தேவனாம்பட்டணம். சென்னைப் பட்டிணத்துக்கும் நாகப்பட்டினத்துக்கும் இடைப்பட்ட பட்டிணம், துறைமுக நகரம். சென்னைக்கு அடுத்தபடியாக இங்கிலீஷ்காரர்கள் வணிகத்துக்காகக் கால்கொண்ட இடம் இந்தத் தேவனாம் பட்டிணம். பின்னர் இது, வணிகத்திற்கு மட்டுமல்ல, ஆட்சி அதிகாரத்திற்கான முக்கியக் கேந்திரமாகவும் மாறியது.
தேவனாம்பட்டணத்தில் இருந்து கூப்பிடு தூரத்தில்தான் புதுச்சேரி நகரம். இங்குக் குண்டு போட்டால் அங்குச் சத்தம் கேட்கும். புதுச்சேரியில் பிரெஞ்சு ஆட்சி நடந்து கொண்டிருந்தது. இங்கிலீஷ்காரர்களுக்கும் பிரெஞ்சுக்காரர்களுக்கும் தொடக்கத்தில் சுமுகமான உறவு இருந்திருப்பதையே ஆனந்தரங்கரின் நாட்குறிப்பின் மூலம் நாம் அறியமுடிகிறது.
1742 நவம்பரில் தேவனாம்பட்டணம் நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட மேஸ்தர் மானுசன் என்பவர், துபாசிகள் கிருஷ்ண நாயகர், அவரதுத் தம்பி முத்தாலு நாயகர் ஆகியோருடன், சென்னையில் இருந்து தேவனாம்பட்டணம் செல்லும் வழியில் புதுச்சேரி வருகிறார். ஆனந்தரங்கர் அவர்களை வரவேற்று விருந்து உபசாரம் செய்து வழியனுப்பி வைக்கிறார். இதே நபர்கள் அடுத்த ஓராண்டில் மீண்டும் சென்னை பயணமாகின்றனர். செல்லும் வழியில் பிள்ளையின் தண்ணீர்த் தோட்டத்தில் இரவு தங்கியிருந்து அடுத்த நாள் காலை புறப்பட்டுச் சென்றனர்.
தொடர்ந்து, 1744 பிப்ரவரியில் மேஸ்தர் இன் என்கிறவர் தேவனாம்பட்டணம் துரைத்தனத்திற்கு வந்தார். அவரும் சென்னையில் இருந்து புறப்பட்டு, வழியில் புதுச்சேரி வருகிறார். இப்போது அவரை எதிர்கொண்டு வரவேற்று, அழைத்தவர் புதுச்சேரி ஆளுநர் துய்ப்ளேக்ஸ். இருவரும் கோட்டைக்குள் நுழையும் போதும், இருக்கைகளில் அமரும் போதும், தித்திப்பு தின்னும் போதும், சாராயம் குடிக்கும் போதும் ஒவ்வொரு முறையும் 21 பீரங்கிகள் குண்டுகள் முழங்க (காவல்துறையில் தற்போது 21 குண்டுகள் முழங்குவதற்குத் தொடக்கப்புள்ளி இதுபோன்ற நிகழ்வுகளாக இருக்கலாம்) மரியாதை செய்யப்பட்டது. தொடர்ந்து, அடுத்த நாள் காலை ‘அஸ்த நக்ஷத்திரத்திலே ஆறு மணிக்கு சூரிய உதயமாகும் போது மேஸ்தர் இன் தேவனாம்பட்டணத்துக்குப் போனார்’ என்று குறிப்பிடுகிறார் ஆனந்தரங்கர்.
இப்படியாகச் சென்று கொண்டிருந்த புதுச்சேரி – தேவனாம்பட்டணம் உறவில் திடீரென விரிசல் ஏற்பட்டுள்ளது. புதுச்சேரியில் தங்கியிருந்த இங்கிலீஷ்காரர்களின் வக்கீல் ஆதியப்பன் உள்ளிட்டவர்கள் உளவு பார்த்ததாக 1745 டிசம்பரில் கைது செய்யப்பட்டனர். இதற்கு முந்தைய ஐந்து மாதங்களுக்கான தகவல்கள் ஆனந்தரங்கரின் நாட்குறிப்பில் இல்லை. இதனால் இடைப்பட்ட நாட்களில் பிரெஞ்சு – இங்கிலீஷ் நிர்வாகங்களுக்கு இடையில் ஏற்பட்ட உரசல்களை நம்மால் உணர இயலவில்லை.
இதற்கிடையில், 1746 ஆம் ஆண்டு தொடக்கத்தில் தேவனாம்பட்டணத்தின் மீது பிரெஞ்சுக்காரர்கள் எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம் எனும் தகவல் பரவி, மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. அதே நேரம் புதுச்சேரியில் கோட்டை கொத்தளங்கள் பலப்படுத்தப்பட்டன. காயம்பட்டு வருபவர்களுக்குச் சிகிச்சை அளிப்பதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இவற்றை எல்லாம் விவரிக்கும் ஆனந்தரங்கர், புதுச்சேரிக்கு ஜெயமும், தேவனாம்பட்டணத்திற்கு அப ஜெயமும் வந்திருக்கிறது, இங்கு ஜெயலக்ஷ்மியும் அங்கே மூதேவியும் குடியேறி இருக்கின்றனர் என்கிறார்!
1741 ஆகஸ்டு 20 ஆவணி 8 ஆதிவார நாள்
இராத்திரி இரண்டு மணிக்கு தேவனாம்பட்டணத்து துரையவர்கள் மெஸ்த்தர் ஆபர்ட்டு அவர்கள் செண்ணு போனார்கள். மறுநாள் 9 உ-க்கு 21உ சோமவாரம் நாள் சாயங்காலம் ஆறுமணிக்கு எடுத்தார்கள். எடுக்கிற போது சாயங்காலம் ஆறுமணி துவக்கி ஒன்பது மணி மட்டுக்கும் பொறுத்துப் பொறுத்து பீரங்கி போட்டார்கள்.
1742 நவம்பர் 13 கார்த்திகை 1 செவ்வாய்க் கிழமை நாள்
காலமே 7 மணிக்கு மேஸ்தர் மானுசனவர்கள் தேவனாம்பட்டணம் துரைத்தனக்கு சென்னப்பட்டணத் திலேயிருந்து மேற்கு வாசல் அலங்கரித்து ஓரமாய்ப் புறப்பட்டு தேவனாம்பட்டணத்துக்குப் போகிறார். அவர் துபாசி கிருஷ்ண நாயகரும் அவருடைய தம்பி முன்னாலே மேஸ்தர் ஆப்பர்ட்டு அவர்களண்டையிலே முன்னாலே தேவனாம்பட்டணத்திலே துபாசியாயிருந்து மேஸ்தர் ஆப்பர்ட்டு செத்துப் போனதும் பிற்பாடு சென்னப்பட்டணத்துக்குப் போன முத்தாலு நாயக்கரும் கூட தேவனாம் பட்டணத்துக்குப் போனார்கள். அவர்கள் போகிற போது முத்திரசப்பிள்ளை சாவடி மட்டுக்கும் நாமும் ஏகாம்பரமய்யரும் கூடப்போய் இந்த மத்தியானத்துக்கு இவ்விடத்திலே எல்லாருமாய் சாப்பிட்டு மத்தியானத்துக்கு மேல் புறப்பட்டுப் போய்விட்டார்கள். நாமும் ஏகாம்பரமய்யரும் சிங்கர் கோயிலே யிருந்து இராத்திரிக்கு சுவாமி தரிசனம் பண்ணி காலமே வில்லியனூருக்குப் போய் மத்தியானத்துக்கு சுவாமி தரிசனம் பண்ணி அங்கே மத்தியானத்துக்கு சாப்பிட்டு சாயங்காலம் துக்கு ஒழுகரையே வந்து துரையவர்கள் பேட்டி பண்ணிக்கொண்டு இராத்திரி ஏழு மணிக்கு புதுச்சேரி வந்து சேர்ந்தோம்.
1743 தெசம்பர் 26 மார்கழி 15 வியாழக்கிழமை நாள்
மத்தியானத்துக்குமேல் தேவனாம்பட்டணத்திலே துரைத்தனம் பண்ணிக் கொண்டிருந்த மேஸ்தர் மானுசானும் அவருடைய துபாஷி கிருஷ்ண நாய்க்கரும் முத்தாலு நாய்க்கரும் கூட தேவனாம்பட்டணத்திலே யிருந்து பயணம் புறப்பட்டு சென்னப்பட்டணத்துக்குப் போகத்தக்கதாக சாயங்காலம் ஏழு மணிக்கு வந்தவர்கள் இந்த ஊருக்குள்ளே வராமல் அலங்கத்தைச் சுற்றினாப் போலே புறப்பட்டு ராத்திரிக்கு நம்முடைய தண்ணீர்ப் பந்தலிலே யிருந்து அப்புறம் பொழுது விடிய நாலு நாழிகை இருக்கும் போது எழுந்திருந்து அப்புறம் பயணம் புறப்பட்டுப் போனார்கள்.
ஆனாலிவர்கள் சென்னப்பட்டணத்துக்குப் போகிறது எதினாலே யென்றால், சென்னப்பட்டணத்திலே துரைத்தனம் பண்ணின ஆதியப்ப நாயக்கருடைய துரை மேஸ்தர் பிரிங்கன் சீர்மைக்குப் போகிறார் என்றும் சென்னப்பட்டணம் துரைத்தனம் மேஸ்தர் மார்சும் சின்னத்துரைத்தனத்திற்குத் தேவனாம் பட்டணத்திலேயிருந்து போகிற மேஸ்தர் மானுசான் இருக்கப் போகிறார் என்று சொல்லுகிறார்கள். முத்தாலு நாயக்கர் மேஸ்தர் மார்சுவண்டையிலே துபாசியாக இருக்கப் போகிறார் என்றும் சொல்லுகிறார்கள்.
1744 பிப்ரவரி 2 தை 23 ஆதிவார நாள்
காலமே தேவனாம்பட்டணத்துக்கு துரைத்தனமாய் வருகிற மேஸ்தர் இன் என்கிறவர் சென்னப்பட்டணத்திலே யிருந்து இன்றைய நாள் காலமே எட்டுமணிக்குப் புதுச்சேரிக்கு வந்தார். வரும்போது இவ்விடத்திலே யிருந்து கொம்மி செலியர் நாலத்து இரண்டு பேர் எதிர்கொண்டு போய் முத்தாலுப்பேட்டைக்கப்புறம் நயினியப்பபிள்ளை சாவடி மட்டுக்கும் போய் அழைத்துக்கொண்டு வந்தார்கள். வரும்போது கெவுனியிலே பதினைந்து பீரங்கி போட்டார்கள். பிற்பாடு துரையவர்கள் வீட்டினண்டை வந்தவுடனே துரையவர்கள் எதிர்கொண்டு அழைத்துக்கொண்டு போய் இருவருக்கும் சந்திப்பானவுடனே கோட்டையிலே 21 பீரங்கி போட்டார்கள்.
அதின்பேரிலே கப்பல் மேலே எல்லாம் அந்தப்படியே 21 பீரங்கி விழுக்காடு ஒரு வரிசை தீர்த்தார்கள். அப்பால் மத்தியானம் பனிரெண்டு மணிக்கு தீனித்தின்றான வுடனே 21 பீரங்கி போட்டார்கள். பிற்பாடு எழுந்திருக்கும் போதும், ஒருதரம் தித்திப்பு வைக்கும் போதுமான ஒருதரம், சாராயம் குடிக்கும் போதும் ஒருதரம் இப்படி நாலாவர்த்தி பீரங்கி போட்டார்கள். அந்த மட்டிலே சாயங்காலம் ஐந்து மணிக்கு கெவுனிக்கு வெளியே சாரி போகத்தக்கதாக துரையவர்கள் துய்ப்ளெக்சு அவர்களும் தேவனாம்பட்டணத்து துரையவர்கள் மெஸ்தர் இன் அவர்களும் ஒரு வண்டியின் பேரில் ஏறிக்கொண்டு பின்னையும் இருக்கப்பட்ட கொமிசியேலவரல்லாரும் சவாரி போய் ஆறுமணிக்கு மறுபடியும் வந்தார்கள். அந்த மட்டிலே ராத்திரிக்கும் இவ்விடத்திலே தானே யிருந்து தீனி தின்று நித்திரை போய் நாலு மணிக்குப் பயணம் புறப்பட்டு தேவனாம்பட்டணம் துரைத்தனக்குப் போனார்.
போனவர் 24 திங்கட்கிழமை நாள் காலமே பஞ்சமி அஸ்த நக்ஷத்திரம் விடிந்து இரண்டு நாழிகை மட்டுமிருக்கையில் அஸ்த நக்ஷத்திரத்திலே ஆறு மணிக்கு சூரிய உதயமாகும் போது போய் தேவனாம்பட்டணத்துக்குப் போனார்.
1744 சூன் 11 ஆனி 1 வியாழக்கிழமை நாள்
மத்தியானம் தேவனாம்பட்டணம் துபாசி ஒரகண்டி ரங்கப்ப நாயக்கர் சென்னப்பட்டணத்திலே கலியாணம் பண்ணிக்கொண்டு இவ்விடத்திற்கு வந்தார். வந்தவுடனே மத்தியானமும் ராத்திரிக்கும் நம்முடைய வளவிலே விருந்து பண்ணிவித்துச் சிறப்பாக வெகுமானமும் கொடுத்தோம். மறுநாள் (சூன் 12) 2 சுக்கிரவாரம் நாள் காலமே அனுப்பிவித்துக் கொண்டு தேவனாம் பட்டணத்துக்குப் போனார்.
1745 தெசெம்பர் 31 மார்கழி 20 வெள்ளிக்கிழமை நாள்
ராத்திரி கிரிமாசி பண்டிதரும் தலையாரி சேவகருமாய்ப் போய் தேவனாம்பட்டணம் வக்கீலாய் இவ்விடத்திலே யிருந்த ஆதியப்பனையும், அவனுடன் கூடேயிருந்த குட்டை வடுகச் சேவகனையும் பின்னையும் இரண்டு துலுக்கச் சேவகரையும் ஆக நாலு பேரையும் முதலியார்பேட்டையிலே ஒரு வீட்டிலே குடியிருக்கும் போது அவன் காகிதம் எழுதி, இரண்டு பேர் துலுக்கர் சேவகர் கையிலே கொடுத்ததைப் பார்த்துக்கொண்டிருந்து பிடித்துக்கொண்டு வந்து சாவடியிலே வைத்து அதன் பிறகு அவன் எழுதின காகிதத்தைப் படித்துப் பார்த்து, உடனே ஆதியப்பனை மாத்திரம் மறுநாள் ராத்திரி கோட்டை வாசலிலே மேல்புறத்திலே இருக்கிற பாதாளக் கிடங்கிலே கொண்டுபோய்க் காலிலே பெரிய மாச்சு விலங்கு போட்டு மேலே இருந்த புடவையையும் பிடுங்கிக் கொண்டு அரைஞாண் கயிற்றையும் அறுத்துப் போட்டு வைத்தார்கள்…
1746 பிப்ரவரி 6 தை 28 ஆதிவாரம் நாள்
கூடலூரிலே தேவனாம்பட்டினத்திலே நடந்த சேதி என்னவென்றால் புதுச்சேரியார் தங்களைப் பிடிக்கிறதற்கு வருகிறார்களென்கிற படியினாலே பட்டணத்தை வாங்க வருகிறார்களென்றும் அவர்களும் தேவனாம்பட்டணத்துக் கோட்டையையும் கூடலூரையும் சொலுதாதுகளை வைத்துக்கொண்டு சாலை வழியிருக்கிற விடத்திலே கர்நாடக சிப்பாய்களில் இருபது முப்பது பேருமாகப் படையைத் தயார் பண்ணி வைத்துக் கொண்டார்கள். … (நாட்குறிப்பில் 13 வரிகள் கிழிந்து போயிருக்கின்றன.)
பிராஞ்சுக்காரர் எந்தச் சமயத்திலும் கூடலூரையும், தேவனாம்பட்டணத்துக் கோட்டையையும் பிடிக்கிறதற்காக, எந்தச் சமயத்திலும் தாக்கப்படும் என்று மஞ்சகுப்பம், திருப்பாப்புலியூரிலுள்ள ஜனங்கள் சகலரும் தங்கள் தட்டுமுட்டுச் சாமான்களையும் ஆஸ்திபாஸ்திகளையும் வெகுதூரத்தில் பந்தோபஸ்து பண்ணிவைத்துவிட்டுச் சண்டை கடுமையாக நடக்கிறதானால் குடும்பங்களையும் அனுப்பி விடுவதற்குத் தக்கதாக முஸ்தீது பண்ணி வைத்திருந்தார்கள்.
1746 மே 11 வைகாசி முதல் தேதி புதவாரம்
இந்த நாள் புதுச்சேரி பட்டணத்திலே கேட்ட சேதியென்ன வென்றால் தேவனாம்பட்டணத்துக் கோட்டையிலே பீரங்கி வேட்டு விஸ்தாரமாய் கேட்கப்பட்டது. சித்திரை 31 செவ்வாய்க்கிழமை ஐந்து மணிக்கு இங்கிலீஷ் கப்பல் சண்டை கப்பல்களுக்கு எல்லாம் கொம்மாந்தனாய் வந்திருந்த முசே பர்னேத்து என்கிறவன் வியாதியாய் இருந்து மரணத்தை அடைந்தார். அது நிமித்தியமாய் கப்பல்கள் மேலேயும் கரையிலேயும் விஸ்தாரமாய் சுட்டார்கள். எல்லாரும் லோக வழக்கமாய் இந்த நாள் இராத்திரி எட்டு மணிக்குக் கொண்டுபோய் அடக்கினார்கள். அப்போதும் கோட்டையின் பேரிலேயும் கப்பலின் பேரிலேயும் ஆறரை மணிக்குத் துவக்கி யெட்டேகால் மணி மட்டுக்கும் பீரங்கி சுட்டார்கள். இந்த இரண்டு நாளும் காலத்தாலே மாறும் இப்படித்தான் விஸ்தாரமாய் சுட்டார்கள்.
எல்லாரும் வழக்கமாய்ச் சொல்லிக்கொள்ளுகிறதென்ன வென்றால் இந்த நாளும் இங்கிலீஷ்காரருக்கு ஜெயகாலமும் பிரஞ்சுக்காரருக்கு அபஜெய காலமும், இங்கிலீஷ்காரருக்கு அபஜெயகாலமுமாய் நடக்கும். அதுக்கு ஏஷ்யந்தான் பற்னெத்து என்கிற கமாண்டோர் செத்ததும் அதுக்குப் பத்து நாளைக்கு முன்னே கொள்ளிட முனையிலே ஒரு கப்பல் உடைந்ததும் இந்தக் கப்பல் கப்பித்தான்மாருக்குள்ளே ஒருத்தனையும் பின்னையும் பத்துப் பனிரெண்டு மத்திலேத்தையும் தீவுக் கோட்டையிலே இறங்கி மாடு சுட்டு மனுஷரையும் அலக்கழித்த விடத்திலே தீவுக்கோட்டையிலே தானே தானியம் இருக்கிற கப்பல் கப்பித்தானையும் பத்து பனிரெண்டு மத்திலேத்தையும் பிடித்துக்கொண்டு வந்து, தீவுக்கோட்டையிலே காவல் வைத்ததினாலேயும் இப்படி ஒன்றுக்கொன்று துக்க பரம்பரையாய் வருகிற படியினாலே அபஜெயத்துக்குத் துவக்கிச் சென்றும், சயம் வரச்சேயும் அப்படித்தான் அந்தக் கப்பலைப் பிடித்தான். இந்தக் கப்பலைப் பிடித்தான். அங்கே ஜெயங்கொண்டான். இங்கே ஜெயங்கொண்டான் போலே இனிமேலும் அப ஜெயமும் அங்கே நஷ்டமும் வந்தது. இங்கே நஷ்டம் வந்தது என்றும் அங்கே அவன் செத்தான், இங்கே இவன் செத்தான் என்றும் வருகிறது என்று சொல்லிக் கொள்ளுகிறார்கள்.
இதல்லாமல் இங்கிலீஷ்காரருக்குக் கும்பினீர் ஒப்பந்தம் கொடுக்கிறதை நிறுத்தினார்கள். அதுவே மூதேவி பிடித்ததற்கு அடையாளமென்று பிரஞ்சுக்காரருக்கு ஜெயக்காலத்துக்கு ஆரம்பித்தது. நாளுக்கு நாள் விருத்தியாய் வருமென்றும் அவ்விடத்திலே யிருந்த ஜெயலக்ஷிமி இவ்விடத்திற்கு வந்து சேர்ந்தாளென்றும் இவ்விடத்திலே யிருந்த மூதேவி அவ்விடத்திலே போய்ச் சேர்ந்தாளென்றும் அவர்கள் பட்டணத்திலேயுள்ள பேர்களும் இந்தப் பட்டணத்திலுள்ளவர்களும் சருவத்திர சகலமான ஜனங்களும் சொல்லிக் கொள்ளுகிறார்கள்.
இவ்விடத்து துரையும் வெகுஜனங்களுக்கு ரஸ்து சேர்க்கிற சாடையும் முன் முஸ்த்தீது பண்ணதல்லாமல் இப்போது இருநூறு கட்டிலும் அதுக்கு மெத்தையும் அதுக்கு தலைகாணி முஸ்தீது பண்ணுகிறதும் அதுக்கு கட்டில் துப்பட்டியும் துவாலைகளும் நாலாயிரம் பேருக்கு முஸ்தீது பண்ணிவைக்கச் சொன்னார் என்று முஸ்தீது பண்ணுகிற சாடைகளும், கோழிகளும் ஆடுகளும் முஸ்தீது பண்ணுகிற சாடைகளும், விறகு சேர்க்கிற சாடையும், கடற்கரையோரத்துச் சுவரெல்லாம் முஸ்தீது பண்ணி கொத்தளங்கள் சீக்கிரமத்துக்கு கட்டிமுடிக்கிற சாடையும் இதின் பேரிலே இராத்திரி பகல் பண்ணுகிற சாக்கிரதையினாலேயும் கப்பல்கள் சுருக்கிலே வருகிறதென்று சொல்லிக் கொள்ளுகிறார்கள்.
சுவாமியுடைய தயவினாலே கப்பல்கள் சுருக்கிலே வந்து சகல சனங்களும் சுகப்படத்தக்கதாக ரக்ஷிப்பார் என்று எல்லாரும் சொல்லுகிறார்கள். இவர்கள் சுகப்படுவார்கள் என்கிறதுக்கு இரண்டு வருஷமாய்க் கஷ்டம் அனுபவித்த படியினாலே இனிமேல் சுகப்படுவார்கள் என்று சொல்லுகிறார்கள். வெகுசன வாக்கியம் பொய்யாதென்று அந்தபடிச் சுவாமி கடாக்ஷம் பண்ணி ரக்ஷிப்பார் என்று தோற்றுகிறது. தோற்றுகிறபடிக்கு எழுதினேன்.
(தொடரும்)