Skip to content
Home » ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #26 – புதுச்சேரியை முற்றுகையிட்ட பிரிட்டிஷ்காரர்கள்!

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #26 – புதுச்சேரியை முற்றுகையிட்ட பிரிட்டிஷ்காரர்கள்!

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு

பிரெஞ்சு கப்பற்படைதளபதி லபோன்தெனேவிடம் சென்னையில் அடிவாங்கிக் கொண்டு புறமுதுகிட்டு ஓடிய பிரிட்டிஷ்காரர்கள் அதே வேகத்தில் திரும்பி வந்தனர். இப்போது அவர்களது இலக்கு, தென்னிந்தியாவின் பிரெஞ்சு தலைமையிடமான புதுச்சேரி! பட்டணத்தை நோக்கி இங்கிலீஷ் கப்பற்படை கப்பல்கள் வந்து கொண்டிருப்பதாக அடிக்கடி தகவல் வந்து கொண்டே இருந்தது. இது, புதுச்சேரி மக்களைப் பெரும் கலவரமடைய வைத்தது.

ஒழுகரை மற்றும் அரியாங்குப்பத்தில் இருந்த கிறிஸ்துவக் கோயில்களின் கதவுகள் ஜன்னல்கள் மற்றும் தட்டுமுட்டுச் சாமான்கள் புதுச்சேரிக்குக் கொண்டு வரப்பட்டன. இதுபற்றி ஆளுநர் விசாரித்தபோது, இங்கிலீஷ்காரர் தாக்குதல் நடத்துவார்கள் என்பதற்காக ரங்கப்பிள்ளை குடும்பத்தினர் ஊரைவிட்டுச் சென்றுவிட்டனர் என அறிந்தோம். அதனால் நாங்களும் முன்னெச்சரிக்கையாக இப்படிச் செய்தோம் எனப் பாதிரிகள் விளக்கம் அளித்தனர். ஆனால் ரங்கப்பிள்ளையோ ‘என் குடும்பத்தினர் யாரும் வெளியே போகவில்லை. வேண்டுமானால் ஆளைவிட்டு விசாரித்துக் கொள்ளுங்கள்’ என்றார். இதனால் பாதிரிகளைக் கடிந்து கொண்டார் ஆளுநர்.

பயம் பீதி காரணமாகப் பிரெஞ்சு அரசாங்கத்திடம் இருந்து தினம் தினம் ஓர் உத்தரவு வந்து கொண்டிருந்தது. ஊரில் இருந்து யாரும் வெளியே போகவும் வெளியே இருந்து யாரும் உள்ளே வரவும் தடை விதிக்கப்பட்டது. இங்கிலீஷ்காரர்களுக்கு ஆதரவான கிராமங்களைப் பட்டியலிட்டு பத்து வீடுகள் வீதம் கொளுத்திப்போடப் பிரெஞ்சு வீரர்களுக்கு உத்தரவிடப்பட்டது. ஒவ்வொரு வீட்டின் முன்பும் முப்பது நாற்பது குடம் தண்ணீர் வைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. அப்படி வைக்காதவர்களின் காதுகள் அறுக்கப்படும். அவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்து பிச்சைக்காரர்களுக்கு வழங்கப்படும். ஊரைக் காவல் காப்பவர் ஒழுங்காகத் தங்கள் பணியைச் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அவர்களுக்கு மரண தண்டனை தான். இப்படியான உத்தரவுகளால் மக்கள் எப்படியெல்லாம் தாபந்தப்பட்டார்கள் என விவரிக்கிறார் ஆனந்தரங்கர்.

இங்கிலீஷ்காரர்கள் புதுச்சேரி பட்டணத்தை நெருங்கிவிட்டனர். தங்கள் முற்றுகையைத் தொடங்கிவிட்டனர் எனும் தகவலறிந்து கோட்டையில் பலரும் கண்ணீர் விடத்தொடங்கினர். துரை துய்ப்ளேக்ஸ் கண்களிலும் தண்ணீர் தளும்புவதைப் பார்த்தார் ஆனந்தரங்கர். இப்படியான நேரத்திலும்கூட துய்ப்ளேக்சுக்கு நல்ல அதிர்ஷ்டம் யோகம் இருக்கிறது. அவருக்குக் காரிய அனுகூலம் நடக்கும் என நம்பிக்கையுடன் எழுதுகிறார் ஆனந்தரங்கப்பிள்ளை.

1748 ஆகஸ்ட் 12 ஆடி 32 சோமவாரம்

நேற்றைய தினம் சம்பாவுலு கோயில் பாதிரிகள் ஒழுகரை, அரியாங்குப்பத்து கோயில்களுடைய கதவுகள் சன்னல்கள் கூடக் கழட்டிக் கொண்டு வந்தார்களென்றால், அப்பாலதிலேயிருந்த கருபு முதலானது யெடுத்துக் கொண்டு வந்தார்களென்று எழுதக் கவையில்லையே.

அந்தச் சேதி கேழ்க்கிற நிமித்தியம் சம்பாவுலு கோயில் சுப்பெரியேர் கடுதுவை துரை வரவழைத்து நீங்க ளெதினாலே அரியாங்குப்பத்துக் கோயிலிலே இருந்த சுரூபம் தட்டுமுட்டுக் கதவுகள் சன்னல்கள் கூட ஒழுகரை கோயிலுதும் அப்படிக் கொண்டு வந்தது யென்னவென்று கேட்டார்.

அதுக்கு அவர் சொன்னது: ஆனந்தரங்கப்பிள்ளை வீட்டிலே இருந்த அவர் பெண்சாதி பிள்ளைகள் சமஸ்தமும் போய்விட்டார்களென்றும் அரும்பாத்தை வீட்டுக் குழந்தைகள் பெண்டுகள் ஆண் பிள்ளைகள் போய் விட்டார்களென்றும் இப்படி சமஸ்தான பேர்கள் போய்விட்டார்களென்று சேதி கேட்டபடியினாலே நாங்களுமதை யெடுத்துவரச் சொன்னோமென்று சொன்னார்.

அதற்கு துரையவர்கள் என்னை யழைத்து பட்டணத்திலுண்டானவர்கள் சமஸ்தான பேரும் போய்விட்டார்களாவென்று கேட்டார். அதற்கு நான் சொன்னது: ஏழை ஜனங்கள் பிறாமணால் போனதுண்டு. இதல்லாமல் இந்த வூரிலே பிறந்தப் பெண் அசலூரிலே வாழ்க்கப்பட்டிருக்கும். அதுகள் மறுபடியும் இப்போ போயிருப்பார்கள். மற்றப்படி யென்னேரமும் போக்குவரத்தாயிருக்கிறதே ஒழிய மற்றப்படியல்லவே; அந்தப்படிக்கு போனதே அல்லாமல் மற்றப்படி போனதில்லை யென்று சொன்னேன்.

அப்பால் உங்கள் வீட்டிலே யிருக்கிற பெண்டுகள் போனார்களா வென்று கேட்டார். எங்கள் வீட்டிலே யிருக்கிற பெண்டு பிள்ளைகளிலே ஒருத்தராகிலும் போனதில்லை. இப்போதானே மனுஷரை அனுப்பி போய் பார்த்துவரச் சொல்லுங்களென்று சொன்னேன். அதற்கு பாதிரியை துரை பார்த்து நீ சொன்ன பேச்சு எப்படியிருக்கிறதென்று கேட்டதற்கு எங்களுடனே அப்படி வந்து சொன்னார்களென்றார். அப்பால் அரும்பாத்தை வீட்டு பெண்டுகள் போனார்களாவென்று கேட்டார். அவர் வீட்டு பெண்டுகளிலே வினாயகம்பிள்ளை பெண்சாதி வில்வநல்லூர் கோயிலுக்கு நேற்றிய நாயிற்றுக் கிழமையன்று போனார்கள். அவர்கள் சாவடி ஒன்று இருக்கிறபடியினாலே பெண்டுகள் ஆண் பிள்ளைகள் எப்போதும் போக்குவருத்துண்டாயிருக்கு மென்று சொன்னதற்கு,

துரை நீங்கள் ஒரு தப்பிதம் பண்ணுகிறது ஏன் பண்ணிணீர்கள் யென்று கேட்டால், ஒருத்தர் மேலே எரிகிறது உங்களுக்கு வாடிக்கை. நீங்கள் தானே இங்கிலீஷ்காரர்கள் வருகிறார்களென்று சன்னல்கூட பிடிங்கி வந்தால் ஒன்றுமறியாதிருக்கிற தமிழர் ஓடிப்போரது ஞாயம்தானே. நீங்கள் தானே பட்டணத்தை காபிறா பண்ணுகிறீர்கள் என்றும் பின்னையும் பேசியிருந்து அவரைப் போகச் சொல்லி பரசுராமப்பிள்ளையை அழைக்கச் சொன்னார்.

1748 ஆகஸ்ட் 15 ஆவணி 3 குருவாரம்

… பிற்பாடு பாக்கு கிடங்குக்கு வந்து பனிரெண்டு மணிக்கு வீட்டுக்குப் போகும் போது இங்கிலீஷ்காரர் கப்பல் மூன்று கப்பல்காரரை நெருங்கி ஓடிவருகிறதென்று சேதிச் சொன்னார்கள். ஒரு மணி வேளைக்கு வீராம்பட்டிணத்துக்கு நேராய் கொண்டு வந்து வைத்து பிடித்தானென்றும் அந்தச் சேதி துரை மதாம் தொத்தேல்பேர் பண்டிகையினாலே முசியே தொத்தேல் வீட்டிலே சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது வந்து சொன்ன மாத்திரத்திலே சாப்பிடுகிறதை விட்டுப் போட்டு தெலெஸ்கோ எடுத்துக் கொண்டு வரச்சொல்லி மெத்தை மேலே ஏறிப்போய் பார்த்து அந்த உசிணம் போரமார்களை அழைப்பித்து வெள்ளைக்காரரையெல்லாம் சேர்த்து கடற்கரையிலே பீரங்கிகளை யெல்லாம் முஸ்தீது பண்ணச் சொல்லி அனுப்பி ஷேக் இப்ராமை அழைத்து மேட்டுக்கும் தாக்கீது பண்ணி உள்ளுரிலே யிருந்து வெளியே போகிற மனுஷரை ஒருத்தரையும் விடவேண்டாமென்று உத்தாரம் கொடுத்தார்.

… அப்பால் பட்டணத்திலுண்டான ஜனங்கள் விறகு விற்று போட்டுப் போகிறவர்கள் வைக்கோல் விற்று போகிறவர்கள் முதலாய் மற்ற போக்குவருத்துக்காரர் சமஸ்தான பேரும் தாபந்தபட்டதை எழுதி முடியாது. இதைத்தொடர்ந்து பட்டணங் காபிராவாய் அவரவர் சொல்லிக்கொண்டதுகளை விஸ்தரித்து எழுதுகிறதல்ல. ஆகிலும் இங்கிலீஷ்காரன் கப்பலைக் கண்டவுடன் எஜமானாக இருக்கப்பட்டவன் தானே காபிராபட்டு போக்குவருத்து மனுஷரைக் கூட விடவேண்டாம் என்றால் ஒன்றும் தெரியாமலிருக்கிற ஜனங்கள் என்னமாய் காபிராப்படவேணும். அதுவுமல்லாமல் நம்முடைய வீட்டுக்கு எதிரே இருக்கிற மிசியனாரையும் கோயிலிலே யிருக்கத்தக்கதாக எஜமான் தானே பாதிரி அழைத்து இடம்கேட்டு அமத்திக் கொண்டால் ஒரு பொறுப்பும் சண்டையுடா மார்க்கமும் அறியாத தமிழர் என்னமாய் பயப்படவேணும். இந்த நியாயம் எல்லாம் சிறிது வெள்ளைக்காரரறிந்து அவரவர் வீடுகள் நம்முடைய வீட்டிலே முத்திரை சாவடிக்கு மேற்கே யிருக்கத்தக்கதாக யோசனைபண்ணி தீர்த்துக் கொண்டார்கள்.

சிறிது வெள்ளைக்காரர் வெளியே போவோமென்றால் துரை உத்தாரம் கொடாரோ என்றே அங்கலாய்க்கிறவர்களும் இப்படி வெள்ளைக்காரர் பேச்சு இத்தனை பயத்திலே உழைத்துக் கொண்டால் தமிழர் பேச்சு எழுத வேண்டியதில்லையே. நானும் சீட்டுக் கொடுக்கிற லிங்கப்பனை அழைத்து இனிமேல் ஒருத்தருக்கும் சீட்டு கொடுக்கத் தேவையில்லை யென்று திட்டம் பண்ணிப்போட்டு இராத்திரி எட்டு மணிக்கு வீட்டுக்குப் போனேன்.

1748 ஆகஸ்ட் 20 ஆவணி 8 மங்களவாரம்

… இதல்லாமலின்று ஐந்து மணி வேளைக்குக் கோட்டைக்கு அக்கினி மூலையிலே யிருக்கிற கடற்கரை கொத்தளத்திலே முன் கெட்டிச்சு இருந்த பீரங்கியெல்லாம் குண்டை கழற்றிப் போட்டு பழைய மருந்தை வாங்கிப் போடுகிறதற்கு சுட்ட பாவனையாய் சிறிது குண்டு போட்டிருந்ததைக் கூட சுட்டுப்பார்த்தார்கள். இது எத்தனை தூரம் போகுதென்று. அந்தச் சப்தம் கேட்டவுடனே பட்டணத்திலே உண்டான ஜனங்களெல்லாம் புறப்பட்டு கடற்கரையே யோட்டிப் பார்த்து தெளிந்த பிற்பாடு அவரவர் குதிர்ப்பட்டு வீட்டே போனார்கள்.

1748 ஆகஸ்ட் 21 ஆவணி 9 புதவாரம்

கப்பலொன்றும், சுலுப்பொன்றும் தேவனாம்பட்டினத்திலே யிருந்து பாயெடுத்து ஓடிவருகிறதென்று கபுறு வந்து சொன்னார்கள். துரையும் முசியே பாரதியும் மெத்தையின் பேரிலே போய்ப் பார்த்து வந்தார்கள். நானுமிந்தமட்டுக்கும் பாக்குக் கிடங்கிலே யிருந்து ஒரு மணி அடிக்கிற வேளையிலே வீட்டுக்குப் போனேன்.

… அப்பால் அதை விட்டுவிட்டு திரும்பியும் வந்து இங்கிலீஷ்காரர் இறங்கியிருக்கிற துலுக்கர் கிறாமத்திலே ஒருத்தருக்கும் தெரியாமல் கொளுத்திவிடச் சொல்லு. பத்து பேர் சேவுகரை வேஷமாறி அனுப்புமென்று சொன்னார். அதற்கு நான் சொன்னது அந்தபடிக்கு அனுப்புகிறேன். அவர்கள் யேழை ஜனங்களானதே அவர்களுக்கு சேதங்கொடுக்க வேணுமென்று சொன்னேன். அந்தப்படிக்கு கொடேன்று சொன்னார். அப்பால் மலையப்பன் சேவகரை அழைப்பித்து இங்கிலீஷ்கார மனுஷர் எந்தெந்த வூரிலே காவல் வைத்தானோ அந்தந்த வூரெல்லாம் என்று சொல்லி ஒரு ஏற்பாடும் சொன்னேன்.

சிங்கர்கோயில், கீழழிஞ்சிப்பேட்டு, பாகூர், கர்க்களாம்பாக்கம், கிருமாம்பாக்கம், பின்னையும் அண்டை அசல் கிராமங்களில் பத்து குடிசை விழுக்காடு கொளுத்திவிடச் சொல்லி இந்தப்படிக்கு கொளுத்திப் போட்டு வந்தவனுக்கு பத்து பத்து ரூபாய் கொடுக்கிறதென்று சொல்லி அனுப்பி வைத்தேன்.

1748 ஆகஸ்ட் 22 ஆவணி 10 குருவாரம்

இற்றைநாள் காலத்தாலே என்னை துரையவர்கள் அழைத்தனுப்பிவைத்து என் பெண்சாதி பிள்ளைகளைக் கொண்டு போய் உங்கள் வீட்டுக்கு எதிரே பாதிரி கோயிலிருக்கிறதே அந்தக் கோயிலிலே கொண்டு போய் வைக்கிறேன். இதிலே அந்த வீட்டின் பேரிலே போடுகிறதற்கு நேற்று சொன்ன இருபத்தைந்து பாரமும் (பஞ்சும்) அந்தக் கோயிலிலே சேர்த்துப் போடச்சொல்லி உத்தாரம் கொடுத்தார்.

… அப்பால் வீட்டுக்கு வீட்டுக்கு முப்பது நாற்பது குடம் தண்ணீர் வைக்காவிட்டால் அவனை ஆக்கினை அபராதம் வருமென்று தமுக்குப் போடச்சொன்னார். அப்பால் நயனாருக்கு தாக்கீது பண்ணி பட்டணத்தை பத்திரமாய் காக்கச் சொன்னார். அந்தபடிக்கு தமுக்குக் காரனை அழைப்பித்து வீட்டுக்கு வீடு (தண்ணீர்) முப்பது குடத்துக்கு மேலே எவ்வளவு அதனம் வைத்தாலும் சரி அதற்கு குறையாமல் வைக்காவிட்டால் ஐம்பது அடி அடித்து இரண்டு காதும் அறுத்து அவர்கள் ஆஸ்தியும் பிச்சைக்காரருக்குக் கொடுத்து விடுவார்கள். இந்தபடிக்கு துரையவர்கள் கட்டளை யென்று தமுக்குப் போடச் சொன்னேன். அந்தபடிக்கு தமுக்குப் போட்டார்கள். அப்பால் பெரியண்ண நயினாரையும் வீராநாய்க்கரையும் அழைத்து நூறு சேவகரை வைத்து பத்திரமாய்ப் பட்டணத்தைக் கார்க்காவிட்டால் உங்களை தூக்கில் போடுவோமென்று துரையவர்கள் சொல்லச் சொன்னார்கள் என்று சொன்னேன். அதற்கு சேவகருக்கு சம்பளம் கூட்டிக்கொடுக்க வேணுமென்று கேட்டார்கள். நல்லது. கும்பினீரிலே முன் கூட்டி கொடுத்திருக்கிறது. இப்பவும் கூட்டிக்கொடுக்கச் சொல்லுகிறேன். அல்லாமல் நீங்கள் சமயத்திலே மனுஷருக்குப் பாராமல் வைத்துக்கொண்டு பட்டணத்தை பத்திரமாய்க் காருங்களென்று சொன்னேன். அப்படித்தானே செய்கிறோமென்று சொல்லிப் போனார்கள்.

அப்பால் பாக்குக் கிடங்குக்கு வரவேணுமென்று இருக்கும் போது துரை வந்து எங்கே யெழுந்து போகிறீர்? இங்கேயிருந்து அவர்களை அழைத்து உத்தாரம் கொடுக்கிறதெல்லாம் கொடுத்து இங்கே தானே இருவென்று சொல்லிவிட்டு உள்ளே போனார்.

மறுபடி வந்து நானிங்கே யிருந்து அடிக்கடி அவர்களை அழைப்பித்து உத்தாரம் கொடுக்கிறதற்கு இந்த வேளை பொசுங்காது. ஆனபடியினாலே நான் கோட்டையிலே யிருக்கப் போகிறேன். நீயும் இராத்திரி பகலென்னுடனே இருக்க வேணுமென்று சொன்னார். நல்லது அப்படியே இருக்கிறேனென்று சொன்னேன். அப்பால் கப்பல்களெல்லாம் பாயெடுத்து ஓடிவருகுதென்று அடிக்கடி கபுறு வந்தது. அதன் பேரிலே துரையவர்கள் முசியே பாரதியை அழைத்துக் கொண்டு கடற்கரை மூலை கொத்தளத்துக்குப் போய் அங்கே இருந்து கப்பலைப் பார்த்து வந்ததும் தம்முடைய வீட்டு தட்டுமுட்டெல்லாம் அப்புறத்திலே சாக அனுப்பி வைத்தார். தம்முடைய பெண்சாதி பிள்ளைகள் போயிருக்கிறதற்குப் பாதிரி கோயிலுக்கு சகல சாமானும் கட்டில் மெத்தை உள்பட அனுப்பிவிட்டார்.

… இன்று இராத்திரி இங்கிலீஷ் கப்பலின் பேரிலே யிருந்து குண்டும் தீக்குடுக்கையும் போடுவானென்று சமஸ்தான வெள்ளைக்காரர் வீட்டுப் பெண்டுகளெல்லாம் நம்முடைய வீட்டுக்கெதிரே இருக்கிற கோயிலிலேயும் அதுக்கப்புறமிருக்கிற தமிழர் வீட்டிலேயும் இறங்கி யிருந்தார்கள். இன்னாரென்று வயணமேன் எழுதவில்லை யென்றால் பத்துபேரறிந்து போனால் பேர் வயணம் எழுதவேண்டியதே யல்லாமல் ஊரிலே உண்டானவர்கள் அனைவருமானால் என்னமாய் எழுதுகிறதென்று பொதுவிலே சமஸ்தான பேரென்று எழுதிப் போட்டேன்.

1748 ஆகஸ்ட் 23 ஆவணி 11 சுக்கிரவாரம்

இற்றைநாள் காலத்தாலே ஆறுமணி வேளைக்கு துரை அவர்கள் என்னை அழைத்தனுப்பிவைத்து ஒழுகரை குண்டு கிராமங்கள் முதலான விடங்களிலே இருக்கப்பட்ட நெல், வைக்கல் முதலான வஸ்துக்கள் எவ்வளவு உண்டோ அதெல்லாம் பட்டணத்துக்குள்ளே கொண்டு வரச்சொல்லியும் அல்லவென்று வைக்கல் முதலானது சரூரிலே வந்து சேராமல் போனதேயானால் நெருப்புப் போட்டு கொளுத்திப்போடச் சொல்லியும் அடுத்தாப்போலிருக்கிற துலுக்கர் கிராமங்களிலே இருக்கிற வைக்கல், நெல் அதையும் எடுத்து கட்டிக்கொண்டு வருகிறதற்கு வாக்கானால் கட்டி எடுத்து வருகிறதுதான். அல்லவென்றால் அதையும் கொளுத்திப்போடச் சொல்லியும் இப்படியாகச் சொல்லியும் சொன்னார். அந்தபடிக்கு பெரியண்ண நயினாரையும் பதினைந்து சேவகரையும் குண்டு கிராமங்கள் ஒழுகரை முதலான கிராமங்களுக்கெல்லாம் தாக்கீது பண்ணச்சொல்லி அனுப்பி வைத்தேன். அப்பால் வில்லியநல்லூர், பிரம்பை முதலான விடங்களிலே நெல், வைக்கல் இருக்கிறதா என்று விசாரிக்கிறதற்கு மனுஷரை அனுப்பி வைத்தேன்.

மற்றபடி நேற்றைய தினம் இங்கிலீஷ் பவுன்சு வந்து முத்திரிசப்பிள்ளைசாவடி அண்டையிலே யிருந்த பாளைப்பட்டு வாங்கிக் கொண்டார்களே அந்த மட்டுக்கும் தங்கள் தளமும் தாங்களும் தங்கள் சரஞ்சாமிகளையும் அவ்விடத்திற்கு கொண்டு வந்து சேர்த்துக் கொள்ளுகிறது. அதை டிக்கானாக வைத்துக்கொண்டு அப்பால் அரியாங்குப்பம் வாங்கிக் கொண்டு அப்பால் புதுச்சேரியின் பேரிலே சண்டைப் போடவும் யோசனைப் பண்ணிக்கொண்டு முந்திரிசப்பிள்ளைசாவடியைக் காணாவாய் வைத்துக்கொண்டு வீராம்பட்டணத்தண்டையிலே சிறிது சான்சாமிகள் கப்பலிலே யிருந்து இறக்குகிறதும் முந்திரிசப்பிள்ளைசாவடியிலே இருக்கிற சாமான்களைக் கொண்டு வந்து சேர்க்கிறதாகவும் இந்த வேளை இருக்கிறதாகவும் நாளைய தினம் அரியாங்குப்பத்தின் பேரிலே சண்டைப் பண்ணுகிறதாகவும் இப்படியாக சேதி கேழ்க்கப்பட்டது. நம்முடையவர்கள் அரியாங்குப்பத்து ஆற்றுக்கிக்கரை சாரத் துறைமுக முதலாக இவர்களும் சிப்பாய்களையும் சொலுதாதுகளையும் பீரங்கிகளையும் கொண்டுபோய் முஸ்தீது பண்ணுகிறார்கள்.

1748 ஆகஸ்ட் 24 ஆவணி 12 சனிவாரம்

இற்றைநாள் காலத்தாலே ஐந்து மணிக்கு இங்கிலீஷ்காரர் பவுன்சு அரியாங்குப்பத்து சமுத்திரக்கரை ஓரமாய்ப் புறப்பட்டு பாதிரிகோவில் வந்து அசார் பிடிக்கிறதற்கு எறும்பு சாரையாய்ப் புறப்பட்டால் எப்படியோ அந்தபடிக்கு இங்கிலீஷ்காரர் பவுன்சு வந்தது. நம்முடையவர்கள் அரியாங்குப்பம் பாதிரியார் கோயிலுக்கு நேராய் அதற்கு இப்புறம் பவுன்சு எல்லாம் ஆற்றோரம் முடிய இருந்து கொண்டு ஆற்றோரத்தண்டையிலே போட்டிருக்கிற மணிக்கொத்தளம் இரண்டிலேயும் பீரங்கிகளை ஏத்தி அதற்கு நேராய் தாழவும் சிறிது பீரங்கிகள் அச்சாயல் துப்பாக்கிகள் முதலான துகளினாலே இவர்கள் விஸ்தாரமாய் குண்டு மாரியாய் இங்கிலீஷ்காரர் பவுன்சுப் பேரிலே வழங்கினார்கள். அவர்களுக்கு செத்தவன் சாகட்டுமென்று மெரிச்சேரி வந்து பாதிரி கோவிலை அசளப்பண்ணி பிடித்துக் கொண்டார்கள். இதிலே அவர்கள் செத்தவர்களும் காயம்பட்டவர்களுமாய் நூத்தன்பது பேர் மட்டுக்கும் உண்டென்று துரையவர்களுக்கு முசியே லத்தூஸ் எழுதியனுப்பினான். என் புத்திக்கேற்கவும் சாவுகாயமும் அந்த மட்டுக்கு உண்டென்று தோணுது.

… கொத்தளத்தை இங்கிலீஷ்காரர் நெருக்கினார்களென்று நாலு பக்கமும் சுற்றிக் கொண்டார்கள் என்றும் அரியாங்குப்பத்திலிருக்கிறவர்களை நாலு பக்கமும் பெகுதளம் சுத்திக் கொண்டதாய் யெழுதி வந்தது. அதன் பேரிலே அங்கங்கே அழுகை உண்டானது. துரையவர்களுக்கொன்றும் தோத்தாமல் கண்ணீர் கூட கண்ணிலே தளும்புகிற மட்டுக்கும் சாடையிலே பேசும்போது கண்டேன். மெத்த பேயாய் குண்றிக்கொண்டு காபிராபட்டு போனதை நானென்ன வென்று காகிதத்திலே எழுதப் போகிறேன். ஆனாலித்தனை அதைரியஸ்தனாய் பேய் பிடுங்களாய் பிடிங்கினாலும் நல்ல அதிர்ஷ்டம் யோகம் இருக்கிற படியினாலே காரியமார்க்கமாய் அனுகூலத்திலே நடந்துகொண்டே வருகிறது. இதை யொருக்காலே விஸ்தரித்து எழுதலாகாது சூக்ஷமமா எழுதினது போதும்.

(தொடரும்)

பகிர:
கோ. செங்குட்டுவன்

கோ. செங்குட்டுவன்

விழுப்புரத்தில் பிறந்து வளர்ந்து வசித்து வருபவர். ஊடகத்துறையில் 20 ஆண்டுகாலம் செய்தியாளராகப் பணியாற்றியவர். கலை, இலக்கியம், பண்பாடு மற்றும் வரலாற்று அமைப்புகளில் பங்கேற்று இயங்கி வருபவர். 'சமணர் கழுவேற்றம்', 'கூவம் - அடையாறு - பக்கிங்காம்: சென்னையின் நீர்வழித்தடங்கள்' உள்ளிட்ட நூல்களை எழுதியிருக்கிறார். தொடர்புக்கு : ko.senguttuvan@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *