சென்னப்பட்டணத்தை பிரெஞ்சுக்காரர்கள் நிர்வாகம் செய்த விதம் ஆனந்தரங்கருக்குக் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால் புதுச்சேரி ஆளுநர் துய்ப்ளேக்சுக்கு அபகீர்த்தி வந்ததாகக் கருதினார். சென்னப் பட்டணத்தை நிர்வாகம் செய்வதற்குப் புதுச்சேரியில் இருந்து அனுப்பப்பட்டவர்கள் துய்ப்ளேக்சின் மனைவி மதாமின் ஆட்களாவர். அவர்களைத் திருட்டுப் பசங்கள் என்றும் சுருட்டுப் பொறுக்கி என்றும் திட்டுகிறார் பிள்ளை.
மேலும், சென்னப்பட்டணத்தின் எசமானாக இருக்கிறவன் குறித்த ஆனந்தரங்கரின் மதிப்பீடு வருமாறு: செவிடன். எழுதிக் கொடுத்தால்தான் தெரியும். நிர்வாகம் குறித்து ஏதும் அறியாதவன். பச்சைப் பாம்புருட்டி. பணத்தைத் தவிர வேறு எதையும் அறியாதவன். பெண்டாட்டி காலிலே நாருறிக்கிறவன். இவர்கள் எல்லாம் சேர்ந்தால் பட்டணத்திற்குக் கேடு வராமல் என்ன செய்யும்?
சென்னப்பட்டணத்தை பிரெஞ்சுக்காரர்கள் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தபோது அங்கிருந்த வர்த்தகர்கள் உள்ளிட்டோர் பணம் காசு தட்டு முட்டுச் சாமான்களையெல்லாம் தோட்டத்தில் மண்ணில் புதைத்துச் சென்றனர். அவற்றைப் பிரெஞ்சு படையினர் திருடி வந்தனர். கூலிக்காரர் கூட நூறு வராகனுக்குக் குறையாமல் இப்படியாகச் சேர்த்தனர். அப்படியானால் கவர்னர் மற்றும் அதிகாரிகள் எவ்வளவு சேர்த்திருப்பார்கள் என்று கேட்கிறார் ஆனந்தரங்கர். மனம் போன போக்கில் வீடுகள் இடித்துத் தள்ளப்பட்டன. குபேரன் பட்டணம் கொள்ளைப் போகுது என்று அலறுகிறார் ஆனந்தரங்கர்.
இதையெல்லாம் ஆளுநர் துய்ப்ளேக்சு கவனத்திற்கு எடுத்துச் சென்றபோது, சென்னப்பட்டணத்து வர்த்தகரை எல்லாம் புதுச்சேரிக்கு வந்து குடியேறச் சொல் என்றார். மேலும், சென்னப்பட்டணத்தைத் தரைமட்டமாக்கி அங்கிருப்பவர்களை இங்குக் குடியமர்த்தி புதுச்சேரி பட்டணத்தை அகண்டப் பிரதேசமாக்குவதே தனது திட்டம் என்றும் தெரிவித்தார். இதற்கிடையே சென்னப்பட்டணத்தில் நடக்கும் அநியாயத்தை காகிதம் முனையிலே எழுதி முடியாது என்பது ஆனந்தரங்கரின் வழக்கமான அங்கலாய்ப்பாக இருந்தது!
1747 மார்ச் 24 பங்குனி 14 சுக்கிரவாரம்
… இற்றைநாள் சென்னப்பட்டணத்துத் தபாலிலே வந்த காகிதத்திலே எழுதியிருந்தபடிக்கு மேலே எழுதியிருக்கிறது. பார்த்துக் கொள்ளுகிறவர்கள் பார்த்துக் கொள்ளலாம். ஆனால் சென்னப்பட்டணத்தைப் போலொத்த பட்டணம் கையிலே அகப்பட்டும் பட்டணத்தை எப்போதையும் போலே பந்தோபஸ்து பண்ணி வைக்கிறதற்கு ஓர் அதிகாரஸ்தனை விவேகியாக ஏற்படாது போனபடியினாலேயும் அல்லது புதுச்சேரியிலே எசமானாகி இருக்கிறவராகிலும் கேள்வி இப்படியே கேட்டு அலைந்து போச்சுது. பட்டணத்திலுள்ளவர்களும் பட்டணமும் எப்படியாகிலும் போகுது:
பட்டணம் ஆளுகிற முசியே துய்ப்ளேக்சுக்கு இரண்டு விதத்திலே அபகீர்த்தி வந்தது. ஒரு காரியம் தாம் சுதாவாய்ச் செய்காரியம். தவிர காரியம். 1-வது கேள்வியாம்படிக் கேட்டு நடத்தாதே போன குற்றமொன்று. 2-வது அவர் பெண்சாதி தலைப்பட்டுதான் வரவேணுமென்று அவளொரு இடத்திலே சென்னப்பட்டணத்திலே வர்த்தகரண்டைக்கெல்லாம் மனுஷரை யனுப்புகிறதும் சென்னப்பட்டணத்திலே இவளொரு இடத்திலே திருட்டுப் பசங்கள் பாப்பனப்பிள்ளை என்கிறவனையும் வெங்கிட்டராயன் என்கிறவனையும் சென்னப்பட்டணத்துக்கனுப்பி அவளொரு இடத்திலே காறுபாறும் காசு சுற்றுகிற சாடையிலே நடத்துகிற படியினாலே, 3-வது சென்னப்பட்டணத்துக் கெசமானாயிருக்கிறவன் செவிடன். எழுதிக்கொடுத்தே யல்லாமல் தெரியாது.
அப்பாலும் மகாராசன் பிள்ளையாயிருந்தவனான படியாலே பணம் சம்பாதிக்கிறது வருத்தமென்று தெரியாமல் கூடைகூடையாய்க் கொட்டிக்கொள்ள வேணுமென்கிற நினைப்பினாலே கையிலே காசில்லாதவனுமான படியினாலே காசு கொடுக்கிறோமென்று சொன்னால் எந்தக் காரியம் மெப்படிச் செய்ய வேணுமோ அப்படி நடத்திப்போடுகிறது. விவேகமென்கிறது இந்த ஊரிலே குடியிருந்தும் அறியாதவன். தொழில்மார்க்கமறியான். அமுல்பண்ணி அறியாதவன். இப்படி அவிவிவேகத்துக்கெல்லாம் இருப்பிடமா யிருக்கிறவனை அந்த இடத்திற்கு வைத்ததுமல்லாமல் அதற்கு அனுசாரியாய் அவன் பெண்டாட்டி காலிலே நாருறிக்கிறவன். பச்சைப் பாம்புருட்டி. காசென்றால் பின்னை ஒன்றையும் யோசனை பண்ணாதவன். அவன் ஒரு பெரிய தவம் பண்ணுகிறாப்போலே ஆச்சுது.
இதற்கு ஒரு துபாசி பொறுப்பா ஏற்படாமல் கடற்கரைக்கு உத்தியோகத்துக்குப் போன மராட்டிய பாப்பாரன் ராமச்சந்திரய்யன் ஒருத்தனும் சேர்ந்த துபாசித்தனம் தஞ்சாவூர் சுருட்டுப் பொறுக்கி நல்லதம்பி யென்று காசு முகமறியாதவனொருத்தன் கூடினால் பட்டணத்துக்குக் கேடு வர வேணுமா? இப்போது எழுதப்பட்ட காரியத்திலே ஒன்று மாத்திரம் போதும். மூன்று நாலு கூடினால் என்னமாய்ப் போகாது? விவேகளிதிலே அறிந்துகொள்ளுவார்கள். விஸ்தரித்து எழுதலாகாதே, சுருக்கி எழுதினேன்.
1747 ஏப்ரல் 23 சித்திரை 14 ஞாயிற்றுக்கிழமை
இன்றைய தினம் இதுவரைக்கும் சென்னப்பட்டணத்திலே நடக்கிற அநியாயத்தை காகிதம் முனையிலே எழுதி முடியாது. இதல்லாமல் அந்தப் பட்டணத்திலேயிருந்த வர்த்தகர் லக்ஷாதிகாரிகளாக அல்லாமல் மற்றப் பட்டணங்களைப் போலே ஒரு பட்டணத்திலே பத்து வீட்டுக்காரர் வர்த்தகர் பத்துப் பணம் விசேஷித்து உண்டானவர்களாம். மற்றவர்கள் தற்போசிகள். தரித்திர குடித்தன முறையாயிருந்த பட்டணமல்லவே. அப்படிப்பட்ட பட்டணமும் கலாபமாகி இவர்கள் வசமாய் வந்தது முதல் அதற்கு முன்காலம் கலாபமமிருந்தாப் போலேயும் வருது. சுற்றிக்கொண்ட படியினாலே அவனவன் ரொக்கமாயிருக்கிறதை மாத்திரம், சிறிது பேர்கள் மாத்திரம் கொண்டு போனார்களே அல்லாமல் மற்றப் பேரெல்லாம் வீட்டிலே புதைத்தவனும் அடுப்பங்கறையிலே புதைத்தவனும் குளத்துக்குப் போகிற விடத்திலே புதைத்தவனும் சாக்கடையிலே புதைத்தவனுமாய் இருந்தாப்போலேயும் இருந்துபோய்விட்ட படியினாலேயும் மறுபடி இங்கிலீசுக்காரருக்குத்தானே பட்டணம் ஆகுதென்றிருந்த பேரும் கோட்டையென்ன கோட்டையா, எளிதில் பிடிபடுவோமென்று நம்பிக்கையாய் வைத்துப்போட்டுப் போனவர்களும் இப்படி நானாவிதமாய் பணதிகளை வைத்துப்போட்டுப் போனவர்கள் எல்லாரும் சமானமாய் சரக்குகள், வீட்டுத் தட்டுமுட்டுகள், தானியம் தவசம் கூட வைத்துப்போட்டுப் போனதெல்லாம் கொள்ளையிலே மாயே சிப்பாய்கள் சொல்தாதுகள் முதலாய் கடைசி கூலி வேலை செய்கிறவன் உள்பட அவறவனுக்குப் பத்துப் பணம் விசேஷித்து அகப்பட்டதே யல்லாமல் கூலிக்காரன் கூட நூறு வராகனுக்குக் குறைய அகப்பட்டு வந்தவனில்லை.
கூலிக்காரனிப்படியானால் முசியே லபோர்தொனே முதலான சர்தார்கள், கோன்சேல்காரர், கணக்கர், மற்றுமுள்ள உத்தியோகஸ்தருக்கு என்ன அகப்பட வேணுமோ இதன் பேரிலே யோசனைப்பண்ணிக் கொள்ளுங்கோள். மாயே சமேதாருக்கு மாத்திரம் இரண்டு லக்ஷம் வராகனுக்கு உண்டு. அவர்களுக்குக் கொள்ளை அகப்பட்டதென்றால் மற்றப்படி எவ்வளவோ என்று எந்தத் தொகையைக் கண்டு எழுதலாம்.
குபேரன் பட்டணம் கொள்ளை போனால் போன பேருக்கு அவனவன் அதிர்ஷ்டானுசாரமாய் அவனவன் அதிகார குணமாகப்பட்டது. அதுதான் சண்டை கொள்ளையிலே அகப்பட்ட படியினாலே அதை விசாரிக்க நியாயமில்லை. அப்பால் பட்டணமிவர்கள் சுவாசமான பிற்பாடு மேலே எழுதப்பட்டவர்கள், உத்தியோகஸ்தர், லக்ஷாதிகாரிகள் பிராஞ்சு கொடி போட்ட மட்டுக்கும் நாம் குடித்தனம் பண்ணுகிற பேர், பட்டணம் ஆர் வசமானாலும் அவன் கீழேயிருந்து குடித்தனம் பண்ணுவோம் என்றிராமல் அவனவன் கஷ்டகாலமென்னப்பட்டது. பிராஞ்சுக்காரர் பலவந்தமாய்க் கிரிஸ்தாமாக்கு வார்களென்றும் இங்கிலீசுக்காரரைப் போலே லிபிடுதாது இல்லை. மனம் பொறுக்கிறவர்களல்ல. காதறுக்கிறதும் தூக்குகிறதுங் கண்டனை தெண்டனை ரொம்ப வென்றாப் போலேயும் இவர்களுக்குப் பூத தயவில்லை என்றாப் போலேயும் மனம் சனுவுப்பட்டு விடுவிப்பில்லை யென்றும் இங்கிலீசுக்காரருக்கு மறுபடியும் பட்டணம் ஆகும். அவர்கள் விட்டுப் போகிறதில்லை யென்றும் அப்போது அவர்களண்டையிலே போய் நிற்கிற தெப்படி?
அவரவர் சாப்போனபடிக்கெல்லாம் யோசனை பண்ணிக்கொண்டு வராமல் நின்று போன படியினாலே அதைத் துரைத்தனம் பண்ணுகிற முசே துய்ப்ளேக்ஸ் குவர்னதோர் அவர்கள் அதற்கொத்த பேரை வைத்து அந்தத் தட்டுமுட்டுச் சரக்குகள் முதலாகிய தினுசுகளெல்லாம் எடுத்தெழுதி பத்திரப்படுத்தாமல் அதை அங்கே இருக்கிறவர்களுக்கு எழுதுகிறதைக் கண்டிப்பாயெழுதாமல் அவனுக்கு அவரவர்கள் சரக்கைப் பத்திரம் பண்ணி வைக்கவுமென்றும் எழுதினால் அவன் தனக்குச் சம்மதியான பேரை தனக்குத் திருடிக்கொண்டு வந்து கொடுக்கிறவர்களாய் அனுப்பினால் அவர்கள் பத்துப் பேராய்ப் போவார்கள். பேருக்குச் சத்தாய் திருடுவார்கள். அப்பால் எசமானுக்குச் சிறிது கொடுப்பார்கள். இதிலே அந்த வீட்டுக்காரர் வந்து பேசினால் அந்தச் சரக்கை வெளியே கொண்டு போகிறதுக்குக் கால்வாசி அரைவாசி பேசிக்கொண்டு விட்டு விடுகிறது.
இந்தப்படிக்குப் பேசாமல் போனவர்கள் சரக்கு எசமானுக்குச் சற்றும் போகிறவர்களுமாய்ச் சரிகட்டி கும்பினீர் தளத்தின் பேரிலே எவ்வளவாகிலும் எழுதி வைக்கிறதும் அதற்குப் பேருக்கு எழுதி அதையும் அப்பாலே அனுப்பி விடுகிறதும் இப்படி நானாவிதமாய் நாள்தோறும் நடக்கிற சேதியைக் குவர்னதோருடனே சொல்லி, இப்படியெல்லாம் நடக்கிறதென்றால் அப்போது மாத்திரம் கோபித்துக் கொண்டும் நீர் வர்த்தகருக்கு எழுதியனுப்பும். புதுச்சேரியிலே குடி வந்திருந்தால் உங்களுக்குத் தட்டுமுட்டுச் சரக்கு சப்பட்டைகள் சமஸ்தமும் கொடுத்து விடுகிறோம் என்று சென்னப்பட்டணம் வர்த்தகருக்கெல்லாம் சென்னப்பட்டணம் பிடிக்கப் போகிற நாள் முதல் பங்குனி 20 வரைக்கும் வர்த்தகருக்கு எழுதி அனுப்பச் சொல்லுகிறதும் அவரவர்கள் தங்கள் நிறைவு குறைவுகளை எழுதி, இப்படி அப்படி நடக்க வேணுமென்றும் சொன்னால் அதற்கு எங்கே இல்லாத கோபமும் வருவித்துக் கொள்ளுகிறதும் அதற்குத்தக்க உத்தரவில்லாமற் போகிற படியினாலேயே அவர்களுக்குப் பீக்காம் விடாமல் அவர்களுக்கு அவர்களே எழுதுகிற உத்தரவிலே அவர்கள் பேரிலே மெதலையாக்கி பதிலுத்தரவு இரண்டு மூன்று தரம் எழுதி வெங்குபாது கண்டி வெங்கய்யன், வரதய்யன் முதலான பேர்கள் அனுப்பினதற்கு அவர்களும் இங்கிலீசுக்காரரும் சென்னப்பட்டணத்தை விடத்தக்கதில்லை யென்றும், அவர்களுக்கும் கப்பல் வருகிற சாடை யிருக்கிறதென்றும் இந்தத் தடுக்கிலே வராமற் போனார்கள்.
1747 நொவம்பர் 19 கார்த்திகை 7 ஆதிவாரம்
இற்றைநாள் காலத்தாலே துரை கோவிலுக்குப் போய் வந்த பிற்பாடு நானும் போனேன். அப்பால் சென்னப்பட்டணத்திலே இருக்கிற குடிகள் அனைவரும் அப்போது கண்டி வெங்கய்யரைப் பயணம் பண்ணித் துரை பேருக்கு ஒரு காகிதமும் என் பேருக்கு ஒரு காகிதமும் எழுதியனுப்பினார்கள். அந்தக் காகிதத்துத் தலைப்பு முன் சிந்தாதிரிப்பிள்ளையார் கோவில் மட்டுக்கும் இடித்து நிரவினார்கள். அந்த மட்டிலே நிறுத்தி யிருந்தது. இப்போது லாகிரி கடைகள் மட்டுக்கும் இடிக்கிறதாய்க் கூச்சலிட்டார்கள்.
நாங்கள் சர்வ சோபானமும் போக்கடித்துக் கொண்டு வீடாகிலும் தப்பினால் போதுமென்று நிழலிலே இருப்போமென்றும் இதையும் இடிப்போ மென்றால் எங்களுக்கு விஷப்பிரயோகம் பண்ணிக்கொள்ளுகிறதே யல்லாமல் வேறே இல்லையென்றும் அப்பால் உபசாரமும் தங்களுக்கு வந்த கஷ்ட காலத்தையும் எண்ணி ரொம்பவும் எழுதி அவர்கள் அனைவரும் கையெழுத்துகள் போட்டனுப்பினார்கள். அந்தக் காகிதத்திலே இருந்தது என் கையிலேந்தி என்ன எழுதி இருக்குதென்று கேட்டார்.
தெலுங்கிலே எழுதி சென்னப்பட்டணத்து வர்த்தகர் குடிகள் அனைவரும் கையெழுத்துப் போட்டிருக்கிறார்களென்று உபசாரம் ரொம்பவும் எழுதினதாய்ச் சொல்லிட்டுப் படிக்கச் சொல்லி உத்தாரம் கொடுத்தீர்களா? முன் சென்னப்பட்டணம் கலாபத்திலே சர்வ சோபானமும் போக்கடித்துக் கொண்டு காலம் கருப்புகளினாலே மெலிந்து வேறே ஆதரவில்லை. உம்முடைய ஆதரவாகிய நிழலில் வந்து சேர்ந்து சாக்ஷாமடம் பிரமமாகிய வெய்யிலிலே அடிபட்ட கங்கையைச் சம்பனம் பண்ணிக்கொள்ளுவோ மென்று யோசனை பண்ணி வந்த எங்களை ரட்சிக்கிறது பெரிய காரியமே யல்லாமல் அட்டி சொல்லுகிறது பெரிதல்ல. சுவாமி தயவினாலே உமக்கு வெகு கீர்த்தியும் புண்ணியமும் அநேக திக்கு விஜயமும் உண்டாகப் போகிறதென்று இத்தனை சனங்கள் எழுதிக்கொண்ட மன்றாட்டின் படிக்குத் தயவுபண்ணினால் உமக்குச் சுவாமி மேலே எழுதப்பட்ட இத்தோதிக்க ஐசுவரியமெல்லாம் கொடுப்பார் என்றும் அந்தப்படிக்கு நாங்கள் உத்திரவாதியென்று எழுதினார்களென்றும், பின்னையும் எப்படி ஸ்தோத்தரித்துச் செப்பனிட வேணுமோ அந்தப்படிக்கெல்லாம் சொன்னதற்கு அவர் ஒரு பேச்சாய் என் வாய் மூடத்தக்கதாகச் சொன்னார்.
நான் அந்தப் பட்டணம் வைக்க வேணுமென்கிற மனதிருந்தாலல்லவோ இந்தப் பேச்சுகளெல்லாம் கேட்க வேணும். அதைச்சுற்றித் தரையாக்கி அவர்களைக் கொண்டு வந்து புதுச்சேரியிலே சேர்த்துப் பெரிய பட்டணமாக்க வேணுமென்று நினைத்திருக்கிற எனக்கு நீ சொல்ல வருகிற யோசனை சரிப்படுமா? சுவாமி தயவினாலே இந்தப் பட்டணம் சென்னப்பட்டணத்தைப் போலவே நூறு பங்கு அதனமாய்ப் பண்ண வேணும் என்று நினைத்திருக்கிறதற்கு நீ சகாவாய் இருக்கிறாப்போலே காணவில்லை. உன் நினைப்பைப் பார்த்தால் என்று ஒரு வாட்டு போட்டார். அதற்கு நான் போன வருஷந்தானே என்ன சொன்னேன். விபவ முதற்கொண்டு இந்தப் பட்டணம் மாமூறாயம் காபிரு பலமாய் நடக்கும். அப்போது வெகுசனம் வீடுகட்டுகிறதற்கு இடமில்லாமல் திரியப் போகிறார்களென்று சொல்லவில்லையா? அதற்கு இன்னும் நாலு மாதம் கெடுவு போகவேணும் என்று சொன்னேன். நல்லது. வந்த பிராமணனுக்குத் தெரியச் சொல்லி அந்த சனங்களெல்லாம் இவ்விடத்துக்கு வந்து வீடுகட்டி யிருக்கத்தக்கதாக எப்படிச் சொல்ல வேணுமோ அப்படிச் சொல்லி அதற்கு அவர்களுக்கு உத்தாரம் சம்பிரமமாயிருக்கத் தக்கதாக எழுதி பிராமணனுக்குத் தெரியச் சொல்லி அனுப்பிவிடு என்று சொன்னார். …
1747 நொவம்பர் 27 கார்த்திகை 15 சோமவாரம்
தம்பிச்சா முதலி மருமகன் கனகராயமுதலிக்குச் சகலபாடியாகிய வெள்ளைக் குஷ்டம் பிடித்த மலைக்கொழுந்து முதலியைச் சென்னப்பட்டணத்துப் பெரிய துபாசித்தனம் பண்ணுகிறதற்கு ஏற்பாடு செய்து விசாரித்து நியமித்து மலைக்கொழுந்து முதலியை முசியே பெடுத்தல்மிக்குக் காண்பித்து இவன் பெரிய துபாசி, இவனைக்கூட அழைத்து … …. … ப்போவென்றும் அப்பால் திரிந்திடும் திருட்டுப் பயல், சுருட்டுப் பொறுக்கிக்கொண்டு, சின்னதுரை வீட்டிலே எச்சல் பீங்கான் எடுத்துக்கொண்டு திரிந்த நல்லதம்பி என்கிற பாளையக்காரனென்று காண்பித்து அவனுக்குத் தளவாய் நாய் பிடித்த சவுரி என்கிற பள்ளிப்பயலையும் அப்பால் மலைக்கொழுந்து முதலி மகன் வற்லாமுக்கு மூத்தவன் கொழுந்தையப்ப னென்கிறவனைச் சாவடிக்குத் துபாசி என்று நியமித்த பேரைக் காண்பித்து அழைத்துப் போகச் சொல்லி சொன்னார்.
அப்பால் முசியே பெடுத்தல்மேயையும் மோராவையும் சென்னப்பட்டணத்திற்குப் போகத்தக்கதாக பயணமாய் அனுப்புவித்துக் கொண்டு போனார்கள். துபாசிகளும் பாளையக்காரரும் கூடப் போனார்கள். இந்தப் பெரிய துபாசியும் இந்தப் பாளையக்காரரும் வந்த வரலாறென்ன வென்றால் மதாம் துய்ப்ளேக்சுக்கு ஆயிரத்தைந்நூறு ரூபாய் மட்டுக்கும் நல்லதம்பி பள்ளிப்பயல் செலவழித்துப் பாளையக்கார உத்தியோகம் வாங்கிக் கொண்டான். இதல்லாமல் ஒரு உடம்படிக்கைச் சென்னப்பட்டணத்திலே முன்னேயிருந்த பாளையக்காரன் வாரினதெல்லாம் அவன் எடுத்துக்கொண்டு போனானென்றும் மனதிலே எப்போதும் தைரியத்தைப் பாராட்டித் கொண்டு இருக்கிறபடியினாலே துபாசிகளை பாளையக்காரன் எல்லாம் தன் மனுஷராய்ப் போட்டுச் சும்மா வாரிப்போடலாமென்றும் சகலமும் தன் அமுலாய்த் தன் அதிகாரத்தின் பேரிலே தன் சொல்லின் பேரிலே நடத்திக் கொள்ளலாமென்றும் பெடுத்தல்மி துரைத்தனம் பண்ணப் போகிறவன் முசியே துலோராம் போலே விவேகியல்ல வென்றாப்போலேயும் இப்படி எல்லாம் யோசனைபண்ணி அந்தப் பக்கத்திலே எழுதப்பட்ட துபாசிகளையும் பாளையக்காரரையும் அமர்த்தி முசியே துய்ப்ளேக்சுக்கு, முசியே துலோராம் நடப்பித்த காரியத்திற்கெல்லாம் சாதகம் வரவேணு மென்றாப் போலேயும் கொள்ளையிடுகிறதற்கு லகுவென்றாப் போலேயும் இப்படியாக அவர் புத்தியை மயக்கித் தன் அதிகாரம் செலுத்தவும் காசு சுற்றவும் யோசனை பண்ணித் துரை கையிலே உத்தாரம் வாங்கிக் கொடுத்து அனுப்புவித்தான். …
1747 டிசம்பர் 10 மார்கழி 8 செவ்வாய்க்கிழமை
அப்பால் சென்னப்பட்டணத்திலே யிருந்து முசியே பெடுத்தல்மி, மலைக்கொழுந்து முதலி, தபாலிலே யிருந்த சேவகன் என்றவன் நயினாராய் வந்த நல்லதம்பி எச்சல் பீங்கானெடுத்தவன். இவனுக்கு நயினார் உத்தியோகம் பண்ணவும் பெரிய துபாசித்தனம் பண்ணவுமிவர்கள் யோக்கியரல்ல. வேறே அனுப்பச் சொல்லி இப்படியாகச் சென்னப்பட்டணத்திலே யிருந்து முசியே பெடுத்தல்மி இவ்விடத்து கொமிசேலுக்கு எழுதி அனுப்பினார். அவர் எழுதியனுப்புவித்தது, அவர்களை அவ்விடத்திலே நடப்பித்த காரியமென்ன வென்றால் நல்லதம்பி என்கிற பள்ளிப்பையன் பாளையக்காரனும் வற்லாம் தமையன் சாவடி துபாசி கும்பினீர் கொடுத்தியேர் முகாந்திரமாக உத்தியோகத்துக்கு ஏற்பட்டு அதிகாரம் பண்ணிக்கொண்டு வருகிற சமயத்திலே அவ்விடத்திலே அரும்பாத்தைப்பிள்ளை உத்தியோகமாய்ப் போயிருக்கிற திருக்காமிப் பிள்ளை குமாரனும், முத்தய்யனும், சுப்பய்யன் குமாரனும், செல்லப்பிள்ளையும் இவர்கள் இரண்டு மூன்று பேரும் கூடிக்கொண்டு அவ்விடத்திலே முசியே மோறவுடனே என்னென்ன சொன்னார்களோ தெரியாது.
அதன் பேரிலே ஒரு நாள் வேளையிலே முசியே மோற, சாவடி நியாயத்துக்குப் போனவிடத்திலே நல்லதம்பி என்கிற பள்ளிப்பையன் சிறிது நியாயங்கள் சொல்லப்போன விடத்திலே மனதிலே ஒன்றை நினைத்துக்கொண்டு அவனை ஏன் என் உத்தாரமில்லாமல் காவல் வைத்தாய், அவனை ஏன் விட்டுவிட்டாயென்று ஒன்றைப் போட்டு ஒன்றை சுமத்தி உனக்கும் பாளையக்கார உத்தியோகத்துக்கும் எத்தனை தூரம், உனக்கு எச்சல் பீங்கான் எடுக்கத் தெரியுமே யல்லாமல் இந்த உத்தியோகத்துக்கு நீ பாத்திரமா? உனக்கென்ன தெரியுமென்று பாளையக்கார உத்தியோகத்துக்கு வந்தாயென்று சொல்லி பெரம்பை எடுத்துக்கொண்டு பத்து பதினைந்து அடி வரிசையாய் மாட்டிவிட்டு, சூத்துமேலே இரண்டு உதை போட்டுத் துரத்தி விட்டார்.
அதன் பேரிலே வற்லாம் தமையன் சாவடி துபாசித்தனம் பண்ணப்போன விடத்திலே அவனுக்குப் பேச்சு நன்றாய் தெரியவில்லை யென்கிறதாய் இந்த உத்தியோகத்துனுடைய சாடை யுனக்கென்ன தெரியுமென்கிறதாய் சூத்துமேலே இரண்டு உதையைக் கொடுத்து போகச் சொல்லி முசியே பெடுத்தல்மி அண்டைக்குப் போய் இவர்கள் இந்த உத்தியோகத்துகத்துக்கு யோக்கியரல்ல. பெரிய துபாசி கும்பினீர் கொடுத்த சியோமாய் வந்திருக்கிற மலைக்கொழுந்து முதலி டபாலிலே சேவகனா யிருந்தவன். இவனுக்கு வர்த்தகருடைய தாரதமியம் தெரியுமா? அவரவருடைய மட்டந்திட்டம் தெரியுமா? இவனுக்கு என்ன தெரியும் என்று துபாசியாய் அனுப்புவித்தார்கள்? இந்த உத்தியோகத்திலே பெரிய மனுஷனாகவும் யோக்கியனாகவும் இருக்க வேணுமே யல்லாமல் இப்படிப்பட்ட சுருட்டுப் பொறுக்கிகளையா வைக்கிற தென்றும், மலைக்கொழுந்து முதலியையும் ஒரு நாள் சூத்துமேலே உதைத்து இந்த உத்தியோகத்தின் லக்ஷணமே தெரியுமா வென்று சொல்லி அதன் பேரிலே இவர்களெல்லோரும் முட்டாள்கள்; இவர்கள் மதாமுடைய ஒத்தாசை அனுசரணையின் பேரிலே இவ்விடத்திலே யிருக்கிறதெல்லாம் கொள்ளையிட்டு அனுப்புவிக்கிறோமென்று சொல்லி வந்திருக்கிறார்களென்று யோசனை பண்ணி, அவ்விடத்திலே அவர்களுக்குத் தக்கபடிக்கு நடத்திப்போட்டு இவ்விடத்துக் கொமிசேலுக்கு எழுதிக்கொண்டார்கள். வேறே மனுஷரை அனுப்பச் சொல்லி எழுதினார்கள்.
அப்படியிருக்க, அவ்விடத்திலே உதையும்பட்ட பெரிய மனுஷர் இவ்விடத்து மதாமுக்கு எழுதிக்கொண்டதென்ன வென்றால்: முத்தையனும் சுப்பையன் குமாரனும் செல்லப்பிள்ளையும் சொல்லி அடிப்பித்தார்களென்று சொல்லி எழுதியனுப்பின கடுதாசியை மதாம் திரான்சிலிட்டு பண்ணி துரையவர்கள் கையிலே கொடுத்தாள். அந்தக் கடுதாசியைப் பார்த்துக்கொண்டு அவர்கள் இரண்டு மூன்று பேரையும் இவ்விடத்துக்கு அனுப்புவிக்கச் சொல்லி எழுதி முசியே பெடுத்தல்மிக்கு எழுதின காகிதத்திலே அவர்களுக்குத் தெரிந்ததும் தெரியாததற்கும் பத்து நாளைக்கு கவையிருந்தார்களானால் தன் இச்சையாய் தெரிந்துவிட்டுப் போகுது. அவர்கள் பேரிலே சற்று தயவுபண்ணிக் கொண்டு வர வேணுமென்று உபசாரமாய் எழுதியனுப்புவித்தார்கள். மற்றப்படி இனிமேலவர்கள் இவ்விடத்துக்கு வந்த பிறகு என்ன நடக்குதோ அறியவேணும்.
(தொடரும்)