Skip to content
Home » ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #21 – பிரெஞ்சுக்காரர் வசமானது சென்னப்பட்டணம்!

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #21 – பிரெஞ்சுக்காரர் வசமானது சென்னப்பட்டணம்!

பிரெஞ்சுக்காரர் வசமானது சென்னப்பட்டணம்!

பிரெஞ்சு கப்பற்படைத் தளபதி லபோர்தொனே – புதுச்சேரி ஆளுநர் துய்ப்ளேக்ஸ் இடையிலான மோதல் ஓரளவுக்கு முடிவுக்கு வந்தது. 1746 செப்டம்பர் 11ம் தேதி பிரெஞ்சு கப்பற்படை சென்னை நோக்கிப் புறப்பட்டது. இதற்காக இரண்டு வருடங்களாகச் சேர்த்து வைக்கப்பட்டப் பொருள்களெல்லாம் கப்பல்களில் ஏற்றப்பட்டன. ‘துடைப்பக்கட்டை கூட ஏற்றப்பட்டன’ என்கிறார் ஆனந்தரங்கர்.

இதற்கிடையே சென்னப்பட்டணத்திலே துபாஷித்தனம் பண்ணுவதற்கு ஆனந்தரங்கரின் தம்பி திருவேங்கடம் பிள்ளையை அனுப்பி வைக்க வேண்டும் என்று ஆளுநர் உத்தரவிட்டார். ஆனந்தரங்கருக்கோ சற்றுத் தயக்கம். போர்க்காலத்தில் தம்பி அங்குச் செல்வது சரியில்லை எனக் கருதினார். என்னளவிற்குத் தம்பிக்கு விவரம் போதாது. நான் வேண்டுமானாலும் போகிறேன் என்று ஆளுநரிடம் சொல்லிப் பார்த்தார். ஆனால் துய்ப்ளேக்ஸ் விடவில்லை. திருவேங்கடம் பிள்ளையை அனுப்பி வைப்பதில் குறியாக இருந்தார். வேறுவழியில்லாமல் சென்னப்பட்டணத்துக்குத் தம்பியை வழியனுப்பி வைத்தார் ஆனந்தரங்கர். அப்போது யாரோ தும்மிவிட, சகுனம் சரியில்லையோ என மனக்கிலேசம் ஏற்பட்டது ஆனந்தரங்கருக்கு.

மொரட்டாண்டி, திருக்கழுக்குன்றம் வழியாக கொய்லம் (கோவளம்) சென்று அங்கிருந்து கடற்கரை வழியாக சென்னை சென்றடைந்தார் திருவேங்கடம் பிள்ளை.

சென்னப்பட்டணத்தில் இருக்கும் வர்த்தகர் முதலான வசதி படைத்தவர்களைப் புதுவைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்பது திருவேங்கடம் பிள்ளைக்கு இடப்பட்ட பிரதான கட்டளை. இப்படி வருபவர்கள் மூலம் தனக்கு எவ்வளவு கிடைக்கும் எனக் கணக்குப் போட்டார் துய்ப்ளேக்ஸ். ஐந்து லட்சம் வராகன் கிடைக்கலாம் என்பது ஆனந்தரங்கரின் எதிர்பார்ப்பு. ஆனாலும் அவ்வளவு கிடைக்காது என்று சொன்ன ஆளுநர், எந்தளவுக்கு தனக்குக் கிடைக்க வேண்டுமோ அந்தளவுக்குப் பார்த்து செய் என ஆனந்தரங்கரிடம் பொறுப்பை ஒப்படைக்கிறார்.

இதற்கிடையே பிரெஞ்சுப்படை சென்னப்பட்டணத்துக் கோட்டையை நெருங்கி விட்டார்கள். அங்கிருந்த பிரிட்டிஷ் கவர்னர் மாசுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது. விசாகப்பட்டிணம் கவர்னர் அந்த இடத்திற்கு நியமிக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வந்தன. இதனைத் தொடர்ந்து 1746 செப்டம்பர் 21ம்தேதி பிற்பகல் சென்னப்பட்டணம் பிரெஞ்சுக்காரர்கள் வசமானது. அடுத்தநாள் இந்தத் தகவல் அறிந்த புதுச்சேரிப் பட்டணம் விழாக்கோலம் பூண்டது. மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்தார் ஆளுநர் துய்ப்ளேக்ஸ்.

இதுதான் நேரம் என்று சிறையிலே அடைக்கப்பட்டிருக்கிற கடன்காரரை விடுவிப்பது, வெற்றிலை புகையிலை விலையைக் குறைப்பது, உத்தியோகம் இல்லாமல் கஷ்டப்படும் சுப்பய்யனுக்கு வேலை போட்டுக் கொடுப்பது, இடிக்கப்பட்ட வேதபுரீஸ்வரர் கோயிலுக்கு மதில் கட்டுவது போன்ற பொதுநலன் சார்ந்த தனது கோரிக்கைகளையும் ஆளுநரிடம் நிறைவேற்றிக் கொண்டார் ஆனந்தரங்கப்பிள்ளை.

1746 செப்தம்பர் 9 ஆவணி 28 வெள்ளிக்கிழமை

ராசஸ்ரீ துரையவர்கள் குவர்னதோர் துய்ப்ளேக்சு அழைத்தனுப்புவித்துப் பதினைந்து குதிரை சென்னப்பட்டணத்தின் பேரிலே சண்டை செய்யப் போகிறதற்கு முஸ்தீது செய்யச்சொல்லி உத்தராரங்கொடுத்தார்.

1746 செப்தம்பர் 11 ஆவணி 30 ஆதிவாரம்

காலையிலே ஒன்பது மணிக்கு சென்னப்பட்டணத்தின் பேரிலே சண்டை பண்ணுகிறதற்குப் பயணம் புறப்படுகிற முசே லபோர்தொனே துரை வீட்டிற்கு வந்து பயணம் அனுப்புவித்துக்கொள்ள வந்த மாத்திரத்திலே துரையும் முசே லபோர்தொனேயும் இரண்டு நாழிகைகூடப் பேசியிருந்து முசே லபோர்தொனேயைப் பயணம் அனுப்பத்தக்கதாக கடற்கரை மட்டுக்கும் கூட வந்து துவானண்டையிலே அனுப்புவித்துக் கொண்ட மாத்திரத்திலே இருபத்தொரு பீரங்கி சுட்டார்கள். அப்பால் சலங்கின் பேரிலே ஏறினாப்போலே இருபத்தொரு பீரங்கி சுட்டார்கள். அவர் ஏறிப்போகிற சலங்கிற்கு இரட்டைக்கொடி போட்டு கப்பலின் பேரிலே போய் ஏறினான். முசே தெப்ரோமேனி கோட்டையைப் பிடித்துக் கொடி போட்டவுடனே குவர்னதோராக இருக்கத்தக்கதாகவும் முசே பரிதி அதற்கு இரண்டாவதாகவும் இந்தப்படி இங்கேயிருந்து போகிற வெள்ளைக்கார சொல்தாதுகள், சட்டைக்காரர் மாயே சிப்பாய்கள், கர்னாட்ட சேவகர் எல்லாரும் இவர் எசமானாகவும் பண்ணியனுப்பி இவர்களும் முசே தொத்தேல் கப்பித்தான் குவாது, கொசினா குவாதுகள் கூட கப்பலின் பேரிலே ஏறினார்கள். கும்பினீர் குதிரைகூட முப்பத்தாறு குதிரைகள் ஏறிற்று. அப்பால், இரண்டு வருஷமே சென்னப்பட்டணம் சண்டைக்குச் சம்பாதித்த சண்டை சாமான்கள் ஒன்றும் வையாமல் சமஸ்தமும் ஏற்றித் தீர்த்தார்கள். ஒரு வஸ்துவும் அவ்விடத்திலே தேடவேணுமென்று நினையாமல் சமஸ்தமும் ஏற்றித் தீர்த்தார்கள். துடைப்பக்கட்டை ஏற்றினார்கள் என்றால் அதிலே சமஸ்தமும் பார்த்துக்கொள்ள வேண்டியதுதான். இந்தப்படிக்குச் சகல சாமான்களும் ஏற்றியனுப்பிப் போட்டு முசே துய்ப்ளேக்சு குவர்னதோர் வீட்டுக்கு வந்தார்.

… மயிலாப்பூர் அமுல்தாரன், பூந்தமல்லி அமுல்தாரன் யார் வந்தாலும் பேசுகிறதற்கும் உன் தம்பி திருவேங்கடத்தை யுனுப்புவிக்கவேணுமென்று சொன்னார். அதற்கு அவன் அறியாதவன். இப்படிப்பட்டவைகளை யறிய அறிந்தவனல்ல. சண்டை வேலையானபடியினாலே பயப்படுவான். ஆனபடியினாலே நான் போகிறேன் என்னை அனுப்புங்கோளென்று சொன்னதற்கு, அவன் மகா புத்திசாலி. உன்னைப் பார்க்கிலும் புத்தியுள்ளவன். சமர்த்தன். அவனை யனுப்ப வேணுமே யல்லாமல் உன்னையனுப்பப் போகாது. நான் போகும்போது நீ கூட வரவேண்டுமென்று சொன்னார். அப்பால் தட்டிச் சொன்னால் அவர் கோபம் பண்ணுவார்போலே தோற்றிற்று. ஆனபடியினாலே நல்லதென்று சம்மதித்துக்கொண்டுவிட்டோம். ஆனால் அவன் பிறகே போகிறதற்கு யாரை கும்பினீர் உத்தியோகஸ்தரிலே அனுப்ப வேண்டுமென்று கேட்டேன். உனக்கு யார் சம்மதியோ அவர்களையெல்லாம் அனுப்பு என்று உத்தாரங் கொடுத்தார். அதின் பேரிலே அவசரம் கிருஷ்ணய்யனையும் சின்னதம்புசெட்டி ரங்கப்ப செட்டியையும் கூடப்போகத்தக்கதாகத் திருவேங்கடத்துக்கும் சொல்லியனுப்பி முஸ்தீதாய்க் கரை வழியே போகிறதற்குத் தயாராயிருக்கச் சொல்லச் சொன்னேன்.

1746 செப்தம்பர் 13 புரட்டாசி முதல் மங்களவாரம்

இற்றைநாள் காலையிலே திருவேங்கடத்தையும் அவசரம் கிருஷ்ணய்யரையும், சின்னதம்பிசெட்டி, ரங்கப்ப செட்டியையும் கூட்டி இருபது சேவகரையும் கூடக்கூட்டி மொரட்டாண்டிச் சாவடி மேலே புறப்பட்டு, திருக்கழுக்குன்றத்தின் வழியாய்ப் புறப்பட்டு, கொய்லத்தைப் போய் அவ்விடத்திலே யிருந்து கடற்கரை வழியாய்ப் போகச்சொல்லியும், முசே லபோர்தொனேக்கு ஒரு காகிதமும் முசே தெப்பிரமேனிக்கும் பரிதிக்கும் இரண்டு காகிதமும் துரையவர்கள் என் கையில் கொடுத்து உன் தம்பியைப் பயணம் பண்ணியனுப்புவிக்கச் சொல்லி உத்தாரங்கொடுத்த படிக்கு மூன்று காகிதமும் தம்பி திருவேங்கடத்தின் கையிலே கொடுத்து வர்த்தகர் மற்றுமுண்டான பேரையெல்லாம் கண்டுபேசி அவரவர்கள் உடைமையையெல்லாம் பட்டணத்திலே யிருக்கிறதைக் கொடுத்துவிடுகிறோம். புதுச்சேரியிலே வந்து குடியிருக்கச் சொல்லி, பின்னையும் அவர்கள் ஏதாகிலும் உடன்படிக்கைக் கேட்டால் அதுவும் உனக்குச் சம்மதியானபடிக்கு எழுதிக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தபடிக்கு எனக்குச் சம்மதியென்று துரையவர்கள் தம்பி திருவேங்கடத்துடனேயும் முகதாவிலே சொல்லி என்னுடனே பத்திரமாய்ச் சொல்லியனுப்பச் சொன்னபடிக்குச் சொல்லி அங்கே நடக்கிற வயணமெல்லாம் அப்போதைக்கப்போது எழுதியனுப்பச் சொல்லி, தினசரி நடக்கிறதையெல்லாம் அன்றாடம் நடக்கிறதைத் தஸ்திரத்திலே வயணமாய் எழுதிவிக்கச் சொல்லியும், பின்னையும் ஏதாகிலும் முசே லபோர்தொனே அவன் தம்பியை அழைப்பித்துக் கொண்டு போகிறபடியினாலே அவன் நடப்பிக்கிற சம்மதியெல்லாம் அப்போதைக்கப் போது நீ யறிந்ததை முசே தெப்பிரமேனி முதலான பேருடனே சொல்லச் சொல்லியும், துரையவர்கள் மனது சந்தோஷம் வருகிற காரியம் பார்க்கச் சொல்லியும் தம்பி திருவேங்கடத்துடனே வயணமாய்ச்சொல்லி, கிருஷ்ணய்யனையும் ரங்கப்ப செட்டியையும் கூடக்கூட்டிப் பயணம் பண்ணி ஒன்பது மணிக்கு அனுப்புவித்தேன்.

ஆனால் இவன் போகையிலே சண்டை காரியத்துக்குப் போகிற படியினாலே எப்படியோ யென்று என் மனதிலேயிருந்த கிலேசம் சுவாமிக்குத் தெரியும். இவன் பல்லக்கின் பேரிலே ஏறினாப்போலே பிறகே தும்புச்சு. அந்தச் சாடை முசே லத்துசு துபாசி குஞ்சானென்கிறவன் கேட்டிருந்து அருணாசல செட்டியுடனே சொன்னான். அருணாசலசெட்டித் தம்பியை வழுதாவூர் வாசல்படி மட்டுக்கும் கொண்டுபோய் அனுப்பிவிட்டு மறுபடி என்னண்டைக்கு வந்ததும், பல சேதியைச் சொல்லி மற்றப்படி நல்ல சகுனமுமில்லை. பொல்லாத சகுனமுமில்லை என்று சொன்னான். அதற்கு நான் சொன்னது: மனதிலே கிலேசமாய்ப் புறப்பட்ட பயணமே யல்லாமல் சந்தோஷமாய்ப் போகிறோமென்று புறப்பட்டதல்லவே. ஆனபடியினாலே மறுபடி சுகமாய் வருவாயென்று தும்புச்சு. நல்லதுதானென்று இரண்டு நாளாய் கெவுனி வாசல்களெல்லாம் மூடி இவ்விடத்து மனிதரை எல்லாம் வெளியே விடாமலிருந் தார்களே. இற்றைநாள் சூரிய உதயத்துக்குத்தானே கெவுனிவாசல் எல்லாம் திறந்துவிட்டு எதாக்கிரமமாய் சனங்கள் போக்குவரத்துமாய் நடந்தது.

1746 செப்தம்பர் 14 புரட்டாசி 2 புதவாரம்

… அந்தக் காரியத்தளவிலே எவ்வளவு திரவியம் அகப்படுமென்று கேட்டார். நான் சொன்னபடிக்கு அரண்மனைக்காரர் வர்த்தகர் முதலாகிய இங்கிலீசுக்காரர் குவர்னதோர் சின்ன துரைக்கும் கூட என் யோசனையின் பேரிலே நடத்தினால் ஐந்து லக்ஷம் வராகன் ஆகப்பண்ணிக் கொடுக்கலாமென்று சொன்னேன். ஆனால் அவ்வளவு அகப்படமாட்டாது என்று சொல்லி ஆன மட்டுக்கும் நீ வஞ்சனை யில்லாமல் பார்க்க வேணுமென்றும் தனக்கு இரண்டு வருஷமே பிடித்துவந்த நஷ்டமும் செலவும் நாளுக்குநாள் விருத்தி போந்திரதும் இப்படி அனேகவிதமாய்ச் சொல்லி உன் மனதின்படியே சென்னப்பட்டணம் காரியம் நடத்துகிறேன், எப்படி எனக்கு ஆதாயம் வரப்பண்ண வேணுமோ அப்படிப் பாரென்று சொல்லி, உன் தம்பிக்கு எழுதியனுப்பி அன்றாடம் நடக்கிற சமாசாரம் எழுதியனுப்பச் சொல்லி, அதற்கு என்ன யோசனை பண்ண வேணுமோ அந்த யோசனையின் பேரிலே இரு என்று சொல்லி, பின்னையும் சென்னப்பட்டணம், கைவசமானால் மனோராச்சியம் சேனே என்று சொன்னார். நானும் அதற்குத் தக்கதாய் உத்தரப் பிரதி உத்தரம் சொல்லிக்கொண்டு வந்தேன். அப்பால் என்னை வீட்டே போகச்சொல்லி அவரும் வீட்டுக்குப் போனார்.

வீட்டுக்குவந்து தம்பிக்கு அவ்விடத்திலே நடக்கிற சமாசாரத்திற்கு அப்போதைக்கப் போதுக்கு எழுதித் தபாலிலே அனுப்பச் சொல்லியும், அங்கே நடக்கிற தினசரி எழுதச் சொல்லி ஒரு புஸ்தகமும் காகிதமும், செகப்பு அரக்குக் கொம்பு ஒன்றும் சீவின இறகு பத்தும் தம்பிக்குக் காகிதமும் டபாலிலே கொடுத்தனுப்புவித்தோம்.

1746 செப்தம்பர் 16 புரட்டாசி 4 சுக்கிர வாரம்

இற்றைநாள் காலத்தாலே துரை என்னை அழைப்பித்து சென்னப்பட்டணத்துச் சேதி ஏதாகிலும் வந்ததா என்று கேட்டார். எங்கள் தம்பி காகிதம் இன்னும் வந்ததில்லை என்று சொன்னேன். முசே பரிதி எனக்கு எழுதின காகிதத்திலே திருவான்மியூருக்குப் புறத்திலே என்னவோ ஒரு ஊர் எழுதி இருக்கிறது. அந்த ஊரிலே இறங்கி திருவான்மியூரிலே ஆயிரம்பேர் சொல்தாதுகளும் மாயே சிப்பாய் முதலானவர்களுடனே போய்ச்சேர்ந்தோமென்று எழுதினான். இன்றைய தினத்துக்குள்ளே மயிலாப்பூரிலே போய்ச் சேர்ந்திருப்பார்களென்று சொன்னார்.

1746 செப்தம்பர் 18 புரட்டாசி 6 வியாழக்கிழமை

இற்றைநாள் மயிலாப்பூரிலிருந்து தானப்பமுதலி பேருக்கு அனுப்பின ஓலையிலே எழுதியிருந்த வயணம்: முன் திருவல்லிக்கேணி தெள்ளிய சிங்கபெருமாள் கோவிலிலே இறங்கி இருந்தவர்களை அதைவிட்டுச் சிந்தாதிரிப்பேட்டையிலே வெள்ளைக்கொடி போட்டார்களென்றும், அதைப்பார்த்துச் சென்னப்பட்டணத்தார் ஏழு பீரங்கி போட்டார்களாம். தண்டுக்கு அரை நாழிகை வழியன்றச்சே தானே குண்டு விழுந்துபோனதாகவும் சென்னப்பட்டணம் குவர்னதோர் மாசுக்குப் பயித்தியம் பிடித்தாற்போலேயும், அதற்குப் பதில் விசாகப்பட்டணம் குவர்னதோரிடத்துக்கு வைத்ததாகவும் ஊரைச்சுற்றிலும் இருந்த கொத்தளத்திலே இருந்த பீரங்கிகளை யெல்லாம் காதிலே ஆணி அடித்துத் தள்ளிப் போட்டார்களென்றும் பட்டணத்துக் கதவு திறந்துவிட்டு அப்புறம் வெள்ளைக்காரர் இருக்கிற கோட்டையை மாத்திரம் பத்திரப்படுத்திக் கொண்டார்களென்றும் ஊரிலே பெத்துநாயக்கன் சேர்ந்த ராணுவிலே சிறிதுபேர் சண்டைக்குப் போகிறோம் என்று சொல்லி ஓடிப்போய்விட்டதாகவும், முசே பொரனேவால், முசே லபோர்தொனேயண்டைக்கு வந்து கண்டு பேசிப்போனதாகவும் இத்தியாதி வயணங்கள் எழுதிவந்த ஓலையைத் தானப்பமுதலி படித்துத் துரைக்குச் சொன்னவிடத்திலே துரையங்கேயிருந்த கோன்சேல்காரர் மற்றுமுண்டான பேருடனே யெல்லாம் குவர்னதோர் மாசுக்குப் பயித்தியம் பிடித்ததென்றும் விசாகப்பட்டணம் கப்பித்தானை குவர்னதோரிடத்துக்கு நேமித்தார்களென்றும் நம்முடையவர்கள் சிந்தாதிரிப்பேட்டையிலே போய் இறங்கினார்களென்றும் இப்படி மேலே எழுதப்பட்ட வயணமெல்லாம், பின்னையும் விஸ்தரித்து வயணம் வயணமாய்ச் சொல்லி எகத்தாளியும் பரியாசமும் பண்ணிக்கொண்டிருந்தார்.

அப்பால் என்னையழைத்து மேலே எழுதியிருக்கப்பட்ட சாடையெல்லாம் சொல்லி இப்படி இப்படி நடந்ததாம் என்று சொன்னார். அதற்கு நான் சொன்னது: மெத்த ஆச்சரியமல்ல. நீர் ஒழுகரைக்குச் சவாரி புறப்பட்ட மாத்திரத்திலே சென்னப்பட்டணம் தட்டுக்கெட்டுத் தடுமாறிப் போனவிடத்திலே இப்போது பிரத்தியக்ஷமாய் தனம் இறங்கினால் பிடிக்கிறதென்ன ஆச்சரியமாவென்று சொன்னதற்கு. மெய்தானென்று ஒத்துக்கொண்டு அப்பால் சிந்தாதிரிப்பேட்டையிலிருந்த வயணமும் கோட்டையினுடைய திட்டமும் கேட்டார். அதற்கு எனக்குத் தோன்றின மாத்திரம் அவருடைய உற்சாகத்துக்கு அடுத்ததாய் அவருக்கு சந்தோஷம் வரத்தக்கதாய் உத்தரவு சொன்னதெல்லாம் எழுத வேணுமானால் ஆறு காகிதமாகிலும் செல்லும். ஆனபடியினாலே சுவாரசியம் மாத்திரம் எழுதினேன்.

1746 செப்தம்பர் 22 புரட்டாசி 10 வியாழக்கிழமை

இற்றைநாள் மத்தியானம் பனிரெண்டு அடித்து மூன்று மணிக்குச் சென்னப்பட்டணத் திலேயிருந்து தபாலிலே துரையவர்களுக்கும் கடுதாசி வந்தது. அப்போது துரையவர்கள் சவாரி போகத்தக்கதாக வெளியே புறப்பட்டுக் கடலோரத்தண்டை போகச்சே சேவகன் கொண்டு வந்து கடுதாசி கொடுத்தான். அந்தக் கடுதாசியைப் பிரித்துப் பார்த்தவுடனே வெகு சந்தோஷத்தையடைந்து துவானிலே போய் பார்த்தவிடத்திலே ராமச்சந்திரய்யன் மாத்திரம் இருக்கச்சே அவரையழைத்து இப்படி சென்னப்பட்டணத்திலே நேற்றைய தினம் கோட்டை பிடித்து வெள்ளைக்கொடி போட்டார்களென்று சொல்லிப் பீரங்கி சுடச்சொல்லி உத்தாரங்கொடுத்தார்கள். அந்த வேளையிலே வெள்ளைக்காரர், உத்தியோகஸ்தர், பீரங்கி மேஸ்திரிகள் சகலமான பேரும் அவரவர்கள் சாப்பாட்டுக்குப் போயிருக்கிற வேளையானபடியினாலே சேந்தினேர் தவிர மற்றபேர் ஒருத்தருமில்லை. ஆனபடியினாலே அவ்விடத்திலே யிருந்த வெள்ளைக்காரர்தானே இருபத்தொரு பீரங்கி சுட்டார்கள். அந்நேரமே கொமிசேல்காரர் மற்றப் பெரிய மனுஷர் சகலமான பேருக்கும் அவரவர் வீட்டிலே போய்ச் சொல்லிப்போட்டு வரச்சொல்லி சேவகரை யனுப்பிவிட்டு நம்மண்டைக்கும் ஒரு சேவகனுடனே சொல்லி யனுப்புவித்தார்கள். இதற்குள்ளே துரைத்தனக்காரர் சகலமான பேரும் வந்தார்கள். நானும் … கொண்டுபோய் இந்திரவத்து பேட்டிப் பண்ணிக்கொண்டு முபார்க்கு பாதி சொல்லிக்கொண்டவிடத்திலே மகா சந்தோஷத்துடனே சென்னப்பட்டணம் நேற்றைய தினம் (அக்ஷய புரட்டாசி 9 புதவாரம்) நாள் மத்தியானம் பனிரெண்டு மணிக்கு கோட்டையிலே வெள்ளை நிசானும் போட்டு கும்பினி உத்தியோகஸ்தர் மற்றப்பேரும் பெரியதுரை சின்னதுரை முதலாகிய பேரையும் காவல்பண்ணிவித்து நம்முடையவர்கள் சமஸ்தான பேரும் சென்னப்பட்டணம் கோட்டையைத் தாக்கினார்கள் என்கிறதாய்ச் சொல்லிப் பின்னையும் சிறிது உத்தரவுகள் சொல்ல வரச்சே அவர்களுடைய சந்தோஷப் பூரிப்பினாலே நின்று போகக்கூடாமல் சகல துரைத்தனக்காரருடனே கூட கோட்டைக்குள்ளே போய்க் கோவிலிலே பூசை கேட்க உட்கார்ந்தார்கள்.

அந்நேரம் ஒரு வரிசை பீரங்கியும் சுட்டுக் கோட்டையிலே யிருக்கிற மணி, கப்புசேங் கோவில் மணி, சம்பா கோவில் மணி எல்லாம் முழங்கத்தக்கதாகப் பூசைகேட்டு ஆன உடனே துரையவர்களிருந்து கொண்டு தொப்பியைக் கழட்டிக் கையிலே பிடித்துக்கொண்டு ‘வீவல்றூவா’ என்று கூப்பிட்டார்கள். அதின்பேரிலே கோவிலிலே இருக்கப்பட்ட வெள்ளைக்காரர் வெளியிலே யிருக்கப்பட்ட கோட்டைக்குள்ளே யிருக்கப்பட்ட வெள்ளைக்காரர் சமஸ்தான பேரும் ஏக காலத்தில் கூப்பிட்டார்கள். அந்தச் சந்தோஷ சப்தத்துடனே கோஷம் கோட்டையை எடுத்துக்கொண்டு போகிறாப்போலே யிருந்தது. அதின் பிற்பாடு பூசைகேட்டு ஆனவுடனே ஒரு வரிசை பீரங்கி இருபத்தொரு பீரங்கி வேட்டுச் சுட்டார்கள். அதன் பேரிலே கப்பலிலேயிருந்தும் இருபத்தொரு பீரங்கி போட்டார்கள். அந்த மட்டிலே புறப்பட்டு துரையவர்கள் வளவுக்கு வந்து முசே லபோர்தொனே அவர்கள் பேரைச் சொல்லி அவரவர் சாராயம் குடித்து சந்தோஷம் கொண்டாடினார்கள்.

அந்த வேளையிலே பின்னையும் பட்டணத்திலே உண்டான கும்பினி உத்தியோகஸ்தர் வெள்ளைக்காரர், தமிழர், செட்டிமார்கள், வர்த்தகர் முதலாகிய சமஸ்தான பேரும் வந்து முபார்க்குச் சொல்லச்சொல்லிப் பேட்டி பண்ணிக்கொள்ளுகிறார்கள். அந்தச் சந்தடியிலே ராமச்சந்திரய்யனை அழைத்துப் பத்துப்பார் சர்க்கரைக்கு உத்தாரங்கொடுத்து பட்டணத்திலே சகலமான பேர் வீட்டுக்கும் சர்க்கரை வழங்கத்தக்கதாக உத்தாரங் கொடுத்தார்கள். அதன் பேரிலே என்னைப் பார்த்து பட்டணமெல்லாம் அலங்கிருதம் பண்ணிவித்து பட்டணத்திலே சகலமான பேர் வீட்டிலும் விளக்கு வைக்கச்சொல்லி உத்தாரங்கொடுத்தார்கள். அந்தப்படியே நயினாரை யழைத்து உத்தாரங்கொடுத்து பட்டணமெல்லாம் விளக்கு வைக்கச் சொன்னோம்.

அதன்பேரிலே என்னைப்பார்த்து உனக்கென்ன வேணும் அதுகளெல்லாம் கேள். நல்ல மனதுடனே உத்தாரங் கொடுக்கிறோம் என்று சொன்னார்கள். அதன்பேரிலே காவலிலே யிருக்கிற சிறைக்காரர் கடன்காரன் மற்றப்பேர் எல்லோரையும் விட்டுவிட வேணுமென்று சொன்னேன். அந்த க்ஷணம் விட்டுத் துரத்திவிடச் சொன்னார்கள். … அதன் பேரிலே புகையிலை எப்போதும் போலே விற்கத்தக்கதாக உத்தாரங் கொடுக்க வேணுமென்கிறதாய்க் கேட்டோம். அந்நேரமே வாசுதேவப் பண்டிதனை அழைப்பித்து இன்று முதலாய்ப் பழயபடிக்கு எப்போதும் போலே காசுக்கு ஒன்பது வெற்றிலையும் பணத்துக்கு பனிரெண்டரைப் பலம் புகையிலையும் விற்கச் சொல்லி உத்தாரங் கட்டைளையிட்டார்கள். அதின் பேரிலே சுப்பய்யனுக்கு உத்தியோகம் கொடுக்க வேணும் அய்யா. அவர் வெகுநாளாய் கஷ்டப்படுகிறார் என்று சொன்னேன். அவருக்கு எப்போதும் போலே கோட்டை கிடங்கிலே உத்தியோகம் கொடுத்து காரைக்காலுக்கு அனுப்புவிக்கச் சொல்லி உத்தாரங் கட்டளையிட்டார்கள்.

இதன்பிறகு கும்பினீர் வர்த்தகரும் மகாநாட்டாரும் கும்பலாய் கூடிக்கொண்டு வந்து பேட்டி பண்ணிக்கொண்டு சென்னப்பட்டணம் பிடித்ததற்கு முபார்க்குச் சொல்லி அதன் பேரிலே வேதபுரீஸ்வரன் கோவில் மதில் கட்டுகிறதற்கும் உத்தாரங் கேட்டார்கள். அதற்குத் துரையவர்கள் இருந்துகொண்டு யோசனை பண்ணிக்கொண்டு பிறகு சொல்கிறோம் என்று சொன்னார்கள். அப்படியல்ல எப்படியாகிலும் உத்தாரங் கட்டளயிட வேணும். சகல சனங்களும் ஆனந்தகரமாய்ச் சந்தோஷத்தையடையும் பொருட்டாய் வெகு காரியங்களுக்கு உத்தாரங் கொடுத்து அவரவர் மனதிற்கு அவரவர் வீட்டுச் சந்தோஷம் போலே பூரிக்கும்படியாய் உத்தாரங் கட்டளையிட்டது பட்டணத்திலே உண்டாகிய சனங்களெல்லோரும் தேவரீரைப் புகழ்ந்து கொண்டு வாழ்த்துகிறார்கள். இப்படிப்பட்ட வேளையிலே அந்த மதில் கட்டுகிறதற்கு மாத்திரம் கட்டளையிட்டால் வெகுதூரம் கீர்த்தியாய் இருக்குமென்று பின்னையும் தோத்திரமான உபசாரமான வார்த்தைகளாய்ச் சொல்லிக் கேட்டவிடத்திலே நல்லது அப்படியே உத்தாரங் கொடுக்கிறோம் என்கிறதாய் சொல்லிக்கொண்டே நடந்து கணக்கு எழுதுகிற அறையிலே போய்விட்டார்கள். அந்த மட்டிலே மகாநாட்டாரும் வர்த்தகரும் புறப்பட்டு வெளியே வந்துவிட்டார்கள். அந்தமட்டிலே துரைகளெல்லாரும் கூடிக்கொண்டு விருந்து சாப்பிட்டு வெகு சந்தோஷத்துடனே யிருந்தார்கள்.

(தொடரும்)

பகிர:
nv-author-image

கோ. செங்குட்டுவன்

விழுப்புரத்தில் பிறந்து வளர்ந்து வசித்து வருபவர். ஊடகத்துறையில் 20 ஆண்டுகாலம் செய்தியாளராகப் பணியாற்றியவர். கலை, இலக்கியம், பண்பாடு மற்றும் வரலாற்று அமைப்புகளில் பங்கேற்று இயங்கி வருபவர். 'சமணர் கழுவேற்றம்', 'கூவம் - அடையாறு - பக்கிங்காம்: சென்னையின் நீர்வழித்தடங்கள்' உள்ளிட்ட நூல்களை எழுதியிருக்கிறார். தொடர்புக்கு : ko.senguttuvan@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *