ஆனந்தரங்கப்பிள்ளையின் நாட்குறிப்பில் இற்றைநாள் (26.02.1747) பதிவு என்பது மிகவும் நீண்டதொரு பதிவாகும். பத்துப் பக்கங்களையும் கடக்கிறது இந்தப் பதிவு. ஆற்காடு நவாப் வந்து சமாதானமாகிச் சென்ற ஆறாவது நாள் இக்குறிப்புகளை எழுதியிருக்கிறார் ஆனந்தரங்கர்.
பல இடங்களில் நிறுத்தற்குறி இல்லாமல் நீண்டு செல்லும் வாக்கியங்கள். அயற் சொற்களின் தாராளப் பயன்பாடு. இது, வாசகர்களுக்கு சற்று அயற்சியை ஏற்படுத்தலாம். இவற்றின் ஊடாக இரண்டு விஷயங்கள் குறித்து இங்குப் பேசுகிறார் ஆனந்தரங்கர்.
ஒன்று, சென்னப்பட்டணம் மீதான பிரெஞ்சு வெற்றி. இதற்குக் காரணம், ஆளுநர் துய்ப்ளேக்ஸ் சூரியனாகவும் ஆனந்தரங்கர் சூரியனின் காந்தியாகவும் இருந்ததுதானாம்.
அடுத்து, ஆற்காடு நவாப் மாபூஸ்கான் வந்து சமாதானமாகிச் சென்றது. இதுகுறித்து மிகவும் விரிவாகவே எழுதியிருக்கிறார் பிள்ளை. சென்னையில் பிரெஞ்சுக்காரர்களிடம் அடிபட்டு ஓடிய ஆற்காடு நவாபு, படைதிரட்டிக் கொண்டு புதுச்சேரி அருகே முகாமிடுகிறார். இதற்காக அவர் ஆற்காட்டில் இருந்து புறப்படும் போது அவரது தந்தை அன்வருதிகான் இப்படி எச்சரித்தாராம்: புதுச்சேரி பட்டணத்தை சாதிக்கிறதற்கு இவ்வளவு ஆத்திரம் கூடாது. அங்கே இருக்கும் ஆனந்தரங்கப்பன் நினைத்தால் இரண்டு நாழிகையில் ஆற்காடு காணாமல் போகும்.
இதையும் மீறி புறப்பட்டு வந்த மாபூசுகான், புதுச்சேரியாரின் பலத்தை உணர்கிறான். ஆனந்தரங்கப் பிள்ளையின் தந்திர சாமார்த்தியத்தை மைலாப்பூரில் எதிர்கொண்டது அவன் நினைவுக்கு வருகிறது. ஆனந்தரங்கப்பிள்ளை, கோட்டைக்கு வெளியே இருப்பவர்களிடம் சற்றுக் கண் காட்டினால் தமது படைகள் காணாமல் போய்விடும் என்பதையும் தனது தந்தையின் எச்சரிக்கையையும் உணர்கிறான். சண்டைக்குப் போவதைவிட சமாதானமாகிப் போவதே நல்லது எனும் முடிவுக்கும் வருகிறான். இதற்கு நவாபு முன்வைத்த ஒரே நிபந்தனை: என்னை அழைப்பதற்கு ஆனந்தரங்கப்பிள்ளை இங்கு வர வேண்டும்.
இந்தத் தகவல் புதுச்சேரிக்குச் செல்கிறது. ஆனந்தரங்கரும் புறப்படுகிறார். ஆளுநர் துய்ப்ளேக்சுக்கு இவரை அங்கு அனுப்புவதில் உடன்பாடு இல்லை. ‘நம் கையினால் அவமானப்பட்டவன் மாபூசுகான். இத்தனைக்கும் நீதான் காரணம் என்று அவனுக்கு நன்றாகத் தெரியும். எங்களுக்கு எல்லாமுமாக இருப்பது நீதான். உன்னை எப்படி அனுப்புவது?’ என்று கேட்டிருக்கிறார். அவரைச் சமாதானப்படுத்திவிட்டுப் புறப்படுகிறார் பிள்ளை.
இவர் வருகிறார் எனும் தகவல் அறிந்து மாபூசுகானுக்கு பெரிய ஆச்சரியம். ‘ஆனந்தரங்கப்பிள்ளையின் தைரியம் உலகத்தில் வேறு யாருக்கும் வராது’ என்று உடன் இருப்பவர்களிடம் சொல்லிச் சந்தோஷப்படுகிறார்.
பிள்ளையை நேரில் பார்த்த நவாபு ஆலிங்கனம் செய்து வரவேற்கிறார். ‘உன்னைப் போல் ஒருத்தன் பாதுஷா அல்லது நிசாமிடம் மந்திரியாக இருக்க வேண்டும். பிரெஞ்சுக்காரர்கள் செய்த அதிர்ஷ்டம் நீ அவர்களுடன் இருப்பது’ என அங்கலாய்க்கிறார். பின்னர், ‘உன்னை நம்பி நான் புதுச்சேரி வருகிறேன்’ என்று புறப்படுகிறார். அந்த நேரம் எப்படி இருந்தது தெரியுமா? ‘ஆனந்தரங்கப் பிள்ளையாகிய பிரம்மதேவன் பிரதிஷ்டையாகி சகல சனங்களுக்கும் சீவாதாரை வார்த்தது போல் இருந்தது.’
இந்தக் காரியங்களால் டில்லி பாதுஷா முதற்கொண்டு ஏரோப்பா ராச்சியம் வரைக்கும் பிள்ளையின் கீர்த்தி பரவியது. ‘இது பத்து லட்சம் வராகன் செலவழித்தாலும் வராத கீர்த்தி’ என ஆயாசப்படும் ஆனந்தரங்கர், ‘இந்தக் கீர்த்தி எல்லாம் என்னுடைய சாமார்த்தியத்தால் கிடைத்ததில்லை: சுவாமி கடாட்சத்தால் கிடைத்தது’ என்றும் அடக்கத்துடன் குறிப்பிடுகிறார்.
இக்குறிப்புகள் ஒருவகையில், ஆனந்தரங்கர் தன்னைப் பற்றி பெருமையாகத் தானே சொல்லிக் கொள்பவையாகத்தான் இருக்கின்றன. ஆனால் இத்தனையும் சொல்லிவிட்டு, ‘தன் பெருமையைத் தான் எழுதிக் கொள்ளுகிறது அப்புத்தனமான படியினாலே சூசனையாய் எழுதி வைத்தேன்’ என்று ஆனந்தரங்கர் சொல்வது இதில் உச்சக்கட்டம்!
1747 பிப்ரவரி 26 மாசி 18 ஆதிவாரம்
சுவாமியுனுடைய கிருபா கடாக்ஷத்தினாலே கும்பினீர் காரியத்துக்கு என்னை நேமிக்கவு மிந்த கலாபம் வந்ததற்கும் நான் சமஸ்தான காரியமும் வந்ததுக்கும், ராத்திரி பகல் சகல சாக்கிரதையும் பட்டுச் சமஸ்த யோசனையுஞ் சொன்னதற்கும் சருவசீவ தயாபரனுடைய கடாக்ஷத்தினாலே யிந்த இராச்சியத்துக்கு எசமானா யிருக்கிறவன் தானே சண்டைக்கு வந்து அபசெயப்பட்டு அப்பால் உங்கள் சமாதானம் வேணும் என்று பலவந்தமாய் வந்தானே, வந்து நம்முடைய பிரபு இருக்கிறவிடத்துக்கு வந்து பிரார்த்திக்க வந்த யோகத்தையும் அப்பால் சமாதானம் பண்ணிக்கொண்டு பிரபு முன், ஆதியிலே எந்தப் படிக்கு என்னுடனே சொல்லியிருந்தானோ அதிலேயும் அனேகம் பத்துப் பங்கு குறையத்தக்கதாகச் சம்மதித்துக் கொண்டு கொடுத்த வெகுமானத்தையும் வாங்கிக் கொண்டு பிரபுவின் சம்ஷமத்துக்கு வந்தவிடத்திலே நம்முடைய பிரயாசையும் காரிய சவரணையும் தம்முடனே பேசின சாதுரியம் நியாயச் சம்மதியும் சகலமும் பிரபுவுக்குக் கொடுத்த வெகுமானத்தையும் வாங்கிக் கொண்டு போன கீர்த்தி எனக்குக் கிடைத்தாற் போல முன்னூற்றுக்காத வழிக்குள்ளாகத் தெற்கு வடக்கு டெல்லி முதல் மலையாளப் பரியந்திரமும், கிழக்கு சமுத்திரம் முதற்கொண்டு மேற்கு சமுத்திரம் பரியந்திரமிதற்குள்ளே யிருக்கப்பட்ட சமஸ்தானாபதிகள், தோரா துரைகள், பெரிய மனுஷாள் சகல சனங்களும் ஆனந்தரங்கப்பன் போலே தன் தந்திரத்திலேயும் புத்தி சாதுரியத்திலேயும் தைரிய விதரணங்களிலேயும் சகல அம்சையிலேயும் இப்படிக்கொத்த புருஷன் நாம் பார்த்த பேரிலேயுங் கேள்விப்பட்டிருக்கிற பேரிலேயும் ஒருத்தரையும் பார்த்ததுமில்லை கேள்விப்பட்டதுமில்லை என்று சகலமான பேரும் கொண்டாடத்தக்கதாக எனக்குக் கீர்த்தி கிடைத்தாற் போலே ஒருத்தருக்குங் கிடைத்ததில்லை.
இந்தச் சேதிகளெல்லாம் விஸ்தாரமாக ஆற்காட்டிலே யிருக்கிற வர்த்தகர், வீனிசுகள், கும்பினீசுகள் வர்க்கநாபாதுகள் எழுதி நிசாமுக்கனுப்பி, நிசாம் மசுக்கரையிலே யிருக்கப்பட்டவர் கானிசுகள் அதை தஸ்திரத்திலே தாகலா பண்ணி வார்சா பாதுகள் அனேகமெழுதி டில்லி சாத்தாரா, பங்களா, காசி, சிக்கல் தேசங்களுக்கும், வர்க்கா பாதுகளெழுதி அனுப்புவிக்க அவ்விடங்களிலே யிருக்கிற துரைகள், அமீர், வசீர், அமுல்தார், சுபேதார் பெரிய சாவுகாரிகள் சகல சனங்களும் பார்த்துக் கொண்டு ஆத்திரத்தை ஆச்சரியத்துடனே யிப்படி நடந்த சாமார்த்தியம் எங்கும் கண்டதுமில்லை, நாங்கள் கேட்டதுமில்லை. அதை எழுதினாலோ என்றால் இராச்சியத்திலேயும் யுத்தம் பண்ணுகிற பேருமுண்டு. சந்தி சமாதானம் பண்ணுகிற பேருமுண்டு. அந்த சந்தி ஒசந்த கையாய் வெகுதனத்துடனே யிருக்கிற பேருக்குத் தாழ்க்கையா யிருப்போர் சந்திப்பேசுவைத்து தனத்தினாலே அவர்களுக்கு விசேஷமாய் ஆசை சொல்லி, அதன் பேரிலே சந்தி பண்ணுவிப்பார்கள்.
ஆகையால், அதெல்லாம் ஆச்சரியமல்ல. இப்போது இந்த ஆற்காட்டு சுபேதாரனுக்கும் புதுச்சேரி பிராஞ்சுக்காரனுக்கும் ஆனந்தரங்கப்பிள்ளை என்கிற மகா ஓநாவான புருஷன், அந்தப் புருஷன் புதுச்சேரியிலே யிருந்த படியினாலே மகத்தான காரியமாய் வந்து தீவானத்துப் பகைகளும் வந்து மூண்டதற்கும் வெண்ணையிலே மயிர் வாங்கினாப் போலேயும், சூரிய உதயம் கண்ட பனி நீங்கினாப் போலேயும் சுனாயாசமாய்ச் சமாதானம் பண்ணிவைத்துச் சகல தேசங்களிலேயும் கீர்த்தி கொண்டாடத்தக்கதாகப் பிரதிஷ்டை வந்தது.…
… அதன் பேரிலே புதுச்சேரியிலே யிருக்கிற ஆனந்த ரங்கப்பன் ஒருத்தனும் புதுச்சேரி பிரபுவும் ஒரு சூரியனும் ஆனந்த ரங்கப்பன் சூரியனுடைய காந்தியுமாய்ப் பிரகாசித்து யுத்த சன்னாகத்துக்கார் ஆரம்பித்துக்கொண்டு சகல முஸ்தீதுகளும் பண்ணிக்கொண்டு தங்கள் சொந்தக் கப்பல் மசுக்கரையிலே யிருந்த எட்டு கப்பலை அழைப்பித்துக் கொண்டு ஆனைக் கூட்டத்தில் சிங்கம் பிரவேசித்தாப் போலே போய்ச் சென்னப்பட்டணத்திலே பிரவேசித்துக் கோட்டையைச் சுற்றிக்கொண்டு ஒரு நாளையிலே அதிலேயிருந்த துரை ஆலோசனைக்காரர், சாவுகாரிகள், பெரிய மனுஷர் சகலமான பேரையுந் திக்குமுக்கட்டாய்ப்பண்ணி அந்தப் பட்டணத்து மேலேயும் நெருப்பு மயமாய் நெறித்து மறுநாளெல்லாம் இந்த புரட்டாசி 6உ பகல் 12 நாழிகைக்குக் கோட்டையைச் செயித்துத் தங்கள் சண்டாவையும் கொண்டுபோய்ப் போட்டுப் பட்டணமெல்லாம் கைவசம் பண்ணிக்கொண்டு நக்ஷத்திர தேசுகளெல்லாம் செகத்திலே யிருக்கிற பேர்களுக்குத் தெரியாதபடிக்கு, சூரியனுடைய காந்தியை செகமெல்லாம் பரவத்தக்கதாகச் சூரியனப்படி விளங்கினார்கள்.
அதன் பேரிலே சென்னப்பட்டணத்து வர்த்தகர் காரியக்காரரிலே சிறிதுபேர் தப்பி ஓடிப்போய்க் காடுகள், மலைகள் சேர்ந்து ஒளிந்திருந்து கொண்டு அங்கேயிருந்து ஆற்காட்டுக்கு ராசாவட்டங்களனுப்பி,. உங்களுக்கு வெகு திரவியங்கள் தருகிறோம். தண்டு கற்கக் கொடுக்கிறோம். நாங்களும் முன்னின்று சண்டை கொடுக்கிறோம். நீங்கள் தண்டு சேகரித்துப் பாளையக்காரரையுஞ் சேகரித்துக் கொண்டு வரவேணுமென்று தீவானத்தாருடனே பேச, அவர்கள் திரவியா பேக்ஷையினாலே முன் தாங்கள் எழுதியனுப்புவித்த நியாயத்தையும் விட்டுவிட்டு வெகு தனங்களுடனே மாபூசு சென்னப்பட்டணத்தின் மேலே இறங்கிச் சுற்றிக்கொண்ட விடத்திலே புதுச்சேரியார் அந்த எட்டுக் கப்பலிலேயும் சென்னப்பட்டணத்திலே அகப்பட்ட திரவிய சாமான்களெல்லாம் தங்கள் சீர்மைக்கு அனுப்பினாப் போலே யனுப்பிப் போட்டு இங்கிலீசுக் கப்பலைச் சண்டைபண்ணி முழுக்கடிக்க அதுபோகையிலே அகப்பட்ட கப்பலை இரண்டு மூன்று உருவை வைத்துக்கொண்டு சமுத்திரத்திலே இங்கிலீசுக்காரர் கப்பலென்கிற பேரில்லாமற் படிக்கு அடித்துத் துரத்திப்போட்டு இங்கிலீசுக்காரருக்கு உபனுலாயிருந்த ஒலாந்துக்காரரையும் அவர்கள் கப்பல்களையும் பிடித்து,
அவர்களையும் இதற்கிருந்தாளாய்ப் பண்ணிக்கொண்டு கரைமேலே புதுச்சேரிக்கும் சென்னப்பட்டணத்துக்கும் பன்னிருகாத வழி ஐந்நூறு பேருடனே புறப்பட்டு மயிலாப்பூரிலே அன்வருதிகானுக்கு மூத்தப் பிள்ளையாயிருக்கிற மாபூசுகான் ஆறாயிரங் குதிரையும், முப்பதினாயிரம் ஷத்தோமும் (காலாட்படை) இரண்டாயிரம் சேசாலும் (Rocket) பதினையாயிரம் துப்பாக்கியும் முப்பது பீரங்கியுமிது முதலாகிய சாமான்களுடனே தான் கூட தண்டிறங்கிச் சுற்றிலுமோற் சாமம் மற்றதுக் கொண்டு வெகு சாக்கிரதையாக இருக்கிற தண்டிலே சூரிய உதய வேளையிலே போய் விழுந்த ஒரு நாழிகைக்குள்ளே தண்டெல்லாஞ் சின்னாபின்னமாகத் தக்கதாக அடித்து வெகுவாய்க் குதிரைகளையும் சனங்களையும் சங்காரம் பண்ணி அனேகங் குதிரைகளையு மொட்டைகளையும் நவபத்துக்காலன் செண்டாவும் காவந்து ஏறியிருந்த பல்லக்கும் தலைப்பாயும் கசானா மீது முதால் தெல்லாம் பாளையம் தமாம் கொள்ளையிட்டுத் தண்டையும் முக்காத வழி துரத்திப் பிழைத்துப் புனர்ச் சன்மமென்று தப்பி ஒருத்தன் போனவழி ஒருத்தனுக்குத் தெரியாமல் ஓடிப்போகத்தக்கதாகத் துரத்திச் சகல செயத்துடனே சென்னப்பட்டணஞ் சேர்ந்தார்கள்.
அதன் பேரிலே பாதுஷா தீவானத்தைக் கூட இத்தனை அடித்த போதே இனிமேலே புதுச்சேரி வாங்காமல் விடத்தக்கதில்லை யென்று வெகு ரோஷத்துடனே தலைப்பாகு கூட அகப்படாமல் அன்வருதிகான் பிள்ளை மாபைசுகானும் அவன் தம்பி மமுதல்லிகானும் தகப்பனாகிய அன்வருதிகானுடனே சொன்னவிடத்திலே,
‘புதுச்சேரியார் மெத்தப் பொல்லாதவர்கள். வெகு க்ஷாத்திரவந்தர்கள். அதில் புருஷரத்தினமா யிருக்கிற ஆனந்த ரங்கப்பிள்ளை ஒருத்தன் கூடியிருக்கிறான். ஆனபடியினாலே அந்தப் புதுச்சேரிப் பட்டணம் சாதிக்கிறதற்குப் பாதுஷாவாலேயுங் கூடாது. அந்தப் பட்டணத்தைச் சாதிக்கிறோமென்று ஏன் ஆத்திரப்படுகிறது. அந்த ஆனந்த ரங்கப்பிள்ளை புத்திக்கு இந்த ஆற்காடு சாதிக்க வேணுமென்று தோன்றினால் நாழிகை இரண்டிலே சாதிப்பான். அது நியாயமல்ல. தெய்வத்துக்கு ஒப்பாவிராது. இன்னும் வெருமனுடனே இருக்கிறான். ஆனபடியினாலே நீங்கள் அந்த வழியில் போகிறது சங்கதி யென்னென்று’ வேண விதத்திலே புத்தி சொன்ன விதத்திலேயும்,
அவர் குமாரன் மாபூசுகான் தனக்கு வந்த அவமானத்தினாலே அந்தப் புத்தி தகப்பன் சொன்னதெல்லாம் சம்மதிப்படாமல், ‘ஒன்று தன் பிராணன் போகிறது. அல்லவென்றால் புதுச்சேரி சாதிக்கிறது. இதற்கு நீர் தடை சொன்னால் இந்தட்சணங் கழுத்திலே புடவையைக் கிழித்துப் போட்டுக்கொண்டு பக்கிரியாகி மக்காவுக்குப் போய்விடுகிறேன்’ என்று சொல்ல; ஆனால் உன் மனது என்று தகப்பன் சொல்லி அதன் பேரிலே மாபூசுகானும் மமுதல்லிகானும் ஆற்காட்டிலே யிருக்கிற சகல குதிரைச் சுவார்களையும் சேகரித்துக் கொண்டு வெகுதனங்களையும், பாளையக்காரரையும் சேகரித்துக் கொண்டு கடலூர் தேவனாம்பட்டணத்திற்கு மேல்புறமாய் வந்து பாளையமிறங்கி ஆறாயிரங் குதிரையும் இருபதினாயிரம் மஷத்தோமமும் பாளையக்காரர் சைனியத்திலே இருபதினாயிரம் பேரும் வந்து இறங்கினார்கள். இவர்கள் தேவனாம்பட்டணத்தாரையும் கூட சேகரித்துக் கொண்டு பாளையம் பலத்து இறங்கினார்கள்.
அப்படி மேல்புறமாய் பெரிய தண்டு தீவானம் இறங்கியிருக்கக் கீழ்ப்புறமாகிய தேவனாம்பட்டணத்துக் கோட்டையிலே வெள்ளைக்காரர் இரண்டாயிரம் பேரும் தமிழர் ஐயாயிரம் பேரும் வெகு முஸ்தீதாக நெருப்பு மயமாயிருக்கிறதிலே புதுச்சேரியார் ஆயிரம் பேர் வெள்ளைக்காரரும் மாயே சிப்பாய்களுமாகப் புறப்பட்டு ஐந்து பீரங்கியுங் கொண்டு ஆட்டுக்கறி கையிலே பெரிய புலி விழுந்தாப் போலே நடுவிலே போய்ப் பூந்து தீவானத்துத் தண்டுமேலே திரும்பி வெகு குதிரைகளையும் கால்பலன்களையும் கொன்று, தளங்களெல்லாம் சின்னாபின்னமாய்ப்பண்ணி, நபாபுக்குப் பட்டத்தானையாயிருக்கிறதை ஒரு குண்டினாலே கபாலம் பிளந்து கூக்குரலிட்டுக் கொண்டு பத்துநாழி வழி ஓடி சாகத்தக்கதாக அடித்துச் சகல செயத்தையும் அஞ்சிப்போன சனங்களுக்கு ஒருத்தருக்காகிலும் காயம் அன்னிலே புதுச்சேரியை வந்து சேர்ந்தார்கள்.
அதன் பிறகு மாபூசுகான் இங்கிலீசுக்காரரை அழைப்பித்து அவர்களுடனே சொன்ன சேதி: பிராஞ்சுக்காரருடைய சவுரியப் பிரதாபமும் ஆனந்த ரங்கப்பிள்ளை யொருத்தன் அவர்களிடமாய்ச் சேர்ந்திருந்து கொண்டு அவன் நடத்துவிக்கிற தந்திர சாமார்த்தியமும் நமக்கு மைலாப்பூரிலே தானே நன்றாய்த் தெரியும். அப்படியிருக்க உங்கள் பேச்சுகளையும் உங்களையும் நம்பி நம்முடைய தகப்பனார் சொன்ன புத்தியுந் தட்டிவிட்டு நீங்கள் இங்கே கீழ்ப்புறமாய் இருக்கிறபடியினாலே சமீபத்திலே நீங்கள் வந்து நிர்வாகம் பண்ணுவீர்களென்று முழிகண் திருடன் கிணற்றிலே விழுந்தாப் போலே இங்கே வந்து பாளையம் இறங்கினோம்.
சென்னப்பட்டணத்தைப் போலொத்த பட்டணமும் அதற்குத் தக்கன சாமான்களும் கையிலே யிருக்கிறதிலே அற்ப பலனுமன்னிலே புதுச்சேரியார் கொஞ்ச பலனோடே வந்து ஒரு நாழிகையிலே கோட்டையைக் கட்டிக்கொண்டு போனான். அப்படிக்கொத்த இங்கிலீசுக்காரர்கள் நீங்கள் உங்கள் கிட்டே காரியரும் நீங்கள் திராசு பிடிக்கிறபோது உங்களுக்கு நிறை கல் எடுத்துக் கொடுக்கத் தக்கன நேரே யல்லாமல் டச்சமா வேளையிலே தன் தந்திர சாமார்த்தியம் அந்த ஆனந்தரங்கப் பிள்ளைக்கு ஒருத்தனுக்கே யல்லாமல் இவர்களுக்குத் தெரியுமாவென்று இது முதலாகிய உத்தாரங்களை எல்லாம் அவர்களுக்கு ரோஷம் வரத்தக்கதாய்ச் சொல்லி அதன் பேரிலே இங்கிலீசுக்காரர் சொன்ன சேதி:
எங்களுக்கு விசேஷமாய்க் கப்பல் வந்தாலன்னியில் நாங்கள் புதுச்சேரியார் மேலே எதிர்த்துப் போகத்தக்கதில்லை. நீங்களெங்கள் பேரிலே இத்தனை கோபம் பண்ணிக்கத் தேவையில்லை. இன்று முதல் தீவானம் தண்டுக்கு முன்னதாய் நாங்கள் இறங்கினோம். உங்கள் தண்டு செலவுக்கு நீங்கள் சொன்னபடிக்குத் தட்டுமுட்டுச் சாமானாகிலும் விற்றுக் கொடுக்கிறோம் என்று சொல்லி அவர்களும் கோட்டைக்கு வெளியிலேயும் தண்டுக்கு உபளுவாய் வந்திறங்கி யிருக்கிற இதுவல்லாமல் மாபூசுகானும் அவன் தம்பி மமுதல்லிகானும் திருச்சினாப்பள்ளி முதலான ஸ்தானங்களுக்கும் எழுதியனுப்பித்து அவ்விடத்திலே யிருக்கிற குதிரை ராணுவத்தையும் சேகரித்துக் கொண்டு புதுச்சேரிக்கு சமீபத்திலே வந்திறங்கி வெகு பத்திரமாய் இருந்தவிடத்திலே,
ஆனந்த ரங்கப்பிள்ளை இத்தனை அதிருக்கும் மனது சஞ்சலியாம வித்தனை தண்டையும் ஒரு திரணமாக வெண்ணி புதுச்சேரி துரைக்கு எப்படி தைரியஞ் சொல்ல வேணுமோ அப்படச் சொல்லி ஊரிலே யிருக்கிற சனங்களும் மலைக்காத படிக்கு எந்தெந்த மார்க்கங்களிலே ஆராரை நேமிக்க வேணுமோ அவர்களை நேமித்து தானும் ராத்திரியிலும் பகலிலும் நித்திரை ஆகாரமில்லாமலும் வெகு சாக்கிரதையாய்க் கோட்டையைச் சுற்றிலும் மூன்று நாழிகை வழிக்கு அகழிக் கோட்டையாய்ப் போட்டுக் கொண்டு லக்ஷம் குதிரை வந்தாலும் பரவாயில்லாமற் படிக்குச் சிறுபிள்ளைகளுக்கும் கூட தோன்றத் தக்கதாக வெகு சபுருஷத்துடனே க்ஷாத்திரமே வகித்து தைரிய லக்ஷ்மியுடனே இருக்கிற நடவடிக்கை எல்லாம் மாபூசுகான் அறிந்து,
செகத்திலே இவனல்லவோ புருஷன்! இவன் தைரியமிவனை வெல்லுகிறதற்கு ஒருத்தராலேயும் ஆகாது. நம்முடைய தகப்பனார் சொன்ன வார்த்தை நிசமே. சரி! நாமெத்தனை நாளிருந்தாலும் புதுச்சேரிக் கோட்டையைக் காணக் கண்ணெடுத்துப் பார்க்கப் போகாது. நம்முடைய பாளையம் இருக்கிற அபந்தரைக்கும் இங்கிலீசுக்காரர் நம்முடைய தண்டு மறைவிலே வந்து திகிலெடுத்திருக்கிறதற்கும் சதி பார்த்து ஆனந்தரங்கப் பிள்ளை கோட்டைக்கு வெளியே யிருக்கிற சனத்திலே இரண்டு முகத்து சனம் இரண்டாயிரம் பேரை சற்று கண் காட்டிவிட்டானானால் இரண்டு நாழிகையிலே நம்முடைய தண்டு முழுகி நமக்கும் வடகம் வரும்.
ஆகையினாலே இனிமேல் நாம் வெருமனே அரைநாழியாகிலும் இருக்கப் போகாது. இந்த இங்கிலீசுக்காரரெங்கே போனாலென்ன? இனி ஆர் பேச்சும் நாம் கேட்கத் தேவையில்லை. ஆரென்ன சொல்லிக்கொண்டாலும் சொல்லிக் கொள்ளட்டும். நம்முடைய பிராணன் பிழைத்து நம்முடைய தலைப்பாகையும் பிடுங்கிக் கொண்டானே அவன் கையினாலே தான் நம்முடைய பாகையுங் கட்டுவித்துக் கொண்டு சினேகம் பண்ணிக்கொண்டு தண்டு வாங்கிப் போகிறதே பெரிய காரியமென்று தீர்க்காலோசனை பண்ணிக்கொண்டு இதற்கு ஆனந்தரங்கப்பிள்ளை கிட்டே போய் அவனுடனே பேசி வர்த்தகன் போகிறானென்றும் விசாரித்து அதற்குள்ளே உளவனாயிருக்கிற மமுதாக்கல் என்கிறவனைப் பயணப்படுத்தி அனுப்புவித்துப் பேசுவித்த விடத்திலே அந்த ஆனந்தரங்கப்பிள்ளை மகா போதனையான படியினாலே எதிர்த்தவனுடனே காரியமே யல்லாமல் வணங்கின பேருடனே க்ஷாத்திரம் பண்ணவேண்டிய தென்னவிருக்கிறது. ஒரு நாளைக்கு நாலு நாழிகை முச்சட்டையாய் நபாபு முன்னே சண்டை விளையாட்டுக் காண்பித்துப் போடலாம் என்றிருந்தோம் இப்போதும் அவர் மனதிலே அப்படித் தேவையில்லை யென்கிறதாகத் தோன்றியிருந்தால் நபாபு அவர்களுக்கு எப்படி சம்மதியோ அப்படி நடந்து கொண்டு வருகிறது எங்களுக்கு விகிதமான காரியம் வேறல்லவே.
நபாபு மாமூசுகான் அவர்கள் இங்கிலீசுக்காரருடைய பலமும் எங்கள் துரை அவர்களுடைய பலமும் பார்க்க வேணுமென்று தமாஷுனாலே பார்த்தார்கள். அந்தச் சென்னப்பட்டணத்துக் கூட்டமெல்லாம் ஒரு மலையாகிய செத்தேயும் பிரான்சுக்காரரென்கிற பேர் ஒரு நெருப்பு என்று யோசனை பண்ணாமல் அவர்கள் இங்கிலீசுக்காரர் சொல்லுகிற பேச்சை நிசமா யெண்ணி வேடிக்கைப் பார்த்தார்கள். ஆனாலொன்ன இப்போதும் நம்முடைய குவர்னதோர் அவர்களுக்கும் நபாபு அவர்களுக்கும் மிலாகத்துப் பண்ணிவைத்து நம்முடைய குவர்னதோர் அவர்கள் கிட்டே சகல வெகுமதியும் வாங்கிக் கொடுத்துப் பாகையுங் கூட்டிவைத்து அனுப்புவிக்கிறோமென்று சொல்ல அந்தச் சேதியை அங்கே நபாபு மாபூசுகானண்டையிலே யிருந்து போன காரியக்காரன் மறுபடி வந்து மாபூசுகானுடன் சொல்ல ஆனந்தரங்கப்பிள்ளை சொன்ன சேதி யெல்லாம் கேட்டு மெத்தவுஞ் சந்தோஷத்தை அடைந்து,
மாபூசுகான் சொன்ன சேதி ஆனந்தரங்கப்பிள்ளை வந்து என்னை அழைத்துக் கொண்டு போனால் நான் அவசியமாய் வருகிறேன். மற்றப்படி யாரையும் நான் வரத்தக்கதில்லை அவிவேகிகளுடைய சத்துருத்துவம் நல்லதென்று உலக வாடிக்கையாய்க் கேட்டிருந்தோம். ஆனபடியினாலே இப்போதும் நீர் போய் அவனை அழைத்துக்கொண்டு வந்தால் நாம் ஆனந்தரங்கப்பிள்ளை கிட்டே நம்பிக்கை கேட்டுக் கொண்டு புதுச்சேரிக்கு வருகிறோம். ஆகையினாலே நீர் சீக்கிரமாய் போய்க் கேட்டுக் கூட்டிக்கொண்டு வரவேணுமென்று சொல்ல,
உடனே அந்த மாபூசுகான் வக்கீலாம் மமுதாக்கல் என்கிறவன் புதுச்சேரிக்கு வந்து மாபூசுகான் சொன்ன சேதி யெல்லாம் நபாபு மாபூசுகான் அவர்கள் என்னை வரச்சொல்லச் சொல்லி யனுப்பினார்கள். நான் அவரண்டைக்குப் போய் அவருக்குக் குற்றப் பிரியம் பிறக்கும் படியாகச் சொல்லி அழைத்து வருகிறேன். நமக்குத் தீவானத்தாருடனே பகை என்ன இருக்கிறது. அவரை யழைத்து வந்து அவருக்கு நல்ல வெகுமானம் பண்ணி அனுப்புவிக்க வேணுமென்று குவர்னதோருடனே ஆலோசனைக்காரரையும் கூட வைத்துக்கொண்டு ஆனந்தரங்கப்பிள்ளையுடனே சொன்ன சேதி யென்னவென்றால்:
இந்த நாளையிலே துலுக்கரை நம்பப் போகாது. அதிலேயும் மாபூசுகான் நம்முடைய கையினாலே ரொம்ப அவமானப்பட்டிருக்கிறவன். அதிலேயும் நீ இவ்விடத்திலே யிருந்து கொண்டு இத்தனை காரியமும் பண்ணுகிறாயென்றும் அவனுக்குத் திரளாய் துக்கம் உன் பேரிலே யிருக்கும். அப்படி யிருக்கிற விடத்திலே அவன் வெகு தண்டுடனே இறங்கியிருக்க அதிலே நீ எப்படிப் போகிறது? உன்னை நாங்கள் இத்தனைபேரும் எங்களுடைய கண்ணாக எண்ணி எவன் வந்தாலும் அவனுக்குத் தக்கதாகத் தந்திரம் பண்ணி நடத்துகிறதற்கு நீ இருக்கிறாய் என்கிற பலத்திலே யிருக்கிறோம். உன்னை அவனண்டைக்கு நானனுப்பத்தக்கதில்லை. அப்படி அவனுக்கிங்கே வருகிறதற்குப் பயந்தோன்றி யிருந்தால் அவனினத்திலே பெரிய மனுஷரை யுமிங்கே அனுப்பட்டும். நாமும் இங்கிருந்துகொண்டு ஒரு ஆலோசனைக்காரனை அனுப்புவிக்கிறோம். அதன் பேரிலே வரட்டுமென்று துரை சொல்ல அதற்கு ஆனந்தரங்கப்பிள்ளை சொன்ன சேதி:
இத்தனை ராசகாரியமும் இங்கிலீசுக்காரர் பேச்சைக் கேட்டுக்கொண்டு நடத்தி வெகுசனங்களை சாகக் கொடுத்து இனிமேல் கலாபம் பண்ணுகிறதினாலே காரியமில்லை யென்று தோன்றிச் சந்தியை முக்கியமென்று ஆசித்துச் சொல்லி அனுப்புவித்த மட்டுக்கும் நான் போகாதே போனால் என்னைப் போலே பயந்தவனோருத்தருமில்லையே. ஆகையினாலே நீங்கள் இந்தக் காரியத்துக்குத் தடை சொல்லத் தேவையில்லை. உங்கள் தயவினாலே நான் போய் அழைத்து வருகிறேன் என்று துரையுடனே அனுப்புவித்துக் கொண்டு புறப்பட, அந்த வேளையிலே பட்டணத்திலிருக்கிற சகல சனங்களும் மலப்புத் தோன்றிச் சொல்ல, அதற்கு மனங் கலங்காமல் அவர்களுக்குத் தைரியஞ் சொல்லிட்டுப் புறப்பட்டு மாபூசுகானண்டைக்குப் போக,
இவர் வருகிறாரென்று சேதி மாபூசுகான் கேட்டவுடனே வெகு ஆச்சரியத்தை அடைந்து, அங்கே இருக்கிற பெரிய சமேதாரர்களை எல்லாம் பார்த்துத் தைரியமென்றால் ஆனந்தரங்கப்பிள்ளையுதே தைரியம். இந்தத் தைரியமிந்த உலகத்திலே ஆருக்கும் வராது என்று வெகுவாய்த் தோத்திரம் பண்ணி ஆனந்தரங்கப்பிள்ளை போய்க் கண்டவுடனே மாபூசுகான் எழுந்து வந்திருந்து ஆலிங்கனம் பண்ணிக்கொண்டு கையைப் பிடித்து தனித்த ஒரு விடத்திலே கூட்டிப் போய் வைத்துக்கொண்டு, இரண்டு நாழிகை வரைக்கும் தன் மனதிலே இருந்த துக்கமெல்லாம் சொல்லிக்கொண்ட விடத்திலே அதற்கு ஆனந்தரங்கப்பிள்ளை மாபூசுகானுக்கு மறு உத்தாரஞ் தோன்றாமற் படிக்கு சன்னதுகளுடனேயும் சொன்ன விடத்திலே மாபூசுகான் வெகு சந்தோஷத்தை அடைந்து அப்போது அவன் சொன்ன சேதி:
உன்னைப்போலொத்த புருஷன் பாதுஷா அண்டையிலே மந்திரியாயிருக்க வேணும். அல்லவேன்றால் நிசாமண்டையாகிலும் மந்திரியா யிருக்க வேணும். பிராஞ்சுக்காரர் செய்த அதிர்ஷ்டம் அவர்களுக்குக் கிடைத்தது. இப்போதும் நீ எந்தப்படி சொன்னாலும் அந்தப்படி நாங்கள் கேட்கிறோம். உன்னை நம்பி வருகிறோம் என்று கேட்க, அந்தப்படியே என்னை நம்பி வாரும். சிந்தனை என்னவிருக்கிறது என்று சொன்னவுடனே மாபூசுகான் தன் கையிலே யிருக்கிற கட்டாரியும் கத்தியும் ஆனந்தரங்கப் பிள்ளை கையிலே கொடுத்து சகல வெகுமானமும் பண்ணி அவர் பிறகாலே புதுச்சேரிக்குப் போனான்.
அந்த வேளையிலே தண்டிலே வந்திருந்த இங்கிலீசுக்காரரெல்லாரும் சேர்ந்து ஒருத்தன் போனவழி ஒருத்தனுக்குத் தெரியாமல் தேவனாம்பட்டணம் போய்ச் சேர்ந்தார்கள். தண்டிலே யிருந்த சகல சனங்களுக்கும் மெத்தவுஞ் சந்தோஷம் உண்டாயிருந்தது. அந்த வேளை எப்படி இருந்ததென்றால் ஆனந்தரங்கப்பிள்ளையாகிய பிரம்மதேவன் பிரதிஷ்டையாகி தண்டிலே வந்து சகல சனங்களும் ஆயுசுங் கொடுத்துச் சீவதாரையும் வார்த்தாப்போலே யிருந்தது. அதன் பேரிலே ஆனந்தரங்கப் பிள்ளை மாபூசுகானை அழைத்துக் கொண்டு புதுச்சேரிக்குப் போய் குவர்னதோருக்கு மிலாக்காத்துப் பண்ணிவைத்துச் சகல வெகுமதியும் வாங்கிக் கொடுத்துப் பாகையுங் கட்டிவைத்து வெகுமரியாதையும் பண்ணிவைத்து அனுப்புவித்தான். அந்த மாபூசுகானும் அந்த குவர்னதோர் முன்னே இரண்டு நாழிகை ஆனந்தரங்கப்பிள்ளை குணாதிசயங்களை யெல்லாம் நன்றாகச் சொல்லி வெகுமானம் வாங்கிக்கொண்டு தண்டுக்கும் போய் தண்டையும் கூட்டிக்கொண்டு ஆற்காட்டுக்குப் போய்ச் சேர்ந்தான்.
இந்த சாமார்த்திய மிந்த செகத்திலே யொருத்தருக்குமில்லை என்று சகல பெரிய மனுஷர் தோரா துரைகளும் சொல்லத்தக்கதாக எனக்குக் கிடைத்த கீர்த்தி சுவாமி கடாட்சத்தினாலே கிடைத்ததே யல்லாமல் என்னுடைய சாமார்த்தியத்தினாலே கிடைத்ததென்று. மிதுவல்லாமல் நானிந்த காரியத்திலே பிரயாசைப்பட்டதெல்லாம் நம்முடைய புதுச்சேரிப் பட்டணத்திலே யிருக்கப்பட்ட வெள்ளைக்காரரும் கும்பினியாரும் சீர்மைக்கு எழுதுகிற கடுதாசிகளிலே நான் இராப்பகல் நித்திரை யில்லாமல் கும்பினீர் காரியத்திலே வெகு சாக்காரதையாய் நடந்து கொண்டதும் அதனாலே செகமெல்லாம் கும்பினியாருக்குச் சகல கீர்த்தியும் பிரதாபமும் டில்லி பாதுஷா முதலான தோரா துரைகள் எல்லாம் அறியத்தக்கதாய் நடந்ததும் அவரவர் பேசிக்கொள்ளுகிற படியினாலே இந்தப்படிக்குச் சீர்மைக்கு எழுதுவார்கள். கும்பினீர் காரியத்திலேயும் ரங்கப்பன் ரொம்ப பிரயாசைப்பட்டானென்று எழுதுவார்கள்.
இந்தச் சேதி பிராஞ்சு முதலான ஏரோப்பு ராச்சியமெல்லாம் பேருண்டாம். இந்தக் கீர்த்தி நான் சம்பாதிக்க வேணுமானால் பத்து லட்சம் வராகன் செலவழித்தாலும் வராத கீர்த்தி. என் பேரிலே ஆண்டவன் கடாட்சம் வைத்துச் சுனாயசமாய் லபிக்கப் பண்ணின ஆச்சரியத்தை என்னவென்றெழுதப் போகிறேன். ஆனாதினாலே வரப்பட்ட கீர்த்தியை விஸ்தரித்து எழுதுவேன். தன் பெருமையைத் தான் எழுதிக்கொள்ளுகிறது அப்புத்தனமான படியினாலே சூசனையாய் எழுதி வைத்தேன்.
இதல்லாமல், நபாபு மாபூசுகான் என்னுடைய கீர்த்தியைத் தோத்திரம் பண்ணுகிறதே யல்லாமல் துரையவர்கள் முன்பாகப் பண்ணின தோத்திரம் என்னவென்றால்: ஆனந்தரங்கப் பிள்ளை உங்களுடைய சமஸ்தானத்திலே யிருந்த படியினாலே உங்களுக்கு இப்படி ஒன்றுமில்லாமல் செய்து என்னை உங்களிடத்துக்கு நேர்பாயழைத்துக் கொண்டு வந்து சமாதானம் பண்ணிப்போட்டான். இவனுடைய புத்திக்கு இந்தவிடம் போதாது. நிசாம் கீழே மந்திரியாயிருக்க வேணும். அல்லது பாதுஷாவிடத்திலே மந்திரிதனத்துக்கு யோக்கியனே யல்லாமல் மற்றப்படி பின்னையொருவிதமாய்ச் சொல்லக் கூடாதென்றும் பின்னையும் அநேகவிதமாய் தாரீபு பண்ணினதற்குத் துரை இருந்து கொண்டு மெய்தான். இவன் மெத்த புத்திசாலி.மகா நிருவாகி. அவனுக்கிவன் தகப்பன் மெத்த புத்திசாலி. அவன் பிறந்த மட்டுக்கும் இவனிடத்திலே தேவரீர் தாரீபு பண்ணுகிற மட்டுக்கும் புத்தியிருக்கிறது. ஆச்சரியமல்ல வென்று துரையவர்கள் ரொம்ப தாரீபு சொன்னார்கள்.
இப்படி எல்லாம் ராச்சியாதிபத்தியம் பண்ணுகிறவன் கூட நம்மை தாரீபு பண்ணவும் நம்மை பகவான் போகிறாப் போலே போகப்பட்டதாகக் கிடைத்தது. சுவாமியினுடைய கடாட்சம் என் பேரிலே பரிபூரணமா யிருக்கையிலே இப்படி நடந்ததென்று எண்ணிக்கொண்டேன் என்று எண்ணத் தேவையில்லை. சமஸ்தான சனங்களுக்கும் இப்படியே ராச்சியமெல்லாம் சொல்லிக் கொண்டார்கள்.அதுகளை நான் தானே விஸ்தரித்து எழுதுகிறது நியாயமல்ல வென்று எழுதவில்லை.
(தொடரும்)