சென்னப்பட்டணத்தைச் சுலபமாகப் பிடித்துவிட்டனர் பிரெஞ்சுக்காரர்கள். ஆனால் பட்டணத்தை நிர்வாகம் செய்வதென்பது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை அவர்களுக்கு. காரணம், பிரிட்டிஷாரின் நண்பரான மாபூஸ்கான் பிரெஞ்சுக்காரர்களுக்கு அடிக்கடி தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தார். இதனால் எரிச்சலடைந்த புதுச்சேரி ஆளுநர் துய்ப்ளேக்ஸ், ‘எங்கள் மனுஷனாகப்பட்டவர்களை அடிக்கடி மிரட்டுகிறதும் கொல்லுவோமென்று இப்படிக் கஷ்டப்படுத்துகிறார்களாம். இது உமக்கு நல்லதல்ல. நான் உம்முடைய தம்பியான படியினாலேயும் உமக்குப் பழியில்லாமல் சொல்லுகிறேன். உங்கள் வமிசத்தார் துலுக்கக் கூட்டம் சென்னப்பட்டணத்திலேயும் புதுச்சேரியிலேயுமாய் வெகுபேர் இருக்கிறார்கள். அவர்கள் மூன்று பேரையும் ஏதாகிலும் நடத்தினால் இத்தனையாயிரம் துலுக்கருக்கும் மோசம் வரும். இதல்லாமல் வெகு சனங்கள் செத்து இரத்த ஆறு ஓடும்’ என்றெல்லாம் ஆனந்தரங்கரை வைத்துக் கடிதம் எழுதினார்.
இதற்கெல்லாம் அசரவில்லை மாபூஸ்கான். ஒருமுறை நுங்கம்பாக்கத்து ஏரிக்கருகில் பிரெஞ்சு – ஆற்காடு படைகள் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டன. அப்போது ஏரியின் முகத்துவாரம் ஆற்காடு படைகளால் வெட்டிவிடப்பட்டது. இந்த மோதலில் இறுதி வெற்றி பிரெஞ்சு படைகளுக்குத்தான் என்பதை விலாவாரியாக விவரிக்கிறார் ஆனந்தரங்கர்.
சென்னப்பட்டணத்தின் பிரிட்டிஷ் அதிகாரியாக இருந்த மார்ஸ் மற்றும் அவரைச் சார்ந்தவர்கள் காவலில் வைக்கப்பட்டு புதுச்சேரி அழைத்து வரப்பட்டனர். அவர்களை நேரில் சென்று அழைத்தார் துய்ப்ளேக்ஸ். அவர்களுக்கு பீரங்கிக் குண்டுகள் முழங்க மரியாதையும் அளிக்கப்பட்டது. ‘காவலாய் வந்தவர்களுக்கு இப்படி மரியாதை பண்ணுகிறது நியாயமில்லை’ என அங்கலாய்த்த ஆனந்தரங்கர், இவர்களை வேடிக்கை பார்க்க புதுச்சேரி பட்டணத்து ஜனங்கள் திரண்டதையும், இதையெல்லாம் பார்க்கும் மார்ஸ் மனசு எப்படி இருக்குமோ? இந்தக் கஷ்டம் சத்ருக்குக் கூட வரலாகாது என்றும் தாபந்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
‘முசே பரிதி சென்னப்பட்டணத்துக்குக் கொம்மாந்தனாகி கொள்ளையிட்டுத் தின்றுகொண்டு சுகத்திலே யிருக்கிறான்’ – பிரெஞ்சுத் தளபதியும் படைகளும் சென்னப்பட்டணத்தைக் கொள்ளையடிப்பதை வழக்கமாக்கி இருந்தனர் என்பதை இவ்வாறு குறிப்பிடுகிறார் ஆனந்தரங்கர். கொள்ளையடித்த பணத்துடன் புதுச்சேரி திரும்பிய பரிதி, முகலாயப் படைகளால் வழிமறிக்கப்பட்டார். அவரிடமிருந்த பெரும் பொருள் கொள்ளையடிக்கப்பட்டது. எப்படி வந்த பணம் எப்படிப் போகும் என்பது குறித்தெல்லாம் ஆனந்தரங்கர் விவரித்து இருப்பதை வாசகர்கள் வாசித்து அறிந்து கொள்வார்களாக:
1746 ஒக்தோபர் 24 அற்பசி 11 சோமவாரம்
