Skip to content
Home » ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #11 – வரிசைக்கட்டி வந்த சீர்வரிசை: வர்ணிக்கும் ஆனந்தரங்கர்!

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #11 – வரிசைக்கட்டி வந்த சீர்வரிசை: வர்ணிக்கும் ஆனந்தரங்கர்!

வரிசைக்கட்டி வந்த சீர்வரிசை

ஆற்காடு நவாபுகளில் ஒருவராக இருந்தவர் சந்தாசாயபு. இவரது மகளின் திருமணம் 1747 டிசம்பர் 24ஆம் தேதி புதுச்சேரியில் வெகு விமரிசையாக நடந்தது. நலங்கு வைத்தல் போன்ற முன்னேற்பாடுகளும் நான்கைந்து நாட்களுக்கு முன்னதாகவே நடந்தன. இவற்றில் எல்லாம் ஆனந்தரங்கர் பங்கேற்றார். அங்கு நடந்த சடங்கு சம்பிரதாயங்களைப் பார்த்தார். பார்த்தார் என்பதைவிட உன்னிப்பாகக் கவனித்தார் என்பதுதான் சரியாக இருக்கும்.

‘மாப்பிள்ளை வீட்டார் என்கிறதற்கு அடையாளம், எல்லாரும் செகப்பு குசும்பாவிலே தைத்த அங்கி, அரபி பாகை, நடுக்கட்டு, இதுகள் செகப்பாய்ப் பிரகாசிக்கிற’ அழகை ஆனந்தரங்கர் இரசித்தார்.

மணவீட்டிற்கு வந்துபோன பெரிய மனிதர்கள், அவர்கள் வழங்கிய சீர் செனத்திகள் எல்லாவற்றையும் பட்டியலிடுகிறார் ஆனந்தரங்கர். நூற்றைம்பது தட்டிலே வைக்கப்பட்ட மஞ்சள், பாக்கு, வெற்றிலை, சரிகைப் புடவை, சீலை, மிட்டாய், சர்க்கரை, கற்கண்டு, வாழைப் பழம், கொய்யாப் பழம், வெள்ளித் தட்டு, மரத்தட்டு, வெள்ளிச் சொம்பு, வெள்ளி நாற்காலி, முகம் பார்க்கும் கண்ணாடி, மெழுவர்த்தி ஏத்தி வைக்கும் வீதர் உள்ளிட்டவை அந்தப் பட்டியலில் அடங்கும்.

ஆளுநர் துய்ப்ளேக்ஸ் தனது மனைவி (மதாம்), உறவுகள் பரிவாரங்களுடன் இந்தத் திருமண நிகழ்வில் பங்கேற்று சீர் வழங்கியிருக்கிறார். அவருக்கும் நவாப் தரப்பில் இருந்து வெகுமதிகள் வழங்கப்பட்டிருக்கின்றன.

மண வீட்டில் இசைக்கப்பட்ட நாதசுரம், மேளதாளம், த்ரோம்பேத், கிண்ணாரம், டங்கா, நவபத்து போன்ற இசைக் கருவிகளையெல்லாம் வரிசைப்படுத்தும் ஆனந்தரங்கர், சம்பங்கி எண்ணெய், மல்லிகைப் பூ எண்ணெய், 3,5,7 முகங்களைக் கொண்ட தீவட்டிகள் போன்றவற்றையும் நமக்கு அறிமுகப்படுத்துகிறார்.

மாப்பிள்ளை ஊர்வலத்தில் இடம்பெற்றவை குறித்து ஆனந்தரங்கர் விவரிக்கும், வர்ணிக்கும் அழகே அழகுதான்!

1747 டிசம்பர் 19 மார்கழி 8 செவ்வாய்க்கிழமை

இற்றைநாள் சந்தாசாயபு அவர்கள் கலியாணத்துக்கு வந்த உறவின் முறையாருக்கு விருந்து சொன்னபடியினாலே சாப்பாட்டுக்கு அயிரதல்லிகான் அவர்களும் மற்ற உறவின் முறையாரும் போனார்கள். இன்றைய தினம் இராசாத்துகான் மகலுக்கு வந்தபடியினாலே போகிற போதும் வருகிற போதும் சொல்தாதுகளும் சிப்பாய்களும் வரிசையாய் நின்று தும்பூர் அடித்தார்கள். …ஆறுமணி வேளைக்கு இராசாத்துகானவர்கள் சந்தாசாயபு வீட்டுக்கு வந்து வரிசை வைத்து நூற்றைம்பது தட்டிலே பழ வகைகள், பாக்கு வெற்றிலை, சர்க்கரை, கற்கண்டு, புடவை சீலை இது முதலாகியதும் மேளதாளத்துடனே நவபத்தும், மாயே சிப்பாய்கள், ஆனை குதிரையும் கூட சம்பிரமத்துடனே கொண்டு போனார்கள். நவாபு இராசாத்துகான் மெத்தையின் பேரிலே நாலு நாழிகை மட்டுக்கும் கேளிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். பெருமுக்கல் அயிதரல்லிகானும் அவர் தம்பியும் கலியாணத்துக்காக வந்தவர்கள். அவர்களுக்கு விடுதி, தரகு நல்லதம்பி முதலியார் புடவைக் கிடங்கு. கோவர்த்தன தாஸ் குமாஸ்தாவுக்கு கொல்லத்துக்கார வெளி வீடு வீதி.

1747 டிசம்பர் 20 மார்கழி 9 புதவாரம்

இற்றைநாள் துரையவர்கள் வீட்டுக்குப் போனவிடத்திலே கலியாண சமாச்சாரம் கேள்விப்பட்டிருக்கிற சாடையென்று கேட்டார். துலுக்கருக்குள்ளே வழக்கமென்ன வென்றால், மாப்பிள்ளை வீட்டாருக்கு ஒரு நாளைக்கு நலங்கு கொண்டு போகிறது. அன்றைய தினம் மாப்பிள்ளை வீட்டாருக்கெல்லாம் பெண் வீட்டிலிருந்து விருந்து பண்ணுவிக்கிறது. இப்படிச் சகலமும் புறப்பட்டுப் பெண் வீட்டுக்கு மாப்பிள்ளை போய் தாலி கட்டுகிறதற்கு எத்தனை நாளிருக்குதோ அந்த மட்டுக்கு மாப்பிள்ளை வீட்டார், பெண் வீட்டார் ஒருநாள் மாற்றி மாற்றி நலங்கும் வரிசையும் அனுப்புகிறது வாடிக்கையாம். அந்தப்படிக்கு நடக்குதென்று சொன்னேன்.

நான் என்றையதினம் அவர்கள் வீட்டுக்குப் போகிறதென்று கேட்டார். வெள்ளிக்கிழமை தினமாகிற இன்றைக்கு என்று சொல்லுகிறார்களென்று சொன்னேன்.

கலியாணத்துக்கு வந்த இராசத்துகான் குமாரனும் சாதத்து பந்து முதலானவர்கள் ஸ்ரீதுரையவர்கள் பண்ணுகிற ஆடம்பரம் தவிர அவர்கள் ஆடம்பரம் ஒன்றுமில்லை. ஆனால், மாப்பிள்ளை வீட்டார் என்கிறதற்கு அடையாளம், எல்லாரும் செகப்பு குசும்பாவிலே தைத்த அங்கி, அரபி பாகை, நடுக்கட்டு இதுகள் செகப்பாய்ப் பிரகாசிக்கிற அழகே யல்லாமல் வேறே ஒரு சம்பிரமும் காணோம். ஆனால் நவபத்து வாத்தியம், பின்னையும் வாத்தியங்களும் ராத்திரியும் பகலும் செவிட்டுத்தனமாய்ப் போகத்தக்கதாக அடிக்கிற சத்தத்தினாலேயும் செகப்பு குசும்பா போட்ட சட்டைகள் மயமாய் எல்லாரும் புறப்படுகிறபடியினாலேயும் இதுலே கலியாண அலங்கிருதமாய்க் காணுது. எனக்கு மாப்பிள்ளை வீட்டார் ஒரு குசும்பா அங்கி, அராபி பாகை, நடுக்கட்டு அனுப்புவித்தார்கள்.

இற்றைநாள் இராசத்துகான் அவர்கள் வீட்டுக்கு விருந்துக்கு வந்தவர்கள் கான்பகதூர் சாயு, அல்லிநக்கி சாயு, படேசாயபு குமரன் சைனல் அதிகான், மற்றும் இருக்கப்பட்ட உறவின் முறையார் வந்து மத்தியானதுக்கு விருந்து சாப்பிட்டார்கள். மறுபடி இரண்டு மணிக்குப் போய்விட்டார்கள்.

சாயங்காலம் ஆறுமணி வேளைக்குச் சந்தாசாயபு அரண்மனையிலே யிருந்த இராசாத்துகானை இவ்விடத்துக்கு வரிசை வந்த விபரம் நூற்றைம்பது தட்டிலே மஞ்சள், பாக்கு, வெற்றிலை, மிட்டாய், சர்க்கரை, கற்கண்டு இது முதலானது வைத்து மேல்கட்டு போலே ஒன்று சோடித்து, நாலு மூலைக்கு நாலு வெள்ளிக் கம்பத்திலே கட்டித்தாக்கி, நாலு பேர் பிடித்துக்கொண்டு, அதற்குள்ளாகத் தாங்கள் கையிலே நாலு தடுக்கிலே புடவை நடப்பித்துக் கொண்டு, பத்து தீவட்டியுடனே சொல்தாதுகள் வரிசை வைத்துத் தும்பூர் அடித்துக்கொண்டு துரையவர் நீசான் இரண்டு வெள்ளை நீசானும் பிடித்துக்கொண்டு த்ரோம்பேத், கிண்ணாரம், டங்கா, நவபத்து, மாயே சிப்பாய்கள் ஐம்பது பேர், குதிரைச் சுவார்கள் பத்துபேர் பின்னையும் மேளவாத்தியத்துடனே வரிசையை மாப்பிள்ளை வீட்டுக்குக் கொண்டு வந்து பகலிலே ஒப்புவித்து அதன் ஜாபிதாவைக் கொண்டு வந்து மாப்பிள்ளைக் கையிலே கொடுத்தார்கள். அதை அவர் பார்த்துக்கொண்டு வரிசை கொண்டு வந்தார். ரசோ பண்டிதருக்கும் மற்றப் பேருக்கும் பாக்கு வெற்றிலை கொடுத்தனுப்பினார்.

1741 டிசம்பர் 21 மார்கழி 10 வியாழக்கிழமை

இற்றைநாள் சந்தாசாயபு அவர்கள் மாப்பிள்ளை வீட்டுக்காரருக்கு விருந்து சொன்னபடியினாலே விருந்து சாப்பிட்டு வந்தவர்கள் மகம்மது அசதுல்லா சாயபு, அயிதரல்லிகான், மற்ற உறவின் முறையாரெல்லாம் சந்தாசாயபு வீட்டிலே விருந்து சாப்பிட்டு வந்தார்கள். மகம்மது அனைத்துல்லா சாயபு அவர்கள், நவாபு இராசத்துக்கானுக்கு வரிசை அனுப்புவித்தது: சரிகைப் புடவையும், நசர் வைக்கிறதற்கு இருநூறு ரூபாயும், சர்க்கரை, கற்கண்டு இது முதலான தினுசுகளும் தட்டிலே வைத்துக்கொண்டு மேளதாளத்துடனே கொண்டுவந்து கொடுத்தார்கள்.

இன்றைய தினம் சாயங்காலம் சந்தாசாயபு வீட்டுக்கு இராசத்துகான் அவர்கள் வரிசை அனுப்புவித்தது: நூற்றைம்பது தட்டிலே மஞ்சள், பாக்கு வெற்றிலை, புடவை சீலை முதலானதுகள் அனுப்புவித்தார்கள். இன்றையதினம் முதல் சொல்தாதுகளுக்கு இரண்டு வேளை சோறு போடவும் உத்தாரம் கொடுக்கச் சொன்னார்கள்.

1747 தெசம்பர் 22 மார்கழி 11 வெள்ளிக்கிழமை

இற்றைநாள் சாயங்காலம் ஐந்து மணிக்குத் துரையவர்கள் வீட்டண்டையிலே முஸ்தீது பண்ணினது இருநூறு பேருக்குண்டு. மாயே சிப்பாய்களும், சவுகளக் கழிக்காரரும், ஆனையின் பேரிலே நீசானும், குதிரைகள் பேரிலே நவபத்துமாய்ப் பல்லக்கின் பேரிலே ஏறிக்கொண்டு துரையவர்கள் வீட்டுக்குக் கீழண்டையாய்ப் புறப்படத்தக்கதாகப் பயணமாயிருந்து, ஆறு குதிரை கட்டின வண்டியைச் சந்தாசாயபு வீட்டுக்கு அனுப்புவித்தார்கள். இதற்குள்ளே இருநூறுபேர் சொல்தாதும், இருநூறு பேர் மாயே சிப்பாய்களுமாய்ச் சந்தாசாயபு வீடு முதற்கொண்டு மாப்பிள்ளை யிறங்கியிருக்கிற கனகராய முதலியார் வீடு மட்டுக்கும் இருபுறமும் வீதியிலே பாரு வைத்துக்கொண்டு தயாராயிருந்தார்கள். அந்தச் சமயத்திலே அந்த ஆறு குதிரை கட்டின வண்டியின் பேரிலே ரசாசாயபும், அல்லி நக்கியும் ஏறிக்கொண்டு துரையவர்களை அழைக்க வந்தார்கள்.

அதன் பேரிலே துரையவர்கள் ஐந்து மணிக்கு வீடுவிட்டுப் புறப்பட்டார்கள். புறப்படச்சே துரையவர்களுடனே முசியார் கில்லியார், முசியே மீரா, முசியே மே, முசியார் புரி, முசியே துக்கேன், முசியே பரதி இவர்கள் முதலாகிய துரைத்தனக்காரரும், காடுது குதிரை வெள்ளைக்காரரும், மாயே சிப்பாய்கள் குதிரைக்காரருமாய் ஐம்பது குதிரையின் பேரிலேறி வெள்ளைக்காரலெல்லாரும் கத்தி உருவிக்கொண்டு த்ரோம்பேத், கிண்ணாரம், நாகசுரம், மேளம், நவபத்து வாத்தியங்களுடனே ஆனையின் பேரிலே நீசான் பிடித்துக்கொண்டு துரையவர்கள் வீட்டுக்குக் கீழண்டையாய்ப் புறப்பட்டு கோட்டைக்குத் தென்னண்டையாய்ப் புறப்பட்டு சந்தாசாயபு வீட்டண்டை போட்டிருக்கிற டேராவிலே வந்து உட்கார்ந்தார்கள்.

உட்கார்ந்தவுடனே ஈசுவரன் கோவிலண்டையிலே வைத்திருக்கிற பீரங்கியில் இருபத்தொரு பீரங்கிச் சுட்டார்கள். துரையவர்கள் பிறகே மதாமும் அவர்கள் பெண்டுகள் பிள்ளைகள், ஆறு பல்லக்குக்காரரும் கூட வந்தார்கள். அவர்கள் ஆறு பல்லக்குக்காரர் பெண்டுகளும் சந்தாசாயபு பெண்சாதி இருக்கிற மகலுக்குள்ளே போனார்கள். மற்றப்படி துரையவர்களும் மற்றுமுள்ள கொமிசேல் காரரும் டேராவிலே உட்கார்ந்தவுடனே பாக்கு வெற்றிலை, பன்னீர் கொண்டுவந்து கொடுத்தார்கள். அதை வாங்கிக் கொண்டு சற்றுநேரம் கலியாணம் சம்பிரமத்துடனே பேசிக்கொண்டிருந்த துரையவர்களும் மற்றுமுள்ள கொமிசேல்காரரும் அல்லிநக்கி சாயபும், ரசாசாயபும், மற்றுமுண்டான பேரும் அவ்விடத்திலேயிருந்து கால்நடையாய்ப் புறப்பட்டு நவாபு இராசத்துகான் அவர்கள் இறங்கியிருக்கிற கனகராய முதலியார் வீட்டுக்குப் புறப்படச்சே இருபத்தொரு பீரங்கிப் போட்டார்கள். இருபுறமும் பாரா நிற்கத்தக்கதாக நடுவே வந்தார்கள்.

வந்தவுடனே எதிராகத் தெருவாசற்படிக்கு மட்டுக்கும் அயிதர் அல்லிகான் வந்து அழைத்துக்கொண்டு போனார். அங்கேயிருந்து மெத்தையின் பேரிலே ஏறுகிறபோது நவாபு அவர்கள் மேலே இருக்கிற படி மட்டுக்கும் எதிரே வந்து அழைத்துக்கொண்டு போனார். அப்புறம் கூடத்திலே போய் எல்லாரும் உட்கார்ந்தார்கள்.

அதன் பேரிலே கலியாண சம்பிரமாய்ப் பேசிக்கொண்டிருந்த பிற்பாடு பாக்கு வெற்றிலை பன்னீர் கொடுத்துத் துரையவர்களுக்கு ஒரு குதிரையும், ஐந்து நகையும், ஒரு சீரோப்பாவும் கொடுத்தனுப்பினார்கள். அவர்கள் கையிலே அனுப்புவித்துக் கொண்டு, மறுபடியும் சந்தாசாயபு வீட்டண்டையிலே போட்டிருக்கிற டேராவிலே போய் உட்கார்ந்து சற்றுநேரமிருந்து அவர்கள் கையிலே அனுப்புவித்துக் கொண்டு மறுபடியும் புறப்படச்சே இருபத்தொரு பீரங்கிப் போட்டார்கள். அவ்விடத்திலே யிருந்து புறப்பட்டு கோட்டைக்கு மேலண்டையாய்த்தானே வந்து துரையவர்கள் வீட்டைச் சுற்றினாப்போலே துரை வீட்டுக்குக் கீழ்ப்புறமாய் வந்து விட்டே போனார்கள். கொமிசேல்காரரும் அவரவர் வீட்டுக்கு அவரவர் போய்விட்டார்கள்.

அதன்பிறகு இவ்விடத்திலேயிருந்த மேளவாத்தியம், சவுளக்கழிக்காரர் கூட மதாமை அழைக்கப் போனார்கள். அவ்விடத்திலே யிருந்து மதாம் ஏழு மணிக்குப் புறப்பட்டு அவர்களும் கோட்டைக்கு மேலண்டையாய்ப் புறப்பட்டு வீட்டு சந்தாலே வந்து வீடு சேர்ந்தார்கள். நவாபு இராசத்துகான் வீட்டுக்குச் சந்தாசாயபு அவர்கள் வரிசை அனுப்பினது: நூற்றிருபது தட்டிலே சர்க்கரை, கற்கண்டு, பாக்கு, வெற்றிலை, புடவை, சீலை, சரிகை நகைகள் கூட கொண்டு வந்து கொடுத்தார்கள். நவாபு வீட்டுக்கு அல்லிநக்கி சாயபும், ரசா சாயபும், மற்ற உறவின் முறையாரும் ஆறுமணிக்குச் சாப்பாட்டுக்கு வந்தார்கள்.

1747 டிசம்பர் 23 மார்கழி 12 சனிக்கிழமை

இற்றைநாள் சாதத்து பந்துகானவர்கள் நவாபு அவர்களுக்கு வரிசை அனுப்புவித்தது: நூறு தட்டிலே சர்க்கரை, கற்கண்டு, பாக்கு வெற்றிலையும், ஆறு தட்டிலே சரிகைப் புடவையும் அனுப்புவித்தார்கள். இன்றைய திகம் சந்தாசாயபு அவர்கள் வீட்டுக்கு மகமது அசுதுல்லா, அயிதரல்லிகான், சாதத்து பந்துகான், பின்னையும் அவர்கள் உறவுமுறையார் எல்லாரும் விருந்து சாப்பிடப் போனார்கள். இவர்கள் பெண்டுகள் ராத்திரி பத்துமணிக்குச் சந்தாசாயபு வீட்டுக்குப் போனார்கள்.

இன்றைய தினம் துரையவர்கள் வரிசை அனுப்புவித்த சம்பிரமம்: நூற்றைம்பது தட்டிலே சர்க்கரை, கற்கண்டு, வாழைப் பழம், கொய்யாப் பழம், பாக்கு வெற்றிலை, புடவை, சீலை, கரும்பு சுமையும் எடுப்பித்துக் கொண்டு வந்து மேளதாள வாத்தியங்களுடனே இருநூறு பேர் மாயே சிப்பாய்களும் நூறு சொல்தாதுகளும் பாரு வைத்தார்கள். … அதிலே மாப்பிள்ளை வீட்டுக்குத் துரை வீட்டிலே இருந்து வந்த தித்திப்பு, வெள்ளித்தட்டு 22, மரத்தட்டு ஐம்பது கொண்டு போனார்கள். கொண்டு போனவர்களுக்கு மாப்பிள்ளை வீட்டிலே பதினைந்து ரூபாய் இனாம் கொடுத்தார்கள். மரத்தட்டுகளும் வெள்ளி வசியிலே வந்த தித்திப்பும், கரும்பு சுமையும், புடவை சீலையும் சந்தாசாயபு வீட்டுக்குக் கொண்டு போய் கொடுத்தார்கள். இதல்லாமல் சகலாத்து சிப்பம் 10, கண்ணாடி 3, மெழுகுவத்தி வைக்கிற வீதர் முதலான தினுசுகளெல்லாம் கொண்டுபோய் வரிசை கொடுத்தார்கள். கொண்டு போனவர்களுக்கு இனாம் ரூபாய் கொடுத்தார்கள்.

இன்றைய தினம் மத்தியானம் நவாபு இராசத்துகான் துரையவர்களுக்குச் சாப்பாடு மூன்று காவடியும், பதினைந்து தட்டும் கொடுத்தனுப்பினார்கள். கொண்டு வந்த பேருக்குத் துரையவர்கள் இருபது ரூபாய் இனாம் கொடுத்தார்கள்.

இன்றைய தினம் சாயங்காலமான ஏழு மணிக்குச் சந்தாசாயபு வீட்டுக்கு மாப்பிள்ளை இராசத்துகான் பதினாறு தட்டிலே சரிகைப் புடவையும், ஒரு தட்டிலே உடைமை தட்டுமுட்டும், வெள்ளிச் சொம்பு ஐந்திலே எண்ணையும், தண்ணீர் வார்த்துக் கொள்ளுகிற சவுக்கமணை வெள்ளியினாலே பண்ணின காலுள்ள நாற்காலி மனை ஒன்றும், பன்னீர்ச் சொம்பும், சம்மங்கி எண்ணைய் இரண்டு சீசாவும், மல்லிகைப் பூ எண்ணைய் மூன்று சீசாவும், நூறு தட்டிலே சர்க்கரை கற்கண்டும், பத்து ஒட்டகத்துப் பேரிலே சொலுதாதுகளையும் மாயே சிப்பாய்களையும் கூடக்கூட்டி சந்தாசாயபு வீட்டுக்கு அனுப்பினார்கள்.

அதுபோல் அவ்விடத்திலே சேர்ந்தவுடனே ஏழு பீரங்கிப் போட்டார்கள். இந்தத் தட்டுமுட்டுகள் சாமான்களெல்லாம் பகலிலே போய்ச் சேர்ந்தவுடனே பதினைந்து பீரங்கிப் போட்டார்கள். ராத்திரி நாலு நாழிகை மட்டுக்கும் கேளிக்கைப் பார்த்தார்கள்.

1747 தெசம்பர் 24 மார்கழி 13 ஞாயிற்றுக் கிழமை

இற்றைநாள் சந்தாசாயபு அவர்கள் நவாபு இராசத்துகானவர்களுக்கு விருந்து சொன்ன படியினாலே கான்பகதூர் ரசாசாயபு குமாரன் மற்றுமுண்டான உறவுமுறையாரும் விருந்துக்குப் போனார்கள். நவாபு இராசத்துகானவர்கள் வீட்டுக்குச் சந்தாசாயபு அவர்கள் வரிசை அனுப்புவித்தது ஒரு ஆனையும், அந்த ஆனையின் பேரிலே வெள்ளி அவுகாவும், வெள்ளியினாலே காலுக்குத் தகடு அடித்த நாற்காலி ஒன்றும், ஆறு தட்டிலே சரிகை நகை 26ம், பின்னையும் சர்க்கரை, கற்கண்டு, மிட்டாய், பாக்கு வெற்றிலை, சகல சாமக்கிரியை தினுசுகளும், நூறு தட்டிலே அனுப்பினார்கள். ராத்திரி இரண்டு மணிக்கு இராசத்துக்கானவர்கள் சரிகசத்துப் புறப்பட்ட சம்பிரமம்:

சரிகசத்துப் புறப்படுகிறதற்கு மாப்பிள்ளை வழுதாவூர் கெவுணியண்டையிலே போயிருந்து, அவ்விடத்திலே யிருந்து தீவட்டி ஐந்நூறு, ஏழுமுகத் தீவட்டி 10, ஐந்துமுகத் தீவட்டி 10, மூன்றுமுகத் தீவட்டி 10, மூங்கிலினாலே படம் போலே கட்டி, கடுதாசிகளை மேலே ஒட்டி, தாமரைப் பூப்போலே கடுதாசியிலே கத்தரித்து அதற்குள்ளே யெல்லாம் விளக்கு வைத்து அப்படி நூறு கிரண்டு, இதல்லாமல் வாண வித்தை: வழுதாவூர் கெவுணி முதற்கொண்டு சந்தாசாயபு வீடு மட்டுக்கும் இருபதடிக்கு ஒரு கம்பம் நட்டு, இதற்குள்ளே வீறுசுகளும், மத்தாப்புகளும், சக்கரமும் ஓயாமல் கொளுத்திக் கொண்டு வரத்தக்கதாக மேள வாத்தியம் நவபத்தும், கூட ஆனையின் பேரிலே நாகசுர மேளவாத்தியம் முழங்கத்தக்கதாக மாப்பிள்ளை குதிரையின் பேரிலே ஏறிக்கொண்டு கருணாப் பட்டையிலே கட்டின குடை பிடித்துக் கொண்டு வழுதாவூர் கெவுணியண்டையிலே யிருந்து சரிகசத்துப் புறப்பட்டு, நேர் கிழக்கே கனகராய முதலியார் வீடு கிழக்கே திரும்பி, சந்தாசாயபு வீட்டுக்கு அப்புறத்திலே போட்டிருக்கிற டேராவிலே இறங்கி, சற்று நேரமிருந்தார். இறங்கியவுடனே 21 பீரங்கிப்போட்டார்கள். அந்தமட்டிலே எழுந்திருந்து மகலுக்குள்ளே போனார்.

உள்ளே போனவுடனே 21 பீரங்கிப் போட்டார்கள். அப்போது மூன்றரை மணி வேளையுண்டு. அப்புறம் உள்ளே போய் அவ்விடத்து சடங்குகள் முடிகிறபோது மதாமவர்களுக்கும் கலியாண சம்பிரமம் பார்க்கத்தக்கதாக மூன்று மணிக்கு வந்து சந்தாசாயபு வீட்டிலேயிருந்தாள். அவ்விடத்துச் சடங்குகளெல்லாம் தீர்ந்து கலியாணத்திற்குப் பிறகு ஐந்து மணிக்குப் பெண்ணையும் அழைத்துக் கொண்டு மாப்பிள்ளைப் புறப்பட்டு அவர்கள் விடுதியாகிய கனகராய முதலியார் கிடங்குக்குப் போய்ச் சேர்ந்தார். பெண் வீட்டிலேயிருந்து புறப்பட்டு வருகிறபோது இருபத்தொரு பீரங்கிப் போட்டார்கள். மதாமும் ஐந்து மணிக்குப் புறப்பட்டுத் துரை வீட்டுக்கு வந்து விட்டாள்.

(தொடரும்)

பகிர:
கோ. செங்குட்டுவன்

கோ. செங்குட்டுவன்

விழுப்புரத்தில் பிறந்து வளர்ந்து வசித்து வருபவர். ஊடகத்துறையில் 20 ஆண்டுகாலம் செய்தியாளராகப் பணியாற்றியவர். கலை, இலக்கியம், பண்பாடு மற்றும் வரலாற்று அமைப்புகளில் பங்கேற்று இயங்கி வருபவர். 'சமணர் கழுவேற்றம்', 'கூவம் - அடையாறு - பக்கிங்காம்: சென்னையின் நீர்வழித்தடங்கள்' உள்ளிட்ட நூல்களை எழுதியிருக்கிறார். தொடர்புக்கு : ko.senguttuvan@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *