லபோர்தொனே. ஆளுநர் அந்தஸ்த்தில் இருந்த இவர் இந்தியக் கடற்பகுதியில் பிரெஞ்சு கப்பற்படைத் தலைவராகவும் இருந்தார். ஆங்கிலேயரின் பிடியில் இருந்த சென்னையை எப்படியாகிலும் கைப்பற்ற வேண்டும் என புதுச்சேரி ஆளுநர் துய்ப்ளேக்ஸ் துடித்தபோது, அவரது அழைப்பை ஏற்று எட்டுக் கப்பல்களுடன் புதுச்சேரி வந்தார் லபோர்தொனே.
துய்ப்ளேக்ஸ் – லபோர்தொனே சந்தித்துக் கொண்டபோது இருவரும் கட்டித் தழுவிக் கொண்டனர். ஆனால் அடுத்த சில நாட்களில் இருவருக்குமான இடைவெளி அதிகமானது. கப்பற் படையின் தலைவன் மட்டும் அல்லாமல் ஆளுநரும் கூட. அந்த வகையில் புதுச்சேரியில் ஆளுநருக்கு என்ன மரியாதை வழங்கப்படுகிறதோ அந்த மரியாதை தனக்கும் வழங்கப்பட வேண்டும் எனப் பெரிதும் எதிர்பார்த்தார் லபோர்தொனே. ஆனால், கடலில் தான் உன் ராஜ்யம் எல்லாம். தரையில் எல்லாம் நான் தான் எனும் நினைப்பில் இருந்தார் துய்ப்ளேக்ஸ். ‘இப்படிப் பரஸ்பரம் ஒருத்தருக்கொருத்தர் இருக்கிற படியினாலே விரோதத்தின் பேரிலே நடக்கிறது’ என வருத்தப்பட்டார் ஆனந்தரங்கர்.
இதன் காரணமாக சென்னை முற்றுகை என்பது தள்ளிப் போய்க் கொண்டிருந்தது. இதுபற்றி லபோர்தொனேயிடம் துய்ப்ளேக்ஸ் கேட்கும் போது, ‘கடலில் சண்டை போடுவதற்குத்தான் தனக்கு உத்தரவு வழங்கப்பட்டிருக்கிறது. கரையில் போட அல்ல; வேண்டுமானால் அந்த மாதிரியான உத்தரவை நீங்கள் வழங்குங்கள்’ என்று சொல்லி இருக்கிறார் லபோர்தொனே. அப்படியான உத்தரவைப் புதுச்சேரி கவுன்சில் வழங்கிய போதும், ‘தனக்கு உடல்நிலை சரியில்லை’ எனக் காரணம் சொன்ன லபோர்தொனே, தனக்குப் பதிலாக வேறு யாரையும் சென்னை முற்றுகைக்குத் தலைமை தாங்கவும் அனுமதிக்கவில்லை.
பல மாதங்களாகவே போருக்கான முஸ்தீபுகளைச் செய்துவந்த துய்ப்ளேக்சை லபோர்தொனேவின் நடவடிக்கைகள் மிகவும் எரிச்சலடைய வைத்தது. ‘இவன் மோசக்காரன். என்னைக் கடன்காரனாக்கி விட்டான்’ என்று எரிந்து விழுந்தார். இதற்கிடையே சென்னைக்குப் புறப்பட்டுப் போன ஓரிரு பிரெஞ்சு கப்பல்கள், ஆங்கிலேயரிடம் போக்குக் காட்டிவிட்டுத் திரும்பின.
‘இப்படி சிறுபிள்ளை விளையாட்டு விளையாடி மற்றவர்கள் நம்மை எகத்தாளம் பேசுவதற்கு இடம் கொடுத்து விட்டான் அந்த நாய்’ என லபோர்தொனே குறித்து துய்ப்ளேக்சின் உச்சக்கட்டக் கோபத்தையும் பதிவு செய்திருக்கிறார் ஆனந்தரங்கர்.
‘லபூர்தொனேக்கும், புதுச்சேரி குவர்னேர் துய்ப்ளேக்கும் உண்டான பகை, எப்படிப் பிறந்து வளர்ச்சி பெற்றன என்பதை அறிய வேண்டுமானால் இந்தப் புத்தகத்தை வாசிக்க வேண்டியது அவசியம்’ எனப் பரிந்துரைக்கிறார், ஆனந்தரங்கப்பிள்ளையவர்களின் சொஸ்த லிகித தினப்படி சேதி குறிப்பினை, 1949இல் பதிப்பித்து வெளியிட்ட ஞானு தியாகு.
1746 சூலை 8 ஆனி 28 வெள்ளிக்கிழமை
இற்றைநாள் பதினொன்றரை மணிக்கு ஒரு கப்பல் கண்டது. வெள்ளைக் கொடி போட்டு வருகிறதென்றும் கோட்டையிலே கொடி போட்டிருக்குதென்றும், துரைக்கு கபுறு வந்து சொன்னார்களென்றும் அருணாசல செட்டி வந்து சொன்னதின் பேரிலே…
… ஆனாலிந்தக் கப்பல் கொண்டு வந்த சேதி சுபசேதியானபடியினாலே இந்தப் பட்டணத்திலுண்டான சனங்களெல்லாருக்கும் நிக்ஷேபம் அகப்பட்டா போலேயும் நஷ்டப்பட்ட திரவியம் லபித்தா போலேயும் மரணத்தை யடைந்தவர்கள் புளகா சீவ வந்தராய் வந்தாப் போலேயும் இப்படியனேக விதமாய் எழுத வேணுமென்றால் எழுத அவரவர்கள் வளவிலே கலியாணங்கள் போலேயும் புத்திர உற்சவத்திற்குச் சந்தோஷம் போலேயும் இப்படி பட்டணமெல்லாம் தேவாமிர்தத்தைப் பக்ஷித்தாலெத்தனை சந்தோஷமா யிருப்பார்களோ அத்தனை சந்தோஷமா யிருந்தார்கள். இன்றைய சந்தோஷத்தைக் காகிதத்திலே யெழுதி முடியாது.
1746 சூலை 9 ஆனி 29 சனிக்கிழமை
இற்றைநாள் ஐந்து மடியிலே முசே லபோர்தொனே இறங்கினான். இறங்கும் போது கப்பலிலே பதினைந்து பீரங்கி போட்டார்கள். கரையிலே இறங்கின உடனே கடற்கரை வாசறாபடியண்டை வரும்போது இவ்விடத்திலே பதினைந்து பீரங்கி போட்டார்கள். பெரிய துரை முசே துய்ப்ளேக்ஸ் தவிர மற்ற சின்னதுரை முதலான கோன்சிலியேர், கப்பித்தான்மார் அனைவரும் கடற்கரை மட்டுக்கும் எதிரே போய் அழைத்துக் கொண்டு வந்தார்கள். துரை வீட்டுக்குள்ளே வரும்போது துரை சாந்தினேர் கார்க்கிறபடிக் கப்புறம் வந்து ஒருத்தருக்கொருத்தர் கட்டிக் கொண்டு உள்ளே சாலையே போனாப்போலே பதினைந்து பீரங்கி போட்டார்கள். அப்பால், துரையவர்களும் முசே லபோர்தொனேயும் வராந்தாவுக்கு அப்புறம் இருக்கிற வெளியே போய் பேசியிருந்தார்கள்.
1746 சூலை 13 ஆடி முதல் புதவாரம்
… முசே லபோர்தொனே மனதிலே தானே ஒரு பட்டணத்துக்குக் குவர்னராயிருக்க இதல்லாமல் சண்டைக்கும் கப்பல்களுக்கும் ராசாவுடைய உத்தாரப்படிக்குக் கொமாந்தனாயிருக்க நமக்கும் குவர்னதோருக்கும் அடிக்கிற தம்பூர்ஷாம் அடிக்கப் போகாது என்கிற விசனம். முசே துய்ப்ளேக்சுக்கு, நாம் பட்டணத்துக்கு அதிகாரி. நமக்கு இவன் கரையிலே இறங்கினால் தாழ்த்தி, கப்பலின் பேரிலே ஏறினால் இவன் எசமானிவனுக்கு. இத்தனை பிடாயியாயில்லாமல் இவன் தமக்கு சரியா ஒப்பிசியேமார் பதினெட்டு பேரை வைத்துக் கொள்ளலாம் என்றும் சாப்பிடும் போது துரோமாபேத்து ஊதுகிறதும் ஒரு விதம் டோல் அடிக்கிறதும் இப்படி அனேகம் மேன்மை பண்ணுகிறா னென்றும் முசே துய்ப்ளேக்ஸ் மனதிலே குறைக்கு…
1746 சூலை 14 ஆடி 2 வியாழக்கிழமை
முசே துய்ப்ளேக்சுக்கும் முசே லபோர்தொனேயுக்கும் மனதுக்குள்ளே ஒன்றுக்கொன்று போதாமல் சர்ச்சையாயிருக்கிறது. முசே துய்ப்ளேக்சு மனதிலே தனக்குக் கீழ்படிந்து நடவாமல் தனக்குச் சமானமாய் ஒப்பிசியேமாரையும் வைத்துக் கொண்டு தானிருக்கிற விடத்திலே சொல்தாதுகளைக் காவலும், அப்பால் ஒப்பிசியோமாருக்குக் காவலும் மாப்பிள்ளையும் அனேகஞ் சம்மதியெல்லாம் பின்னையும் தன்னையெண்ணாமல் நடத்தலாமா வென்று எந்தக் காரியமும் தன் மனதுபடியே இவர் மனதிலே கோபமும் முசே லபோர்தொனே மனதிலே நம்மைப் போலே இவன் இவனைப் போலே நாம் அவனுக்கு நடக்கிற மரியாதை யெல்லாந் தான் நடப்பித்துக் கொள்ள வேணுமென்கிறது. சண்டைக்கு எசமான் தான் தன் மனதின்படியே நடத்துகிறதே யல்லாமல் இவனைக் கேட்டா நடத்துகிறதென்று முசே லபோர்தொனே நினைப்பு. இப்படி பரஸ்பரம் ஒருத்தருக்கொருத்தர் இருக்கிற படியினாலே விரோதத்தின் பேரிலே நடக்கிறது. இனிமேல் என்னமாய் நடக்குமோ தெரியாது.
1746 ஆகஸ்டு 25 ஆவணி 13 வியாழக்கிழமை
இற்றை நாள் பத்து மணிக்கு கோன்சேல் கூடினார்கள். காரியமென்ன வென்றால் சென்னப்பட்டணத்தின் பேரிலே சண்டைக்குப் போகிற யோசனையாய்த் தோற்றுது.
1746 ஆகஸ்டு 26 ஆவணி 14 வெள்ளிக்கிழமை
இற்றை நாள் கோன்சேல் கூடி பனிரண்டு மணி மட்டுக்கும் இருந்து கோன்சேல் கலைந்தார்கள். மறுபடியும் பகலுக்கு மேலாய் கோன்சேல் கூடியிருந்தார்கள். இதனுடைய காரியமென்னவென்று யோசனை செய்து பார்த்தால் சென்னப் பட்டணத்தின் பேரிலே சண்டைக்குப் போகிற யோசனையே யல்லாமல் வேறல்ல. சென்னப்பட்டணத்தின் போகிற மட்டுக்கும் எளிதல்லவே. அதினாலே அதற்கு என்ன யோசனை பண்ண வேணுமோ அந்த யோசனை பண்ணுகிறதாய் தோற்றுது.
1746 ஆகஸ்ட் 29 ஆவணி 18 சோமவாரம்
இற்றைநாள் காலையில் சுகசிங்கு வியாச்சியத்துக்கு துரையுடனே தீர்த்துப்போடுமென்றும் சொல்லுவோமென்றும் துரை வீட்டுக்குப் போகச்சே முசே தெம்ரேய் எதிரே வந்தான். என்னைக் கண்டு ஆசாரம் செய்து வெளி மனுஷர் வந்து ஓர் லோசு கேட்டார்களே என்னமாச்சுது என்று கேட்டார். வேலூருக்குப் போனார்கள், உத்திரம் வந்தவுடனே சொல்லுகிறேன் என்று சொன்னேன்.
சென்னப்பட்டணத்தின் பேரிலே சண்டைக்குப் போகிறது என்ன எது நிமித்தியம் நின்றது அறிவையா வென்று கேட்டான். நன்றாய்த் தெரியவில்லை யென்று சொன்னேன். ஆனால் சொல்லுகிறேன் கேளென்று அவன் சொன்ன சேதி,
துரை செய்ய எத்தனம். கப்பல்கள் ராத்திரியிலே பிடிக்கவும் இவ்விடத்திலே ஏற்ற வேண்டியதுகளெல்லாம் ஏற்றி தயார் செய்யவும் சென்னப்பட்டணத்தின் பேரிலே கப்பல்கள் சமுத்திரத்தின் பேரிலேயிருந்து சண்டை தொடுக்கவும் இப்படியெல்லாம் யோசனை செய்ய இருந்தார்களே,
முசே லபோர்தொனேயை ராத்திரி தானே பாயெடுக்கச் சொன்னால் பாயெடுக்காமல் கண்டு பேச வேண்டியிருக்கிறது எனக்குச் சரீரம் சுவஸ்தமில்லையென்று மூடு பல்லக்கிலே இறங்கி துரை வீட்டுக்கு வந்த பிற்பாடு துரையும் அவனும் கண்டு பேசினதென்ன வென்றால் துரை உன் கப்பல் போய் சென்னப்பட்டணத்தின் பேரிலே சண்டை தொடுக்கிறதற்கு அப்படியென்ன வென்று கேட்டார். எனக்கானால் கும்பினியார் ஒடுதியும் மினீஸ்தர் ஒடுதியும் இங்கிலீசுக் கப்பல்களைக் கடலின் பேரிலே கண்டவிடத்திலே சண்டை தொடுத்துப் பிடிக்கச் சொல்லி உத்தரவே யல்லாமல் கரையின் பேரிலே சண்டை தொடுக்கச் சொல்லி உத்தாரமில்லை. ஆனபடியினாலே சண்டை தொடுக்கப் போகாது. அல்லவென்று நீங்கள் போய்ச் சண்டை தொடுக்கச் சொன்னால் தொடுக்கிறேன். கோன்சேலிப் பெரிசியோம் எழுதி என் கையிலே கொடுங்கோ ளென்று கேட்டான். அதற்குத் துரையிருந்து கொண்டு நீ யெனக்கு எழுதிவித்து முஸ்தீது பண்ணிவிக்கச் சொன்ன படியாயல்லோ நான் சகலமும் முஸ்தீது பண்ணினேன். இப்போது நீ இப்படி நாங்கள் பாத்தியமாய் கோன்சேலிப் பெரிசியோம் எழுதிக் கொடுத்தால் சண்டைக்குப் போகிறோமென்று சொல்லுகிறது என்ன ஞாயமென்று கேட்டு ஒருத்தர் பேச்சு நடந்தாப் போலேயும் அதன் பேரிலே கோன்சேல்காரர்களை அழைத்துக் கேட்ட விடத்திலே அப்போது எங்களுடனே யோசனை செய்து நடப்பித்தீரா, இப்போது நாங்கள் ஏன் மேல்போட்டுக்கொள்வோம் என்று கோன்சேல்காரர் சம்மதிக்க மாட்டோமென்று சொன்னாப் போலேயும் இந்தச் சண்டை நிமித்தியம் செய்ய செலவு எல்லாம் துரையின் பேரிலே பொறுப்பாய் நிற்கிறது. இனிமேல் என்னமாய் நடக்குமோ வென்றும் முசே லபோர்தொனே சரீரம் சுவஸ்தமில்லாம லிருக்கிற படியினாலே முசே பரிதியை கொமாந்தனாக வைக்க வேணுமென்று முசே துய்ப்ளேக்சு சேன பிரயாசைப்பட்டார். அதற்கு முசே லபோர்தொனே சம்மதிக்க மாட்டேனென்றார்.
…. இதின் பேரிலே சென்னப்பட்டணத்துக்கு யோகம் நன்றாயிருக்கச்சே முசே லபோர்தொனேக்கும் முசே துய்ப்ளேக்சுக்கும் ஒருத்தருக்கொருத்தர் இடஞ்சலான படியினாலே சென்னப்பட்டணத்தின் பேரிலே போகிற சண்டை நின்றது என்று சொன்னான். முசே லபோர்தொனேக்கு புதுச்சேரி கோன்சேலை ஆலோசனையும் கேட்டு நடந்துகொள்ளச் சொல்லி முசே லபோர்தொனேக்கு உத்தாரமில்லையா வென்று கேட்டேன். முசே லபோர்தொனேக்கு மினிஸ்தர்களுடைய ஒடதி சண்டைக்கு அவர் மனதின் படியே நடப்பித்துக்கொள்ளச் சொல்லி எழுதி வந்த படியினாலேயும் உத்தாரம். முசே துய்ப்ளேக்சுக்கு மினிஸ்தர்களுடைய ஒடதி என்னவென்றால் முசே லபோர்தொனே கேட்கிறதெல்லாம் சாஞ்சாமீ செய்து கொடுக்கச் சொல்லி எழுதி வந்த படியினாலேதான் முசே துய்ப்ளேக்சுக்கு அவனை இப்படி நட அப்படி நடவென்று சொல்லுகிறதற்கு அடைய மனமில்லை.
அதனாலே தான் குவர்னதோர் நினைத்தச் சென்னப்பட்டணத்துக் காரியம் சண்டை செய்து சென்னப்பட்டணத்தைக் கைவசம் பண்ணிக் கொள்ளலாமென்று முசே துய்ப்ளேக்சு நினைத்துக் கொண்டிருந்த நினைவுக்கு விரோதமாய் விட்டது என்றும் சென்னப்பட்டணத்தார் சண்டை கொடுப்பார்கள். இவர்களும் சென்னப்பட்டணத்தின் பேரில் போய்ச் சண்டை கொடுப்பார்கள். சண்டை கொடுத்து அலங்கோலம் செய்கிறதற்கு தானேயல்லாமல் முன்னே துய்ப்ளேக்சு நினைத்துக் கொண்டு சென்னப்பட்டணத்தை வாங்கி தாம் துரைத்தனம் செய்யலாமென்று இருந்ததற்கு விரோதமாச்சுது என்று சீமையிலிருந்து வந்த ஏழு கப்பலும் பொம்பாயின் பேரிலே சண்டைக்குப் போச்சுது என்றும் இப்படியாகச் சொல்லிப் போட்டுப் போனான்.
1746 செப்தம்பர் 4 ஆவணி 23 ஆதிவாரம்
சென்னப்பட்டணம் சேதி என்னவென்று கேட்டார். அதற்கு நான் ஒரு சாடையாய்… சொன்ன மாத்திரத்திலே துரை சொன்னது: அப்படி இருந்த பரத்தை முசே லபோர்தொனே சென்னப்பட்டணத்தின் பேரிலே கப்பலையனுப்பி பரத்தைக் கெடுத்துப் போட்டானென்று சொன்னார். இவர் சாடை இப்படியாயிருக்கிறது. இதற்குத்தக்கதாய்ச் சொல்லுவோமென்று உத்தேசித்து நான் சொன்னதும் அதற்கும் அவர் சொன்னதும் விஸ்தரித்து எழுதவில்லை. சுருக்கமாயெழுதுகிறேன்.
… ஆ! ரங்கப்பா! நீயறியாயா, என்னுடைய தைரியமும் நான் கொண்ட நிருவாகத்தையும் நான் சவாரி ஒழுகரைக்குப் புறப்பட்ட போது தேவனாம்பட்டணம் கூடலூரும் வலசை வாங்கினதும் சென்னப்பட்டணம் தட்டுக்கெட்டு நடந்ததும் முசே லபோர்தொனே மகா சின்ன மனுஷனானபடியினாலே இவ்விடத்திலே பிரான்சுக்காரர் பேருக்குப் பங்கம் வந்திருக்கிறதேயென்று எண்ணாமல் எனக்கு ராசாவுடைய ஒடதி கடலின் பேரிலே சண்டை கொடுக்கிறதற்கு உத்தரவே இல்லாமல் கரையின் பேரிலே சண்டை கொடுக்கிறதற்கு உத்தரவு இல்லையென்று சொன்னான். அதற்கு நான் இங்கிலீசுக்காரர் நடப்பித்ததையெல்லாம் எழுதியிருந்த சம்மதியைப் படித்துக் காண்பித்து இதுகளெல்லாம் அறிக்கை இல்லாததினாலே அவரறிந்த மட்டுக்கும் அவர் உத்தரவு கொடுத்தார். இதுகளெல்லாம் அறிந்தால் நீங்கள் இனத்திற்குத் தக்கதாக நடத்தாமல் போனீர்களென்று கோபம் பண்ணுவார் என்று அனேக நியாயமாய்ச் சொன்னதின் பேரிலே, ஆனால் கோன்சேலிப்ரேசியோம் கொடுத்தால் நான் போகிறேன் என்றும் சொன்னான். இது காரியமெல்லாம் உன் யோசனையில்லாமல் நடத்தினானாவென்று அனேகம் நியாயமாய்க் கேட்டேன்.
இவன் மோசக்காரன் ஆனபடியினாலே என்னைச் சகலமும் முஸ்தீது செய்து வைக்கச்சொல்லி இந்தச் செலவு எல்லாம் என் தலையிலே போட்டான். இப்படி என்னைக் கெடுத்தான். இவன் வரச்சே மேலே போட்டிருந்த கம்பளிச் சட்டையைத் தவிர வேறே கெதியில்லை. ஒரு பிச்சைக்காரனாய் வந்தவனை நன்றாய் நீ பார்த்திருக்கிறாயே, நீ யறியாததொன்றுமில்லை. உன் கண்முன்னே பார்த்திருக்கிற காரியம். நீ புத்திசாலி உனக்குத் தெரியாததொன்றுமில்லை. இப்போது சீர்மையில் ராசாவினிடத்திலே யிருக்கிறவர்களைத்தொட்டு இப்படி நடக்கிறதென்று சொன்னார்.
அதிலே நானிருந்து கொண்டு முன்னிருந்தவர்கள் அப்படிப்பட்ட காரியம் நடத்துகிறதில்லை. இப்போது கோந்திரோலேர் செனரலாயிருக்கிற முசே எறி யென்றிருக்கிறவரைத் தொட்டு நடக்கிற காரியம் என்று சொன்னேன். அப்படியல்ல, அவன் தம்பியைத்தொட்டு என்று சொன்னார். அதற்கு நான் சொன்னது: மெய்தான் முசே புல்லியைத் தொட்டுத்தான் நடக்கிறது. அவன்தான் அவன் சம் வாங்குகிறது. அவனுக்குச் சொல்லிக் காரியமாகச் செய்து கொடுக்கிறது. ஆனபடியினாலே கோந்திரோலர் செனராலைச் சொல்லுகிறது என்று அதற்கு வயணமாய்ச் சொன்னேன். அது மெய்தானென்று ஒத்துக் கொண்டார்.
… நீ சொல்லுகிறது மெய்தான். ரங்கப்பா நான் என்ன செய்வேன். என்னாலே ஆன மட்டுக்கும் எப்படியெப்படி பார்க்க வேண்டுமோ அப்படியெல்லாம் பார்க்கிறேன் என்று சொன்னார். அதற்கு நான் கோன்சோலிப்பிரேசியோம் கொடுக்கிறது தான் முசே லபோர்தொனேக்கு தள்ளக்கூடாதேயென்று சொன்னேன். அப்படி கோன்சேவிப்பிரேசியோம் கொடுக்கிறோமென்று சொன்ன பிற்பாடு எனக்குச் சரீரம் சுவஸ்தமில்லையானால் சொஸ்தமானவுடன் போகிறேன் என்று சொன்னான். உனக்குச் சரீரம் சுவஸ்தமில்லாவிட்டால் அதுக்கேற்ற பேரை யனுப்புகிறது தானே என்று கேட்டால் நான் போகாதபடிக்குக் கூடாதென்று சொன்னான். இன்னமும் நான் விட்டவனல்ல எப்படியும் செயப்பட்டம் வாங்குவேனென்று சொன்னார்.
அப்படி செய்யாதே போனால் உம்முடைய கீர்த்தி டில்லி பரியந்திரம் ஓங்கியிருக்கிறதற்குத் தப்பு வரும் என்று சொன்னேன். அது நியாயமானது. நீ சொல்லுகிற பேச்சு என்று சொல்லி என் மனதிற்கு மனிதனுடைய தைரியமும் முசே லபோர்தொனே அதற்கு விரோதமாய் சின்னதனம் பண்ணுகிறதும் நீ வந்தவருக்குச் சாடையாய்ப் பார்த்தாலும் துலுக்கரண்டையிலே தமிழரிடத்திலே பிரஸ்தாபம் பண்ண வேணுமென்று சொன்னார். இப்போதானே எல்லோரும் பேசிக்கொள்ளுகிறார்கள். இன்னம் அவரவருடனே பிரஸ்தாபம் பண்ணிப் போகிறேன் என்று சொன்னதின் பேரிலே எனக்கு ரெம்பயித்தினாலே யெல்லாம் நஷ்டம் வந்திருக்கிறது. இதற்கு எப்படி ஆதாயம் வரச்செய்ய வேணுமோ உனக்குத் தெரியுமென்று சொல்லி இரண்டு வருஷமே பிடித்துக் கடலின் பேரிலே நஷ்டம் வியாபாரமாயில்லை செலவானாலோடிக் கொண்டிருக்கிறது. ஒரு நாளுக்கொருநாள் விஸ்தாரமான செலவு வந்துவிடுகிறது. இதுவெல்லாம் எப்படி நிருவாகம் செய்ய வேணுமோ அந்தக் காரியத்தின் பேரிலே மனதை வைத்திரு என்று சொன்னார். நான் உங்கள் அடிமை. நான் நடத்தும் காரியம் காரியத்திலோ உங்கள் சித்தத்திற்குத் தெரியவருமென்று சொன்னேன்.
இப்படியிருக்கச்சே மயிலாப்பூரிலிருந்து சின்னைய முதலி பேருக்கு வந்த ஓலை வயணம் முன்னாலே எழுதியிருக்கிறதே அதை திரான்சிலிட்டுபண்ணி முசே மத்தேசு கொண்டு வந்து கொடுத்தார். அதைப் படித்து எனக்குக் காண்பிக்க நீ சொன்னபடிக்குச் சென்னபட்டணத்திலேயும் மயிலாப்பூரிலேயும் இருக்கப்பட்ட பெரிய மனுஷர், துலுக்கர், தமிழர், வெள்ளைக்காரர் எல்லாரும் எகத்தாளம் செய்கிறார்களாம் பார்த்தாயா, இந்தக் கப்பல் போன மட்டுக்கும் சென்னப்பட்டணத்துத் துறையிலேயிருந்த ஒரு கப்பலையாகிலும் பிடித்து வந்தானா போகாமலிருந்தாலும் மகா பரமாயிருக்கும். அதையும் கெடுத்து எகத்தாளி செய்யத்தக்கதாகச் செய்தான். இந்த முசே லபோர்தொனே மினிஸ்தர்கள் என்னுடைய ஆலோசனையையும் கூடக்கேட்டு என் ஆலோசனைப்படிக்கு நடந்துகொள்ளச் சொல்லி உத்தாரங் கொடுத்தனுப்பியாமல் போனதே இந்த நாய் லபோர்தொனே என்கிறவன் இப்படியெல்லாம் தலை இறக்குக்கு ஆனகாரியமும் எகத்தாளிக்கிடமும் பண்ணுவித்தான். சென்னப்பட்டணம் அரைநாழிகையிலே பிடித்துக் கொள்ளலாம். அதுவும் செய்யாமல் கப்பல் ஒரு கப்பல் அதையும் பிடியாமல் சிறுபிள்ளை விளையாட்டு விளையாடி யெல்லாரும் எகத்தாளி பண்ணத்தக்கதாகக் கொண்டு வந்தானென்று சொன்னார்.
நான் முன்னேதான் சொன்னேனே மெத்த ஏகத்தாளிக்கிடமாயிருக்கிறது எப்படியும் சென்னப்பட்டணம் வாங்கா விட்டால் இந்தப் புதுச்சேரி பட்டணத்திலே யிருக்கத் தேவையில்லை. பிறான் சாகப் போகிறது நல்லதென்று சொன்னேன். மெய்தான் நம்முடைய பேர் இந்த ராச்சியத்திலே யிருக்கிறது என்னத்துக்கு. சென்னப்பட்டணம் வாங்கா விட்டால் அப்படிச் செய்கிறது நல்லது என்று சொன்னார். சொல்லி முசே லபோர்தொனேக்குப் பேர் எப்படி போனாலும் போகட்டும் காசு வந்தால் போதும் என்று நடத்துகிறான். சென்னப்பட்டணத்துச் நீட்டியும் கிண்டனும் விதுருகளும் லெங்குசும் கூண்டு கூண்டாய் அழைப்பிக்கிறான். அதெல்லாம் கண்டு பண்ணிப் போட்டேன் என்று இதுவே பிரஸ்தாபமாய் நாலு நாழிகை தேசகாலம் பேசினார். நானும் வர மனோபாவத்துக்கு அடுத்தாப்போலே எந்த யோசனை எப்படி அவரை ஸ்தவுத்தியமாய்ச் சொல்ல வேணுமோ அப்படியெல்லாம் சொன்னேன்.
(தொடரும்)