், செட்டிகளும், கோமுட்டிகளும், பிராமணாளும், குசிராத்தியருமாக இருக்கிறது. வர்த்தகம் பண்ணுகிற பேர்கள். அப்படி உத்தியோகம் பண்ணப்பட்ட பேர்கள், வெள்ளாழரும், பிராமணாளும் எங்களிடையர் கூட்டத்திலே முத்தியப்பிள்ளை தவிர மற்றப்பேரும் ஆடுமாடு மேய்க்கிற பேர்களுக்கு ஒருத்தர் ஆதரவு மிகுதியுமில்லை. வழியுமில்லை. அப்படி சம்மதியெல்லா மிருக்கிறதும் அல்லாமல் அவனவன் மட்டுக்கும் அவனவனே அல்லாமல் ஒருத்தனுக்கு ஒரு காரியமானால் ஒருத்தன் உதவியாயிருக்கிறதே யில்லை. அப்படியிருக்க ஒரு மதத்துக்குள்ளே போனால் பின்னொருத்தன் வரப்போகிறதென்ன விருக்கிறது?
இந்த சம்மதிகளெல்லாம் உங்களுக்கு உள்ளங்கை யென்று நெல்லிக்கனி போலே தெரிந்திருந்தும் இவனிதற்கு என்ன உத்தாரஞ் சொல்லுகிறானோ தெரியாதென்று என் புத்தி எம்மாத்திரம் என்றும் அறியவேணுமென்றும் கேட்டதாய்க் காண்கிறதே யல்லாமல் நீங்களுண்மையாய்க் காணவில்லை என்று சொன்னதுமல்லாமல்,
கனகராய முதலியார் கிறிஸ்துவனாயிருந்தும் இருபது வருஷம் உத்தியோகம் பண்ணினானே, அரும்பாத்தபிள்ளை, சடையப்ப முதலியார் முதலான அகமுடைய சாதி இனமாயிருக்கப்பட்டது வெகுபேர் இருக்கிறார்களே, அவர்களே யாரானார்கள்? முன், அவர்கள் தகப்பனார், பாட்டனார் நாளையிலே ஆனவர்கள். அதன் பிற்பாடு நாட்டுப்புறத்துக்குப் போய் மாப்பிள்ளையைக் கொண்டு அதிலே பங்கு விர்தியாயிருக்கிறதே அல்லாமல் மற்றப்படி இவர் உத்தியோகத்துக்கு வந்த பிற்பாடு யார் ஆனார்கள்? இது முன்னிலையாய் உத்தரம் சொல்ல வேணுமென்று சொல்லுகிறதே அல்லாமல் உங்களுக்குத் தெரியாதது ஒன்றுமில்லை.
இப்போது கனகராய முதலியார் செத்து ஒன்றரை வருஷம் அல்லது இரண்டு வருஷமாகிறது. அதிலேயும் இப்போது ஒரு மாதம், இரண்டு மாதம் கஷ்டமான பிற்பாடு ஆனாப்போலே ஒருக்காலுமானதில்லை யென்றுமிப்படி அவர்கள் பரஞ்சாட்டி சொன்னதற்கு,
நீர் என்ன சொன்னாலும் சரி, நீர் கிறிஸ்துவமானால் இந்தப் பட்டணம் எல்லாம் கிறிஸ்துவமாமென்று கிறிஸ்துவமானால் நீர் குடுத்தியேர் உத்தியோகத்துக்கு இருக்கிறதற்கு எங்களுக்குச் சம்மதி. இல்லாவிட்டால் அந்த மட்டுக்கும் குவர்னதோர் முசியே துய்ப்ளக்சுடனேயும் அனேக விசை கிறிஸ்துவர்களை வைக்க வேணுமென்று பேசினோம். சீர்மைக்கு எழுதினோம். இன்னும் எழுதுவோம். இன்னும் வெகு பிரயத்தனம் பண்ணுவோம். இன்னும் கோன்சேலுக்குப் பேசுவோம். எங்களாலே ஆன எத்தனமெல்லாம் பண்ணிப் பார்ப்போம் என்று சொல்லி இந்த குடுத்தியேர் உத்தியோகம் கிறிஸ்துவனுக்குக் கொடுக்கிறதே யல்லாமல் தமிழனுக்குக் கொடுக்கிறதில்லை யென்றும், ராசாவினுடைய காகிதம் அழைப்பித்துக் கொண்டு வைத்திருக்கிறோமென்றுமிப்படி பின்னையும் அநேகவிதமான உத்தரவு சொன்னதற்கு,
இந்த உத்தியோகம் வேணுமென்று நானொருக்காலும் பிரார்த்திக்கவில்லை. துரையாயிருந்து இந்த உத்தியோகம் நீ பார்க்க வேணுமென்றும் பிரார்த்தித்த படியினாலே முன்னே நான் சம்மதிக்கிறதில்லை யென்று சொல்லி அப்பால் வரப்போகிற சாதுக்காக அந்த உத்தியோகம் பார்த்து வருகினேனென்றும், எனக்குப் பல்லக்கு அறிக்கை அதிகாரம் வியாபாரம் சமஸ்தமும் கனகராய முதலி இருக்கிற போது கூட என் பேச்சு வட்டமாய் நடந்துவரச்சே எனக்கு இந்த உத்தியோகம் இச்சித்து வேண்டியிருப்பேன் என்றும் பலவந்தமாய் துரைகள் சொல்லுகிறதன் பேரிலே அவர்களூரிலே குடியிருக்கிற மட்டுக்கும் தள்ளப்போகாதென்றும் மேல்வாங்கு பார்த்து வருகிறேன் என்கிதற்கு, கோன்சேல்காரருக்கும் உங்களுக்கும் பட்டணத்திலே இருக்கிறவர்களுக்கும் தெரியும். ஆகிலும் உங்களுக்கும் பின்னையும் நன்றாய்த் தெரியும். இப்பவும் அதிலே நான் ஊணிக்கொள்ளாமலிருக்கிறதனாலே யிருக்கிறதே யல்லாமல் நான் வேணுமென்றால் அப்படியில்லை என்று சொன்னதற்கு,
மெய்தான். இப்போது உன்னத்தனை கப்பாசி உள்ளவர்களில்லை. நீ சொன்ன பேச்சு எல்லாம் அபத்தமல்ல. மெய்தான். ஆனாலும் எங்கள் நினைப்பு எத்தனை கையிலே ஆகாதவனானாலும் ஒரு கிறிஸ்துவனிருந்தால் வெகு கிறிஸ்துவருக்குப் பிழைப்பு உண்டு. நீ கிறிஸ்துவனாகி இந்த உத்தியோகத்திலே இருந்தால் வெகுபேர் கிறிஸ்துவர்களாவார்கள். கனராய முதலியார் நானறிந்த மாத்திரம் அவரறிந்து மனுஷருக்குப் பிரித்தடைத்துச் சொல்லத் தெரிந்தால் வெகுபேர் கிறிஸ்துவராவார்கள் என்று சொல்லி, சுவாமி உனக்கு தம்முடைய பாதம் சேரவேணுமென்று நினைத்துச் சேர்த்துக் கொள்ளத்தக்கதாக தயவு கடாக்ஷம் பண்ணவேணும் என்று சொன்னார். அதற்கு நான் அவர் சித்தத்தை ஒருக்காலும் தள்ளப்போகாதென்று சொன்னேன்.
1747 செப்தம்பர் 21 புரட்டாசி 8 குருவாரம்
இற்றைநாள் காலத்தாலே குவர்னதோரண்டைக்கு வந்தவிடத்திலே நேற்றைய தினம் சம்பா கோவில் பாதிரியாரண்டைக்குப் போனீயே பாதிரி கடுது என்ன சொன்னார் என்று கேட்டார். அவர் சொன்ன உத்தாரம் நேற்று 7 புதவாரம் தினசரியிலே எழுதினபடிக்குச் சொன்னதற்கு, உன்னைக் கிறிஸ்துவமாகச் சொல்லுகிறார்கள். கிறிஸ்துவமாகாவிட்டால் குடுத்தியேர் உத்தியோகம் உனக்குக் கொடுக்கிறது சம்மதியில்லை அல்லவாவென்று உதட்டைப் பிதுக்கிக் இவர்கள் புதுச்சேரிக்குக் குவர்னதோர்களாயிருக்கிறதாக யோசனை பண்ணினார்கள். அவர்கள் சிறுபிள்ளை யோசனை அல்லாமல் இவர்களைத் தொட்டுச் சிறிது ஆகிறதுண்டா? அந்தக் காலம் முசியே எபேருடனே போச்சுது. சீர்மையிலே கூட இவர்கள் அபத்தக்காரர்கள் என்று தீர்த்து இவர்கள் பேச்சை மெய்யென்று யாரும் விசுவசிக்கிறதில்லை யென்று துரை சொல்லி, பின்னையும் வேறே பிரஸ்தாபம் பண்ணவில்லையா வென்று சொன்னேன். அந்தப் பேச்சை அப்படி உமிழ்ந்து போடு என்று சொன்னார்.
(தொடரும்)