புதுச்சேரியில் 1742இல் இருந்து 1754 வரை 12 ஆண்டுகள் முடிசூடிய மன்னராக ஆட்சிசெய்தவர் ஆளுநர் துய்ப்ளேக்ஸ். இவரது நிர்வாகத் திறமையைப் பாராட்டி பிரான்சு அரசானது அவ்வப்போது, சென் மிஷல் செவாலியே, சென்லூயி, மர்க்கி ஆகிய பட்டங்களை அவருக்கு வழங்கிக் கௌரவித்தது. அப்போதெல்லாம் புதுச்சேரி பட்டணம் விழாக்கோலம் பூண்டது. வீதிகள் தோறும் தோரணங்கள் கட்டப்பட்டன. வீடுகள் தோறும் விளக்குகள் ஏற்றப்பட்டன. அனைவருக்கும் சர்க்கரை இனிப்பு வழங்கப்பட்டது.
சென்லூயி பட்டம் வழங்கப்பட்ட போது, ‘இந்த முத்திரைப்படிக்கு பரிசிலே (பாரிசில்) ராசாவண்டையிலே இருபத்தினாலு பேருக்கு இருக்கிறது. என்னுடன் சேர்த்து இது இருபத்தைந்து ஆகிறது’ எனப் பெருமைப்பட்டுக் கொண்டார் துய்ப்ளேக்ஸ். மேலும், மர்க்கி எனும் பட்டத்தை அவருக்கு வழங்கிய பிரான்சு அரசாங்கம், அதை அவர் மட்டுமல்லாமல் அவர் வம்சமும் அனுபவித்துக்கொள்ள அனுமதி வழங்கியது. அந்நேரத்தில் ‘யிப்படி யிந்தமட்டுக்கும் பிறான்சு ராச்சியத்திலே வெள்ளைக்காறர் களுக்கும் நடந்ததில்லை. அப்படி வொருத்தருக்கும் நடவாத காரியம் யெனக்கு நடக்க கிடைச்சபடியினாலே யென் அதிருஷ்டத்துக்கு சமானமான அதிருஷ்டவான் லோகத்திலே ஒருத்தருமில்லை’ பெருமிதத்துடன் சொன்னார் துய்ப்ளேக்ஸ். இம்மாதிரியான நேரங்களில் எல்லாம், ‘அதற்கு எப்படி அவரை தோத்திரமாய் சொல்ல வேணுமோ அந்தப்படிக்குச்’ சொல்லியிருக்கிறார் ஆனந்தரங்கர்.
ஆளுநருக்கு இப்படியானப் பட்டங்கள் வழங்கப்படும்போது ஊரிலுள்ள முக்கியஸ்தர்கள் அவரைச் சந்தித்து வாழ்த்துகள் சொல்லுவது வழக்கம். அப்படியாக வாழ்த்துச் சொல்ல வந்த தானியப்ப முதலி, ‘பனைமரம் சாய்ந்தாப்போலே’ நெடுஞ்சாண்கிடையாக துரையின் கால்களில் விழுந்திருக்கிறார். இன்றைய அரசியல்வாதிகளுக்கு முன்னோடியாக இவர் இருந்திருக்கிறார்!
பட்டங்கள் பெற்ற சந்தோஷத்தில் ஆளுநர் இருந்தபோது, வெற்றிலைப் பாக்கு விலையைக் குறைப்பது, காவலில் இருப்பவர்களை விடுவிக்கச் செய்வது எனும் தமது (பொதுநலன் சார்ந்த) கோரிக்கைகளையும் சந்தடிசாக்கில் நிறைவேற்றிக் கொண்டார் நம் ஆனந்தரங்கர்.
1747 ஏப்ரல் 6 பங்குனி 27 குருவாரம்
இதல்லாமல் குவர்னதோர் துரையவர்கள் முசியே துய்ப்ளேக்சு அவர்களுக்குச் சீர்மையிலிருந்து முன்னே முசியே தும்மாவுக்கு வந்ததே முத்திரை அந்தச் சட்டம் ஒரு முத்திரைக்குப் பேர் செமிகல் ஷெவாலியேர் முத்திரை வந்ததைப் பார்த்தவுடனே கோட்டையிலே காலமே எட்டுமணிக்கு இருபத்தொரு பீரங்கிப் போட்டார்கள். அந்நேரமே தானே நான் போய் இருபத்தைந்து மொகரி துரை வீட்டிலே தானே வாங்கி நசர் வைத்து முபார்க்கு பரதி சொல்லி பேட்டி பண்ணிக் கொண்டேன்.
இன்றைய தினம் நாம் சர்க்கரை வழங்கிப் பாக்குக் கிடங்கினண்டையிலே தெரு விளக்கு வைத்து, தோரணம் கட்டி செகல சம்பிரமத்துடனே பண்டிகை கொண்டாடினோம். நாளைய தினம் பட்டணங்களிலே தோரணங்கள் கட்டிப் பட்டணமெல்லாம் அவரவர் வீட்டிலே வீதியெல்லாம் விளக்கு வைத்து அலங்கிருதம் பண்ணிவைக்கச் சொல்லி நயினாருடனே சொல்லி ஊரெல்லாம் சொல்லுவித்தோம்.
ஸ்ரீதுரையவர்களுக்கு முத்திரை வந்த சந்தோஷத்திலே வெற்றிலையை எப்போதும் போலே உயர்த்தி விற்கத்தக்கதாக உத்தாரங் கொடுக்க வேணுமென்று கேட்டேன். அந்தப்படிக்குப் பட்டணத்திலுள்ள ஜனங்களெல்லாம் சந்தோஷமாகும்படியாய் வாசுதேவ பண்டிதனை அழைத்து எப்போதும் போலே அந்தப் படிக்குக் காசுக்கு ஒன்பது வெற்றிலை விழுக்காடு விற்கச் சொல்லி உத்தாரங் கட்டளையிட்டார்கள்.
1747 ஏப்ரல் 7 பங்குனி 26 சுக்கிரவாரம்
இற்றைநாள் நடந்த அதிசயமென்னவென்றால்: ஸ்ரீதுரையவர்கள் முசியே துய்ப்ளேக்சு அவர்களுக்குச் சீர்மையிலிருந்து வந்த முத்திரை செமிகல் ஷெவாலியேர் என்கிற முத்திரை வந்தபடியினாலே அந்த முத்திரைய அவருக்குத் தரிக்கிறதற்கு இவ்விடத்திலே யிப்படிப்பட்ட முத்திரை தரிக்கிறபேர் ஆறாமலுமிருந்தால் அவர்களிந்த முத்திரைய கையிலே வாங்கி வைத்துக் கொண்டு கோவிலிலே போய் பூசைக்கேட்டான்.
உடனே இவரை முட்டிக்காலிலே யிருக்கச்சொல்லி, கத்தியை உருவி, கத்தியினாலே முதுகிலே மூன்றுதரம் அடித்து அதன் யிப்படிப்பட்ட முத்திரையத் தரிக்கிறவனுடைய கையினாலே இவருக்குத் தரிக்க வேண்டியது. அதற்கு அப்படிப்பட்ட முத்திரைய யெடுத்துக் கழுத்திலே போட்டுக் கொண்டு துரையவர்கள் வளவிலேயிருந்து ஏழு மணிக்குப் புறப்பட்டு துரை வீடு துவக்கிக் கோட்டை வாசல் மட்டுக்கும் மாயே சிப்பாய்களும் சொல்தாதுகளும் வரிசை நின்று கோட்டை வாசல் மட்டுக்கும் போனவுடனே கோட்டைக்குள்ளே கீழண்டை வாசல்படி துவக்கி, கோவில் வாசல்படி மட்டுக்கும் இரண்டு புறத்திலேயும் வரிசை வைத்து, கப்பித்தான் மாரெல்லாரும் ஈட்டி சுழற்றி மரியாதை பண்ணி கொடி விசிறினார்கள்.
அப்பால் கோட்டை வாசல்படி நுழைந்தவுடன் 21 பீரங்கிச் சுட்டார்கள். கோவில் வாசல்படியண்டைக்குப் போய் உள்ளே நுழைந்து போகச்சே ஒரு வரிசை துப்பாக்கிகளெல்லாம் தீர்ந்து, கோட்டையிலே 21 பீரங்கியும், கப்பின் பேரிலே 21 பீரங்கியும் போட்டார்கள். அப்புறம் கோவிலுக்குள்ளே போய் பூசை கேட்டுக் கொண்டிருக்கச்சே ஒருதரம் வரிசையாக நின்று சொல்தாதுகள் துப்பாக்கி எல்லாம் சுட்டார்கள். அதன் பேரிலே பீரங்கிச் சுட்டார்கள். இப்படி கோவிலுக்குள்ளேயிருந்து பூசை கேட்டு வெளியே புறப்படுவதற்குள்ளே மூன்றுதரம் துப்பாக்கியும் சுட்டு, மூன்றுதரம் பீரங்கியும் சுட்டார்கள்.
பூசைகேட்டு வெளியே புறப்பட்டு வரச்சே மறுபடியும் கப்பித்தான்மார் அனைவரும் இப்படி ஈட்டி சுழற்றிச் சலாம்பண்ணிக் கொடி விசிறினார்கள். கீழண்டை கோட்டை வாசற்படியண்டை வந்தவுடனே வீவ்லெருவா என்று ஏக சத்தமாக மூன்றுதரம் கூப்பிட்டார்கள். அதன் ஒருதரம் பீரங்கிப் போட்டார்கள். அந்த மட்டிலே புறப்பட்டு அவர் வீட்டுக்கு வந்தவுடனே 21 பீரங்கிப் போட்டார்கள்.
அதன்பேரிலே சந்தாசாயபு குமாரன் கல்லிழைத்த தொராய் ஒன்று கொண்டு வந்து துரையவர்களுக்கு முபார்க்கு பரதி சொல்லி பேட்டி பண்ணிக்கொண்டான். அவனுக்கு பதிலுக்கு ஒரு சிப்பம் சிகப்பு சகலாத்தும் ஒரு சிப்பம் பிஸ்தாய் சகலாத்தும் வெகுமானம் கொடுத்தார்கள். ஆனால் அவன் கொடுத்த தொராயை துரையவர்கள் வாங்கி தொப்பியிலே சொருவித்துக் கொண்டார்கள். அதுவும் அழகாகயிருந்தது.
அதன்பேரிலே மகாநாட்டார் யாரார் என்னென்ன நன்தீர்வைத்துப் பேட்டி பண்ணிக் கொண்டார்களென்றால் அதற்கு வயணம் எழுதுகிறேன். சந்தித்த பேர் வயணம்: தானியப்ப முதலி காலமே வந்து பதினைந்து மொகரி கொண்டுவந்து ஒரு கடுதாசியிலே சுருட்டி ஸ்ரீதுரையவர்கள் கையிலே கொடுத்துப் பனைமரம் சாய்ந்தாப் போலே இறங்கி இரண்டு காலையும் பிடித்துக் கொண்டு ரொம்பவும் உபசாரமாய்ச் சொன்னான். அதற்குத் துயைவர்களும் நல்லது, எழுந்திரு எழுந்திரு என்று சொன்னார்கள். அந்த மட்டிலே எழுந்திருந்து இப்புறத்திலே வந்துவிட்டான்.
… இற்றைநாள் செமிகல் ஷெவாலியே முத்திரை துரையவர்களுக்கு வந்த படியினாலேயும் இன்றைய தினம் அந்த முத்திரிகையைத் தரித்துக் கொண்ட படியினாலேயும் மத்தியானம் பனிரண்டு மணிக்குத் தீனிதின்னும் போதும் துரும்பேத்துகள், வீணை வாத்தியங்கள் முழங்கத்தக்கதாகத் தீனி தின்னவுடனே ஒரு தரம் 21 பீரங்கியும் தீர்த்து, மேசை போட்டவுடனே ஒருதரம் 21 பீரங்கியும், எழுந்திருக்கச்சே ஒருதரம் 21 பீரங்கியும் போட்டார்கள். சாயங்காலம் நம்முடைய பாக்குக் கிடங்குக்கு எதிரில் தேர் விளக்கும் பண்ணி, விளக்கு வைத்து, வாழைகள் தோரணம் கட்டி நாமும் பண்டிகை கொண்டாடினோம்.
… இப்படி பேசிக்கொண்டிருக்கச்சே கப்பிசு கோயில் பாதிரியார் ஒருத்தர் பேர் இப்பொலீத் என்கிறவர் வந்தார். அவர் துரையண்டையிலே வந்து பேசிக்கொண்டிருந்தவர் என்னைப் பார்த்து, ரங்கப்பன் பெரிய வஞ்சனை பண்ணினா னென்று சொன்னார். துரையிருந்து கொண்டு அது என்னவென்று கேட்டார். அதன் பேரிலே பாதிரியாரிந்து கொண்டு ரங்கப்பன் சர்க்கரை வழங்கினானாம். சர்க்கரை வழங்கினவன் பட்டணத்திலே உள்ள தமிழர்வீடு, வெள்ளைக்காரர் தெருக்களிலேயும் சர்க்கரை வழங்கினவன் கிறிஸ்துவர்கள் வீடுகளுக்கு மாத்திரம் சர்க்கரை வழங்காமல் அவர்களைத் தள்ளி நடத்தினான் என்று சொன்னார்.
அவரிப்படி சொன்ன மாத்திரத்திலே துரையவர்கள் உதட்டைப் பிதுக்கி, அவர் நோக்கத்தை அறிந்து, பாதிரியார் திருப்பிக்கொண்டு அவனுடைய அவனுக்குச் சம்மதியான பேருக்குச் செலவுப்பண்ணாப் போகிறான். நம்முடையவர்கள் மனம் பொறாமையினாலே இப்படியெல்லாம் வந்து சொன்னார்களென்று சொன்னார்கள்.
அதன்பேரிலே முசியே மத்தேயு இருந்துகொண்டு ரங்கப்பன் வழங்கினது பட்டணமெல்லாம் எடுத்துக்கொண்டு போகிறாப்போலே யிருக்கிறது என்று சொன்னார்கள். தலையை உடைக்கிறாப் போலே மேளம் அடித்துக்கொண்டு சர்க்கரை வழங்கிக்கொண்டு போனார்கள். எங்கள் வீட்டு வெள்ளாட்டி பார்க்கப் போனாள். அவளுக்கு ஒரு கை சர்க்கரை வாரிப் போட்டார்களென்று சொன்னார். அதன் பேரிலே எல்லோரும் நகைத்துக் கொண்டிருந்தார்கள்.
1750 ஜனவரி 18 தை 9 ஆதிவாரம்
இற்றைநாள் காலையிலேயே யெட்டுமணிக்கு துரையவர்கள் அண்டைக்கு வர்த்தகரை யெல்லாம் அழைத்துக்கொண்டு போய் அவரவர் யெலுமிச்சம் பழத்தைக் கொண்டுபோய்க் கொடுத்து பேட்டி பண்ணிக்கொண்டு தேவரீர் அவர்களுக்கு சீர்மையிலிருந்து ராசா அவர்கள் சந்தோஷப்பட்டு மரிக்கி யென்கிற முத்திரை சிகப்பு பித்தாவிலே கோத்திருக்கிறது. வந்துதாம் அதுகளெல்லாம் யெங்களுடைய சந்தோஷமான படியினாலே கண்டு சந்தித்துக்கொண்டு போகத்தக்கதாய் வந்தோம். உங்களுக்கு யிந்த முத்திரை வந்தது அதிசியமல்ல பின்னம் வெகு அதிசயமான தெல்லாம் வரப்போகுது யென்று ரொம்பவும் உபசாரமாய்ச் சொன்னார்கள். அதற்கு துரை அவர்களும் வெகுசந்தோஷமாய் தானே அவர்களுக்கு உத்திரவு சொல்லியனுப்பிவிட்டார்கள்.
1750 மார்ச் 11 பங்குனி 2 புதவாரம்
இத்தனாள் ராத்திரி நடந்த அதிசயமென்ன வென்றால் மகாராசா ஸ்ரீஜெனரல் முசியே துப்ளேக்சு அவர்கள் இவ்விடத்திலே இங்கிலிசுக்காரர் வெகு கப்பலுடனே வந்து சண்டை பண்ணினதற்கு அவர்களை செயித்ததுக்கும் துலுக்கருடனே சேர்ந்து காரியங்கள் அடித்து தெருத்திவிட்டு செயங்கொண்டதும் இது முதலான சமாசாரங்கள் சீர்மையிலே ராசானவர்கள் கேட்டு வெகு நிருவாகம் பண்ணாரென்று சந்தோஷப்பட்டு சேன்லூசேன் என்கிற முத்திரை சிகப்பு பித்தையுடனே கட்டி அந்த முத்திரையை சான்சோமா மென்கிற கப்பலிலே போட்டு அனுப்புவித்தார்கள்.
… துரையவர்கள் என்னைப் பார்த்து நானும் இனிமேல் லோகத்துக்குள்ளே பிறதிஷ்கை சம்பாதிக்க வேண்டியதில்லை. சீர்மையிலே ராசாவானவர்கள் தயவுபண்ணி சேமலு யென்ற முத்திரையும் சிகப்பு பித்தையும் கொடுத்து அனுப்புவித்தார்கள். இனிமேல் நாம் மேன்பாடு சம்பாதிக்க வேணுமென்று கவையில்லை. இந்த முத்திரை வந்ததினாலே நாம் ராசாவினுடைய ஒபிசியாலே யானோம். இந்த முத்திரைபடிக்கு பரிசிலே ராசாவண்டையிலே இருபத்தினாலு பேருக்கு இருக்கிறது. யென்னுடனே கூட இருபத்தஞ்சாம் போர்ச்சுது யென்று சொல்ல அதற்கு நான் எப்படி அவரை தோத்திரமாய் சொல்ல வேணுமோ அந்தப்படிக்குச் சொன்னேன்.
அப்பால் துரையவர்கள் சேம்லூயி என்கிற முத்திரைக்குத் தாழ்வான முத்திரை ரெண்டு மாசம் போட்டிருந்தும் அப்பால் அந்த முத்திரை தரிக்க வேண்டியதான படியினலே ஒரு சின்ன முத்திரை அப்ப தானே தரித்துக் கொண்டு பீரங்கி மேஸ்திரியை அழைப்பித்து இருபத்தோரு பீரங்கி போடுவித்து பண்டிகை கொண்டாடினார்கள். நான் பாக்கு வெத்திலை பன்னீர் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்து சதீர் பண்ணிச் சொல்லி சங்கீத மேளதாள சம்பிறமத்துடனே கூட சகலமான பேருக்கும் சக்கரை வழங்கி பாக்கு வெத்திலை பன்னீர் கொடுத்து அவரவர்களை வீட்டுக்கு அனுப்பினேன்.
1750 அவ்றீல் 19 சித்திரை 10 ஆதிவாரம்
அந்தப்படிக்கு முசேபுரிக்கு ஒரு நாற்காலி போட்டு உட்காரச் சொல்லி அவனுக்கெதிரே புமொரேனை முழங்கால்படியாய் உட்கார வைத்து கைக்குப்பிக் கொண்டிருக்க மயாறாரா அனுப்பின அந்த முத்திரையுனுடைய பத்தேந்தைப் படிக்க யெல்லாரும் கேட்டவுடனே யிவனை முசேபுரி யெழுந்து கட்டி முத்தமிட்டுக் கொண்டு அப்பால் தன் கத்தியை வாங்கிக் கொண்டு புசத்தின் பேரிலேயும் ரெண்டு அடிச்ச முகத்தின் பேரிலே ஒரு அடி அடிச்ச ஆனவுடனே முசேபுரி தொப்பியைக் கழட்டி ஆசாரம் பண்ணி சேம்லூயி யென்கிற முத்திரையைக்கொடுத்தான். அதை அவன் சட்டையிலே சிகப்பு பெத்தையிலே கோத்துருக்கிறதை கட்டிக்கொண்ட பிற்பாடு முசேபுரி கட்டி முத்தமிட்டுக் கொண்டு ஆனவுடனே துரையவர்களுக்கு ஆசாரம் பண்ணினான். அவர் கட்டி முத்தமிட்டுக் கொண்டு அப்பாவலரவர் வரிசையாய் கட்டி முத்தமிட்டுக் கொண்டு ஆன பிற்பாடு ஒருத்தருக்கொருத்தர் உபசாரம் ஆன பிற்பாடு…
1750 மாயு வையாசி 9 அங்காரக வாரம்
இன்றைய தினம் துரையவர்களுக்கு பிறான்சுறாசா இங்கிறேசுக்காறர்களை செயித்ததுக்கு அனுப்பின செம்லூயி முத்திரையும் சிகப்பு அகலப்பட்டையும் உடைய சந்தோஷம் பட்டணத்துக்குள்ளே அவரவர்களுக்கு நிக்ஷேபம் அகப்பட்டால் எத்தனை சந்தோஷமோ அத்தனை சந்தோஷப்பட்டார்கள். அந்த சந்தோஷத்தை எத்தனை யென்று எழுதப்போகிறேன் யென்னாலே எழுதி முடியாது.
1752 செப்தம்புறு 13 பிறட்டாசி 1 புதவாரம்
துரையவர்களென்னை யழைத்துச்சொல்லிப் பாத்தீயா இந்தியாவிலே ஆறுக்காகிலும் யித்தனை மரியாதையாய் இத்தனை அதிகாரமாய் பாதுசாவென்கிறன் யெழுதுகுறதுண்டா வென்று கேட்டார். உம்மை யாராகிலும் ஒருத்தருக்கொருத்தர் கெத்துக்குண்டாயிருந்தாலும் யினிமேல்ஒருத்தன் உண்டானாலும் எழுதப்படுமென்றுஞ் பின்னையுஞ் சொல்லித் தக்க மரியாதையாயி யெப்படியோ அப்படி சொல்லி ஆசாரம் பண்ணினேன். ரெண்டு பாரம் சரக்கரை வாங்கி வூரிலே சமஸ்தான பேர்களுக்கும் பங்கிடச் சொல்லுவென்று சொன்னார். நல்லதய்யா வென்று சொல்லி சாவடி கணக்கப்பிள்ளைகளை யழைப்பிச்சு சர்க்கரை பங்கிடச் சொல்லி உத்தாரம் கொடுத்து அனுப்பிச்சேன். இது சந்துக்கட்டென்று அய்யாயிதைவிட உண்ணதம் யில்லையே யிந்த சந்தோஷ வேளையிலே காவல் கூடத்திலிருக்கிற பேர்களை விட்டுவிடச் சொல்லக் கட்டளையிட வேணுமென்று சொன்னேன். பகலைக்கு மேலாக விட்டுவிடச் சொல்லுகிறேனென்று சொன்னார்.
1753 மாயு 12 வையாசி 3 சனிவாரம்
இத்தனாள் காலத்தாலே துரையவர்களண்டைக்குப் போய் கபுறு சொல்லப்போன விடத்திலே துரையவர்கள் கபுறுகள் யிருக்கட்டும் என்று அமத்தி யென் அதிருஷ்டத்தினுடைய பெலனைப் பார்த்தியா. யெனக்கு மறக்கி பட்டம் வந்துதே யிதுயென் சரீரத்துடனே மாத்திரமே யல்லாமல் அப்பிறம் யெனக்குப் பிள்ளை யில்லாதததைத் தொட்டு யித்தனை பிறயாசத்தின் பேரிலே கிடைச்ச வலுவு கிடைச்சும் விறுதாவாய்ப் போச்சுதென்று யெண்ணினதுக்கு ராசா அவர்கள் யெனக்கு யினிமேலும் பிள்ளைக்கு யிடம்பாடில்லாமல் லிருக்கிறதைத் தொட்டு அதையறிந்து யென் தமயனார் குமாரர் யெனக்குப் பிறகு யாருயிந்த மறக்கிப் பட்டம் அனுபவிக்க யெங்கள் வமுசத்துக்கு கூட யெழுதித்தீத்துப் போட்டார். யிப்படி யிந்தமட்டுக்கும் பிறான்சு ராச்சியத்திலே வெள்ளைக்காறர்களுக்கும் நடந்ததில்லை. அப்படி வொருத்தருக்கும் நடவாத காரியம் யெனக்கு நடக்க கிடைச்சபடியினாலே யென் அதிருஷ்டத்துக்கு சமானமான அதிருஷ்டவான் லோகத்திலே ஒருத்தருமில்லை யென்று சொன்னார்.
அதுக்கு நான் சொன்னது: யிதென்ன ஆச்சரியம். யெந்த பிறான்சுக்காறன் தக்கன சுபா நாசறுசங்குவைத் தலையை வெட்டி தக்கனசபைகூட ஆண்டான். அப்படிப்பட்ட காரியமும் டில்லி தகுத்திலே யிருக்கிற அகம்மதிசா பாதுசாகூட பயந்துபட்ட உம்முட சினேகம் கோரி உம்முட பெலனை யிச்சிச்சான். யிப்படிப்பட்ட காரியம் லோகத்துக்குள்ளே ஆருக்கு சம்பவிச்சுது. உமக்கு ஒருத்தருக்குமே யல்லாமல் யிப்படிப்பட்ட மகத்தாகிய காரியங்கள் வந்து அடைஞ்ச உமக்கு யிந்த மறக்கு பட்டம் உமக்கு பிள்ளையில்லாதத்தினாலே உன்னுட அண்ணன் மகனை சேருகிறதும் அப்பாலும் வமுசத்தை அனுசரித்து நடக்கிறதென்ன ஆச்சரியமென்று சொன்னதுக்கு குல்லாவைக் கழட்டி ஆசாரம் பண்ணினார்.
… இத்தனாள் சாயங்காலம் ஆறரை மணிக்கு துரையவர்கள் அழைப்பிச்சு நான் போனவிடத்திலே யென்னைப் பார்த்து துரையவர்கள் நகைச்சுக் கொண்டு நீ சொன்னபடிக்கு 1752 யெல்லாம் பொல்லாப்பே கண்டுது. 1753 யிந்த வருஷம் சுபப்பலம் கண்டுது. நீ சொன்ன பேச்சுபடிக்கி சரிப்பட்டுது. இனி உன் மனதிலே யெப்போ யென்ன நினைத்து யிருக்கிறாயோ அந்தப்படிக்கு நான் கடைப்பிடிக்கிறே னென்று உச்சாகத்தின் பேரிலே அவர் சொன்னதையெல்லாம் யெழுதினால் மெய்யாய்க் காணுது.
(தொடரும்)