ஆனந்தரங்கரின் நாட்குறிப்பில் கப்பல்கள் வருவதும் போவதும் இதோ தொடருகிறது… கப்பல்கள், அவற்றின் காப்டன்கள், அவற்றில் ஏற்றி இறக்கப்பட்ட சரக்குகள், கப்பல்கள் கொண்டு வந்து சேர்த்தத் தகவல்கள் குறித்தெல்லாம் விவரமாகவும் விரிவாகவும் பதிவு செய்கிறார் ஆனந்தரங்கர். காரணம், இவர் தேர்ந்த வணிகர் மட்டுமல்ல; ‘ஆனந்தப்புரவி பாரு’ எனும் சிறிய வகையிலான கப்பலுக்கும் சொந்தக்காரர். இந்தக் கப்பல் பரங்கிப்பேட்டையிலே இருந்து கொழும்புக்கும், பரங்கிப்பேட்டையிலே இருந்து சென்னைக்கும் இயக்கப்பட்டிருக்கிறது.
புதுச்சேரி ஆளுநராக இருந்த முசே ஷெவல்லியேர் பெனுவாய் தும்மா விஜயதசமியன்று விடைபெற்று சீமைக்குக் கப்பலேறியபோது கடலில் வழிநெடுகிலும் நின்றிருந்த கப்பல்கள் அவருக்கு மரியாதை செலுத்தின. அடுத்த ஆளுநராக வருகை தந்த துய்ப்ளேக்ஸ், முதல்நாள் மாலையே புதுச்சேரி வந்துவிட்டார். ஆனால், கடல் உரமாக இருந்தபடியால் அவரால் இறங்க முடியவில்லை. அடுத்த நாள் அதிகாலை அசுபதி நட்சத்திரம் மகர லக்கினத்தில் முசே திப்பிளெயிக்சு அவர்கள் அவருடைய பெண்சாதியும் மற்றுமுள்ள சனங்களுடனே புதுச்சேரி மண்ணில் கால் வைத்தார்.
கப்பல்களில் ஏற்றி இறக்கப்பட்ட சரக்குகளையும் மறக்காமல் பட்டியலிடுகிறார் ஆனந்தரங்கர். இதில் முக்கியத்துவம் பெறுவது புடவை கட்டுகள்தான். இந்தப் புடவைகளின் வகைகளையும் கூட இவரது எழுத்துகளின் மூலம் நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது. இப்படியான சரக்கு ஏற்றிய கப்பல் ஒன்று குலசேகரன் பட்டணத்தில் இருந்து மாயே (மாஹி) சென்றிருக்கிறது. குறிப்பிட்ட காலத்தில் சரக்குகள் வந்து சேராதது, கப்பல்கள் நின்று போனது, உடைந்து சேதமானது – இவற்றால் கும்பினிக்கு (கம்பெனிக்கு) எந்தளவுக்கு நஷ்டம் ஏற்பட்டது என்பது குறித்தும் விசனப்படுகிறார் ஆனந்தரங்கர்.
புதுச்சேரி துறைமுகத்திற்கு ஒரே நாளில் ஏழு கப்பல்கள் வந்தன. இவை, சென்னை மீதான தாக்குதலுக்கு, பிரெஞ்சு கப்பற்படை தளபதி லபோர்தெனே வழிநடத்தி வந்தவை. இங்கிருந்து அச்சைக்குப் போயிருந்த பிரெஞ்சு வணிகர்கள், அங்குப் பழைய ராஜா கொடுக்க வேண்டிய பாக்கிக்காக அவரது கப்பலைப் புதுச்சேரிக்கு எடுத்து வந்தனர். மெக்காவுக்குப் பயணப்பட்ட பிரெஞ்சு வணிகக் கப்பல் நெப்புதுன் (நெப்டியூன்) கடற்கொள்ளையர்களிடம் சிக்கியதையும் அதிலிருந்தவர்கள் கொல்லப்பட்டது, காயம்பட்டதை திரைப்படக் காட்சிகளாக நம்முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார் ஆனந்தரங்கர்!
1739 ஜூன் மாதம் 6 வைகாசி 27 சனிக்கிழமை
மத்தியானத்துக்கு மேல் சுமார் நாலுமணிக்குப் புதுச்சேரியிலிருந்து சென்னப்பட்டணத்திற்குப் புறப்பட்டு பாயெடுத்தான். அதற்குக் கட்டுமரம் விட்டார்கள். கப்பல் கப்பித்தான் பேர்….. கப்பித்தான் முசே தும்மா அவர்களுக்கு ஒரு கடுதாசியும் நம்மிட வீட்டுக்கு எதிராக இருக்கிற பாதிரி லொலியேர்க்கு ஒரு கடுதாசியும் அவன் கையிலே பிரான்சாவிலிருந்து இவ்விடம் வந்திருக்கிறவருக்குக் கொடுக்கச் சொல்லிக் கொடுத்த படியினாலே அந்த இரண்டு கடுதாசியையும் கட்டுமரக்காரன் கையில் கொடுத்தான். …
1740 ஜனவரி 8 மார்கழி 28 வெள்ளிக்கிழமை
காலமே … மணிக்கு தூக்குதெ ஒர்லியான் என்கிற அச்சை கப்பல் ஓடிவந்து துறையிலே வச்சுப் பிடிச்சு ஏழு பீரங்கியும் போட்டான். இந்தக் கப்பலிலே வந்த சேதி என்னவென்றால் இந்த வருஷம் அச்சையிலே சூரத்து கப்பல் இரண்டு மூணு கப்பல் வந்தபடியினாலே பிடவை புகையிலை மெத்த சவுக்கையாயிருக்கு தென்று சொன்னார்கள். இதல்லாமல் இந்தக் கப்பலிலே ஏத்திவந்த சரக்கு வயணம் கும்பனீருக்கு:
கர்ப்பூரக்கட்டி சாம்பிராணி வகையறா பாரம் …
குதிரை … 123
இதுவல்லாமலும் வங்காளத்துக்கு என்று ஏத்தி வந்தது
பஞ்சு கட்டு … 148
குந்திரிக்களும் பாரம் … 20
சாம்பிராணி பாரம் … 10
சம்பங்கி கட்டை பாரம்… 30-35
குங்குலியம் பாரம் … 10-15
இப்படிப்பட்ட சரக்கெல்லாம் ஏத்திக்கொண்டு வந்தது.
1740 பிப்ரவரி 15 மாசி 7 திங்கட்கிழமை
இந்த நாள் இராத்திரி தூக்தெ ஒர்லியான் என்கிற சீமை கப்பல் கப்பித்தான் முசே நசிலேயு இராத்திரி சாப்பிட்டு கப்பலின் பேரிலே ஏறிப்போய் சீமைக்குப் போகிற வழியிலே ஒரு துறையிலும் பிடியாமல் செவ்வாய்க் கிழமைக்குப் போகத்தக்கதாக உத்தாரங் கொடுத்தபடி கப்பல் இராத்திரிக்குப் பயணமாய் பாயெடுத்துப் போனான். இந்தக் கப்பலிலே ஏறின கட்டு, பரங்கிப்பேட்டையிலே இருந்து வந்த மெல்லீசு நூல், சின்னக்கட்டு ஒன்று உள்பட ஆயிரத்து முன்னூத்து யெண்பத்தைந்து கட்டு ஏற்றப்பட்டது. இதல்லாமல் சில்லரைக்காரரது பத்துப் பதினைந்து சிப்பம் மாத்திரம் கூட ஏத்திக்கொண்டு சீமைக்குப் பாயெடுத்து ஓடிப் போனான்.
இதல்லாமல் இதற்குப் பத்து நாளைக்கு முன்பாக மாயேலே யிருக்கிற சுப்பித்தேர் என்கிற கப்பலை சீமைக்குப் பயணம் பண்ணி அனுப்பத்தக்கதாக இவ்விடத்திலிருந்து செஞ்சோசப் என்கிற கப்பலிலே நானூறு கட்டு ஏத்தி மற்றதுக்கு மிளகு ஏத்தி சீமைக்குப் பயணம் பண்ணி அனுப்பச்சொல்லி இவ்விடத்திலே யிருந்து கட்டு மாத்திரம் ஏத்தி இந்தக் கப்பலை சீமைக்கு அனுப்பினார்கள். இதல்லாமல் இந்த விசை சீமைக்கு இரண்டு கப்பல் போக வேண்டியதுக்கு ஒரு கப்பல் மாத்திரம் போய் முராபா என்கிற ஒரு கப்பல் மாத்திரம் இவ்விடத்திலே நின்றது.
இந்தக் கப்பல் ஏது நிமித்தம் போகாமல் நின்றதென்றால் கப்பலுக்குக் கட்டு கூடாததினாலே நின்றது. இப்போது போகப்பட்ட கப்பலுக்குத் தானே கட்டுப் போதாமல் கிடங்கிலே கையிருப்புக் கட்டுகளில்லாமல் தவக்கப்பட்டது. பரிச்சதம் கட்டுகள் கையிருப்பு இல்லையா யென்றால் ஏனத்துப் புடவையும் சுங்குவார் புடவையும் வர்த்தகர் புடவையுமாக பலவிதமும் எழுநூறு எழுநூத்தைன்பது கட்டுக்கு மாத்திரம் உண்டு. இருக்கிற புடவைகள் இதுகளெல்லாம் வண்ணான் துறையிலே சலவை அரைகுறையாயிருக்கிற படியினாலே சத்தியாய் கட்டுப்போடுகிறதற்கு இல்லாமல் தவக்கப்பட்டது. அல்லதென்று இந்த எழுநூறு எழுநூற்றைன்பது கட்டையும் முஸ்தீது பண்ணி இத்தோடே கூட 200, 250 கட்டும் கூடப்போட்டு ஆயிரம் கட்டும் இந்தக் கப்பலிலே ஏத்திப் பயணம் பண்ணி அனுப்புவோமென்றால் இந்தக் கப்பலுக்கு ஆயிரத்து எழுநூறு கட்டு ஏத்த வேண்டியதான படியினாலேயும் மற்ற எழுநூறு கட்டும் கூடி முஸ்தீது பண்ணுகிறதற்கு ஒரு மாதம் நாற்பது நாள் செல்லும் என்ற படியினாலேயும் அப்பால் மோசம் தப்பிப்போகுதென்கிற படியினாலேயும் இந்த முரப்பா என்கிற கப்பலை இந்த விசை பயணம் பண்ணாமல் நிறுத்திப் போட்டார்கள்.
இந்தக் கப்பல் குலசேகரன் பட்டணத்துக்குப் போய் அங்கேயிருந்து மையிக்குப் போகத்தக்கதாக கோஞ்செல் பண்ணித் தீர்த்தார்கள். இந்த விசை கும்பினியாருக்கு ஒரு கப்பல் கட்டுக்கூடாமல் இவ்விடத்திலே பின்னும் போன படியினாலேயும் ஒரு கப்பல் வங்காளத்திலேயும் கட்டுக் கூடாமல் பயணம் நின்னுபோன படியினாலேயும் பிலிப்போ என்கிற கப்பல் உடைஞ்சு போனதான படியினாலேயும் அவர்களுக்கு ரொம்ப தாபந்தமாயிருக்கும்.
1740 மார்ச்சு 15 பங்குனி 5 திங்கட்கிழமை
நம்முடைய ஆனந்தப்புரவிபாரு பரங்கிப்பேட்டை துறையிலிருந்து கொழும்புக்கு யாத்திரை போகத்தக்கதாக பாயெடுத்துப் பயணமாய் ஓடிப்போனார்கள். அந்தப் பாரிலிலே ஏற்றப்பட்ட சரக்கு வயணம்.
1740 சூலை 24 ஆடி 13 ஆதிவாரம் நாள்
காலமே பத்து மணிக்கு மேல் முன்னே மசுக்கரைக்கு வந்திருந்த சீமைக் கப்பல் இரண்டு கப்பலிலே ஒரு கப்பல் புதுச்சேரிக்கு ஓடிவந்து வச்சுப் பிடிச்சுப் பதினைந்து பீரங்கியும் போட்டார்கள். அந்தச் சீமைக்கப்பல் பேர் முசே புவிவி. கப்பித்தான் ஷெஞ்ஜோரிஜ். இந்தக் கப்பலிலே வந்த சேதி என்னவென்றால் மாயையிலே துரைத்தனம் பண்ணுகிற முசே தீர்வார், வங்காளத்துக்கு துரைத்தனத்துக்குப் போகிறதாகவும், வங்காளத்திலே இருக்கிற முசே தூப்ளேயிக்ஸ் இவ்விடத்துக்கு துரைத்தனத்துக்கு வருகிறார் என்றும் இவ்விடத்து துரை முசே ஷெவல்லியேர் பெனுவாய் தும்மாவை சீமைக்குப் போகிறாரென்றும் இந்தப்படிக்கு கும்பினியார் எழுதி அனுப்பினதாக அவரவர் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். முசே துளோராமை மாயைக்கு துரைத்தனமாய்ப் போகிறார் என்றும் சொன்னார்கள்.
1741 பிப்ரவரி 23 மாசி 16 வியாழக்கிழமை நாள்
… மணிக்கு முசே சிஞ்ஞோர் மாயைக்கு துரைத்தனமாய் கப்பலின் பேரிலே ஏறிப் பயணமாய்ப் போனார். இன்றைய தினம் காலமே ஏழுமணிக்குப் பிள்ளையவர்கள் போய் கண்டு பேசிப் பயணம் அனுப்பிவித்துக் கொண்டு வந்தார்கள்.
1741 மார்ச்சு 25 பங்குனி 16 சனிவார நாள்
காலமே பத்து மணிக்கு சென்னப்பட்டணம் தாண்டவராயப்பிள்ளை சென்னப்பட்டணத்துக்குப் போகிறதற்குப் பயணப்பட்டு நம்முடைய பாறு வத்தலின் பேரிலே ஏறி பயணமாய்ப் போனார்.
மார்ச்சு 26 பங்குனி 17 ஆதிவார நாள்
மத்தியானம் சீன மக்கா கப்பல் ஒன்று வந்தது.
1741 மார்ச்சு பங்குனி 21 வியாழக்கிழமை
இந்த நாள் சாயங்காலம் 4 மணிக்கு மணிலாவிலே இருந்து சின்ன சுங்குராம் என்கிற கப்பல் ஓடிவந்து வச்சுப்பிடிச்சான்.
1741 சூன் 4 வைகாசி 26 ஆதிவார நாள்
சாயங்காலம் 5 மணிக்கு இராசஸ்ரீ துரையவர்கள் காரைக்காலுக்குப் போகத் தக்கதாக சீமை கப்பலிலே ஏறினார்கள்.
சூன் 6 வைகாசி 28 செவ்வாய்க்கிழமை நாள்
காலமே ஏழு மணிக்குத் துரையவர்கள் கப்பலின் பேரிலே ஏறியிருந்தவர் காத்தில்லாத படியினாலே இறங்கி வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள்.
1741 சூன் 20 ஆனி 10 செவ்வாய்க்கிழமை நாள்
சாயங்காலம் நாலு மணிக்குத் துரையவர்கள் கப்பலின் பேரில் காரைக்காலில் இருந்து வந்து புதுச்சேரி துறை பிடித்து 5 மணிக்கு இறங்கினார். இந்தக் கப்பலிலே வந்தவர்கள் துரையவர்களும் கனகராய முதலியாரும் அவரைச் சேர்ந்தவர்களும் கூட வந்து இறங்கினார்கள். கப்பல் வந்து துறை பிடித்த உடனே துறையிலேயிருந்த கப்பல்காரரெல்லாரும் கப்பலுக்குப் கப்பல் பீரங்கி போட்டார்கள். இறங்குகிறபோது கப்பலிலே 21 பீரங்கி போட்டார்கள். இவ்விடத்திலே கரையிலே இறங்கின உடனே கோட்டையிலே 21 பீரங்கி போட்டார்கள். இறங்கி வீட்டுக்குப் போனார்கள்.
1741 சூலை 19 ஆடி 8 புதவார நாள்
காலமே சீமையிலேயிருந்து திரித்தோமே என்கிற கப்பல் வந்து துறை பிடிச்சு 21 பீரங்கியும் போட்டான். இந்தக் கப்பலிலே வந்த சேதி என்னவென்றால் துரையவர்களுக்கு திரேக்தேர் உத்தியோகம் வந்ததென்று சொன்னார்கள்.
ஆடி 9 சூலை 20 வியாழக்கிழமை நாள்
சாயங்காலம் நாலு மணிக்கு கொமிசல் கூடி சீமையிலே யிருந்து வந்த கடுதாசியைப் படிச்சுக் கொண்டார்கள். அந்தக் கடுதாசியிலே எழுதி வந்த வயணம்….
இந்த வயணமெல்லாம் பார்த்துக்கொண்ட உடனே துரையவர்களுக்கு மேலான உத்தியோகம் வந்ததென்கிறதாய் கோட்டையிலே 21 பீரங்கி போட்டார்கள். அதின் பேரிலே துறையிலே கிடக்கிற கப்பலின் பேரிலேயும் கப்பலுக்குப் கப்பல் பீரங்கி போட்டு இந்தச் சந்தோஷத்தை கொன்சேலியேர் மற்றுமுண்டான வெள்ளைக்காரர் சகலரும் போய் மெனவினார்கள்.
1741 சூலை 28 ஆடி 17 சுக்கிரவார நாள்
காலமே பத்து மணிக்கு முசே பெபுரியேர் காரைக்காலுக்குத் துரைத்தனமாய் போகிறதற்கு இவ்விடத்திலிருந்து கப்பலின் பேரிலே ஏறி கப்பல் பாயெடுத்து கப்பல் காரைக்காலுக்கு ஓடிப்போச்சுது. முசே பெபுரியேர் காரைக்காலுக்குப் போய் இறங்கின உடனே முசே குலார் அந்தக் கப்பலிலே தானே ஏறி புதுச்சேரிக்கு வந்துவிடுவார். இந்த நாள் சாயங்காலம் நாலு மணிக்குச் சீமையிலே யிருந்து ஒரு கப்பல் வந்தது. கப்பல் பெயர் லருகொனத்து கப்பல் கப்பித்தான் பெயர் முசே லசினே.
1741 ஆகஸ்டு 31 ஆவனி 19 வியாழக்கிழமை நாள்
காலமே பத்து மணிக்குக் காரைக்காலிலே யிருந்து முசே குலாரவர்கள் கப்பலின் பேரிலே வந்து புதுச்சேரி துறை பிடிச்சு இறங்கினார்.
1741 செப்தம்பர் 3 ஆவனி 22 ஆதிவார நாள்
சாயங்காலம் நாலு மணிக்கு நம்மிட வீட்டுக்கெதிரே யிருக்கிற… கோவிலிலே யிருக்கிற பிஷப்பு பாதிரி லொவியேரவர்கள் ஸியாமுக்கு பிஷப் ஆயி போயிருக்கத்தக்கதாக கப்பலின் பேரிலே ஏறினார்கள். ஏறச்சே துறையிலே பதினஞ்சு பீரங்கி போட்டார்கள். கப்பலின் பேரிலே ஏறச்சே 9 பீரங்கியும் போட்டார்கள்.
1741 செப்டம்பர் 27 புரட்டாசி 15 புதவார நாள்
காலமே 11 மணிக்குச் சீமையிலேயிருந்து இராசாவினுடைய இரண்டு கப்பலும் கும்பினியாருடைய கப்பல் அஞ்சும் கப்பலும் ஆக ஏழு கப்பலுமாக சண்டை முஸ்தீதுடனே மசுக்கரையிலிருந்து புறப்பட்டு இந்த நாள் 11 மணிக்கு மூன்று கப்பல் வந்து சேர்ந்து துறையிலே வைத்துப் பிடித்தான். இந்த ஏழு கப்பலுக்கும் முசே லபோருதுனே கும்மாந்தமாய் அவர் வருகிற கப்பலிலே அமிரால் போட்டுக் கொண்டு ஓடிவரச்சே துறையிலே யிருந்த கப்பல்காரன் அமிராலைக் கழத்திப்போட்டு கப்பல்காரரெல்லாரும் மரியாதை பண்ணினார்கள்.
1741 ஒக்தோபர் 19 அற்பசி 7 வியாழக்கிழமை நாள்
விசயதசமியன்று காலமே துரையவர்கள் முசே தி தும்மா குவர்னர் துரையவர்கள் சீமைக்குப் போகிறதற்குப் பயணமாய் அஞ்சு மணிக்கு ஆயத்தப்பட்டார்கள். அதன் பேரிலே துரையவர்கள் வீட்டிலே யிருந்து கடலோர மட்டுக்கும் இருபுறமும் வாழையும் தென்னை மட்டையும் கமுகு மரமும் நட்டு லெஸுத்து பண்ணினார்கள். துரையவர்களும் துரையவர்கள் பெண்சாதியும் சீமைக்குப் போனார்கள் என்கிறதாய் அறிஞ்சு பட்டணத்திலே இருக்கப்பட்ட வெள்ளைக்காரரிலே பெரிய மனுஷரவர்களும் தமிழரிலே பெரிய மனுஷர் மற்றுமுண்டான சகல சனமும் போய் இராத்திரி ஏழு மணி முதல் கொண்டு பத்து மணி மட்டுக்கும் அவர்களைக் கண்டு பேசி அனுப்பிவிச்சுக் கொண்டார்கள். அஞ்சரை மணிக்குத் துரையவர்களும் துரையவர்கள் பெண்சாதியும் பயணமாய் வீட்டைவிட்டு வெளியே புறப்பட்டார்கள். புறப்பட்ட உடனே அம்மாள் பல்லக்கு முன்னேயும் துரையவர்கள் பல்லக்கு பிறகேயும் அவர் பிறகாலே சின்னதுரை முசே துளோராம் மற்ற கொம்மிசெல்காரர் பல்லக்கும் கொம்பு தமுக்கு தேவடியாள் மேளக்காரர் சகல சம்பிரமத்துடனே வாழமரச் சாலைக்கு நடுவே வீட்டிலே யிருந்து மெதுவாய்ப் போய் ஆறு மணிக்கு சலங்கிலே ஏறினார்கள். துரையவர்கள் ஏறின சலங்கிலே துரையவர்கள் பெண்சாதியும் கூடத்தானே ஏறினார்கள். சலங்கிலேறினவுடனே கோட்டையிலே இருபத்தொரு பீரங்கி போட்டார்கள்.
சலங்கு போகச்சே வழியிலேயிருந்த கப்பல்காரர் கப்பலுக்குப் கப்பல் பீரங்கி போட்டு ஆசாரம் பண்ணினார்கள். துரையவர்களும் அம்மாளவர்களும் கப்பலின் பேரிலே போய் ஏறின உடனே கப்பலிலே 21 பீரங்கி போட்டு வலிய பாய்மரத்திலே சதிரக் கொடியும் போட்டார்கள். அதின் பேரிலே முசே லபொடுதுனே ஏறியிருந்த கப்பலிலே 21 பீரங்கி போட்டு அப்புறம் துறையிலே யிருக்கப்பட்ட கப்பல்களிலும் எல்லாம் கப்பலுக்கு 21 பீரங்கி போட்டார்கள். அந்த மட்டிலே இன்றைய தினம் பகல் முப்பது நாழிகையும் துறையிலே தானே யிருந்தார்கள்.
1741 ஒக்தோபர் 20 அற்பசி 8 சுக்கிரவார நாள்
காலமே பத்து மணிக்கு நேத்திய தினம் கப்பலிலே ஏறி இருந்த தும்மா குவர்னர் துரையவர்கள் கப்பல் பாயெடுத்து ஓடிப்போச்சுது. அந்தக் கப்பல் பாயெடுக்கச்சே கூட லபொடுதுனே கப்பலும் அவர் பிறகே கூட வந்திருந்த கப்பலும் ஆக ஒரு முகூர்த்தத்திலே ஏகமாய் பாயெடுத்து ஓடினார்கள்.
1742 சனவரி 9 மார்கழி 28 திங்கட்கிழமை நாள்
மத்தியானம் இரண்டு மணிக்கு முன் அச்சைக்குப் போயிருந்த தூக்கு தெ லொரியாம் என்கிற சீமைக்கப்பல் அச்சையிலே யிருந்து ஓடிவந்து வச்சுப்பிடிச்சு 9 பீரங்கியும் போட்டார்கள். உடனே கோட்டையிலே பதிலுக்கு 9 பீரங்கி போட்டார்கள். 4 மணிக்கு முசே லத்தூசும் புதுசாய்ப் போன தொக்கதோர் சுலுதாங்கண்டு மரக்காய்த் தம்பியும் பழைய தொக்கதோர் உசனல்லி பேக்கும் இறங்கினார்கள். அவர்கள் சொன்ன சேதி என்னவென்றால் அச்சையிலே பழைய ராசா கொடுக்க வேண்டிய பழைய நிலுவை சம்மதிக்காக பழைய இராசாவினுடைய கப்பலைப் பிடித்துக்கொண்டு வந்தார்களென்றும் அந்தக் கப்பலிலே யிருந்த சரக்கு சாம்றாணி மற்ற சரக்கு எல்லாம் சிறிது சரக்குகளை இந்தச் சீமைக்கப்பலிலே பறிச்சுப் போட்டுக்கொண்டு அந்தக் கப்பல் மனுஷரை இந்தக் கப்பலிலே ஏற்றிக்கொண்டு அந்தக் கப்பலிலே முசே கொத்தரெல்லையும் முசே கொர்ணே இவர்களைப் போட்டு அந்த அச்சை இராசாவினுடைய கப்பலை மோரீசுக்கு அனுப்பிவிட்டு இந்தக் கப்பல் பாயெடுத்து ஓடிவந்தோமென்றும் இந்தக் கப்பல் வந்த சரக்கு குதிரை 44, சாம்பிறாணி பாரம் 30, பாக்கு அவனம் – சர்க்கரை பாரம்… இதுகளும் பின்னையும் சிறிது சரக்குகளும் வந்ததென்று சொன்னார்கள்.
1742 ஜனவரி 11 தை 1 புதன்கிழமை நாள்
காலமே 10 மணிக்கு முசே எலியாசு கப்பல் ஓடிவந்து வச்சுப் பிடிச்சான். இந்தக் கப்பல் பைகோவிலே இருந்து ஓடிவந்தது.
ஜனவரி 14 தை 4 சனிவார நாள்
காலமே 10 மணிக்கு வங்காளத்திலே யிருந்து ஒரு கப்பல் ஓடிவந்து வச்சுப்பிடிச்சு 9 பீரங்கி போட்டான். அந்தக் கப்பலிலே வந்த சேதி யென்னவென்றால் இந்தக் கப்பலுடனே கூட நாலு கப்பல் வங்காளத்திலே புறப்பட்டோம். ஒரு கப்பலிலே துரை வருகிறார். அந்த மூன்று கப்பலும் இன்றைக்குக் காணுமோ நாளைக்குக் காணுமோ என்று சொன்னான்.
இந்த நாள் சாயங்காலம் நாலு மணிக்கு அந்த மூணு கப்பலும் கண்டுது. அதிலே ஒரு கப்பலிலே முசே துப்பிளேக்ஸ் அவர்கள் இவ்விடத்துக்குத் துரைத்தனத்துக்கு வந்த படியினாலே அமரால் போட்டுக்கொண்டு வந்தார். வரச்சே தானே துறையிலேயிருந்த கப்பல்காரர் எல்லாம் அவரவர் பீரங்கி போட்டு மரியாதை பண்ணினார்கள். பிற்பாடு கோட்டைக்கு 21 பீரங்கி போட்டார்கள். கட்டுமரத்திலே கடுதாசி 5 ½ மணிக்கு வந்தது. அந்தக் கடுதாசியிலே கடல் உரமாயிருக்கிறது, காலமே இறங்குகிறோம் என்று சேதி வந்தது. இதுக்குள்ளே இவ்விடத்திலே முஸ்தீது பண்ணிக் கடலோரத்திலே யிருந்து துரை வீடு மட்டுக்கும் இரண்டு புறமும் வாழை மரமும் தென்ன மட்டையும் நட்டு முஸ்தித்தா யிருந்தார்கள். அந்த மட்டிலே யிருந்து காலமே ஆதிவார நாள் காலமே ஆறு மணிக்கு அசுபதி நக்ஷத்திரம் மகர லக்கினத்தில் முசே திப்பிளெயிக்சு அவர்களும் அவருடைய பெண்சாதியும் மற்றுமுள்ள சனங்களுடனே இறங்கினார். …
சூன் 27 ஆனி 17 புதன்கிழமை நாள்
காலமே பனிரெண்டு மணிக்குச் சீர்மையிலே யிருந்து லீசு என்கிற கப்பல் ஓடிவந்து வச்சுப் பிடிச்சு 15 பீரங்கி போட்டார்கள். கப்பித்தான் பேர் ஷான் கூடிலுன் என்று சொன்னார்கள். இந்தச் சீமை கப்பலிலே வந்த சேதி யென்னென்றால் பிராஞ்சுக்காரருக்கும் இங்கிலீசுக்காரருக்கும் இப்போது சண்டையில்லை என்றும் இசுப்பாஞ்சிக்காரருக்கும் இங்கிரீஸ்காரருக்கும் முன்னாலே சுறுக்காயிருந்த சண்டை இப்போது சாடையாயிருக்கிறதென்றும் எம்பர்தோர் ஸ்தானத்திலே போய் பட்டத்துக்கிருக்கிறவர் பிராஞ்சுக்காரருக்கு எழுதி அனுப்பி அவர்கள் மனுஷர் எண்பதினாயிரம் பேர் சொலுதாக்களை அழைப்பிச்சுக் கொண்டு அதின் பேரிலே இவர்கள் மத்தத்தின் பேரிலே போய் எம்பிர்தோர் இராசாவாயிருந்தா ரென்றும் முசே தும்மா அவர்கள் இவ்விடத்திலே தானே குவர்னர் துரையிடமாய் இருக்கிறார்களென்கிறதாய் அவர் பேருக்கு தானே கடுதாசி மற்றது வந்ததாகவும் இந்தப்படியென்று சீர்மைக் கப்பல் சேதியாகச் சொல்லிக்கொள்ளுகிறார்கள்.
1742 அக்டோபர் 8 புரட்டாசி 26 சோமவார நாள்
சாயங்காலம் கிட்டாவுக்குப் போகிற சீர்மைக் கப்பல் மரி சுசேபு என்கிற கப்பல் பாயெடுத்து ஓடிப்போனார்கள். அந்தக் கப்பலுக்கு கப்பித்தான்… தொக்கதோர் மாமுநெயினா மரக்காயன். இந்தக் கப்பலிலே ஏத்தின பிடவை காங்கு பிடவை எழுத்துப் பிடவை. துரையவர்களுக்கு நம்முட முகாந்திரமாய் கட்டுப்போட்டு ஏத்தின கட்டு 59 புகையிலை பாரம்… அபினி மருத்து பெட்டி… 8,84.
1742 அக்டோபர் 10 புரட்டாசி 20 புதவார நாள்
இதே நாள் (புரட்சி 28) மத்தியானம் பனிரெண்டு அடிச்சு ஒரு மணிக்கு நம்முடைய ஆனந்தப்புரவிப்பாறு கொழும்பிலேயிருந்து ஓடிவந்து துறையிலே வச்சுப் பிடிச்சு காரியக்காரர் பீருமரைக்காயன் முத்துக்குமரப் பிள்ளை மற்ற பேர் இறங்கினார்கள்.
1743 அவ்ரீல் 9 பங்குனி 30 செவ்வாய்க்கிழமை
காலமே எட்டு மணிக்கு மனீலாவிலேயிருந்து ஒரு கப்பல் ஓடிவந்து வச்சுப் பிடிச்சான். அந்தக் கப்பல் பேர் சான் பெதுனு. கப்பித்தான் பேர் முசே லவீல் பாகு தமிழ் கப்பித்தான் செகினிவாச முதலி. இந்தக் கப்பலிலே யிருந்து ஒன்பது மணிக்கு முசே லவில்பாகுவும் செகினிவாச முதலியும் இறங்கி வந்தார்கள். ஆனால் இந்தக் கப்பலிலே வந்த சேதி என்னென்றால், எழுத்துப் புடவை லம்பாசு சீட்டியில் நல்ல விலைக்கு விற்றதாகவும் காங்குப் புடவைக்கு விலை கிராக்கி யில்லாமல் சரக்கு விற்காமலிருக்கிற படியினாலே இந்தக் கப்பலிலே சொபர்கார்கோவா இப்போது போனவர்களிலே ஒருத்தனை மனீலாவிலே வைத்துப்போட்டு வந்துவிட்டதாகச் சொன்னார்கள். இந்தக் கப்பலிலே வந்த சரக்கு வயணம்.
இதல்லாமல் இந்தக் கப்பலிலே வந்த சேதி என்னவென்றால்: முந்தை மாசத்திலே இவ்விடத்திலே யிருந்து மொக்காவுக்குப் பயணமாய்ப் போன கப்பல் அந்தக் கப்பல் பேர் நெப்பதுன். கப்பித்தான் பேர் முசே து பொக்காழ் சொபர்கார்கோ முசே குருப்பு சாத்து. இந்தக் கப்பல் இவ்விடத்திலேயிருந்து பாய்வலிச்சு மாயேக்குப் போய் சேர்ந்து அவ்விடத்திலே மிளகும் ஏலக்காயும் ஏற்றிக்கொண்டு அங்கே இருந்து பாய்வலிச்சு மொக்காவுக்குப் பயணமாய்ப் போகச்சே அதற்கடுத்தாப்போலே சமீபத்தில் தானே கள்ளக் கப்பல்காரர் அங்காடியார் ஐந்தாறு கப்பலுடனே வந்து சுற்றிக் கொண்டார்கள்.
அதின் பேரிலே கப்பல்காரன் தங்களாலே ஆனமட்டுக்கும் பீரங்கியினாலேயும், துப்பாக்கியினாலேயும் சுட்டார்கள். என்ன சுட்டாலும் இவர்களுக்கு அபசெயகாலமான படியினாலே அவர்களுக்குள்ளே ஒன்றும் சேதப்படாமல் நெருங்கி வந்து கப்பலைப் பிடித்து லக்கை ஏறினார்கள். கள்ளர் வந்து எப்போது கப்பலின் மேல் ஏறினார்களோ அந்த மட்டிலே கப்பலிலேயிருந்த பேர் திகைச்சாப் போலே நின்றே போட்டுப் போனார்கள்.
அந்த மட்டிலே கள்ளர் அவரவர் கையாட்டின சமயத்திலே முசே குருப்புசாத் என்கிறவர் தண்ணியிலே குதித்தார். அவரைத் தாழேயிருந்த பேர் துண்டந்துண்டமாய் வெட்டிப் போட்டார்களாம். முசே துபொக்காழை தலையிலே ஐந்தாறு காயமாய் சிலுக்க சிலுக்க வெட்டினார்கள். முசே லொஸத்தீசு என்கிறவனை இடதுகையை வெட்டிப் போட்டார்கள். முசே பருவேலென்கிறவனுக்கு மாரிலே இரண்டு துப்பாக்கி காயம்பட்டது. இந்தச் சந்தடியிலே முசே தெபொஸ் பயந்து பெரிய பெட்டியினுள் தனது அந்தப் பெட்டிக்குள்ளே பூந்துகொண்டான். அப்படி யிருக்கச்சே அவனைக்கண்டு கைப்பிடியாய்ப் பிடித்து தங்கள் கப்பலிலே ஏற்றிக்கொண்டார்கள். ஆனால் பின்னையும் வெகுபேர் மனுஷர் சேதமாச்சுது.
ஆனால் இவர்கள் கப்பலுக்கு இப்படி ஆதங்கம் வருவானேனென்றால் இந்தக் கப்பலிலே வெள்ளைக்காரர் விஸ்தாரமாயில்லாத படியினாலே இப்படி மோசம் வந்தது. இப்படி யிருக்கச்சே பிர்த்துகேசுக்காரனுடன் கப்பல் சீர்மைக் கப்பல் ஒன்று அது வழியாக வரச்சே இந்தக் கலாபத்தைக் கண்டு இதேதோ சண்டை பண்ணுகிறாப்போலே இருக்கிறதென்று சமீபமாய் ஓடிவந்து பார்த்தவுடனே இவர்களானால் கள்ளக்காரரென்று தெரிந்துகொண்டு பீரங்கிகளை இழுத்துக்கொண்டு கட்டிச் சுடுகிறதற்குள்ளே இந்தக் கப்பலை விட்டுப்போட்டு அவர்கள் ஓடிப்போய்விட்டார்கள். அந்த மட்டிலே பிர்த்துக்கேசுக்காரர் இந்தக் கப்பலை பிடித்துக்கொண்டு போய் மங்களூரிலே வைத்துக்கொண்டிருக்கிறார்கள். அந்தச் சேதிக்கு பிர்த்துகீஸ் காரருக்கு மாயேயிலே யிருந்து பிராஞ்சுக்காரர் ரொம்பவும் உபசாரமாய் சிநேகிதருமாய் எழுதி அனுப்பிவித்தார்கள். அந்த மட்டிலே யிருக்கிறது; இன்னம் கப்பலை விட்டதில்லை என்றும் அவர்கள் விச்ரேயவர்களுக்குக் கோவைக்கு எழுதியனுப்பியிருக்கிறார்களென்றும் இப்படியாக மனீஸ் கப்பலிலே சேதி வந்து துரையவர்களுக்கும் காகிதமும் வந்தது.
(தொடரும்)