Skip to content
Home » ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #40 – மெக்கா கோட்டையைப் பிடித்த பிரெஞ்சுக் கப்பற்படை

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #40 – மெக்கா கோட்டையைப் பிடித்த பிரெஞ்சுக் கப்பற்படை

ஆனந்தரங்கப்பிள்ளை

ஆனந்தரங்கரின் நாட்குறிப்பில் ஏராளமான கப்பல்கள் மிதந்து வந்து செல்கின்றன. லெ மோர், சங்கர பாரி, புலிப்போர், தூக்தெ புர்போம், ஷொவேலன், ஷாப்பா, பீனிக்ஸ்… இப்படியாக இந்தக் கப்பல்களின் பட்டியல் நீளுகிறது. கப்பல்களின் பெயர்களை மட்டும் அல்ல; அதன் காப்டன் (கப்பித்தான்) பெயர்களையும் மறக்காமல் குறிப்பிடுகிறார் ஆனந்தரங்கர். ஒரு முறை கப்பல் வந்தபோது அவர் ஊரில் இல்லை. அதனால் அந்தக் கப்பல் பெயர் அவருக்குத் தெரியவில்லை. ஆனால் ‘அந்தக் கப்பல் கப்பித்தான் பேர் முசே லபிலான்ஷி என்றும் அவன் முசே லெகு சட்டமாய் குட்டையனாக யிருப்பான்’ என்றெல்லாம் எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது. சில நேரங்களில் கப்பல் கப்பித்தான்கள் தமிழர்களாய் இருந்திருப்பதையும் ஆனந்தரங்கரின் நாட்குறிப்பின் மூலமாக அறிய முடிகிறது.

துணிக் கட்டுகளை ஏற்றி அனுப்புவதற்காக பரங்கிப்பேட்டை துறைமுகத்திற்கு ஆனந்தரங்கர் அடிக்கடி சென்று வந்திருக்கிறார். அப்போதெல்லாம் ‘ஆனந்தரங்கப்பன் பரங்கிப்பேட்டைக்குப் பயணம் போனான்’ என்றே பதிவு செய்யப்பட்டுள்ளதும் இங்குக் குறிப்பிடத்தக்கன. பரங்கிப்பேட்டையிலிருந்து அச்சை யாத்திரைக்குக் கப்பல் போனதாக ஆனந்தரங்கர் குறிப்பிடுகிறார். அச்சை யாத்திரை – ஹஜ் பயணம் என்பதாக இருக்கலாமோ?

கப்பல்கள், மயிலாபுரம் (மயிலாப்பூர்), காரைக்கால், மாயி (மாஹே), பினாங்கு, மக்கா (மெக்கா), மசுக்கரை (மஸ்கட்?), மணிலா, பங்காளம் (வங்காளம்), பரீசு (பாரீஸ்) ஆகிய இடங்களில் இருந்து புதுச்சேரிக்கு வந்து சென்றன. பாரீசில் இருந்து புறப்பட்ட கப்பல்கள் புதுச்சேரியை வந்தடைவதற்கு ஏழெட்டு மாதங்கள் ஆகி இருக்கின்றன. நேரடி போக்குவரத்து இல்லாத சில நேரங்களில் இங்கிருந்து வங்காளம் சென்று பின்னர் அங்கிருந்து பாரீஸ் சென்றிருக்கின்றனர்.

இக்கப்பல்கள் துணிகள், வெள்ளிக் கட்டிகள், மிளகு, ஏலக்காய், காப்பி கொட்டைகள், செம்மரம் உள்ளிட்டவற்றைச் சுமந்து சென்றன. சில நேரங்களில் பெரிய மனிதர்களும் இவற்றில் பயணப்பட்டணர். காரைக்கால் முற்றுகைக்குப் போகும்போது கொலுத்துக்காரர், வாள்காரர் போன்றவர் களுடன் செங்கல் சுண்ணாம்பு கோடாலி கொடுவாள் மண்வெட்டி போன்றவையும் கப்பலின் பேரிலே ஏற்றப்பட்டன.

சரக்குகள் மற்றும் மனிதர்களை மட்டுமல்ல பல நேரங்களில் முக்கியத்துவம் வாய்ந்த தகவல்கள் அடங்கிய கடிதங்களையும், அரசு முத்திரைகளையும் இக்கப்பல்கள் தாங்கி வந்தன. கடிதங்கள் மூலமாக மட்டுமல்லாது கப்பல் கப்பித்தான்கள் மூலமாகவும் பல்வேறு தகவல்களை அறிந்தார் ஆனந்தரங்கர். இப்படித்தான் மெக்காவுக்குச் சென்ற பிரெஞ்சு போர்க் கப்பல், அங்கிருக்கும் கோட்டையைப் பிடித்தது. பிரெஞ்சு கொடியை அந்தக் கோட்டையின் மீது ஏற்றிய வீரர்கள், அந்தக் கோட்டையில் பறந்த அரபுக்காரர்கள் கொடியை புதுச்சேரி எடுத்து வந்தனர். இதுபற்றி எல்லாம் அழகாக விவரிக்கிறது ஆனந்தரங்கரின் நாட்குறிப்பு.

1737 நள தை 6

ஆனந்தரங்கப்பன், மக்காவுக்குப் போகிற இமாம் சாயபும் முசே தும்மாவும் குவர்னர் துரையும் கூட்டாய் அனுப்புகிற லெ மோர் என்கிற கப்பலுக்கு அரம் சாமுக்கும் சில்லரைக்காரருக்கும் கூடின சரக்கைக் கட்டுப்போட்டுவிச்சு கப்பலுக்கு ஏத்துவிச்சு கப்பல் பயணம் பண்ணி அனுப்பத்தக்கதாக பரங்கிப்பேட்டைக்குப் பயணம் போனான்.

1737 ஜனவரி 30 தை 21

மக்காவுக்குப் போகிற லெமொரா கப்பல் சரக்கெல்லாம் ஏத்திக்கொண்டு முசே கபிரியேல் தும்மாவும் முசே லப்பிரிங்கிரியும் நாளது புதவாரம் நாள் சாயங்காலம் அஞ்சு மணிக்குப் பரங்கிப்பேட்டையிலிருந்து சலங்கின் பேரிலேறி கப்பல் மேல் போய் ஏறினார்கள். கப்பல் மறுநாள் வியாழக்கிழமை பத்து மணி நேரமட்டும் காற்று இல்லாமல் ஒசந்து நடந்து அதுக்கு மேல் மறைஞ்சு போச்சுது.

1737 மார்ச்சு 20 பங்குனி 11

மணிலாவுக்குப் போகிற சங்கரபாரிக்கு என்கிற கப்பல் மணிலாவுக்கு ஏத்த வேண்டிய கட்டுகள் ஏத்திக்கொண்டு சென்னப்பட்டினத்தில் வேண்டியிருக்கிற மெல்லிசு வம்பாத்து சிட்டைகளைக் கட்டுப் போட்டுக்கொண்டு இருக்கிறதை ஏத்திக்கொள்ளத் தக்கதாக பயணம் முஸீதீப்பாய் முசே துபுவாய்ரு செல்லியார், முசே திரிவாய், முசே மகேதெல்லா வீல்லபாகு, தமிழ் கப்பித்தேன் லூயிஸ் பிரகாசம் கேள்வியாய் அப்போ கனகராய முதலி மைத்துனன் செகன்னிவாச முதலி இவர்கள் இந்நாள் மயிலாபுர துறைக்குப் போகிற சங்கரபாரிக்கு என்கிற கப்பலின் பேரில் பயணமாய் ஏறினார்கள். கப்பலும் பாயெடுத்து மயிலாபுரத் துறைவைத்து பிடித்து அவ்விடத்துக் கட்டை ஏற்றிக்கொண்டு அவ்விடத்திலிருந்து பங்குனி 18 பாயெடுத்து ஓடிப்போனான். .. .

வைகாசி 4ந் தேதி 1737 மே 13ந் தேதி

திங்கட்கிழமை காலமே சென்னப்பட்டணத்திற்கு வந்த சீமை கப்பலிலே யிருந்து முன் இவ்விடத்திலிருந்து குவர்னர் துரை எத்தனம் பண்ணி சீமைக்குப் போன முசே லெனுவார் அவர்களுடைய கடுதாசி வந்ததும் அந்த ஆள் பரியிலே போய் சேர்ந்ததும் அவ்விடத்திலே தமக்கு திரெக்த்தர்த்தனம் வந்த சேதி எழுதின காகிதம் கடுதாசிகள் சின்னதுரை முசியே தெலோர்முக்கு ஒரு கடுதாசியும் எழுதி வந்தது. அந்தக் கடுதாசியிலே எழுதியிருந்த வயணம்…

1737 சூன் மாதம் 15 ஆனி 5ந் தேதி

சீமையிலிருந்து புலிப்போர் என்கிற கப்பல் இரண்டு மணிக்கு பகலுக்கு மேலாக வந்தது. கப்பல் கப்பித்தான் முசே லாசர் என்கிறவன் இந்தக் கப்பல் பங்காளத்துக்குப் போகிற கப்பல் ஆனபடியினாலே இந்தக் கப்பலிலே வந்த தொண்ணூத்து நாலு பெட்டி வெள்ளியையும் இறக்கி ரூபாய் போடச் சொல்லி தங்கசாலையிலே விலைகள் இது தொகை முப்பதினாயிரம் மார்க்கு. இது ரூபாய் போட்டு ஆனவுடனே இந்தக் கப்பல் பங்காளத்துக்குப் போகும்.

1737 ஜுன் மாதம் 17-ந் தேதிக்கு ஆனி 7-தேதி

திங்கட்கிழமை சாயங்காலம் இரண்டு மணிக்கு தூக்தெபுர்போம் என்கிற கப்பல் வந்தது. இந்தக் கப்பல் கப்பித்தான் மறக்கிசாக்கு என்கிறவன் வந்தான்.

1737 ஆனி முதல் தேதிக்கு சூலை மாசம் 13-ந் தேதி வெள்ளிக்கிழமை

இராத்திரி பங்காளத்துக்கு ஷொவலேன் என்கிற கப்பல் பாயெடுத்தான். கப்பல் கப்பித்தான் பேர் முசியே ஷேவரி. இந்த கப்பலிலே ஏறின ரூபாய் லட்சம் அஞ்சு 5.

1737 சூலை 19 ஆடி 8

மெக்காவின் பேரிலே சண்டைக்குப் போன ழாப்பா என்கிற கப்பல் பிடித்த நாள் வெள்ளிக்கிழமை மத்தியானம் பனிரெண்டு மணிக்கு வந்து சேர்ந்து துறை பிடித்தது. முசே மாக்கு சரக்கி, கப்பலுக்கு ஏழு பீரங்கி போட்டு அப்பால் கோட்டைக்குப் பீரங்கி போட்டான். மொக்கா கோட்டையிலே போட்டிருந்த அராபிக்காரருடைய கொடியை இவர்கள் பறிச்சுக் கொண்டு வந்தார்கள். அந்தக் கொடியை கப்பலுடைய விலிய பாய்மரத்திலே போட்டுக்கொண்டு வந்தான். அந்தக் கொடி வர்ணம் முழு சிவப்பு நடுவே அஞ்சு விரலெழுதி யிருந்தது. அந்தக் கொடியைக் கப்பல் கப்பித்தான் முசே லகாடுது இறங்கி வரச்சே அந்தக் கொள்கையை இறக்கிக்கொண்டு வந்து சீர் குவர்னர் முசே தும்மாவுக்கு காண்பிச்சு கோட்டையிலே கொண்டு போய் வைத்தார்கள்.

இந்தூரிலே இருந்துபோன சொல்தாதுகள் லீப்ததினாந்துமார், கப்பித்தான்மார் அனைவரும் அப்படைக்குப் போனவர்கள். அனைவரும் வந்தார்கள். இந்த நாள் சாயங்காலம் ஆறு மணிக்குக் கோட்டை பீரங்கியெல்லாம் ஒருதரம் தீர்ந்து அப்பால் கொத்தளத்துப் பீரங்கிகளும் தீர்த்தார்கள். மொக்காவுக்கு இவர்கள் போனவுடனே நடந்த சேதியை முன் எழுதாத படியினாலே இப்பால் எழுதினேன்.

முன் சொல்லப்பட்ட பேருடைத்தான கப்பல் அந்த துறையிலே நங்கூரம் போட்டுயிருந்தார்கள். துறைக்காரன் ஒரு சலங்கும் கடமொமும் அனுப்பினான். அந்த சலங்கையும் கடமொத்தையும் விடாமல் கப்பலிலே கட்டிக்கொண்டு நாலஞ்சு நாள் கடலோரமா யிருந்தபடியினாலே துறைக்கு வராமலிருந்து கடல் சீர்ப்பட்டப் பிறகு சிறிது பேர் சண்டை முஸ்தீத்தா இறங்கினார்கள். இவர்கள் இறங்குகிறதுக்கு முன்னமே கோட்டைக்காரர் அறிந்தார்கள் இவர்கள் சண்டைக்கு வந்தார்கள் என்கிற சேதியை. இப்படியிருக்கிற தருவாயிலே அவ்விடத்திலே யிருக்கிற டொலாவும் மற்றுமுள்ள பேர்களும் அவர்கள் கோயிலாகிய பள்ளிக்குப் போயிருந்தார்கள். அவ்வேளையிலே கப்பலின் பேரிலேயிருந்து ஒரு பீரங்கியிலே தீபக துடுக்கையைப் போட்டு சுட்டார்கள்.தீபக துடுக்கை வந்து அவர்களிருக்கிற பள்ளியிலே போய் விழுந்தது. அதிலேயிருந்து விரிசிலே பொறிகிறாப்போலே கொஞ்சமாய்ப் பொறிந்தது. அதை அவர்கள் பார்த்து இதென்ன வாச்சரியம் யென்று சிறு பேரெல்லாம் வந்து பார்த்துக் கொண்டிருக்கிற வேளையிலே அந்தத் தீபக துடுக்கை வெடித்தது. அதிலே இருபத்தஞ்சு பேர் சேதப்பட்டுப் போனார்கள். இப்படி சேதமானவுடனே அந்த டோர்லர் நாட்டிலே போய் விட்டான். அவன் நாட்டிலே போய்விட்டானென்கிற சேதி கேட்ட மாத்திரத்திலே இவர்கள் கோட்டையின் பேரிலே போயிறங்கி ஒருமணி நேரம் இவர்களும் அவர்களும் சண்டை பண்ணினார்கள். அந்தச் சண்டையிலே இவர்களிலே அஞ்சு பேரும் அவர்களிலே நாற்பத்தஞ்சு பேரும் சேதமானார்கள். இப்படிச் சேதமான உடனே கோட்டை இவர்கள் பாரிச மாச்சுது. ஆனவுடனே அவர்கள் கொடியை வாங்கிக் கொண்டு இவர்கள் கொடியைப் போட்டான். ஒரு கப்புறால், அந்தக் கப்புறாலுக்கு ஒப்பிசியே உத்தியோகம் கொடுத்தார்கள். இப்படி சிறிது நாள் கோட்டையிலே இவர்கள் அனுபவித்துக்கொண்டு இருக்கச்சே அந்தவூருக் கெஜமானாகிய நவாப்பு இவர்கள் அண்டைக்கு தானாதிபதிகளை அனுப்பி இவர்களுக்குக் கொடுக்க வேண்டிய பணத்துக்கு…

1737 ஆண்டு புரட்டாசி மாசம் 21ந் தேதிக்கு ஒக்தோபர் மாசம் 4ந் தேதி வெள்ளிக்கிழமை

காலமே ஒன்பது மணிக்கு பொழுது விடிந்த சாமத்துக்கு சீமையாகிய பிராஞ்சுக்குப் போகிற பிலோரி என்கிற கப்பலின் பேரில் கப்பித்தான் முசே தொடுதொலேன். இந்தக் கப்பலிலே சின்ன துரைத்தனம் பண்ணின முசே தெலோரீழவும் முசே லெனுவார் துமெலியாரும் இவ்விடத்திலே சக்கிரத்தோராயிருந்த முசே பெபுரியேரும் அவர் பெண்சாதியும் முசே பொர்ஷேயும் சலங்கின் பேரிலேறி பெரிய கப்பலின் பேரிலே போய்ச் சேர்ந்தார்கள். முசே துலேர்ழ சின்ன துரைத்தனம் பண்ணிப் போகிற படியினாலே சலங்கின் பேரிலே ஏறச்சே கோட்டையிலே பதினஞ்சு பீரங்கி போட்டான். கப்பலின் பேரில் போன உடனே கப்பலின் பேரிலே ஒன்பது பீரங்கி போட்டான். இந்த நாள் கப்பல் பிராஞ்சுக்குப் பாயெடுத்து ஓடிப் போனான்.

சித்திரை 11 1738 ஏப்ரல் 20 ஞாயிற்றுக்கிழமை

இங்கிலீஷ்காரருக்கு பேரஞ் சேசுமரி என்கிற சீமை கப்பல் வந்தது. அந்தக் கப்பலிலே பிராஞ்சாவிலிருந்து தன்னுடைய சினேகிதன் ஆயிரத்தி எழுநூத்தி முப்பத்தேழாம் வருஷம் ஒக்தோபர் 13 எழுதின கடுதாசி வந்தது என்று சொன்னார் முசே சிஞோர்.

1738 அவ்ரீல் 25 சித்திரை 16

புதுச்சேரியிலிருந்து மணிலாவுக்குப் பயணமாய் நொச்சி செஞோர் தெசவூதி என்கிற கப்பல் பயணமாயிற்று. நாள் வெள்ளிக்கிழமைஇராத்திரி மூணாஞ் சாமத்துக்குப் பாயெடுத்து ஓடிப்போனான். இந்தக் கப்பலுக்கு கப்பல் கப்பித்தான் முசே சொல்மினி ஆக்க சோபர்கார்கு முசே யெர்பெர்த். தமிழ் கப்பித்தான் கனகராய முதலி சகலப்பாடி அழகப்பன். இந்தக் கப்பலிலே அரமனைக்காரர் கெஷ்விகள் கட்டு முன்னூறுலிருந்து நானூறுக் குள்ளே இருக்கும். மத்ததும் அரம்சாமுதும் வெள்ளைக்காரருதும் இவ்விடத் தமிழருதும் கொஞ்ச நஞ்சமுண்டு.

1738 மே 6 சித்திரை 27 செவ்வாய்க்கிழமை

… மத்தியானம் பனிரெண்டு மணிக்கு முன் 1737 நொவம்பர் 11க்கு அற்பிசி 30 பிராஞ்சாவிலிருந்து மத்தியானம் பனிரெண்டு மணிக்கு புறப்பட்ட தெகோன்த்தே லூஸ் என்கிற கப்பல் இந்த நாள் பனிரெண்டு மணிக்கு வந்து பிடித்து பதினஞ்சு பீரங்கி போட்டது. கப்பல் கப்பித்தான் புத்தே தெல ஓரியன்ட் என்கிறவன் இறங்கச்சே ஏழு பீரங்கியும் போட்டு இறங்கி வந்த அரைமணிக்கு குவர்னர் துரையண்டைக்கு வந்து கண்டு சந்தித்து கும்பினியாருடைய கடுதாசியும் துரை கையிலே கொடுத்தான். இதிலே பின்னே ஒரு அதிசயமும் கேள்விப்பட்டதில்லை. ஆனால் அந்தக் கப்பல்காரனீ சொன்ன சேதி: முசே லெனுவார் சீமையிலே பரீசு என்கிற பட்டணத்திலே ஆரோக்கியத்துடனே கும்பனி திரெக்தர் மாரெல்லாம் இவர் பேச்சுப்படி நடக்கிறதே யல்லாமல் மறுபேச்சு யில்லாமல் இவர் பேச்சு மெத்த மேன்பாடாய் நடக்கிறது என்று சொன்னார்கள்.

1738 மே 7 ந்தேதி புதன் கிழமை

இந்த நாள் காலமே எட்டுமணிக்கு பினாக்கு தெனாசரிக்குப் போயிருந்த செஞ்சோசபு என்கிற கப்பல் வந்தது. கப்பித்தான் முசே புருயல் யென்கிறவன் இறங்கி வந்தான். கப்பலிலே அரிசியும் மெரிகை மரமும் வந்ததென்று சொல்லுகிறார்கள்.

1738 வையாசி மே 11 ஞாயிற்றுக்கிழமை நாள்

மாயையிலே இருந்து சென் பெனுவா என்கிற கப்பல் மிளகு ஏலக்காய் முதலாகிய சரக்குகள் சீனத்துக்கு கொண்டு போகத்தக்கதாக ஏத்திக் கொண்டு வந்தது. இந்தக் கப்பல் சீனத்துக்குப் பயணம் போகிற கப்பல் ஆனபடியினாலே இந்தச் சரக்கெல்லாம் கப்பலிலே தலை நிறுத்தி நூரு பாரம் மிளகு மாத்திரம் கரையிலே இறக்கினார்கள். இந்தக் கப்பல் கப்பித்தான் முசே திரடுதேன்.

1738 ஜுலை 9 ஆனி 29 புதன்கிழமை

இந்தநாள் சாயங்காலம் ஆறு மணிக்கு சீமையிலிருந்து துசெஷ் என்கிற கப்பல் வந்தது. இந்தக் கப்பல் கப்பித்தான் பேர் முசே மோனிக்கு. இந்தக் கப்பல் சீமையைவிட்டுப் புறப்பட்டது, தெசம்பர் மாதத்திலே. இந்தக் கப்பல் மசுக்கரை பிடிச்சு அங்கேயே ஒருமாதம் இருந்து வந்தது. மசுக்கரையின் சேதி என்னவென்று இந்தச் சீமைக் கப்பல் கப்பித்தானைக் கேட்க இவன் சொன்னது, தான் கப்பலிலே முசே லபோர்தனேவுக்கு சென் லூயிஸ் என்கிற முத்திரை நான் கொண்டு வந்து முசே லபோர்தெனேவுக்கு கொடுத்தேன். நான் மசுக்கரை… அப்பொழுது முசே லபோர்தெனேயின் பெண்சாதி மார்பு அடைப்பு வியாதியில் இறந்துவிட்டபடியாலும் மேற்படியாள் எட்டு மாத கற்பமாயிருந்ததாகவும் பின்னை இரண்டரை வருஷமுள்ள ஆண்பிள்ளை இரண்டு மூன்று நாளில் செத்துப்போச்சு. ஆனதினால் லபோர்தெனே ரொம்ப விசாரமாயிருக்கிறான் என்றான்.

1738 சூலை 28 ஆடி 16 திங்கட்கிழமை

காரைக்காலுக்கு அனுப்பத்தக்கதாக சென்சரான் என்கிற சீமை கப்பலை பயணம் பண்ணி கப்பல் கப்பித்தான் முசே ஓபென் என்கிறவனும் சோலாத்துக்கு கப்பித்தான் முசே லத்தூரும் பெரிய மய்யோர் முசே ரூசெல்லும் லூத்தினாந்து முசே கொக்கலேனும் நூறு சொலுதாதும் காரைக்காலுக்கு கணக்கெழுகிறதுக்கு முசே திலார்சே என்கிற கணக்கனும் பயணம் பண்ணி இந்தக் கப்பலின் பேரிலே ஏத்தி இதல்லாமல் கொல்லுத்துக்காரர் வாள்காரர் இவர்கள் அறுபது எழுபது சனங்கள் மாத்திரம் கூட கப்பலின் பேரில் ஏத்தி இதல்லாமல் செங்கல் சுண்ணாம்பு கோடாலி கொடுவாள் மண்வெட்டி முதலாகியதும் ஏத்தி கப்பலை காரைக்காலுக்குப் பயணமாக பண்ணி இந்தநாள் சாயங்காலம் கணக்காய் பாயெடுத்து ஓடினான். காற்று இல்லாதபடியினாலே ஒசந்துனேயி வச்சுப்பிடிச்ச நங்கூரம் போட்டுக்கொண்டு கிடக்கிறான்.

1738 ஆகஸ்ட்டு 10 ஆடி 20 ஞாயிற்றுக்கிழமைக்கு.

இந்தநாள் மத்தியானத்துக்கு மேல் மூணு மணி வேளைக்கு மேல், 1737 டிசெம்பர் சீமையிலிருந்து புறப்பட்ட பீனிக்ஸ் என்கிற கப்பல் இந்த நாள் மூணு மணிக்கு வந்து துறை பிடிச்சு கோட்டையில் இருபத்தோரு பீரங்கியும் போட்டார்கள். பதிலுக்கு கோட்டையிலே இருபத்தொரு பீரங்கியும் போட்டான். அந்தக் கப்பல் மூணாவது கணக்கன் இறங்கிக்கொண்டு வந்து கடுதாசியைக் கொடுத்துப் போட்டு கப்பித்தான் நாளைக்கு இறங்குவான் என்று சொல்லிப்போட்டு மறுபடியும் கப்பலின் மேலேறிப் போனான்.

39உ திங்கட்கிழமை காலமே எட்டுமணிக்கு நேற்றைய தினம் சீமையிலிருந்து வந்த பீனிக்ஸ் என்கிற கப்பல் கப்பித்தான் முசியோர் தெபுத்தலெர் என்கிறவன் கப்பல் விட்டு இறங்கி கரையிலே இழிஞ்சு கோட்டை வாசலுக்கு நேராய் வரச்சே பதிமூணு பீரங்கி போட்டார்கள். அதின் பேரிலே துரையை வந்து சந்திச்சுக் கொண்டு அவனுக்கு ஒரு விடுதி விட்டுவிட்டார்கள். அங்கே போயிருந்தான்.

இந்தநாள் மத்தியானத்துக்கு மேல் மூணு மணிக்கு பங்காளத்திலே … திரெக்க்தராயிருக்கிற முசே துய்ப்ளெயிஸ்டைய அறும்சாகிய கப்பல், கப்பல் சித்தவுக்குப் போய் அவ்விடத்திலே இருந்து வரச்சே மொக்கா பிடிச்சு அவ்விடத்து திரெக்த்தர் முசே கப்பிரியேல் தும்மாவுடைய கடுதாசியும் வாங்கிக் கொண்டு அவ்விடத்திலேயிருந்து சூலை 7 புறப்பட்டு இந்தநாள் மூணு மணிக்கு இந்த துறையிலே வந்துவிச்சு பிடிச்சு கோட்டையில் பீரங்கியும் போட்டு கப்பல் கப்பித்தான் முசே போமோவும் சூபர்கார்க்கு முசே ஆல்பெர்ட்டும் இறங்கினார்கள்.

1738 செப்தம்பர் 16 புரட்டாசி 4 செவ்வாய்க்கிழமை

காலமே ஒன்பது மணிக்கு முன் பிங்கள அற்பிசி மெக்காவுக்குப் போன தூக்கு தெபூர் பொன் என்கிற கப்பல் கப்பித்தான் முசே மறக்கி சாக்கி இந்தக் கப்பல் வந்து சேர்ந்தது. முசே மறக்கி சாக்கி கரையை இறங்கி வந்து துரையைப் போய் சந்தித்தான். கப்பல் நிறைய ஏத்தும்பாரம் காப்பிக் கொட்டை ஏத்தி வந்தது. இந்தக் காப்பிக் கொட்டை கப்பலுக்கு நிறைய ஏத்தும் பாரமாய் ஏத்தியிருக்கிற படியினாலே இந்தக் கப்பலுக்கு இனிமேல் சரக்கு வேறே ஏத்த கவையில்லை. இந்த ஏத்தும் பாரத்துடனே சீமைக்கு எடுத்துப் போவானென்று சொன்னார்கள். மொக்கா வியாபாரம் கெட்டுப்போச்சு தென்றும் இரண்டு வருஷமாய் இவ்விடத்திலே யிருந்து மொக்காவுக்குப் போன சரக்குகள் ஒன்றும் விக்கயில்லை யென்றும் அந்தச் சரக்கு எல்லாம் சாடவாயிராதாலே அல்லாமல் மற்றபடி ஒரு இழையாகிலும் அனுப்பப் போகாதென்றும் சொன்னார்கள். அங்கே யிருக்கிற முசே கபிரியேல் தும்மா யிடத்திலே முசே குவர்னர் துரைக்கும் அப்படித்தான் எழுதியனுப்பினார்.

புரட்டாசி 7 1738 செப்தம்பர் 19 வெள்ளிக்கிழமை

காலமே அஞ்சரை மணிக்கு ஆனந்தரங்கப்பன் பயணமாய் பரங்கிப்பேட்டைக்கு போனான். எது நிமித்தியம் என்றால் சீமை கப்பல் லபே என்கிற கப்பல் கப்பித்தான் முசே லப்பேசியர் இந்தக் கப்பல் அச்சை யாத்திரைக்குப் போகிறதான படியாலே இந்தக் கப்பலுக்கு கட்டுகள் பரங்கிப்பேட்டையிலே ஏற வேண்டியதான படியினாலே கும்பனி கட்டும் மத்தக் கேள்விகள் கட்டும் ஏத்துவிச்சுக் கப்பலும் பயணம் பண்ணி அனுப்பத்தக்கதாக ரங்கப்பன் போனான்.

1738 அக்டோபர் 1 புரட்டாசி 19 புதன்கிழமை

காலமே அச்சை பரங்கிப்பேட்டையிலிருந்து சீமை லபே என்கிற கப்பல் கப்பித்தான் முசே லபேசியேர் அந்தக் கப்பல் அசை யாத்திரைக்கு கேள்விகட்டு மேத்திக்கொண்டு கும்பினீர் கட்டுகளும் ஏத்திக்கொண்டு சொபீர் கார்க்கு முசே லெனுவாரையும் ஏத்திக்கொண்டு திரெக்தோர் மகம்மது சாலுர் பேகையும் அச்சை ராசர் காரியம் பரமானந்த பிள்ளையையும் கறுத்த மீறானையும் ஏத்திக் கொண்டு இந்த நாள் காலமே அச்சைக்கு யாத்திரையாய் பாயெடுத்து கப்பல் பயணமாகிப் போச்சுது. ஆனந்தரங்கப்பனும் 20 சனிவார நாள் மத்தியானம் புதுச்சேரி வந்து சேர்ந்தான்.

முன் 1738 செப்தம்பர் 28 புரட்டாசி 16 ஆதிவாரம் நாள்

மூணாஞ் சாமத்துக்கு சீமையிலிருந்து லப்பொலோர் என்கிற கப்பல் வந்தது. இந்தக் கப்பலிலே முசே தும்மா குவர்னர் துரைக்கு சேமிஷேல் என்கிற முத்திரை வந்தது. மறுநாள் திங்கட்கிழமை நான் சேன்மிகேல் என்கிற மகாத்மாவுடைய திருநாளான படியினாலே மறுநாளாகிய திங்கட்கிழமை சேமிஷேல் என்கிற முத்திரையைப் போட்டுக் கொள்வார்களென்று சொல்லுகிறார்கள்.

… செப்தம்பர் மாதம் 20ந் தேதிக்கு இந்தச் சீமைக் கப்பலுக்கு முன்னே ஒரு சீமைக் கப்பல் வந்தது. நான் இவ்விடத்திலே இல்லாததினாலே அந்தக் கப்பல் பேர் தெரியவில்லை. அந்தக் கப்பல் கப்பித்தான் பேர் முசே லபிலான்ஷி என்றும் அவன் முசே லெகு சட்டமாய் குட்டையனாக யிருப்பான். இந்தக் கப்பல் பங்காளத்துக்குப் போய் அவ்விடத்திலேயும் கொஞ்சம் சரக்கு ஏந்திக்கொண்டு தை மாதத்திலே வரச்சொல்லி பங்காளத்துக்குக் கப்பலைப் பயணம் பண்ணி அனுப்பினார்கள்.

அற்பிசி 4 1738 அக்தோபர் 17 வெள்ளிக்கிழமை

… அர்ப்பிசி மாதம் 5ந்தேதிக்கு இவ்விடத்திலிருந்து சீமைக்கு சரக்குகள் ஏத்திக் கொண்டு போன கட்டுக்கப்பல் 2க்கு வயணம்.

தூக் தெ புர்பொன் என்கிற கப்பல் கப்பித்தான் முசே மர்கிசாக்கி இந்தக் கப்பலுக்கு ஏத்தி காப்பிக் கொட்டை மத்தப்படி புடவையுடனே கூடினது ஒன்றுமில்லை. செஞ்சராம் என்கிற கப்பல். கப்பல் கப்பித்தான் முசே ஓபென். இந்தக் கப்பலுக்கு ஏத்தும் புதுச்சேரி சரக்கு கட்டு 1230. மிளகு பாரம் 300. செம்மரம் 6 பாரம். இந்தப்படிக்கு அந்தக் கப்பல் சரக்குகளேத்தி இந்த நாள் சனிக்கிழமை இராத்திரி இரண்டு கப்பலும் சீமைக்குப் பாய் எடுத்து ஓடிப்போச்சுது. 10 ஒக்தோபர் 25 வியாழக்கிழமை காலமே சீமைக்குப் பயணமான பீனிக்ஸ் என்கிற கப்பல் கப்பித்தான் முசே து.புத்லேர் இந்த கப்பல் ஆயிரத்தி நானூத்தி நாலு கட்டும் இரநூறு பாரம் மிளகும் ஏந்திக்கொண்டு சீமைக்குப் பயணமாய்ப் போனது.

1739 பிப்ரவரி மாதம் 8 தை 30 ஞாயிற்றுக்கிழமை தினம்

இந்த நாள் காலமே மொக்காவுக்கு மோர் என்கிற கப்பல் பயணமாய் கப்பல் கப்பித்தான் முசே சொல்ழனியாகு இந்தக் கப்பல் பாயெடுத்து மொக்காவுக்கு ஓடிப்போனான். இந்த கப்பலின் பேரிலே முசே மருத்னவில் பாரிசுக்கு எசமானராக போகத்தக்கதானதாய் ஏறி, மாயைலேயிறங்கி பாரீசுக்கு போகத்தக்கதாக பங்காளத்திலே யிருந்து வருகிற கப்பலின் பேரிலே போகத்தக்கதாக இந்த நாள் இந்த கப்பலிலே ஏறிப்போனான். முசே எலியாசு குமாரனும் இந்தக் கப்பலின் பேரிலே மாயிலே போயிறங்கி பங்காளத்திலே யிருந்து பரீசுக்குப் போகத்தக்கதாக வருகிற கப்பலின் பேரிலே ஏறிப் போகிறதுக்காக இந்தக் கப்பலிலே பயணமாய்ப் போனார்கள்.

1739 அவ்ரீல் 9 பங்குனி 30 வியாழக்கிழமை

இராத்திரி எட்டு மணிக்கு வந்து விச்சுப்பிடிச்சு மறுநாள் காலமே முசே சீஞோர், முசே செஞ்சாவூர் மற்றுமுண்டான பேரும் எல்லோரும் இறங்கினார்கள். இந்த கப்பலிலே வந்த தினுசுகள் வயணம்: துத்தனாகம், ரசம், பரங்கி சக்கை, ஆலத்திக் கற்பூரம் படிகாரம், பீங்கான், பட்டுச் சுருட்டுகள், பொன் இது முதலான சரக்குகள் வந்தது. இறக்கி கொட்டகை கிடங்கிலே சேர்த்து வைத்தார்கள். இந்தச் சரக்குகள் ஏலம் போடுகிறதற்கு தீர்த்து அவ்ரீல் 22 புதன்கிழமை காலமே எட்டுமணிக்கு கோட்டையிலே ஏலம் போடப்போகிறோம் தேவையானவர் வந்து கொள்ளுகிறது என்று கடுதாசி எழுதி கோட்டையிலே பிடவை பார்க்கிற சாலையிலேயும் கோவிலிலேயும் சாவடியிலேயும் ஓட்டினார்கள்.

(தொடரும்)

பகிர:
nv-author-image

கோ. செங்குட்டுவன்

விழுப்புரத்தில் பிறந்து வளர்ந்து வசித்து வருபவர். ஊடகத்துறையில் 20 ஆண்டுகாலம் செய்தியாளராகப் பணியாற்றியவர். கலை, இலக்கியம், பண்பாடு மற்றும் வரலாற்று அமைப்புகளில் பங்கேற்று இயங்கி வருபவர். 'சமணர் கழுவேற்றம்', 'கூவம் - அடையாறு - பக்கிங்காம்: சென்னையின் நீர்வழித்தடங்கள்' உள்ளிட்ட நூல்களை எழுதியிருக்கிறார். தொடர்புக்கு : ko.senguttuvan@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *