பிரெஞ்சு படைக்குள் ஏற்பட்ட பிரச்னை ஓரளவுக்குச் சரிகட்டப்பட்டது. 1747 மார்ச் 11ம் தேதி முசியே லத்தூர் தலைமையிலான படைவீரர்கள் தேவனாம்பட்டணம் முற்றுகைக்குப் புறப்பட்டனர். இதில் ஏறக்குறைய 2000 பேர் இடம்பெற்று இருந்தனர். இவர்கள் எந்தெந்தப் பிரிவினர், அவர்கள் எடுத்துச் சென்ற பொருள்கள் என்னென்ன அத்தனையையும் பட்டியலிடுகிறார் ஆனந்தரங்கர். மார்ச் 12ம் தேதி தேவனாம்பட்டணம் எல்லைக்குள் நுழைந்தது பிரெஞ்சுப்படை.
இதற்கிடையில் அங்கிருந்து தொடர்ந்து முற்றுகை தொடர்பான தகவல்கள் வந்துகொண்டிருந்தன. இவர்கள் சந்தோஷப்படும்படியானத் தகவல்கள் அவை. இரவு தூங்கிக் கொண்டிருந்த ஆளுநரை எழுப்பிச் சொல்லி இருக்கிறார் ஆனந்தரங்கர். இதனால் தன்னுடனேயே கோட்டையில் தங்குமாறு ஆனந்தரங்கரைப் பணித்திருக்கிறார் ஆளுநர் துய்ப்ளேக்ஸ். தேவனாம்பட்டணத்தில் முற்றுகை நடந்தது, கொல்லப்பட்டவர்கள், நாள் முழுவதும் கேட்ட பீரங்கி சப்தம் என எல்லாவற்றையும் பதிவு செய்கிறார் ஆனந்தரங்கர்.
பிரெஞ்சு படைகள் தேவனாம்பட்டணம் கோட்டையை நெருங்கும் நேரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. கடலில் இங்கிலீஷ் கப்பல்கள் மிதந்து வருவதைக் கண்டனர் பிரெஞ்சுப் படையினர். அவ்வளவுதான், தங்களது முற்றுகை முயற்சியைக் கைவிட்டுப் பின்வாங்கியது பிரெஞ்சுப் படை. திரும்பி வரும்போது ‘சாமான்களையெல்லாம் எடுக்கிறதற்குக் கூலி ஆட்களில்லாமல் மருந்துப் பெட்டிகளையெல்லாந் தண்ணீரிலே போட்டு அவ்விடத்திலே யிருந்த பீரங்கிகளை யெல்லாம் ஆணியடித்து அதுகளையும் இழுத்துத் தண்ணீரிலே போட்டு, அரிசி சாக்குகளை அறுத்துக் கிணறுகளிலேயும் குளத்திலேயும் சொட்டிப் போட்டு, சாராய பீப்பாய்களை யெல்லாம் உடைத்து ஊத்திப்போட்டு, தோட்டத்திலே யிருக்கிற நாற்காலிகள், பெட்டிகள், மேசைப்பலகை, வீடு வாசல்களை யெல்லாம் உடைத்து இடித்துத் தகர்த்துப்போட்டு, ஏணிகளையெல்லாம் கொளுத்திப்போட்டுத் தாம்தூம் பண்ணி அவ்விடத்திலே யிருந்த வீடுகளையும் கொளுத்திப் போட்டு, அவ்விடத்திலே யிருந்து’ புறப்பட்டதாக விவரிக்கிறார் ஆனந்தரங்கர்.
இன்னும் இரண்டு நாட்கள் மட்டும் இங்கிலீஷ் கப்பல்கள் வராமல் இருந்திருந்தால் தேவனாம்பட்டணம் கோட்டை தங்கள் வசமாகி இருக்கும் என வருத்தப்பட்ட ஆனந்தரங்கர், ‘மனுஷ எத்தனத்திலே எத்தனை பிரயத்தனம் பண்ணித் தன் புத்தியினாலே என்னதான் தப்பித்தாலும் தெய்வ சங்கல்பம் உள்ளபடி நடக்குமே யல்லாமல் அதுக்கொருக்காலும் திருக்கு வரத்தக்கதில்லை’ என தனது வழக்கமான அங்கலாய்ப்பையும் வெளிப்படுத்துகிறார்.
1747 மார்ச்சு 11 பங்குனி 1 சனிவாரம்
இற்றைநாள் மத்தியானம் மூன்று மணிக்கு முசியே லத்தூரும், முசியே பரதியும் வந்து துரையைக் கண்டு அவரனுப்புவித்துக் கொண்டு தேவனாம்பட்டணம் சண்டைக்குப் பயணமாய் புறப்பட்டு வாசற்படியிலே வந்து பல்லக்கு ஏறினாப்போலே இதிலே துரையுடனே நான் மஞ்சகுப்பம், தோட்டம், பின்னையும் கூடலூருக்குப் போகிற வழிகளிலே மருந்து புதைத்திருக்கிறதென்று கபுறு கேட்டேன். இவர்கள் போகிற விடத்திலே சாக்கிரதையாய் விசாரித்துக் கொண்டு போகச்சொல்ல வேணுமென்று சொன்னேன். நல்லதென்று சோபுதாரருடனே முசியே லத்தூர், முசியே பரதியை அழைக்கச் சொன்னார். நடுவே நானிருந்து கொண்டு, அழைப்பானேன்? நான் சொல்லுகிறேன் என்று சொன்னேன். நீ சொல்லுகிறதல்லவென்ற போது சோபுதாரரை யழைத்து வந்தான். அப்போது என் மனதிலே தோற்றினது இன்னமொரு தாலுக்கு இடம் வைத்தானென்று தோற்றிற்று. ஆனால் சுவாமியுனுடைய சித்தம் அறியக்கூடாது.
இற்றைநாள் காலத்தாலே ஐந்து மணிக்குப் பிரஞ்சுப்படை புதுச்சேரி கோட்டையிலிருந்து தேவனாம் பட்டணம் கோட்டையின் பேரிலே சண்டைப் பண்ணப் போகிறதற்குப் புறப்பட்ட படை வயணம்:
வெள்ளைக்காரர் சொல்தாது மத்லோத்து சட்டைக்காரர் வகையறா சனம் 1000
காப்பிரிகள் 200
கும்பினீர் சேவகர் 30
மாயே சிப்பாய்கள் 600
ஆலத்தூர் பாளையக்காரர் தாலுக்கு விராநாயக்கன் கூட சனம் 200
மண்வெட்டிக்காரர் 305
இதல்லாமல் கூலிக்காரர், எடு கூலிக்காரர், மூட்டைக்காரர், வாளாக்காரர், எட்டு ஒட்டகம், எண்பத்தைந்து எருது, அரிசி நாலு.
தீக்குடுக்கை பீரங்கி ஐம்பது, ஏணி இருநூறு, பால் ஐந்து, பெரிய கூடாரம், மண்வெட்டி, கோடாலி குந்தாணி இது முதலாகிய சாமக்கிரிகைகள் சண்டைச் சாமான்களுக்கு அடுத்த தென்னன்ன வுண்டோ அதுகளும் மருந்து குண்டுகள் தீக்குடுக்கைகள் முதலான சண்டை ஆயுதங்களும் முசியே லத்தூர் கொம்மாந்தானாய் புறப்பட்டு அரியாங்குப்பத்திலே போய் சூரிய உதயவேளைக்கு இறங்கினார்கள். அப்பாலிவ் விடத்திலே சாப்பிட்டு பகலைக்கு மேலாக ராத்திரி நல்லமபாபு ரெட்டி சத்திரத்திலே இருந்தார்கள்.
1747 மார்ச்சு 12 பங்குனி 2
இற்றைநாள் நடந்த சேதி யென்னவென்றால் தேவனாம்பட்டணத்தின் பேரிலே சண்டைக்குப் போனவர்கள் நேற்று ராத்திரி நல்லமபாபு ரெட்டி சாவடியில் இருந்தவர்கள் இற்றைநாள் காலத்தாலே புறப்பட்டுத் தேவனாம்பட்டணம் குண்டுக்குள்ளே நுழையும் போது மலையராசா பாளையம் சேவகரும், கடையம் வேங்கடாசல நாயக்கன் சமேத்து சேவகரும், சேருவைக்காரர் ஆதியப்ப நாயக்கன் சமேத்து சேவகரும், கொஞ்ச மிங்கிலீசுக்காரரும் சட்டைக்காரருமாய் வந்து எதிர்த்தார்களாம். அப்போது மாயே சிப்பாய்களும் கும்பினீர் சேவகரும் ஆலத்தூர் பாளையக்காரன் தாலுக்குச் சேவகர்களும் சண்டை போட்டதின் பேரிலே அவர்கள் நிற்க மாட்டாமல் ஓடிப்போய் மஞ்சக்குப்பம் சேர்ந்ததாய் இவர்கள் உச்சிமேட்டிலே பெண்ணையாற்றங் கரைக்கு இக்கரையிலே யிருக்கிற தண்டில் முத்தியாலு நாயக்கன் அக்கிராகரத்திலே பிராஞ்சுக்காரர் படை போயிறங்கினார்கள்.
அதற்கடுத்த எதிர்கரையிலே யிருக்கிற சின்னப்பையன் சாவடியிலே இங்கிலீசுக்காரர், கர்நாடக ராணுவம், சிறிது இங்கிலீசுக்காரருமா யிருந்தவர்கள் பேரிலே நம்முடைய பிராஞ்சுக்காரர் நாலு பீரங்கிச் சுட்டார்கள். அந்தக் குண்டு போய் விழுந்தவுடனே அங்கேயிருந்த இங்கிலீசுக்கார ராணுவம் ஓடிப்போய் மஞ்சகுப்பம் போய்ச்சேர்ந்தார்கள் என்றுமப்போது பிராஞ்சுக்காரரிலே ஒரு சொல்தாது புறப்பட்டு இங்கிலீசுக்காரர் தளத்திலே நடக்கச்சே பார்த்து என்ன அழைத்தாலும் வராமல் அவர்களிடத்திலே யிருக்கிற கர்நாடக சுவாரிலே ஒருத்தனை துப்பாக்கியினாலே போட்டாப்போலே அவன் விழுந்தானாம்.
அப்பால் மூன்று பேர் கர்நாடகக்காரரை வெட்டிப்போட்டானாமிந்த ஒரு வெள்ளைக்காரன் பேரிலே அவர்கள் ஆயிரம் சனம் வந்து விழுந்து தலையை வெட்டிப் போட்டும் அப்பால் குதிரைவால் கொத்தளத்தின் பேரிலே யிருந்தும் உப்பல்வாடி கொத்தளத்தின் பேரிலேயிருந்தும் விடாமல் ஆறு ராத்தல் குண்டு ஓடுகிற பீரங்கியினாலேயும் மூன்று ராத்தல் குண்டு ஓடுகிற பீரங்கியினாலேயும் பனிரெண்டு மணிக்குத் துவக்கினது ஒன்பது மணிக்கு மட்டுக்கும் சுட்டுக்கொண்டே யிருக்கிறார்கள். இதற்குள்ளே விழுந்தவர்கள் குவாடுது வெள்ளைக்காரன் குதிரையின் பேரிலே யிருந்தவன் செத்தானாம் மிரண்டு வெள்ளைக்காரருக்குக் குண்டு காலிலே விழுந்து காயம்பட்டுதாம். ஒரு பீரங்கி மேஸ்திரி செத்தானாம். மூன்று நாலு மாயே சிப்பாய்களுக்குக் காயமென்று கபுறு வந்தது. அவர்களிலே செத்த சேதி தெரியவில்லை. இந்தப்படிக்குக் கபுறு வந்துகொண்டே யிருந்தது.
அவர்கள் சுடுகிற குண்டு இவர்கள் இருக்கிற விடத்திற்கு நூறடிக்கு இப்புறத்திலே விழுகிறது மிவர்கள் சுடுகிற பீரங்கிக் குண்டு அவர்களிலே போய் விழுகிறதென்று கபுறு வந்தது. இதுகள் தாக்கீதாய் நாளைய தினம் கபுறு வரும். வந்த பிற்பாடு எழுதுகிறேன்.
… அப்போது நம்முடைய பாளையத்திலிருந்து சேஷய்யன் எழுதின ஓலை. பெண்ணையாற்றிலே யிறங்கி இங்கிலீசுக்காரர் கர்நாடகச் சேவகர் கூட வந்து நம்முடைய பிராஞ்சுப் படையின் பேரிலே சண்டைக்கு வந்து சண்டை கொடுத்தார்கள் என்று இவர்கள் படை முனைந்து நடந்ததென்றும் எதிரிகள் தளம் பின்வாங்கிச் சின்னப்பையன் சாவடியை விட்டுவிட்டு அப்பாலே ஓடினார்கள் என்றும் அப்போது முசியே பரதி, இருந்த காப்பிரிகளுக்குக் கொஞ்சம் சாராயத்தை வார்த்து உற்சாகம் பண்ணி உப்பளவாடி கொத்தளத்தின் பேரிலே லக்கை ஏறச்சொல்லி அனுப்பினவிடத்திலே இவர்கள் போய் லக்கை ஏறினவுடனே அதன் பேரிலே ஆயிரம் கர்நாடகத்தா ரிருந்தும் திகைத்துக் கொடுத்தார்கள். பீரங்கிகளைக் கொளுத்தினால் கத்தரித்துப் போச்சுதா மிவர்களுக்குச் செய்தால்தான் படியினாலே பீரங்கிகள் கத்தரித்துப்போனதும் ஆயிரம் பேரிருந்தும் முழித்துக் கொடுத்ததும் அப்பால் காப்பிரிகள் துப்பாக்கிப் பிடங்காலே அடித்தும், கோடாலியாலே வெட்டியும், பெயினாட்டிலே குற்றங் காட்டியும், அங்கேயிருந்தவர்கள் எல்லாரும் ஓடிப்போனார்களப்போது உப்பல்வாடி கொத்தளத்தைப் பிடித்துக்கொண்டு வெள்ளைக்கொடி போட்டு அந்தக் கொத்தளத்தின் பேரிலேயிருந்த பீரங்கியிலே மூன்று பீரங்கிச் சுட்டார்களாம். அந்தச் சந்தோஷக் கபுறு எழுதிக்கொண்டு வந்தவனுக்கு ஒரு ரூபாய் உச்சிதம் கொடுக்கச் சொல்லி எழுதினான்.
பதினொன்றரை மணிக்கு இந்தக் காகிதங் கொண்டு வந்து கொடுத்தவுடனே அப்போது துரையுடனே எச்சரிக்க வேணுமென்று போனவுடனே அவர் படுத்துக் கொண்டிருந்தவரை யெழுப்பிச் சொன்னவிடத்திலே அவர் சந்தோஷப்பட்டு நடந்த பூருவாத்திரம் எல்லாம் கேட்டார். அந்த வயணமெல்லாம் சொன்ன விடத்திலே வந்தவர்களுக்கு இரண்டு ரூபாய் யினாம் கொடுக்கச் சொல்லி முசியே, ரங்கப்பிள்ளை இந்தக் காரியம் தீருகிற மட்டுக்கும் இவ்விடத்திலே தானே சாப்பிட்டுக்கொள்ளவுமென்று சொன்னார். நல்லதையா, அப்படியே செய்கிறேன். சுவாமியினுடைய கடாட்சத்தினாலே யுமக்கு இந்த மட்டுக்கும் எசமானத்துவ மில்லாமலின்னஞ் சகல காரியமும் செயமாமென்று நான் சுவாமியைப் பார்த்துப் பிரார்த்திக் கொண்டிருக்கிறேன் என்று சொன்னேன்.
ஏனென்றால் அடிக்கடி சமாசாரம் மனுஷர் வருகிற படியினாலே நீர் இருந்து தீர வேண்டியிருக்கிறதென்றும், ஆனபடியினாலே இப்பவுந் தீக்குடுக்கை மருந்துகள் எல்லாம் முஸ்தீது பண்ணி யனுப்புவிக்கிறார்களிதற்கு எருதுகள் கூலியாட்களும் இதற்கு என்ன சரஞ்சாமி வேண்டியிருக்கிறதோ அதுகளெல்லாம் சீக்கிரமாய் முஸ்தீதுபண்ணி யனுப்பி வையுமென்று சொன்னார். நல்லதென்று பாக்குக் கிடங்குக்கு வந்து அங்கேதானே யிருந்து சாப்பாடு அழைப்பித்துச் சாப்பிட்டு அங்கேதானே நித்திரை போய் அப்பால் ராத்திரி பனிரெண்டு மணிக்கு மேல் துரையவர்கள் புறப்பட்டுக் கொத்தளங்கள் பேரிலே ஏறி தீக்குடுக்கைகள் மற்றது முஸ்தீது பண்ணுகிற விடத்துக்குப் போய் அதுக்கெல்லாம் திட்டம் பண்ணிச் சீக்கிரமாய் முஸ்தீது பண்ணச் சொல்லிட்டு மறுபடியு மிரண்டு மணிக்கு வந்து நித்திரை போனார்.
இதற்குள் மேல் வந்த கபுறு யென்னவென்றால்: இங்கிலீசுக்காரர்கள் தளம் வந்தவர்கள் முறிந்து மஞ்சகுப்பத்திலே கும்பினீர் தோட்டத்தண்டையிலே ஆசுரா பிடித்துக் கொண்டிருந்தவர்கள் பேரிலே நாங்கள் போய்க் கும்பினீர் தோட்டம் கைவசம் பண்ணிக்கொள்ளுகிறோமென்று எழுதி வந்தது. எப்போதிவர்களிதைப் பிடிக்க நடக்கத் துவக்கினார்களோ மற்ற மூன்று கொத்தளத்தை விட்டு ஓடிப்போனார்கள் என்று எழுதி வந்தது. இதல்லாமல் இவ்விடத்திலேயிருந்து கொண்டுபோன பீரங்கியிலே இரண்டு பீரங்கி வெடித்துப் போச்சுதென்றும் சேதி வந்தது. சுவாமியினுடைய தயவினாலேயும் செயகால மிவர்களுக்கிருக்கிற படியினாலேயும் இங்கிலீசுக்காரருடைய பீரங்கி பதினெட்டுப் பீரங்கி இவர்களுக்கு அகப்பட்டது. ஆனால் இன்று பனிரெண்டு மணிக்குத் துவக்கிச் சாயங்காலம் ஆறரை மணி மட்டுக்கும் ஓய்வில்லாமல் விபரீதமாய் விட்டதற்குப் பீரங்கி சப்தம் கேட்கப்பட்டது.
அப்பாலே ஏழு மணிக்குத் துவக்கிப் பத்துமணி மட்டுக்கும் பொறுத்துப் பொறுத்துச் சாடையாய் சப்தம் கேட்டுக்கொண்டிருந்து பத்து மணிக்கு மேல் பீரங்கி நின்றுபோய் பனிரெண்டு மணிக்கு இரண்டொரு பீரங்கிக் கேட்டது. பொழுதுவிடிய காலத்தாலேயும் இரண்டொரு சப்தம் கேட்டது. அந்த மட்டிலே நடந்த சேதியல்லாமல் ராத்திரி எட்டு மணியிலே ஒரு பேய் ராசபுத்திரன் உத்தியோகம் இல்லாமலிருந்தவன், அவ்விடத்திலே நம்முடைய பிராஞ்சுக்காரர் தண்டிலே போயிருந்து இங்கிலீசுக்காரர் சுட்ட பீரங்கி குண்டிலே எட்டுகுண்டு ஆறு ராத்தல் குண்டு மூன்றும், மூன்று ராத்தல் குண்டு ஐந்தும் ஆக எட்டு குண்டையும் கொண்டு வந்ததின் பேரிலே துரையவர்களிந்தக் குண்டுக்கு ஒரு ரூபாய் விழுக்காடு கொடுக்கச் சொல்லி அவனுக்கு எட்டு ரூபாய் கொடுக்கச் சொன்னார். அந்தப்படி கொடுத்தார்கள்.
1747 மார்ச்சு 13 பங்குனி 3
இற்றைநாள் நடந்த சமாசார மென்னவென்றால்: நம்முடைய படையுடனே கூடப்போன வீராநாயக்கன் வந்து சொன்ன சமாசாரம் என்னவென்றால்: நேற்றைய தினம் ஆதிவாரம் நாள் ராத்திரி போய் உப்பிலவாடி கொத்தளம் பிடித்தவுடனே மற்ற மூன்று கொத்தளத்தின் பேரிலே இருந்தவர்களும் ஓடிப்போனார்களென்று எழுதியிருக்கிறோமே, அதன் பிற்பாடு பத்து மணிக்கு அவ்விடத்திலேயிருந்து முத்தாலு நாயக்கன் தோட்டமும் சத்திரமுமிருக்கிறதைக் கிட்ட நம்முடைய சோத்துப்பாளையமும் அதற்கு எசமானாயிருக்கிற முசியே வியாழாசம், முசியே செம்மடுத்தேனையும், வீரா நாயக்கன் தாலுக்கு சேவகரையும் வைத்துப் போட்டு முசியே பரதி முதலான பேரும் சொல்தாதுகளும் மாயே சிப்பாய்களுமாய் பதினொரு மணிக்கு அவ்விடத்திலே யிருந்து சாகி அப்புறம் மஞ்சகுப்பத்திலே யிருக்கிற கும்பினீர் தோட்டத்தைப்போய்ப் பிடித்தார்கள். அதன் பேரிலே அவ்விடத்திலே கொஞ்சம் நஞ்சமிருந்த ராணுவமெல்லாம் ஓடிப்போய்விட்டார்களாம். அந்த மட்டிலே கும்பினீர் தோட்டத்திலே தானே டிகாணி பண்ணி அவ்விடத்திலே யிறங்கி நம்முடைய வெள்ளைக்காரர் சேவகர் தோட்டத்தைச் சுற்றிலும் மெத்தைமேலேயுஞ் சந்தினேர் வைத்து எல்லாம் வேஷத்துப்பண்ணி வைக்கிறதற்குள்ளே சூரிய உதயமாச்சுது.
சூரிய உதயமானவுடனே சோத்துப்பாளையத்தின் பேரிலே யிருக்கிற முசியே வேசாழக்கும் முசியே செம்மடுத்தேனுக்கும் எழுதி வந்தது. அவர்களும் நாங்களும் எல்லாருங்கூடப் பயணப்பட்டு மஞ்சகுப்பத்திலே யிருக்கிற கும்பினீர் தோட்டத்தைப்போய் எட்டுமணிக்குச் சேர்ந்தோம். அவ்விடத்திலே யிருந்து படையெல்லாம் சேகரித்துக் கொண்டு வண்ணாரப்பாளையத்து ஒட்டு பிடித்துக்கொண்டு கோட்டையின் பேரிலே ராசகாரியம் நடத்துகிறதற்குத் தோட்டத்துக்குக் கிழக்கு வாசற்படி யண்டையிலே நம்முடைய ராணுவ சொல்தாதுகள், காப்பிரிகள், மாயே சிப்பாய்கள் சமஸ்தமான பேரும் வரிசை வைத்துக்கொண்டு அப்பால் சாகி நடக்கிறதற்கு ஆயத்தமாயிருக்கையிலே மெத்தையின் பேரிலே சந்தினேரிருந்து கொண்டு ஏழு கப்பல் ஓடிவருவதைக் கொண்டு இந்தக் கப்பல் இங்கிலீசுக்காரரதுதான் என்று நிஷ்கரிஷை ஏற்படுத்தி, பிற்பாடு இறங்கி வந்து இந்தப் படைக்கு எசமான்களாய்ப் போன படைத்தலைவர் மார் முசியே பரதி, முசியே லத்தூர், முசியே சன்ழாக்கு, முசியே செம்மடுத்தேன், முசியே வேன்சான், முசியே சன்ழனியாக்கு முதலான படைத்தலைவர்மார் எல்லாருமாய் குமிசேல் கூடி, அவர்களுக்கானால் கப்பல் வந்து போச்சுதே. ஒருவேளை இந்தக் கப்பலையெல்லாம் கொண்டுபோய்ப் புதுச்சேரி துறையிலே வைத்துப் பிடித்துதானால் அவ்விடத்திலே ராணுவமில்லையே. இனிமேல் நாமிங்கே யிருக்கிறது காரியமில்லை யென்று சொல்லி,
பத்தரை மணிக்கு அவ்விடத்திலே யிருந்து சோத்துப்பாளையத்தையும் அதன் பிறகே நம்முடைய ராணுவங் கூட்டி அதன் பிறகே இரண்டு வெண்கலப் பீரங்கியும், பின்னையும் நான்கு மூன்று பீரங்கிகளையும் இழுத்துக் கொண்டு இதுகளையெல்லாம் மேல்புறமாய் வாகூருக்குக் கிழக்கு வழியாய்ப் புறப்பட்டுப் போகச்சொல்லி, அப்புறம் சிறிது சாமான்களையெல்லாம் எடுக்கிறதற்குக் கூலி ஆட்களில்லாமல் மருந்து பெட்டிகளை யெல்லாந் தண்ணீரிலே போட்டு அவ்விடத்திலே யிருந்த பீரங்கிகளை யெல்லாம் ஆணியடித்து அதுகளையும் இழுத்துத் தண்ணீரிலே போட்டு, அரிசி சாக்குகளை அறுத்துக் கிணறுகளிலேயும் குளத்திலேயும் சொட்டிப் போட்டு, சாராய பீப்பாய்களை யெல்லாம் உடைத்து ஊத்திப்போட்டு, தோட்டத்திலே யிருக்கிற நாற்காலிகள், பெட்டிகள், மேசைப்பலகை, வீடு வாசல்களை யெல்லாம் உடைத்து இடித்துத் தகர்த்துப்போட்டு, ஏணிகளையெல்லாம் கொளுத்திப்போட்டுத் தாம்தூம் பண்ணி அவ்விடத்திலே யிருந்த வீடுகளையும் கொளுத்திப் போட்டு, அவ்விடத்திலே யிருந்து பயணம் புறப்பட்டு வரும்போது குதிரைவால் கொத்தளத்திலே ஏறி கொடி மரத்தையும் வெட்டிப் போட்டு, அதிலே யிருந்த பீரங்கிகளை ஆணியடித்துத் தண்ணீரிலே இழுத்துப் போட்டுவிட்டு அதிலே யிருந்த மருந்து குண்டுகளை யெல்லாம் எடுத்துத் தண்ணீரிலே போட்டுவிட்டு, அவ்விடத்திலேயிருந்த குடிசைகளையும் கொளுத்திப்போட்டு, மரிகிருஷ்ணாபுரத்து வழியே புறப்பட்டு வரும்போது இதற்குள்ளே தேவனாம்பட்டணத்துக் கோட்டைக்குக் கபுறாகி அவ்விடத்திலே யிருந்து இருநூறு பேர் வெள்ளைக்காரரும் ஐம்பது குதிரையுமாகப் பின்தொடர்ந்து வந்தார்கள்.
நாங்கள் முன்னும் அவர்கள் பின்னுமாய் மரிகிருஷ்ணாபுர மட்டுக்கும் வந்த பிற்பாடு நம்முடைய ராணுவம் திருப்பிக்கொண்டு துரத்தினார்கள். அந்த மட்டிலே அவர்கள் ஓடிப்போனார்கள். அந்த சமயத்திலே நம்முடையவர்களுக்குள்ளே ஒரு மூட்டைக்காரனை வெட்டிப்போட்டார்கள். அந்த மூட்டைக்காரன் பிறகே வந்த நம்முடைய சேவகன் வேங்கடாசலம் என்கிறவனைப் பிடித்துக்கொண்டு அவனுடைய கத்தி, துப்பாக்கி, புடவை சீலைகளை எல்லாம் பிடுங்கிக்கொண்டு விட்டார்கள். அவன் மாத்திரம் பிராணன் தப்பித்துக்கொண்டு ஓடிவந்துவிட்டான். இதல்லாமல் ஒரு வெள்ளைக்காரன் சாராயத்தைக் குடித்துவிட்டுத் தண்ணீர் தாகத்தினாலே பின்னே நின்று பனைமரத்தோரமாய் வரச்சே கண்டு அவனைத் தேவனாம்பட்டணத்துக் குதிரைக்காரர் அவன் தலையை வெட்டி எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள். அவர்களைத் துரத்திக்கொண்டு விடப்போய் ஆற்று மட்டும் விட்டுவிட்டு மறுபடியும் புறப்பட்டு இப்புறம் வந்துவிட்டார்கள். அங்கேயிருந்துப் புறப்பட்டுப் பயணம் அரியாங்குப்பத்திலே வந்து நின்றார்கள். அதன் பேரிலே இவ்விடத்திலே யிருந்து துரையவர்கள் கடுதாசி வந்து பார்த்துக்கொண்டு அவ்விடத்திலே யிருந்து இன்று சாயங்காலம் ஏழு மணிக்கு ராணுவப் படைகள் சமஸ்தமான பேரும் புதுச்சேரி தங்கலானார்கள்.
… ஆனாலின்ன மிரண்டு நாளைக்கு மாத்திரம் கப்பல் வராமல் இருந்து நானாலீவர்கள் போன முஸ்தீதும் சபுருசஷத்துக்கு மிரண்டு நாளையிலே கோட்டையைப் பிடித்துக் கோட்டையிலே வெள்ளை நிசானும் பறக்கும். ஆனால் இன்னஞ் சிறிது நாளைக்கு அந்தக் கோட்டையிலே இங்கிலீசுக் கொடி பறக்கத்தக்கதாகப் பிராப்தி யிருக்கிற படியினாலே சுற்றுக் கொத்தளமெல்லாம் கைவசப்பட்டுக் கோட்டை பிடிக்கப் போகிற சமயத்திலே இங்கிலீசுக்காரருக்குக் கப்பல் வந்து கைக்கொத்தி கையாச்சுது. ஆனபடியினாலே மனுஷ எத்தனத்திலே எத்தனை பிரயத்தனம் பண்ணித் தன் புத்தியினாலே என்னதான் தப்பித்தாலும் தெய்வ சங்கல்பம் உள்ளபடி நடக்குமே யல்லாமல் அதுக்கொருக்காலும் திருக்கு வரத்தக்கதில்லை.
(தொடரும்)