Skip to content
Home » ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #29 – முற்றுகையை கைவிட்ட இங்கிலீஷ் படை

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #29 – முற்றுகையை கைவிட்ட இங்கிலீஷ் படை

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு

புதுச்சேரி பட்டணத்தை முற்றுகையிட்டு ஓயாமல் குண்டுமழைப் பொழிந்து கொண்டிருந்த இங்கிலீஷ் படையிடம் திடீர் மாற்றம். தங்களின் கொத்தளத்தைக் காலி செய்து தேவனாம்பட்டணம் நோக்கிப் புறப்பட்டனர். இதற்குக் காரணம், இங்கிலீஷ் படைவீரர்கள் பலரும் தொடர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டது, கொத்தளம் போட்டிருந்த இடத்தில் தேங்கிய சேறும் தண்ணீரும் படைவீரர்களுக்குக் கால்வீக்கம் போன்ற நோய்களை ஏற்படுத்தியது. அப்புறம், பிரெஞ்சுக்காரர்களின் எதிர்த் தாக்குதலினால் ஏற்பட்டு வந்த தொடர் உயிரிழப்புகள்.

இங்கிலீஷ் படையினரின் பின்வாங்குதலை அவர்களைப் பின்தொடர்ந்து சென்று பிரெஞ்சுப் படையினர் உறுதி செய்தனர். அவர்கள் போட்டுச் சென்ற ஆயுதங்கள் உள்ளிட்டவற்றை இவர்கள் சேகரித்து எடுத்து வந்தனர். ஆனாலும் அவர்கள் மீண்டும் எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம் என்பதால் பவழக்காரன் சாவடி உள்ளிட்ட இடங்களில் தடுப்பு நடவடிக்கைகளில் பிரெஞ்சு படையினர் ஈடுபடுத்தப்பட்டனர்.

புதுச்சேரி பட்டணத்தின் மீதான இங்கிலீஷ் படையினரின் தாக்குதல் ஏறக்குறைய 39, 40 நாள் நீடித்தது. இத்தனை நாட்களும் ஆனந்தரங்கர் தனது வீட்டைவிட்டுக் குடும்பத்தினருடன் வெளியே இருந்தார். இப்படியாக மூன்று வெவ்வேறு இடங்களில் ஆனந்தரங்கர் குடும்பத்தினர் தங்குவதற்கு நேர்ந்தது. இங்கிலீஷ் படையினர் வெளியேறிய பின்பு இவர்கள் மீண்டும் தங்கள் வீட்டிற்கே வந்தனர். வீட்டுக்கு வந்து உள்ளே நுழையும் போது கண கணவென்று எதிர் கோயிலிலே மணி சப்தம் நன்றாய் கேட்டது. திவ்ய சகுனமானது!

இங்கிலீஷ் படைகள் பின்வாங்கியது, பிரெஞ்சு ஆளுநரின் வெற்றியாகப் பார்க்கப்பட்டது. பொதுமக்களும் பிரெஞ்சு படையினரும் ‘மன்னர் சிரஞ்சீவியாய் இருக்க’ என வாழ்த்தினர். இதுதொடர்பான கொண்டாட்டங்கள் பட்டணத்தில் களைகட்டின. இந்த நேரத்தில் ஊர் முக்கியஸ்தர்களை ஆளுநர் துய்ப்ளேக்சிடம் அழைத்து வந்த ஆனந்தரங்கர், பட்டணத்திற்கு வந்த இக்கட்டினை நீக்கியதற்காக ஆளுநருக்கு நன்றி தெரிவிக்க வைத்தார்!

1748 அக்டோபர் 13 ஐப்பசி 1 ஆதிவாரம்

இற்றைநாள் காலத்தாலே கேழ்விப்பட்ட சேதி யென்னவென்றால் நேற்று இராத்திரி இங்கிலீஷ்காரர் போட்டிருந்த பறச்சேரி கொத்தளத்து அண்டையிலிருந்து மூன்று இங்கிலீஷ்காரர் நேற்று இராத்திரி ஓடிவந்து கூடலூர் வாசற்படி அண்டையில் இருந்து கொண்டு எச்சரித்து உள்ளே வந்து துரையவர்களுக்கு கபுறு சொன்னது யென்னவென்றால்: இங்கிலீஷ்காரர் பாத்ரியிலேயிருந்து வந்தோமென்றும் அந்த லசுக்கரிலே வெகு ஜனங்கள் காச்சலினாலேயும் இவ்விடத்திலேயிருந்து புறப்படுகிற குண்டுகளாலேயும் வெகு பேர் சேதப்பட்டு போனார்களென்றும் வெகுபேர் வியாதியஸ்தர்களையும் காயக்காரர்களையும் தேவனாம்பட்டணத்து டோலியின் பேரிலே அனுப்பின வண்ணமாயிருக்கிறார்களென்றும் மிதமில்லாமல் தாங்கள் கொத்தளம் போட்டுக் கொண்டிருக்கிற இடமும் சேரும் தண்ணீரும் அதில் இராப்பகல் வாங்காமல் இருக்கிறதினாலே கைகள் கால்கள் எல்லாம் வீக்கம் கொடுத்து சாகிறார்களல்லவென்று தலையை யெடுத்தால் பீரங்கி குண்டு தலைகட்டக் கூடயில்லை யென்று மேஸ்தர் புஷ்காவேனும் தன் கையினாலே ஆன மட்டுக்கும் பார்த்தான். ஜனங்கள் சாவதினாலே இனிமேல் நிர்வாகமில்லை யென்று பீரங்கிகள் சாமான்க ளெல்லாம் யேற்றுகிறார்கள்.

இதல்லாமல் மழைக்காலமும் வந்ததென்று கப்பல் காரர்களெல்லாம் தாங்கள் இருக்கிறதில்லை யென்று சொல்லுகிறார்கள். ஆனபடியினாலே சகல சாமான்களும் ஏத்துகிறார்கள். அவர்களும் பயணம் போகிறதாக இருக்கிறார்களென்கிற சேதியும் ஒலாந்துக்காரன் வந்தவன் மாத்திரம் இப்படி போகலாகாது. மழைக் காலமானாலென்ன? மனுஷர் செத்தாலென்ன? சண்டைக்கு வந்த மட்டுக்கும் மனுஷர்கள் சாவு இல்லாமல் இருக்குமா என்றும் நாங்கள் இன்னம் மருந்து, குண்டுகள், மனுஷர், சாமான்கள் அழைப்பிக்கிறோம். கப்பல்கள் போய் மழைக்காலத்துக்குப் பிறகு வெற்னேரிட்டு வரப்போகுதென்று சொல்லுகிறதாகவும் மேஸ்தர் புஸ்காவேன் சம்மதிக்காமல் புறப்பட்டுப் போகிறா யிருக்கிறதென்று சொன்னார்கள். அவர்கள் கையிலே கொஞ்சனஞ்சம் ரெண்டாயிர ரூபாய் மட்டுக்கும் கொண்டு வந்தார்கள் என்று அவர்களைக் கொண்டு இந்த சேதி யெல்லாம் தெரிந்து கொண்டு அவர்களுக்கு ரொட்டி சாராயம் இறைச்சி அவர்களுக்கு இஷ்டமானபடிக்குக் கொடுத்து இருக்கச் சொல்லி கோட்டை வாசலிலே சகாயமாய்விட்டு அந்த சேதி கேட்ட பிறகு துரையவர்கள் மிகுந்த உத்சாகமாய் இருக்காறார்களென்று இதற்கு திருஷ்டாந்திர மாயிருக்குது. …

… அப்பால் இன்றைய தினம் பிரபு சத்துரு போறானென்று சந்தோஷத்துடனே இருப்பாரே நாமும் போய் பிரபுவை தரிசனம் பண்ணிக்கொண்டு வருவோ மென்று கோட்டையைப் போனவுடனே கோட்டை வாசற்படியண்டையிலே போகும் போது மஞ்சகண்ட மெதிராக வந்ததுமல்லாமல் அதிகாலமே எழுந்திருந்து முகம் கழுவிக்கொண்டு பாக்குப் போட்டுக்கொண்டு எதிரே இருக்கிற திருவீதி பாலுசெட்டி வீட்டிலே இறங்கியிருக்கிற லட்சுமண நாயக்கர் மதானந்த பண்டிதனண்டையிலே போய் நேற்று இராத்திரி ஆறுபேர் இங்கிலீஷ்காரர் புறப்பட்டதற்கு மூன்று பேர் வந்து சொன்ன சேதியும் கப்பல்கள் எல்லாம் பாயெடுத்து வடவண்டை பாரிசமாய் வைத்துப் பிடித்து சாமான்கள் ஏத்துகிற சாடையும் இங்கிலீஷ்காரன் வருஷகாலமானதே அவனுக்கு நிர்வாக மில்லாமல் போய்விடுகிறானென்று குண்டு விழாமல் வரவர மரத் துகளையும் தழைகளையும் மண்ணுகளையும் போட்டு முஸ்தீப்பு பண்ணினார்களே அதுகளின் மேல் கவையில்லை யென்றும் அவரவர் வீட்டைவிட்டு வலசை வந்திருக்கிறோமே அந்த வலசை தீர்ந்து ஐந்தாறு நாளையிலே அவரவர் வீட்டைப் போவோமென்று முன்னமே தானே ஐப்பசி மாதம் பிறந்தால் சத்துருவாங்கிப் போவானென்று சொன்னதற்கு சரியாய் இன்றைக்கு முதல்தேதி ஆனதே சுபசூசிகம் காணுதென்று பேசிக்கொண்டிருக்கும் போது கப்பல்களிலே பீரங்கிச் சத்தம் கேட்டவுடனே கப்பல் பீரங்கி எங்கே சுடுகிறான் என்று பயந்தார்கள். பயப்படத் தேவையில்லை.

இதோ ஒரு கப்பல் தேவனாம்பட்டணத்திலிருந்து பாயெடுத்து ஓடிவருகிறதென்று சேதி வந்து சொன்னதற்கு இரண்டு தரம் பீரங்கி கேட்டது சரியென்று ஏதாவது சமாசாரம் கொண்டு வந்ததாக வேணுமென்று சொல்லிக் கொண்டிருக்கும் போது அமிரால் கப்பலும் கலியோத்துங் கொண்டு துரைக்கு நேராயிருந்ததே அது இரண்டுமிப்போது வந்தது கூட பாயெடுத்து ஓடுகிற தென்று கபுறு வந்து சொன்னார்கள். அப்போ லட்சுமண நாயக்கரையும் மதானந்த பண்டிதரையும் பார்த்து நாம் சொல்லிக் கொண்டிருந்த சங்கதிக்கு சரியாயிப்போ பாயெடுத்து மற்ற கப்பல்கள் இருக்கிற வட பாரிசமே துறைவிட்டு ஓடுகிறானென்கிற கபுறு வந்த மட்டுக்கும் இங்கிலீஷ்காரன் பயணமும் சாகிப் போகிறது உசிதமாச்சுதென்று பேசியிருந்துப் போட்டு,

சீக்கிரத்துக்கு பழையது சாப்பிட்டு துரையவர்களண்டைக்குப் போக வேணுமென்று லட்சுமண நாயக்கருடனேயும் மதானந்த பண்டிதருடனேயும் சொல்லி நானிரங்கி யிருக்கிற சுங்குவார் வீட்டுக்குப் போக வேணுமென்று நடந்தவுடனே லட்சுமண நாயக்கருடனே ஆசீர்வாதம் பண்ணி கிச்சிலிப் பழமொன்று கொடுத்தார். அப்போ எனக்கு இத்தனை நாளாய் மனதுக்கு சங்கடமாயிருந்ததே அது நிவர்த்தியாய் இன்று முதல் நமக்கு சுப்ரமாய் சகல காரியங்களும் அனுகூலமாய் சத்துருக்களெல்லாம் நாசத்தை அடைவார்களென்று யோசனை பண்ணிக்கொண்டு போர்த்து ரோயல் ஆகிய கீழண்டை வாசலிலே நுழைந்து போகும் போது கப்சு கோயில் பாதிரியார் எதிரே வந்தார். அவர் இருந்து கொண்டு ரங்கப்பிள்ளை, ஆரோக்கியத்துடனே இருக்கிறாயவென்று கேட்டார். உங்களுடைய அநுகிரகத்தினாலே சகல ஆரோக்கியத்துடனேயும் இருக்கிறேனென்று சொன்னதற்கு, இங்கிலீஷ்காரன் போய்விட்டானென்று சொல்லி முழுக்கப் போனதாய் அல்ல இன்னம் கொஞ்சமிருக்கிறது. அதுவும் ஒரு மழை துவக்கினால் போய்விடுவானென்று சொன்னார். உங்கள் மனதிலெப்போ நினைத்தீர்களோ அப்பவே போய்விட்டா னென்று எண்ணிக்கொள்ளுங்கோளென்று சொன்னேன். …

1748 அக்டோபர் 16 ஐப்பசி 4 புதவாரம்

இற்றைநாள் இங்கிலீஷ்காரன் பவுன்சு குண்டுசாலைக்குள்ளேயிருந்த பாக்குமுடையான்பேட்டு பறச்சேரி அண்டையிலே போட்ட பத்திரியும் மோர்சாவையும் நேற்று இராத்திரி கொளுத்திப்போட்டு பெருமாள் நாய்க்கன் சாவடிக்குப்போய் அதற்கு மேற்கே முத்திரபாளயத்து மேட்டுப் பேரிலே போட்டிருந்த கூடாரத்திலே போயிருந்து சாமான்களை யெல்லாம் யெடுத்து பொம்மயப்பாளயத்து துறை வெள்ளாழச் சாவடி துறையிலே யேத்திப் போட்டது போக வில்லியநல்லூர் தென்னல் வழியாய் தேவனாம்பட்டணம் போய்ச்சேர சாமான்கள் மூன்று நாலுனாள் துவக்கி அனுப்புகிறது போக மற்றது நின்றது. அனுப்புகிற நிமித்தியம் இருந்தாலும் நம்முடைய பிரான்சுக்காரர் பவுன்சு வரப்போகுதென்று ஒவ்வொரு பீரங்கி சுட்டுக்கொண்டே யிருந்தான். ஆனால் நம்முடைய சிப்பாய்கள் மற்றபேர் அவ்விடத்திற்குப் போகவில்லை.

நம்முடையவர்கள் குண்டுசாலை வாங்கினது முதல் ஆவணி 28 தேதி வெள்ளிக்கிழமை துவக்கி நேற்றைய வரைக்கும் ஆயிரம் பீரங்கி சுட்ட நாளுமுண்டு. 800, 700, 600, 500, 300, 200 , கட்சி 100க்கு குறைய சுட்டதில்லை. இந்த நாற்பது நாளும் விடாமல் பீரங்கிச் சத்தம் போம்புச் சத்தம் கேளாத னாளில்லை. இதற்கு இன்றைய தினம் இவர்கள் பீரங்கி சுடாமல் நின்றார்கள். மற்றப்படி அவர்கள் போட்டிருந்த மோர்சாவிலே ஜனங்கள் போய் எடுத்துவந்த பீரங்கிக் குண்டுகள் அவர்கள் போட்டுப் போனது 3000, 4000 குண்டு. எல்லாம் 24 றா, 28 றா, குண்டுகள் முதல் 12 றா மட்டுக்கும் தினுசு தினுசாய் குண்டுகளெடுத்தார்கள்.

இதல்லாமல் மண்வெட்டிகள், கோடாலிகள், வெட்டு கத்திகள் பின்னையும் மோர்சா போடுகிற ஆயுதங்களென்ன உண்டோ அந்த ஆயுதங்களெல்லாம் மிதமில்லாமல் போட்டுப் போனார்கள். இதுமல்லாமல் சீர்மை மரப்பலகைகள் ஆறு விரல் முதல் பனிரெண்டு விரல் கணம் மட்டுக்கும் வெகு நேர்த்தியான பலகைகள், உத்திரங்கள் தேக்கு வுத்திரம் பலகைகள் முதலானது மிதல்லாமல் போட்டுப்போனது மல்லாமல் அவனவன் சரிப்போனாப்போலே கொண்டு வந்து வீட்டிலே சேர்த்துக் கொண்டவனும் விற்றுப்போட்டு விட்டவர்களும் இப்படி மிதமில்லாமல் யெடுத்து வந்தார்கள்.

இதல்லாமல் மதாம் துய்ப்ளேக்ஸ் சேவகர்கள் போய் முன் கொள்ளையிட்டது போக இன்றைய தினம் நம்முடைய ஊரார்களுடைய சால் ஏத்தம் வீட்டு வகைகள், தாவர வகைகள், உரல் உலக்கைகள் முதலானதும், வாழயிலை முதலானதும், தோட்டத்து வாழக்காய், கருணைக் கிழங்கு முதலானதும் நெல் அறுப்பு சமயமாய் பசுங்காயாய் கொஞ்சனஞ்ச மிருந்ததை யெல்லாம் சரியாயவர்கள் ஒரு யிடத்திலே கொள்ளையிட்ட வூரே அவரவர் கொண்டு போய் சேர்த்துக் கொண்டார்கள். இதல்லாமல் பயிர்களை யெல்லாம் துத்து முறுக அறுத்துக்கொண்டு வாரார்கள். இங்கிலீஷ்காரன் இத்தனை நாள் இரங்கியிருந்தவன் மோர்சாவைச் சுற்றிலுமிருந்த தென்ன மரங்கள் பயிர்களை ஒருதர்களையாகிலும் தீண்ட வேண்டாமென்று சொன்னபடிக்கு ஒரு தருணமும் ஒடியாமல் வைத்துக் கொண்டிருந்ததை நம்முடைய உடமையை நம்முடைய வூரார்தானே கொள்ளையிட்டு தீர்த்துப் போட்டார்கள். எடுத்த குண்டுகள் மாத்திரம் கோட்டையிலே கொண்டு போய் கொடுத்து வாடிக்கைபடிக்கு ஒரு பணம் விழுக்காடு குண்டுக்கு வாங்கிக் கொண்டார்கள்.

மற்றப்படி நான் கோட்டைக்குப் போன உடனே துரையவர்கள் என்னைப் பார்த்து இங்கிலீஷ்காரர்கள் ஓடிப்போனார்களென்றும் நேற்று இராத்திரி மோர்சாவை கொளுத்தினானென்றும் இதுமுதலான சேதிகளெல்லாம் பேசிக்கொண்டிருந்தது மல்லாமல், துலுக்கர்கள் பொல்லாதவர்கள், நாய்கள். அவர்களுக்கு யெல்லாம் புத்தி சொல்ல வேணுமென்று…

… இன்றைய தினம் தங்கள் வீட்டிலே ஒன்பது நாளாய் வலசைக்கு வந்திருக்கிற நீங்கள் ஒருபொழுதாகிலும் சாப்பிடவில்லை யென்றும் சொன்னபடியினாலே பனிரெண்டு மணிக்குப்போய் விருந்து சாப்பிட்டேன்.‌ அப்பால் நாளை காலையில் வீட்டுக்குப் போக வேணும். இன்றைக்கு ஒன்பதாம் நாள் ஆனபடியினாலே போகவில்லை. இங்கிலீஷ்காரனும் குண்டு சுடுகிறதை நிருத்தினானே குஞ்சுக் குழந்தைகள் தப்பியுடனே நாளைக் காலையில் மகர நக்ஷத்திரம் வியாழக்கிழமை போகிறோமென்று சொன்னதற்கு நல்லது அப்படியே போங்களென்று சொல்லி நாளைய தினத்திற்கு இங்கிலீஷ்காரர் கலகம் நிமித்தியம் வீடுவிட்டு புறப்பட்டு 39 நாள் ஆகிறது. வலசை மாடிப்போறோமென்று இஷ்டமாய் பேசியிருந்தோம். …

1748 அக்டோபர் 17 ஐப்பசி 5 குருவாரம்

இற்றைநாள் காலத்தாலே முத்திரப்பாளையமா கதிராம பிள்ளையார் கோவில் இந்த வட்டங்களிலே இருந்த பவுன்சுகளெல்லாம் தேவனாம்பட்டணம் கூடலூர் போய் சேரத்தக்கதாக பயணம் புறப்படும் போது எடுத்து அனுப்பின அரிசி சரக்குகள் முதலான சர்க்கரை, கற்கண்டு, பேரீச்சம் பழம் முதலாகிய கூலிக்காரர் கண்ட கண்ட வாக்கிலே ஓடிவிட்ட படியினாலே இந்தச் சாமான்கள் எடுக்க மனுஷரில்லாததினாலே அரிசி முதலான சரக்குகளையும் சாமான்கள் முதலானதுகளைச் சேர்த்து கொஞ்ச மருந்தை வைத்து நெருப்பைக் கொளுத்திப் போட்டு இங்கிலீஷ்காரர் பவுன்சு நடந்தது. நம்முடையவர்கள் அவர்களைத் துடர்ந்துக் கொண்டு போனார்கள்.‌

அவர்கள் முருங்கப்பாக்கம் ஆரு கடந்தவுடனே இவர்கள் பிறகே துரத்திக் கொண்டு வருகிறவர்களைப் பார்த்து பீரங்கியை அங்கேயிருந்து முஸ்தீப்பு பண்ணி நம்முடைய பவுன்சைப் பார்த்து சுட்டான்.‌ சுட்ட மாத்திரத்திலே நம்முடைய சிப்பாய்கள் குதிரை சுவார்கள் சோல்ஜர்கள் யேகத்துக்கு முறிந்துக் கொண்டு திரும்பினார்கள். நம்முடையவர்களிலே அவர்கள் பீரங்கிப் பட்டு ரெண்டு குதிரை சாவு காயம். இரண்டு சிப்பாய்கள் சாவு காயம். 6,7 சிப்பாய்கள் காயம். மதாம் துய்ப்ளேக்சு சேவகர் பிறகே தூரத்திலே நின்றார்கள்.‌ அவர்களிலே இரண்டு பேருக்கு சாவு. இந்த மட்டிலே திரும்பிக் கொண்டு அரிசி முதலான சாமக்கிரிகைப் பற்றிக்கொண்டு எரிகிறதே அதை சீக்கிரமாய் அவித்துப் போட்டு வேகாத அரிசி சாக்குகளை சிப்பாய்களும் சேவகர்களுமாய் விபரீதமாய்க் காட்டினார்கள். குதிரை சுவார்கள் குதிரை யெடுக்கும் பாரம் கட்டினார்கள்.‌அவனவன் எடுக்கும் பாரமும் கட்டிக்கொண்டு கூலியும் கொடுத்து எடுப்பித்துக் கொண்டு வந்து ஒன்பதரை மணிக்கு கோட்டையே வந்து சேர்ந்தார்கள்.

அந்த சேதியப்படி யிருக்க அப்பால் போம்பு முன் புரட்டாசி மாதம் 27 தேதி ஆதிவாரம் இராத்திரி பொழுது விடியற்காலத்தாலே போட துவக்கினார்கள்.‌ 28 தேதி சோமவாரம் போம்பு போடத் துவக்கினான்.‌ அப்போ வீடுவிட்டு எம்பெருமாள் பிள்ளை வீடுபோய் குஞ்சி குழந்தைகளுடனே போய் சேர்ந்தோம். அப்பால் மேலண்டை மோர்சா குண்டு புறப்பட்டதும் அவ்விடத்திலிருந்து 13ம் நாள் புறப்பட்டு பாலயப்ப முதலி வீடாகிய நம்முடைய கிடங்கு வந்து சேர்ந்தோம். அங்கே 14 நாளிருந்து குண்டு வருஷம் வருஷித்த அங்காரக வாரமாகிய புரட்டாசி 20 இராத்திரி அந்த வீடுவிட்டு ராத்திரி பனிரெண்டு மணிக்கு குஞ்சு குழந்தைகளுடனே சுங்குவார் வீடு வந்து சேர்ந்தோம். சுங்குவார் வீடு சேர்ந்து இன்றைக்கு பத்தாம் நாள் ஐப்பசி 10 வியாழக்கிழமை காலமே சுங்குவார் வீடுவிட்டு குஞ்சு குழந்தைகள் முன்னதாக அனுப்பி அப்பால் நானும் முத்துராம ரெட்டியார், சேஷாசல செட்டியார், லக்ஷ்மண நாய்க்கர் முதலான பேர் கையில் அனுப்புவித்துக் கொண்டு வீட்டுக்கு வந்து உள்ளே நுழையும் போது கண கணவென்று எதிர் கோயிலிலே மணி சப்தம் நன்றாய் கேட்டது.

நாகப்பட்டணம் தேவராய செட்டி சாமய்யன் ரெண்டு பேரும் வாசற்படியிலே நின்றவர்கள் என்னைப் பார்த்து இத்தனை நாளும் நீங்கள் வீடுவிட்டு வலசை போயிருந்து இன்றைய தினம் வீட்டிற்குள்ளே பிரவேசிக்கிற போது தேவ சன்னதியிலே பூசை மணி அடிபட்ட நேத்தி என்ன சொல்லப் போகிறோம். என்ன இடத்திலே குடியிருந்தாலும் கலகமுமாய் மூன்று விடத்திலே குடியிருந்த படியினாலே வலசை பிச்சில்லையே. அப்பாலும் நாலு நாள் ஆறு நாளல்லவே. 30, 39 நாள் இன்றைய தினம் கூட ஆகிற மட்டுக்கும் வலசை என்கிறதற்கு சந்தேகமில்லையே. அப்படி வலசை போய் நெடுநாளிருந்து மறுபடி வீட்டிற்குள்ளே நுழையும் போது திவ்யமான சகுனமானது.‌ இனிமேல் வெகு ஸ்ரேயஸ் நடக்கிறதற்கு ஏஷ்யமாய் யிருக்கும் போதுதான் இப்படிப்பட்ட திவ்ய சகுனம் கிடைத்ததென்று சொன்னார்கள்.

அப்பால் நம்முடைய வீட்டுக்கு குடிவந்து கோட்டைக்குப் போய் பிரபு தரிசனம் பண்ணிக்கொள்ள வேணுமென்று போகும்போது எதிரே நம்முடைய வீட்டுக்கு நேராய் வரும்போது பிரபு எதிராக இங்கிலீஷ்காரன் போட்ட கொத்தளங்கள் மோர்சாக்கள் முதலான இடங்களெல்லாம் பார்க்கத்தக்கதாக போகிறவரை நான் பார்த்து பல்லக்கு விட்டிரங்கி சலாம் பண்ணின உடனே நீயும் வா என்றார். அந்த மட்டுக்கும் அவர் பிறகே வழுதாவூர் வாசற்படியாலே புறப்பட்டு பாக்கமுடையான்பட்டு பறச்சேரி அண்டையிலே போட்ட மோர்சாவும் அப்பால் வளர்த்தி யிப்புறம் இரண்டு விடத்திலே கொண்டு வந்து போட்டதும் அதன் பேரிலே பதினாலு பீரங்கி வைத்து சுட்டதும் அப்பால் மெடுத்தியே வைத்து போம்பு சுட்டதும் நம்முடையவர்கள் சென்னப்பட்டணத்து வாசலுக்கு வாய்வு மூலையிலே ஒரு கொத்தளம் வளர்த்தி அதிலே இரண்டு பீரங்கி வைத்து அவர்கள் மோர்சாவைப் பார்த்து அவர்கள் தண்டைப் பார்த்தும் சுட்டார்கள். அதற்கு பதில் அவன் ஒரு கொத்தளம் போலே யெழுப்பி நாலு பீரங்கி வைத்து எதிராக சென்னப்பட்டணத்து வாசற்படியில் இருந்து மனுஷர்கள் வெளியே புறப்படாமலும் நம்முடையவர்கள் வாய்வு மூலையிலே கொத்தளம் போட்டுக்கொண்டு எதிர் கொத்தளக்காரனுக்கு நேர் முகம் ஆட ஒட்டாமலும் பண்ணிக்கொண்டிருந்த கொத்தளத்தையும் மோர்சாவையும் போய்ப் பார்த்தோம்.

அப்பால் வழுதாவூர் வாசற்படிக்கு நேராய் பவழக்காரன்சாவடி அண்டையிலே நம்முடையவர்கள் மோர்சா போட்டுக்கொண்டு அதிலே இரண்டு பீரங்கி வைத்துச் சுட்டதற்கு பதில் ரெண்டு அவன் போட்டுக்கொண்டு இரண்டு பீரங்கி வைத்து சுட சின்ன கொத்தளம் மோர்சா முதலானது களெல்லாம் பிரபு போய்ப் பார்த்தார். நானும் கூட போய்ப் பார்த்தேன். அப்பால் மனுஷர் நாலுபேர் தடையில்லாமல் வருகிறதற்கு ஒரு வாய்க்கால் குண்டுசாலைக்கு அப்புறமிருந்து கொண்டுவந்து போட்ட மோர்சா அண்டையிலே கொண்டுவந்து விட்டு அப்பால் அதிலே நாலாறு கவிறாய் பிரித்து அந்தந்த மோர்சாக்களுக்கு நம் மனுஷர்கள் போகிறதற்கு நம்முடையவர்கள் போடுகிற குண்டுகள் அகப்படாமல் வாய்க்காலிலே போகவும் அந்த வாய்க்காலுக்கு அணை ஒன்று அந்த அணை மறைவிலே மனுஷர் போகவும் போகும்போது குண்டு வந்தாலும் அணையிலே பட்டுப் போகவும் இப்படியெல்லாம் முஸ்தீப்பு பண்ணியது பார்த்து அப்பால் அந்த கொத்தளத்திலே இருக்கிற மனுஷர்களுக்கு குண்டு விழுந்தாலும் படாமலும் போம்பு விழுந்தாலும் படாமலும் ஒரு மெத்தைப் போட்டான்.

அதற்கு சீர்மை நார்ப் பலகைகள் உள்ளூர் பலகைகளும் எட்டு அங்குல பத்து அங்குல கனமுள்ள பலகையாய்ப் போட்டு அதன் பேரிலே தழைகளைப் போட்டு இப்படி என்னென்ன பலக்க போடவேணுமோ அந்தபடி பலக்கப்போட்டு 100 போம்பு விழுந்தாலும் சங்கையில்லாமல் போட்டு அதற்குள்ளே சோல்ஜர்கள் இருக்கத்தக்கதாக இடம் முஸ்தீப்பு பண்ணிய வேடிக்கையும், அப்பால் ஒப்பிசியல்மார் பெரிய மனுஷர்களிருக்கத்தக்கதாக ஒரு இடம் மேலே எழுதின படிக்கு மெத்தை பலக்கப் போட்டதையும், மருந்துகள் வைக்கிற நிலவரையும், தீக்குடுக்கைகள் நிலவரையும் அதற்கு உபய பார்சமும் கிணறும் இப்படி பின்னை எந்தெந்த விதம் போட வேணுமோ. அந்தந்த விதமெல்லாம் பலமாய்ப் போடுகிறதற்கு அவன் ஜனம் ஒன்றுக்கு கூடலூர் பணம் நம்முடைய ஒண்ணே கால் பணம் அப்படிப்பட்ட கூடலூர் பணம் மூணு விழுக்காடு கூலிக்காரனொன்றுக்கு கொடுத்த படியினாலே பதினாயிரம் கணக்காய் கூலிக்காரர்கள் வந்து இந்த குண்டு சாவுக்கு துணிந்து செய்தார்கள். ஆனபடியினாலே அவனுக்கு மேலெழுதப்பட்ட வேலைகள் சுறுக்காய் வேலை ஆக மாட்டாது என்று வெள்ளைக்காரர் கூட வந்தவர்கள் துரையவர்கள் கூட ஆச்சரியப்பட்டார்கள்.‌

இற்றைநாள் பகலைக்கு மேலாக ஐந்து மணிக்கு கோட்டைக்குக் கிழக்கே சோல்ஜர்களை யெல்லாம் வரிசை வைத்துக் கொத்தளங்கள் பேரிலே உண்டான சிப்பாய்களையும் மலையப்ப சேருவக்காரன் சேவகர் கும்பினீர் சேவகர் முதலான பேர்கள் இருக்கிறவர்களை யெல்லாம் ஒவ்வொரு துப்பாக்கி சுட்டார்கள். அதன்பேரிலே சோல்ஜர்கள் துப்பாக்கிகள் மூன்று வரிசை தீர அப்பால் கொத்தளங்கள் பேரிலே இருக்கிற பீரங்கிகளை யெல்லாம் சுடச்சொல்லி நேமித்து இன்று 41 நாளாய் கொடி போடாமல் கொடிமர முஸ்தீப்பு பண்ணுகிறதற்கு நேரமில்லாமல் ஒரு மனிதன் தானே கொடிமரம் முஸ்தீப்பு பண்ணி அதிலே வெள்ளைக் கொடியும் போட்டு சுவாமி சத்துருக்கள் துரத்தி விட்டு, ரக்ஷித்தாரென்கிறதற்கு கோயிலிலே பூஜை கேழ்க்கத்தக்கதாக பெரிய துரை அவர்கள் அம்மாள் முதலான சகல வெள்ளைக்காரர்கள், வெள்ளைக்கார பெண்டுக ளெல்லாரும் நல்ல உடுப்புகளை உடுத்திக்கொண்டு முக மலர்ச்சியுடனே கோவிலுக்குப் போய் பூஜை கேழ்க்கும் போது கொத்தளத்திலே இருக்கிற சிப்பாய்கள் சேவகர்கள் வரிசையாய் துப்பாக்கி சுட்டு அப்பால் 3 தரம் சோல்ஜர்கள் துப்பாக்கிகள் தீர்த்து உடனே 3 தரம் 21 பீரங்கி சுட்டு அப்பால் ஊரை சுற்றிலும் கொத்தளங்களிலே உண்டான பீரங்கிகளெல்லாம் சுட்டு தீர்ந்தவுடனே தொப்பியைக் கழட்டி மூன்று தரம் இராஜா சிரஞ்சீவியாயாயிருக்க, சிரஞ்சீவியாயிருக்க என்று கூப்பிட்டு ஆனவுடனே கோவிலுக்கு வெளியே வந்து உடனே சமஸ்தான வெள்ளைக்காரர்கள், வெள்ளைக்கார பெண்டுகள் அனைவரும் துரையவர்கள் தைரியத்தைப் பிரியத்துடனே யிருந்து சத்துருக்கள் மகா பலத்துடனே பட்டணத்தைச் சுற்றிக் கொண்டதற்கு பட்டணத்தையும் கார்த்து சத்துருக்களுடனேயும் சண்டை பண்ணி சத்துருக்களைத் துரத்திவிட்டு, பட்டணத்துக்கும் தங்களுக்கும் வந்த ஆபத்தைத் தீர்த்து எல்லாரையும் ரக்ஷித்ததற்கு நன்றி அறிந்த உபசாரணை துரையவர்களுக்குச் சொல்லி, கட்டி முத்தமிட்டான பிறகு அங்கே ஒரு விசை இராஜா சிரஞ்சீவியாயாயிருக்க வேணுமென்று மூன்று தரம் சொல்லி ஆனவுடனே சமஸ்தமான பேரும் புடவை பார்க்கிற சாலையிலே பெரிய மேஜைப் போட்டு அவர்கள் வழக்கப்படிக்கு சாப்பிட வேண்டிய ஜாதி ஆகார பதார்த்தமெல்லாம் முஸ்தீப்பு பண்ணி சாராயம் கூட வைத்திருக்கும் இடத்திற்கு வந்தார்கள்.

துரையவர்கள் கோன்சேவியக்காரர்கள் படைத்தலைவர்களுடனே கோட்டைக்கு வெளியே கீழ்ப்பார்சத்திலே சோல்ஜர்கள் வரிசை வைத்து இருக்கிற விடத்திற்குப் போனவுடனே அவர்கள் ஜாதி வழக்கப்படிக்கு படைத்தலைவர்கள் எல்லாம் துரையவர்களுக்கு ஈட்டி சலாம் பண்ணி அப்பால் அவர்களுக்கு எல்லாம் பதிலாசாரம் பண்ணி ஆனவுடனே சொல்தாதுகள் படைத்தலைவர்மாரெல்லாம் மூன்று தரம் தொப்பியை விசிரி ராஜா சிரஞ்சீவியாயிருக்க வேணுமென்று ஏக தவனியைத் தவனித்தான பிறகு படைத்தலைவரெல்லாம் கோன்சேல்காரருடனே மறுபடி கோட்டைக்குள்ளே வந்து இப்போ புதுசாய் கட்டுகிற குவர்னமாவுக்கு எதிரே அந்த கூட்டத்துடனே நின்று ஒரு பெரிய வெள்ளித் தட்டில் 20, 30 வீரர்கள் வைத்து அதிலே சாராயம் வார்த்து ஆனவுடனே இராஜாவினுடைய ஆரோக்கியத்தைக் கோரி சாராயத்தைக் குடித்தானவுடனே மறுபடி தொப்பியைக் கழற்றி இராஜா சிரஞ்சீவியாயாயிருக்க வேணுமென்று மூணுதரம் தவனித்து அப்பால் மேஜை போட்டிருக்கிற புடவை பார்க்கிற சாலையிலே சமஸ்தான வெள்ளைக்காரர் வெள்ளைக்கார பெண்டுகள் அரண்மனைக்காரர்களிருக்கிற இடத்திற்கு வந்தவுடனே அங்கே ஒரு தரம் அல்லாள மெனவிக் கொண்டு அப்பால் சாப்பிட்டு சாராயம் குடித்து துரையவர்களை பிடவை பார்க்கிற சாலையிலே உலாத்தும் போது,

நான் பழங்கும்பினீர் வர்த்தகர்கள், சுங்கு சேஷாசல செட்டி, முத்துராம செட்டி, லக்ஷ்மண நாய்க்கர், திருவீதி பாலுசெட்டி குமாஸ்தா ஜலது வெங்கடாசல செட்டி, தானப்ப முதலியார், கடற்கரை உத்தியோகத்தர்கள் சாவடி கணக்கப்பிள்ளை கோட்டை கச்சேரி கணக்கு பரசுராம பிள்ளையும் பின்னையும் வூரிலே யிருக்கப்பட்ட பேர் சொல்லத்தக்க மனுஷர்களெல்லாம் வரிசையாய் நின்று ஆசாரம் பண்ணி மகத்தாகிய பிரதாபத்தை அடைந்த பிற்பாடு பிரபுவைப் பார்த்து வெகு பலனுடனே வந்து நாங்கள் பொருந்தியிருக்கப்பட்ட பட்டணத்தைச் சுற்றிக்கொண்டு பண்ணப்பட்ட இக்கட்டை நிவர்த்தி பண்ணத்தக்கதாக நீர் இராத்திரி பகலென்று பாராமல் ஆகார நித்திரை பரிகரித்து சத்துருக்களை அப ஜெயப்படுத்தி யோசனை என்னமோ அந்த யோசனையை இராத்திரி பகலாய் நினைத்து சத்துருவை போகச் செய்து அவன் பலகீனமாய் போகத்தக்கதாக செய்து எங்களையும் எங்களுடைய சம்சாரங்களையும் எங்களுடைய ஆஸ்திகளையும் சத்துரு வசமாக்காமல் எங்களை ஆதீனத்தில்தானே நிலைக்கப்பண்ணி ரக்ஷிக்கப்பட்ட உமக்கு நாங்களென்ன ப்ரதி உபகாரம் செய்யப் போகிறோமென்றால் நாங்கள் ஸ்வாமியைப் பார்த்து வேண்டிக்கொண்டிருக்கிற தென்னவென்றால்: நீர் சிரஞ்சீவியாயிருக்கவும் இந்த பிரான்சு தேசத்தை சூரிய பிரகாசம் போலே லோகமெல்லாம் கீர்த்தியாகிய கிரணத்தினாலே ப்ரகாசிக்கப் பண்ணியதுபோல் இன்னம் அனேக ஜெயமுண்டாக எப்போதும் உம்முடைய பேர் சொன்ன மாத்திரத்திலே அங்கங்கே இருக்கப்பட்ட சத்துருக்கள் அப்படி அப்படித்தானே அபஜெயப்பட்டு போகவேணுமென்று சுவாமியை பிரார்த்திக்கின்ற உபகாரம் செய்கிறதற்கு நாங்கள் பாத்திரர்களான படியினாலே அந்தபடிக்கு ஸ்வாமியைப் பிரார்த்தித்துக் கொள்ளுகிறோமென்று நன்றி அறிந்த உபசாரனை சொல்லுகிறோமென்று சொன்னதற்கு அவரும் பதிலுக்கு உங்களை ரக்ஷிக்கிறதற்காகத்தான் இத்தனைப் பிரயாசைப் பட்டாரென்று சொன்னார். அந்தப்படிக்கு அவரவர் ஆசாரம் பண்ணிக்கொண்டு அவரவர்கள் வீட்டுக்குப் போனார்கள்.

(தொடரும்)

பகிர:
கோ. செங்குட்டுவன்

கோ. செங்குட்டுவன்

விழுப்புரத்தில் பிறந்து வளர்ந்து வசித்து வருபவர். ஊடகத்துறையில் 20 ஆண்டுகாலம் செய்தியாளராகப் பணியாற்றியவர். கலை, இலக்கியம், பண்பாடு மற்றும் வரலாற்று அமைப்புகளில் பங்கேற்று இயங்கி வருபவர். 'சமணர் கழுவேற்றம்', 'கூவம் - அடையாறு - பக்கிங்காம்: சென்னையின் நீர்வழித்தடங்கள்' உள்ளிட்ட நூல்களை எழுதியிருக்கிறார். தொடர்புக்கு : ko.senguttuvan@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *