Skip to content
Home » ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #38 – சஇந்த சரீரம் உங்களது: சந்தா சாகிப் உருக்கம்!

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #38 – இந்த சரீரம் உங்களது: சந்தா சாகிப் உருக்கம்!

ஆனந்தரங்கம் பிள்ளை

சந்தாசாகிப் அதோ வருகிறார் இதோ வருகிறார் என்று சரி, தப்பு கபுறுகள் (தகவல்கள்) புதுச்சேரிக்கு வந்து கொண்டிருந்தன. இதற்கிடையில் 1749 செப்டெம்பரில் புதுச்சேரி வந்தார் சந்தாசாகிப். அங்கு வருவதற்கு முன்பு படை நடத்திச் சென்று ஆற்காட்டின் ஆட்சியை மீண்டும் கைப்பற்றினார். இதற்குப் பிரெஞ்சுப் படைகள் மற்றும் நிஜாம் முசாபர் ஜங்கு ஆகியோரின் உதவி சந்தாசாகிப்பிற்குக் கிடைத்தது. இந்த மோதலில் அன்வருதீன்கான் கொல்லப்பட்டார். இத்தகவல்கள் அடங்கிய நாட்குறிப்பின் பக்கங்கள் விடுபட்டுள்ளதால் ஆற்காடு போர் குறித்த முழுமையான விவரங்களை நம்மால் அறிய இயலவில்லை.

புதுச்சேரி வந்த சந்தாசாகிப்பிற்கு ஆளுநர் துய்ப்ளேக்ஸ் தடபுடலான வரவேற்பு அளித்தார். அப்போது அவருடன் உரையாடிய சத்தாசாகிப், தான் நாடு கடத்தப்பட்டது, பட்ட துன்பங்கள், பின்னர் விடுதலையானது குறித்தெல்லாம் விலாவாரியாக விவரித்துள்ளார். மேலும், ஆற்காட்டை மீண்டும் வசமாக்கப் போதிய படை உதவிகள் அளித்ததற்கும் தனது சத்ருவான அன்வர்திகானை இல்லாமல் செய்ததற்கும் மிகவும் நன்றி தெரிவித்துக்கொண்ட சந்தாசாகிப், ‘இந்தச் சரீரம் உங்களது’ என உருக்கமாகவும் பேசியிருக்கிறார்.

பாதர் இதாயத்து மொகதீன்கான் என்று மரியாதையுடன் அழைக்கப்பட்ட முசாபர் ஜங்கு, சந்தாசாகிப் வந்த அடுத்த நாள் வழுதாவூர் வந்து, அங்கு ஆற்றோரம் பங்களாவில் தங்கினார். சந்தாசாகிப்புடன் அங்குச் சென்ற ஆனந்தரங்கர், ‘உங்கள் சாகா இந்தப் புதுச்சேரி யிருக்கிறது. ஒருதரம் நீங்கள் வந்து கண்குளிரப் பார்த்து அப்பால் சாகிப்போகலாம்’ என்றுச் சொல்லி ஆளுநரின் சார்பில் அழைப்பு விடுத்தார். பின்னர் அன்றிரவு வழுதாவூரிலேயே ஆனந்தரங்கரும் தங்கினார்.

அடுத்த நாள் காலை புதுச்சேரி வந்தார் நிஜாம் முசாபர் ஜங்கு. அவரை வரவேற்கப் புதுச்சேரி சுற்றுப்பட்டில் இருக்கிற பெரிய மனிதர்கள் அனைவரும் புதுச்சேரியில் குழுமினர். பட்டணமே விழாக்கோலம் பூண்டிருந்தது. ‘ஆனால் போன வருடம் புரட்டாசி மாதம் இந்த நாளுக்கெல்லாம் இந்தப் பட்டணத்தின் பேரிலே இங்கிலீஷ்காரர் வந்திறங்கி சண்டை பண்ணி பீரங்கிக் குண்டு மழையாய் பட்டணமெங்கும் வருஷித்து இனிமேல் எது என்று சங்கடப்பட்டதற்கு உடனே ஈஸ்வரன் எதிராளியாய் வந்த இங்கிலீஷ் காரனுக்கு சகல கீர்த்தி பிரதிஷ்டைகளும் கொடுத்து இவ்வருஷம் புரட்டாசி மாதம் எல்லாம் இந்த ராஜ்யத்திற்கெல்லாம் அதிபதியாயிருக்கப்பட்ட நிஜாமானவர் இவ்விடத்திற்கு வந்து போகத்தக்கதாக பண்ணினா ரென்றால் அது மஹா ராமான்ய ராஜ் ஆன்றாசன்றால் முசியே துப்ளேக்சு அவர்கள் யோகமே யல்லாமல் மற்றப்படி என்னயிருக்கிறது?’

கடந்த ஆண்டு இதே நாளில் புதுச்சேரி பட்டணம் இருந்த நிலவரத்தை எண்ணிப்பார்த்த ஆனந்தரங்கரின் அங்கலாய்ப்பு இது.

மேலும், சந்தா சாகிப்பை ஆனந்தரங்கர் சந்தித்தபோது அவர் குறித்து இவரும் இவர் குறித்து அவரும் சொல்லிய வார்த்தைகள் சுவாரஸ்யமானவை!

புரட்டாசி 7 1749 செப்தம்பர் 19 சுக்கிரவாரம்

… அங்கேயிருந்து துரை வீட்டுக்கு வந்த உடனே சந்தாசாயபு காகிதமொன்று மதாமுக்கு ஒன்றும் துரைக்கு ஒன்றும் எழுதியிருந்தது. அந்தக் காகிதத்திலே எழுதியிருந்தது, நபாபு இதாயத்து மொகதீன்கான் சோமவாரம், இரண்டாம் ஜாமத்துக்கு புதுச்சேரிக்கு வர பயணமாய் புறப்பட்டு திமிரியிலே வந்து இறங்கினாரென்றும் அவ்விடத்திலே ஒரு நாளிருந்து குதிரை சுவார்களிது களெல்லாம் சேர்த்துக்கொண்டு புதவாரம் நாள் புறப்பட்டு சேத்துப்பட்டு வழியாய் செஞ்சிக்கு வருவார். அங்கே நாமும் போய் கூட்டிக்கொண்டு புதுச்சேரிக்கு வருகிறோமென்று எழுதி ராஜா சாயபு ஆற்காட்டுக்குப் போனவிடத்திலே அங்கேயிருந்து எழுதியனுப்பின காகிதம் பார்த்துக்கொண்டு அது தங்களுக்கு அனுப்பிவித்தோம். அது பார்த்துக் கொள்ளச்சே தெரியவருமென்று எழுதியிருந்தது. அப்பால் அந்தக் காகிதத்திலே எழுதி வந்த சேதி: நபாபு இதாயத்து மொகதீன்கான் ஆனை வாங்க வேண்டுமென்று விலை என்னமாய் வாங்கலாமென்று கேட்டதாயும் அதற்கு ராஜா சாயபு விலை சொன்னதாயும் அதன் பேரிலே இதாயத்து மொகதீன்கான் வெகு சந்தோஷப்பட்டு ராஜா சாயபுவை தாரிபு பண்ணதாயும் நாசர் சங்கு அண்டையிலே இருந்து கபுறு வந்ததாகவும் அவ்விடத்து சேதி. ஆற்காட்டு சுபா அன்வர்திகானை வெட்டிப்போட்ட சேதி கேட்டு தலைப்பாகையை வாங்கிக் கீழே போட்டு கையைக் கடித்துக் கொண்டதாகவும் எழுதியிருந்தது. இந்தச் சேதியெல்லாம் எழுதியிருந்தபடி துரையவர்களுக்கு சொன்னதின் பேரிலே பதிலுத்தாரம் தங்கள் வரவுக்கு எதிர்பார்க்கிறோமென்றும் மற்ற சமாசாரமெல்லாம் சமஸ்தானம் பேசிக்கொள்ளச்சே தெரிய வருமென்றும் உபசாரமாய் எழுதியனுப்பச் சொன்னார். அந்தபடி யெழுதி தபாலிலே அனுப்பி வைத்தேன்.

புரட்டாசி 16 1749 செப்தம்பர் 28 ஆதிவாரம்

இற்றைநாள் காலையில் வில்லியனூர் வாசற்படி முதல் கொண்டு துரையவர்கள் வீட்டு மட்டுக்கும் ஏகமாய் சொல்தாதுகளும் இருக்கிற சிப்பாய்களும் வரிசை வைத்து துரையவர்களும் ஏழரை மணிக்குப் போய் வில்லியநல்லூர் வாசற்படியிலே போட்டிருக்கிற கூடாரத்தில் சகல கோன்சேய்கள் பின்னையும் வெள்ளைக்கார பெரிய மனுஷர்களுடனே கூட நவ பொத்து முதலான சங்கீத மேளவாத்தியங்கள் பொழிய அங்கே போயிறங்கி அங்கேயிருந்தென்னையும் சின்னதுரை முசியே கில்லியார் பின்னையும் இரண்டொரு ஒப்பிசியேல்மார்கள் மேளதாள சம்பிரத்துடனே குண்டுதாழை மட்டுக்கும் எதிர்கொண்டுபோய் நவாபு சந்தாசாயபு அவர்களை அழைத்துக்கொண்டு வரச்சொல்லி உத்தாரம் கொடுத்தபடிக்கு நாங்கள் போய் அழைத்துக்கொண்டு வர போனவிடத்திலே அதற்குள் மொரட்டாண்டி சாவடியிலே சந்தாசாயபு வருகிறாரென்று காத்துக்கொண்டிருந்த முசியே தொத்தேல் முசியே புசி முதலான ஆற்காட்டுக்குப் போன பவுன்சு அப்படியே சந்தாசாயபு அவர்களைக் குண்டு தாழைக்கு நேராக வரச்சே அவர்களும் மொரட்டாண்டி சாவடி விட்டுப் புறப்பட்டுக் கூட வந்து கலந்துகொண்டு அவர்கள் சந்தாசாயபு, ராஜா சாயபு, அல்லிநசீ சாயபு, சபீர் நல்லீகான் சாயபு மச்சான் பதரதி உசேன் சாயபு முதலான பேர்கள் நவபொத்து முதலான ஆரவாரத்துடனே அவர்கள் வந்துகொண்டே இருந்தார்கள். நாங்களும் நயினியபிள்ளை அவர்கள் தோட்டத்திற்குச் சமீபத்திலே போய்க்கண்டு சந்தித்துக் கொண்டு அப்பாலவர்களைக் கூட அழைத்துக்கொண்டு ஒன்பது மணி வேளைக்கு வில்லியநல்லூர் வாசற்படி யண்டையிலிருந்த துரையவர்களுக்கு நபாபு சந்தாசாயபு அவர்களுக்கும் பேட்டியாகி ஆலிங்கனம் பண்ணிக்கொண்டு உட்கார்ந்த உடனே இருபத்தொரு பீரங்கி போட்டார்கள். அப்பால் துரையவர்களும் நவாபு அவர்களும் ஒருவருக்கொருவர் குசலப் ரஸனை பண்ணிக்கொண்டு அங்கிருந்து துரையவர்கள் வீட்டுக்குப் போகிறதாய் அவர்கள் வாகனங்களிலே ஏறிக்கொண்டு வாசற்படி கல்குளம் மே வரச்சே இருபத்தொரு பீரங்கிப் போட்டார்கள். இதுக்கெல்லாம் துரையவர்கள் மைத்துனன் அல்பேர் என்பவர் துலுக்கப் பேச்சி பேசுகிறதற்கு துபாசித்தனம் அவர் மாரிபத்திலே நடக்குது. அப்பாலும் அங்கேயும் பேச்சுவார்த்தை நடந்த பிற்பாடு துரையவர்கள் சந்தாசாயபையும் ராஜா சாயபையும் அல்லிநக்கீம் சாயபையும் இவர்களை மதாமிருக்கிற காமராவிலே அழைத்துப் போய் அங்கேயும் பேசிக்கொண்டிருந்தார்கள்.

இப்படி லோகபிரமமாய் துரையவர்களுடனேயும் மதாமுடனேயும் சந்தாசாயபு தான் மராட்டியருடனே புறப்பட்டு சதாராவுக்குப் போனதும் அங்கு மரியலிலே இருந்ததும் தன்னை மராட்டியர் வெகுசாய் அயினான் பண்ணி துரகத்தின் பேரிலே கொண்டுபோய் போட்டது. இப்படியாகத் தான் அவஸ்தைப்பட்டதும் அப்பால் தனக்கு நல்லகாலம் வந்து சுவாமி ரக்ஷித்து தனக்கும் மராட்டியருக்கும் ஒப்பு உடன்படிக்கையாகி அவ்விடத்திலிருந்து சிறிது மராட்டியர் குதிரை சுவருடனே பவுன்சை கூட்டிக்கொண்டு புறப்பட்டு வந்ததும் அப்பால் சித்திரைக்கால பரமனுக்கு அவ்விடத்தில் சகாய சம்மதி பண்ணினதும் அந்தச் சண்டையிலே தன் பெரிய குமாரன் அபிசாயபு விழுந்து போனதும் அப்பால் இதாயத்து மொகதீன்கான் பாதர் முஜபர்சங்கு அவர்கள் பேருக்கு பிரதக்ஷவிலிருந்து அக்கினி இராஜ்யத்துக்கு நாசர்ஜங்குவை அல்லவையென்று அவர் பேருக்கும் பாலி பர்வனா வந்ததும் அப்பால் தன்னை அவர் ஆதரித்து பரவசம் ஆற்காடு சும்மா தனக்கு கொடுக்கிறோமென்று தன்னை அழைத்து வந்ததும் அப்பால் தாங்களென் பேரில் பரிபூரணமா யபிமானித்து என் குமாரன் ராசா சாயபுவையும் சொல்தாதுகள் சிப்பாய்கள் பீரங்கி மொகுத்தீயே துப்பாக்கி மருந்து, குண்டு, தீக்குடுக்கைகள் இது முதலான சண்டை சாமான்கள் கொடுத்து ஆற்காட்டின் பேரிலே அனுப்பி வைத்து எனக்கு சத்ருவான அன்வர்திகானை சங்கரித்து சகல ஜெயங்களும் உண்டாக்கிக் கொடுத்து எங்களுக்குக் கீர்த்தி பிரதிஷ்டைக்கும் உண்டாக்கத்தக்க நீங்கள் தயவுபண்ணிக் கொடுத்து நாங்களாற்காடு சுபா பண்ணத்தக்கதாக சகாயம் பண்ணினீர்களே என்றும் இந்தச் சரீரம் உங்களது என்றும் இது முதலானதுகளாய் துரையவர்களுக்கு நவாப் சந்தாசாயபு அவர்கள் ரொம்பவும் உபசாரங்களாய் சொன்னார்கள். அதற்கு துரையவர்களும் பிரதி உபசாரம் சொன்னார்கள்.

அப்பால் பகலுக்கு மேலாக துரையவர்கள் வீட்டிலே தான் துரையவர்கள் முதலான கோன்செல்காரர், பெரிய மனுஷருக்கு ஒரு பக்கம் பெரிய மேஜைப் போட்டு விருந்து சாப்பிடத்தக்க தீனிகள், தட்டுமுட்டுகளெல்லாம் முஸ்தீப்பு பண்ணினார்கள். அப்பால் சந்தாசாயபு, றசா சாயபு முதலான துலுக்கர் பெரிய மனுஷருக்கு துரையவர்கள் விருந்து செய்விக்கிற படியினாலே துரையவர்கள் முதலான கோன்சேல்காரரும் சந்தாசாயபு முதலான துலுக்கர் பெரிய மனுஷரும் ஏக பந்தியாயிருந்து வெகு சம்பிரமமாய் விருந்து சாப்பிட்டார்கள். அப்பால் விருந்து சாப்பிட்டான உடனே இருபத்தொரு பீரங்கி போட்டார்கள். இது முதலான சம்பிரமங்களெல்லாம் ஆன உடனே நாட்டிய முதலானதுகள் நடந்தது. அப்பால் ராத்திரியும் இந்தப்படியாகத்தானே விருந்து சாப்பிட்டார்கள். இனிமேல் விந்தையான சமாசார முண்டானால் எழுதி வைக்கிறேன்.

புரட்டாசி 17 1749 செப்தம்பர் 29 சோமவாரம்

இற்றைனாள் காலையிலே சேதி வந்ததென்ன வென்றால்: நேற்று இதாயத்து மொகதீன்கான் சகல சமேதமாய் வழுதாவூரிலே ஆற்றோரத்து காலிபுகான் பங்களாவிலே வந்திரங்கினானென்று சேதி வந்தது. பட்டணத்துக்குள்ளே எத்தனைபேர் வந்தாலும் விட்டுவிடச் சொல்லி கெவுனி வாசல்கள் ஒப்பிசியல்மார்களுக்கு துரையவர்கள் உத்தாரம் கொடுத்திருக்கிற படியினாலே தடையில்லாமல் தண்டுக்காரர் குதிரை சுவர்களும் சிப்பாய்களும் ஆனைகளும் ஒட்டகங்களும் காலு பலங்களும் விஸ்தாரமாய் வந்து பட்டணங்களெல்லாம் நாலு பக்கமும் தெருத்தெருவுக்கும் நிறம்பினார்கள். இதல்லாமல் பெரிய மனுஷராய் வந்த சேஷராயன், ராமாயனா, அப்பாச்சி பண்டிதன் முதலான தேசத்து பிராமணாள், உத்தியோகஸ்தர்கள் பெரிய மனுஷர்களும், பின்னையும் துலுக்கர், மராட்டியர், ரசபுத்திரர் இப்படிப்பட்டவர்கள் ஐனூறு குதிரை, ஆயிரம் குதிரை, இரண்டாயிரம் குதிரை, மூவாயிரம் நாலாயிரம் ஐயாயிரம் குதிரைக்கு சமேதாரர்களா யிருக்கப்பட்டவர்கள் பந்தா தமாஷா பார்க்க வந்தவர்களுமாய் பட்டணமெங்கும் வீடு வீடுக்கும் நிறைந்திருக்கிறார்கள். ஆனால் போன வருடம் புரட்டாசி மாதம் இந்த நாளுக்கெல்லாம் இந்தப் பட்டணத்தின் பேரிலே இங்கிலீஷ்காரர் வந்திறங்கி சண்டை பண்ணி பீரங்கி குண்டு மழையாய் பட்டணமெங்கும் வருஷித்து இனிமேல் எது என்று சங்கடப்பட்டதற்கு உடனே ஈஸ்வரன் எதிராளியாய் வந்த இங்கிலீஷ்காரனுக்கு சகல கீர்த்தி பிரதிஷ்டைகளும் கொடுத்து இவ்வருஷம் புரட்டாசி மாதம் எல்லாம் இந்த ராஜ்யத்திற்கெல்லாம் அதிபதியாயிருக்கப்பட்ட நிஜாமானவர் இவ்விடத்திற்கு வந்து போகத்தக்கதாக பண்ணினாரென்றால் அது மஹா ராமான்ய ராஜ் ஆன்றாசன்றால் முசியே துப்ளேக்சு அவர்கள் யோகமே யல்லாமல் மற்றப்படி என்னயிருக்கிறது?

அப்பால் நேற்றைய போலேதானே துரை வீட்டிலே சந்தாசாயபு அவர்களுக்கு பகலைக்கு மேலாக விருந்து மற்றதுகளெல்லாம் ஆயிற்று. சாப்பாட்டு வேளையிலே இருபத்தொரு பீரங்கிப் போட்டார்கள். அப்பால் லோகப்பிராமமாய் சந்தோஷ வார்த்தைகளாய் பேசியிருந்து அப்பால் இதாயத்து மொகதீன்கானவர்கள் நாளைய தினம் பட்டணம் பிரவேசமான படியினாலே அவருக்கு வழுதாவூர் மட்டுக்கும் எதிர்கொண்டு போய் அழைத்து வரத்தக்கதாக சந்தாசாயபு அவர்கள் பயணப்பட்டார்கள். துரையவர்களும் சின்னதுரை முசியே செம்போலையும் சென்னைப்பட்டணம் கப்பித்தான் முசியே பெடுத்தல்மியையும் முசியே அல்பேரையும் என்னையும் பின்னும் இரண்டொரு பெரிய மனுஷரையும் கூடப் பயணப்படுத்தி இஸத் சுபா லுக்கு போகத்தக்கதாக நியமித்து சந்தாசாயபு அவர்களை வழிவிடத்தக்கதாக துரையவர்கள் கூட பயணமாய் சகல தள சமேதமாய் ஆனைகள், குதிரை சுவர்கள் மற்றுமுண்டான நவபோத்து முதலான வாத்தியங்கள் கொழிக்கப் புறப்பட்டார்.

அப்பால் சென்னப்பட்டணம் வாசற்படி வழியாய் புறப்பட்டு வாசற்படிக்கப்பால் போட்டிருக்கிற கூடாரத்திலே போய் சந்தாசாயபுவை துரையவர்கள் பயணம் அனுப்பி வைக்கச்சே சென்னைப்பட்டணத்து வாசற்படி யண்டையிலிருக்கிற கொத்தளங்களிலே யெல்லாம் ஏகநாதமாயிருக்கிற பீரங்கிகளெல்லாம் சுட்டார்கள். அப்பால் துரையவர்கள் வழியனுப்பிவிட்டு கோட்டைக்குப் போனார்கள்.

அப்பால் நாங்கள் சந்தாசாயபு முதலான பேரை கூட்டிக்கொண்டு போய் வழுதாவூர் ஆற்றோரத்திலே இறங்கியிருக்கிற நபாபு ஆசபிசா (ஆசப்ஜா) இதாயத்து மொகிதீன்கான் பகதூர் முசர்ஜங்கு அவர்களை நாங்களெல்லோரும் பேட்டி பண்ணிக்கொண்டு துரையவர்கள் சொல்லச் சொன்னதாய் சிறிது உபசார வார்த்தைகளாய் சொல்லி உங்கள் சாகா இந்த புதுச்சேரி யிருக்கிறது. ஒருதரம் நீங்கள் வந்து கண்குளிரப் பார்த்து அப்பால் சாகிப்போகலா மென்றுச் சொல்லி இது முதலான உபசார வார்த்தைகள் சொன்னதின் பேரில் இதாயத்து மொகதீன்கான் அவர்களும் அப்படியே புதுச்சேரி எங்கள் சாகாயிருக்கிறது அதற்காலோசனை என்ன? நாளைய சூரிய உதயத்துக்கு புறப்படுவோமென்று சொன்னார். இன்றைய ராத்திரி வழுதாவூரிலே தானிருந்தோம்.

புரட்டாசி 18 1749 செப்தம்பர் 30 அங்காரக வாரம்

இற்றைனாள் காலையில் புதுச்சேரிக்குப் போகத்தக்கதாக நபாபு இதாயத்து மொகதீன்கான் முசபர் சங்கு அவர்கள் சகல தள சமேதமாய் சகல பிருதுகளுடனேயும் தம் அண்டையிலிருக்கிற சமேதார்கள் பெரிய மனுஷர்கள் வீசிரான் இப்படிப்பட்ட பேர்களை பந்தா துமாஷர் பார்க்கத்தக்கதாக கூட அழைத்துக்கொண்டு தம்முடைய சம்சாரத்துடனே கூட பயணம் புறப்பட்டார்கள். பட்டணத்திலேயும் காலை எட்டுமணிக்கெல்லாம் இருக்கிற சிப்பாய்கள், சொல்தாதுகள், காப்பிரிகள், சகலமான பேர்களையும் முஸ்தீப்பாய் வரச்சொல்லி சென்னப்பட்டணம் வழி குண்டுதாழை முதலாகக் கொண்டு இருபுறமும் வரிசையாய் துரையவர்கள் வீடு மட்டுக்கும் இருக்கிறார்கள். துரையவர்களும் பன்னிரெண்டு மணிக்கெல்லாம் சாப்பிட்டு விட்டு சகல கோன்செல்லியேர்களுடனே புறப்பட்டு சென்னைப்பட்டணத்து வாசற்படி அண்டையில் போட்டிருக்கிற கூடாரத்தில் வந்து இறங்கி அவ்விடத்தில் தொம்மா வித்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்பால் பன்னிரெண்டரை மணி வேளைக்கெல்லாம் இதாயத்து மொகதீன்கானவர்கள் சென்னைப் பட்டணத்துவழி சோதனைக்கு மேலண்டையிலே சின்ன முதலியார் தோட்டத்திலே நமாஜ் பண்ணிக்கொள்ளத்தக்கதாக இறங்கினார். அப்பால் நான் சின்னதுரை முதலானவர்கள் முன்னதாகப் புறப்பட்டு வந்து துரையவர்களைக்கண்டு நடந்த சமாசாரமெல்லாம் சொன்னோம். அப்பால் சந்தாசாயபு வந்து துரையவர்களைக் கண்டுபேசி மறுபடி இதாயத்து மொகதீன்கான் அண்டைக்குப் போனார். அப்பால் சந்தாசாயபு அவர்கள் நிமாசு பண்ணிக்கொண்டு ஆன உடனே சகல ஆபரணங்களும் பூஷித்துக் கொண்டு அவரும், அவர் குமாரனும் புறப்பட்டார்கள்.

முன்னதாகத் தானே குதிரை சுவர்களும், யானைகளும், பிருவுகளும் சகல துப்பாக்கிக்காரரும் ஆனைகள் பேரிலே குண்டு கோபி சவுர் சங்குகளும் இது முதலான ஆயுதபாணியா யிருக்கப்பட்ட பேர்கள். அனேகம் பேர் கும்பல் கும்பலாய் பாறுகள் பாறுகளாய் பட்டணத்துக்குள்ளே போனார்கள். அப்பால் இதாயத்து மொகதீன்கான் அவர்கள் குண்டு தாழைக்குள்ளே வரச்சே துரையவர்களைக் கூடாரத்திலிருந்து எதிராகப் போய் மீனாக்ஷியம்மன் சாவடிக்கு இப்பால் இருவருக்கும் பேட்டியாய் ஆலிங்கனம் பண்ணிக்கொண்டு குசலப்ரஸனை நடக்கச்சே சென்னைப்பட்டணத்து வாசற்படி முதற்கொண்டு கடலோரத்து மூலை கொத்தளம் வரைக்கும் இருக்கிற பீரங்கிகளெல்லாம் தேப் கும்பலாய் சுட்டார்கள்.

அப்பால் சகலமான பேர்களும் கூடவந்து கூடாரத்திலே யிருந்து நாட்டியம் பார்த்துக்கொண்டு இருக்கச்சே துரையவர்களும் நவாபு சந்தாசாயபு அவர்களும் முன்னதாகப் புறப்பட்டு வந்தார்கள். அப்பால் சகல ஆடம்பரத்துடனே இதாயத்து மொகதீன்கான் பாதரவர்கள் ஆனையின் பேரிலே தொட்டில் மாத்திரம் போடச் சொல்லி தாமும் தம்முடைய குமாரனும் முன்பாரிச முட்கார்ந்து கொண்டு அப்பால் கோட்டையிலே யிருக்கப்பட்ட வேடிக்கைகளெல்லாம் விபரமாய் சொல்லத்தக்கதாக சந்தாசாயபு குமாரன் ராஜா சாயபு கூட பின் பக்கத்திலே இருக்கச் சொல்லி புறப்பட்டு கெவுனி வாசலுக்குள்ளே வரச்சே இருக்கிற பீரங்கி களெல்லாம் திறனாய் போட்டார்கள்.

அப்பால் ராஜ வீதியில் தானே புறப்பட்டு இருபுறமும் சொல்தாதுகள் வரிசை நிர்க்க வைத்து புகையிலை கிடங்கு முத்திய பிள்ளையவர்கள் வீட்டு தெருவே திரும்பி கோன்சேல் வீட்டு வாசற்படி வழியாய் வந்து துரையவர்கள் வீட்டு தென்னண்டை வாசற்படியிலே யானையிலிருந்து இறங்கிய உடனே துரையவர்கள் வாசற்படி மட்டுக்கும் எதிராக போயழைத்து வந்து துரை வீட்டிலே உட்கார்ந்த உடனே சமுத்திரக்கரை கொத்தளங்கள் பிறகரி பேரிலே இருக்கிற பெரிய பீரங்கிகள் அத்தியந்தம் ஒரு நாழிகை நேரம் சந்தமோயாமல் நாலு ஐந்து பீரங்கிகள் பத்தி பத்தியாய் விபரீத கோஷ்டம் எழுப்பத்தக்கதாக சுட்டார்கள். கப்பல்களிலேயும் இருபுறமும் பீரங்கி போட்டார்கள்.

அப்பால் துரையவர்கள் தம்முடைய வீட்டிலே இருக்கிற சித்திர விசித்திரங்களும் நிலைக்கண்ணாடிகளிலிருக்கிற சொகுசும் விந்தையாய் காற்றினாலே செய்த லாந்தர் கூண்டுகள் அங்கங்கே கூடியிருக்கிற அழகும் காகிதங்களெழுதுகிற கோந்துலார் வீடுகளும் இன்னுமனேக வேடிக்கைகளும் துரையவர்கள் இதாயத்து மொகதீன்கான் பாதர் முஜபர்சங்கு அவர்களுக்கும் நபாபு சந்தாசாயபு, ராஜா சாயபு அல்லிநக்கீம் சாயபு முதலான பேர்களுக் கெல்லாம் காண்பித்ததற்கு அவர்கள் மிகவும் சந்தோஷப்பட்டு யோகமென்றாலும் இப்படிப்பட்ட யோகம் ஒருவருக்கும் வராது. நல்ல அதிர்ஷ்டசாலி யென்றும் உம்முடைய மனோரதப்படி சகல காரியங்களும் அனுகூலமாய் வருமென்றும் இப்படி ஒன்றுக்கொன்று க்ஷேம லாபங்களாய் வார்த்தைகள் நடக்கச்சே வருஷம் வந்து இராத்திரி முப்பது நாழிகையும் தாரை தாரையாய் பெயர்த்து அந்த மழையில் இரவு முசாபர் சங்கு அவர்களுக்கு துரையவர்கள் வீட்டில் யப்புரி சிக்கானாவிலே யிருந்து மற்றவைகளெல்லாம் துரையவர்கள் கூட சம்பந்தியாய் விருந்து சாப்பிட்டார்கள்.

புரட்டாசி 22 1749 ஒக்தோபர் 4 சனிவாரம்

இற்றைநாள் காலையில் முகபிரக்ஷணம் பண்ணிக்கொண்டு பழையது சாப்பிட்டு பிறகு துரையவர்கள் வீட்டுக்குப் போன விடத்திலே துரையவர்கள் அழைத்துச் சொன்னது: நேற்று இதாயத்து மொகதீன்கான் வெகுமானம் கொடுத்த ஆனைக்கு நெஞ்சியில் இரணம் இருக்கிறதாம். அந்த இரணம் எப்போதும் ஆருகிறதில்லையாம். அந்த யானையை மறுபடி சந்தாசாயபுடனே சொல்லி இந்த யானையைக் கொண்டு போய் ஒப்பித்துப்போட்டு பதிலுக்கு யானை கொண்டு வரச்சொல்லி சொன்னபடிக்குப் போய் நபாபு சந்தாசாயபு அவர்களைk கேட்டதற்கு அவர் சொன்னது, நல்லது இந்த யானையை ஒப்பித்துப் போடுங்கள். ஆனைகளெல்லாம் வெளியே போயிருக்கிற படியினாலே நாளைய தினம் யானைகளை எல்லாம் அழைப்பித்து நல்ல யானைமாய் பொருக்கி பதிலுக்கு யானை கொடுக்கிறேமொன்று சொல்லச் சொன்னார்.

புரட்டாசி 23 1749 ஒக்தோபர் 5 ஆதிவாரம்

இற்றைநாள் காலையில் முந்தானாள் துரையவர்களுக்கு இதாயத்து மொகதீன்கான் வெகுமானம் பண்ணின யானைக்குப் பதில் யானை நல்ல பெரிய யானையாய் ஐந்தே முக்கால் முழம், ஆறு முழம் உயரமாயிருக்கிற யானையைப் பார்த்து துரையவர்களுக்குக் கொடுத்தார்கள்.

… நல்லதென்று நான் புறப்பட்டு சந்தாசாயபு அவர்களண்டைக்குப் போனவிடத்திலே நடந்த வயணம் என்னவென்றால்: சந்தாசாயபு அவர்களுடனே நான் சொன்னது நீங்கள் மகா யோகசாலியர் அதேதனாலென்றால் உங்களுடத்திலே வெகு உதராத்வமிருக்கிற படியினாலே எந்த காரியம் நீங்கள் நினைத்தாலும் சுவாமி உங்கள் காரியமெல்லாம் அனுகூலம் பண்ணி இருக்கிறதே யல்லாமல் தாஷி வரத்தக்கினதல்ல. … அதற்கு நபா சாயபு அவர்கள் வெகு சந்தோஷப்பட்டு சொன்ன சேதி என்னவென்றால், … நம்முடைய மனதிலே இருக்கிற யோசனைபடிக்கு சரியாய் நீர் சொன்னீர். உம்முடைய யோசனைக்கும், உம்முடைய புத்திக்கும் உமக்கு இவ்விடம் யோக்கியம் என்று நீர் நிஜாம் போல் கொத்தவர். நம்மைப் போல் கொத்தவர். பேரண்டையிலே திவான்கிரியாய் இருந்து கொண்டு சகல சபைகளையும் கட்டத்தக்க மனதுள்ளவர். உம்முடைய மனோரதமும் திராணியும் நம்முடைய மனதுக்கு நன்றாய் தெரியப்பட்டது. நீர் ஒரு லட்சத்துக்கு இருபது லக்ஷம் முப்பது லக்ஷம் சம்பாரிக்கவும் சிலவு பண்ணவும் சாமார்த்தியம் உண்டாயிருக்கப்பட்டவர். இப்படிப்பட்ட உமக்கு இந்தப் பறங்கிகளண்டை இருக்க லாயக்கான ஸ்தலம் அல்ல. ஆனபடியினாலே முன்னுக்கு மகத்தாயிருக்கப்பட்ட தவுலத்துடனே இருக்கப் போகிறீர். உமக்கு ஸ்வாமி தயவு பண்ணுவார். அதற்கு சந்தேகமில்லை. அப்படி நடக்குமென்று என் மனதுக்கு நிற்காற்ஷையாய்த் தோன்றி யிருக்கிறதென்னு சொன்னார்.

அதற்கு நான் சொன்னது: நீங்கள் மகாபுருஷர். உம்முடைய வாக்கினாலே நான் மேன்மேலும் சுகப்படத்தக்கதாக சொன்னதினாலே தான் எனக்கு சகல தவுலத்தும் வந்தது. அதற்கு சந்தேகமில்லை என்று அதற்கு பிரதி உத்திரம் எப்படி உபசாரமாய் சொல்ல வேணுமோ அப்படியெல்லாம் சொன்னேன்.

(தொடரும்)

பகிர:
கோ. செங்குட்டுவன்

கோ. செங்குட்டுவன்

விழுப்புரத்தில் பிறந்து வளர்ந்து வசித்து வருபவர். ஊடகத்துறையில் 20 ஆண்டுகாலம் செய்தியாளராகப் பணியாற்றியவர். கலை, இலக்கியம், பண்பாடு மற்றும் வரலாற்று அமைப்புகளில் பங்கேற்று இயங்கி வருபவர். 'சமணர் கழுவேற்றம்', 'கூவம் - அடையாறு - பக்கிங்காம்: சென்னையின் நீர்வழித்தடங்கள்' உள்ளிட்ட நூல்களை எழுதியிருக்கிறார். தொடர்புக்கு : ko.senguttuvan@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *