Skip to content
Home » ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #35 – போருக்குப்போன துரை, திரும்பி வந்த கதை!

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #35 – போருக்குப்போன துரை, திரும்பி வந்த கதை!

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு

தேவனாம்பட்டணத்தைப் பிடிக்கப் போன பிரெஞ்சுப் படைகள் அது முடியாமல் திரும்பி வந்தது புதுச்சேரி ஆளுநர் துய்ப்ளேக்சுக்கு பெரும் மன வருத்தத்தை ஏற்படுத்தியது. இன்னும் இரண்டொரு நாள் இங்கிலீஷ் கப்பல்கள் வராமல் இருந்திருந்தால் கோட்டையைப் பிடித்திருக்கலாம் எனும் தனது ஆதங்கத்தை ஆனந்தரங்கரிடம் பகிர்ந்து கொண்டார். மே மாதம் பிறந்தால் தேவனாம்பட்டணம் கோட்டை நம் கைவசமாகும் என அவருக்கு ஆறுதல் சொன்னார் ஆனந்தரங்கர்.

இதுநடந்து சரியாகப் பத்து மாதங்கள் கழித்து தேவனாம்பட்டணத்தின் மீதான மீண்டுமொரு முற்றுகைக்குத் தயாரானது பிரெஞ்சுப் படைகள். இந்தமுறை இதற்குத் தலைமை தாங்கிப் புறப்பட்டவர் ஆளுநர் துய்ப்ளேக்ஸ். அவருடன் செல்வதற்கு ஆனந்தரங்கரும் தயாரானார். இதை அறிந்த ஆளுநர், இதற்கு அனுமதி மறுத்தார். ‘நாம் வெளியே போகும்போது ஆனந்தரங்கர் இங்கிருப்பது அவசியம்’ என்றார். ஆனால், ஆனந்தரங்கரோ ‘நீங்கள் இருக்கும் இடத்தில் நானும் இருப்பேன்’ என அடம்பிடித்தார்.‌ ஆனால் இதையெல்லாம் காதில் வாங்க மறுத்த துய்ப்ளேக்ஸ், ‘நிர்வாகத்தை நடத்துவதில் சின்ன துரைக்கு உதவியாக இருக்க வேண்டும்’ என்றும் இன்னும் ஆனந்தரங்கரின் தகுதி, திறமை குறித்தெல்லாம் புகழ்கிறார்.

இதற்கிடையில் 1748 ஜனவரி 14ம் தேதி தேவனாம்பட்டணம் கோட்டையைப் பிடிக்கப் புறப்பட்டது, ஆளுநர் துய்ப்ளேக்ஸ் தலைமையிலான பிரெஞ்சுப் படை. ‘ராசமானிய மகாராச ராசஸ்ரீ துரையவர்கள் முசியே ஷெவாலியேர் துய்ப்ளேக்சு மகாராசாவானவர் தேவனாம்பட்டணத்துக் கோட்டையிலே பிராஞ்சுக்கொடி போடுவிக்கிறே னென்று துவசங் கட்டின மகாராசன் தேவனாம்பட்டணத்து மேலே சண்டைக்குப் போகத்தக்கதாகப் பயணப்பட்டு இன்றைய தினம் காலமே ஆறு மணிக்கு இவ்விடத்திலேயிருந்து பயணம் புறப்பட்டு அரியாங்குப்பம் போய்ச் சேர்ந்தார். நானும் ஆறரை மணிக்குப் புறப்பட்டு அரியாங்குப்பத்துக்குப் போய்ச் சேர்ந்தேன்’ என்கிறார் ஆனந்தரங்கர். இங்கு, ஆளுநரை இவர் வர்ணிக்கும் வார்த்தைகள் குறிப்பிடத்தக்கது.

பிரெஞ்சுப் படைகள் புறப்பட்டு இரண்டொரு நாள்தான் ஆனது. தூக்கணாம்பாக்கம் வரை சென்றிருந்தார்கள். அதற்குள் கடலில் இங்கிலீஷ் கொடி போட்ட ஆறு கப்பல்கள் வருவது கண்டு புதுச்சேரி கோட்டையில் பீரங்கிச் சுட்டார்கள். இதையறிந்து கலவரமான துய்ப்ளேக்ஸ் உடனடியாகப் படைகளைத் திருப்பிக் கொண்டு புதுச்சேரி வந்து சேர்ந்தார். ‘இங்கிலீஷ் கப்பல்கள் வந்தாலும் வரட்டுமென்று ஒரு கை பார்ப்போமென்று இராமல் வந்துவிட்டது’ ஆனந்தரங்கருக்குக் கடும் அதிருப்தியைக் கொடுத்தது. முன்பு, ஆளுநரைத் தூக்கி எழுதிய இவர், இப்போது ‘ஆளுநருக்குப் புத்தி பேதலித்து விட்டது’ என்றும் இதனால் ஜனங்கள் எகத்தாளம் பேசுகிறார்கள் என்றும் எழுதுகிறார் ஆனந்தரங்கர்.

1747 மார்ச்சு 14 பங்குனி 4 மங்கள வாரம்

இற்றைநாள் தேவனாம்பட்டணத்திலே நடந்த சமாசாரம் விசாரித்துக் கொண்டு வரத்தக்கதாக வேவுக்காரரை, ஆறு பேர் பிராமணரைப் பயணம் பண்ணி ஆறு பேருக்கும் இருபது ரூபாய்க் கொடுத்து அனுப்புவித்தோம். துரையவர்களிருந்து கொண்டு தேவனாம்பட்டணத்துக் கபுறு அடிக்கடி வரவேணுமென்றும், அதற்கேத்த பேரை கெட்டிக்காரரை அனுப்புவித்துக் கபுறு தெரிந்துகொண்டு சொல்லென்று சொன்னார்கள்.

இதல்லாமல் பின்னையும் துரையவர்கள் சொன்னதென்னவென்றால்: பார்த்தாயா ரங்கப்பா, நாம் பண்ணின பிரயத்தனம் என்ன! நாம் நடப்பித்த காரியமென்ன! கொத்தளங்களெல்லாம் பிடிபட்டுக் கோட்டை பிடிக்கப் போகிற சமயத்திலே இந்தக் கப்பல் வரவேணுமா! இனி இரண்டு மூன்று நாளைக்கு மாத்திரம் இந்தக் கப்பல்கள் வராமலிருந்துதானால் அனாயாசமாய்க் கோட்டையைப் பிடித்து வெள்ளைக்கொடி போட்டு விடலாம். அதனாலே எனக்கு ரொம்ப கீர்த்தி வரும். அதுக்கெல்லாம் வீணாய். நான் பண்ணின பிரயத்தனம் எல்லாம் விருதாவாய்ப் போய்விட்டதே பார்த்தாயா! என்று மனதிலே இருக்கிற துயரத்தை அடக்கக் கூடாமல் இப்படியாக என்னுடனே சொன்னார்கள்.

அதற்கு நானிருந்து கொண்டு நீங்கள் பிரயத்தனம் பண்ணின காரியம் வீண் போகிறதில்லை. இப்போது இல்லாவிட்டாலும் இன்ன மிரண்டு மாசம் பொருத்த பிறகாகிலும் அந்தக் கோட்டை உம்முடைய வசமாகிறதற்குச் சந்தேகமில்லை. ஆனால் என் மனதிலே யிருக்கிற தாபந்தம் என்னவென்றால்: இப்போது இந்தக் கப்பல் வந்தபடியினாலே தேவனாம் பட்டணத்துக் கோட்டையிலே யிருக்கிற சரக்கெல்லாம் ஏற்றிக்கொண்டு போய்விடுவார்களே. இந்தக் கப்பல் வருகிறதற்கு முன்னே தானால் கோட்டையைப் பிடித்துக்கொண்டவுடனே இருக்கிற சரக்கையெல்லாம் எடுத்துக்கொள்ளலாமே. அது தப்பிப்போச்சுது என்கிற தாபந்தமேயல்லாமல் கோட்டையைப் பிடியாதே போறோமே யென்கிற தாபந்தம் இல்லை. அதேனென்றால் கோட்டை இரண்டு நாள் ஏறக்குறைய நம்முடைய கைவசமாகிறது சித்தம். அதற்கொன்றும் திருக்கில்லை. அந்தப்படி வேணுமென்றால் நான் சீட்டெழுதிக் காட்டுகிறேன். ஆனாலின்னஞ் சிறிது நாளைக்கு அவர்கள் வசமாயிருக்கத் தக்கதாகப் பிராப்தி யிருக்கிற படியினாலே தான் நாம் மூன்று நாலு தரம் பிரயத்தனம் பண்ணியும் தட்டிப்போச்சுது. ஆனாலுமென்னமாயாச்சுது, மாயு மாதம் பிறந்துதானால் அப்புறமந்தக் கோட்டையைக் கைவசம் பண்ணுகிறதல்லாமல் பின்னையும் அநேகங் காரியம் எல்லாம் அனுகூலம் படத்துக்காக ஏஷியமிருக்கிறது. அந்தப்படிக்கெப்படியும் கெட்டியாயிருக்கிறது. நீங்களிதை யோசனை பண்ணத்தேவையில்லை யென்று சொன்னேன்.

அது மெய்தானென்று ஏற்றுக்கொண்டு நீ சொல்லுகிறதெல்லாம் சரிப்பட்டு வருகுது. ஆனாலிதொன்று மாத்திரம் சரிப்படாதே போச்சுதென்று சொன்னார். அதற்கு நான் சொன்னது: சென்னப்பட்டணம் பிடித்தவுடனே தேவனாம் பட்டணத்தைப் பிடித்துப்போடவேணும். அது இருக்கலாகாதென்று கூடியும், தலையாட்டும் பாம்பாயிருக்குமென்றும் உடனே பிரயத்தனம் பண்ணினது உண்டானால் அனாயசமாய் எளிதத்திலே வாங்கிப்போடலாமென்று நானப்போ தானே சொல்லிக்கொண்டு வந்தேனே. அப்போது பாராமுகமா யிருந்தீர்களே. அப்படியிருந்தும் நம்முடைய கப்பல் இருக்கச்சேதானே போய்ப் பிடிக்கவேணுமென்று சொன்னதற்கு அந்தக் கோட்டையைப் பிடிக்கிறதற்கு இந்தக் கப்பலையும் அஞ்சாங்கல் தலைச்சேரிக்கு அனுப்பிவிட்டீர்களென்றும், ஆனாலென்னாமா யாச்சுது. இந்த மாதமும் போனால் அப்படியே கைவசம் படுகுதென்று சொன்னேன்.

நான் சொன்னதின் பேரிலே அவருக்குச் சற்றே மனது குதிர்பட்டு, அதுவுமெய்தானென்று சொல்லிப் பின்னையும் வெகுநேரமட்டாய் அந்தப் பேச்சாய்தானே பேசிக்கொண்டு இருந்தார்கள். அவர்கள் சொல்லுகிறதற் கெல்லாம் சவுத்திரமாய்த்தானே அவர் மனதுக்குச் சந்தோஷம் வரும்படியாகச் சொன்னோம். நாம் சொன்னபடிக்குத்தானே சுவாமி தயவு பண்ணி வைப்பாரென்று சொல்லிட்டு அனுப்புவித்துக் கொண்டு பாக்குக் கிடங்குக்கு வந்தேன்.

1748 சனவரி 13 தை 3 சனிவாரம்

இற்றைநாள் மத்தியானம் பத்து மணிக்கு நடந்த சேதி என்னவென்றால்: துரையவர்களண்டையிலே முசியே தெப்ரேனும், முசியே தொத்தேலும், முசியே புரியேலும் ஆகிய இவர்கள் இரண்டு மூன்று பேரும் கூட இருக்க, நான் போனவிடத்திலே முசியே தொத்தேல் இருந்துகொண்டு துரையவர்களுடனே, ரங்கப்பிள்ளை சண்டைக்குப் பயணம் புறப்படுகிறதற்கு முஸ்தீதாய் இருக்கிறார். பிஸ்தோலுக்கும் மற்றதுகளுக்கெல்லாம் லெஸ்து பண்ணுவித்துக் கொண்டு பயணமாய் இருக்கிறார். துபாக்கி மாத்திரம் இல்லை, நல்ல துபாக்கியாய் இரண்டு துபாக்கி மாத்திரம் கொடுக்க வேணுமென்று சொன்னதின் பேரிலே,

துரையவர்கள் இருந்து கொண்டு அவர் எங்கே வருகிறார்? நாம் வெளியே போகிற மட்டுக்கும் இவ்விடத்துக் கவைக்கு அவரிருக்க வேணுமென்று சொன்னார். அதன்பேரிலே நானிருந்து கொண்டு, நீங்களிருக்கிற விடத்திலே நானுங்கூட இருக்கிறதே யல்லாமல் உங்களை விட்டுவிட்டு நான் அவ்விடத்திலே இருக்கிறதில்லை என்று சொன்னேன். அதிலே முசியே தொத்தேலும் முசியே தெப்ரேனும் இருந்து கொண்டு, மெய்தான். நீரிருக்கிற விடத்திலே தான் ரங்கப்பிள்ளையும் இருக்கவேணும். அது நியாயம். சரிதானென்று சொன்னார்கள்.

அதற்கு துரையிருந்து கொண்டு சின்னதுரையை இவ்விடத்திலே வைத்துப் போகிறோமே, அவர் நல்லவர் தான். மெத்த சாது. அவருக்குப் பின்னையொன்றும் தெரியாது. ரங்கப்பிள்ளையைப் போலே கப்பாசல்லவா, ரங்கப்பிள்ளை என்னுடைய கையுங் கீழேயிருந்து எல்லாம் வாடிக்கைப்பட்டு என்னுடைய புத்தியிலே தோன்றுகிறபடிக்கு, அதற்கு முன்னமேயே எல்லாக் காரியமும் சேகரித்து நடத்தத் தக்கவாறு மிதல்லாமல், துலுக்கருடைய காகிதங்களுக்கு உத்தரவு பிரதி உத்தரவும் தெரிந்து எழுதி சமதாயிருக்கிறதற்கு வாடிக்கைப்பட்டவன். என்னுடைய புத்திக்குச் சமானமாய் நடத்தத்தக்க யோக்கியனான படியினாலேயும், என்னிடத்திலே ரொம்பமருவி வாடிக்கைபட்டவனான படியினாலேயும், அவனிங்கே தானே யிருந்து இவ்விடத்திலே காரியங் கவையெல்லாம் சமாளித்துக்கொண்டிருக்க வேணும். ஆன படியினாலே அவர் போகாது இவ்விடத்திலே இருக்க வேணுமென்றார்.

அதன் பேரிலே நானிருந்து கொண்டு ஐயா, நான் ஒரு வார்த்தைச் சொல்லுகிறேன் கேட்க வேணுமென்று சொன்னேன். என்ன என்றார். ஐயா, உம்முடைய யோகத்தினாலேயும் உம்முடைய அதிர்ஷ்டத்தினாலேயும் நீங்களின்னம் அநேகமான கீர்த்தி சம்பாதிக்கத்தக்கதாக ஆயத்தப்பட்டிருக்கிற கனயோகசாலி ஆனபடியினாலே உம்முடைய யோகநாதனே எங்கே போனாலும் திக்கு விசயமாகிறதே யல்லாமல் பின்னை யொருத்தனைத் தொட்டிருக்கிறதென்று யோசனை பண்ணத் தேவையில்லை. இப்போது சொல்லுகிறது: முசியே பரதி போய் கெலித்தானென்றும் மற்றவன் கெலித்தானென்றும் இவனைத்தொட்டு நிருவாகமா யிருக்குதென்றும் இப்படியாகச் சொல்லப்படுகிற தென்னவென்றால்: நீர் மகா யோக்கியசாலி ஆனபடியினாலே உங்களை நாங்கள் சேர்த்திருக்கிற படியினாலே உங்களுடைய சாயை எங்கள் பேரிலே சேர்ந்திருக்கிற படியினாலே மற்றப் பேருக்குக் கீர்த்தியே யல்லாமல் மற்றப்படி ஒருத்தரைத் தொட்டு ஆகிறதென்ன விருக்கிறது? உம்முடைய யோகமே தேவனாம்பட்டணத்துக் கோட்டையிலே நிசான் கொண்டு போய்ப் போடுவிக்கப் போகிறது. ஆகையினாலே ஒருத்தருக்கும் பிரயாசை இல்லையென்று சொன்னேன்.

நானிப்படி யெல்லாஞ் சொன்னவுடனே துரையவர்களும், முசியே தொத்தேலும், முசியே தெப்ரேனும் எல்லாரும் நகைத்துக்கொண்டிருந்தார்கள். துரையவர்கள் நகைத்து ரங்கப்பிள்ளை எப்போதும் இப்படித்தானே சொல்லுகிறதென்றும் சொன்னார். ஆனால் அவர் சொன்னது பின்னையும் ரொம்பவும் உண்டு. ஆனாலும் அதிலே காரியத்தை மாத்திரம் எழுதினோம். இன்னும் அவர் சொன்னபடிக்கெல்லாம் அவர் ஷடைக்கு எழுதினாயிருக்கும். ஆனால், உண்டானபடி நடந்த காரியத்திலேயும் சூசனையாய் எழுதினேன்.

1748 சனவரி 14 தை 4 ஆதிவாரம்

இற்றைநாள் நடந்த சேதி என்னவென்றால்: ராசமானிய மகாராச ராசஸ்ரீ துரையவர்கள் முசியே ஷெவாலியேர் துய்ப்ளேக்சு மகாராசாவானவர் தேவனாம்பட்டணத்துக் கோட்டையிலே பிராஞ்சுக்கொடி போடுவிக்கிறே னென்று துவசங் கட்டின மகாராசன் தேவனாம்பட்டணத்து மேலே சண்டைக்குப் போகத்தக்கதாகப் பயணப்பட்டு இன்றைய தினம் காலமே ஆறு மணிக்கு இவ்விடத்திலேயிருந்து பயணம் புறப்பட்டு அரியாங்குப்பம் போய்ச் சேர்ந்தார். நானும் ஆறரை மணிக்குப் புறப்பட்டு அரியாங்குப்பத்துக்குப் போய் தண்டு முஸ்தீதுகளும் பார்த்து, துரையவர்களையும் கண்டு பேசிக்கொண்டு மறுபடியும் பத்து மணிக்கு இவ்விடத்துக்கு வந்துவிட்டோம். இவ்விடத்திலே வந்த பிற்பாடு, ஆள்கள், மாடுகள், பின்னையும் தேவையான சாஞ்சாமி களெல்லாம் முஸ்தீது பண்ணி அனுப்புவிக்கிறோம். இதல்லாமல் சாயங்காலம் ஆறுமணிக்கு வந்தவாசியிலே யிருந்து நாலு யானை வந்து சேர்ந்தது. அந்த நாலு யானையையும் அரியாங்குப்பத்துக்கு அனுப்பிவித்தோம்.

இற்றைநாள் தண்டு பிறகே போன அப்புமுதலியார் அண்ணனும் நடந்த சேதியை எழுதிக்கொண்டு வந்து எழுதி வைத்தபடிக்குத் தண்டு சமாசாரம் எழுதிவைத்த வயணம்:

இற்றைநாள் சகலமும் சண்டை முஸ்தீதுடனே புறப்பட்டு அரியாங்குப்பத்துக்குப் போய்ச் சேர்ந்தார்கள். சேர்ந்தவுடனே சகல ராணுவங்களும் படைத்தலைவரும் அறியத்தக்கதாக பாறு நிறுத்தி, தம்பூர் அடித்து, முசியே பரதி, முசியே பிஷார், பின்னையும் இரண்டொரு துரைகளுக்கும் படைத்தலைவர்மார் உத்தியோகம் கொடுத்து, இவர்களைப் படைத்தலைவர்மார் என்றறியுங்கோளென்றும், மற்றப்பேருக்கெல்லாம் உத்தாரம் கட்டளையிட்டு, பிற்பாடு சம்பாவு கோவிலிலே வந்திறங்கி காடுது குதிரைக்காரர்களை அனுப்பி வழியிலே எதிராளி ராணுவ ரவுத்து ஏதாகிலும் இருக்குதா வென்று போய்ப் பார்த்துவரச் சொல்லி யனுப்புவித்தார்கள். அவர்கள் போய் அப்படியே மரிகிருஷ்ணாபுர மட்டுக்கும் போய்ப்பார்த்து எங்குமில்லைய யென்று சொன்னார்கள்.

பிற்பாடு நூறு மண்வெட்டிக்காரர்களை அனுப்பி, மேடுபள்ளம், வாய்க்கால் வெட்டி நிரவிவைத்துப் போடச்சொல்லி உத்தாரங் கொடுத்தார்கள். அப்படியே காதவழி மட்டுக்கும் போய் நிரவிப்போட்டு வந்தார்கள். பிற்பாடு தட்டுமுட்டுத் தளவாடங்கள் எடுக்க மாடுகள், ஆள்கள், கூலிக்காரர்கள் எல்லாரும் லெஸ்தா இருக்கிறார்களாவென்று கேட்டார்கள். அதை விசாரித்து நான் சொன்னது என்னவென்றால்: நாலு நாளாய் வந்து சேர்ந்த சாமான்கள் எல்லாம் நீங்கள் புறப்படுகிற பயணத்துக்கு உங்களுடனே கூட நடக்க மாட்டாது என்று சொன்னேன். அது எதனாலே என்று கேட்டார். அதற்கு நான் சொன்னது: கொண்டு வந்த மாடுகளும் கூலிக்காரரும் அப்போதைக்கப்போது சுமைகளை இறக்கிப் போட்டுப் புதுச்சேரிக்குப் போய்விட்டார்கள் என்று சொன்னேன். அதன் பேரிலே துரையவர்கள் காரியத்துக்காரரைக் கோபித்துக்கொண்டு உங்களுக்குக் கடுதாசி எழுதியனுப்புவித்தார்கள். அனுப்புவித்த பிற்பாடு நீங்கள் ஆள்களும் முஸ்தீது பண்ணுவித்து அனுப்புவித்தீர்கள். அவைகளும் வந்து சேர்ந்தன.

1748 சனவரி 15 தை 5 திங்கட்கிழமை

இற்றைநாள் நடந்த சேதி என்னவென்றால்: நேற்றைய தினம் இவ்விடத்திலே யிருந்து அரியாங்குப்பத்துக்குப் போயிருந்தோம். மதாம் துய்ப்ளேக்சு, மதாம் பெடுத்தல்மி மற்றப் பேரெல்லாரும் நேற்று ராத்திரி அரியாங்குப்பத்திலே துரையவர்களுடனே கூட தீனி தின்றுவிட்டுப் பதினொரு மணிக்கு அவ்விடத்திலே யிருந்து புறப்பட்டுப் புதுச்சேரிக்கு வந்து சேர்ந்தார்கள். நாலு மணி வேளைக்கு அரியாங்குப்பத்திலே யிருந்த தண்டு குதிரைகள், ராணுவ வெள்ளைக்காரர் மற்றப்பேரெல்லாரும் ஸாகிப்போனார்கள். துரையவர்களும் இன்றைய தினம் காலமே ஏழு மணிக்குப் புறப்பட்டுத் தேவனாம்பட்டணத்து மேலே சண்டைக்குப் போகத்தக்கதாகப் புறப்பட்டார்கள்.

1748 சனவரி 17 தை 7 புதவாரம்

இற்றைநாள் காலமே பழையது சாப்பிட்டு ஏழுமணிக்குக் கோட்டைக்குப் போய் சின்ன துரையவர்களைக் கண்டுபேசி கொண்டிருக்கச்சே, கடலிலே கப்பல்கள் காணுதென்று சொன்னார்கள். அதை நச்சுக்குழல் வைத்துப் பார்த்ததிலே ஆறு கப்பல்களும் ஒரு சுலுப்பும் கண்டது. அதிலே இங்கிலீஷ் கொடி போட்டிருந்தது. அந்தக் கப்பல்களைக் கண்டவுடனே மூலைக்கொத்தளத்திலே ஏழு பீரங்கிச் சுட்டான். அந்தப் பீரங்கிச் சத்தம் தண்டு தூக்கணாம்பாக்கத்துக்கு அப்புறம் போகச்சே துரையவர்களுக்குக் கேட்டதாகவும், அந்தச் சாடை அறிந்த அந்நேரமே திருப்பிக்கொண்டு தண்டு, மற்றது சாமான்கள், சகலமும் திருப்பி மறுபடி வந்துவிடச் சொல்லிவிட்டுத் துரையவர்களும் முசியே பரதியும் ஐம்பது காடுது குதிரையுடனே 11 ½ மணிக்கு வீட்டிற்கு வந்து சேர்ந்தார்கள். மற்ற தண்டு ராணுவம், வெள்ளைக்காரர், சொலுதாதுகள், சாமான்கள் எல்லாம் ஒன்று பிறகே ஒன்று வந்துவிட்டார்கள்.

இங்கிலீஷ் கப்பல்கள் வந்தாலும் வரட்டுமென்று ஒரு கை பார்ப்போமென்று இராமல் வந்துவிட்டது, தேவனாம்பட்டணம் இங்கிலீஷ்காரருக்கு இன்னுமிருக்கப் பிராப்தமிருக்கிற படியினாலே முசியே துய்ப்ளேக்சுக்குப் பேதை புத்தித் தோன்றி வந்துவிட்டார். முன் போகச்சே தானே இந்தப் பலனை யெல்லாம் யோசனை பண்ணிப்போக வேண்டியது. அப்போது பெண்சாதி, வேகுகாரர் வந்து சொன்ன பேச்சை மெய்யென்று நம்பிப் புறப்பட்டுத் தூக்கணாம்பாக்கம் மட்டுக்கும் எஜமான்தான் தானே போய்த்திருப்பிக் கொண்டு வந்து அப்புறம் திசையை அடைந்தான்.

முன் தான் போகாமல் முசியே புரி துரையை அனுப்பினபோது குண்டுக்குள்ளே போய்க் கொத்தளங்களை வாங்கி கும்பினீர் தோட்டத்தையும் பிடித்துக் கொண்டு திருப்பாதிரிப்புலியூரைக் கொள்ளையிட்டு, கூடலூர் மட்டுக்கும் ஓடிப்போக எதிராளிகளைத் துரத்திக் கூடலூரையும் பிடித்துக்கொள்ளுகிறதா யிருக்கச்சே கோட்டையிலே இருக்கிறவர்களும் சலங்குகள் அமர்த்திக் கொண்டு பாயை விரிக்கிற மட்டுக்கும் இருக்கச்சே கப்பலைக் கண்டு பிடிபட்டு வந்துவிட்டார்கள். இப்போது அது தானும் இல்லாமல் எஜமானனே போன விடத்திலே தூக்கணாம்பாக்கத்து அத்துக்கு இப்புறமே புறப்பட்டு வந்துவிட்டது.

எப்படி யிருந்த தென்னவென்றால் முன் பயணம் புறப்பட்ட இரண்டு நாளென்றைச்சே தானே எனக்கு வந்த ஓலைச்சேதி. ஆனால், மேலே கமாண்டோர் இஸ்காதுரு ஐந்தாறு கப்பல்கள் இருக்கிறதாகவும், அதனை வரச்சொல்லி எழுதினதாகவும், அதுவும் வருமென்று இப்போது ஒரு கப்பலிலே அறுநூறு சொலுதாதுகள் வந்து இறங்குகிறார்களென்றும் இப்படி எழுதிவந்தச் சேதியைப் போய்ச் சொன்னாப்போலே உனக்குச் சேதி அனுப்பினவன் மெய் எழுதவில்லை என்று சொல்லி கமாண்டோர் வரச்சொல்லி எழுதினதற்கு, என் கப்பலை வெதாபாக்கம் கொண்டு போகிறேன் வரக்கூடாது. நீயாச்சுது கோட்டையாச்சுது ஸரிப்போனபடி பார்த்துக்கோவென்று எழுதியனுப்பினான் என்று சொன்னதுமல்லாமல் மேஸ்தர் மாசை அழைத்து கோன்சேல் கூடி, இனிமேல் நடக்கவேண்டியதென்னவென்று கேட்டாப் போலேயும் இனிமேல் வேறே அடமானமில்லை. நாங்கள் சென்னப்பட்டணம் ஒப்புவித்தாப் போலே நீங்களும் ஒப்புவித்துப் போடுங்களென்று சொன்னதாயும், அதன் பேரிலே அவர் தட்டுமுட்டுகளை அப்பால் படுத்துகிறதாகச் சேதி வந்திருக்கிறதென்று சொன்னார். மற்றச் சேதியெல்லாம் அப்படி இருந்தாலும் கோன்சேலிலே மேஸ்தர் மாசு அப்படிச் சொல்லி வரச்சொல்லிச் சொல்லானென்று யோசனை கூடப்பண்ணுகிறதற்கில்லாமல் பெண்டாட்டி தனக்கு வந்த சேதியென்று எழுதிக் கொடுத்தாப்போலே அது மெய்யென்று எண்ணி தேவனாம்பட்டணத்தின் பேரிலே சண்டைக்குப் போன புத்தியைப் போலே வந்துவிட்டாரென்று தோற்றுது. இதுவும் அல்லாமல் ஏகதாளி பண்ணுகிற ஜனங்கள் விசேஷம் காதுகொடுத்துக் கேட்க முடியவில்லை என்று என் புத்தி கேட்டு நடக்கிறவர்களுக்கெல்லாம் வருகிற அப்பிரதிஷ்டை இப்படித்தான் என்று அறிய வேண்டியது.

இற்றைநாள் பாளையம் கூச்சுபண்ணி அணிவகுத்து நடக்கச்சே தூக்கணாம்பாக்கத்துத் தென்மேற்கே மூன்று நாழிகை வழிக்கப்பாலே போகச்சே, புதுச்சேரியிலே போட்ட பீரங்கி வெடி, ரெண்டு வெடி கேட்டது. கேட்டவுடன் அப்போதே பாறா நடக்க வொட்டாமல், சந்தடி பண்ணாமல் நிறுத்தினார். சற்று நேரத்துக்குள்ளே அப்படியே ஒருவருக்கொருவர் பேசாமல் நின்றார்கள். நின்ற பிறகு முசியே பெடுத்தல்மி என்கிற செக்ரெத்தேர் கையிலே எழுதியிருந்த கடுதாசியைப் பார்த்துக்கொண்டு வரச்சொல்லி படித்துப் பார்த்துத் துரையவர்கள் சொன்னது: இன்னும் சற்று நேரத்துக்குள்ளே ஐந்தாறு வெடி பீரங்கிக் கேட்குமென்று சொன்னார். அப்படியே கேட்டது.

கேட்டவுடனே மனது மெத்த விசனமாய்க் கால் நாழிகை பரியந்தம் குதிரை மேலே இருந்தபடியே மவுனமாயிருந்து குதிரையை விட்டிறங்கி கையை முறித்துக் கொண்டு காலை பூமியிலே உதைத்து இப்படி நிர்ப்பாக்கியத்தனம் எங்கேயாகிலும் உண்டா என்று சொல்லி, முன்னேயும் புறப்பட்ட போதெல்லாம் இப்படி ஒவ்வொரு காரியமும் சம்பவிக்கிறது என்று சொன்னார். சொல்லி, சற்று நேரத்துக்குள்ளே மழோர், மற்றுமுண்டான பேரை அழைத்துப் பாளையத்தைப் புதுச்சேரிக்குத் திரும்பச் சொல்லிவிட்டு பல்லக்கேறிக் கொண்டு சற்றிடம் வந்து ஒரு மரத்தின் கீழே இறக்கி, ஒரு துண்டு ரொட்டி சாப்பிட்டு, ஒரு லீதர் சாராயங் குடித்துப் பல்லக்கிலே ஏறிக்கொண்டு தாமும் காடுது குதிரைக்காரரையும் நாலத்து ரெண்டு துரைகளுமாத்திரம் புறப்பட்டு இரண்டு நாழிகை வழி பிறகே வந்து இறங்கி காரைக்காலிலே யிருந்து பறங்கிப்பேட்டையிலே வந்து இறங்கியிருக்கிற சொலுதாதுகளுக்கு கடுதாசி எழுதியனுப்பி, அவ்விடம் புறப்பட்டு, செவ்வையாய்ப் புதுச்சேரிக்கு வந்துவிட்டார்.

புறப்பட்ட நாலு நாளும் நாளுக்கு நாள் பாளையம் கூச்சு ஆகிறது. அதிசீக்கிரம் அதிசீக்கிரமாக நடந்து ஜனங்களுக்கு ரஸ்து தின்பண்டங்களுக்கு மேன்மேலாய், குதிரை இல்லாமல் நடந்து பாளையம் புறப்பட்டு கதலிப் போகிறதைப் பார்த்தால் எதிராளி கெர்ப்பம் கலங்கிப்போம். அவர்களும் மனசு உற்சாகமாயிருந்து, கோமுட்டிசெட்டி கூலிக்காரர் முதலாய் வெகு தைரியத்துடனே இருந்தார்கள். பாளையம் கதலிப் போகிறபோது ஜனங்கள் வெள்ளம் புரண்டாப்போலே சற்றேறக்குறைய பதினாயிரம் பேருக்குக் குறையாது. பின்னையும் சில்லரைச் சேதிகள் எழுத வேணுமானால் எழுதலாம். அதிலே அதிசயமில்லை.

(தொடரும்)

பகிர:
கோ. செங்குட்டுவன்

கோ. செங்குட்டுவன்

விழுப்புரத்தில் பிறந்து வளர்ந்து வசித்து வருபவர். ஊடகத்துறையில் 20 ஆண்டுகாலம் செய்தியாளராகப் பணியாற்றியவர். கலை, இலக்கியம், பண்பாடு மற்றும் வரலாற்று அமைப்புகளில் பங்கேற்று இயங்கி வருபவர். 'சமணர் கழுவேற்றம்', 'கூவம் - அடையாறு - பக்கிங்காம்: சென்னையின் நீர்வழித்தடங்கள்' உள்ளிட்ட நூல்களை எழுதியிருக்கிறார். தொடர்புக்கு : ko.senguttuvan@gmail.comView Author posts