Skip to content
Home » ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #18 – மகள் பாப்பம்மாள் மரணம் – உடைந்துப் போன ஆனந்தரங்கர்!

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #18 – மகள் பாப்பம்மாள் மரணம் – உடைந்துப் போன ஆனந்தரங்கர்!

துய்ப்ளேக்சின் வீரப்பிரதாபங்கள்

பாப்பம்மாள் – ஆனந்தரங்கரின் மூத்தமகள். இவரது திருமணம் 1747 ஜூலை முதல் வாரத்தில் நடந்தது. இதற்கான ஏற்பாடுகள் ஜூன் மாதத்தில் தொடங்கி, புதுச்சேரியில் வெகுவிமரிசையாக நடந்தன. பல்வேறு பகுதிகளில் இருந்தும் முக்கியப் பிரமுகர்கள் வருவதும், வரிசை வைப்பதும், அவர்களுக்கான விருந்து உபசாரங்களும் தடபுடலாகவே நடந்தன. இதையறிந்த துரை துய்ப்ளேக்ஸ் மிகவும் ஆச்சரியப்பட்டுப் போனார். ‘ராசா வீட்டுக் கலியாணம்கூட இவ்வளவு விமரிசையாக நடந்ததில்லை என்கிறார்கள். இது பிரான்சு கெசட்டிலும் வரும்’ என்றும் சந்தோஷத்துடனே சொல்லியிருக்கிறார். தானும் தனது மனைவி மதாமும் திருமண விருந்துக்கு ஒருநாள் வருவதாகச் சொன்ன துய்ப்ளேக்ஸ், இதற்காக அதிகளவில் செலவு செய்ய வேண்டாமென்றும் சொல்லியிருக்கிறார்.

பாப்பம்மாள் திருமணவிழா கொண்டாட்டத்தின்போது, சென்னையை வெற்றி கொண்டது உள்ளிட்ட ஆளுநர் துய்ப்ளேக்சின் வீரப்பிரதாபங்கள் ஓவியங்களாகத் தீட்டப்பட்டுக் காட்சிப்படுத்தப்பட்டு இருந்ததை இங்கு முக்கியமாகக் குறிப்பிட வேண்டும். இதையறிந்து மிகவும் சிலாகித்த துரை, ‘உம்முடைய புத்திக்குச் சமானமானவர்கள் ஒருத்தரையும் கண்டதில்லை. உன் பேர் சீர்மையிலே ராசாவினிடத்திலே கூட பிராஞ்சு ராச்சியமெல்லாம் கொண்டாடுவார்களென்று’ ஆனந்தரங்கரைப் பாராட்டி இருக்கிறார்.

பாப்பம்மாள் திருமணத்திற்குப் பிறகு ஒருநாள் மணமக்களைத் தனது மாளிகைக்கு வரவழைத்து விருந்து உபசாரம் செய்ய வேண்டுமென்பது துய்ப்ளேக்சின் ஆசை. ஆனால் அது நிறைவேறவில்லை. காரணம், திருமணமான சில நாள்களில் உடல்நலக்குறைவால் பாப்பம்மாள் காலமானார். இந்தத் துயரம் ஆனந்தரங்கரை மிகவும் நிலைகுலைய வைத்தது. இதற்குப் பிறகும் தனது சரீரம் நிற்பதற்குக் காரணம், ‘என்னெஞ்சு இரும்பினால் பண்ணினதே யல்லாமல் மாமிசத்தினாலே செய்ததல்லவென்று தோற்றுது’ என மனம் உடைந்து எழுதினார். மகள் மரணமடைந்த சில மாதங்களில் மருமகன் இறந்ததையும் அவருக்குக் கருமகாரியம் நடந்ததையும் பதிவு செய்திருக்கிறார் ஆனந்தரங்கர்.

பாப்பம்மாள் காலமாகி ஐந்து மாதங்கள் கழித்து ஆனந்தரங்கருக்கு மகன் பிறந்திருக்கிறான். மகன் பிறப்பு, தம்பி திருவேங்கடப்பிள்ளை இறப்பு போன்றவற்றை, ஜாதகப் பலன்களோடு மிகவும் துல்லியமாகப் பதிவு செய்திக்கிறார் ஆனந்தரங்கப் பிள்ளை. இது, ஜாதகத்திலும் தேர்ந்தவர் ஆனந்தரங்கர் என்பதை நமக்குத் தெரிவிக்கிறது.

பாப்பம்மாள் மணவிழா ஏற்பாடுகள்

1747 ஜூன் 27 ஆனி 17 மங்களவாரம்

இற்றைநாள் குவர்னதோர் வீட்டுக்குப் போனவிடத்திலே குவர்னதோர் உற்சாகமாகப் பேசியிருந்தார். கலியாணத்துக்கு நான் எப்போ உன் வீட்டுக்கு வருகிறதென்று கேட்டார். எப்போ உங்களுக்கு சம்மதியோ அப்போவென்று சொன்னேன். ஆகிலும் எப்போவென்று கேட்டார். வெள்ளியும் சனியும் உங்களுக்கு மாங்கிஷம் சாப்பிடக் கூடாதே, ஆதி வாரமென்று சொன்னேன். அப்படி நீ விருந்து பண்ணினால் நூறு வராகன் ஐந்நூறு வராகன் ஏன் செலவு பண்ண வேணுமென்று சொல்லி ஒரு கோலாசியோம் போடென்று சொல்லி, மதாம் துய்ப்ளேக்சுக்கு, துரைதானே நான் சொல்லுகிறேனென்று வந்து அவளுடனேயிருந்துவிட்டு ஐந்நூறு அறுநூறு ஏன் செலவழிக்க வேணுமென்று முப்பது வராகனிலே முஸ்தீது பண்ணிப்போடென்று சொன்னார். அந்தம்மாளுமப்படியே செய்துபோடுவென்று சொன்னாள். அந்தப்படிக்கு நல்லதம்மா என்று சொல்லிவிட்டு வந்தேன். பின்னையும் அவரவர் ஊர்கோலம் செய்கிறதெல்லாம் அவள் கேட்டாள். நானும் சொன்னேன். சந்தோஷமாக ஐந்தாறு நாழிகை பேசியிருந்து அப்பாலே பாக்குக் கிடங்குக்கு வந்தோம்.

1747 ஜூன் 27 ஆனி 18 புதவாரம்

அதன்பேரிலே துரையவர்களிருந்து கொண்டு உன் பந்தல் வேடிக்கையும், உன் மருமகன் ராத்திரிமார் ஊர்கோலம் வருகிற சம்பிரமும், வெள்ளைக்காரர் சீஞ்ஞோர் சினயோர்கள் பார்த்த பேரெல்லாம் மெத்த வேடிக்கையாயிருக்குதென்றும், பந்தலிலே எல்லாம் சென்னப்பட்டணம் வாங்கின சண்டையும் மாபூசுகானை செயித்ததும் மயிலாப்பூரிலே அவன் ஓடிப்போனதும், தேவனாம்பட்டணம் சண்டையும், தேவனாம்பட்டணத்திலே காப்பிரிகள் போய்க் கொத்தளம் வாங்கினதும் அந்தச் சம்பிரமுமப்படியே எழுதியிருந்ததுகள் மெத்த வேடிக்கையாயிருக்கிறது. இந்தப் பட்டணத்திலே தோன்றி இத்தனை சம்பிரமமும் இல்லையென்று சமஸ்தான பேரும் சொல்லுகிறார்களென்றும் கேட்டார். ஊர்கோல சம்பிரமந்தானிருக்குதே, பந்தல் சம்பிரமெல்லாம் உம்முடைய செயந்தான். உம்முடைய கீர்த்தியைத் தானே எழுதியிருக்குதென்று சொன்னேன். நகைத்து உம்முடைய புத்திக்குச் சமானமானவர்கள் ஒருத்தரையும் கண்டதில்லை. ஆனாலென்பேரிலிருக்கிற பத்தியும் விசுவாசமும் எனக்கு நன்றாய்த் தெரியும். ஆனால், நீ பிரஞ்சுக்காரருடைய கீர்த்தியை விளக்கி வைக்க வந்ததாய்ச் சுவாமி யுன்னை சிரேயோவந்தனாக்கி மெத்தவும் மேம்பாடாய் வைப்பார். நீ பிரஞ்சுக்காரருடைய முஸ்தத்துக்கெல்லாம் கீர்த்தி சம்பாதித்து வைக்கப் பண்ணினதற்கு உன் பேர் சீர்மையிலே ராசாவினிடத்திலே கூட பிராஞ்சு ராச்சியமெல்லாம் கொண்டாடுவார்களென்று வெகு தயவாய் நாலு நாழிகை தேசகாலம் ஸ்தவுத்தியமாய்ச் சென்னார்.

எனக்கொன்றும் கவையில்லை. நான் உம்முடைய அடிமை. என்னுடைய ஆண்டவனுக்கே அல்லாமல் எனக்கென்னவென்று நீர் என்பேரிலே கடாக்ஷம் வைத்து நடப்பிப்பதற்கு எனக்குப் பிள்ளை பிறந்தால் உம்முடைய பெயரிடுகிறதே யல்லாமல் மற்றப்படி நீர் செய்த சகாயத்துக்கு வேறே உபகாரமாய்த் துதித்துக்கொள்ள மாட்டேன் என்று சொல்லச்சே எத்து சப்தம் கேட்டது. இது தேவனாம்பட்டணம் பீரங்கிச் சப்தம் என்று காதுகொடுத்துக் கேட்டதற்குத் துரையிருந்து கொண்டு உன்மகள் கலியாணம் பீரங்கிச் சப்தமென்று நகைத்துக் கொண்டு சொன்னார்.

அதன்பேரிலே இன்றைக்கு யாருடைய விருந்தென்று கேட்டார். பரசுராமப்பிள்ளை விருந்தென்று சொன்னேன். ஆனாலிந்தப்படிக்கு அவரவர் முகூர்த்தமட்டுக்கும் விருந்து பண்ணுகிறதாயென்று கேட்டார். ஆம் என்று சொன்னேன். நாளையதினம் யாருடையதென்று கேட்டார். சடையப்ப முதலியார் விருந்தென்று சொன்னேன். இந்தப் பட்டணத்திலுண்டான சினயோர்கள் எத்தனைபேருண்டோ அத்தனை பேரும் எட்டுமணி அடித்தால் உன் பந்தலிலே வந்திருக்கிறார்களாம். அந்த சினயோர்களுக்கு, எல்லா சினயோர்களுக்குக்கூட எல்லாருக்கும் கழுத்திலே பூமாலை போட்டு நெற்றியிலே சந்தனப் பொட்டும், கழுத்திற்கும் கைக்கும் சந்தனம் பூசி, பாக்கு வெற்றிலையும் கொடுத்து எல்லாரையும் நொயவும் நொயவுமாகவும் ஆக்குகிறாயாம். மெய்தானாவென்று கேட்டார். உம்முடைய அடிமையென்று எல்லாரும் தயவுபண்ணி வருகிறார்களென்று சொன்னேன். அதிலே துரையிருந்து கொண்டு, இந்த கலியாண சம்பிரமெல்லாம் இதற்கு இருபதாம் மாசம் சீர்மையிலேயிருந்து கசேத்திலே வருமென்று முசியே புசி, முசியே போனோவுடனே சொன்னார். அவர்களும் ஒரு ராசாவினுடைய கலியாணங்கூட இந்தச் சம்பிரமமில்லையென்று சந்தோஷமாய், பின்னையும் இரண்டு நாழிகை மட்டுக்கும் பேசியிருந்தார்கள். சீர்மையிலே நடந்த கலியாணத்தைக்கூடப் பேசினார்கள். அப்போது நான் அனுப்புவித்துக்கொண்டு சின்ன பரசுராமப்பிள்ளை விருந்தானபடியினாலே அங்கே சாப்பிடப் போனேன்.

1747 ஜூன் 31 ஆனி 21 சனிவாரம்

… நல்லது உன் கலியாணத்துக்கு வந்த பெரிய மனுஷர்கள் எல்லாரும் என்னண்டைக்கு அழைத்துவந்து என் பேட்டி பண்ணுவித்து அனுப்பி வையென்று சொன்னார். நல்லதென்று சொல்லிவிட்டு வந்தேன். அப்பால் அப்பை அழைத்து, நானும் ஒருநாள் மணவிருந்துக்கு வருகிறேன் வாழையிலை போட்டுக்கொண்டு நானும் உங்களுடன் பந்தியிலேயிருந்து சாப்பிடுகிறேன் என்று சொன்னதற்கு ஐயா, அப்படியே செய்கிறதானென்று சொன்னாராம். நான் ஒருநாளைக்கு மணவிருந்து பண்ணுவிக்கிறேன் என்று சொன்னார். முகூர்த்தமான பிற்பாடு வாடிக்கையில்லை யென்று சொன்னான். ஆனால் பெண் சரீரம் சுவஸ்தமில்லையே. பெண் சரீரம் சுவஸ்தமான பிற்பாடு மாப்பிள்ளையும் பெண்ணையும் இவ்விடத்துக்கு அழைப்பித்து சம்பிரமம் பண்ணுவோமென்று பின்னையும் ஐந்தாறு வெள்ளைக்காரரிக்கச்சே பேசிக்கொண்டு உற்சாகமாயிருந்தாரென்று கபுறு வந்தது.

பாப்பம்மாள் மரணம்

(ஆனந்தரங்கப்பிள்ளையின் மகள் பாப்பம்மாள் திருமணம் 1747 ஜூலை முதல் வாரத்தில் நடந்தது. தொடர்ந்து, ஜூலை 7ம் தேதி (ஆனி 27) வெள்ளிக் கிழமை இரவு ஒன்பதரை மணிக்கு பாப்பம்மாள் காலமானார். ஆனால், ஆனந்தரங்கரின் நாட்குறிப்பு 1747 ஜூன் 31ம் தேதியைத் தொடர்ந்து, ஜூலை 13ம் தேதிதான் தொடர்கிறது. இடையிலுள்ளப் பதிவுகள், பாப்பம்மாள் மரணம் உள்ளிட்டப் பதிவுகள் நமக்குக் கிடைக்கவில்லை.)

1747 ஜூலை 13 ஆடி 1 குருவாரம்

அப்பால் கலியாணமான சேதி சென்னப்பட்டணத்துக்குப் போச்சுதே காலம் பண்ணிப்போன சேதி போன மாதம் முப்பதாந்தேதி திங்கட்கிழமை நாள் முசியே துலோராமுக்கு சேதி போய்வர, முத்தியப் பிள்ளையை அழைத்தனுப்புவித்துப் பாப்பாள், ஆனி 27 வெள்ளிக்கிழமை ராத்திரி ஒன்பதரை மணிக்குக் காலம் பண்ணிப் போன சேதி தனக்குத் தன் மருமகன் முசியே பெடுத்தலேன் எழுதி அனுப்பினதாய்ச் சொல்லி, மாப்பிள்ளை ரொம்ப துரதிர்ஷ்டம் பண்ணினவன். ரங்கப்பனுக்கு ரொம்ப விசாரம் வந்ததென்று ரொம்ப தாபந்தப்பட்டு சொன்னதின் பேரிலே முத்தியப்பிள்ளை விழுந்து புரண்டு அழுததை ஒரு மட்டுமிதத்துக்குள்ளே சொல்லியும் முடியாதென்று வெள்ளைக்காரர்கள், வெள்ளைக்காரிச்சிகள், தமிழர்கள், துலுக்கர்கள் சமஸ்தான பெண்டுகளான பிள்ளைகள் அங்கலாயாதவர்கள் ஒருத்தருமில்லை. பட்டணமெல்லாம் ஏக ரோதையாகியிருந்ததென்றும், முசியே துலோராம் மற்றுமுள்ள வெள்ளைக்காரர்கள் நமக்குத்தானே இப்படி கேட்ட மாத்திரத்திலே தாபந்தமாய்ச் சகிக்கவில்லை.

ரங்கப்பனும் அவன் பெண்சாதியும் எப்படிச் சகிப்பார்களென்று மிதுவெல்லாம் மாப்பிள்ளை துரதிர்ஷ்டனென்றும் இனிமேல் சகிக்கச் சொல்லி மனம் பொறுத்துப் பார்க்கவேணுமென்று சொல்லி முசியே துலோராம், கோபாலகிருஷ்ணய்யனை அழைப்பித்துச் சொல்லி, தன் பாகுத்தியாய் காகிதம் எழுதி அனுப்பச் சொன்னாரென்றும் கோபாலகிருஷ்ணய்யன் எழுதின காகிதத்திலே எழுதியனுப்பின வயணமெல்லாம் பார்த்துக்கொண்டு மிகுதியும் மனஸ்தாபமாச்சுது.

… ஆனால் கேட்ட சனங்களுக்கே இப்படிப்பட்ட துயரம் அனுபவித்தார்களே யானால் இந்தத் துக்கம் பிறத்தியக்ஷமாய் அனுபவித்த என் சரீரம் நின்றதுக்கு எனக்குத் தானே ஆச்சரியமாயிருக்குது. ஆனால் என்னெஞ்சு இரும்பினால் பண்ணினதே யல்லாமல் மாமிசத்தினாலே செய்ததல்லவென்று தோற்றுது.

இந்தக் கலியாணத்துக்குள்ளே நடவாமல் பத்துநாள் முந்தி ஆனாலும் பத்துநாள் பிந்தி ஆனாலும் இத்தனை துக்கம்படத் தேவையில்லை. இந்தச் சமயத்திலே ஆனதினாலே இத்தனை துக்கத்துக்கு இடமாச்சுது. ஆனால் மனுஷருடைய எத்தனம் என்ன கலைக்கு வருகுது. தெய்வ எத்தனப்படி நடக்கிறதற்கு நாமென்ன வென்றாலும் ஒன்றும் நடக்கத்தக்கதில்லை. தெய்வம் அப்படி நடக்கவும் நாம் இப்படி சகித்துக் கொண்டிருக்கவும் நேமித்திருக்கச்சே அதைத்தள்ள ஒருத்தராலே கூடுமோ? சுவாமியினுடைய சித்தத்தின்படிக்கு எந்த வேளைக்கு எது நடக்க வேணுமோ அதிலே ஒரு அற்பத்தளவிலே ஏறவும் ஏறாது. குறையவும் குறையாது. நான் செய்ய வேண்டியது என்ன இருக்கிறது?

ஸ்ரீமத் புண்ணியகுமாரர் செனனம்

1748 சனவரி 7 மார்கழி 27 ஆதிவாரம் ரேவதி அஸ்த அஷ்டமா

(பாப்பம்மாள் காலமாகி ஐந்துமாதங்கள் கழித்து ஆனந்தரங்கருக்கு மகன் பிறக்கிறான்).

செனனி சென்ம சௌக்கியானாம் வர்த்தனீ குலசம்பதாம் பதவி பூர்வ புண்ணியானாம் விக்கியதே சென்ம பத்திரிகா, பெற்றார் பிறந்தார் பிறவித்துயர் தீர உற்றார் குலந்தழைக்க உண்மையாய்த்தே ராமனெழுதியபடி யதனை எல்லாரும் காண வழுத்தினோம். பத்திரிகை வாய்த்து உ சுவஸ்த ஸ்ரீசாலிவாகன சகாப்த 1669 – கலியுகாப்த 4848க்கு மேல்செல்லா நின்ற பிரபவ மார்கழி மீ 27 உ ஆதிவாரம் பூர்வ பக்ஷம் சப்தமி 21½ ரேவதி நக்ஷத்திரம் 50க்கு, சிவநாம யோகம் 52 7-8. வணிகரணம் 21½. திரி 24½ . உத்திராடம் 25-14க்கு மேல் ரேவதிக்கு சுபதினத்தில் ஸ்ரீபிரம்பூர் தி.திருவேங்கடப்பிள்ளையவர்கள் குமாரன் ஆனந்தரங்கப்பிள்ளை அவர்களுக்கு ஸ்ரீமத் புண்ணியகுமாரர் செனனமானதற்குக் காலக்கீரக நிலை: இராத்திரி 2¾க்கு மேல் கற்கடக லக்கினத்தில் செல்லு 2.2½ க்கு கடுசந்திரவோரை விருச்சிகச் செவ்வாய், திரிகரணம் விருச்சிகச் செவ்வாய், நவாங்கிசம் தனுர்குரு, துவாதி சங்கிசம், சூத்திரி காங்கிசம் 104. வேளை சென்ம லக்கினம் கற்கட லக்கினத்திலே ஆயில்யம், 4-ங்காலிலே மீனாமிசையில் சனி, ஆறாமிடமான தனுசில் உத்திதற்காலில் தனுரா மிசையில் சூரியன் இதில் மூலம் ரெண்டாங்காலில் கன்னியாங்கிசையில் இராகு. இதில் திருவோணம், ரெண்டாங்காலில் ரிஷபமா மிசையில் சுக்கிரன், இதில் உத்திராடம், 4-ங்காலிலே மீனாமிசையில் ராசா, எட்டாமிடமான கும்பத்தில் சதயம். மூன்றாங்காலில் கும்பா மிசையில் சந்திரன் ரேவதி. ஆதியந்தம் 2-61க்கு மூன்றாம் பாதத்தில் செல்லு 2-7 நின்ற நாழிகை 8 கால். புதன் மகாதிசையில் செல்லுக்கு 10½ நின்ற வருஷம் 6½. புத்தி அறிய புதனில் ராகு புத்தி. வருஷம் 1½. நாள் 15. சுபமஸ்து. தீர்காயுஷ்யுமஸ்து.

1748 சனவரி 28 தை 18 ஆதிவாரம்

பிறகு, உனக்கு முன்னே எத்தனை பிள்ளைகள் பிறந்தது, இப்போது எத்தனை இருக்கிறதென்று கேட்டார். நாலு பெண் பிறந்து மூத்த பெண்ணும் அதற்கு நேரிளைய பெண்ணும் போச்சுது. இப்போது இரண்டு பெண்ணிருக்கிறது. நேற்று ஒரு ஆண் பிள்ளை, உங்கள் பேர் வாங்கிக் கொள்ளவும், அடிமை வேலை செய்யவும் பிறந்திருக்கிறானென்று சொன்னதற்கு, நீ அப்போதே என்னுடனே சொல்லாதே போனதென்ன வென்று கேட்டார். நானும் முன்சொன்னபடிக்கு தேவனாம்பட்டணத்துச் சாம்சரமும் சண்டைக்குப் போகிற அலுவல் அவசரத்தின் பேரிலே இருக்கிற அலுவல் வேளையானபடியினாலே சொல்லவில்லை என்று சொன்னதற்கு, திரும்பியும், நீ சொல்லாதே போனதென்னவென்று அதைத்தானே இரண்டு தரம், மூன்று தரம், நாலுதரம் கேட்டார். அவரபிப்ராயம் இன்னதென்று நன்றாய் நிச்சயமாய்ப் படவில்லை.

பாப்பம்மாள் புருஷன் மரணம்

1748 மார்ச் 31 பங்குனி 22 ஆதிவாரம்

இற்றைநாள் காலத்தாலே சிரஞ்சீவி பாப்பம்மாள் புருஷன் லக்ஷூமணு முன் தை 16உ காலம் பண்ணிப்போன படியினாலே நேற்றைய வரைக்கும் முத்தியப்பிள்ளை கருமாந்திரம் பண்ணிப்பாரங்காட்டுமென்று பார்த்தவிடத்திலே, அவர் கருமாந்திரம் பண்ணாதபடியினாலே அவன் தமையனைக் கொண்டு இன்றைய தினம் செய்வித்துப் போடுவேமென்று யோசனை பண்ணி, அவன் தமையன் அக்கப்பிள்ளையைக் கொண்டு கருமாந்திரம் செய்விக்கத்தக்கதாக, சுங்குவார் தோட்டத்துக்கு பந்துக்கள், சிநேகிதரைக் கூட்டிப்போய் அவ்விடத்திலே நாராயணபலி செய்யச் சொல்லித் திட்டம் பண்ணினேன்.

வைகுண்ட பிறாப்த்தி ஆனார் தம்பி

1754 செப்தம்பர் 8 ஆவணி 27 ஆதிவாரம்

இத்தனாள் ராத்திரி பதினோரு மணிக்கு நான் சாப்பிட்டு யிருக்கச்சே பதினொன்றரை மணிக்கு தம்பிக்கு ஊர்த்த சுவாசம் போலே கண்டுது. அப்பால் நான் கிட்டப் போய் செய்விக்க வேண்டிய சடங்குகளெல்லாம் செய்விச்சு, அவனும் சொல்லத்தக்க சேதிகளெல்லாம் சொல்லி ஆன பிற்பாடு பனிரெண்டு மணி சரியாய் அடிச்ச உடனே தம்பி சரீரத்தைவிட்டு ஆத்துமா சுவாமியுடைய பாதார விந்தத்தை அடைந்தது.

இவனுடைய சனனம் விசைய வருஷம் மார்கழி மாசம் 7ஆம் தேதி திங்கட் கிழமை பூராட நக்ஷத்திரம் ராத்திரி யிருபத்தஞ்சு நாழிகைக்கு துலா லக்கினத்தில் ரெண்டாமிடமான தனுசில் ரவி, புதன், சந்திரன், நாலாமிடமான மகரத்தில் அங்காரகன்: அஞ்சாமிடமான கும்பத்தில் குரு: எட்டாமிடமான விருஷபத்தில் கேது: பத்தாமிடமான சிங்கத்தில் சனி: யிப்படி நவக்கிரகங்களு மிருக்கிற வேளையிலே பிறந்த பிரம்பூர் திருவேங்கடப்பிள்ளை அவர்கள் சனனம். யிவருக்கு கலியாணம் ராட்சஸ வருஷம், ஆனி மாசம் 11ஆம் தேதி. புத்திர சனனம் நள வருஷம், மாசி மாசம், 19ம் தேதிக்கு செவ்வாய்க்கிழமை ராத்திரி நாழிகை 27க்கு தகர லக்கனம், புத்திரி சனனம். ரவுத்திரி வருஷம் அற்பிசி மாதம் 10ஆம் தேதி சனிவாரம் ராத்திரி 24 நாழிகைக்கு கன்னியா லக்கினத்தில் யிப்படி யெல்லாமிருந்து சகல சவுக்கியத்திலேயும் போகத்துக்குள்ளே தேவேந்திரனைப் போலேயும் தானத்துக்குள்ளே கருணன் போலேயும் புத்தியிலே யூகி மந்திரியைப் போலேயும் தைரியத்திலே யிமாசலத்தைப் போலேயும் காம்பிரயத்திலே சமுத்திரத்தைப் போலேயும் யிப்படியாக நாற்பது வருஷமும் யெட்டு மாசமும் யிருபது நாளும் சுகமாயிருந்து, பவ வருஷம் ஆவணி மாதம் 27ஆம் தேதி ஆதிவார னாள் ராத்திரி பதினைஞ்சு நாழிகைக்கு மேல் பதினாறு நாழிகைக்குள்ளாக வைகுண்ட பிறாப்த்தி ஆனார். அப்போது நமது வீட்டுக்குள்ளேயிருந்த சனங்கள் சகலமான பேருக்கு யிருந்த மனது பிறபஞ்சம் முழுகினாப் போலேயிருந்ததே யல்லாமல் பின்னை ஒருவிதமா யிருக்கவில்லை.

மறண லக்கனம், மிதுனம், நக்ஷத்திரம் ரோகுனி: தத்துக்கால பஞ்சாங்கம். பவ வருஷம் ஆவணி மாசம் 27ம் தேதி ஆதிவாரம் அமரபக்ஷம் ஷஷ்ட்டி திதி. நாழிகை 6¾க்கு மேல் சப்தமி காற்திகை, நாழிகை 20¾, ஆறுஷணம் 26½. பத்திரவாக்கணம் 6¾. திவா ராத்திரி வற்சியம் பூச்சியம் பிருதுக்கு தத்க்கா கிரக நிலை மூமாமிடமாகிய சிங்கத்தில் குரு, சூரியன், புதன்; நாலாமிடமாகிய கன்னியில் சுக்கிறன், செவ்வாய், ராகு; ஏழாமிடமான தனுசில் சனி, பத்தாமிடமாகிய மீனத்தில் கேது; பனிரெண்டாமிடமான விருஷபத்தில் சந்திரன்; யிப்படி நவக்கிரக நிலை நிற்க மறணத்தை அடைந்தார்.

1754 செப்தம்பர் 9 ஆவணி 28 சோமவாரம்

இத்தனாள் காலத்தாலே தந்தப் பல்லக்கை முஸ்தீது பண்ணிவிச்சு சகலமாக வாத்தியங்கள் கோஷிக்க, அரிகை, நெமிலி, பிஞ்சம் முதலான மெயி வரிசை யென்னென்ன உண்டோ அதுகளையெல்லாம் கூட வரத்தக்கதாகவும் பட்டணத்திலுள்ள பெரிய மனுஷர், கும்பினீர் வர்த்தகர்கள், மத்துமுள்ள சமஸ்தான பேர்களும் வர, சபுறு சங்கியும் சுட, கமசாசனம் வரைக்கும் நடைபாவாடை போட, யிப்படியாக சகல சம்பிறமங்களுடனேயும் பிரேதத்தை யெடுப்பிப்பிக்கச்சே, உபய கெருடர் வீடு விட்டுப் பிறப்பட்டது முதல் கமசானம் மட்டுக்கும் வந்து, தகனம் ஆகுற மட்டுக்கும் வட்டமிட்டுக் கொண்டு போயிருக்க, பத்து நாழிகைக்கு சுமசானத்திலே செயிவிக்க வேண்டிய சடங்குகளெல்லாம் செய்விச்சு தகனமான பிற்பாடு பனிரெண்டு நாழிகைக்கு வீட்டு வந்தோம்.

(தொடரும்)

பகிர:
கோ. செங்குட்டுவன்

கோ. செங்குட்டுவன்

விழுப்புரத்தில் பிறந்து வளர்ந்து வசித்து வருபவர். ஊடகத்துறையில் 20 ஆண்டுகாலம் செய்தியாளராகப் பணியாற்றியவர். கலை, இலக்கியம், பண்பாடு மற்றும் வரலாற்று அமைப்புகளில் பங்கேற்று இயங்கி வருபவர். 'சமணர் கழுவேற்றம்', 'கூவம் - அடையாறு - பக்கிங்காம்: சென்னையின் நீர்வழித்தடங்கள்' உள்ளிட்ட நூல்களை எழுதியிருக்கிறார். தொடர்புக்கு : ko.senguttuvan@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *