1746 டிசம்பர் மாதத் தொடக்க நாளில் ஆனந்தரங்கருடன் பேசிய ஆளுநர் துய்ப்ளேக்ஸ், ‘தேவனாம்பட்டணத்தை நாம் வாங்கினால் (பிடித்தால்) தவிர இங்கு நாம் வியாபாரம் செய்வது கஷ்டம்’ எனத் தெரிவித்தார். ‘ஆஹா. தேவனாம்பட்டணத்தைப் பிடிக்க வேண்டும் எனும் எண்ணம் உனக்குத் தோன்றியதே. இப்பவே அந்தப் பட்டணம் உன் கைவசமான மாதிரிதான்’ எனப் பாராட்டினார்.
மேலும் தேவனாம்பட்டணத்தின் அனைத்து நிலவரங்களையும் கைவசம் வைத்திருந்த ஆனந்தரங்கர் ஆளுநரை அதிசயப்பட வைத்தார். ‘இதுபோன்ற தகவல்களை மதானந்த பண்டிதர் போன்றவர்களுக்குத் தெரியாமல் உன் பீரோவில் பத்திரப்படுத்தி வை’ என்று சொன்ன துய்ப்ளேக்ஸ், ‘நீ மிகவும் சாக்கிரதையா யிரு’ என்றும் ஆனந்தரங்கரை எச்சரித்தார்.
இதற்கிடையில் பிரெஞ்சு படைத்தலைவர்களில் ஒருவரான தெப்ரமேனியை சென்னைக்கு அனுப்பினர். அங்கிருந்த பரதி (பரிதி) புதுவைக்கு வரவழைக்கப்பட்டார். தேவனாம்பட்டணத்தின் மீதான தாக்குதலுக்கு இவரைத் தலைமை தாங்க வைப்பது திட்டமானது. ஆளுநரின் இந்தத் திட்டத்திற்கு சீனியர் படைத்தலைவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். எஞ்ஜினியராக இருந்த ஒருவரின் (பரதி) கீழ் நாங்கள் எப்படிப் பணியாற்றுவது என எதிர்க் கேள்வி கேட்டனர். அதோடு நிற்காமல், தாங்களே தேவனாம்பட்டணத்தின் மீது படைநடத்திச் சென்று தோல்வியுடன் திரும்பினர். இந்தத் தோல்வியை ஆளுநர் வரவேற்றார். எதிர்ப்பாளர்களுக்குத் தக்கப்பாடம் கிடைத்துவிட்டதாக ஆனந்தரங்கரிடம் சொன்னார்.
புதுச்சேரி கவுன்சில் மீண்டும் மீண்டும் கூடியது. பரதியை கொம்மாந்தனாக்கி (கமாண்டர்) அனுப்புவது குறித்து விவாதித்தது. சீனியர்கள் மீண்டும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். பரதியின் பூர்வோத்திரம் குறித்தெல்லாம் பேசினர். இதனால் துய்ப்ளேக்ஸ் கடும் கோபத்திற்கு ஆளானார். ஆனால், வேறுவழியில்லை: தேவனாம்பட்டணத்தின் மீது தாக்குதல் நடத்தியாக வேண்டும். இறுதியில், லத்தூரை கமாண்டராக்குவது என்றும் அவர் பரதியின் ஆலோசனைப்படி நடக்க வேண்டும் என்றும் ஓரளவுக்கு அனைவரும் ஏற்றுக்கொள்ளும் முடிவு எட்டப்பட்டது.
பிரெஞ்சு படைக்குள் இருந்த ஒழுங்கின்மை, கீழ்ப்படியாமை போன்றவற்றை மேற்காணும் நிகழ்வுகள் அம்பலப்படுத்துவதாக வரலாற்று ஆசிரியர்கள் சொல்கின்றனர். இனி, ஆனந்தரங்கரின் நாட்குறிப்பினை நீங்கள் வாசிக்கலாம்…
1746 டிசம்பர் 1 கார்த்திகை 10 வியாழக்கிழமை
… மெய்தான் சீக்கிரமத்துக்குத் தேவனாம்பட்டணத்தையும் வாங்கித் தீர்த்தாலே யல்லாமல் இந்த விடத்திலே நாம் வியாபாரம் பண்ணுகிறதற்குச் சங்கடமென்று சொன்னார். அதன் பேரிலே நானிருந்து கொண்டு தேவனாம்பட்டணமிருக்கிறது எப்போது உமக்குச் சங்கடமாய்த் தோற்றினதோ அதுவும் உம்முடைய கைவசமாச்சுதென்று எண்ணிக்கொள்ளுங்கோளென்று சொன்னேன். அதெப்படி யென்றார். இப்போது நடக்கிற சேதி அப்படி நினைக்கவும் அப்படி முடியும்படியாய் வேளை வந்திருக்கிறது என்று சொன்னேன்.
1746 டிசம்பர் 3 கார்த்திகை 21 சனிவாரம்
தேவனாம்பட்டணம் சமாசாரம் என்னவென்று கேட்டார். அதற்கு நான் சொன்னது: கூடலூரிலே ஒருத்தருமில்லை. வாசற்படிக்குப் பத்து பேர் இங்கிலீஷ்காரரும் பத்துச் சட்டைக்காரருமாக நாலு வாசற்படிக்கு மாத்திரம் இருக்கிறார்கள். ஊருக்குள்ளே ஒருத்தரும் வெள்ளைக்காரரில்லை. கூடலூர் பட்டணத்திலே தமிழ் ராணுவம் ஐந்தாறு பேருக்குண்டு. வடக்கேயிருந்து வந்தவன் ஒருத்தரும் வெள்ளைக்காரரில்லை. மல்ராசா னென்கிறவன் ஒரு சின்ன பாளையக்காரன் ஒருத்தன் வந்தவன் கூடலூரிலேயே இருக்கிறான்.
தேவனாம்பட்டணம் கோட்டையிலே முன்னூறு நானூறு சொல்தாதுகளில் இங்கிலீசுக்காரர் இருநூறு சட்டைக்காரரும் இருக்கிறார்கள். இதல்லாமல் துரைத்தனக்காரர்கள் இருக்கிறார்கள். தேவனாம்பட்டணம் கோட்டையிலே தாழ ஆரபிக் கோட்டையிலேயுமாய் நூறு பீரங்கி மாத்திரம் இருக்குது. ரஸ்து நூற்றிருபது கரிசை நெல்லிருக்குது. இருபத்தைந்து கரிசை முப்பது கரிசை அரிசியிருக்குது. நூறு பார மட்டுக்கும் மருந்திருக்கிறது. ஒரு பண்டகசாலையிலே அரிசியிருக்கிறது. மற்றப்படிக்குத் தேவனாம்பட்டணம் சுற்றிலும் சோதனை மட்டுக்கும் ஆயிரம் பேர் தமிழர் ராணுவமிருக்கிறது. இது வந்த சமாசாரம், அப்பாலென்னமா யிருக்குதோ புதிதாய் தேவனாம்பட்டணம் கோட்டைக்கு வாயு மூலையிலே யிருக்கிற வீடுகள், வடவண்டையிலே இருக்கிற வீடுகள், முத்தியாலு நாயக்கன் வீட்டு மட்டுக்கும் ஏகத்துக்கு இடித்துச் சமன் பண்ணுகிறானென்றும் கபுறு வந்தது என்று சொன்னேன்.
இது மெய்தான். இதற்குமேல் இவ்விடத்திலே என்ன அதிசயமிருக்கிறாப் போலே யிருக்குது என்று சொல்லி, தேவனாம்பட்டணம் நான் போய் வாங்கப் போகிறேன் என்று துரை சொன்னார். நீர் போய் இறங்கினால் சுவாமி யுமக்குச் செயங்கொடுப்பார். உமக்கிப்போது சகல சயமுங் கொடுக்கத்தக்க ஆசீராயிருக்கிறார். நீர் தளம் சண்டைக்கு அனுப்புகிறது பத்தேயாகிறதே யல்லாமல் தடையாய் நிற்கத்தக்கதில்லை. பின்னையும் ஸ்தவுத்தியமாய்ச் சொன்னேன். அவரும் சந்தோஷமாய்த்தானே இது உனக்குச் சரிதானென்று சொன்னார். நானென்ன அடிமை. என்னைத் தொட்டு என்ன? நீர் சொன்ன வேலை செய்கிறவனென்று சொன்னேன். அப்பால் அனுப்புவித்துக்கொண்டு வீட்டுக்கு வந்தேன்.
1746 டிசம்பர் 4 கார்த்திகை 22 ஆதிவாரம்
… துரை இருந்துகொண்டு நல்லது உசேன் சாயபு காகிதத்திலேயும் தேவனாம்பட்டணம் சோலிப்போக வேண்டாமென்றுந்தானல்லோ எழுதி இருக்கும். இது மதானந்த பண்டிதர் அறியப் போகாது உன் அலமாரியிலே வை யென்று சொன்னார். நல்லதென்று சொன்னேன். இனி தேவனாம்பட்டணம் கோட்டையின் பேரிலே ராச காரியம் நடத்துகிறேன். நீர் மாத்திரம் தேவனாம்பட்டணம் சமாசாரம் அப்போதைக்கப்போது சமாசார மழைப்பிக்கவேணும். நீர் மிகவுஞ் சாக்கிரதையாயிருந்து சமாசார மழைப்பியுமென்று சொன்னார்.
1746 டிசம்பர் 7 கார்த்திகை 23 சோமவாரம்
இற்றைநாள் ராத்திரி முசே தெப்பிரமேனி சென்னப்பட்டணத்துக்கு எசமானத்துவமாகப் போனான். இவன் போனவுடனே முசே பரிதி அங்கேயிருந்து கொண்டு வருகிறது. வந்தவுடனே தேவனாம்பட்டணத்தின் பேரிலே சண்டைக்குப் போகிறதாய் தீர்ந்து முசே தெப்ரமேனியைச் சென்னப்பட்டணத்துக்கு அனுப்பினான்.
1746 டிசம்பர் 14 மார்கழி 3 புதவாரம்
… அதற்குத் துரை இருந்து கொண்டு தேவனாம்பட்டணத்தாருக்குத் தண்டு செலவுக்குக் கொடுக்கிறதற்குப் பணமெப்படி என்று கேட்டார். நாகப்பட்டணத்து ஒலாந்துக்காரர் கொடுத்தனுப்புகிறார்கள் என்று சொன்னேன். நல்லது. இன்னும் மனுஷரை அனுப்பித் தேவனாம்பட்டணத்துச் சுற்றிலே யிருக்கிற கொத்தளத்திலே கோட்டையிலே இருக்கிற பீரங்கிகள், தமிழ்ச் சேவகர், சொல்தாதுகள், சட்டைக்காரர், கூடலூரிலே இருக்கிறதுகள், இதுகள் வயணமாய்ச் சேதி அழைப்பிக்க வேணுமென்று சொன்னார். அதற்கு நான் அழைப்பித்து வைத்திருக்கிறேன் என்று சொன்னேன். அந்தப்படிக்குப் பிரஞ்சு எழுத்திலே எழுதுவித்துக் கொண்டு கொடு என்று சொன்னார். நல்லதென்று சொன்னேன். நான் சொல்லாததுக்கு முன்னே தெரிந்து சேதியழைப்பித்து வைத்தேனென்று எப்படி என்று கேட்டார். இந்தக் காரியம் நடக்க வேண்டியிருக்கும் போது இதுகள் நீங்கள் கேட்பீர்களென்று அழைப்பித்த காகிதத்திலே எழுதி வைத்தேன் என்று சொன்னதற்குச் சந்தோஷப்பட்டுச் சிறிது ஸ்தவுத்தியமாய்ச் சொன்னார்.
என்னை ஸ்தவுத்தியமாய்ச் சொன்ன அப்பால் தேவனாம்பட்டணத்துமேலே சண்டைக்குப் போகிறதற்குச் சொல்தாது கப்பித்தேன்மார், ஒபிசியேல்மார்கள், இன்சின்கள் றுததினாந்துகள் முசே பரிதி ஆணை ஆக்கினையின் கீழ்..படிந்து நடக்கிறதில்லையென்று தகராறு பண்ணினார்களென்று கொமிசேல் பண்ணி, அப்பால் ஒபிசியேல்மாரை, கப்பித்தேன்மாரை, முடியே புரி, முசியே லத்தூர், முசியே பெலான்சு முதலானவர்களை தனித்தனியே அழைத்துக் கொண்டு பேசுகிறதும், நாலுபேர் ரெண்டு பேரை அழைத்துக்கொண்டு பேசுகிறதும், அவரவருக்குச் சீர்மையிலே நடந்திருக்கிற வயணங்களும் அதற்கு முன் நடந்ததற்கு எழுதியிருக்கப்பட்ட லீவுருகளும் காகிதங்களும் காண்பித்துச் சமாதானம் பண்ணிக் கொண்டிருந்தார். என்னையழைத்து நயினாருக்குச் சொல்லி அறுபது சேவகரும் அவனையும் பயணமாய் முஸ்தீதாயிருக்கச் சொல்லு. முசியே பரிதி பிறகே வந்த ஒட்டகங்களுக்கெல்லாம் சாமான் முஸ்தீது பண்ணி வை என்று சொன்னார்.
1746 டிசம்பர் 20 மார்கழி 9 மங்களவாரம்
… இதுகளெல்லாம் துரையவர்களுக்கும் நமக்கும் கபுறுகள் வந்தன. இந்தச் சண்டையாகிற சேதி கேட்டவுடனே துரையவர்கள் நம்மைக் கூட்டிவரச் சொல்லி சொன்ன வயணம்: என்னைப் பார்த்து, பார்த்தாயா நாலுநாளாய் முசே பரிதிக்குக் கொம்மாந்தானிடம் கொடுத்து அனுப்புவோமென்று அநேக விதத்திலே தெரியச் சொன்னோம். முசே புரி கேட்கமாட்டேனென்று போனான். ஓடி வருகிறான் பார்த்தாயாவென்று தங்கள் பேச்சுப்படி கேளாமல் தான்தானே யோசனை பண்ணிப்போன படியினாலே இத்தனையும் வந்ததென்றும் ஆருக்கும் தலைக்குப் பட்டால் தெரியுமென்றுஞ் சொல்லி இனிமேல் நடக்கிற காரியத்தைப் பார். எப்படி நடக்கிறதோ அதைப் பாரென்று சொன்னார்கள்.
ஊரிலே இருக்கிற ஜனங்கள் வெகுவாய் பாளையம் தாமாக முழுகிப் போகிறதாய் மலைத்தார்கள். உடனே எல்லாரும் சுகமாய் இருக்காறார்களென்று கேட்டவுடனே சகலமான சனங்களும் வெகுவாய் சந்தோஷப்பட்டார்கள். அதன் பேரிலே நாமும் சகலமான பேருக்கும் தைரியம் வரத்தக்கதாக நடந்த சேதிகளெல்லாம் சொல்லி அதன் பேரிலே வளவுக்குப் போய் யோசனை பண்ணி நித்திரை போனோம். நம்முடைய மனதுக்கும் கலக்கந் தோன்றவில்லை. பாளையத்திலே சேர்த்துப் பாளைய மாத்திரம் அவர்கள் கையிலே அகப்பட்டுப் போச்சுது. மற்றப்படி ஒரு சேதமுமில்லை. சகலமான பேரும் வந்து சேர்ந்தார்கள். இது நடந்த சேதி, கேட்ட சேதி எழுதினேன்.
இற்றைநாள் மத்தியானம் துரையவர்கள் என்னுடனே சொன்னது நம்முடையவர்கள் அபசயப்பட்டு வந்தது எனக்கு மெத்த சந்தோஷம். ஏனென்றால் முசே பரிதியை கொம்மாந்தனாக்கி அனுப்புவோமென்று என்னாலே ஆனமட்டும் சொன்னோம். முசே புரி முதலான பேர், ஒபிசியேல் மாரெல்லாம் அவன் ஒரு இஞ்சினீராயிருந்தவன். அவன் கீழே நாங்கள் அடங்கி நடக்கிறதில்லை என்றும், அவன் போய் செயித்து வருகிற காரியம் எங்களாலே ஆகாதா. எங்களை அனுப்பிப்பாரு மென்றுஞ் சொன்னாலிவரீகள் போய் பங்கப்பட்டு வரவேணுமென்று நினைத்தேன். அப்படியே ஆச்சுதென்று சந்தோஷமாயிருக்கிறது. ஆனால் நம்முடையவர்கள் முறிந்து வந்தார்களென்கிறது கஞ்சத்துப் பரதிக்கு என்று சொல்லி, நீ, முசே புரி முதலான பேர் பயணமாகிப் புறப்பட்டுப் போகச்சே முசே பரிதி என்ன! பட்டணமாக இப்போது காணோமே வேகுகாரர் வந்து ஆருக்குக் கபுறு சொல்லுகிறது என்று கேட்டதற்கு இப்போது முசே புரி போகிறான். இவனுக்குச் சொல்லச் சொல்லு. நீ சொன்னபடிக்கு முசே பரிதி இனிமேல் போவான். அப்போது அவனுக்குக் கபுறு சொல்லச் சொல்லு என்று சொன்னதற்கு, நீ, முசே பரிதி போகிறது நன்றாய்க் காணுது. இவன் போகிறேன் என்று சொன்னால் எல்லாரும் பயப்பட்டு நடுங்கினார்கள். இவன் போகாவிட்டால் இதுவே ஒரு அச்சம் இல்லாமலிருக்கும் என்று சொன்னியே அப்படியே நடந்தது என்று சொன்னார். இப்படி நாலு நாழிகை தேசகாலம் பேசினோம். அதுவெல்லாம் எழுத வேணுமானால் நூறு காகிதமாகிலுஞ் செல்லும். சுவாரசியப் பேச்சென்னமோ அதை மாத்திரமெழுதினேன்.
இற்றைநாள் ராத்திரி குவர்னதோர் என்னுடனே சொன்னதென்னவென்றால்: முசியே புரி வந்து என்னுடனே சண்டை வயணமெல்லாம் சொன்னான். துலுக்கரிலே எழுபது எண்பது குதிரை விழுந்தது. போஸ்ரத்து சிப்பாய்களிலே இருநூறு முன்னூறு விழுந்து போனது உண்டென்று சொன்னான். பின்னையும் இரண்டு நாழிகை மட்டுக்கும் சண்டை பண்ணினால் துலுக்கரிலே வெகு சனம் விழுந்து போவார்கள். தண்டு ஆற்காடு போய்ச் சேர்ந்துபோ முந்தியே போன ஒபிசியேலுக்குள்ளே கொம்மாந்தனா யிருக்கிறவன் பேச்சுக் கேளாமல் அவனவன் தனித்தனியே பெரியதனம் பண்ணின படியினாலே கெட்டுப் போச்சுது. கூட்டிப் பாளையத்தைக் காணாதே போனபடியினாலே அது கொள்ளை போனதினாலே இவர்களுக்கும் மருந்து குண்டு தாழ்த்தியும் சாப்பிடுகிற வஸ்து முதலானது தாக்ஷியான படியினாலே யவர்கள் வரத்தக்க வேண்டி வந்ததென்றும் முசியே புரி முதலான பேர் கப்பல் மத்லோத்துகள் சொல்வழிக்கு வராமல் போனபடியினாலே கெட்டுப் போச்சுதென்று குற்றமவர்கள் பேரில் வைத்தார்கள். நான் முசியே புரி முதலான ஒபிசியேல் பேரில் வைத்தேன் என்று சொன்னார்.
அதற்கு நான் சொன்னது: முசியே பரிதியுடைய பேர் அவ்விடத்திலே யிருக்கிற சாடைக்கு முசியே பரிதி சண்டை பண்ணாமல் சும்மா போனாலும் ஓடிப்போய் விடுவார்கள். அந்த தண்டிலே முசியே பரிதி என்று பேர் சொன்னால் நடுங்குகிறது. நான் சொல்ல மாட்டேன். அதை எங்களின் களுக்குள் மே துப்பாக்கி லக்ஷ்மண நாய்க்கனென்று ஒருத்தனிருந்தான். அவன் நடத்தை துலுக்கர் குதிரை தண்ணீர் காட்டப் போனால் தலையெடுத்த வாக்கிலே குதிரை வழியே நிக்குமாம். துப்பாக்கி லக்ஷ்மண நாய்க்கனில்லை தண்ணீர் குடியென்று சொன்னால் அதன் பிற்பாடு குதிரை யானைகள் கூட தண்ணீர் குடிக்குமாம்.
அப்படி முசியே பரிதி பேரென்றால் துலுக்கர் தண்டிலே அப்படி நடக்குது என்று சொல்லிச் சொன்னால் முகபரோதரவாயிருக்கும் இன்ன முகங்களுக்கு, பரஸ்பரமாய் கபுறு வந்தாலப்போது தெரியுமென்று சொன்னேன். அதற்கு மெய்தான். இனிமேல் பரிதியைத்தான் அனுப்புகிறேன். நீ கபுறு மாத்திரம் திட்டமாய் விசாரித்துச் சொல்லென்று சொல்லி, இந்தக் கூலிக்காரர்கள் மாடுகளித்தோடே சேர்ந்தது எனக்குத் தொந்தரையை வையாமல் நடப்பித்துக் கொள்ளென்று சொன்னார். நல்லதென்று சொன்னேன்.
1747 மார்ச்சு 10 மாசி 30 குருவாரம்
… குவர்னதோர் வீட்டுக்குப் போனவிடத்திலே குவர்னதோர் கோன்சேல் காரரையெல்லாம் அழைக்கச் சொல்லி, கோன்சேல் கூடி யோசனை பண்ணி, சண்டைக்குத் தேவனாம்பட்டணம் கோட்டையின் பேரிலே சண்டை பண்ணுகிறதற்குக் கோன்சேல் பண்ணித் தீர்த்து, அப்பால் படைக்குக் கொம்மாந்தேரிகிடுகிறதற்கு முசியே பரதி அனுப்ப வேண்டுமென்று குவர்னதோரும் கோன்சேலும் கூடி யோசனை பண்ணித் தீர்த்து முசே புரி, லத்தூர் முதலான பேர், ஒப்பிசியேல்மாரைக் கேட்டால் அவனெசமானாய் கொம்மாந்தேரிட, அவன் சொன்ன சொல்லின் கீழ் நாங்கள் உபதேசரிடுகிறதில்லை. இதல்லாமல் முன் மசுக்கரையிலே கூலிக்காரருக்கு ஆளோட்டியாயிருந்தான் அப்பால் மாயேயிலே இன்சினீர் உத்தியோகஸ்தன் கீழே அஸ்தனாயிருக்கிறவனை முசியே தெரேமிசோம் கொம்மாந்தனா யிருந்தவர் செத்துப்போன படியினாலே அவன் பெண்சாதி ரூபத்துக்குள்ளே குரங்கு போலேயும் வயதிலே கிழவியானபடியினாலே பின்னை ஒருத்தருஞ் சீந்தாமலிருந்தாலும் பணம் விஸ்தாரமாயிருந்த படியினாலே இவனுக்கு மவளுக்கும் ரொணானுபந்தமிருந்த படியினாலே இவன் பேரிலே யவளுக்கு வலப்பு உண்டாயிருந்து இவனைக் கலியாணம் பண்ணிக்கொண்டு படியினாலே அந்தப் பணம் கையிலே நடமாடுகையில் வட்டத்துக்குக் கொடுக்கிறாப்போலேயுஞ் சரக்குக்குக் கொள்ளுகிறாப்போலேயுஞ் சற்று பேருண்டானதின் பேரிலே அந்த இன்சினீர் செத்துப் போனவுடனே அந்தவிடமிவனுக்குக் கிடைத்தது. அப்பால் முசியே தும்மா குவர்னதோரிக்கும் போது காரைக்கால் கோட்டைக் கட்டுவிக்க வேணுமென்று இவ்விடத்துக்கு அழைப்பித்தவிடத்திலே முன் இன்சினீராயிருந்த பாதிரியாருக்கு பெரிய வயதானபடியினாலே அவனை நிறுத்தி இவனை வைத்தார். அப்பால் காரைக்கால் கலாபத்தும் போது முசியே துய்ப்ளெக்ஸ் அனுப்பினவிடத்திலே அங்கே செயமாச்சுது. அப்பால் முசியே பெப்வ்ரியே மருந்துக் கிடங்கிலே பற்றிக்கொண்டு செத்தான். அந்தவிடம் குவர்னதோர் முசியே துய்ப்ளேக்ஸ் இவன் பேரிலே பட்சமானப்படியினாலே இவனைத்தானே அடைந்தது. அப்பாலும் கொப்பாஞ்ஞியார் அறியவும் இவன் ஒப்பிசியேலாகப் போகவில்லை. வெகுநாளாய் கும்பினீரைச் சேவித்த முசியே புரி லத்தூர் முதலான பேர்கள் கோன்சேலிலே பேசினதின் பேரிலே துரை எத்தனை விதமாய்ச் சமுதாயத்துச் சொன்னாலும் சம்மதிக்க மாட்டோமென்றார்கள். கோபத்தின் பேரிலேயும் எத்தனை சொன்னாலுங் கேட்கமாட்டோமென்றார்கள். அதன் பேரிலே முசியே லத்தூர் கொம்மாந்தனாக்கி முசியே பரதி யோசனை கேட்டுக்கொண்டு நடத்தச் சொல்லிக் கோன்சேலுத்தார மெழுதிக் கொடுத்துத் தீர மணி பனிரெண்டு அடித்தது. அந்தமட்டுக்கும் துரையிருந்த கோபம் எழுதி முடியாது. அப்பால் கோன்சேல் தீர்ந்து போகச்சே முசியே பரதி முகம் மாகா சின்னம் போய் வீட்டுக்குப் போனான்.
(தொடரும்)