புதுச்சேரியை முற்றுகையிட்ட ஆங்கிலேயர் அரியாங்குப்பத்தைத் தங்களது தளமாக அமைத்துக் கொண்டனர். அரியாங்குப்பத்து ஆற்றின் இந்தப் பக்கம் இவர்களும் அந்தப் பக்கம் பிரெஞ்சுக்காரர்களுமாக சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். இங்கிலீஷ்காரர் பயன்படுத்திய பீரங்கிகள், அதன் குண்டுகள், அவற்றின் அளவு போன்றவற்றை எல்லாம் விவரிக்கும் ஆனந்தரங்கர், இங்கிலீஷ்காரர் போடும் குண்டு நிதானமாய் வந்து அடிக்கிறது என்கிறார்.
இந்தச் சண்டையின் காரணமாக இருதரப்பிலும் கணிசமான சாவு, காயங்கள் ஏற்பட்டன. இதற்கிடையே புதுச்சேரி, இங்கிலீஷ்காரரிடம் முழுகிப் போச்சென்று தகவல் பரவியது. திண்டிவனம் கிள்ளேதார் முத்துமல்லா ரெட்டி தன் பங்கிற்கு ராணுவத்தைத் திரட்டிவந்து புதுச்சேரியைக் கொள்ளையிட்டுச் சென்றார்.
அரியாங்குப்பம் கொத்தளம் முழுவதும் இங்கிலீஷ்காரர் வசமானது. அங்கு வந்து செல்லும் புதுச்சேரியாருக்கு சர்வ சுதந்திரம் வழங்கப்பட்டது. நீதி பரிபாலனம் சிறப்பாக நடப்பதாக ஆனந்தரங்கருக்குத் தகவல் வந்தது.
அரியாங்குப்பம் இங்கிலீஷ்காரர் வசமான தகவல் புதுச்சேரிவாசிகளிடம் பெரும் காபிராவை ஏற்படுத்தியது. பட்டணத்தில் இருந்து மக்கள் குடும்பம் குடும்பமாக வெளியேறத் தொடங்கினர். ஒரு சில வீடுகளில் வயதான கிழவிகள் மட்டுமே இருந்தனர். இந்தச் சூழ்நிலையிலும் ஆனந்தரங்கரின் வீட்டில் இருந்து யாரும் வெளியேறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இப்படியாக வெளியேறும் மக்களிடம் நகை நட்டுகள் பணம் காசுகள் வலுக்கட்டாயமாகப் பிடுங்கப்பட்டன. இதற்கு ஆளுநரின் மனைவியின் உத்தரவு என்று சொல்லப்பட்டது.
சாராயம் விற்பவர்கள் தூக்கில் போடப்படுவார்களென்று அரசு எச்சரித்தது. கோட்டை கொடிமரம் இறக்கிப் போடப்பட்டது. பட்டணத்தில் நிலவிய சூழல் துரையின் கண்களில் தண்ணீரை வரவழைத்தது. இதற்கெல்லாம் காரணம், மதாம் துய்ப்ளேக்ஸ் துரைத்தனம் பண்ணுவதுதான் என்பது ஆனந்தரங்கரின் குற்றச்சாட்டு. இதனால் தான் பட்டணத்திற்குக் கேடு காலம் வந்தது என்கிறார். ‘ஜனங்கள் தண்ணீர் குடம் தளும்புராப் போலே றாத்திரியும் பகலும் திகிலிலே செத்துப் போகிறார்கள்’ என்று வேதனைப்படும் ஆனந்தரங்கர், ‘இந்த முசியே துய்ப்ளேக்சு பெண்சாதி அதிகாரத்தை நிவர்த்தி பண்ணி சகல ஜனங்களையும் எப்போ ரக்ஷிக்கிறாரோ நான் அறியேன்.’ என்றும் அங்கலாய்க்கிறார்.
1748 ஆகஸ்ட் 24 ஆவணி 12 சனிவாரம்
… இன்றைய தினம் சண்டையிலே அவரவர் வந்து கபுறு சொல்லுகிறபடிக்கு சாவு காயமும் திறளாயெழுத வேணும். ஆனால், என் புத்திக்கேற்க தோத்துகிறது என்னவென்றால்: நூற்றன்பது சாவு இருநூறு முன்னூறு மட்டுக்கும். காயம் வெள்ளைக்காரர் தமிழர்கள் உள்படவென்று தோன்றுகிறது. இந்தபடிக்கே யிருக்கும். சற்றேறக்குறைய அப்பால் நம்முடையவர்கள் டிக்காணாவிலேயிருந்து சண்டை பண்ணின படியினாலே காயக்காரர் இருபது பேரும், சாவு அஞ்சு பேரும் உண்டானது.
இதுகள் நடந்த பிறகு சாயங்கால வேளை இங்கிலீஷ்காரருடைய கப்பித்தான் முசியே தெ லத்தூருக்கு எழுதியனுப்பி எங்கள் பிணத்தையும் காயக்காரரையும் நாங்கள் பார்த்து எடுத்துப் போகிறதற்கு உத்தாரம் கொடுத்து அனுப்பினதற்கு அவர்கள் மனுஷன் வெள்ளைக்கொடி யொன்று பிடித்துக்கொண்டு வந்து ரெணகளம் சோதித்து காயக்காரரை யெல்லாம் எடுத்துக்கொண்டு போனார்கள். சிறிது பிணங்களையும் எடுத்து அப்பாலே கொண்டு போய் புதைத்துப் போட்டு போறவர்கள் அரியாங்குப்பம் கொத்தளத்தண்டையிலே சிறிது பிணங்கள் விழுந்திருக்கிறது. எங்களிடத்திலே கூலிக்காரரில்லை. நீங்கள் புதைத்து போடவேணுமென்று முசியே தெ லத்தூருக்குச் சொல்லி அனுப்பினபடிக்கு போய்ப் பார்க்க இருபத்தாறு பிணங்கள் விழுந்து கிடந்தது. அதைப் புதைத்துப் போட்டார்கள். அதிலொரு பெரிய மனுஷன் நானூறு பேருக்கு எஜமானாம். அவன் கால்போய் ஜீவனுடனே யிருந்தான். அவனை முசியே தெ லத்தூர் பல்லக்கிலே போட்டு துரை அண்டைக்கு அனுப்பினார். அவனை ஒப்பித்தாலுக்கு அனுப்பி விட்டார்கள். இது பார்த்த சேதியும் அடிக்கடி துரையவர்கள் சொன்ன கபுறும் எழுதினேன்.
… இதல்லாமல் இன்று வந்த சேதி முத்துமல்லா ரெட்டி முந்தாநாள் வியாழக்கிழமை யன்று புதுச்சேரி இங்கிலீஷ்காரர் வந்து பிடித்துக்கொண்டு போனதாய் வெளியே சொல் பிறந்திருக்கிற படியினாலே இவரும் புதுச்சேரி முழுகிப் போச்சென்று தீர்த்துக்கொண்டு தானே சிறிது ராணுவத்துடனே வந்து பெரும்பாக்கத்திலே யிருக்கிற நம்முடைய குமஸ்தா திருமுடயா பிள்ளை முதலான பேரை காயப்படுத்தி பிடித்துக்கொண்டு போனதுமல்லாமல் அங்கேயிருந்த தான்யம் தவசம் சமஸ்தமும் எடுப்பித்துக் கொண்டு போய் அப்பால் சித்தாமுறி ராமு ரெட்டி முதலான பேருது இருந்த நாலாயிரக் கலம் நெல்லும் பின்னையுமிருந்த நவதானியங்களும் யெடுப்பித்துக் கொண்டு போனதுமல்லாமல் மாடு ஆடுகளென்ன உண்டோ அதுகளை ஓட்டிக்கொண்டு போனானென்று நதிராமுடையப் பிள்ளை முதலான பேரை வெகு அடி அடிக்கிறானென்றும் அடித்து உப்பைக் கரைத்து வார்க்கிறாரென்றும் இப்படி சேதி வந்தது.
நல்லது சுவாமியிருக்கிறார். இந்த ராகுபுத்தி அந்திரத்திலே இப்படிக் கிலேசத்தைக் கொடுத்தவர் பின்னை ஒரு நல்ல சுப கரகச் சித்திரம் வந்து அந்த முத்துமல்லா ரெட்டியை அதுக்கேற்றபடி நடத்தி அந்த சந்தோஷத்தைக் கொடுத்து நடத்த அறியாதாவென்றும் யோசனை பண்ணிக்கொண்டேன்.
1748 ஆகஸ்ட் 25 ஆவணி 13 ஆதிவாரம்
… நேற்றைய தினம் நம்முடையவர்கள் அரியாங்குப்பம் போய் சேருகிறதற்கு இல்லாமலிருந்ததே. இன்றைய தினம் மண்வெட்டி கோடாலி வெட்டுக்கத்தி முதலானதுகளை யெல்லாம் கொடுத்தனுப்பி அரியாங்குப்பத்துப் பாதிரி கோவில் சமீபத்திலே இருக்கிற மரங்களை யெல்லாம் வெட்டித் தள்ளிப்போடச் சொல்லியும் கோவில் மதிலை இடிக்கச் சொல்லியும் கோவிலிலே நானூறு சிப்பாய்களைக் கொண்டுபோய் வைக்கச் சொல்லி உத்தாரம் கொடுத்தனுப்பி ஆற்றங்கரை ஓரத்திலே பின்னையும் இரண்டொரு கொத்தளம் போடத்தக்கதாக முசியே பாரதி போய் கொத்தளம் போட வைக்கிறார். இப்படி மத்தியான மட்டுக்கும் சேதி கேழ்க்கப்பட்டது.
… மற்றபடி இங்கிலீஷ்காரர் அசந்தாப்போலே இருந்தார்கள். பின்னையொன்றும் நடக்கவில்லை. கனகராயமுதலி தோட்டம் பாதிரி தோட்டம் அப்புமுதலி தோட்டம் முசியே ஒசே தோட்டம் இதுகளை யெல்லாம் வெட்டிப்போடச் சொல்லி உத்தாரம் கொடுத்தார்கள்.அந்தப்படிக்கு வெட்டியும் போட்டார்கள். மற்றபடி விசேஷ விந்தைகள் கேழ்க்கப்படவில்லை.
1748 ஆகஸ்ட் 28 ஆவணி 16 புதவாரம்
… அப்பால் இங்கிலீஷ்காரர் வீராம்பட்டணத்தண்டையிலே மொற்சாவுக்கு ஞாயிற்றுக்கிழமை முதலெத்தனம் பண்ணினவர்கள் நேற்றைய வரைக்கும் தாங்களங்கே வந்து இருக்கிறதற்கு இடம்பார்த்து பந்தோபஸ்து பண்ணிக்கொண்டிருந்த தங்கள் பவுன்சை யெல்லாம் அழைத்துக்கொண்டு பதினெட்டு ராத்தல் குண்டு ஓடுகிற பீரங்கியும் பனிரெண்டு ராத்தல் குண்டு ஓடுகிற பீரங்கியும் வைத்துக்கொண்டு ஆற்றங்கரைக் கிப்புறம் இருக்கிற பவுன்சு பேரிலே அரியாங்குப்பத்து கொத்தளத்தின் பேரிலேயும் சுடுகிறதும் முருங்கப்பாக்கத்தண்டையிலே குதிரை சுவார்கள் வெள்ளைக்காரர் இறங்கி இருந்தவர்களில் ஒருத்தனை அடித்து அவன் செத்தான். பறையர்களுக்குக் கஞ்சி கொண்டுபோகும் பெண்டுகள் இரண்டு பேரை அடித்தது அவர்கள் செத்துப் போனார்கள். அப்பால் நாலு காப்பிரிகளுக்கு ஆற்றங்கரையிலே இருக்கிறவர்களுக்கு அடித்தது. இந்தடுக்கிலே சாவிலே நாலைந்து பேரும் காயத்திலே பத்து பேருக்குமுண்டு. நயினார் மண்டபம், முருங்கப்பாக்கம் எங்கும் மனுஷர்கள் நடமாடவில்லையென்று முதலாகிய சேதி யெல்லாம் பொழுது விடிந்து ஐந்தாறு நாழிகைக்குள்ளே சேதி வந்தது.
அப்பால் துரையவர்களும் பொர்த்துகல் காரன் நெடுவல் பீரங்கி மேஸ்திரியுடனே இருக்கிறவனாம் காட்டும் கப்பல் போய் கொளுத்துகிறதற்கு சின்ன கப்பல் போலே பண்ணி இராத்திரி இருட்டிலே கட்டுமரத்தின் பேரிலே வைத்துக்கொண்டு போய் கிட்ட அதை கொளுத்திவிட்டதும் அதுபோய் கப்பலை அரை க்ஷணத்திலே போய் பிடித்துக்கொண்டு கொளுத்தி விடுகிறதாய் யோசனை பண்ணி முன்னே தானே முஸ்தீது பண்ணி வைத்தார்கள். அதை இப்போ கொண்டு வந்து பார்த்து அதுகளுக்குப் பின்னை என்னயென்ன முஸ்தீது பண்ண வேணுமோ அதுகளெல்லாம் முஸ்தீது பண்ணி வைத்து அதைக் கொண்டுவரச் சொல்லிப் பார்த்து அனுப்பிவிட்டார்.
காயப்பட்டவர்களை நோவாளி கிடங்கிலே கொண்டு போனார்கள். செத்தவர்களை அங்கே புதைத்துப் போட்டார்கள். முசியே பாரதி ஆற்றங்கரையிலே போக்குவரத்தாயிருக்கும் போது அவர் தலையின் பேரிலே இரண்டு குண்டு ஓடிப்போனதாகவும் இங்கிலீஷ்காரர் சுடுகிற குண்டு நிதானமாய் வந்து அடிக்கிறதென்றும் சொல்லிவிட்டு சுடுகிறது கூட மகா திட்டமாய் வந்து அடிக்கிறதென்றும், ஆற்றங்கரைக்கு இக்கரையில் இறங்கியிருக்கிற நம்முடையவர்கள் சுடுகிற பீரங்கி குண்டு ஆறு ராத்தல் ஆனபடியினாலேயும் பீரங்கி சின்னது ஆனபடியினாலேயும் அவன் சுடுகிறது மேடானபடியினாலேயும் நம்முடையவர்கள் இருக்கிற தாவு பள்ளமானபடியினாலேயும் நம்முடையவர்கள் பீரங்கிக் குண்டு அவர்கள் பவுன்சிலே போய் விழவில்லை என்றும், இப்புறத்திலே நெட்டிப்படி போடுகிறதென்றும் இப்படியாக முசியே பாரதியண்டையிலிருந்து வந்த சட்டைக்கார பிள்ளையாண்டான் காயம்பட்டவர்கள் செத்தவர்கள் சேதி கூட வந்து சொன்னான்.
அதன்பேரிலே நம்முடைய குதிரை சுவார்கள் வெள்ளைக்காரர் திராகோன், முசியே தொத்தேல் கூட இங்கிலீஷ்காரர் குண்டு அவ்விடத்திற்கு வருவதற்கு பயந்து முசியே பாரதியை உத்தாரம் கேட்டுக்கொண்டு குண்டு சாலைக்குள்ளே வந்துவிட்டார்கள் என்றும் சொன்னதின் பேரிலே துரையவர்களண்டைக்கு முசியே பாரதி வந்துக்கண்டு பேசின பிற்பாடு சென்னப்பட்டணத்து வாசற்படியிலிருந்த இருபத்தி நாலு ராத்தல் குண்டு ஓடுகிற பீரங்கிகளில் ரெண்டும் கோட்டையிலே யிருந்து பதினேட்டு றாத்தல் குண்டு ஓடுகிற பீரங்கி ஒன்றும் லிமித்துக்கு (எல்லைக்கு) கொண்டு போனார்கள்.
இந்தபடிக்கு அரியாங்குப்பத்து கொத்தளத்தின் பேரிலே யிருந்தும் ஆத்துக்கு அக்கரையிலே யிருந்தும் ரெண்டு கொத்தளத்து பீரங்கியினாலேயும் போட்டுக்கொண்டே யிருந்தார்கள். இவர்கள் போடுகிற குண்டு அவர்களுக்குப் பட்டதோ யில்லையோ சுவாமிக்குத் தெரியும். நம்முடையவர்கள் பாளயத்து கபுறு நமக்கு அடிக்கடி வருகிறபடியினாலே காயப்பட்டதும் சாவும் அதிகமாய் மத்தியானம் வரைக்கும் யெழுதினேன்.
… இற்றைநாள் பகலைக்கு மேலாக நம்முடைய அரியாங்குப்பத்திலே யிருக்கிற கொத்தளத்தின் பேரிலே கிரனாத் (grenades) என்கிற சின்ன தீக்குடுக்கை இரனூறு மாத்திரம் ஒரு பீப்பாயிலே போட்டு மேலே வைத்திருந்தது. அதிலே இங்கிலீஷ்காரர் சுடுகிற பீரங்கிக் குண்டு ஒன்று விழுந்து அது பற்றிக்கொண்டது. பீப்பாயை தூக்கிக்கொண்டு அக்கரையிலே தண்ணீரிலே போட்டுவிட்டது. அதினாலே ஒருத்தருக்கும் காயம்படாமல் சுவாமி ரக்ஷித்தாரென்று கபுறு வந்தது.
இற்றைநாள் காலத்தாலே முசியே பாரதி புதுசாய் ஒரு மோர்சாவொன்று முஸ்தீது பண்ணி அதன் பேரிலே பீரங்கிகள் இருபத்தி நாலு ராத்தல் குண்டு ஓடுகிற பீரங்கியும் பதினெட்டு ராத்தல் குண்டு ஓடுகிற பீரங்கியும் ஏற்றி முன்னாற்றங் கரையிலே யிருக்கிற கொத்தளத்தின் பேரிலே மூன்று கொத்தளத்திலும் இருந்து அரியாங்குப்பம் கொத்தளத்திலும் இருந்து ஏகமாய் பீரங்கி சுடங்காட்டியும் அவர்கள் போட்டிருந்த கொத்தளமும் செவுர் வளர்த்தி யிருந்ததும் ஏகமாய் பிடுங்கிக் கொண்டு அங்கே வெகு பேர்களுக்குக் காயமும் சாவும் காணுங் காட்டிலும் அவர்கள் அவ்விடத்திலிருந்து நியாயிக்கா விட்டால் (நிர்வகிக்க மாட்டாமல்) அப்புறம் போனார்கள். சாவு காயம் இவ்வளவென்று தெரியாது.
இப்படியிருக்கும் போது குண்டு போய் ஒரு மருந்து பீப்பாயிலே விழுந்து பற்றிக்கொண்டது. கூடாரம் பற்றிக்கொண்டது. இந்த மட்டுக்கும் அவர்கள் பாளையத்திலே கூச்சம் ரொம்ப உண்டானது. வெகுஜனங்கள் முறிச்சல் கொடுத்து அப்புறம் போய்விட்டார்கள். மத்தியானம் வரைக்கும் இப்படி நடந்தது. அந்தக் கும்பலிலே யிருந்து மூன்று வெள்ளைக்காரர் இவ்விடத்திற்கு ஓடிவந்து விட்டார்கள். ஒரு தொப்பாக ஒருத்தன் கூட வந்துவிட்டான். மற்றபடி இன்றைய தினமெல்லாம் நம்முடையவர்களது ஜெயமும் எதிரிகளுக்கு அப ஜெயமுமாக இருக்கிறது.
1748 ஆகஸ்ட் 30 ஆவணி 18 சுக்கிரவாரம்
பத்தரை மணிக்கு (இங்கிலீஷ்காரர்) அவர்கள் சுடுகிற குண்டு முசியே பாரதி கொத்தளத்தண்டையிலே யிருக்கிற மருந்து பெட்டியிலே வந்து விழுந்து நாலு பெட்டி ஏக வேளையிலே பத்திக்கொண்ட சப்தம் துரை வீடுகூட அதிர்ந்தது. அதிலே எண்பது வெள்ளைக்காரருக்கு மருந்துப்பட்டு வெந்துப் போனது. சாவு காயமும் பின்னையும் நாலத்து இரண்டு பேருக்கு சிப்பாய்களுக்குக்குக் கூட சாவு காயமும் உண்டானது. அப்பால் அவர்கள் மிஞ்சி சுடுகிற பீரங்கி குண்டுகளினாலே ஆற்றங்கரைக்கு இக்கரையிலே யிருக்கிற நம்முடைய பவுன்சுகளுக்கும் அரியாங்குப்பத்துக் கொத்தளத்தின் பேரிலேயும் குண்டு போய் விஸ்தாரமாய் விழுங்காட்டிலும் இங்கே இருக்கிறவர்கள் அரியாங்குப்பத்துக் கொத்தளத்திலே இருக்கிறவர்களுக்கு அடையாளங்காட்டி வந்துவிடச் சொன்னார்கள். அதிலே யிருந்த முசியே லாசும், முசியே லத்தூசும் இரண்டு பேரும் இருந்த சிப்பாய்களையும் சொல்தாதுகளையும் இறக்கிப்போட்டு அதிலே யிருந்த மருந்து குண்டுகள் தீக்குடுக்கைகளையும் பலகை மரங்களெல்லாம் ஏகத்திற்கு சேத்துக் கொளுத்திப் போட்டு ஆற்றங்கரைக்கு இக்கரையிலே யிருக்கிற நம்முடைய பவுன்சை வந்து சேர்ந்தார்கள். அது ஒண்ணரை மணி வேளை அப்போ அதரு சப்தமுண்டானது.
இந்தப்படிக்கு அவர்களிலேயும் சாவு காயமும் நூத்தைம்பது பேர் காணும். இதன் பேரிலே அரியாங்குப்பமெல்லாம் இங்கிலீஷ்காரர் வந்தவர்களை அழைத்துக்கொண்டு போவதற்கு அரியாங்குப்பம் தங்களாதீனம் பண்ணிக்கொண்டு இரண்டு கொடி இங்கிலீஷ் கொடி போட்டார்கள். கொத்தளத்தின் பேரிலே ஒரு கொடி போட்டார்கள். இந்தச் சேதி பட்டணத்திலுண்டான ஜனங்கள் முன்பின் போனவர்கள் போக இருக்கிறவர்கள் கேட்டதே வெகு காபிரா அடைந்து கொஞ்சனெஞ்சம் பெண்டுகள் இருக்கிறவர்களைக் கூட புறப்பட்டுப் போனார்கள்.
… இற்றைநாள் சாயங்காலம் சாராயம் விற்றால் தூக்குப் போடுவோமென்று தமுக்குப் போட்டார்கள். கோட்டை கொடிமரமிறக்கிப் போட்டார்கள். இப்படி நடந்தது. கனகராய முதலியார் பெண்சாதி க்ஷெயார் தம்பி தானப்ப முதலியார் பெண்சாதி பிள்ளைகளுட்பட சமஸ்தான பேர்களும் பின்னையும் அரும்பாத்தைப்பிள்ளை வீட்டுப் பெண்டுகள் பிள்ளைகளுட்பட கோட்டை உத்தியோகஸ்தர் (வீட்டு பெண்டுகள்) சகலமான பேர்களும் நம்முடைய வீடு தவிர மற்ற பேரெல்லாம் தட்டுமுட்டுகள் நகைகள் ரொக்கம் நாணயங்கள் உட்பட சமஸ்தமும் தாண்டவைத்துக் கொண்டு அவரவர்கள் வீட்டுக்கு ஒரித்தரிரண்டு பேரும் அல்லவென்றால் பெண்டுகளிலே கிழவிகளிலே ஒருத்தர் இரண்டு பேருமாய் இருக்கிறவர்களே யல்லாமல் மற்றபடி போக வேண்டிய பேர்களனைவரும் புறப்பட்டுப் போய் விட்டார்கள்.
1748 ஆகஸ்ட் 31 ஆவணி 19 சனிவாரம்
நேற்றைய தினம் நடந்த விபரீதத்தினாலே மருந்து பத்திக்கொண்டு செத்ததும் அந்தச் சாடையின் பேரிலே அரியாங்குப்பம் கொத்தளத்தையும் கோவிலையும் இங்கிலீஷ்காரர் பிடித்துக் கொண்டதும் இதனாலே நம்முடையவர்கள் அரியாங்குப்பத்து ஆற்றங்கரையை விட்டுப்போட்டு குண்டுசாலை வந்து சேர்ந்ததும் இதனாலே பட்டணம் காபிரா பட்டாப்போலே பிரபுவும் கலங்கி முகம் ஒரு பாடாய்க்கண்டது.
மற்றபடி இன்றைய தினம் இங்கிலீஷ்காரர் அரியாங்குப்பம் கொத்தளத்தின் பேரிலேயும் கோவிலின் பேரிலேயும் கொடிப் போட்டுக்கொண்டு ஒவ்வொரு பீரங்கி சாடையாய் சுட்டுக்கொண்டிருந்தார்கள். மற்றப்படி விசேஷித்த கலாபமில்லை.
ஆனால் இங்கிலீஷ்காரன் அரியாங்குப்பத்திலே தமுக்குப் போடவைத்தது அரியாங்குப்பம் முதலான குண்டு கிராமத்துக் குடிகள் சுகமாய் வந்து அவரவர் பயிர் செய்துக்கொண்டு குடுத்தனம் பண்ணுங்கள். ஒருவேளை யெங்களுக்கு கூலியாள் தேவையாயிருந்தால் மனது சம்மதியான பேர் வந்து கூலிவேலை செய்கிறது. ஒவ்வொரு பணமும் படியும் கொடுத்து விடுகிறோம். மற்றப்படி வெள்ளைக்காரர் உங்களை சுலுமி பண்ணினால் அவர்களை தொழுவிலே போடுவேன். பின்னையும் சுருக்கான குற்றம் பண்ணினால் தூக்கிலே போடுவேனென்று தமுக்குப் போடச் சொல்லி சொன்னாறாம்.
இதல்லாமல் அவர் தண்டிலே வெளியார் சமஸ்தான பேரும் வந்து அரிசி, நெல், பால், தயிர், மோர், நெய், காய்க்கரிகள் பின்னையும் வேணுமென்ற வஸ்துக்கள் கொண்டு வந்து அவரவர் சம்மதியானபடிக்கு விற்றுப்போட்டு சுகமாய் போகிறார்கள். யாராகிலும் சுலிமி சாஸ்தி ஒன்றும் நடக்கிறதில்லையாம். மகா நீதியுடனே நடத்துகிறார் என்று போக்குவருத்து மனுஷர் சகலமான பேரும் சொல்லிக்கொள்ளுகிறது மல்லாமல் புதுச்சேரியார் அங்கே வலசை போயிருக்கிறவர்கள் அங்கே பால், தயிர், காய்கறி விற்கப் போய் இந்த சாடை துக்காணி ரெட்டைக்கா சென்று சொல்லி அதை சிறிது பேர் வீணர் பிடித்துக்கொண்டு போய் எஜமான் முன்னே விட்டால் பிடித்து வந்தவர்களைக் கோபம் பண்ணி அவ்விடம் விட்டு இவ்விடம் வந்தால் அவர்களுக்கு என்ன சகாயம் பண்ணவேணுமோ அது பண்ணவேணுமே யல்லாமல் அவர்களைக் கோபம் பண்ணுகிறவன் விவேகியா வென்று கூப்பிட்டு வந்தவர்களுக்கு திலாசா சொல்லிப் போகச் சொல்லுகிறபடியினாலே சமஸ்தான பேரும் சகல சாமக்கிரிகளும் தாஷியில்லாமல் கொண்டு போய் விற்கிறார்களென்று இப்போ வந்த மேஸ்தர் பொஸ்காவென் என்கிற கோந்திரு அமிரால் மெற்ற பெரிய மனுஷனென்றும் மகா தர்மவானென்றும் நீதியுடனே நடக்கிறவனென்றும் சகல ஜனங்களும் சொல்லிக்கொள்ளத்தக்கதாக கேழ்க்கப்பட்டது. அப்பால் மணி பனிரெண்டான பிற்பாடு வீட்டுக்குப் போனேன்.
… இதெல்லாம் முசியே துய்ப்ளேக்ஸ் துரை பெண்சாதி நூறு சேவகரை வைத்து அவர்களிலே பதினைந்து பேர் பத்து பேர் விழுக்காடு குண்டுசாலை வழிக்கு வழியில் வைத்து, போகிறவர்கள் போங்கள் பெண்டுகள் பிள்ளைகளைக் கையிலே காதிலே உடம்பிலே யிருக்கிற உடமை பணங்காசுகளைப் பிடிங்கிக் கொடுக்கச் சொல்லி அவர்களைக் கொண்டு தான் உள்ளாந்தரங்க மாயழைத்துக் கொள்ளுகிறான். இந்தபடிக்கு மனுஷரை வைத்து பறிக்கத் துவக்கிறான். இதுகளுக்குக் கூட கேழ்பாரில்லை. வழியிலே இருக்கிற சிப்பாய்கள் வெள்ளைக்காரர் ஷேக்கு இப்ராம் கூட அறிவார்கள். அறிந்தாலும் அம்மாளவர்கள் காறுபாறு அவளென்ன செய்துக்கொண்டு போனாலும் போகட்டுமென்று பயந்து அவளுடைய அபாண்டத்துக்கு நடுநடுங்கி யிருக்கிறார்கள்.
முசியே துய்ப்ளேக்ஸ் துரைத்தனம் போய் நாலு மாசமாச்சுது. முசியே துய்ப்ளேக்சு பெண்சாதி நாலு மாசமாய் துரைத்தனம் பண்ணுகிறாளென்று வெள்ளைக்காரர் ஆண் பெண் தமிழர் ஆண் பெண் துலுக்கர் ஆண் பெண் அடங்கலும் இதென்னமோ கேடுகாலமென்று சொன்னபடிக்கு பட்டணத்துக்கு கேடும் வந்து சமஸ்தயிக்கட்டு மனுபவிக்கிறார்கள். சுவாமி இந்த முசியே துய்ப்ளேக்சு பெண்சாதி அதிகாரத்தை நிவர்த்தி பண்ணி சகல ஜனங்களையும் எப்போ ரக்ஷிக்கிறாரோ நான் அறியேன். இப்போ பட்டணத்திலுள்ள ஜனங்கள் தண்ணீர் குடம் தளும்புராப் போலே றாத்திரியும் பகலும் திகிலிலே செத்துப் போகிறார்கள். இந்த ஜனங்கள் திகிலை எப்போ நிவர்த்தி பண்ணுகிறாரோ தெரியாது. ஆனால் நிவர்த்தி பண்ணுவாரென்று பரவசமிருக்குது. இதற்குள்ளே என்னமோ வென்று சனங்கள் அங்கலாய்க்கிறதை காகிதத்திலே எழுதி முடியாது.
(தொடரும்)