சென்னையைக் கைப்பற்றிய பிரெஞ்சுக்காரர்களுக்குத் தலைவலியாக இருந்தவர் ஆற்காடு நவாப் மாபூஸ்கான். நுங்கம்பாக்கம் ஏரியில் நவாப் – பிரெஞ்சு படைகளும் மோதிக்கொண்டதையும் நவாப் படைகள் புறமுதுகிட்டு ஓடியதையும் கடந்த அத்தியாயத்தில் நாம் பார்த்தோம். இதற்கிடையே நவாபின் படையணிகள் புதுச்சேரி அருகிலுள்ள திருக்காஞ்சியில் முகாமிட்டிருந்தன. பிரெஞ்சு எல்லைப் பகுதிகளில் கலகம் செய்வது இவர்களின் நோக்கமாக இருந்தது. அருகிலுள்ள கிராமங்களில் ஆற்காடு படைகள் தாம் தூம் செய்வதாகத் தகவல்கள் வந்தன. மேலும். பகையை வளர்க்க விரும்பவில்லை ஆளுநர் துய்ப்ளேக்ஸ்.
நவாபுடன் பேச்சுவார்த்தை நடத்த பிரெஞ்சு தூதுக்குழு ஒன்று திருக்காஞ்சி விரைந்தது. இதற்கு முன்னிலை வகித்தவர் ஆனந்தரங்கர். முக்கிய பிரமுகர்களைச் சந்திக்கும் போது நசர் (மொய்?) வைப்பது வழக்கம். இப்படி நவாபிடம் கொடுப்பதற்காக 22 மோகரி கொடுத்தனுப்பினார் துய்ப்ளேக்ஸ். ஆனால் போகும் வழியில் ஆனந்தரங்கர் மனம் மாறியது. 11 மோகரியே போதும் என முடிவு செய்தார். அதைத்தான் நவாபிடமும் கொடுத்தார்.
ஆனந்தரங்கரைக் கட்டித்தழுவி வரவேற்ற நவாபு மாபூசுகான் தான் போர்த்தியிருந்த சால்வையை எடுத்து ஆனந்தரங்கருக்குப் போர்த்தினார். தன்னிடம் இருந்த கட்டாரியை எடுத்து பிள்ளையிடம் கொடுத்தார். ‘உன்னுடைய எதிரிகளை நீ ஜெயிக்க வேணும்’ என்று வாழ்த்தினார். புதுச்சேரிக்கு வர வேண்டும் எனும் ஆனந்தரங்கரின் அழைப்பையும் ஏற்றுக் கொண்டார்.
திரும்பி வந்தவரிடம் இருந்த கட்டாரியை துய்ப்ளேக்ஸ் ஆச்சரியத்துடன் வாங்கி, இருபது முப்பது தரம் பார்த்திருக்கிறார். கவுன்சிலுக்கு வந்தவர்களிடம் எல்லாம் ‘ஆனந்தரங்கன் சிப்பாய் ஆனான்’ என்று சந்தோஷப்பட்டுச் சொல்லியிருக்கிறார். ஆனாலும் ஆளுநருக்குள் சின்னச் சந்தேகம்! ‘ஆமாம், இந்தக் கட்டாரியை நவாப் உனக்கு ஏன் கொடுத்தார்?’. இதற்கு ஆனந்தரங்கரின் பதில் இப்படியாக இருந்தது: ‘ஒருவேளை அவர்கள் சமாதானத்துக்கு வராவிட்டால் அவர்களைக் கூட செயிக்கத்தக்கதாகக் கொடுத்தார்’.
ஆனந்தரங்கரின் அழைப்பினை ஏற்றுக்கொண்டு அடுத்த நாள் காலையிலேயே புதுச்சேரி வந்துவிட்டார் ஆற்காடு நவாப். மேளதாளத்துடன் தடபுடலான வரவேற்பு. ‘உங்கள் வீட்டிற்கு நீங்கள் வருவதற்கு தடையென்ன இருக்கிறது? வாருங்கள்’ என்று நவாபின் கையைப் பிடித்து ஆளுநர் அழைத்தது அரசியலின் உச்சக்கட்டம் என்றே சொல்லலாம். தொடர்ந்து, நவாப் பல்லக்கில் ஆளுநரும், ஆளுநர் பல்லக்கில் நவாபும். இருவரும் ராசியாகிவிட்டதை (சமாதானம் ஆனதை) உலகிற்கு அறிவிக்கும் நிகழ்வு இது.
விருந்து உபசாரங்கள் முடிந்தவுடன், நபாவுக்கு வெகுமானங்கள் வழங்கப்பட்டன. இவற்றை வரிசையாகப் பட்டியலிடுகிறார் ஆனந்தரங்கர். இதில், ஆனைக் குட்டியும் சங்கீதப் பெட்டியும் அடக்கம். ஆனாலும் பொருல்கள் பலவற்றின் பெயர்கள் நமக்கு விளங்கவில்லை.
இதற்கிடையே ஆற்காடு நவாபும் பிரெஞ்சு ஆளுநரும் சமாதானம் ஆனதை இங்கே கொண்டாடுவதுபோல சென்னப்பட்டணத்திலும் பண்டிகைக் கொண்டாடச் சொல்லி புதுச்சேரியில் இருந்து காகிதம் எழுதப்பட்டது!
1747 பிப்ரவரி 14 மாசி 6 மங்களவாரம்
ஒழுகரையிலே இருந்து சேதி வந்ததென்ன வென்றால் கொண்டூர் தோப்பிலே யிறங்கியிருந்த மாபூசுகானுடைய குதிரைகளிலே நானூறு குதிரையும், இருநூறு இருநூற்றைம்பது சஞ்சால் துப்பாக்கியும், இருநூற்றைம்பது பேர் கத்தி கேடயக்காரருமாக அரியாங்குப்பத்து சமீபமாக வந்ததாகவும் அரியாங்குப்பம் கொத்தளத்தின் பேரிலே தாளையுமிருந்த வெள்ளைக்காரர், நாற்பத்தேழு பேர் வெள்ளைக்காரர் வெளியே புறப்பட்டுக் குதிரைக்காரரைத் துரத்திச் சுட்டார்கள். அதிலே ஒரு குதிரை விழுந்தது. அந்த மண்ணிலே குதிரைக்காரர் புறப்பட்டு ஓடிப்போனார்களாம். அதன் பேரிலே வெள்ளைக்காரர் மறுபடியும் அரியாங்குப்பத்துக்கு வந்துவிட்டார்களாம்.
ஓடிப்போன குதிரைக்காரர் கிளிஞ்சி குப்பத்தின் பேரிலே விழுந்து ரெட்டிகள், வீட்டுக் குடியானவர்கள் வீட்டிலே புகுந்து புடவை, சீலை, தட்டுமுட்டுகள், சமஸ்தமுங் கொள்ளையிட்டுக் கொண்டு திருக்காஞ்சி கோவிலை அடித்துப் பிடித்து இதற்கு எசமானாய் வந்திருக்கிற நாசறு கொல்லிகானிருந்து கொண்டு சுவர் போடுவிக்கிறான் என்றும், அதேனென்றால் மாபூசுகானும் மமுதல்லிகானும் அவ்விடத்துக்கு வந்திறங்கியிருக்க வேணுமென்றும் வருகிறதாகச் சொல்லுகிறார்களென்றும் சேதி வந்தது.
… அதன் பேரிலே உசேன் சாயபு அவர்களுடைய ஸ்தானாதிபதியாய் வந்திருக்கிற மகமதாக்கல் என்கிறவரை அழைப்பித்து அவரைப் போய் இப்போது திருக்காஞ்சி ஆற்றண்டையிலே யிறங்கியிருக்கிற குதிரைகளுக்கு எசமானாய் வந்திருக்கிற நாசறு கொல்லிகான் அண்டைக்குப் போய் கண்டு பேசி, நீங்களென்ன சண்டைக்கு வந்தீர்களா அல்லவென்று ஆற்காட்டுக்குப் பயணம் போகிற நிமித்தியம் ஏதாவது தண்டு கதலி பாளையம் கூச்சுப்பண்ணிப் பார்த்து இதுவழியாய் வந்தீர்களா அல்லவென்று அவர்களுடைய அபிப்பிராயம் என்னமா யிருக்குதென்று உசாவிப் பேசித் தெரிந்து கொண்டு வரச்சொல்லி மகமதாக்கலைப் பயணம் பண்ணினார்கள்.
1747 பிப்ரவரி 15 மாசி 7 புதன்கிழமை
இற்றைநாள் காலத்தாலே தண்டிலேயிருந்தும், அரியாங்குப்பத்திலே யிருந்தும், ஒழுகரையிலேயிருந்தும் சேதி வந்ததென்னவென்றால்: இன்றைய தினம் காலையிலே மறுபடியும் நேற்று வந்ததல்லாமல் இன்றைய தினம் ஆயிரம் குதிரை வந்து திருக்காஞ்சி ஆற்றிலே யிறங்கியிருக்கிற தண்டுடனே கூடச் சேர்ந்தார்களென்றும் மாபூசுகானும் மமுதல்லிகானும் பாளையம் கதலி வாக்கூரண்டையிலே வந்திறங்கியிருக்கிறார்களென்றும், பாளையத்துக்குள்ளே யிருக்கப்பட்ட குதிரைக்காரர் சிறிதுபேர் புறப்பட்டு அழிசபாக்கத்தைக் கொளுத்திக் கொள்ளையிட்டும், கொம்மையபாக்கம், கிளிஞ்சிக்குப்பம் இதுகளெல்லாம் தாம்தூம் பண்ணுகிறார்களென்றும் அடிக்கடி யிவ்விடத்துக்குச் சேதி வந்துகொண்டே யிருக்குது. அழிசபாக்கத்துக்கு அடுத்த கிராமங்களாயிருக்கப்பட்ட தெருவாநத்தம், திம்மப்பநாயக்கன் பாளையம், பூரணாங்குப்பம், பின்னையும் சுற்றுப்பட்டிலே யிருக்கப்பட்ட கிராமங்களெல்லாம் தாம்தூம் பண்ணிச் சேதப்படுத்துகிறார்களென்கிற சேதி வந்து கொண்டேயிருக்கிறது.
1747 பிப்ரவரி 18 மாசி 10 சனிவாரம்
இந்த நாள் நடந்த சேதி என்னவென்றால்: அசறத்து மாபூசுகானவர்களும், மமுதல்லிகானவர்களும், மகம்மதாக்கலுக்கு எழுதியனுப்புவித்த வயணமென்ன வென்றால்: குவர்னதோர் சாயபு அவர்கள் எழுதினபடிக்கு நமக்குச் சம்மதிதான். இப்பவும் ஆனந்தரங்கப்பன் வந்தவுடனே கண்டு பேசிக்கொண்டு அவரை அழைத்துக்கொண்டு நீயுமவரும் மூன்றாஞ் சாமத்துக்கு வருகிறோமென்று எழுதியிருந்தது. அதன் பேரிலே அந்தக் கடுதாசி வயணம் பார்த்துக்கொண்டு துரையவர்கள் உடனே என்னையும் முசே திலார்சையும் மகமதாக்கலையும் மூன்று பேரையும் பயணமாகச் சொல்லி ஸ்ரீ துரையவர்கள் உத்தாரங் கட்டளையிட்டார்கள்.
அந்த உத்தாரப்படி யின்றையதினம் மத்தியான மிரண்டு மணிக்குப் பயணப்பட்டு மாபூசுகானண்டைக்குப் போனோம். அவருக்கு நசர் வைத்துப் பேட்டி பண்ணிக்கொள்ளுகிறதற்கு இருபத்திரண்டு மோகரி என் கையிலே கொடுத்தார்கள். அதுவுங் கூட கொண்டு போனோம். அவ்விடத்திலே போனவுடனே யோசனை பண்ணிப் பதினொரு மோகரி பண்ணினால் போதுமென்று மனதிலே எண்ணிக்கொண்டு பதினொரு மோகரியை வைத்துக் கொண்டு திருக்காஞ்சியிலே இறங்கியிருக்கிற மாபூசுகானவர்களண்டைக்குப் போனோம்.
நான் போய் பதினொரு மோகரையும் நசர்வைத்துப் பேட்டி பண்ணிக்கொண்டவுடனே எழுந்திருந்து கட்டிக்கொண்டு உட்காரச் சொல்லி உத்தாரங் கொடுத்தார்கள். அதன் பேரிலே அவரும் சொல்ல வேண்டிய உபசாரமான வார்த்தையாய்ச் சொன்னார். அதற்கு உத்தரவு அதற்கேற்றபடிக்கு ரொம்பவும் உபசாரமாய்த்தானே உத்தரவு சொன்னோம்.
அதன் பேரிலே சீரொப்பா கொண்டு வரச்சொல்லி நமக்கு நூற்றைம்பது ரூபாயிலே சீரொப்பாவுங் கொடுத்துத் தம்முடைய கையினாலே நடுகட்டும் கட்டிவிட்டுத் தாம் கையிலே வைத்திருக்கிற கட்டாரியை எடுத்து என்னுடைய அறையிலே சொருகிவிட்டு இனிமேல் உனக்குச் சத்துருவாயிருக்கப்பட்ட பேரையெல்லாம் செயிக்கத்தக்கதாக கொடுத்தோம் என்கிறதாய்ச் சொல்லி, தம்முடைய பேரிலே போர்த்திக் கொண்டிருந்த சாலுவையை எடுத்து என் மேலே போர்த்தி உம்முடைய சினேகிதம் நமக்கு இருக்க வேணும், இனிமேல் நம்முடைய காரியத்திலே யிருக்க வேணும். என்னுடைய வெட்கம் உன்னுடையதே யல்லாமல் மற்றப்படி யல்லவே. ஆனபடியினாலே அதற்கெப்படி உண்டோ அந்தப்படி நடப்பித்துக்கொள்ளவுமென்றும் சொல்லி முசே திலார்சுக்கும் நாற்பத்தைந்து ரூபாயிலே ஒரு சீரொப்பாவும் கொடுத்து, மகமதாக்கலை அழைத்து, இப்போதேயானால் பொழுது போச்சுதே நாளை சூரிய வுதயத்துக்கு வருகிறோமென்று சொல்லி அனுப்பிவிட்டார்கள். அனுப்புகிறபோது அவ்விடத்துக் கவை உங்களுக்குச் சம்மதியானபடியென்று சொன்னார்கள்.
நல்லதென்றனுப்புவித்துக் கொண்டு புறப்பட்டு ஏழு மணிக்கு ஸ்ரீ துரையவர்களண்டைக்கு வந்து அவ்விடத்திலே நடந்த மரியாதைகளெல்லாம் சொல்லிக் கட்டாரி கொடுத்ததும் சொன்னோம். அந்தக் கட்டாரியை வாங்கிப் பார்த்து வெகு சந்தோஷப்பட்டு அந்தக் கட்டாரியை இருபது முப்பது தரம் உண்டு அதை வாங்கிப் பார்க்கிறதும் வருகிற குமிசெல்காரர், வெள்ளைக்காரர், சமஸ்தமான பேர், வெள்ளைக்காரர் பெரிய மனுஷர் வருகிற பேருக்கெல்லாம் காண்பிக்கிறதும் ரங்கப்பன் சிப்பாய் ஆனானென்கிறதும் சந்தோஷமாகச் சொல்லிக் கொண்டேயிருந்தார்.
பிற்பாடு என்னை அழைத்து இந்தக் கட்டாரி உனக்கெதற்காகக் கொடுத்தாரென்று கேட்டார். உங்களுக்குத் தெரியாமலிருக்குதா வென்று சொன்னேன். ஆனாலும் ஒருவேளை அவர்கள் சமாதானத்துக்கு வராவிட்டால் அவர்களைக் கூட செயிக்கத்தக்கதாகக் கொடுத்தார் என்று சொன்னேன். மெய்தானென்று சொல்லி, இந்தக் கட்டாரி கொடுத்ததைத்தானே வெகுநேரம் பிரஸ்தாபம் பண்ணிக்கொண்டிருந்து சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.
1747 பிப்ரவரி 19 மாசி 11 ஆதிவாரம்
இற்றைநாள் காலமே ஐந்து மணிக்கு நபாபு மாபூசுகான் அவர்களை அழைத்துக் கொண்டு வரத்தக்கதாக இவ்விடத்திலே யிருந்து மகமதாக்கலும், மதானந்த பண்டிதரும், நானும் பெடுத்தலமே என்கிற வெள்ளைக்காரரும் பாளையக்காரனும் கொம்பு தமுக்குடனே திருக்காஞ்சி மட்டுக்கும் போனோம். போன உடனே அவ்விடத்திலே யிருந்து அசரத்து மாபூசுகான் அவர்களும் பத்து குதிரைக்காரர்களுடனே ஆனையின் பேரிலே நிசான் பிடித்துக்கொண்டு கூடத்தானே வந்தார்கள். வரச்சே தேவநாயக்கன் செட்டிச்சாவடி யண்டையிலே சின்ன துரையவர்களும் முசியே திலார்சும், முசியே கில்லியாரும் மூன்று பேரும் எதிர்கொண்டு வந்திருந்தார்கள். அவ்விடத்திலே மாபூசுகானவர்கள் வந்தவுடனே நபாபு பல்லக்கின் பேரிலே யிருந்தபடியே சின்ன துரையவர்கள் நின்று கொண்டிருந்தவர்கள் நவாபுடைய பல்லக்கு மட்டுக்கும் நடந்து போய்க் கிட்டே வந்தவுடனே நபாபு பல்லக்கின் பேரிலேயும் சின்னதுரை நின்றபடிக்கு ஆலிங்கனம் பண்ணிக்கொண்டு உபசாரம் பண்ணினார்கள்
பின்னோடே முசியே திலார்சையும் முசியே கில்லியாரையும் ஆலிங்கனம் பண்ணிக்கொண்டு உபசாரஞ் சொன்னவுடனே அவரவர் பல்லக்கின் பேரிலே அவரவர் ஏறிக்கொண்டு கூடத்தானே வந்தார்கள். வரச்சே நம்முடைய தோட்டம் தாண்டிப்புறம் உப்பாற்றண்டை வரச்சே துவக்கி இருபத்தொரு பீரங்கி போட்டார்கள். அந்த மட்டிலே அகதிக்கு வெளியே போட்டிருக்கிற கூடாரத்திலே வந்திறங்கி உட்கார்ந்தார்கள். அந்தச் சேதி அகதிக்குள்ளாகக் கெவுனிக்கு வெளியே போட்டிருக்கிற கூடாரத்திலே வந்திறங்கியிருக்கிற முசியே துய்ப்ளேக்சு அவர்களுடனே சொன்னார்கள்.
அவ்விடத்திலே யிருந்து ஸ்ரீ துரையவர்கள் புறப்படச் சம்பிரமம் என்னவென்றால், துரையவர்கள் கால்நடையாய் நடந்து வரச்சே இருபுறம் இரண்டு வெள்ளைக் குடையும், ஒரு சுருட்டியும் வெள்ளைப் பாவாடை விசறத்தக்கதாக இரண்டு புறமும் மயில் கொத்தும் ஈச்சம் சவுரியும் புடைசூழத்தக்கதாக அரிகையும் பிடித்துக்கொண்டு அவருக்கு முன்னே இருபுறமும் ஐம்பது பேர் சொல்தாதுகள் வரத்தக்கதாக மத்தியே சேருவைக்காரரும் காப்பிரிகளும் இசாபுதாரமாய்ச் சந்தடிகளை விலக்கிக் கொண்டு வரத்தக்கதாகச் சகல சம்பிரமத்துடனே நபாபுடைய வளவண்டையிலே போனவுடனே நபாபு எழுந்திருந்து ஆலிங்கனம் பண்ணிக்கொண்டு ஒருத்தருக்கொருத்தர் உபசாரம் பண்ணிக் கொண்டார்கள். துரையவர்களும் நபாபும் சந்திக்கச்சே 21 பீரங்கி போட்டார்கள்.
அதன் பேரிலே துரையவர்கள் இருந்துகொண்டு உங்கள் வீட்டுக்கு நீங்கள் வருகிறதற்குத் தடையென்னவிருக்கிறது? வாருங்கோளென்று கையைப் பிடித்து நபாபை அழைத்தார். அப்படியே வருகிறோமென்று சொல்லி ஸ்ரீ துரையவர்களுடைய பல்லக்கின் பேரிலே நபாபு மாபூசுகானும், மாபூசுகான் பல்லக்கிலே துரையவர்களும் ஏறிக்கொண்டு நவபத்து நாசுர மேளம் முழங்கத்தக்கதாக இரண்டு பேர் பல்லக்கும் சோடாய் வரத்தக்கதாக கெவுனிக்குள்ளே புல்லுக்கடை மட்டுக்கும் இருபுறமும் சொல்தாது பாறுக்குள்ளாகச் சகல சம்பிரமத்துடனேயும் புறப்பட்டுச் செம்மையாய்ப் பத்து மணிக்கு வந்து ஸ்ரீ துரையவர்கள் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள்.
நபாபு வந்து இறங்கினவுடனே கோட்டையிலே இருபத்தொரு பீரங்கி போட்டார்கள். அந்த மட்டிலே இரண்டு நாழிகை மட்டுக்கும் பேசிக்கொண்டிருந்து துரையவர்கள் வீட்டிலே யிருந்தபடியே குமிசெல் வீடாகிய விடுதிக்கு வந்தார்கள். வரச்சே துரையவர்களும் கூடவந்து விடுதியிலே விட்டுவிட்டுச் சற்றுநேரம் பேசிக்கொண்டிருந்த துரையவர்களும் மறுபடி வீட்டுக்குப் போனார்.
1747 பிப்ரவரி 20 மாசி 12 சோமவாரம் நாள்
இந்த நாள் நடந்த சேதி அதிசயமென்ன வென்றால்: நவாபு மாபூசுகான் அவர்களை துரையவர்கள் தம்முடைய வளவுக்கழைத்துக் கொண்டு போய் அவ்விடத்திலே யிருக்கப்பட்ட அதிசயங்களெல்லாம் காண்பித்தார்கள். அதன் பேரிலே மத்தியானம் சாப்பிட்ட பிற்பாடு துரையவர்கள் போய் நவாபை அழைத்துக்கொண்டு போய்த் தம்முடைய வளவிலே கொண்டு வந்து வைத்திருந்த வெகுமான தட்டுமுட்டுச் சாமான்களெல்லாம் நவாபு அவர்களுக்குக் காண்பித்தார்கள். அதுகளெல்லாம் கண்ணினாலே பார்த்துக்கொண்டு வந்து நடுச்சாலையிலே உட்கார்ந்தார். அதன் பேரிலே துரையவர்களும் வந்து கிட்டே உட்கார்ந்து கீழண்டை பக்கம் முசியே திலார்சு உட்கார்ந்தார்.
மற்றப்படி நபாபு பிறகே வந்த சுவாருகளெல்லாம் வரிசையாய் நாற்காலியின் பேரிலே உட்கார்ந்தார்கள். அதன் பேரிலே பன்னீர் கொண்டு வந்து செம்பைக் கொண்டு போய்த் துரையவர்களின் கையிலே கொடுத்தேன். அவர் வாங்கி மாபூசுகானுக்குக் கொடுத்து ஒரு தட்டிலே பாக்கு வெற்றிலையும் கொடுத்தார்கள். பாக்கு வெற்றிலை கொடுக்கச்சே இருபத்தொரு பீரங்கிப் போட்டார்கள். அப்போது நாலு மணியடித்துப் பாக்கு வெற்றிலை வாங்கிக் கொண்டவுடனே அனுப்புவித்துக் கொண்டு நபாபு மாபூசுகானவர்கள் ஒரு பல்லக்கிலேயும் துரையவர்கள் ஒரு பல்லக்கிலேயும் ஏறிக்கொண்டு புறப்பட்டார்கள். வெளியே புறப்படச்சே துரையவர்கள் வீட்டு மெத்தையின் பேரிலே துரும்பேத்தும் நாதசுர மேளமும் வாத்தியம் பண்ணினார்கள்.
இப்புறம் வாசற்படி தாண்டினவுடனே வெள்ளைக்காரர் பாறு வைத்துத் தம்பூர் அடித்துக்கொண்டு ஆனையின் பேரிலே நிசான் பிடித்துக்கொண்டு போகத்தக்கதாக நபாபு பல்லக்குத் தென்னண்டையும் துரையவர்கள் பல்லக்கு வடவண்டையும் சோடு பல்லக்காய்ப் போட்டுக்கொண்டு இருபுறமும் வெள்ளைச் சாமரம், மயில் கொத்து, ஈச்சஞ்சவுரி, வெள்ளைக் கொடை, நாதசுர மேளம், புல்லாங்குழல், நாதசுர மிப்படியாகச் சகல சம்பிரமத்துடனே முன்னே மாயே சிப்பாய்களும், அதன் பிறகே பாளையக்காரருடைய சேவகரும், அதன் பிறகே நபாபு பல்லக்கும் துரையவர்கள் பல்லக்கும் வரத்தக்கதாகவும் அதன் பிறகே குதிரைச் சுவார்களும் அதன் பின்னோடே பாறுமாக இந்தப்படிக்குச் சகல சம்பிரமத்துடனே பயணம் புறப்பட்டுப் போகச்சே கடைத்தெருவிலே இருக்கிற சுங்குவார் கிடங்கு முதற்கொண்டு கெவுனிமட்டு மிப்புறமுஞ் சொல்தாதுகள் பாறு வரிசையாய் விற்கத் தக்கதாக நபாபு மாபூசுகான் அவர்கள் பயணம் புறப்பட்டுப் போனார்கள்.
போய்க் கெவுனி தாண்டியவுடனே துரையவர்கள் செலவு வாங்கிக் கொண்டவுடனே கொத்தளத்தின் பேரிலே இருபத்தொரு பீரங்கிப் போட்டார்கள். அலங்கத்துக்கு வெளியே அகறத்திற்குள்ளாக வாசற்படிக்கு இருபுறமும் சுவரின் பேரிலே சொல்தாதுகள் வரிசையாய் நிற்கத்தக்கதாக அலங்கத்தின் பேரிலே இரு பாரிசமும் மாயே சிப்பாய்கள் நிற்கத்தக்கதாக நபாபு அனுப்புவித்துக் கொண்டு அப்புறம் நடந்தார்கள். நான் போய் அலங்கத்தின் வெளியிலே போட்டிருக்கிற கூடாரத்திலே போய் நான் நின்றேன். அதன் பேரிலே மாபூசுகான் அவர்கள் வெளியே புறப்பட்டவுடனே நான் போய் அனுப்புவித்துக் கொண்டேன். அவர் அப்புறம் நம்முடைய தோட்டத்துக்கு அப்பாலே போகிற மட்டுக்கும் துரையவர்கள் அகரத்தின் மேட்டின் பேரிலே ஏறிக்கொண்டு பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர் அப்புறம் போய்விட்டார். பிற்பாடு துரையவர்கள் புறப்பட்டு வளவுக்குப் போய்விட்டார்கள். நபாபு பிறகாலே மகமதாக்கலும் கூடப் போனார். அவரை நிறுத்திக் கொண்டேன். அதேனென்றால் அவரிந்தக் காரியத்திலே பிரயாசைப்பட்ட படியினாலேயும் பிலம்பாய் வெகுமானம் பண்ணி அனுப்புவிக்க வேணுமென்று நிறுத்தி வைத்தோம்.
அசறத்து மாபூசுகானவர்களுக்குக் கொடுத்த வெகுமான வயணம்:
பெரிய கண்ணாடி 3
மணிக்கூண்டு 1
வெள்ளி போட்ட பெரிய துப்பாக்கி 2
பித்தளை போட்ட பெரிய துப்பாக்கி 2
இரட்டைக் குழல் துப்பாக்கி 2
வெள்ளி போட்ட பிஸ்தோல் 4
பித்தளை போட்ட பிஸ்தோல் 4
சிகப்பு முகமல் கிசம் 160
எக்தோபு பொன் பூ போட்டது சீர்மை சுருட்டி 87
இங்கிலீசு சட்டம் சகலாத்து 10
பிராஞ்சு சட்டம் சகலாத்துக் கட்டு 10
பன்னீர் சொம்பு 18
சீனாபெட்டி விந்தை விந்தையாய் காணுகிற பெட்டி 2
புட்டே தார் சகலாத்து தீவாசு 10
மெழுகுவர்த்தி 140
மெழுகுவர்த்தி வைக்கிற வீதர் கூண்டு 6
நச்சுக்குழல் சின்னது 10
நச்சுக்குழல் பெரியது 1
இருபுறமும் இரண்டு வர்ணமாயிருக்கிற சகலாத்துச் சிப்பம் 1
கற்கண்டு பவுண்டு 290
பொன்கலாம் இஸ்பதான் சீர்மை இது ‘0’ மார்க்கு அவுன்சு 1
சீர்மை பொன்கலாம் மார்க்கு 13 ஒ 4 4
சீர்மை வெள்ளி கலாம் 9 அவுன்சு 4
சூரிகத்தி 12
சின்னக் கண்ணாடி 7
ஆகுதே மெல்லிஸ் சீசா 24
ஆகுசம்பீரியேல் சீசா 24
ஆகுதுங்கிரி சீசா 24
ஆனைக்குட்டி 1
சங்கீதப் பெட்டி 1
பொன்வேலை செய்த சூரி கத்தி 1
உக்கா மேலே சுங்கான் மேலே மூடுகிற கொட்டி பொன்னாலே பண்ணினது 1
ஆக தினுசு வராகன்.
நபாபு மாபூசுகான் தம்பி நசமல்லிகானுக்குக் கொடுத்தது:
இரட்டைக் குழல் துப்பாக்கி 1
துப்பாக்கி 1
சூரிகத்தி 8
சிகப்பு முகமல் கிசம் 17
ஏகதோப்பு பொன் பூ போட்டது சீர்மை சுருட்டி 12
வெள்ளி சீர்மை கலாமார்க்கு 4
புட்டேதார் சகலாத்து திவர்சு 4
விந்தை விந்தையாய் காணுகிற சீனா பெட்டி 1
பச்சை நிகமல் கிசம் 15
சகலாத்துக் கட்டு 3
பொன்கலாம் சீர்மை பத்து மார்க்கு 7
இசுபஹான் கலாம் மார்க்கு 2 அவுன்ஸ் 4
ஆக தினுசு கிரயம் கூடின வராகன்
இந்தப்படிக்கு வெகுமானம் கொடுத்தார்கள். அதுகளை வாங்கிக் கொண்டு ராசியாய் இற்றைநாள் சாயங்காலம் நாலு மணிக்குப் பயணம் புறப்பட்டுப் போய் விட்டார்கள்.
1747 பிப்ரவரி 25 மாசி 17 சனிவாரம்
மத்தியானம் தண்டுக் கதலி நபாபுக்கும் துரைக்கும் சமாதானமானதற்குத் திங்கட்கிழமை இங்கே பண்டிகைக் கொண்டாடுகிறாப் போலே சென்னப்பட்டணத்திலேயும் பண்டிகைக் கொண்டாடச் சொல்லி நாலு மணி வேளை முசே தெப்பிரமேனி பேருக்குக் காகிதமெழுதி டபாலிலே நாளைய சாயங்காலம் கொண்டுபோய்க் கொடுக்கச் சொல்லி தாக்கீது பண்ணிக் கொடுத்தனுப்பச் சொன்னபடிக்குக் கொடுத்தனுப்பினேன்.
(தொடரும்)