Skip to content
Home » ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #17 – மதாம் துய்ப்ளேக்சின் துரைத்தனமும் ஆனந்தரங்கரின் அங்கலாய்ப்பும்!

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #17 – மதாம் துய்ப்ளேக்சின் துரைத்தனமும் ஆனந்தரங்கரின் அங்கலாய்ப்பும்!

மதாம் துப்ளேக்சின் துரைத்தனமும் ஆனந்தரங்கரின் அங்கலாய்ப்பும்!

ஆனந்தரங்கரை தனது பேச்சு, நடவடிக்கைகளால் நிலைகுலைய வைப்பது மதாம் துய்ப்ளேக்சின் அன்றாட நடவடிக்கையானது. அவரை எப்படியெல்லாம் மதாம் வறுத்தெடுத்தார் என்பதைக் கடந்த பதிவில் பார்த்தோம். இவற்றிற்கெல்லாம் ஈடுகொடுத்துப் பணியாற்றி வந்தார் பிள்ளை. ஒருமுறை, பிரெஞ்சு எழுத்திலே துரைக்கு ஒரு கடிதம் வந்தது. அதில் ‘உன்னைச் சூனியம் வைத்துக் கொல்லப் பார்க்கிறார்கள்’ என்று எழுதியிருந்தது. உண்மையில் அந்தக் கடிதம் புதுச்சேரியில் இருந்தே எழுதப்பட்டது. அதை எழுதுவித்தவர் மதாம் துய்ப்ளேக்ஸ் ஆவார்.

அம்மாளது அதிகார வெறி நாளுக்கு நாள் அதிகமானது. இது ‘ஸ்திரீகள் சாகசங்கள் புஸ்தகங்களிலே எழுதியிருக்கிறதுவிட அதிகமானது’ என்கிறார் ஆனந்தரங்கர். மேலும், எந்த வீட்டிலே சமஸ்தானத்திலே ஸ்திரீ அதிகாரம் தலையெடுக்கிறதோ அந்த வீடு, சமஸ்தானம் அழிவைச் சந்திக்கும் எனச் சாஸ்திரம் சொல்வதை முழுமையாக நம்பினார் ஆனந்தரங்கர்.

மேலும், ‘முசியே துப்ளேக்சு துரைத்தனம் போய் நாலுமாசமாச்சுது. முசியே துப்ளேக்சு பெண்சாதி நாலுமாசமாய் துரைத்தனம் பண்ணுகிறாளென்று வெள்ளைக்காரர் ஆண் பெண் தமிழர் ஆண் பெண் துலுக்கர் ஆண் பெண் அடங்கலும் இதென்னமோ கேடுகாலமென்று சொன்னபடிக்கு பட்டணத்துக்குக் கேடும் வந்து சமஸ்தயிக்கப்பட்டு மனுபவிக்கிறார்கள். சுவாமி இந்த முசியே துப்ளேக்சு பெண்சாதி அதிகாரத்தை நிவர்த்தி பண்ண சகல ஜனங்களையும் எப்போ ரக்ஷிக்றாரோ நான் அறியேன். இப்போ பட்டணத்திலுள்ள ஜனங்கள் தண்ணீர் குடம் தளும்புராப்போல் றாத்திரியும் பகலும் திகிலிலே செத்துப் போகிறார்கள். இந்த ஜனங்கள் திகிலை எப்போ நிவர்த்தி பண்ணுகிறாரோ தெரியாது. ஆனால் நிவர்த்தி பண்ணுவாரென்று பரவசமுமிருக்கிறது. இதற்குள்ளே என்னமோவென்று சனங்கள் அங்கலாய்க்கிறதைக் காகிதத்திலே எழுதமுடியாது’ என்பது ஆனந்தரங்கப்பிள்ளையின் பெரும் அங்கலாய்ப்பாக இருந்தது. இதோ அவரது எழுத்துக்களின் ஊடாக இவற்றை நாம் வாசிக்கலாம்:

1747 நொவம்பர் 27 கார்த்திகை 15 சோமவாரம்

பிச்சா முதலி மருமுகன் கனகராய முதலிக்குச் சகலபாடியாகிய வெள்ளைக் குஷ்டம் பிடித்த மலைக்கொழுந்து முதலியைச் சென்னப்பட்டணத்துப் பெரிய துபாசித்தனம் பண்ணுகிறதற்கு முதலியை பெடுத்தல்மிக்குக் காண்பித்து இவன் பெரிய துபாசி, இவனைக்கூட அழைத்து… போவேன்றும், அப்பால் திரிந்திடும் திருட்டுப் பயல், பள்ளிப் பயல், சுருட்டுப் பொறுக்கிக் கொண்டு, சின்னதுரை வீட்டிலே எச்சப் பீங்கான் எடுத்துக் கொண்டு திரிந்த நல்லதம்பி என்கிற பயலைப் பாளையக்காரனென்றும் காண்பித்து அவனுக்குத் தளவாய் நாய் பிடித்த சவுரி என்கிற பள்ளிப்பயலையும், அப்பால் மலைக்கொழுந்து முதலி மகன் வற்லாமுக்கு மூத்தவன் கொழந்தையப்பன் என்கிறவனைச் சாவடிக்குத் துபாசி என்று நியமித்த பேரைக் காண்பித்து அழைத்துப் போகச்சொல்லி சொன்னார்.

அப்பால் முசியே பெடுத்தல்மேயையும் மோராவையும் சென்னப்பட்டணத்திற்குப் போகத்தக்கதாகப் பயணமனுப்பிவித்துக் கொண்டு போனார்கள். இந்தப் பெரிய துபாசியும் இந்தப் பாளையக்காரரும் வந்த வரலாறு என்னவென்றால்: மதாம் துய்ப்ளேக்சுக்கு ஆயிரத்தைந்நூறு ரூபாய் மட்டுக்கும் நல்லதம்பி பள்ளிப்பயல் செலவழித்துப் பாளையக்கார உத்தியோகம் வாங்கிக் கொண்டான். இதல்லாமல் ஒரு உம்படிக்கைச் சென்னப்பட்டணத்திலே முன்னேயிருந்த பாளையக்காரன் வாரின தெல்லாம் அவன் எடுத்துக் கொண்டு போனானென்றும், மனதிலே எப்போதும் தைரியத்தைப் பாராட்டிக்கொண்டிருக்கிற படியினாலே துபாசிகளை பாளையக்காரன் எல்லாம் தன் மனுஷராய்ப் போட்டுச் சும்மா வாரிப்போடலாமென்றும், சகலமும் தன் அமுலாய்த் தன் அதிகாரத்தின் பேரிலே தன் சொல்லின் பேரிலே நடத்திக் கொள்ளலாமென்றும், பெடுத்தல்மி துரைத்தனம் பண்ணப் போகிறவன் முசியே துலோராம் போலே விவேகியல்ல வென்றாப் போலேயும் இப்படியெல்லாம் யோசனை பண்ணி அந்தப் பக்கத்திலே எழுதப்பட்ட துபாசிகளையும் பாளையக்காரரையும் அமர்த்தி முசியே துய்ப்ளேக்சுக்கு, முசியே துலோராமும் நடப்பித்த காரியத்திற்கெல்லாம் சாதகம் வரவேணுமென்றாப் போலேயும் கொள்ளையிடுகிறதற்கு லகுவென்றாப் போலேயும் இப்படியாக அவர் புத்தியை மயக்கித் தன் அதிகாரம் செலுத்தவும், காசு சுற்றவும் யோசனை பண்ணி துரை கையிலே உத்தாரம் வாங்கிக் கொடுத்து அனுப்புவித்தான். நான் பார்ப்பதற்குள்ளே, கேள்விப்பட்டதற்குள்ளே ஸ்திரீகள் சாகசங்கள் புஸ்தகங்களிலே எழுதியிருக்கிறது கூட இவன் சாகசத்திற்கு முன்னே அப்பிரயோசிகமே யல்லாமல் இவன் அம்சையிலே பதினாராயிரத்திலே ஒரு பங்கு அவர்களுக்கில்லை யென்றால் தப்பிதமில்லையென்று சொல்ல வேணும். அது நன்றாய் எனக்குத் தெரியும்.

இந்தப் பட்டணத்திலுள்ளவர்கள் வெள்ளைக்காரன், வெள்ளைக்காரிச்சிகள், தமிழர்கள், துலுக்கர்கள் சமஸ்தான பேரும் இவள் போய்க்கூட்டிலே படித்தவள் என்றும், இவளைத் தொட்டுப் பட்டணம் அழியுமேன்றும் சொல்லத்தக்கதாகப் பேர்பெற்ற மகராசி. அப்படிப்பட்ட நடத்தை என்று முசியே துய்ப்ளேக்ஸ் ஒருவேளை அறிவார். ஒருவேளை மறந்து போவார். ஆனால் அவர்கள் அதிர்ஷ்டப்படிக்கு நடக்கிறதே யல்லாமல் சிறிது பராமரிப்பும் விசாரிப்பும் பேரிலே நடக்கிறதென்று யோசனை பண்ணிக் கொள்ளத் தேவையில்லை.

இப்படியிருக்க, பத்தரை மணி வேளையிலே சின்னதுரை வந்து கண்டு பேசிப்போன பிற்பாடு முசியே துய்ளக்ஸாகிய குவர்னதோர் என்னை அழைத்து நடுசாலையிலே வைத்துக் கொண்டு, ‘ரங்கப்பிள்ளை உன் பேரிலே இந்த ஆகாத மனதுள்ளவர்கள் உண்டாக்கின இரு வதந்தியைக் கேட்டியா? நீ உன் உடைமை யெல்லாம் அப்புறத்திலே தாண்ட வைக்கிறீராம். அதைக் கொண்டுபோய் உன் அம்மாள் வீட்டிலே சேர்த்து அப்பால் சமயம் வந்தபோது ஓடிப்போக இருக்கிறீராம். இதல்லாமல் முத்தய்யப்பனும் நீயும் சென்னப்பட்டணத்திலே எடுத்த கொள்ளைத் திருட்டு சமஸ்தமும் உனக்கும் பாகம் பங்கிட்டுக்கொள்ள வேணுமென்றும் நினைத்து ஓடிப்போலே யல்லாமல் கூடாதென்று யோசனைப் பண்ணிக் கொண்டிருக்கிறதாய்ப் பிறப்பித்தார்கள் என்று சொன்னார்.

அதற்கு நான் சொன்னது: ஐயா, பார்த்தீர்களா? என் பேரிலே பொய் அபாண்டத்தை இப்படிச் சொல்லி உம்முடைய மனதிற்கு என்பேரிலே ஒரு ஐயத்தைத் தோற்றுவித்து எனக்குச் சிறிது பொல்லாப்பு வருவிக்க வேணுமென்றும் இப்படி உமக்கு என்பேரிலே பூரண தயவைப் போக்கடிக்க வேணுமென்றும் இப்படி எடுப்பாய் எடுத்தார்கள். முன் சிறிது எடுத்தார்கள். அதிலே பலமில்லாமற் போச்சுதென்றும் இதிலே ஐயம் தோன்றி எனக்கு யாதொரு பொல்லாப்பு வருவிக்க வேணுமென்று யோசனை பண்ணினார்கள். ஆனால், தேவரீர் என் மனுவை ஒரு நாழிகை நேரம் மனம் பொறுத்துக் கேட்டு அப்பால் என் பேரிலே யிருக்கிற குற்றமும், சொல்லுகிறவர்களின் பேரிலே யிருக்கிற குற்றமும், அப்பால் இது எந்த வழியிலே யிருந்து பிறக்கிறதோ அது தங்களுக்கு விசிதமாய் தெரிய வருமென்று சொன்னதற்கு,

இது எங்கேயிருந்து வருகிறதோ அந்த வழியும் அறிவேன். இதுகள் சிறுபிள்ளை விளையாட்டுகள். இதைத் தொட்டு நீ மனதிலே ஒன்றும் எண்ண வேண்டாம். கும்பினீர் காரியத்திலே ஜாக்கிரதையாய் பிரயாசைப்படு. இப்படி பதினாயிரம் பேர் சொன்னாலும் உன்னை யொன்றும் செய்யாது. போ வென்று சொன்னார்.

‘அப்படியல்ல, நடக்கிற சங்கதிகளை நான் சொல்லுகிறேன். இரண்டு வார்த்தை மாத்திரம் தயவுபண்ண வேணும்.’

‘சொல்லப் போனால் இதுகள் சிறுபிள்ளை விளையாட்டு நானறிவேன். நீ போ வென்று சொல்லி, காம்பிராவுக்குள் போய் விட்டார். இனிமேல் சொன்னால் கோபம் வரும். ஆகட்டும் இன்னமொரு சமயமாகிலும் இதெல்லாம் உம்முடைய பெண்சாதி வழியிலே வருகிறது. நீ என் பேரிலே கடாக்ஷம் பண்ணி நடத்துகிறீர். அதைத் தொட்டு மைசூர், ஔரங்கபாத்து, டில்லி மட்டுக்கும் எனக்கு மெத்த எண்ணமும் கீர்த்தியும் உண்டாச்சுது. இப்போது என் பேரைச் சொன்னால் ஆற்காட்டு நவாபு போலே ஒத்தவரும் பயமுண்டாக்கத்தக்கதாக நிசாமைப் போல ஒத்தவர் தாரிப்பு பண்ணத்தக்கதாகவும், உம்முடைய அடிமையென்று இத்தனை மரியாதை நடக்கச்சே அம்மாள் என் பேரிலே கோபம் பண்ணி அவமரியாதை பண்ணினால் அதனாலே வரப்பட்ட நலம் எளப்பம் தேவரீரைச் சேர்ந்தாலும் எனக்கு அவரவர் பயப்படுகிறதும் பொய், நான் என்ன சொன்னாலும் அங்கீகரிக்க மாட்டார்கள் என்றும், என்னை யாரும் சட்டைப் பண்ணினார்கள் என்றும், நாலு வார்த்தையாய்ச் சொல்லுவோமென்று, உற்று யோசித்தால் அவர் ‘நானறிவேன் நானென்ன முசியே தும்மாவா’ என்று சொல்லிப் போன படியினாலே இன்னுமொரு சமயம் பார்த்துச் சொல்லுவோமென்று யோசனை பண்ணினதுமல்லாமல் இந்த அம்மாள் என்பேரிலே இப்படிப்பட்ட அபாண்டம் சொல்லுகிறவளுக்கு எத்தனைக் குரோதமிருந்து இப்படிப்பட்ட அபாண்டம் போடவேணும்.

இதல்லாமல் வெள்ளைக்காரரென்று வெள்ளைக்காரிக்களெல்லாம் தன்னண்டைக்கு யார் வருகிறார்களோ அவர்களுடனேயெல்லாம் ரங்கப்பன் என் ஆம்படையானுக்கு மருந்து போட்டுக் கண்ணை மூடுவித்துப் போட்டான். ஊரெல்லாம் கொள்ளையிட்டுத் தன் ஆம்படையானுக்குக் கொடுக்கிறபடியினாலே அவன் கண்ணை மூடிக்கொண்டு துரைத்தனம் பண்ணச்சொன்னான். இப்போது புதுச்சேரி குவர்னதோர் துய்ப்ளெக்ஸ் என்றிருக்க வேண்டாம். ரங்கப்பனாங்காட்டும் என்று பொண்டாட்டியைப் பார்க்கிலும் இவன் பேரிலே அதிக மோகமிருக்கிறதை லோகத்துக்குள்ளே கண்டதில்லையென்று மிப்படியாகச் சரிப்போன படிக்கெல்லாம் சொல்லுகிறதுமல்லாமல் அபாண்டமும் போடுகிறாள். சுவாமி விசாரிக்க வேணுமேயல்லாமல் மற்றப்படி விசாரிக்கிறவர்களைக் காணேன்.

1747 டிசம்பர் 15 மார்கழி 4

துரை பெண்சாதி என் பேரிலே போட்டியாக ஆள்விட்டு விசாரித்துச் சொன்னது. இதையெல்லாம் மதாம் துரைக்குச் சொன்னது. அங்கேயிருந்து எழுதி வந்ததாய் ஒரு ஓலை எழுதுவித்துக் கொடுத்து அதைத்தான் தானே வற்லாமை படிக்கச் சொல்லி பிராஞ்சு எழுத்திலே எழுதித் துரை கையிலே கொடுத்தது. அதிலே உம்மை சூனியம் வைத்துக் கொல்ல எத்தனம் பண்ணி யிருக்கிறார்களென்று எழுதிக் கொடுத்தாள். அந்தச் சேதியும் துரை சொன்னார். இந்தச் சாடை வந்தவாசி திருவேங்கடமும் வந்து வற்லாம் சொன்னானென்று துரை சொன்ன சாடை சரியாய்ச் சொன்னான்.

இப்படி மதாம் துய்ப்ளேக்ஸ் எடுப்பாடெடுத்து நம்முடைய பேரிலே யாதொரு விரோதமும் தேடி மோசம் பண்ணிவிட வேணுமென்று வெகு எத்தனமெல்லாம் பண்ணுகிறாள். சுவாமி எவர்கள் அக்கிரமமாய் நடக்கிறார்களோ அவர்களை ஆக்கினை யிடுவாரனபடியினாலே இனிமேல் அவள் அபாண்டம் போடுகிறதற்கு என்ன ஆக்கினை யிடுகிறாரோ தெரியாது. அதை அறிய வேண்டியது.

1748 பிப்ரவரி 23 மாசி 15 சுக்கிரவாரம்

இற்றைநாள் காலத்தாலே குவர்னதோர் வீட்டிற்குப் போனவிடத்திலே, துரையவர்கள் நெல்லுப் பொதி எத்தனை வந்ததென்று கேட்டார். நானூற்றி ஐம்பத்து நாலு பொதி நெல்லும், அரிசி பொதி ஐம்பத்து மூன்றும், கம்பு பொதி எழுபத்து மூன்றும் சோளம் கூட விஸ்தாரமாய் வந்ததென்று சொன்னதற்கு, இப்போது கடை சவுத்திருக்கிறதா என்று கேட்டார். கொள்ளுவாரில்லை என்று சொன்னேன்.

தமிழருடைய சுபாவம் ஒருநாளைக்கு வராதே போனால் காபுறா பண்ணுகிறதும் விசேஷித்து வந்தால் கொள்ளாமல் சும்மா ஆலசியமாயிருக்கிறதுந் தானே என்று சொன்னார்.

அதற்கு இப்படியிருக்கிறதே, என் பேரிலே அபாண்டம் சொன்னார்களே பார்த்தீர்களா? இது என்னாலே எத்தனை அபாண்டத்துக்கு என்று தப்பித்துக் கொள்ளப் போகிறேன். பொழுது விடிந்தால் அந்திபட்டால் எனக்கு அபாண்டமாய் வந்து உங்களுடனே சொல்லுகிறதும், நீங்கள் என்னைக் கேட்கிறதும் இதற்கு நான் உத்தாரஞ் சொல்லுகிறதுந்தானே வேலையாய் இருக்கிறதே யல்லாமல் எனக்குப் பின்னொரு காரியம் பார்க்க நேரமில்லை. இதல்லாமல் இரவு பகல் இதுவே விசாரமானால் காரியத்திலே புத்தி எப்படி சேர வைக்கும். இது காரியத்திலே மெய்பொய் என்று விளங்கி என்னையாகிலும் அவர்களையாகிலும் ஆக்கினை பண்ணாமற் போனால் விசாரத்தினாலே காரியம் தாக்ஷிவரும் என்று கெட்டியாய் மனதிலே எண்ணவும் என்று சொன்னதற்கு, இதெல்லாம் நான் அறியேனா? என் பேரிலே பொழுது விடிந்தால் அந்திபட்டால் பதினாயிரம் சொல்லுகிற பேர் உன் பேரிலே சொல்லுகிறதற்கு அட்டி என்னவிருக்கிறது? ஒருத்தன் ஒரு பெரிய உத்தியோகத்தின் பேரிலேயிருந்தால் அவனை ஆசூயினாலே இல்லாத பாண்டமாகிலும் சொல்லுகிறது லோகத்துக்குள்ளே வாடிக்கை. அதனாலே உனக்கு இன்னும் மேல்மேல் உத்தியோகம் நடக்குமென்றும் எங்கள் சாஸ்திர சம்மதி என்றும், பின்னையும் அநேகவிதமாய்ச் சொன்னார்.

அதெல்லாம் நான் எழுதினால் ஜனங்கள் மெய்யென்று நம்பார்கள். நம்முடைய அதிர்ஷ்டம் எப்படி பெலத்து யோக திசையும் நடக்கவிருக்கிறதோ அதற்கு உத்தாரமாய்ச் சொல்லி…

1748 பிப்ரவரி 26 மாசி 18 சோமவாரம்

இன்றைய தினம் சாயங்காலம் ஏழு மணிக்கு காளவாய் குமரப்பிள்ளை வந்து அப்பு முதலியார் சொல்லச் சொன்னாரென்று சொன்னதென்ன வென்றால்: இன்று சாயங்காலம் நாலு மணிக்கு அப்பு முதலியாரையும், வர்லாமையும், முத்துசேருவைக் காரனையும் மூன்று பேரையுங் கூடவைத்துக் கொண்டு, அப்பு முதலியைப் பார்த்து, நீ மெத்தத் திருடன். என்னுடைய அந்தரங்க விசேஷமெல்லாம் நீ போய் ரங்கப்பிள்ளைக்குக் சொல்லுகிறாய். வர்லாமுடைய வாய் விசேஷத்தைப் பிடுங்கி அந்நேரத்துக்கந்நேரம் நீ போய்ச் சொல்லுகிறாய். இதல்லாமல் வர்லாமுக்கு விருந்து போடுகிறோமென்று சொல்லி, சாப்பாட்டிலே விஷத்தைக் கலந்து அவனைக் கொல்ல நினைத்தாய். அவனுக்கு லாகிரியைக் கொடுத்தும், தேவடியாளைக் கூட்டிக் கொடுத்தும் அவன் வாய் விசேஷத்தைப் பிடுங்கி அந்நேரத்துக்கந்நேரம் நீ போய் சொல்லுகிறாயாம்.

நான் இந்த மட்டுக்கும் மூவாயிரம் ரூபாய் மட்டுக்கும் செலவுபண்ணி, பறங்கிப்பேட்டைக் கபுறும், தேவனாம்பட்டணத்துக் கபுறும் நிசக் கபுறாய் அந்நேரத்துக்கந்நேரம் நானெத்தனைப் பிரயாசைப்பட்டுக் கபுறு தெரிந்து கொண்டு, எத்தனை அருமையான கபுறாய் அழைத்து நான் துரையுடனே சொல்லியிருக்கிற கபுறுகளெல்லாம் வர்லாம் வாயில் விசேஷத்தைப் பிடுங்கி ரங்கப்பிள்ளயுடனே நீ போய்ச் சொல்லுகிறபடியினாலே அவன் அறிந்ததாக வந்து கபுறு சொல்லிப் போடுகிறான்.

அதனாலே என்னுடைய பிரயாசமெல்லாம் வீணாய்ப் போகுதென்றும், நீ ஒரு திருடன். அருணாசல செட்டி ஒரு திருடன். இப்படி இந்தப் பட்டணத்திலே ஏழெட்டுப் பேர் திருடராய்க் கூடிக்கொண்டு சரிப்போனப் படிக்கெல்லாம் கொள்ளையிடுகிறீர்கள். நல்லது. அதுகளை எல்லாம் விசாரிக்கிறேன். துரையுடனே சொல்லி அவரவருக்குத்தக்கன புத்தி பண்ணுவிக்கிறேனென்றும், உனக்கென்ன வேலை இவ்விடத்திலே. நீ வீட்டே போகலாமென்றும் இப்படியாகச் சொன்னதாகவும், அதற்கு அப்புமுதலி இருந்துகொண்டு நீ சொன்னாப்போலே நான் போவேனா. அந்தப்படிக்கு துரையவர்கள் சொன்னால் நான் போகிறேனென்று சொன்னதாகவும், நல்லது, ஆகட்டும் எல்லாம் பிறகு ஆகுது. இந்த மட்டுக்கும் வேகுகாரரென்று அநேகம் பேரைப் பிடித்துக்கொண்டு வந்து அடைத்திருக்கிறான். இத்தனையும் ரங்கப்பிள்ளை புரூப் பண்கிறானல்லவா அதெல்லாம் எனக்குத் தெரியும். துரையும் அறிந்திருக்கிறார். எல்லாம் விசாரிப்பாரென்று சொன்னாளென்று அப்புமுதலியார் என்னண்டைக்கு குமரப்பிள்ளையுடனே சொல்லியனுப்பினார்.

இதல்லாமல் அம்மாள் சொன்னதற்கு அப்புமுதலி யிருந்துகொண்டு, வர்லாமென்ன சிறுபிள்ளையல்லவே. அவனை என் முகத்துக்கு முன்னே ரூபு ரூபாய்விட்டு இன்னகாரியம் இப்படி சொன்னாரென்று சொல்லச் சொல்லும் அதற்கு மேலே யார் பேரிலே நேரமிருக்கிறதோ அவனுக்குத் தக்கன புத்தி பண்ணுங்கோளென்றும் சொன்னானாம். இப்படியெல்லாம் சொல்லி யனுப்புவித்தார்.

அதற்கு நான் சொல்லியனுப்பியது மடியிலே கனமிருந்தாலல்லவோ வழியிலே பயமிருக்கும். நல்லது துரையுடனே சொல்லித்தானே மெய் பொய் என்று விளங்கட்டும் என்று சொல்லியனுப்பினேன். இந்தப்படி நடந்தது இன்றைய தினம்.

1748 மார்ச் 1 மாசி 22 வெள்ளிக்கிழமை

பெண்டாட்டி பேச்சாகச்சே கேட்ட மாத்திரத்திலே வெளுத்துப் போச்சென்று வெளியாக்கினால் தன் புத்திக்கும் விவேகத்துக்கும் தானே பைத்தியக்காரன் பொண்டாட்டி பேச்சைக்கேட்டு இப்படியெல்லாம் கெடுத்துக் கொள்ளுகிறான் என்று சொல்லப் போகிறார்களென்று வெட்கம் பாதி. மறுபேச்சு பேசாமல் இவள் அபாண்டம் போடுகிறாள் என்று அறிந்தும் மயக்கத்தினாலே கண்டியாமல் கண்கெட்டவனைப் போலே சாப்பிடப் போனான். இது முன் எழுத வேண்டியதை மறந்துபோய் பின்னை எழுதினேன்.

1748 மார்ச்சு 8 மாசி 29 சுக்கிரவாரம்

இதல்லாமல் இவர் துரைத்தனத்துக்கு வந்தநாள் முதல் நேற்று கார்த்திகை மாசம் வரைக்கும் என்னுடனே சொல்லிக்கொண்டு வருகிறதென்ன வென்றால்: ஒவ்வொரு வேளையிலே பெண்டுகள் பிரஸ்தாபம் வருகிறதுமுண்டு. இவருடைய பெண்சாதி மெத்த க்ரூர புத்தியுள்ளவர். இல்லாத வார்த்தைகளைக் கட்டிச் சொல்லுகிறதும் ஒருத்தர் பேரிலே அபாண்டம் சொல்லுகிறதற்கும், ஒருத்தரை நிந்தனையாய்ச் சொல்லுகிறதற்கும் பின்வாங்காதவள். அவள் புத்தியிலே துரைத்தனம் தான் பண்ணவேணுமென்றும், எல்லாம் தன்னுடைய வழியிலே நடக்க வேணுமென்கிற புத்தியுண்டானவளான படியினாலே அவளை ஒரு பேச்சுக்கு வரவொட்டாமல் அடக்கிப் போட்டு வைத்து நடத்தி வருகிறேன் பார்த்தாயா? இப்படியாங்காட்டும் இருக்க வேணும் ஆண்பிள்ளையுடனுடைய சமத்து என்று அடிக்கடி பிரஸ்தாபம் வந்த போதெல்லாம் சொல்லிக்கொண்டு வருகிறது மல்லாமல் அந்தப்படிக்கு நாலு ரெண்டு காரியம் அவள் விஷமப் பேச்சுச் சொன்னவிடத்திலே தட்டி நடத்தி இப்போ இரண்டு மாசமாய் அவள் புத்தியிலே அவள் பேச்சைக் கேட்டுக் கொண்டு நடத்திக் கொண்டு வருகிறபடியினாலே என்ன காலக்கேடோ என்ன விபரீதமோ அறியேன்.

… நக்கிப்பவள் பேச்சே பேச்சில்லாமல் மறுபேச்சில்லாமல் நடக்கிறபடியினாலே லோகத்திலே ஜனங்கள் சொல்லுகிற வழக்கமென்ன வென்றால்: எப்போதும் சுபாவம் இருக்கிறது. இப்படிக்கு நடவாமல் அந்த சுபாவம் மாறி பின்னொரு விதமாய் நடந்ததே யானால் ஒன்று மரணமாகிலும் அல்லது துரைத்தனமாகிலும், யாதொரு நஷ்டமாகிலும், ஒரு மானபங்கமாகிலும், விஸ்தானப் பிரதிஷ்டத்துவமாகிலும் காணுமென்று சொல்லுகிறது.

1748 மார்ச் 15 பங்குனி 6 சுக்கிரவாரம்

நான் போய் சலாம் பண்ணி நின்றேன். கடைக்கு எத்தனை பொதி வந்ததென்று கேட்டார். நானும் டாப்பு எடுத்துப் படித்துக் காண்பித்தேன். நீ என்ன சற்றே பின்வாங்கியிருக்கிறாப் போலே யிருக்கிறது. உன்னைக் காணுகிறதே பிரயாசமா யிருக்கிறதென்று கேட்டார். காலத்தாலே உங்களண்டைக்கு வந்தேன். நீங்கள் அலுவலாயிருந்தீர்கள் என்று நான் கிடங்கிலே போய்க்காரியம் பார்த்துக் கொண்டிருந்தேன் என்று சொன்னேன். அதன் பேரிலே துரை யிருந்துகொண்டு, நீ மனதிலே சற்றுக் குறையாய்த் திரியறாப் போலே காணுதென்று கேட்டார்.

அதற்கு நான் சொன்னது, நீங்கள் என் பேரிலே வெகுசாய்ப் பக்ஷம் வைத்து நடப்பித்துக் கொண்டு வந்தீர்கள். அதனால் மனம் பொறாமல் எந்நேரமும் அவரவர்கள் உங்கள் காதிலே தப்புந்தாரும் சொல்லிக்கொண்டு இருக்கிறதே வேலையாயிருக்கிறது. அதற்கு நீங்கள் என்னை கேட்கிறதே வேலையாயிருக்கிறது. நானும் உங்களுடனே உத்தாரத்துக்குப் பதில் உத்தாரம் சொல்லுகிறதே வேலையாயிருக்கிறதே தவிர பின்னோர் காரியங்கள் காணேன். இதனாலே வந்து சொல்லுகிறதற்கு நீங்கள் உத்தரம் சொல்லுகிறதே துஷத்தரமாயிருக்கிறது. என்னத்துக்கு வருத்தம் தோண வேணுமென்று வந்து உங்களுடனே சொல்லுகிறவான் மனதுக்குள்ளே தோற்றப்பட்டிருக்கிறது. இந்த விடத்துக்கு கிருஸ்துவருக்குள்ளே ஒருவர் இருக்க வேணுமென்று வந்து உங்களுடனே சொல்லுகிறவனாகிலும் சந்தோஷமாயிருக்க வேணுமே என்றுதான் நானும் சற்றே பின்வாங்கியிருந்தால் நீங்களும் இந்தவிடத்துக்கு வேறே ஒருவரை வைத்துக் காரியம் பார்ப்பீர்கள் என்றுதான் என் மனதிலே தோன்றிச் சாடையாய் இருக்கிறேனென்று சொன்னேன்.

அதற்கு அவர் சொன்னது: என்னை ஒரு மடையனாய்ப் பார்த்து உத்தாரம் சொன்னாயே யல்லாமல் பின்னொரு விதமாய்ச் சொன்னவனல்ல வென்று சொன்னார்.

1748 சூன் 39 ஆனி 20 ஆதிவாரம்

எந்த வீட்டிலே ஸ்திரீ அதிகாரம் நடக்குதோ அந்த வீடாகிலும் அந்த சமஸ்தானமாகிலும் அழிந்து போமென்று சாஸ்திரமாய் சொன்னது. முசியே துப்ளெக்சுக்கு பிரதியக்ஷமாச்சுது யென்று பட்டணத்துக்குள்ளே உள்ள சமஸ்தான பேரும் வெளிகளிலே கூடச்சொல்லிக் கொள்ளுகிறார்கள். ஆனால் ஸ்வாமி இந்த மட்டுக்கும் இவளுடைய ஆங்காரத்தை அடக்கினான் பட்டணத்திலே உள்ள சனங்களும் வெளியிலே போக்குவருத்து சனங்களும் சுகப்படுவார்கள் யில்லாவிட்டால் வெகுஜனங்களும் யின்னம் கஷ்டகாலம் போகவில்லையென்று எண்ண வேண்டியது.

1748 ஆகஸ்ட் 31 ஆவணி 19 சனிவாரம்

முசியே துப்ளேக்சு துரைத்தனம் போய் நாலுமாசமாச்சுது. முசியே துப்ளேக்சு பெண்சாதி நாலுமாசமாய் துரைத்தனம் பண்ணுகிறாளென்று வெள்ளைக்காரர் ஆண் பெண் தமிழர் ஆண் பெண் துலுக்கர் ஆண் பெண் அடங்கலும் இதென்னமோ கேடுகாலமென்று சொன்னபடிக்கு பட்டணத்துக்குக் கேடும் வந்து சமஸ்தயிக்கப்பட்டு மனுபவிக்கிறார்கள். சுவாமி இந்த முசியே துப்ளேக்சு பெண்சாதி அதிகாரத்தை நிவர்த்தி பண்ண சகல ஜனங்களையும் எப்போ ரக்ஷிக்றாரோ நான் அறியேன்.

இப்போ பட்டணத்திலுள்ள ஜனங்கள் தண்ணீர் குடம் தளும்புராப்போல் றாத்திரியும் பகலும் திகிலிலே செத்துப் போகிறார்கள். இந்த ஜனங்கள் திகிலை எப்போ நிவர்த்தி பண்ணுகிறாரோ தெரியாது. ஆனால் நிவர்த்தி பண்ணுவாரென்று பரவசமுமிருக்கிறது. இதற்குள்ளே என்னமோவென்று சனங்கள் அங்கலாய்க்கிறதைக் காகிதத்திலே எழுத முடியாது.

1753 ஒயித்தோபர் 8 பிறட்டாசி 26 சோமவாரம்

நம்முடைய துரைக்கு அபசெயகாலமும் சத்துருக்களுக்கு செயகாலமும் ஆக நடக்கிறது. சுவாமி யின்ன மின்னம் யென்ன யென்ன விந்தைகள் நடப்பிப்பாரோ தெரியாது. யிப்படி நடக்கிறத்துக்கு மூலம் வந்து துரை பெண்சாதி யேர்ப்பட்டாள். ஒவ்வொரு காலத்திற்கு ஒரு சமஸ்தானங்களுக்கு அபகீர்த்தி வருகிறதும் ஒருத்தரைத் தொட்டுத்தான் கீர்த்தி வருகிறதும் ஒருத்தரைத் தொட்டுத்தான யென்று வழக்கப்படி யிந்த சமஸ்தானத்திற்கு அபகீர்த்தி மதாம் துப்பிளேக்சு மூலமாய் சம்பவிச்சது லோகமெல்லாம் பேசிக்கொள்கிறார்கள்.

(தொடரும்)

பகிர:
கோ. செங்குட்டுவன்

கோ. செங்குட்டுவன்

விழுப்புரத்தில் பிறந்து வளர்ந்து வசித்து வருபவர். ஊடகத்துறையில் 20 ஆண்டுகாலம் செய்தியாளராகப் பணியாற்றியவர். கலை, இலக்கியம், பண்பாடு மற்றும் வரலாற்று அமைப்புகளில் பங்கேற்று இயங்கி வருபவர். 'சமணர் கழுவேற்றம்', 'கூவம் - அடையாறு - பக்கிங்காம்: சென்னையின் நீர்வழித்தடங்கள்' உள்ளிட்ட நூல்களை எழுதியிருக்கிறார். தொடர்புக்கு : ko.senguttuvan@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *