‘றங்கப்புள்ளே’ – ஆளுநர் துப்ளேக்ஸ் உற்சாகமாக இருக்கும்போது ஆனந்தரங்கரை இப்படித்தான் அழைப்பாராம். இருவருக்கும் இடையிலான நட்பு மிகவும் அந்தரங்கமானது. ‘ஆரிடமும் சொல்லாதே’ என பல விஷயங்களை இவரிடம் பகிர்ந்து இருக்கிறார் துப்ளேக்ஸ். தனது சமயோசிதத்தால் ஆளுநரின் மனதறிந்து பேசக்கூடியவர் ஆனந்தரங்கர். இதனால் அவருக்கு இவரை மிகவும் பிடித்தது. ‘நீ சாஸ்திரக்காரன். சொல்லுகிறாப் போலே சொல்லுகிறாய். உன் வாக்கிலே என்ன பிறக்கிறதோ அந்தப்படிக் கெல்லாம் சரியாய் நடக்கிறது’ எனப் புகழ்ந்தார்.
‘றங்கப்புல்லே மகா புத்திசாலி. யிவனைப் போலே சமயோசிதமாய் காரியக்காரியம் அறிஞ்சு யெப்படிப்பட்ட காரியங்களிலேயும் மகா நிறுவாக சக்குத்தியுடனே சபாரஞ்சிதமாய் பேசுர பேரை யோறாப்பாலிலேயும் யில்லை. யிந்த இந்தியாவிலேயும் இல்லை யென்று’ ஆளுநரால் பாராட்டப்பட்டார். தன் மனதுக்கு சந்தோஷமான நேரங்களில் எல்லாம் ஆனந்தரங்கர் தனக்கு அருகில் இருக்க வேண்டும் என்று விரும்பியிருக்கிறார் ஆளுநர் துப்ளேக்ஸ்.
ஒருமுறை, ஆளுநரின் பிரதிநிதியாக நவாப் மாபூசுகானை சென்று பார்த்தார் ஆனந்தரங்கர். இப்போது நவாப் இவருக்கு கட்டாரி ஒன்றினைப் பரிசாக வழங்கினார். அதைக்கொண்டுவந்து ஆளுநரிடம் காட்டினார் ஆனந்தரங்கர். அந்தக் கட்டாரியை வாங்கிப் பார்த்து வெகு சந்தோஷப்பட்டு ‘அந்தக் கட்டாரியை இருபது முப்பது தரம் உண்டு அதை வாங்கிப் பார்க்கிறதும் வருகிற குமிசெல்காரர், வெள்ளைக்காரர், சமஸ்தான பேர், வெள்ளைக்காரர், பெரிய மனுஷர் வருகிற பேருக்கெல்லாம் காண்பிக்கிறதும் ரங்கப்பன் சிப்பாய் ஆனானென்கிறதும் சந்தோஷமாய்ச் சொல்லிக் கொண்டேயிருந்தார்.’
ஆளுநருக்கும் அரசாங்கத்துக்கும் தீவிர விசுவாசி. நேர்மையானவர் ஆனந்தரங்கர். அதனால்தான், ‘ஊருக்குள் வரும் தானியங்களை நீ தடுக்கிறாயா?’ என்று ஆளுநர் கேட்டபோது, ‘இதனால் எனக்கு என்ன ஆதாயம்?’ என்று இவரால் எதிர்கேள்வி எழுப்ப முடிந்தது. பொன்மலையில் இருக்கும் காகமும் பொன்நிறமாக இருக்கும் என்பார்களாம். இப்படித்தான் துப்ளேக்ஸை சார்ந்திருந்த ஆனந்தரங்கரும் இருந்திருக்கிறார்.)
1746 செப்தம்பர் 16 புரட்டாசி 4 சுக்கிரவாரம்
துரைக்குச் சொல்லி முடியாத சந்தோஷம் வந்து, என்னை முதுகு தட்டிக் கிட்டேயிருந்த முசே லொஸ்திசுபுரியுடனே ரங்கப்பனத்தனை புத்திசாலியும் காரியமறிந்தவனும் ஒருத்தருமில்லை யென்று சொல்லி, பின்னையும் அநேகவிதமாய் என்னை ஸ்தவுத்தியமாய்ச் சொல்லி, வெளியிலே துலுக்கர் சொல்லுகிறதும் தமிழர் சொல்லுகிறதும் என்னுடனே சொன்னையே, இவர்களுடனே சொல்லென்று சொல்ல, அவர்களுடனேயும் பிள்னையும் சற்று அதனமாய்த்தானே சொல்ல, அவர்களும் உள்ளது என்று சொல்லி, அவர்களும் துரையை ஸ்வுத்தியமாய்ப் பண்ணி இப்படி நாலு நாழிகை தேசகாலம் நடந்தது.
1747 பிப்ரவரி 18 மாசி 10 சனிவாரம்
இந்தநாள் நடந்தசேதி யென்னவென்றால் அசறத்து மாபூசுகானவர்களும் மமுதல்லிகானவர்களும் மகம்மதாக்கலுக்கு எழுதியனுப்புவித்த வயணமென்ன வென்றால்: குவர்னதோர் சாயபு அவர்கள் எழுதினபடிக்கு நமக்குச் சம்மதிதான். இப்பவும் ஆனந்தரங்கப்பன் வந்தவுடனே கண்டுபேசிக் கொண்டு அவரை அழைத்துக்கொண்டு நீயும்வரும் மூன்றாஞ் சாமத்துக்கு வருகிறோமென்று யெழுதியிருந்தது. அதன் பேரிலே உடனே என்னையும் முசே திலார்சையும் மகம்மதாக்களையும் மூன்று பேரையும் பயணமாய்ப் போகச்சொல்லி ஸ்ரீ துரையவர்களுத்தாரங் கட்டளையிட்டார்கள்.
அந்த உத்தாரப்படி யின்றைய தினம் மத்தியான மிரண்டு மணிக்குப் பயணப்பட்டு மாபூசுகானண்டைக்குப் போனோம். அவருக்கு நசர்வைத்துப் பேட்டி பண்ணிக் கொள்ளுகிறதற்கு இருபத்திரண்டு மோகரி என் கையிலே கொடுத்தார்கள். அவ்விடத்திலே போனவுடனே யோசனைப்பண்ணி பதினொரு மோகரி பண்ணினால் போதுமென்று மனதிலே யெண்ணிக்கொண்டு பதினொரு மோகரியை வைத்துக்கொண்டு திருக்காஞ்சியிலே இறங்கியிருக்கிற மாபூசுகானவர்களண்டைக்குப் போனோம்.
நான் போய் பதினொரு மோகரையும் நசர்வைத்துப் பேட்டிக் பண்ணிக்கொண்ட வுடனே எழுந்திருந்து கட்டிக்கொண்டு உட்காரச் சொல்லி உத்தாரங் கொடுத்தார்கள். அதன் பேரிலே அவரும் சொல்ல வேண்டிய உபசாரமான வார்த்தையாய்ச் சொன்னார். அதற்கு உத்தரவு அதற்கேற்றபடிக்கு ரொம்பவும் உபசாரமாய்த்தானே உத்தரவு சொன்னோம். அதன் பேரிலே சீரொப்பா கொண்டுவரச் சொல்லி நமக்கு நூற்றைம்பது ரூபாயிலே சீரொப்பாவுங் கொடுத்துத் தம்முடைய கையினாலே நடுகட்டும் கட்டிவிட்டுத் தாம் கையிலே வைத்திருக்கிற கட்டாரியை எடுத்து என்னுடைய அறையிலே சொருகிவிட்டு இனிமேல் உனக்குச் சத்துருவாயிருக்கப்பட்ட பேரையெல்லாம் செயிக்கத்தக்கதாக கொடுத்தோம் என்கிறதாய்ச் சொல்லி, தம்முடைய பேரிலே போத்திக்கொண்டிருந்த சாலுவையை எடுத்து என் மேலே போத்தி உம்முடைய சினேகிதம் நமக்கு இருக்கவேணுமினிமேல் நம்முடைய காரியத்திலே யிருக்கவேணும். என்னுடைய வெட்கம் உன்னுடையதே யல்லாமல் மற்றப்படியல்லவே. ஆனபடியினாலே அதற்கெப்படி உண்டோ அந்தப்படி நடப்பித்துக்கொள்ளவுமென்று சொல்லி முசே திலார்சுக்கும் நாற்பத்தைந்து ரூபாயிலே ஒரு சீரொப்பாவும் கொடுத்து, மகம்மதாக்கலை அழைத்து, இப்போதேயானால் பொழுது போச்சுதே நாளைய சூரிய வுதயத்துக்கு வருகிறோமென்று சொல்லி அனுப்பிவிட்டார்கள். அனுப்புகிற போது அவ்விடத்துக் கவை உங்களுக்குச் சம்மதியானபடியென்று சொன்னார்கள்.
நல்லதென்று அனுப்புவித்துக் கொண்டு புறப்பட்டு ஏழுமணிக்கு ஸ்ரீ துரையவர்களண்டைக்கு வந்து அவ்விடத்திலே நடந்த மரியாதைகளெல்லாம் சொல்லிக் கட்டாரி கொடுத்ததும் சொன்னோம். அந்தக் கட்டாரியை வாங்கிப் பார்த்து வெகு சந்தோஷப்பட்டு அந்தக் கட்டாரியை இருபது முப்பது தரம் உண்டு அதை வாங்கிக் பார்க்கிறதும் வருகிற குமிசெல்காரர், வெள்ளைக்காரர், சமஸ்தான பேர், வெள்ளைக்காரர் பெரிய மனுஷர் வருகிற பேருக்கெல்லாம் காண்பிக்கிறதும் ரங்கப்பன் சிப்பாய் ஆனானென்கிறதும் சந்தோஷமாய்ச் சொல்லிக் கொண்டேயிருந்தார்.
பிற்பாடு என்னை அழைத்து இந்தக் கட்டாரி உனக்கெதற்காகக் கொடுத்தாரென்று கேட்டார். உங்களுக்குத் தெரியாமலிருக்குதாவென்று சொன்னேன். ஆனாலும் ஒருவேளை அவர்கள் சமாதானத்துக்கு வராவிட்டால் அவர்களைக்கூட செயிக்கக்கத்தாகக் கொடுத்தார் என்று சொன்னேன். மெய்தானென்று சொல்லி இந்தக் கட்டாரி கொடுத்ததைத் தானே வெகுநேரம் பிரஸ்தாபம் பண்ணிக்கொண்டிருந்து சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.
1747 ஆகஸ்டு 12 ஆடி 31 சனிவாரம்
இற்றைநாள் நடந்த அதிசயமென்னவென்றால்: மத்தியானம் பதினொரு மணி வேளைக்குக் கும்பினீர் வர்த்தகர் எல்லாரும் வந்து எனக்குக் கால் நோய் சௌகரியமா யிருக்கிறதாவென்று விசாரித்து எல்லாரும் உட்கார்ந்து வார்த்தைச் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
அப்போது அப்புமுதலியார் வந்து ஸ்ரீ துரையவர்கள் சொல்லச் சொன்னார்களென்று வந்து சொன்ன சேதி என்னவென்றால்: ரங்கப்பிள்ளை வரவில்லையாவென்று என்னைக் கேட்டார். அதற்கு நான் சொன்னது, அவருக்குக் கால் நோய் ஆனபடியினாலே நடக்க மாட்டாரென்று சொன்னேன். அதற்குத் துரையவர்கள் இருந்து கொண்டு இரண்டு பேர் கைலாகுலேயாகிலும் வர மாட்டாரா? அல்லவென்றால் நான்கு பேராய் தூக்கிக்கொண்டு வந்தாலும் இவ்விடம் விடமாட்டார்களாவென்று கேட்டு, அதன் பேரிலே அப்பு முதலியாரை அழைத்து ஸ்ரீ துரையவர்கள் சொல்லி அனுப்பிவித்த வயணம்:
அவர் வந்து கும்பினீர் வர்த்தகர் எல்லாரையும் இருக்கச் சொன்னது என்னவென்றால்: சீர்மையிலிருந்து மெத்த மெத்த சந்தோஷங்கள் எல்லாம் வந்திருக்கிறது. இதல்லாமல் என்னுடைய மனது கோரிக்கைப்படிக்கு வந்திருக்கிறது. விஸ்தாரமாகக் கப்பல்கள் வருகின்றன. இதல்லாமல் சீர்மைச் சேதிகள் வெகு சந்தோஷமாய் வந்திருக்கின்றன.
இப்படிப்பட்ட வார்த்தைகள் வந்திருக்கச்சே ரங்கப்பன் வீட்டிலேதானே இருக்கிறதற்கு மனது வந்ததாவென்றும், என்னுடைய மனதிலே யிருக்கப்பட்ட சந்தோஷங்களெல்லாம் ரங்கப்பிள்ளையுடனே சொல்லவேணுமேயல்லாமல் மற்றப்படியல்ல. அவருடனே சொல்லுகிற மட்டுக்கும் நம்முடைய மனதிற்குச் சமாதானமாகிறதில்லை யென்றும், மெள்ள மெள்ள எப்படியாகிலும் வரச் சொல்லியும், கப்பல் வருகிற சந்தோஷத்தையும் சகல சனங்களுக்கும் தெரியப்படுத்தச் சொல்லியும், இப்படியாகச் சொல்லச் சொன்னார்களென்றும் வந்து சொன்னார். அந்த சந்தோஷத்தினாலே அப்பு முதலியாருக்கு ஒரு ஓரகண்டியும், ஒரு பாகையும் கொடுத்தேன்.
1747 ஆகஸ்டு 13 ஆவனி 1 ஆதிவாரம்
…அதன்பிறகு என்னை மாத்திரம் தனியே உள்ளே அழைத்துக் கொண்டுபோய் சொன்னது என்னவென்றால்: நீ சொன்னபடிக்கெல்லாம் வந்திருக்கிறது. நீ சொல்லுகிற தொன்றாகிலும் தப்பிதமில்லை. நாம் நினைத்தபடிக்கெல்லாம் சந்தோஷமான சேதியெல்லாம் வந்திருக்கிறது. நீ சாஸ்திரக்காரன் சொல்லுகிறாப் போலே சொல்லுகிறாய். உன்வாக்கிலே என்ன பிறக்கிறதோ அந்தப்படிக் கெல்லாம் சரியாய் நடக்கிறது. உன்னுடைய காரியங்களும் செகற்பமாகும் படியாய் வந்திருக்கிறதென்றும், இன்னும் சிறிது காரியங்கள் நீயும் நானும் சாவகாசமாய் தனித்துப் பேசிக்கொள்ள வேண்டியிருக்கிறது. நாளை பகலைக்கு மேலாக வரக்கூடுமானால் வா, கண்டு பேசிக்கொள்ளுவோமென்றும், பின்னையும் இரண்டொரு அந்தரங்கமான விஷயங்களும் சொன்னார்கள். அது இன்னதென்று எழுதப்படாதபடியினாலே அதை இன்னுமொரு வேளையிலே விஸ்தரித்து எழுதுவேன்.
1748 சனவரி 13 தை 3 சனிவாரம்
நான் போனவிடத்திலே முசியே தொத்தேலிருந்து கொண்டு துரையவர்களுடனே, ரங்கப்பிள்ளை சண்டைக்குப் பயணம் புறப்படுகிறதற்கு முஸ்தீதாய் இருக்கிறார். பிஸ்தோலுக்கும் மற்றதுகளுக்கெல்லாம் லெஸ்து பண்ணுவித்துக் கொண்டு பயணமாய் இருக்கிறார். துபாக்கி மாத்திரமில்லை. நல்ல துபாக்கியாய் இரண்டு துபாக்கி மாத்திரம் கொடுக்க வேணுமென்று சொன்னதின் பேரிலே துரையவர்கள் இருந்து கொண்டு,
அவர் எங்கே வருகிறார்? நாம் வெளியே போகிற மட்டுக்கும் இவ்விடத்துக் கவைக்கு அவரிருக்க வேணுமென்று சொன்னார். அதன் பேரிலே நானிருந்து கொண்டு, நீங்களிருக்கிற விடத்திலே நானுங்கூட இருக்கிறதேயல்லாமல் உங்களை விட்டுவிட்டு நான் அவ்விடத்திலே இருக்கிறதில்லை என்று சொன்னேன்.
அதிலே முசியே தொத்தேலும் முசியே நெப்ரேனும் இருந்து கொண்டு, மெய்தான். நீரிருக்கிற விடத்திலேதான் ரங்கப்பிள்ளையும் இருக்க வேணும். அது நியாயம். சரிதானென்று சொன்னார்கள்.
அதற்கு துரையிருந்து கொண்டு, சின்னதுரையை இவ்விடத்திலே வைத்துப் போகிறோமே, அவர் நல்லவர். மெத்த சாது. அவருக்குப் பின்னையொன்றும் தெரியாது. ரங்கப்பிள்ளையைப் போலே கப்பாசல்லா. ரங்கப்பிள்ளை என்னுடைய கையுங் கீழேயிருந்து எல்லாம் வாடிக்கைப்பட்டு என்னுடைய புத்தியிலே தோன்றுகிறபடிக்கு, அதற்கு முன்னமேயே எல்லாக் காரியமும் சேகரித்து நடத்தத்தக்கவாறு மிதல்லாமல், துலுக்கருடைய காகிதங்களுக்கு உத்தரவு பிரதிஉத்தரவும் தெரிந்து எழுதி சமதாயிருக்கிறதற்கு வாடிக்கைப்பட்டவன். என்னுடைய புத்திக்குச் சமானமாய் நடத்தத்தக்க யோக்கியனான படியினாலேயும், என்னிடத்திலே ரொம்ப மருவி வாடிக்கைப்பட்டவனான படியினாலேயும், அவனிங்கேதானே யிருந்து இவ்விடத்திய காரியங் கவையெல்லாம் சமாளித்துக் கொண்டிருக்க வேணும். ஆனபடியினாலே அவர் போகாத இவ்விடத்திலே இருக்க வேணுமென்றார்.
அதன் பேரிலே நானிருந்து கொண்டு, ஐயா, நான் ஒரு வார்த்தை சொல்லுகிறேன் கேட்கவேணுமென்று சொன்னேன். என்ன என்றார். ஐயா, உம்முடைய யோகத்தினாலேயும் உம்முடைய அதிர்ஷ்டத்தினாலேயும் நீங்களின்னம் அநேகமான கீர்த்தி சம்பாதிக்கத்தக்கதாக ஆயத்தப்பட்டிருக்கிற கன யோகசாரியான படியினாலே உம்முடைய யோகநாதனே எங்கே போனாலும் திக்கு விசயமாகிறதேயல்லாமல் பின்னை யொருத்தனைத் தொட்டிருக்கிறதென்று யோசனை பண்ணத் தேவையில்லை.
இப்போது சொல்லுகிறது: முசியே பரதி போய்க் கெலித்தானென்றும் மற்றவன் கெலித்தானென்றும் இவனைத் தொட்டு நிருவாகமாயிருக்கிறதென்றும் இப்படியாகச் சொல்லப்படுகிறதென்ன வென்றால்: நீர் மகா யோக்கியசாலி யானபடியினாலே உங்களை நாங்கள் சேர்ந்திருக்கிற படியினாலே உங்களுடைய சாயை எங்கள் பேரிலே சேர்ந்திருக்கிற படியினாலே மற்றப் பேருக்குக் கீர்த்தியே யல்லாமல் மற்றபடி ஒருத்தரைத் தொட்டு ஆகிறதென்ன விருக்கிறது? உம்முடைய யோகமே தேவனாம்பட்டணத்துக் கோட்டையிலே நிசான் கொண்டு போய்ப் போடுவிக்கப் போகிறது. ஆகையினாலே ஒருத்தருக்கும் பிரயாசை இல்லையென்று சொன்னேன்.
நானிப்படியெல்லாஞ் சொன்னவுடனே துரையவர்களும், முசியே தெத்தேலும், முசியே தெப்ரேனும் நகைத்துக் கொண்டிருந்தார்கள். துரையவர்கள் நகைத்து ரங்கப்பிள்ளை எப்போதும் இப்படிதானே சொல்லுகிறதென்றும் சொன்னார். ஆனால் அவர் சொன்னது பின்னையும் ரொம்பவும் உண்டு. ஆனாலும் அதிலே காரியத்தை மாத்திரம் எழுதினோம். இன்னும் அவர் சொன்னபடிக்கெல்லாம் விஸ்தரித்து எழுதினால் அவர் ஷடைக்கு எழுதினதாயிருக்கும். ஆனால், உண்டானபடி நடந்த காரியத்திலேயும் சூசனையாய் எழுதினேன்.
1748 பிப்ரவரி 17 மாசி 9 சனிவாரம்
அப்பால் துரை சவாரிபோய் வந்து எட்டுமணிக்கு என்னை அழைத்தனுப்புவித்து, துரை கேட்ட சேதி என்னவென்றால்: பட்டணத்துக்குத் தானியம் வராமல் பண்ணுகிறாயா யென்று என்னுடன் அவரவர்கள் வந்து சொல்கிறாரென்று சொன்னார்.
அதற்கு நான் சொன்ன உத்தாரம்: இராச்சியத்திலேயிருந்து வருகிற தானியம் இந்தப் பட்டணத்திலே வருஷத்துக்கு நாலு லக்ஷம் வராகன் தானியம் விற்கிரயமாகி வராகன் தீவாணத்துக்குச் செல்லுகிறது. இதை என்னாலே தடைபண்ணி இந்த நாலு லக்ஷம் வராகனும் கொடுக்கிறதற்கு எனக்கு எங்கே யிருக்கிறது? அப்பாலும் இந்தப் பட்டணத்துக்கு வருகிற தானியம் நிறுத்தினாலே எனக்கு வருகிற ஆதாயமென்ன? ஆற்காட்டிலே நபாபு என் உத்தாரத்தின் மேலேயல்லவா நடந்து கொள்கிறார். ஆனபடியினாலே நான் அனுப்ப வேண்டாமென்று எழுதினாப்போலே தடைபண்ணவும், அனுப்பச்சொல்லி எழுதினாப்போலே அனுப்பவும் என் கைக்குள்ளேயா யிருக்கிறார்கள். ஆகிலும், இதிலே நடக்கப்பட்ட நியாயம் உங்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கிறது.
எங்களுக்குள்ளே ஒரு வழக்கம் சொல்லுவார்கள்: பொன்மலையைச் சேர்ந்த காக்காயும் பொன் நிறமாகுமென்று சொல்லுகிற வழக்கப்படிக்கு மகத்தாகிய உங்களுடைய தயவை நான் சம்பாதித்தபடியினாலே என்னுடைய ஆக்கினைப்படிக்கு அன்வர்திகான்கூட நடந்து கொள்ளுகிறான் என்கிற கீர்த்தி புதுச்சேரியிலே உண்டாச்சுது.
ஆனபடியினாலே அன்வர்திகானைப் போலே ஒத்த சுபேதாரன் ஆக்கினைப்படிக்கு நடந்துகொள்ளுகிறான் என்கிற பொருள் உங்கள் வாக்கினாலே இந்த வார்த்தைச் சொன்னபடியினாலே எனக்கு இனிமேல் மகத்தாயிருக்கப்பட்ட யோகமிருக்கிறதற்கு எழுதியுமிருக்கச்சே தேவரீரவர்கள் வாக்கினாலே புறப்பட்டதென்று சொன்னதற்கு நகைத்து, மெய்தான். எனக்கெல்லாம் தெரியும். உன்மேலே அவர்கள் துவேஷத்தினாலே சொல்லுகிறார்கள் என்கிறதும் தெரியும். இனிமேலும் நீ மகத்தான யோகவானான படியினாலே அவரவர் வந்து இப்படிப்பட்ட விசேஷங்கள் சொல்லுகிறார்கள். அது எனக்கு நன்றாய்த் தெரியுமென்று சொன்னார்.
அதன்பேரிலே நான் சொன்னது: பட்டணத்துக்குத் தானியம் வராதபடிக்கு நான் செய்ததே யுண்டானால் கும்பினிக்குத் துரோகவானானேன். இப்படிப்பட்ட விசேஷங்கள் அபாண்டம் எப்போதும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அப்படி அநேக காரியங்கள் வந்து சொன்னவிடத்திலே ஒரு காரியமாகிலும் தேவரீர் விசாரித்து மெய்யானால் என்னையாகிலும் ஆக்கினை பண்ணவும், இந்த வார்த்தைகள் பொய்யானால் எந்நேரமும் உங்களுடனே சொல்லுகிறவர்களை ஆக்கினை பண்ணவேணுமென்றும் சமஸ்தான பேரும் அறிய என்னையாகிலும் வந்து சொல்லுகிறவர்களையாகிலும் ஆக்கினை பண்ணினால் என் மனதுக்குச் சமாதானமாயிருக்குமே யல்லாமல் தேவரீர் அவர்கள் சும்மா ஒரு காரியம் செய்யாமல் சும்மாயிருந்தால் எனக்குச் சமாதானமாயிராதென்று சொன்னேன்.
இதுகளுக்கெல்லாம் அவர் நகைத்துக் கொண்ட வாக்கிலே இது விருதாவான பேச்சு. இதை ஒரு காரியமாய்ப் பிரஸ்தாபம் என்னத்திற்கு என்று சொன்னார்கள்.
1753 மாயு 8 சித்திரை 30 அங்காரக வாரம்
…அதுக்கு நான் மறுபடியும் பிறபஞ்சத்திலே யிந்த லவிக்கீகம் யெல்லாம் நன்றாய் அறிஞ்ச பிற்பாடுதான் சுவாமியை அறியப் போறதுயென்று சொன்னதுக்கு அவர் சொன்னது: நீர் மகா சமத்துக்காறமாய் பேசுவீர். உம்மைப் போலே ஆரும் வெள்ளைக்காறரிலேயாவது துலுக்கரிலேயாவது ஆரும் பேசுவாரில்லை. யிப்படிப்பட்ட சாமார்த்தியம் இருக்கிற படியினாலே நீர் சுவாமியை அறிய வேண்டியதென்று சொன்னார். அதற்கு நான் சொன்னது: யின்னம் யிந்த லவிக்கீகம் யெல்லாம் நன்றாய்க் குலங்கக்ஷமாய் அறிஞ்சுகொண்டு சுவாமியை பசனை பண்ணியிருக்க வேணுமென்று நான் பிறார்த்திக்கிறேன் யென்று சொன்னேன்.
யிதிலே துரையவர்கள் சுப்பீரியேரைப் பார்த்து நீர் பேசுகிற தெலுங்கு, தமிழ் கலந்த தெலுங்காயிருக்குதென்று சொன்னார். அதிலே நான் சொன்னது: தமிழ் ராச்சியத்திலே பேசுகிற தெலுங்கானபடியினாலே அப்படித்தானிருக்கு மென்று சொன்னேன்.
1753 மாயு 24 வையாசி 15 குருவாரம்
துரையவர்கள் நகைச்சுக் கிட்டயிருந்த வெள்ளைக்காறர்களுடனே றங்கப்புல்லே மகா புத்திசாலி யிவனைப் போலே சமயோசிதமாய் காரியக்காரியம் அறிஞ்சு யெப்படிப்பட்ட காரியங்களிலேயும் மகா நிறுவாக சக்குத்தியுடனே சபாரஞ்சிதமாய் பேசுரபேரை யோறாப்பாலிலேயும் யில்லை யிந்த இந்தியாவிலேயும் இல்லை யென்று வெகுசாய் சந்தோஷமாய்ச் சொன்னார்.
அப்பால் நான் பின்னையும் சொன்னது: முன் அவுறங்காதுசா – லூயிசு கத்தோர்சு முதலான ராசாக்கள் ஒவ்வொரு தமஸ்தானங்களை சாதிக்க வேணுமென்று எண்ணால் பெகுதனமும் பெலமும் வைத்துக்கொண்டு வருஷக்கணக்காய் சண்டைபண்ணியும் சாதிக்கிறது பிறயாசம் யென்றும் ஒரு விசையாபுரத்தை அவுரங்கசீபு பாதுஷா பனிரெண்டு வருஷம் சண்டைபோட்டு வாங்கினார். செஞ்சிக்கோட்டையின் பேரிலே சூல்பக்கார்க்கான் விஸ்தாரமாய் பெலத்த பவுன்சுடனே வந்து பனிரெண்டு வருஷம் சண்டைபண்ணி வாங்கினார். அப்படிப்பட்ட செஞ்சிக்கோட்டையை நீர் ஆயிரம்பேர் வெள்ளைக்காறர்களையும் ரெண்டாயிரம் பேர் சிப்பாய்களையும் அனுப்பி மூணே முக்கால் நாழிகையிலே வாங்கிப் போட்டீர். நாசறுசங்கு தக்கனபாதுசா வாயிருக்கப்பட்டவன் லட்சங்குதிரையும் பத்துலட்சம் வெடுத்தாமத்துடனே வந்திறங்கினவனை மூணேமுக்கால் நாழிகையிலே தலையை வெட்டிவிச்சீர். அப்படிப்பட்ட யோகம் உம்மது. உம்முடைய சாபத்திலே யிருக்கப்பட்ட பாதரேணுவுக்கு சமானமானதாய் மைத்த ராசாக்களை சொல்லப் போகாது யென்று சொன்னதுக்கு துரையவர்கள் யித்தனை பெரிய விசேஷத்துக்கு நான் பாத்திரமல்ல. நல்லதென்று தம்மைச் சொல்லிக்கொண்டு கிட்டயிருக்கிற வெள்ளைக்காறருடனே யிதுவே பிறஸ்தாபமாய்ப் பேசிக்கொண்டிருந்தார்.
(தொடரும்)