ஒருபக்கம் ஆங்கிலேயர்களும் பிரெஞ்சுக்காரர்களும் இந்த மண்ணில் தங்கள் ஆட்சியைத் தக்கவைத்து, வரி வசூல் போன்றவற்றால் பொதுமக்களிடம் கொள்ளையில் ஈடுபட்டனர். இன்னொரு பக்கம் ஆர்க்காடு நவாபுகள், தங்களுக்குள் பதவிச் சண்டை போட்டுக்கொண்டு பொதுமக்களிடம் கொள்ளையடித்தனர். அதே நேரம், மராத்தியர்கள், திருச்சிராப்பள்ளி, ஆர்க்காடு பிராந்தியங்களைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரக் கடும் பிரயத்தனப்பட்டனர். இந்த நிலம் பிடிக்கும் ஆசையில் பொதுமக்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன.
பிரெஞ்சு மற்றும் இங்கிலீஷ்காரர்கள் பிராந்தியத்திற்கு உட்பட்ட பரங்கிப்பேட்டை, கூடலூர், திருப்பாதிரிப்புலியூர், தேவனாம்பட்டணம், வாகூர் (பாகூர்), தென்னல், வில்லியனூர், அரும்பார்த்தபுரம், ஊசுட்டேரி உள்ளிட்ட இடங்களில் மராத்தியர்களின் கொள்ளைச் சம்பவங்கள் அரங்கேறின. குறிப்பாக, பரங்கிப்பேட்டை இவர்களது பிரதான இலக்கானது. காரணம், அது ஒரு வணிகத் துறைமுகம். இங்கிருந்து கப்பல்கள், படகுகள் மூலம் சரக்குகள் அனுப்பப்பட்டன. பரங்கிப்பேட்டையை முற்றுகையிட்டுக் கொள்ளையிட்ட மராத்தியப் படை, சலங்குகளின் (படகுகள்) பேரிலே இருந்த துணிக் கட்டுகளைக்கூட விட்டுவைக்கவில்லை. அந்த நேரத்தில் ஆனந்தரங்கரின் துணிக் கட்டுகள் ஏற்றப்பட்டிருந்த சலங்கு சேற்றிலே சிக்கி இருந்ததால், பிள்ளையின் சரக்குகள் மட்டும் கொள்ளை போகாமல் தப்பிப் பிழைத்தன!
திருவண்ணாமலையில் இருந்து புறப்பட்ட மராத்தியப் படை திருச்சிக்குப் போவதாக எதிரிகளுக்குப் போக்கு காட்டிவிட்டு, நேராக தியாகதுருகம் சென்றனர். பின்னர் அங்கிருந்து விருத்தாசலம் வழியாக பரங்கிப்பேட்டைக்கு வந்திருக்கின்றனர். திருவண்ணாமலைக்கும் பரங்கிப்பேட்டைக்கும் பதினைந்து காத தூரம். இந்தத் தூரத்தை ஒன்றரை நாளில் கடந்திருக்கிறது மராத்தியப் படை. பரங்கிப்பேட்டைக்குள் நுழைந்த அவர்கள், வழியில் வருகிற போகிறவர்களிடம் எல்லாம் கொள்ளையடித்தனர். மராத்தியர் கண்களில் படாமலிருக்க ஆற்றில் இறங்கித் தப்பிக்க முயன்ற பலரும் பலியான சோகமும் நடந்தேறியது.. ஆனால் அங்கும் வந்த மராத்தியர்கள் அகப்பட்டதை எல்லாம் சுருட்டிச் சென்றனர்.
பரங்கிப்பேட்டை கோட்டைக்குள் புகுந்த மராத்தியப் படை, அங்கிருந்தவர்களை நிர்வாணப்படுத்துவது உள்ளிட்ட கொடூரங்களையும் அரங்கேற்றியது. அங்கிருந்த பெரிய மனிதர்கள் உள்ளிட்டோரை வெளியேற்றி கால்நடையாகவே அழைத்துச் சென்றனர். அவர்கள் தலையின்மீது பொதிகளை ஏற்றிச் சுமக்கச் செய்தனர். கோட்டைக்கு உள்ளேயும் வெளியேயும் ஆட்சியாளர் மற்றும் பொதுமக்களிடம் வீட்டுக்கு வீடு புகுந்து கொள்ளையிட்ட மராத்தியப் படையினர் துப்பாக்கி, கத்தி, ஈட்டி போன்ற ஆயுதங்களை மட்டும் அல்லாது, கொறடா எனும் சிறிய வகையிலான ஆயுதத்தையும் பயன்படுத்திச் சித்ரவதை செய்தனர். பெண்கள் கற்பழிக்கப்பட்டனர். எப்போதும் பீதியிலும் பதற்றத்திலும் வாழ்ந்த பொதுமக்கள் தங்கள் சொத்துக்களைப் பறிகொடுக்கவும் தயாராக இருக்க வேண்டும். இவற்றை எல்லாம் ஆனந்தரங்கரின் எழுத்துகளில் நாம் வாசிக்கும் போது நெஞ்சம் பதை பதைப்பதை நிச்சயம் தவிர்க்க முடியாது!
1740 டிசம்பர் டைரி 17 மார்கழி 6 சனிக்கிழமை நாள்
வெங்கிட்டம்மாள் பேட்டைக்கு மேற்கே பத்து நாழிகை வழிக்கு அப்புறம் கரடிகல்லடாவி பாலக்கொல்லை அந்த வட்டத்திலே மறாட்டியர் குதிரை வந்து கொள்ளையடிச்சார்கள் என்று அந்த ஊருக்குக் கிழக்கு தெற்கு வடக்கு இருக்கப்பட்ட பேர் முதலாக பண்ணுருட்டி திருவதி பரியந்தம் இருக்கப்பட்ட பிரசைகள் அனைவரும் வலசை வாங்கி கூடலூருக்கு வந்தார்கள். இந்தச் சேதி பரங்கிப்பேட்டை அமுல்தாரனுக்கு எழுதி வந்து பரங்கிப்பேட்டையிலே இருக்கப்பட்ட சனங்கள் சகலரும் குஞ்சு குழந்தைகளை அழைச்சுக் கொண்டு கூடலூர் வந்து சேர்ந்தார்கள்.
இதன் பிற்பாடு எட்டு நாள் மட்டுக்கும் மறாட்டியர் இன்னவிடத்தில் இருக்கிறார்கள் என்கிற சேதியுமல்லாமல் கொள்ளை இட்டார்களென்கிற பேருமில்லாமல் அசந்து இருந்தது. அதன் பேரிலே பரங்கிப்பேட்டையிலே இருந்து கூடலூருக்கு வந்திருந்த பேர் நாலத்து இரண்டு பேர் பரங்கிப்பேட்டைக்குப் போகவும் வரவும் அவரவர் கொஞ்சம் நஞ்சம் தொழில்துறை பார்க்கவும் இப்படியிருந்தார்கள். இப்படியிருக்கச்சே கூலிச்சேன் அய்யன் பெருமாளென்கிறவனை பரங்கிப்பேட்டைக்கு அனுப்பிவிச்சோம். அவன் இன்றைய தினம் சாயங்காலம் நாலு மணிக்கு பரங்கிப்பேட்டைக்குப் போய்ச் சேர்ந்தானாம். இவன் போகிற போது மறாட்டியர் (500) குதிரைக்காரர் வந்து பரங்கிப்பேட்டை நாலு மூலையும் சுத்திக்கொண்டு கொள்ளையடிக்கிறார்களாம். அவன் சின்ன ஊரண்டை போன உடனே புடவை சீலை எல்லாம் ஒரு செடியின் கீழே வச்சுப்போட்டு உலாந்துகாரன் பெத்திரியைக்கிட்டப் போனானாம். இவன் போகச்சே மறாட்டியர் பெத்திரிக்கு பிறகாலே வந்து சுவரை இடித்து உள்ளே புகுந்து உலாந்தரகாரன் சின்ன கப்பித்தான் அவர் பெண்சாதி அவர் பிள்ளைகள் அனைவரையும் பிடித்துக்கொண்டு கழிகளிலே கயிறுகளைக் கட்டி கையிலே பிடித்துக்கொண்டிருக்கச்சே நம்மிட சேவகன் கண்டு இப்புறம் ஓடி வரச்சே எதிரிலே இருந்த பிராமணர் இரண்டொருத்தரைக் காயப்படுத்தி விட்டு விட்டார்களாம். அவர்களையும் கண்டானாம்.
இந்தப் படிக்கு ஊரிலேயும் கொள்ளையடிக்கிறார்களாம். அந்த வேளையிலே இராத்திரி யெல்லாம் இந்தச் சேவகன் ஒரு செடியின் கீழே பதுங்கியிருந்து இந்த தமாஷ் எல்லாம் கண்ணினாலே கண்டு பொழுது விடிய சாமமென்னச்சே புறப்பட்டு 15 திங்கட்கிழமை நாள் விடிஞ்சு பத்து நாழிகைக்குப் புதுச்சேரி வந்து சேர்ந்து இந்த கபுறுகளைச் சொன்னான். அந்தச் சேதி அன்னேரமே பிள்ளையவர்கள் துரையவர்களண்டைக்குப் போய் எச்சரிச்சுப் போட்டு வளவுக்கு வந்து இவ்விடத்திலே இருந்து கொண்டு மூணு பேர் சேவகரைப் பரங்கிப்பேட்டைக்கு அனுப்பினார்கள். கபுறு தெரிஞ்சு கொண்டு வரத்தக்கதாய் போயிருக்கிறார்கள்.
1740 டிசம்பர் 27 மார்கழி 16 செவ்வாய்க்கிழமை
இந்தநாள் காலமே பிறந்த சேதி: மறாட்டியர் குதிரை நேற்றைய தினம் கூடலூருக்கு மேற்கே அஞ்சாறு குதிரையைக் கண்டு கூடலூரிலே இருந்த ஒரு வேவுகாரனை அனுப்பினார்களாம். அவன் போரத்துக்குள்ளே சமீபிச்சு வருகிறார்களென்று சொல்லி திருப்பாதிருப்புலியூர் கொத்தளத்தின் பேரிலே இருந்து இரண்டு பீரங்கி போட்டார்களாம். அதின் பேரிலே ஓடிப்போனதாகவும் வேவு பார்க்கப்போன சேவகனைக் கண்டு ஒரு குதிரைக்காரன் துரத்திவந்து வெட்டினதாகவும் இந்தச் சேவகன் அந்த மறாட்டியனை தடியினாலே அடிச்சு அவன் கத்தியைப் பிடுங்கிக் கொண்டு தேவனாம்பட்டணத்து கோட்டைக்கு வந்து சேர்ந்து துரையுடனே சொன்னதாகவும் அவர் சந்தோஷப்பட்டு இரண்டு கிசம் சகலாத்தும் ஏழு வராகனும் 20 படி அரிசியும் கொடுத்தாரென்றும் சொன்னார்கள்.
இதன் பிறகு அன்றைய தினம் அந்தக் குதிரையின் 50, 60 குதிரையுடனே வாகூருக்கச் சேய்மையிலே கண்டு வாகூரிலே யிருக்கிற சேவகர் இருபது முப்பது துப்பாக்கிவெடிச் சுட்டார்களாம். அதைக்கண்டு மறாட்டியர்கள் ஒதுங்கிப்போனவுடனே வாகூர் துரை புரப்பட்டு நேற்று சாயங்காலம் ஓடிவந்து புதுச்சேரி சேர்ந்தார். அதன் பேரிலே வாகூர் அந்த வட்டங்களிலே கொள்ளையடிச்சார்களென்று சொல்லுகிறார்கள். அப்படி யிருக்கச்சே எட்டு மணிக்கு தெண்ணலிலே வந்து கொள்ளையடிச்சு வில்லியனூர் ஊசுட்டேரி அரும்பாத்தை பிள்ளைசாவடி ஒழுகரை இந்த மட்டுக்கும் குதிரையில் வந்து பரவி வார பேர் போர பேர்களை அடிச்சுப் பறிக்கிறதும் அவரவரை சிலாரப் பண்ணுகிறார்களென்று அவரவர் பறிகொடுத்துப் போட்டு வந்து விழுந்தார்கள்.