இற்றைநாள் பனிரெண்டு மணிக்கு வந்த டபாலிலே சென்னப்பட்டணத்திலிருந்து நாளது அற்பிசி 8 கண்டால் குருவப்பசெட்டி எழுதின காகிதம் வந்தது. எழுதியிருந்த வயணம் (8உ) சாயுங்காலம் சென்னப்பட்டணத்திலே நடந்த வர்த்தமானம் என்னவென்றால்:
இங்கிலீசு குவர்னதோர் முசே மாசு முதல் கோன்சேல்காரர் பேரும் முசே லபோர்தொனே யண்டைக்கு வந்து தாங்கள் கொடுக்க வேண்டிய பணத்துக்குக் கடன் சீட்டெழுதிக் கொடுத்து உடன்படிக்கைப் பண்ணியும் இன்னமும் என்ன உண்டோ அதெல்லாம் எழுதி கையெழுத்துப் போட்டுக் கொடுத்ததாகவும் அதன் பேரிலே முசே லபோர்தொனே கோட்டையை அவர்களுக்கு விற்ற விலைக்கிரயக் காகிதத்திலே கையெழுத்துப் போட்டுப் பின்னையும் என்ன உபாயம் உடன்படிக்கைகள் பேசிக்கொண்டார்களோ அதுக்கெல்லாம் முசே லபோர்தொனே கையெழுத்துப் போட்டு இவர்கள் கைக்காகிதமும் அவர்கள் கைக்காகிதமும் ஒருத்தருக்கொருத்தர் வாங்கிக் கொண்ட பிற்பாடு இருபத்தொரு பீரங்கி சுட்டுச் சந்தோஷமாயிருந்தார்களென்றும் இந்த உடன்படிக்கைகள் நடக்கையிலே முசே தெப்பிரமேனியை அழைக்கவுமில்லை, அழைத்தாலும் இவன் போகவும் போகான் என்றும், முசே தெப்பிரமேனியைத் தவிர நடப்புவித்தானென்றும் தம்பி திருவேங்கடம் வந்த பிற்பாடு பதினைந்து காகிதம் எழுதினதற்கு ஒரு உத்தரவாகிலும் வரவில்லை யென்றும் இப்படியாக எழுதியனுப்பினான். இனிமேல் நடக்கிற சேதி முசே லபோர்தொனே ஏறிப்போன பிற்பாடு முசே துய்ப்ளேக்ஸ் நடத்துகிற சாடையறிய வேணும்.
1746 ஒக்தோபர் 25 அற்பிசி 12 மங்களவாரம்
இற்றைநாள் காலத்தாலே சென்னப்பட்டணத்துத் தபாலிலே ஒன்பது மணிக்குத் துரையவர்களுக்குக் காகிதம் வந்தது. அத்துடனே கூட எனக்குக் கண்டால் குருவப்பசெட்டி எழுதின காகிதம் நாளது 9உ எழுதின காகிதம் ஒன்றும் 10உ எழுதின காகிதம் இரண்டும் ஆக மூன்று காகிதங்களும் வந்தன. அந்தக் காகிதங்களிலே எழுதியிருந்த வயணம்:
இங்கிலீசுக்காரருக்கு முசே லபோர்தொனேக்கு விருந்து பண்ணினதும் அப்பால் முசே தெப்பிரமேனி கூட விருந்து சாப்பிட்டுச் சாயங்காலம் நாலு நாழிகை தேசகாலம் ஒப்பு உடம்படிக்கைப் பண்ணிக் கொண்ட காகிதம் எல்லாம் படித்துக் காண்பித்தும் அப்பாலிறங்கி வந்து நாளது 10உ (23உ அக்டோபர்) ஞாயிற்றுக்கிழமை கால்மேல் கோட்டையை முசே தெப்பிரமேனி வசம் ஒப்புவித்தாப்போலே இருபத்தொரு பீரங்கி போட்டதும் அப்பால் பத்தரை மணிக்கு முசே லபோர்தொனே லசீப் என்கிற கப்பலின் பேரிலே ஏறிப்போனதும் அப்போது இருபத்தொரு பீரங்கி போட்டதும் அன்று சாயுங்காலம் வரைக்கும் கப்பல் தெரிகிற சேதியும் முசே தெப்பிரமேனிக்கு அதிகாரம் நடக்குதென்றும் முசே தெப்பிரமேனிக்கு இங்கிலீசுக்காரர் இரண்டு வேளையும் விருந்து பண்ணுகிறார்களென்றும் இது முதலாகிய சேதி எழுதி வந்தது. இதல்லாமல், பின்னையும் பல சேதியும் எழுதிவந்த படியினாலே அந்த மூன்று காகிதமும் தெலுங்கிலே எழுதிவந்த படியினாலே அந்தக் காகிதத்திலே யிருக்கிறபடிக்கு தன் கீழே மூன்று காகித வயணமும் தெலுங்கிலே எழுதியிருந்தது.
1746 நவம்பர் 1 அற்பிசி 19
அப்பால் துரை என்னை அழைப்பித்து மாபூசுகானுக்கு ஒரு காகித மெழுதியனுப்பச் சொன்ன வயணம்: எங்கள் மனுஷனாகப்பட்டவர்களை யடிக்கடி மிரட்டுகிறதும் கொல்லுவோமென்று இப்படி கஷ்டப்படுத்துகிறார்களாம். இது உமக்கு நல்லதல்ல. நான் உம்முடைய தம்பியான படியினாலேயும் உமக்குப் பழியில்லாமல் சொல்லுகிறேன். உங்கள் வமிசத்தார் துலுக்கக் கூட்டம் சென்னப்பட்டணத்திலேயும் புதுச்சேரியிலேயுமாய் வெகுபேர் இருக்கிறார்கள். அவர்கள் மூன்று பேரையும் ஏதாகிலும் நடத்தினால் இத்தனையாயிரம் துலுக்கருக்கும் மோசம் வரும். இதல்லாமல் வெகு சனங்கள் செத்து இரத்த ஆறு ஓடும். இதுகளை நினைக்கிறதற்கு மார்க்கமெப்படி யென்றால், நீர் ஏதாகிலும் மனதுவைத்து அந்த மூன்று பேரையும் பிடித்த சமேதாரனையும் கூட கூட்டிச் சென்னப்பட்டணத்துக்கனுப்பி என் அண்டைக்கு அதற்கேற்ற மாற்றுப்பேர் மனுஷர்களை அனுப்புவித்தால் நல்ல மார்க்கமாய்ச் சமாதானமாய்ப் போமென்று எழுதச் சொன்னார்.
… அப்பால் சென்னப்பட்டணத்திற்குத் துரை தான் போக வேணுமென்று நினைத்ததும் முசே லபோர்தொனே யினாலே தடையாய்ப் போனதும் அவன் பண்ணின தொந்தரவையும் பேசியிருந்தோம்.
1746 நவம்பர் 4 அற்பிசி 22 சுக்கிரவாரம்
குவர்னதோர் கடற்கரைக்குச் சவாரி போனார். சவாரி போனவிடத்திலே சென்னப்பட்டணத்திலேயிருந்து கட்டுமரத்திலே முசே பெடுதல்மி காகிதம் வந்தது. அதிலே எழுதி இருந்த வயணம்:
மாபூசுகான் நுங்கம்பாக்கத்து ஏரிக்கரை மேல் கூடாரம் போட்டிருந்ததாகவும் அவர் பவுஞ்சு கப்பித்தான் தோட்டம் சுற்றிப் பிடித்துக் கொண்டிருந்த படியினாலே முகத்துவாரம் வெட்டிவிட துலுக்க மனுஷர் போனதும், மாமே சிப்பாய்கள் அதை விலக்கத்தக்கதாக ஐம்பது பேர்களை அனுப்புவிக்கையிலே துப்பாக்கியில் குண்டு போட்டுச் சுடாமல் மருந்து மாத்திரம் போட்டுச் சுட்டு மிரட்டித் துரத்திவிட்டு சொல்ல சொல்லியனுப்பினதாகவும் இதல்லாமல் கப்பித்தான் தோட்டத்திலே யிருக்கிற துலுக்கர் பவுஞ்சு இப்பால் வராதபடிக்கு முசே லத்தூரும் இருநூறு சொல்தாதுகளும் ஐம்பது மாயே சிப்பாய்களையும் எதிர் பாளையம் இறக்கியிருக்கிறபோது சொன்னாற் போலேயும் இப்படியிருக்கிற அவசரத்திலே முகத்துவாரத்து அண்டையிலே போன மாயே சிப்பாய்கள் குண்டு இல்லாமல் மருந்தை மாத்திரம் கெட்டித்திருக்கிற துப்பாக்கியை முகத்துவாரம் வெட்டுகிற துலுக்கர் மனிதரிலே சுட்டாற் போலேயும் அவர்கள் ஓடினார்களென்றும், அப்பால் துப்பாக்கியிலே குண்டு போடாத சாடை தெரிந்து மறுபடி வந்து வெட்டினார்கள் என்றும்,
மறுபடி சுட்டால் அவர்கள் போகாமலிருந்தார்க ளென்றும் அந்தச் சேதி வந்து முசியே பெடுதல்மிக்கு சொன்னவிடத்திலே, யவர்கள் கை மிஞ்சாமல் நாம் சண்டைப்பண்ணப் போகாது. முகத்துவாரம் வெட்டிவிட்டால் வெட்டிவிடட்டும் என்றும் சொன்னதாகவும் அதிகாலத்தாலே ஐந்து மணிக்குத் துலுக்கர் பவுஞ்சு கோட்டை நிறுத்தி மூலையிலே சிறிதுபேர் வந்தாற் போலேயும் அவர்களைப் பார்த்துக் குண்டு போடாமல் இரண்டு பீரங்கி சுட்டாற் போலேயும் முசே லத்தூர் இருநூறு சொல்தாதும் மாயே சிப்பாய்களும் ஐம்பது பேருடனே இறங்கியிருந்தவன் தன்னைச் சண்டை பண்ணச் சொல்லி அடையாளம் காண்பிப்பதாக எண்ணிக்கொண்டு கப்பித்தான் தோட்டத்திலேயும் அதற்கு மேல் பக்கத்திலேயும் இறங்கியிருக்கிற பவுஞ்சு பேரிலே போய் புதனன்று காலமே துப்பாக்கிகள் தீர்த்தார்கள். கர்னாத்துக் கென்ற தீ குடுக்கைகள் சுட்டுப் போட்டார்கள்.
இந்தச் சாடை சண்டை சுற்றிக் கொண்டதென்று கோட்டையின் பேரிலே யிருக்கிற சிறிது பீரங்கிகள் குண்டு போட்டுக் கெட்டித்ததும் குண்டில்லாமல் கெட்டித்திருந்ததும் ஏக வேளையிலே சுட்டமாத்திரத்திலே கப்பித்தான் தோட்டத்திலேயும் அதற்குப் பிறகேயும் இருக்கிற கோவிலேயும் இறங்கி யிருந்தவர்களுக்குக் கால் போனவனும் தலை போனவனும் குதிரைகள் பேரிலே வரிக்குதிரையாய் ஏறிக்கொண்டு ஓடினவனும் சும்மா ஓடினவனும் குதிரைகள் செத்தும் இப்படி நானா விதமாய் துலுக்கர் பவுஞ்சு முறிந்து ஓடி அப்பால் மாபூசுகான் இறங்கியிருக்கிற பாளையத்தில் கையிலே விழுங்காட்டிலும் மாபூசுகானும் ஆனையின் பேரிலே ஏறிக்கொண்டு ஓடினானாம்.
இந்தப்படி அவர்களோட இவர்கள் துரத்த ஐந்து நாழிகை மட்டுக்கும் துரத்தி, அப்பாலிவர்கள் துலுக்கர் பவுன்சிலே போட்டுவிட்டுப் போன தட்டுமுட்டுகள் சிறிது எடுத்துக்கொண்டு அந்த ஈசுரன் கோவிலிலே போட்டிருந்ததைச் சிறிது கொளுத்திப் போட்டு வந்ததாய் துரையவர்கள் யென்னை ஆறு மணிக்குச் சரியாய்ப் போய் வீட்டுக்கு வந்தவுடனே யழைப்பித்து உற்சாகமாய்ச் சொன்னார்கள்.
… அப்பால் துரை யன்னை அழைத்து ராத்திரி ஏழு மணிக்குச் சென்னப்பட்டணத்து மாபூசுகான் சண்டை சமாசாரஞ் சொன்ன பிற்பாடு, நான் ஐந்தாறு நாளையிலே சென்னப்பட்டணம் போக வேணுமென்று சொன்னார். முன்னே தானே போனால் வெகு காரியமுண்டென்று மினிமேல் போனாலும் ஊரை சுஸ்தப்படுத்திச் சீக்கிரமத்துக்கு வரலாமென்றும் சொன்னதற்கு இங்கேயிருந்து புறப்படும் போது இருநூற்றைம்பது முன்னூறு சொல்தாதுகளுடனே புறப்பட்டு சதுரங்கப்பட்டண மட்டுக்கும் போகிறதற்குள்ளே சென்னப்பட்டண மிருந்து இருநூற்றைம்பது சொல்தாதுகள் சதுரங்கப்பட்டண மட்டுக்கும் வருவார்கள். அவர்களைக் கூட்டிக்கொண்டு சென்னப்பட்டணத்துக்குப் போவோம். நீயும் தயாரா யிரு வென்று சொன்னார். நல்லதப்பா வென்று சொன்னேன்.
1746 நவம்பர் 13 கார்த்திகை 1 ஆதிவாரம்
முசே பரிதி சென்னப்பட்டணத்துக்குக் கொம்மாந்தனாகி கொள்ளையிட்டுத் தின்று கொண்டு சுகத்திலே யிருக்கிறான்.
1746 நவம்பர் 14 கார்த்திகை 2 சோமவாரம்
… துரையழைத் தனுப்புவித்துச் சென்னப்பட்டணத்தில் இருந்தவர்கள் எல்லாரும் வெளியே அங்கங்கே போயிருக்கிறார்களே அவர்களுக் கெல்லாம் நீ காகிதங்கள் அனுப்புவித்துச் சென்னப்பட்டணத்திலே இனிமேல் இங்கிலீசுக்காரருக்கு ஆசையில்லை. அவர்களெல்லாரும் புறப்பட்டுப் போகிறார்கள். இனிமேல் அவர்களுக்குச் சென்னப்பட்டணம் ஆமென்கிற பிரமையை விட்டு விடுங்கோளேன். புதுச்சேரியிலே வந்து சுகமாயிருக்கிற தானால் சென்னப்பட்டணத்திலே அவரவர் தட்டுமுட்டுகள் வீடுகள் கொள்ளையிலே போனதுமாக மற்றதுகள் எல்லாம் கொடுத்துவிடுகிறோமென்று அவரவருக்குக் காகிதங்களெழுதி யனுப்பச் சொன்னார். நல்லதென்று சொன்னேன்.
1746 நவம்பர் 24 கார்த்திகை 12 குருவாரம்
இற்றைநாள் சாயங்காலம் ஐந்து மணிக்குச் சென்னப்பட்டணம் குவர்னதோர் மேஸ்தர் மாசு, அவர் பெண்சாதி, அவர் பெண்கள், பிள்ளைகள், சின்னதுரை மேஸ்தர் மானுஷன் பின்னையும் ஐந்தாறு பேர் இங்கிலீசுக்காரர் கூட இவ்விடத்திலிருந்து போயிருந்த முசே பெடுத்தல்மி, புரி, லவீல்பாகு, திலார்ஷ் பின்னையும் இரண்டொரு வெள்ளைக்காரர் முதலான நூறு சொல்தாதுகளும் நூறு சிப்பாய்களும் கூட வந்தார்கள்.
இவ்விடத்திலிருந்து நூறு சொல்தாதுகளும் ஐம்பது மாயே சிப்பாய்களும் இருபது ஒபிசியேல்மார்களும் எதிரே காலாப்பட்டு மட்டும் போனார்கள். அங்கே மத்தியானத்திற்குச் சாப்பிட்டுச் சாயங்காலம் புறப்பட்டார்கள்.
புதுச்சேரி குவர்னதோர் முசே துப்பிளேக்சும், கோன்சேல்காரரும் மீனாட்சியம்மை சத்திரமட்டும் எதிரே போய் அழைத்து வந்தார்கள். சென்னப்பட்டணம் கெவுனி வாசல் படியிலே நுழையும் போது இருபத்தொரு பீரங்கி போட்டார்கள். அப்பால் சாராயம் வாங்கிக் கொள்ளும் போது அப்படித்தான். அந்தப்படிக்கு இரண்டு நாழிகை தேசகாலம் பேசியிருந்த பிற்பாடு இவர்களுக்கு விடுதி அமர்த்தி இருக்கிற குவர்னதோர் வீட்டுக்கு மேற்கே இருக்கிற கோன்சேல் வீட்டை இவர்களுக்கு விடுதியாக முன்னே தானே அமர்த்தியதை எல்லாம் திட்டமாய்ச் சிங்காரித்து கட்டில்களமைத்து மற்றதெல்லாம் போட்டு முஸ்தீதாக இருக்கிற வீட்டைத் துரை பெண்சாதி கொண்டு போய்க் காண்பித்து அதைப் பார்த்துவிட்டு மறுபடியும் குவர்னதோர் வீட்டிற்குப் போய் சாப்பிட்டு அவர்களுக்கு விடுதி விட்டிருக்கிற வீட்டுக்குள்ளே படுத்துக்கொள்ளப் போனார்கள்.
ஆனாலிவர்களுக்கு நடந்த மரியாதை, காவலாய் வந்தவர்களுக்கு இப்படி மரியாதை பண்ணுகிறது நியாயமில்லை. இவன் சென்னப்பட்டணத்திலே குவர்னதோராய் இருக்கிற போது வந்தாலுமிதற்குச் சற்றுக் குறைச்சலாய் மரியாதை நடத்துகிறதே யல்லாமல் இவ்வளவு நடக்காது. அப்படி வெகுமரியாதை பண்ணின படியினாலே துரையைச் சமஸ்தான ஜனங்களும் ஸ்தவுத்தியம் பண்ணினார்கள்.
ஆனால் இந்த குவர்னேர் மாசு வருகிற போது இந்தப் பட்டணத்து ஜனங்கள், குண்டுதாழை எதுவக்கி குவர்னதோர் வீடு மட்டுக்கும் வந்து வேடிக்கை பார்த்த ஐனங்களை மட்டாய் மேரையாமித்தி இவ்வளவு என்று சொல்லக் கூடாது. ஜனங்கள் நெருக்கமும் இந்த மட்டுக்கும் தொகை புரியாததும் எள்ளு போட்டால் எள்ளு விழாது.
இப்படி பட்டணத்திலுள்ள ஜனங்கள் எல்லாம் வந்து பார்க்கிற போது முசே மார்சு அவர்களுடைய மனசு எப்படியிருக்குமோ அந்த துக்கத்தை இன்ன பிரகாரமென்று எழுதப் போகாது. ஆனால் லோகத்துக்குள்ளே சுகமுந் துக்கமும் உடந்தையான படியினாலே விவேகிகள் இதை ஒரு அவமானமா யெண்ணார்கள்.
கோட்டைக்கு இக்கட்டு வருகிறதும் பட்டணத்துக்கு இக்கட்டு வருகிறதும் அதிலே யிருக்கப்பட்ட ஜனங்கள் வழிப்படுகிறதும், சுவாமியுடைய ஆக்கினையே யல்லாமல் மற்றப்படியல்ல. ஆனால் கஷ்டம் சத்துருக்குக் கூட வரலாகாது.
1746 டிசம்பர் 7 கார்த்திகை 23 சோமவாரம்
இற்றை நாள் பத்து மணிக்குச் சென்னப்பட்டணம் குவர்னதோர் மேஸ்தர் மாசு என்பவர் இவ்விடத்திலே வந்திருக்கிறார்களே அவருடைய குமாரன் ஐந்தாறு வயதுள்ள பிள்ளை. அதற்கு வலி கண்டு இரண்டு முழியும் பிதுங்கி வெளியே வந்தது. அதன் பேரிலே யவர்கள் பட்ட தாபந்தி எழுதி முடியாது. அப்போது இவ்விடத்துக் குவர்னதோர் முசே துப்பிளேக்சும் அவர் பெண்சாதியும் அந்தச் சேதி கேட்டவுடனே, அந்த க்ஷணமே போய் விசாரித்தார்கள். வைத்தியனை அழைப்பித்து அந்நேரமதுக்குச் சிகிச்சை மற்றதெல்லாம் நடப்பித்து அவர்களுக்குத் துக்கோப சமனாகத்தக்கதாக ரொம்பவும் தெரியப்படச் சொல்லி ஒரு சாமபரியந்திர மிருந்து சற்றுச் சுவஸ்தமான பிற்பாடு புறப்பட்டு வீட்டுக்கு வந்தார்கள்.
ஆனால், லோகத்திலே இடறின காலிலே இடறுமென்று சொல்வார்களே அதுவும், இக்கட்டு வந்தாலும் பரம்பரையாய் வருமென்று சொல்லுகிறார்களே அதுவும் அபத்தமல்ல. வெகுசா பார்த்தது முண்டு. ஆனால், நன்றாயிருந்தவர்களுக்கு இக்கட்டு வரப்பண்ணலாகாது (தெய்வம்) அப்பால் மனுஷனாலே செய்ய வேண்டியதென்ன? அனுபவித்துத் தீரவேணும். சுவாமிக்கா சித்தம் திரும்ப வேண்டும்.
1746 டிசம்பர் 10 கார்த்திகை 28 சனிவாரம்
இற்றைநாள் காலத்தாலே டபால்காரன் கொண்டு வந்த கபுறு என்னவென்றால் முசே பரிதி சென்னப்பட்டணம் விட்டு இப்போது திருப்போரூர் தாண்டி வருகையிலே மாபூசுகான் பவுஞ்சு ஐந்நூறு குதிரையும் ஆயிரத்தைந்நூறு ஸ்தோமமும் வந்து சுற்றிக்கொண்டதாகச் சேதி வந்தது. அந்தச் சேதி துரையுடனே போய்ச் சொன்னேன்.
…நான் கேட்ட சேதி என்னவென்றால்: நூறு சொல்தாதுகளும் நாற்பது ஐம்பது காப்பிரிகளும் முப்பது மாயே சிப்பாய்களும் சமேதாரன் சேக்கு அசேன் என்கிறவனும் கூட வருகையிலே சொல்தாதுகளுக்கும் மாயே சிப்பாய்களுக்கும் சிறிது காப்பிரிகளுக்கும் பேருக்கு ஆறு வேட்டு மருந்து குண்டுங் கொடுத்துச் சிறிது மருந்து குண்டும் ரஸ்துமெடுப்பித்துக் கொண்டு அவனவன் சென்னப்பட்டணத்திலே சம்பாதித்த தட்டுமுட்டுப் பணம்காசுப் புடவைச் சீலைகளும் எடுப்பித்துக் கொண்டு வரும்போது திருப்போரூருக்கு இப்புறம் வரும்போது அன்வருதிகானும் மேற்படி பவுன்சும் ஆயிரங் குதிரையும் இரண்டாயிரம் சேனையும் நாலு மூலையும் வந்து சுற்றிக்கொண்டு சண்டை பண்ணுகிறதிலே துலுக்கரிலே முப்பது நாற்பது குதிரை மட்டுக்கும் விழுந்தது. இவர்களிலே ஒரு மாயே சிப்பாய்க்கும் ஒரு காப்பிரியனுக்கும் காயமிந்த மட்டுக்கும் தள்ளு நோக்குமாய் சதுரங்கப் பட்டணம் வந்து சேர்ந்தோம்.
இவர்கள் வந்து பிறகே வந்து சேர்ந்த முசே பரிதி சொந்தம் சிறிது பணம் காசும், சிறிது உயர்ந்த ரத்தினங்களும் தினுசுவாரி புடவைகளும் பெட்டியிலே போட்டுப் பிறகே கூலிக்காரரெடுத்து வந்தார்களாம். அந்தப் பெட்டியின் பிறகே ஆறேழு சொல்தாதுகளும் ஆறேழு மாயே சிப்பாய்களும் கூட வந்தார்களாம்.
அதை முகலாயக் குதிரைக்காரர் கொண்டு போனதுமல்லாமல் பின்னையுஞ் சிப்பாய்களும் புதுச்சேரியிலிருந்து போயிருக்கிறவர்கள் சிறிது கொள்ளையிட்டதும் சிறிது கொள்ளையுடைமை வாங்கினதும் இதுகளிலே சிறிது பரிதி பிறகே கூட வந்தவர்கள் கொண்டு வந்ததில் கொஞ்ச நஞ்ச மாத்திரம் தப்பித்தது. மற்றது செத்துப் பின்னிடஞ்சி வந்ததெல்லாம் வழியிலேயே துலுக்கர் குதிரைக்காரர் நின்று பறித்துக்கொண்டு, கொண்டு வந்தார்கள். அவர்களை ரெண்டு போட்டு துரத்தி விட்டதாய்ச் சேதி கேட்டேன். முசே பரிதியது போனது பதினாயிரம் வராகன் மட்டுக்கு உண்டென்று சிறிதுபேர் சொன்னார்கள். கூட வந்தவன் ஒருத்தன் சொன்னது, பத்துக்குமேல் உண்டென்று சொன்னான்.
அநியாயற்சிதம் வித்தம் அஷாளாவின் சியத்தி என்று எப்படிச் சம்பாத்தியமோ அப்படிப் போச்சுது. அது பதினாயிரம் ஆகட்டும், இருபதினாயிரம் ஆகட்டும், நூறு வராகன் மட்டுக்கும் சரி. வெகுபேர் அவனவன் எப்படிக் கஷ்டப்பட்டுச் சம்பாதித்தானோ இந்த உடைமையைப் போக்கடித்துக் கொண்டாப் போலே, எப்படி அவனுக்குத் திகிலிட்டுக் கிலேசப்பட்டானோ அந்த நெருப்பு நிரம்பி இருக்கப்பட்ட உடைமையை இவன் கொண்டு வந்து வீட்டிலே வைத்தால் அந்த நெருப்பு இவனுக்குப் பழயதாகி இவன் சம்பாதிக்கிறதைக்கூட பஸ்மம் பண்ணாதே போமா?
அதற்குத் திருஷ்டாந்திரமாக, முன் புதுச்சேரி கப்பல் மணிலாவுக்குப் போய் வருகிறதைப் பிடிப்பதற்கு எத்தனை பேர் அங்கலாய்த்தார்கள். அந்த நெருப்பும் போய்த்தானே சென்னப்பட்டணத்திலே விழுந்து சென்னப்பட்டணம் இந்தப் பாடாச்சுது. இது அப்படி லக்ஷம் பங்கு அதனங்கொண்ட நெருப்பு வந்து விழுகிறது என்னமாய்ப் போமென்று விவேகிகளாயிருக்கிறவர்கள் தெரிந்து கொள்வார்கள்.
அறிய வேண்டியது, இந்தப்படிக்கு முசே பரிதி வந்து சேர்ந்து சதுரங்கப்பட்டணம் வந்து, வெளி ஈசுவரன் கோவிலைப் பிடித்துக் கொண்டு தட்டுமுட்டு, பெட்டிப் பேழை போனதற்குத் தாபந்தப்படவில்லை. அதனாலே நான்கு கண்ணாடி ஒன்றரை புருஷப் பிரமாணத்திலே கொண்டு வந்து கண்ணாடி போனதற்கு மெத்தக் கிலேசமாய் இருக்குதென்று சொன்னானென்று வந்தவர்கள் சொன்னார்கள். ஆனாலிவன் வந்த மடிப்புக்குச் சுவாமி பிராஞ்சுக்காரருக்குச் செயகாலங் கொடுத்திருக்கிறபோது தப்பி வந்தாரே யல்லாமல் இல்லாமற் போனால் வந்து சேர மாட்டான்.
(தொடரும்)