பிரெஞ்சுக்காரர் உதவியுடன் ஆற்காட்டை முற்றுகையிட்ட சந்தா சாகிப், அங்கிருந்த நவாப் அன்வருதீனைக் கொன்றதும் பின்னர் ஆற்காடு நவாப் ஆக முடிசூட்டிக் கொண்டதும் நாம் அறிந்ததே. இந்நிலையில் ஆற்காட்டில் இருந்த அன்வருதீனின் மகன் முகமதலி திருச்சிக் கோட்டைக்குச் சென்று தஞ்சமடைந்தார். அந்தக் கோட்டையையும் கைப்பற்றிட பிரெஞ்சு ஆளுநரின் ஆலோசனையின் பேரில் நவாப் சந்தா சாகிப் படைநடத்திச் சென்றார். அவருக்கு உதவியாகப் பிரெஞ்சுப் படையினரும் சென்றனர்.
அந்த நேரத்தில் ஆளுநர் துய்ப்ளேக்சை சந்திக்க வந்த சந்தா சாகிப் மகன் ரசா சாயபு முகம், வெளியே போகும் போது சினம் கொண்டு இருந்ததாம். காரணம், திருச்சிக்கு எடுத்துப் போக ரூபாய் அஞ்சு லட்சம் கேட்டதாகவும் ஆனால் ஆளுநரோ ஐம்பதாயிரம் மட்டுமே கொடுத்திருக்கிறார். இந்நேரத்தில் மதானந்த பண்டிதர் குறித்த ஆனந்தரங்கரின் எள்ளல் குறிப்பிடத்தக்கது. சந்தா சாகிப் தலைமையிலான படையினர் திருச்சி நோக்கி முன்னேறிக்கொண்டிருந்த அதே வேளை, (ராபர்ட் கிளைவ் தலைமையிலான) யிங்கிலீசு படைகள் ஆற்காட்டுக்குள் புகுந்து அந்நகரை எளிதாகக் கைப்பற்றின.
இதற்கிடையில் ஸ்ரீரங்கம் சென்றடைந்த சந்தா சாகிப்புக்கு, ‘இனியும் ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் கொள்ளிடம், காவேரியையும் தாண்டி அக்கரை சேர்ந்து சண்டை போடச் சொல்லி’ பிரெஞ்சு ஆளுநர் கடிதம் எழுதினார். ஆனாலும் சந்தா சாகிப் மீது ஆளுநர் துய்ப்ளேக்சுக்கு ‘எல்லாரிடமும் பகையை வளர்த்துக் கொள்கிறார்’ எனும் வருத்தம் இருந்தது. ஏதாவது ஒரு சீர்மையைக் கொடுத்து ஆட்சி செய்து வா என்று சொல்ல வேண்டும். முடியாது என்று சில்மிஷம் செய்தால் கப்பலேற்றி மெக்காவுக்கு அனுப்பிட வேண்டும் என்பதே ஆளுநரின் எண்ணமாக இருந்தது. ஆனந்தரங்கரும் தனக்கு வஞ்சனை செய்த சந்தா சாகிப் அதற்கான பலனை அனுபவிப்பார் என்கிறார்.
ஸ்ரீரங்கம் கோயிலில் முகாமிட்டிருந்த சந்தா சாகிப் மற்றும் பிரெஞ்சுப் படைகள் போதிய நிதி இல்லாமல் நெருக்கடிக்கு ஆளானது. படைவீரர்கள் மக்களிடம் கொள்ளையடித்தனர். இன்னும் பலர் எதிரிப் படையில் போய்ச் சேர்ந்து கொண்டனர். போதாக்குறைக்கு காவேரி, கொள்ளிடத்தில் வெள்ளம் கரைபுரண்டது. இதனால் கோயிலில் இருக்கும் தானியங்களைச் சாப்பிட்டு அவர்கள் தங்கள் நாட்களை ஓட்டினர். இந்த நிலையில் இங்கிலீசு படை, மராத்தியப் படை, தொண்டைமான் தரப்பினர் மற்றும் முகமதலிகான் தலைமையிலான படையினரின் தீவிர முற்றுகைக்கு உள்ளானது ஸ்ரீரங்கம் கோயில்.
வேறுவழியில்லை எனும் நிலையில், மராத்தியர், தொண்டைமான் தரப்பினருக்குப் பணம் கொடுத்த சந்தா சாகிப், பக்கிரி வேடமிட்டு அங்கிருந்து வெளியேறினார். ஆனால் அவரை அடையாளம் கண்டுவிட்ட முகமதலிகான் படையினர் அவரைப் பிடித்து திருச்சிக் கோட்டைக்குக் கொண்டு செல்ல முற்பட்டனர். அப்போது அங்கு வந்துவிட்ட தஞ்சைப் படையினர், ‘ஏற்கெனவே இவருக்கு வாக்குக் கொடுத்திருக்கிறோம்’ என்று சொல்லி, சந்தா சாகிபை தஞ்சாவூர் கோட்டைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் சொன்னபடிக்கு அவர் காரைக்கால் அனுப்பப்படவில்லை. தஞ்சைக் கோட்டையில் காவலில் வைக்கப்பட்டார்.
ஒருநாள் காலை தொழுகையில் ஈடுபட்டிருந்த சந்தா சாகிப், தலையை வெட்டிக் கொடூரமாகக் கொல்லப்பட்டார். அப்போது அவர் பின்னால் நின்றுகொண்டிருந்த குண்டோ பண்டிதன் என்பவர் ‘என்னை வெட்டிப் போடுங்கள்’ என்று தடுக்க முயன்றிருக்கிறார். ஆனால் அவரைத் தள்ளிவிட்டு இந்தக் காரியத்தைச் செய்திருக்கின்றனர். சந்தா சாகிப் தலை, உடல் தனித்தனியே குதிரையில் ஏற்றப்பட்டு அனைவருக்கும் இந்தத் தகவல் அறிவிக்கப்பட்டது. பின்னர் திருச்சி கோட்டைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.
இந்தத் தகவல் அறிந்த புதுச்சேரி ஆளுநர் துய்ப்ளேக்ஸ் பெரும் சோகத்தில் ஆழ்ந்தார். அன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை, கோயில் பூசைக்குப் போகவில்லை. பகலுணவும் கொள்ளவில்லை. ஆனால் ஆனந்தரங்கரோ, ‘சந்தாசாயபுக்கு இது கெண்ட காலம் தப்பிதமில்லை. எப்படி யென்றால் வைப்பூர் சீதாராம் சோசியன் சோசியப்படிக்கு சனிப்பாச்சல் வருஷம் ஆனபடியினாலே இந்தக் கெண்டம் தப்பாது. சனிப்பாய்ச்சல் பனிரெண்டு வருஷத்துக்கு ஒரு திரம் பாயுரதான படியினாலே இந்தக் கெண்டம் தப்பாது’ என வைப்பூர் சீதாராம் சோசியரின் சோதிடத்தை மேற்கோள் காட்டுகிறார்.
சந்தாசாகிப் எந்தப் பாதிப்பும் இல்லாமல் காரைக்கால் கொண்டு செல்லப்படுவார் என்பதை பிரெஞ்சுப் படைத்தளபதி முன்னிலையில் தாவூத்கான் எனும் இஸ்லாமியர் ஒருவரைக் கொண்டு குரான் மீது சத்தியம் செய்யப்பட்டது. சந்தா சாகிப் காரைக்கால் சென்று சேர்ந்தார் எனும் தகவல் வரும் வரை உங்கள் தரப்புப் பெரியவர் ஒருவரை எங்களுக்கு அடகு கொடுக்க வேண்டும் என்று பிரெஞ்சு தளபதி கேட்டபோது தஞ்சாவூரார் மறுத்து இருக்கின்றனர். ஒப்பந்தத்தை மீறி சந்தா சாகிப் காவலில் வைக்கப்பட்டது, படுகொலை செய்யப்பட்டது போன்ற துரோகச் செயல்களை தனது எழுத்துக்களின் வாயிலாகக் கடுமையாகச் சாடியிருக்கிறார் ஆனந்தரங்கர்!
1751 செப்தேம்பர் 1 ஆவனி 19 புதவாரம்
… பகலைக்கு மேலாக மூணரை மணிக்கு சந்தாசாயபு மகன் ரசாசாயபு சந்தாசாயபு லசுக்கருக்குப் போறதுக்கு துரை கையிலே சிலவு வாங்கிக் கொள்ளுகிற நிமித்தம்போய் சிலவு வாங்கிக் கொண்டு போய் ஒழுகரையிலே போயிறங்கினார்கள். போகச்சே முகத்தைச் சின்னம் பண்ணிக்கொண்டு போனான். அந்த சாடை யென்னவென்று கேட்டால் சிலவுக்கு அஞ்சு லட்சம் கேட்டு தீர்மானம் ரெண்டு லட்சம் கேட்டதுக்கு அன்பதினாயிரம் கொடுக்கிறோமென்று துரை சொன்னதின் பேரிலேயும் பின்னையும் நாலத்து ரெண்டு காரியம் யிவன் கேட்டதுக்கு அவர் சம்மதிக்காமலும் முகம் கடுத்துப் பேசாமலும் போன படியினாலே யிவர் முகத்தை தொங்கப் போட்டுக்கொண்டு போனார். ஆனாலும் அன்பதினாயிரம் ரூபா குடுக்கிறதே யல்லாமல் அதனங் குடுக்கிறதில்லை யென்று சொன்னது மாத்திரமே யல்லாமல் முன்னேதானே என்னுடனே லக்ஷம் ரூபா புக்கன்சி காசிதாசு குமாஸ்தாவைக் கொண்டு சரியாய் நாளைய தினம் மீர்ஷம் வசம் குடுத்து அனுப்புவாரென்று தோத்துது. ஆனாலிப்போ யிந்த சாயபு சாதா வந்ததும் மதாம் துய்ப்ளேக்சு மாரிபத்திலே சகல சால்சவாபு நடக்கிறதும் மதானந்த பண்டிதன் இரண்டு கையினாலேயும் வாங்கிப் போடுகிறது மல்லாமல் அவனுச்சாகமும் மகனூறும் காகிதத்திலே யெழுதி முடியாது. ஆனாலிவனுக்கு யிது யினி மாசக்கணக்காக நிக்கறதே யல்லாமல் தனமிவனுக்கு வருஷக்கணக்காக நடக்கத்தக்கதில்லை. யிவன் தாய் கிழவியாய்ப் போனபடியினாலே கலியாணம் பண்ணினானே யல்லாமல் யில்லாவிட்டால் கலியாணம் பண்ணத்தக்கவனல்ல. இதிலே அவன் சுவாபமிது ரோகம் விவேகிகள் அறிந்து கொள்வார்கள்.
1751 செப்தேம்பர் 14 புறட்டாசி முதல் செவ்வாய்க்கிழமை
இத்தனாள் காலத்தாலே பத்து மணிக்கு துரையவர்களண்டைக்குப் போனவிடத்திலே சாவடிக் கபுறும் கும்பினீர் வற்த்தகர் கிட்டங்கி முதலான பட்டணத்து கபுறு சொல்லியான பிற்பாடு சந்தாசாயபு காகிதம் வந்ததே அதிலென்ன யெழுதியிருக்கு தென்றும் மதானந்த பண்டிதனைக் கொண்டு வரச்சொல்லி கேட்டார். அதுக்குத் தாங்களனுப்பின அன்பதினாயிரம் ரூபா வந்து சேர்ந்தது என்றும் கொள்ளிடம் கடந்து சீரங்கம் போயி சேருகிறதா யிருக்கிறோமென்றும் யெழுதியிருக்கு தென்று சொன்னான்.
1751 செப்தேம்பர் 15 புரட்டாசி புதன்வாரம்
இத்தனாள் சாயங்காலம் ஆற்காட்டிலே வந்த சேதி யென்னவென்றால் நாளது முதல் உதிச்ச அஞ்சு நாழிகைக்கு அன்பது பேர் யிங்கிலீசு சொல்தாதுகளு மொரு ஒபிசியாலும் போய் ஆற்காட்டுத் தெவடியிலே சண்டா போட்டு கில்லாவும் கட்டிக்கொண்டதாகவும் அப்பால் பத்து நாழிகைக்கு யிரநூறு பேர் யிங்கிலீசு சொலுதாதுகளும் நூறு பேர் சட்டைக்காறர்களும் யிருநூறு பேர் சிப்பாயிகளும் போய்ச் சேர்ந்ததாகவும் இரண்டு பெரிய பீரங்கியும் இரண்டு சின்னப் பீரங்கியும் மருந்து யெட்டு பெட்டி சறாபம் ரெண்டு பெட்டி தறுபேஷம் மகம்மது மச்சான் சேசக்கும்மது யென்கிறவனும் போய்ச் சேர்ந்தார்களென்றும் மத்தப்படி யிதுக்கு முதல் நாள்த் தானே அவ்விடத்திலே யிருந்து போனார் மமுதல்லிகான். கோவிந்தராயன் திருமலைராயன் முதலானவர்கள் யிருந்தவர்கள் பிறப்பட்டு ஓடிப்போய் வேலூர் போய்ச்சேர்ந்தார்களென்று மிப்படியாக யெழுதி வந்தது.
1751 செப்தேம்பர் 17 புரட்டாசி 4 சுக்கிறவாரம்
இத்தனாள் சாயங்காலம் அஞ்சாறு காகிதம் சந்தாசாயபு காகிதம் ஒன்று பிறகேயொன்றாய் நாலுமணி துவக்கி ஆறு மணிக்குள்ளே வந்ததாகவும் அந்த காகித மத்தலப்புகள் நாங்கள் கொள்ளிடமிறங்கி ஸ்ரீரங்கம் போனோம். உங்கள் பவுன்சு முசியே தொத்தேல் வகையிறா பரிசேதம் வாரதில்லை. நாம் புதுச்சேரிக்கு போறோமென்று சொல்லுகிறது மல்லாமல் பவுன்சு கொள்ளிடத்துக்கு இக்கரையிலிருக்கிறதே யல்லாமல் அக்கரைக்கு அனுப்புகிறதில்லை யென்று சொல்லுகிறார்கள் யென்று முசியே தொத்தேல் யிவ்விடத்துக்கு வந்தால் முசியே லாசுவுக்கு கொம்மாந்தாம் யிடம் குடுத்து அனுப்ப வேணுமென்று அப்துல் நபிபேக்கு யென்கிற சமேதாரன் பிறகே ஆயிரம் குதிரை கூட்டியனுப்பி விச்சோமென்று மமுதல்லிகான் ஆணை சத்திய பிற மாணிக்கமாய் யெப்படி சொல்லியனுப்பிக்க வேணுமோ யத்தனை நம்பிக்கையாய்ச் சொல்லியனுப்பி முன் அனுப்பின கவில் படிக்கு நடப்பிக்கிறோமென்று நம்பிக்கையுஞ் சொல்லி கவிலும் அனுப்பிவிச்சால் யிருபது நாளையிலே எங்கள் சாஞ்சாமிகளை தாண்டவிச்சுப் போட்டு கில்லா வையுங்கள். வசத்திலே ஒப்பிச்சுப் போடுகிறோமென்று ஸ்தானபதிகளை யனுப்பிவைச்சு காகிதமெழுதி யனுப்பினான்.
முன்னீங்கள் அனுப்பின கவில் முசியே தொத்தேல் வசத்திலே யிருந்து கொண்டிருக்குது. அதைக் குடுக்கச் சொல்லி அவருக்குக் காகிதமெழுதி யிந்த உடன்படிக்கைப்படிக்கு பேசச்சொல்லி யெனக்கும் எழுதி அனுப்பிவிச்சால் நானுமந்தக் கவிலை வாங்கிக் கொண்டு உடன்படிக்கையும் கவிலையும் கொடுத்தனுப்புகிறோனென்று சந்தாசாயபு யெழுதின காகிதங்களுக்கு பதிலுத்தரவு துரையவர்கள் யெழுதினது:
மமுதல்லிகான் பேச்சை நம்ப வேண்டாம். அவன் யிருபது நாள் வாயிதா கேட்டது யிதுக்குள்ளே ஆற்காட்டிலே கலாபஞ் சுருக்கமாய் நடக்கிறதுக்கு பெலன் பண்ணிக்கொள்ளலாமென்றும் திருச்சிராப்பள்ளிக்கு ரஸ்து முதலான சாமான்களும் அல்லாமல் பெலனுஞ் சேர்த்துக்கொள்ளலாமென்று யிருபது நாள் வாயிதா கேட்டானே அல்லாமல் மனப்பூர்வமாய் கோட்டையைவிட்டுப் போறதாய் கேட்டவனல்ல. ஆனபடியினாலே காவேரியுந் தாண்டி திருச்சிராப்பள்ளி கோட்டையின் பேரிலே போயிறங்கிப் போடச்சொல்லியும் சண்டை குடுக்கச் சொல்லி யெழுதினானென்றும் ஆயிரங் குதிரையும் மீர்சா மமுதல்லி பேக்கும் வராப்போலே தானாச்சுதே யின்னம் ஆயிரங் குதிரையும் உம்முட குமாரன் ரசாசாயபையும் சீக்கிறமத்துக்கு வந்து ஆற்காடு சேர அனுப்பச் சொல்லியும் முசியே லாசுக்கு கொம்மாந்தாங் குடுத்து அனுப்பினது மல்லாமல் உங்கள் பவுன்சுக்கு முன்னே அவர்களைக் காவேரி கூட தாண்டி திரிச்சிராப்பள்ளி கோட்டையை வாங்கச் சொல்லியும் உம்முட ஆலோசனையின் பேரிலே நடந்துகொள்ளச் சொல்லி யெழுதினோம்.
இனிமேல் அரை நாழிகையாகிலும் தாமசம் பண்ணத் தேவையில்லை. கொள்ளிடந்தாண்டி காவேரியுந் தாண்டி அக்கரை சேர்ந்து சண்டை பண்ணச் சொல்லியும் யிந்தப்படிக்கு சந்தாசாயபுக்கு காகிதமெழுதினது மல்லாமல் ரசா சாயபுக்கும் பவுன்சைக் கூட்டிக்கொண்டு ஆற்காட்டின் பேரிலே வந்துயிறங்கச் சொல்லிக் காகிதமெழுதி முசியே லாசுக்கு அறமாதுக்கு கொம்மாந்தாரிடச் சொல்லி யெழுதினதுமல்லாமல் சந்தா சாயபு ஆலோசனையுங் கேட்டுக்கொண்டு அவர்கள் பவுன்சுடனே கூடப்போய் திரிச்சிராப்பள்ளி கோட்டையின் பேரிலே போய் சண்டை குடுக்கச் சொல்லி அப்பால் முசியே தொத்தேலையும் முசியே புறுனோவையும் வந்துவிடச் சொல்லி காகிதங்களெழுதி யனுப்பினதாய் சேதி கேழ்க்கப்பட்டது.
1751 ஒக்தோபர் 11 பிறட்டாசி 28 சோமவாரம்
திரிச்சிராப்பள்ளி கோட்டையைச் சுத்தினாப்போலே செருக்குவார பாளையத் திலே சந்தாசாயபு பவுன்சு யிறங்கியிருக்கிறதாகவும் ஆலம்கானும் சிறிது பாளையக்காறர்களும் சந்தாசாயபு மத்தத்து வருகுறார்கள் யென்றும் ஆலம்கான் சந்தாசாயபுக்கு சிலவுக்கு அறுபதினாயிரம் ரூபா யனுப்பிவிச்சா னென்றும் மயிசூர் ராசாவுக்கும் சந்தாசாயபுக்கும் மனது ஒருமை யில்லாம லிருக்கிறதாகவும் யிப்படியாக யெழுதி வந்த சேதி.
1751 நொவாம்பர் 27 கார்த்திகை 15 சனிவாரம்
யித்தனாள் கேட்ட சேதி. திரிச்சிராப்பள்ளியிலே யிருந்து துரையவர்களுக்கு சந்தாசாயபு காகிதமும் வந்துதாம். அதிலே யெழுதியிருந்த சேதி: மேஸ்தர் கோப்பு மோறசா திருச்சிராப்பள்ளிக் கோட்டை வாசலுக்கு வெளியே போட்டிருந்த மொறசாவிலே அசனத்திகான் ரவுன்சும் அசனத்திகானும் போய் சண்டை பண்ணி அந்த மொறசாவிலே யிருந்த ஒரு யிங்கிலீசு ஒபிசியாலு ஒருத்தனையும் பத்துப் பதினஞ்சு வெள்ளைக்காரர்களையும் பிடிச்சுக் கொண்டு அதிலே யிருந்த துப்பாக்கி முதலானதுகளை யெல்லாங் கொள்ளையிட்டு யெடுத்துக்கொண்டு பிறப்பட்டு வந்த சேதி யெழுதி வந்ததாகவும் கோட்டையும் கொஞ்ச நாளையிலே பத்தே ஆம். மேஸ்தர் கோப்புக்கும் மேஸ்தர் சின்சேன் யென்கிறவனுக்கும் ஆகாமலிருக்குதாம். மேஸ்தர் சின்சேன் மமுதல்லிகானுக்கு அனுகூலமாயிருக்கிறான். ஆனபடியினாலே கோட்டை நமக்கு கைவசமாகு மென்றாப்போலே யெழுதி சிலவு சித்தாயத்துக்கு வேணும். போன மாசம் அனுப்பின லக்ஷம் ரூபா போதாது. இந்த வேளை பணத்தைப் பாராமல் சிலவழிச்சு காரியமனுகூலம் பண்ணிக்கொள்ள வேண்டிய சமயமான படியினாலே இந்த வேளைக்கு இரண்டு லெட்சம் ரூபாய் மாத்திரம் அனுப்பிவிக்கச் சொல்லிக் காகிதமெழுதி வந்ததாகவும் அந்தக் காகிதம் பார்த்துக்கொண்டு காகிதம் கொண்டு வந்தவர்களுக்கு யிருபது ரூபா யினாம் கொடுக்கச் சொல்லி சந்தோஷமாய்ப் பதில் காகிதமெழுதி யனுப்பிவிச்சதாய் சேதி கேழ்க்கப்பட்டுது.
1751 தெசம்பர் 13 மார்கழி 2 சோமவாரம்
… இனிமேல் சந்தாசாயபு வசம் சீர்மையிருந்தால் கெட்டுப்போம். அவனுக்கொரு காரியமும் கூலிச்சுவரயில்லை. சமஸ்தான பேர்களுடனேயும் திவேஷிச்சுக் கொண்டு யிருக்கிறது. ஒருத்தருக்கும் பேசினபடிக்கு நடக்கிறதில்லை. முன்னே ஒருத்தருடனே பேசித்தீர்த்து அவனை அனுப்பிவிச்சு சீமையிலே போய் உக்காருகிறதுக்கு முன்னே பின்னை ஒருத்தன் வந்து கேட்டால் அப்போதும் அவனுக்கு யெழுதி கொடுத்து அனுப்பிவிடுகிறது. யிப்படி மயிசூர் ராசா முதலான பேர்களுடனே யெல்லாம் திவேஷம் பண்ணிக்கொண்ட படியினாலே திரிச்சிராப்பள்ளியைச் சாதிக்க கட்டாமல் மமுதல்லிகானுக்கு மத்தத்து பண்ணுகிறார்கள். யிவ்விடத்திலே பாளையக்காறர்களுடனேயும் அப்படித்தான். பாளையக்காறர்களுடனே எல்லாரும் யிங்கிலீசுக்காறருடனே கட்டிக்கொண்டு ராச்சிய மெல்லாம் சாகுபடியாக வொட்டுகிறதில்லை. கலகம் வளர்ந்து கொண்டே யிருக்குது. ஆனபடியினாலே சந்தாசாயபை தனகா பண்ணி கொஞ்சமாய் ஒரு சாகீர் கொடுத்து சாப்பிட்டுக்கொண்டு கூப்பிடாமல் யிரேவென்கிறது. சத்தே சிலுமிஷங் கண்டால் பிடிச்சுக் கப்பலின் மேலேத்தி மக்கத்திலே போய் செபம் பண்ணிக்கொண்டு ஆத்தும லாபமான காரியத்தைப் பார்த்துக்கொண்டு யிருக்கச் சொல்லி சொல்லுகிறதென்று சொன்னார். அப்படியா வென்று சொல்லிப்போட்டு பின்னையும் லோகாபிறமமாய் பேசியிருந்து அனுப்பி விச்சுக் கொண்டு காசா கச்சேரியே வந்தேன்.
ஆனால் சந்தாசாயபு எனக்கு வஞ்சனை பண்ணி நடப்பிச்சதுக்கு சுவாமியவனை வஞ்சனைப்பானெண்பிச்சு அப்பால் அந்த ஞாயம் பனிரெண்டு மாசத்தைக்குள்ளாக தீத்துப் போட்டார். யின்னம் லோகத்திலே பிறசித்தமாகயில்லை. பிறசித்தமாகுற காலம் வருகுது. அதுவும் சமீபத்திலே யிருக்குது வெளியாய்ப் போகுது. மத்தப்பேர்களுக்கு மிந்தக் கெதி யிப்படியே அவரவருக்கு காணப்போகுது. காணாமல் போகத்தக்கதில்லை. சுவாமிக்கு பஷ்ஷப பிறதி பஷ்ஷம் யில்லை. ஞாயம் போனபடி நடப்பிப்பார்.
1752 மாயு 14 வையாசி 5 ஆதிவாரம்
… யென்கிற கபுறு கேழ்க்கப்பட்டது மல்லாமல் ஸ்ரீரங்கத்திலே யிருக்கிற முசே லாசு சந்தாசாயபு வகையிராவும் யிவர்களுடைய பவுன்சுக்கும் சிலவுக்கு மில்லாமல் ரஸ்துமில்லாமல் வெகு சங்கடப்படுகிறார்கள் யென்று மிங்கேயிருந்து போன பணம் அவ்விடம் போய் சேருகிறதற்கு யில்லாமல் யிருக்காறதினாலேயும் அவ்விடத்திலே கொள்ளையிட்டு கொள்ளையிட்டு தின்றதினாலேயும் இருக்கிற சிப்பாயிகளுக்கு மூணுமாசமாகி சிப்பாயிகளுக்கு சுவார்களுக்கும் ஒரு காசு அளவிலே செல்லாத்தினாலே நிறுவாகமில்லாமல் வெகுபேர்கள் சிப்பாயிகளும் சுவார்களும் சத்துருக்களிட மாய் போய் சேர்ந்து போனதினாலேயும் சத்துருக்கள் பெலம் அதிகமுஞ் சந்தாசாயபு பவுன்சுக்கு பெலகீனம் கண்டதுக்கு ஸ்ரீரங்கம் கோயிலிலே யிருக்கிற படியினாலேயும் இருபுறமும் காவேரி கொள்ளிடம் தண்ணீர் வருகிற படியினாலேயும் கோயிலிலே யிருக்கிற தானியங்களை சாப்பிட்டுக்கொண்டு யிருக்கிறார்கள் என்றும் கோயிலடியிலே சேக்சே பட்டாணாயிருந்துதே அதைத் துரத்திவிட்டு இங்கிலீசுக்காறர்கள் பட்டாணா வந்து பிறவேசிச்சாப் போலேயும் அங்கேயிருந்தவர்கள் முன்னூறு நானூறு பேர்களுக்குண்டு. அதிலே சிறிது பேர்கள் அவர்களிடமாய்ச் சேர்ந்துப் போனாப்போலேயும் சிறிது பேர்கள் கவில் வாங்கிக்கொண்டு ஆயுதமாத்திரத் துடனே பிறப்பட்டு புதுச்சேரிக்கு வாராதாயும் சேதி கேழ்க்கப்பட்டுது.
1752 மாயு 30 வைகாசி 21 மங்களவாரம்
இத்தனாள் கேள்விப்பட்ட சேதி யென்னவென்றால் ஸ்ரீரங்கத்திலிருந்த சந்தாசாயபு முசியே லாசு வகையிராக்கள் அண்டையிலே யிருந்தவர்களிலே குதிரை சுவார்களிலே முன்னூறு சுவார்கள் தவிர மத்தப்பேரெல்லாரும் ஆறு ஆறு மாசம் சம்பளம் வராமல் சிலவுகளுக்குமில்லாமல் முத்திக்கையிலே அகப்பட்டுக் கொண்டு சங்கடப்பட்டு போயிவிட்டதாகவும் துப்பாக்கிக்காறர் நாலாயிரம் அய்யாயிரம் பேர்கள் எவ்வளவு யிருக்கிறார்களோ அவர்களும் முன்னூறு குதிரை சுவார்கள் வற்த்தகாள் வகையிரா பிறப்பட்டுப் போயி விட்டதாகவும் யிவர்களும் செம்புகேசுவரம் கோயிலை சுத்த சூனியம் பண்ணாப்போலே ஸ்ரீரங்கம் கோயிலையும் நடத்துகிறதா யிருந்தாப் போலேயும் கோயிலார் அறுபதினாயிரம் ரூபா கொடுத்து இருக்கிற தானியங்களையும் கொடுத்து இன்னேரத்தைக்கு நிபாயிச்சுக் கொண்டாப் போலேயும் யினிமேல் யென்ன நடத்துவார்களோ வென்றாப் போலேயும் இருக்கிற நெல் அரிசி ஒரு மாசத்திற்கு காணுமென்றாப் போலேயும் உப்பு முதலான சாமான்கள் பரிசேதமாயி அகப்படாதென்றாப் போலேயும் காவேரியும் கொள்ளிடமும் பிறவாகம் விஸ்தாரமாகத்தானே வருகிறதென்றாப் போலேயும் இங்கிலீசுக்காறர் மறாட்டியர் மயிசூரார் பவுன்சு வகையிரா சமயவரம் கோயிலடி முதலான எடங்களிலே பந்து பஸ்தாயிருந்து கொண்டு ஒருத்தரையும் போகவொட்டாமலும் அவர் ஒட்டாமலும் ரஸ்த்துக்கள் போக வொட்டாமலும் வளைத்துக் கொண்டு யிருக்கிறார்கள் யென்று முசியே தொத்தேல் முன் ஊட்டத்தூர் விட்டு ரஞ்சன்கெடை வந்து சேர்ந்தாப் போலேயும் அங்கேதானே யிருக்கிறான் யென்றாப் போலேயும் சேதி சொல்லிக் கொண்டார்கள்.
1752 சூன் 15 ஆனி 5 குருவாரம்
… தேவனாம்பட்டணத்தில் பீரங்கி போட்ட சேதி. சந்தாசாயபு பக்கிரி வேஷமாயி பிடிச்சுக் கொண்டதாயும் அந்த சேதி வந்து பீரங்கி போட்டார்கள் யென்றும் சர்க்கரை வழங்கினார்கள் யென்றும் பத்துமணி வேளைக்கு கேழ்க்கப்பட்டுது. இத்தனாள் மத்தியானம் பனிரெண்டு மணி வேளைக்கு பெரியண்ணா நயினாரை துரையவர்கள் அழைச்சுட்டு அனுப்பிவிச்சு சிறிது பேர்கள் வெளிப்பட்டு போகாமலும் அவர்கள் வீட்டு குஞ்சு குழந்தைகள் தட்டுமுட்டுகள் வெளியே போகாமலும் போனால் நீ உத்திரவாதம் பண்ணுவாயென்று சொல்லி யெழுதிக் கொடுத்த சாப்பிதா பேர் வயணம்: சந்தாசாயபு குமாரன் றசா சாயபு அவர்கள் தாலுக்கு மனுஷர்கள் தட்டுமுட்டு பணங்காசு வகையரா யென்ன யென்ன உண்டோ அதுகள் ஒன்றும் வெளியே போகாமல் பத்திரமாய்ப் பார்க்கச் சொல்லி சொன்னதாய் யெழுதிக் கொடுத்தது. …
1752 சூன் 16 ஆனி 6 சுக்குறவாரம்
இத்தனாள் துரையவர்களுக்கு சேவுகர் வந்து சொன்ன சேதியென்று கேழ்விப்பட்டது. சந்தாசாயபு சேக்கசேன் முசே லாசு வகையிரா சறுதார்களும் பவுன்சுகளும் ஸ்ரீரங்கம் கோயிலிலே யிருந்த போது மமுதல்லிகான் மயிசூரார் இங்கிலீசுக்காறர் முராரிராயன் பவுன்சு வகையிரா கத்திக்கொண்டு ரஸ்த்துக்கள் போகவொட்டாமல் முத்திகைப் போட்டுகொண்டு யிருக்கச்சே நிறுவாகமில்லை யென்று தீர்த்துக்கொண்டு தஞ்சாவூர் மானோசியப்பாவுக்கும் முராரிராயனுக்கும் சிறிது பணங்காசுகளொப்பி தான் பக்கிரி வேஷம் போட்டுக்கொண்டு பிறப்பட்டதாகவும் முராரிராயன் சவுக்கிலேயாகிலும் மானாசி அப்பாவினுடைய சவுக்கிலேயாவது போக அவர்கள் அப்பால் தஞ்சாவூர் சேர்ந்து அங்கேயிருந்து காரைக்கால் சேத்துப்போட சிறிது உடன்படிக்கை பண்ணிக்கொண்டு பிறப்பட்டதாகவும் அந்தப்படி முராரிராயன் சவுக்கிலே சந்தாசாயபு பக்கிரி வேஷத்துடனே போனதாகவும் அங்கே மமுதல்லிகான் மனுஷர்கள் கூடயிருந்ததாகவும் அவர்களும் கூடக்கண்டு சந்தாசாயபுவைக் கண்டு பிடிச்சுக் கொண்டு அப்பால் மமுதல்லிகான் மனுஷர்கள் திரிச்சிராப்பள்ளி கோட்டையே கொண்டு போறோமென்று சொன்னதாகவும் முராரிராயன் மனுஷர்களும் தஞ்சாவூரார் மனுஷர்களும் கூடவிருந்து நாங்கள் சந்தாசாயுபுக்கு கவில் கொடுத்தோமென்று பேசி அவர்கள் மனுஷர்களைத் தள்ளிவிட்டு சீக்கிறமத்துக்கு சந்தாசாயுபுவை தஞ்சாவூர் கோட்டையேக் கொண்டுபோய்ச் சேர்த்தார்கள். அந்தச் சேதிக்கு முன் அய்யாயிரம் விராகன் அறுக்காறுகள் கையில் கொடுத்து அனுப்பினார்கள். அந்த விராகனைக் கொண்டுபோய் சந்தாசாயபுக்குக் கொடுத்து அவர்கள் தஞ்சாவூர் கோட்டை சேர்ந்ததுக்கும் பணம் சேர்ந்ததுக்கும் சந்தாசாயபு கையிலே காயிதம் வாங்கி வந்து துரையவர்களுக்கு பத்துமணிக்கு கொடுத்ததாய் மமுதல்லிகான் கையிலகப்பட்டுக் கொண்டு திரிச்சிராப்பள்ளி கோட்டையில் கொண்டுபோயி போட்டுக் கொள்ளாமல் தப்பி தஞ்சாவூர் வந்து சேர்ந்தானென்றும் தஞ்சாவூராரும் முராரிராயனும் தங்களுக்கு அனுகூலமாயிருக்கிறார்கள் யென்கிற சந்தோஷம் உண்டாச்சுது. வந்தவர்களுக்கு நூறு ரூபாய் வெகுமானம் கொடுத்தார்கள் யென்று சேதி சொல்லக் கேழ்க்கப்பட்டது.
முசியே லாசும் சேக்கசேனும் பாக்கி பவுன்சும் ஸ்ரீரங்கம் கோயிலிலே தானிருக்கிறார்கள். அவர்களினி எந்த சாடை பண்ணுவார்களோ தெரியாது. சந்தாசாயபுவை தஞ்சாவூரை அனுப்பினதில் தளவாய் மண்டபத்தில் தஞ்சாவூரார் பவுன்சு யிறங்கி யிருக்கிறதே அங்கேதானே வைத்து யிருக்கிறார்களென்றும் மானோசி அப்பா தன் கூடாரத்திலே வைத்துக் கொண்டிருந்ததுக்கு சேதி வந்ததாய் சொன்னார்கள்.
1752 சூன் 17 ஆனி 7 சனிவாரம்
… கேழ்விப்பட்ட சேதி முசியே தொத்தேல் வாலிகொண்டாபுரத்திலே பிடிபட்டவனை திரிச்சிராப்பள்ளி கோட்டையிலே கொண்டு போன விடத்திலே இங்கிலீசுக்காறர்கள் இருந்த படியினாலே வெள்ளைக்காறர்கள் சட்டப்படிக்கு பிரிசோனியர் தெ கேர் யென்கிற உடன்படிக்கைப் படிக்கு சண்டைக்கு வர்றதில்லை கத்தியெடுக்கிறதில்லை. துப்பாக்கியெடுத்து சண்டை பண்ணுகிறதில்லை யென்றும் சண்டைக்கு ஆவலாயிருக்கிற வாடிக்கைப்படிக்கு யெழுதிக்கொடுத்து போட்டு தானும் தன்னுடனே கூடயிருந்த குவாடுது வெள்ளைக்காறர்கள் ஒபிசியார்மார்கள் பத்துபேர்கள் கூட மமுதல்லிகான் கையில் அங்கேயிருக்கிற மேஸ்தர் லரேன்சு கையிலும் அனுப்புவிச்சுக் கொண்டு வந்து திருவீதி சேர்ந்தான். பனிரெண்டு மணி வேளைக்கு வருவான் யென்றுஞ் சொன்னார்கள்.
றங்கோ பண்டிதனுக்கும் யிந்த உடன்படிக்கைப்படிக்கு யெழுதி குடுக்கிறோமென்று விடச்சொல்லி கேட்டால் விடுகிறதில்லையென்று சொன்னதாய்ச் சொல்லிக் கொண்டார்கள்.
இத்தனாள் சாயங்காலம் அஞ்சரை மணிக்கு முசே தொத்தேலும் முசே பொப்பரே யென்கிறவனும் அஞ்சாறு குவாடுது வெள்ளைக்காறர்களுமாக வந்து துரையவர்களண்டையில் போய் வெகுநேர மட்டுக்கும் எட்டுமணி ராத்திரி மட்டுக்கும் பேசியிருந்து அப்பால் சாப்பிட்டு வீட்டுக்கு ஒன்பதரை மணிக்குப் போனார்கள். முசியே தொத்தேல் வந்து பேசின பிற்பாடு துரையவர்கள் விசாரமாயிருந்தார் என்கிற சேதி கேழ்க்கப்பட்டது.
1752 சூன் 18 ஆனி 8 ஆதிவாரம்
இத்தனாள் நான் கேழ்விப்பட்ட சேதி. மானாசி அப்பாவினுடைய லசுக்கரிலே போயகப்பட்டிருந்த சந்தாசாயபை முன் இரண்டாம் தேதி திங்கட்கிழமை காலமே நிமாசு பண்டச்சே தலையை வெட்டி ஒட்டகத்தின் பேரிலே போட்டு உடலையுங் கூட சேர்த்து சகலமான பேருக்கு மறிவிச்சு திரிச்சிராப்பள்ளிக் கோட்டையே மமுதல்லிகான் அண்டைக்கு அனுப்பிவிச்சு போட்டதாய் அப்போ சந்தாசாயபு தலையை வெட்டச்சே குண்டோ பண்டிதனும் குருவாபொ யென்கிறவனும் பின்னை ஒரு கிசுமத்துக்காறனும் கூட இருந்தாப் போலேயும் குண்டோ பண்டிதன் யென்னை வெட்டிப்போடுங்கோளென்று சந்தாசாயபு பின்பக்கத்திலே யிருந்தவனை யிழுத்துவிட்டு சந்தாசாயபை வெட்டிப் போட்டதாகவும் அப்போ கூடயிருந்த குருவாபோ யென்கிறவன் றாகவ பண்டிதனுடனே சொன்னாப் போலேயும் றசாசாயபுடனே சொல்ல வேண்டாமென்றும் மறைத்து வைத்திருக்கிறதாய் அதைத்தொட்டு வூரிலே ஒருத்தருமறியார்கள் யென்றும் வந்து ஒருத்தன் சொன்னான். இது பனிரெண்டு மணி வேளை கபுறு. முசியே தொத்தேல் சந்தாசாயபை வெட்டிப்போட்ட கபுறு துரையுடனே சொல்லச்சே அதன் பேரிலே தான் துரை மெத்த விசாரமாயிருந்து இந்த நாள் கோயிலுக்கு கூட போகாமலிருந்ததும் பகல் சாப்பாடு மேலே மனதில்லாமல் யிருந்ததாகவும் பாப்பய்ய பிள்ளை வீட்டிலே சொல்லிக் கொண்டார்கள் என்று மூணு மணிக்கு ஒருவன் வந்து சொன்னான்.
சந்தாசாயபுக்கு இது கெண்ட காலம் தப்பிதமில்லை. எப்படி யென்றால் வைப்பூர் சீதாராம் சோசியன் சோசியப்படிக்கு சனிப்பாச்சல் வருஷம் ஆனபடியினாலே இந்தக் கெண்டம் தப்பாது. சனிப்பாய்ச்சல் பனிரெண்டு வருஷத்துக்கு ஒரு திரம் பாயுரதான படியினாலே இந்தக் கெண்டம் தப்பாது.
1752 சூன் 20 ஆனி 10 அங்காரகவாரம்
இத்தனாள் யேழுமணி ராத்திரி வேளையில் துரையவர்கள் அழைச்சனுப்புவிச்சு முசியே லாசைக் காவல் பண்ணின சேதி அறிவாயா வென்று கேட்டார். அறிவேனென்று சொன்னேன். நீ புத்திசாலி யாச்சுதே. முசியே லாசு சந்தாசாயபுவை தஞ்சாவூரார் கையில் ஒப்பிச்சவன் ஒரு மாதப்பா பெரிய மனுஷரை அடகு வாங்கிக் கொண்டல்லோ ஒப்பிக்க வேணும். அப்பாலும் அவன் சத்தியம் பண்ணிக் குடுத்து நாளாறு விசை அவன் வரவும் இவன் போகவும் பேச்சுவார்த்தை நடக்கிறபோது முசியே லாசு மானோசிஅப்பாவைக் கேட்டானே நீர் சத்தியம் பண்ணிக் குடுத்தீர் தாவுத்துகான் யென்கிறவன் ஒருத்தன் பட்டாணியன் பெரிய மனுஷனை அனுப்பிவிச்சுக் கொறான் முன்னிலையாய் சத்தியம் பண்ணிவிச்சுக் கொண்டபோது நீர் பேச்சு நடப்பிச்சீரே நான் சந்தாசாயபுவை உங்கள் கையிலே ஒப்புவிச்சு நீங்கள் காரைக்காலிலே கொண்டு போய் சேர்த்து சேதி வருகிற மட்டுக்கும் ஒரு பெரிய மனுஷரை கீரி வைக்க வேணுமென்று கேட்டத்துக்கு மானாசி அப்பா சம்மதிக்க மாட்டமென்று சொன்ன மட்டுக்கும் வஞ்சனை நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இல்லாவிட்டால் அவன் நம்முடனே கறாறு பண்ணின படிக்கு நடப்பிக்கிற மனது உண்டானால் கீரி வைக்கிறதுக்கு கூடாதென்று சொல்லுவானென்று நீ யோசனை பண்ணிக்கொண்டு சந்தாசாயபுவை அனுப்பக் கூடாது. நீங்கள் கீரி வைத்தாலே யல்லாமல் யென்று நிறுத்திப் போட்டுவிடாமல் சந்தாசாயபுவை அனுப்பி வைச்சது முசியே லாசு மேலே நேரமாமோ வென்று கேட்டார். நீங்கள் சொன்னபடி நடந்திருந்தால் அவன் பேரில் நேரம்தானென்று சொன்னேன்.
பின்னையும் சிறிது குத்தங்கள் அவன் பண்ணினதை யெல்லாஞ் சொல்லி இவன் பெரிய குத்தம் பண்ணினானென்று சொல்லி அப்பாலிப்படி சத்தியம் பண்ணிவிட்டு வீட்டே யழைச்சுக்கொண்டு போயி வைத்துக் கொண்டு தலையை வெட்டினவர்களுண்டோ வென்று கேட்டார். இப்படிப்பட்ட அசத்தியவாதிகளைப் போலே ரூபமாயுள்ளவர்களுண்டு. ஆனால் அவர்கள் மூணு மாசத்துக்குள் அழைக்கப் பேரில்லாமல் நிறமூலமாய்ப் போனார்களே யல்லாமல் ஒருத்தராகிலும் வராத்திச்சுக் கண்டவர்களில்லை என்று சொன்னதுக்கு உங்கள் மத்தியஸ்தர் செய்த வேலையைப் பார்த்தீரா வென்று கேட்டார். எந்த மத்தியஸ்த்தனானால் என்ன. வெள்ளைக்காறர் துலுக்கர் தமிழர் பின்னையும் எந்த சாதியிலேயுள்ள மனுஷர்களானாலும் சத்தியவாதியு முண்டு அசத்தியவாதியுமுண்டு. அதுவே திஷ்டாந்திரமிப்படிப்பட்ட அக்கிறுத்தியம் பண்ணினவர்களை நெடுநாளைக்கு யிருந்ததில்லை. மூணு மாசம் மூணு வருஷத்துக்குள்ளாக நிற்மூலமாயிப் போவார்கள் யென்று சொன்னேன். மெயிதானென்று ஒத்துக்கொண்டார்.
1752 ஆகொஸ்து 13 ஆவணி 1
… பின்னையென்ன சேதியென்று கேட்டார். மத்தபேர் மமுதல்லிகாண் அண்டையில் இருக்கிற பேர்களுக்கு சோத்துக்கில்லாமல் பட்டினி கிடந்து செத்து அப்பால் நிறுவாகமில்லாமல் பிறப்பட்டுப் போய்விடுகிறார்கள். சந்தாசாயபுக்கு சத்தியம் பண்ணிக்கொடுத்து அழைத்து நாலுநாள் வைத்திருந்து தலையை வெட்டிப் போட்ட தோஷம் யிவன் அனுப்பிக்கத் தேவையில்லையா. அந்தக் கட்டம் போயியிவன் தலையும் போயிவிடும். யிதுக்குச் சந்தேகமில்லை. முன்னேயுங்களுடனே சொன்னேன் யிப்பாலுஞ் சொல்லுகிறேன். மாசக்கணக்கிலே அவன் தலை போகுது பாருங்கோள் யென்று யெப்படி உறுதியாய்ச் சொல்ல வேணுமோ அப்படிச் சொன்னேன். பின்னையும் யெவர்கள் எத்தனைப் பெரிய ராசாவானாலும் துரோகமாய்ச் செனங்களை யாகிலும் ஒருத்தனை வஞ்சித்தாலும் தலை வெட்டினாலும் கெடுத்துப் போட்டாலும் சுவாமியவனுக்கு உடனே ஆக்கினை கொடுத்து செனங்களுக்கு திஷ்ட்டாந்திரம் பண்ணி விடுகிறவனல்லவா. ஆனபடியினாலே மமுதல்லிகான் தலை போறது கெட்டியென்று சொல்லி பின்னையும் லோகாமீரமாய்ப் பேசியிருந்து யிப்பால் யென் கச்சேரியே வந்தேன்.
(தொடரும்)