அதன் பேரிலே துரையவர்கள் இவ்விடத்திலே யிருந்து (9) மணிக்கு ஒரு ஈயிஸுதாங்கி சொலுதாதுகளும் முத்தியப் பிள்ளையவர்களையும் அவர் பிறகே (50) பேர் சேவகரையும் இதல்லாமல் இவ்விடத்திலே வந்திருக்கப்பட்ட துலுக்கரண்டை யிருக்கிற தயினாத்துக் குதிரைகளையும் சேவகரையும் கூட்டி ஒழுகரைக்கு அனுப்பினார்கள். அவர்கள் ஒழுகரைக்குப் போகிறதற்குள்ளே மறாட்டியர் அப்புறப்பட்டு வழுதாவூர் போய்ச்சேர்ந்தார்கள் என்னும் கபுறு தெரிந்து கொண்டு இவ்விடத்திலே யிருந்து போனவர்கள் சாயங்காலம் 4 மணிக்கு வந்துவிட்டார்கள்.
1740 டிசம்பர் 27 மார்கழி 16 செவ்வாய்க்கிழமை நாள்
பரங்கிப்பேட்டையிலிருந்து எழுதி வந்த சேதி: மறாட்டியர் வந்து கொள்ளையிட்டது ஆதியோடந்தமாய் எழுதின விபரம் (13) சனிவார நாள் காலமே திருவண்ணாமலையிலே யிருந்து பயணப்பட்டு 2000 குதிரை புறப்பட்டு திரிச்சிராபள்ளிக்குப் போறோம் என்கிறதாகப் பேர் எண்பிச்சு நேர் தெற்கே தியாகதுர்க மட்டும் போய் அவ்விடத்திலேயிருந்து கிழக்கே திரும்பி இராத்திரி விருத்தாசலம் வந்து சேர்ந்தார்கள். திருவண்ணாமலைக்கும் விருத்தாசலத்துக்கும் ஐங்காதம். அவர் தெர்கொத்தி சுத்தினது ஒரு காதம். ஆக ஆறுகாதம் வழி ஒரு நாளைய பயணமாய் வந்து காலமே அவ்விடத்திலேயிருந்து புறப்பட்டு மத்தியானம் 18 நாழிகையளவில் பரங்கிப்பேட்டை வந்து தாக்கலானார்கள். பரங்கிப்பேட்டைக்கும் விருத்தாசலத்துக்கும் அயிங்காத வழி உண்டு. இந்த பதிங்காத வழி தூரமும் ஒரு நாளும் மறுநாள் மத்தியானத்துக்கு வந்து சேர்ந்தார்கள்.
அவ்விடத்திலே நடந்த சேதி பரங்கிப்பேட்டைக்கு மேலண்டை இரண்டு மூணு நாழிகை வழியிலே சித்திரச்சாவடி யென்றிருக்கிறது. அவ்விடத்திலே வந்து போக்குவரத்துக்காரரை அடித்துப் பறிச்சார்கள். அப்படி யிருக்கச்சே உலாந்தாக்காரன் பெத்திரியிலே யிருந்து இரண்டு பேர் சேவகர் நாகப்பட்டணத்துக்குப் போகிற நிமித்தியம் கடுதாசி வாங்கிக்கொண்டு பயணப்பட்டு போகச்சே அவர்களும் சித்திரசாவடி கிட்ட வரச்சே இந்த மறாட்டியர் குதிரையைக் கண்டு பயந்து மறுபடியும் பரங்கிப்பேட்டைக்கு ஓடி வந்தார்கள். அவர்கள் ஓடி வரச்சே அவர்களுக்கு எதிர்ப்பட்ட பேர்களுடனே எல்லாம் சொல்லிக்கொண்டு கூவிக்கொண்டு ஓடிவந்து ஒலாந்தாகாரன் பெத்திரியிலே சொன்னார்கள். அந்த மட்டிலே அவர்களும் ஆலோசனைபட்டுக் கொண்டிருக்கச்சே ஊரு நாலு மூலையும் கெட்டு முறிஞ்சு யெல்லாரும் அவரவருடைய தட்டுமுட்டு பணங்காசு புடவை சீலைகளை எடுத்துக்கொண்டு ஓடிவந்து பெத்திரியிலே அடைஞ்ச சனங்கள் மிதமில்லை.
இதல்லாமல் பெத்திரி அடங்காமல் பின்னையும் வெகு சனங்கள் ஆத்தங்கரையிலே வந்து அவ்விடத்திலே இருக்கிற தோணியின் பேரிலே ஏறினார்கள். நாற்பது ஐம்பது பேர் ஏறுகிற தோணியிலே ஆபத்து வேளையான படியினாலே படகு ஒண்ணுக்கு 200, 250, 300 இந்தப்படியாக ஒன்று மேலே ஒன்று ஏறினார்கள். ஆனபடியினாலே படகு தாங்காமல் தரையிலே தட்டிப்போய் கிடக்கிறது. அப்புறம் அசையவில்லை. இதல்லாமல் சக்கரயப்ப முதலி புடவை சீலை கட்டுகள் ஒரு சலங்கு, நாச்சியப்ப முதலி புடவைக் கட்டுகள் ஒரு சலங்கு, ஆண்டியப்ப முதலி புடவை கட்டு ஒரு சலங்கு. ஆனந்தரங்கப் பிள்ளையவர்கள் புடவை கட்டு ஒரு சலங்கு, குஞ்சா பிள்ளை சலங்கு. இதல்லாமல் சில்லரை வர்த்தகரது இரண்டு சலங்கு மேலே கட்டுகளேத்தி ஆத்திலே கட்டி வைத்திருந்தது.
இப்படியிருக்கிற சமயத்திலே மறாட்டியர்களின் இரண்டாயிரங் குதிரை வந்தது. ஊருக்குத் தென்பக்கம் ஆத்தோரமாய் 500 குதிரையும் ஊருக்கு வடக்குமாய் ஐநூறு குதிரையும் செவ்வையாய் 1000 குதிரையும் இப்படியாக அந்தண்டைக்கிந்தண்டை ஒரு மனிதரைத் தப்பவிடாமல் சுத்தி வலை விசிறினாப்போல் சுத்திக்கொண்டு பட்டணத்திலே புகுந்து ஒரு வீடு தப்பாமல் வீட்டுக்கு மூணு குதிரையும் நாலு குதிரையும் ஆகப்புகுந்து கொள்ளையிட்டு சனங்களை யெல்லாம் கொரடாவினாலே அடிச்சு ஒரு முழத்துணி கொடுத்து சறுவ சோபாரமும் பிடுங்கிக் கொண்டு அவர்கள் தலையிலே மூட்டைகளை வைத்து குதிரை பிடிக்கச் சொல்லி ஓரண்டையிலே தாம்தூமாய்க் கிடக்கிற அந்த வேளையிலே ஆத்தோரமாக வந்த குதிரையன் வந்து தனிப்பட்டு தோணியின் பேரிலே ஏறிக்கொண்டு யிருக்கிற சனங்களை எல்லாம் வெளியிலே இழுத்து தட்டுகள் முட்டுகள் புடவை சீலைகள் அடங்கலும் பறிச்சுக் கொண்டு வெகுபேரை காயப்படுத்தி வெகுபேரை கொரடாவினாலே சக்கை பிளந்து போட்டார்கள்.
அந்த வேளையிலே ஓடிப்போவோமென்று ஆத்திலே விழுந்த பேருக்குள்ளே பனிரெண்டு பேர் செத்தார்களாம். இதல்லாமல் ஆத்திலே கட்டியிருந்த சலங்குகளை யெல்லாம் கரையிலே இழுத்து அதிலே இருந்த புடவை கட்டுகளெல்லாம் கொள்ளையிட்டுக் கொண்டு போனார்கள். ஆனால் ஆனந்தரங்கப்பிள்ளையவர்கள் யோகத்திலே அந்த ஒரு சலங்கு மாத்திரம் அப்புறம் சேத்திலே கிடந்த படியினாலே தப்பி அவர்கள் காரியக்காரரும் தப்பினார்கள். மத்தப்பேர் சகல சனங்களும் மராட்டியன் கையிலே அகப்பட்டு சகலமும் பறிகொடுத்து இம்சைப்பட்டார்கள்.
அவ்விடத்தில் வந்த 500 குதிரையின் உலாந்தகாரன் பெத்திரி மேலே திரும்பிச்சு. திரும்பி உடனே பெத்திரி கதவை மூடிக்கொண்டார்கள். அந்த வேளையிலே பட்டணத்துக்குள்ளே கொள்ளையிட்ட குதிரையிலே அன்னூறு குதிரை வடபக்கமாய் வந்து ஆக ஆயிரம் குதிரைக்காரரும் கூடி பெத்தி சன்னலை சிறிது பேர் இடிக்கச்சே சிறிது பேர் நூலேணியை வீட்டின் பேரிலே எறிஞ்சு அதைப் பிடிச்சுக் கொண்டு தொத்தி வீட்டின் பேரிலேறி உள்ளே குதிச்சு இதுக்கு உள்ளே வந்து புகுந்து சகல சனங்களையும் நிர்வாடமாய் உறிஞ்சு கொண்டு சிறிது பேருக்கு வெட்டு காயமும் சிறிது பேருக்கு கொறடா அடியும் இப்படியாக இரண்டு முழத் துணியினைக் கொடுத்து வெளியே துரத்திவிட்டு வெள்ளைக்கார சின்னக் கப்பித்தான் ஒஸ்திரால் பெண்சாதி அவன் பெண்கள் மூணு பேர், ஒலாந்துக்காரர் ஏழெட்டு பேர் இவர்களை மாத்திரம் பிடிச்சுக் கட்டிக்கொண்டு பெத்திரி அடங்கலும் கொள்ளையிட்டுக் கொண்டு பெரிய பெரிய மனுஷர் மத்தப்பேர் அவரவர் தலையின் பேரிலே சுமைகளை வைச்சு அடித்துக் கொண்டு சாயங்காலம் 6 மணிக்கு அப்புறப்பட்டுப் போய் ஊருக்கு மூணு நாலு நாழி வழியிலே மைதான வெளியிலே இறங்கி மூட்டை எடுத்துக் கொண்டு போன பேர்களை எல்லாம் விட்டுத்துரத்தி விட்டு வெள்ளைக்காரரை மாத்திரம் இராத்திரி முப்பது நாழிகையும் பாளையத்திலே போட்டு வைச்சு இருந்து மறுநாள் காலமே 60 குதிரைக்காரர் புறப்பட்டு ஒலாந்துக்காரரை அழைச்சுக்கொண்டுவந்து பெத்திரியிலே விட்டுப்போட்டு, பின்னையும் ஒட்டினது ஒழிஞ்சது சரக்குகள் இருந்ததெல்லாம் கொள்ளையிட்டுக் கொண்டு போய்விட்டார்கள். ஆனால் பெத்திரியிலே போனது தட்டுமுட்டுகளும் வெள்ளைக்காரனுக்குண்டு. இதல்லாமல் ஊருக்குள்ளே கொள்ளை போனது ஐம்பதினாயிரம் வராகனுக்கு உண்டு. ஆக லக்ஷத்தன்பதினாயிரம் வராகனுக்கு உண்டு. ஊரிலே கொள்ளை போனது என்று எழுதி வந்தது.
1741 ஜனவரி 29 தை 20 ஆதிவார நாள்
காலமே 7 மணிக்கு ஆனந்தரங்கப்பிள்ளையவர்களும் அரியப்பமுதலியாரும் கூட திருவேங்கடபுரத்திலே அக்கினி திருவிழா பண்ணிவர நிமித்தியம் புறப்பட்டு சாவடிக்குப் போனார்கள். மத்தியானம் இரண்டு மணிக்குப் பிறந்த சேதி மறாட்டியர் குதிரை தெற்கேயிருந்து 1000 குதிரை புறப்பட்டு வந்தவர்கள் வரச்சே வழியிலே திருப்பாதிரிபுலியூருக்குள்ளே முப்பது நாப்பது குதிரை ஊருக்குள்ளேயும் கொள்ளையிட்டு சிறிது குதிரைகள் திருப்பாதிரிபுலியூரில் இருந்து தேவனாம்பட்டணத்துக்குப் போகிற வழியில் கெடிலத்திலே வந்து வழிக்கட்டி வருகிறபேர் கையிலே யிருக்கிறதை பரிச்சுக் கொண்டு மஞ்சக்குப்பத்திலே வந்து, அங்கேயும் நாலத்து இரண்டு வீட்டிலே புகுந்து கொள்ளையிட்டுக் கொண்டு தெண்ணல் கிருஷ்ணா ரெட்டியாரையும் பின்னையும் நாலத்து இரண்டு பேரைப் பிடித்துக்கொண்டு ரொம்பவும் அநிக்கீதை பண்ணிவிட்டு இப்புறம் வருகிறபோது மேலே எழுதியிருக்கிற இரண்டு மணி நேரத்திற்கு ஒழுகரை யண்டையிலே நாலஞ்சு குதிரை காண்பிச்சு, அவ்விடத்திலே யிருக்கிற பேரெல்லாரும் ஓடிவந்தார்கள். இந்தக் கபுறு துரையவர்கள் கேள்விப்பட்ட உடனே பட்டணத்தைச் சுத்தியிருக்கப்பட்ட கெவுனி வாசலெல்லாம் சாத்தி போடுவிச்சார்கள். அந்தச் சனம் நம்மிட சாவடிக்குப் போயிருக்கிற பிள்ளையவர்களண்டைக்கு படிப்படியாய் ஆளை ஓடவிட்ட உடனே அந்த கபுறு கேட்ட அந்த க்ஷணம் புறப்பட்டு கடலோரமே வந்து சாயங்காலம் ஐந்து மணிக்கு வந்து சேர்ந்தார்கள். மறாட்டியர் ஆயிரங் குதிரைக்காரரும் வடக்கே போய் விட்டார்கள்.
1741 பிப்ரவரி 2 தை 24 வியாழக்கிழமை நாள்
முன் வடக்கே போன குதிரைகள் மறுபடியும் திரும்பி வந்தது. தெற்கே போய் விட்டார்கள். அவர்கள் வடக்கே என்ன நிமித்தியம் போனார்கள் என்றால் சதுரங்கப்பட்டணத்துக்குப் போய் பட்டணத்திலே கொள்ளையிட்டு உலாந்தாக்காரன் பெத்திரியைக் கிட்டப் போன உடனே உலாந்தாக்காரர் மெலுக்கு வைக்கப்பட்டிருந்த சேவகரைச் சேரப் பிடிச்சு இருநூறு பேர் துப்பாக்கிக்காரராயிருந்து துப்பாக்கிகளெல்லாம் ஒருமிக்கச் சுட்டு, பீரங்கிகளிலேயும் குண்டு போட்டுச் சுட்டு தீக் குடுக்கைகளையும் கொளுத்தி எறிஞ்சார்கள். அதனாலே மறாட்டியர் குதிரை பத்து எட்டு அடி ஓடிவந்து விட்டார்கள். வருகிற போது வழியிலே நேரிட்ட ஊருகளெல்லாம் கொள்ளையிட்டுக் கொண்டு வெகு பேரை பெண்டுகளைக் கெடுத்துப் போட்டு, வெகு சேதம் பண்ணிக்கொண்டு இந்தப்படியாக வழி முடிய கொள்ளை இட்டுக் கொண்டு தெற்கே போகிறவர்கள் மறுபடியும் மஞ்சக்குப்பம் திருப்பாதிரிப் புலியூரின் பேரிலே புறப்பட்டு போனார்கள்.
1741 மார்ச்சு 27 பங்குனி 18 திங்கள் கிழமை நாள்
காலமே பத்து மணிக்கு திரிச்சிராப்பள்ளி மறாட்டியர் லசுக்கரிலேயிருந்து பிராஞ்சுக்காரருடைய வக்கீல் இவ்விடத்திலே யிருக்கிற துரையவர்களுக்கு எழுதியனுப்பின கடுதாசி வயணம் என்னவென்றால் மதுரையிலே யிருந்த படேசாயபு கோட்டைவிட்டு புறப்பட்டு திண்டுக்கல் கோட்டையிலே நாலாயிரங் குதிரையுடனே வந்து இறங்கி இருந்தார் என்றும், ஒரு நாள் மறாட்டியர் இரண்டாயிரங் குதிரையுடனே சண்டைக்குப் போன விடத்திலே படேசாயபு வெளியே புறப்பட்டு சண்டை பண்ணின விடத்திலே மறாட்டியர் முறிஞ்சு ஓடிவந்துவிட்டார்கள். அதன் பேரிலே படேசாயபு வந்து 11 திங்கட்கிழமை நாள் மணல்பாறையண்டை வந்து இறங்கினதாகவும் அந்த கபுறு மறாட்டியர் ரகோசி போசுறாவும் பதினாயிரங் குதிரையும் புறப்பட்டு திரிச்சிராப்பள்ளிக்கு மேற்கே முக்காத வழியிலே இருக்கிற மணப்பாரையிலே இறங்கி இருந்த படேசாயபை சுத்திக்கொண்டு 12 செவ்வாய்க்கிழமை நாள் காலமே சூரியனுதயம் துவக்கி மூன்று சாமமட்டுக்கும் சண்டை பண்ணினார்கள்.
மறாட்டியரிலேயும் இரண்டாயிரம் மூவாயிரங் குதிரை விழுந்தது. படேசாயபு தளத்திலேயும் 2000, 3000 குதிரையும் விழுந்து போய் படேசாயபும் மறாட்டியரும் நல்ல சண்டை பண்ணி படேசாயபுக்கு துப்பாக்கி காயம் இரண்டும் அம்புக் காயம் இரண்டும் கத்திக்காயம் ஒன்றும் பட்டு விழுந்து போனான். அவனுடைய அக்கா மருமகன் சாதக்க சாயபு என்கிறவனும் ஒரு சமேதார் ஒருத்தன் பெரிய மனுஷனும் இவர்கள் விழுந்த உடனே துலுக்கருடைய படை முறிஞ்சு ஓடிப் போனதின் பேரிலே மறாட்டியர் ரணகளம் சோதிக்கச்சே முன் எழுதப்பட்டிருக்கிற மூன்று பேரும் செத்துப்போய் கிடக்கிறதைக் கண்டு படேசாயபை மாத்திரம் எடுத்து பல்லக்கின் பேரிலே போட்டு ரகோசி போசுறா திருச்சிராப்பள்ளி கோட்டைக்கு சந்தாசாயபு அண்டைக்கு அனுப்பிவிட்டார் என்று இப்படியாக துரையவர்களுக்கு எழுதிவந்தது.
இந்தச் சமாசாரத்தைப் படேசாயபு மாலிலேயும் சந்தாசாயபு மாலிலேயும் போய்ச் சொல்லிப் போட்டு வரச்சொல்லி கனகராய முதலியாரையும் முத்தியா பிள்ளையும் இரண்டு பேரையும் அனுப்பிவிச்சார். அவர்கள் வந்து இந்தச் சமாசாரம் சொன்னவுடனே படேசாயபு மாலிலே துலுக்கச்சிகள் எல்லாருமாய்க் கூடி கூக்குரல் போட்டு அழுது அங்கலாச்சுக் கொண்டிருந்தார்கள். சந்தாசாயபு பெண்சாதியும் படேசாயபு மாலுக்கு வந்து அழுதாள். மற்றப்படி பெரிய மனுஷர் வீட்டுப் பெண்டுகள், இவ்விடத்திலே இறங்கி இருக்கப்பட்ட பேர் சகலமான பேரும் வந்து மெனவினார்கள். துலுக்கரெல்லாம் வந்து தெருவிலே கும்பல் கூடிக்கொண்டு யேக சப்தமாய் கூவி அழுதார்கள். இன்றைய தினம் இப்படி நடந்தது.
1741 மார்ச்சு 28 பங்குனி 19 செவ்வாய்க்கிழமை
இந்த நாள் சேத்துப்பட்டிலேயிருந்து சந்தாசாயபு மாலுக்கு கடுதாசி வந்தது. அந்தச் சேதி என்னவென்றால் படேசாயபுக்கு காயம் மாத்திரம் பட்டு பிழைச்சு யிருக்கிறார் என்று எழுதி வந்தது என்று சொன்னார்கள்.
(தொடரும்)