Skip to content
Home » ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #43 – பவழமும் வட்டி விவகாரமும்…

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #43 – பவழமும் வட்டி விவகாரமும்…

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு

பவழம், பிரெஞ்சு கம்பெனியின் முக்கிய வணிகங்களில் ஒன்றாகத் திகழ்ந்தது. பவழம் வாங்கிச் சென்ற வணிகர்கள் பலருக்கும் ஆனந்தரங்கர் ஜாமின் கொடுத்திருந்தார். அவர்களிடமிருந்து அசல் மற்றும் வட்டி வசூல் செய்து கொடுப்பது இவர் பொறுப்பு. பலர் முறையாக வட்டி செலுத்தினர்; சிலர் ஏமாற்றினர். இன்னும் சிலர் வணிகத்தில் நொடித்துப் போயினர்; அல்லது மரித்துப் போயினர். ஆனாலும் இந்த வட்டி சம்மதி (விவகாரம்) எல்லாம் பிள்ளையின் தலையிலே விடிந்தது. இந்த விவகாரத்தில் இவர் ஆதாயம் அடைந்ததாகவும் மறைமுகக் குற்றச்சாட்டும் எழுந்தது.

ஒரு கட்டத்தில் இவர் செலுத்த வேண்டிய வட்டித் தொகை ஆறாயிரத்து நானூறு வராகனுக்கு ஆயிற்று. இதை, கம்பெனிக்குப் பிள்ளை செலுத்தியாக வேண்டும் எனும் நிர்ப்பந்தம் ஏற்பட்டது. ஆனாலும் அதிகாரிகளிடம் இதுபற்றிப் பேசிய ஆனந்தரங்கர், பவழம் விற்பனையின் மூலம் கிடைக்கப்பெற்ற அசல் தொகை ஐயாயிரத்தை வாங்கிக் கொடுத்திருக்கிறேன். இப்போது வட்டி செலுத்த வேண்டும், செத்துப் போனவர்கள், கெட்டுப் போனவர்கள் கணக்கில் இருப்பதை எல்லாம் நான்தான் செலுத்த வேண்டும் என்று சொன்னால், என்னால் நிர்வாகம் பண்ண முடியாது என்று வாதாடினார்.

இது தொடர்பாக ஆளுநர் துய்மாவை இரண்டொரு முறை தனியே சந்தித்துப் பேசினார். ஆளுநரோ, ‘ஒரு மாதத்திற்கு முன்பே என்னிடம் சொல்லியிருந்தால் இவ்விவகாரத்தைத் தீர்த்திருப்பேன்’ என்றார். வட்டி விவகாரத்தில் இருந்து விடுதலை பெற ஆளுநர் ஒருவரையே முழுமுற்றும் நம்பினார் ஆனந்தரங்கர். ‘தேவரீர் உங்கள் கிருபை வேண்டும்’ எனப் பலமுறை அவரிடம் இறைஞ்சுகிறார். இறுதியில் இவ்விவகாரம் குறித்து கவுன்சில் கூடி விவாதிக்கிறது. இதில் ஆனந்தரங்கர் மீதான பவழ வட்டி விவகாரத்தைத் தீர்த்து (அவரை விடுவித்து) கவுன்சில் முடிவு செய்தது. கவுன்சில் கூட்டம் முடிந்து வெளியே வந்த முசே கோலார் ஆனந்தரங்கரைக் கிட்ட அழைத்து, ‘நீ கொஞ்ச ஆதாயத்தைப் பார்க்கப் போய் அய்யாயிரம் ஆராயிரம் வராகன் மட்டுக்கும் சேதம் வந்ததே’ என்று சொல்லிவிட்டுச் சென்றது குறிப்பிடத்தக்கது.

கவுன்சிலின் முடிவு ஆனந்தரங்கருக்கு மகிழ்ச்சியைத் தந்தது. இதற்காக ஆளுநர் மற்றும் கவுன்சில் உறுப்பினர்களை நேரில் சந்தித்து நன்றி செலுத்தினார் ஆனந்தரங்கப்பிள்ளை. ஆனாலும், ‘சர்வஜீவ தயாபரனாய் ஆண்டவருடைய கிருபையினாலே அனுகூலமானதே அல்லாமல் மனுஷ எத்தனத்துக்குள்ளே ஆனதல்ல. சுவாமியினுடைய கிருபை எந்த மட்டுக்கும் இவன் பேரில் இருக்குதோ அந்த மட்டுக்கும் மனுஷரைத் தொட்டு வரப்பட்ட விஷகாதம் ஒண்ணும் செய்ய மாட்டாது’ என்பதே ஆனந்தரங்கரின் இறுதி நம்பிக்கையாக இருந்தது!

நாட்குறிப்பின் இப்பகுதியை வாசிக்கும் புதுச்சேரி வாசிகளுக்கு அங்கிருக்கும் பவழக்காரன் சாவடி சட்டென நினைவுக்கு வருவது ஆச்சரியமல்ல!

அற்பிசி 24 1738 நவம்பர் 6 வியாழக்கிழமை

அம்மையப்பன் பாச்சக்கடை தேசத்தாருக்கு கோட்டையிலே பவழம் நிறுத்துகிறபோது கனகராய முதலியார் முசே துலார்ழடனே பவழம் சரக்கு முன் வாங்கியிருந்தீர்களே அந்த வராகனெல்லாம் சாடாவாய் கொடுத்துத் தீர்த்துப் போட்டு அவர்கள் சீட்டும் வாங்கிச் சென்றார்கள் என்று சொல்ல அவர்களின் பேரில் எப்போது தீர்த்துப் போட்டார்கள்? அதுக்கு வட்டி கூட கொடுத்தார்கள் என்று கேட்க வட்டி கொடுக்கயில்லை என்று முசே துலார்ழ சொல்லாவிட்டால் என்ன கூடுமென்று கேட்கிறேன். திரள் பணம் கூடுமென்று சொல்ல அதின் பேரிலே வட்டி வாங்காமல் விட கவையில்லை என்று சொல்ல அதற்கு அவர் என்னுடைய வேலையில்லை. அது முசே பிலவர்னுடைய வேலையென்று பயந்தான் போல் சொன்னார். அதைக் கேட்டுப்போட்டு இவன் துரையண்டையிலே போய் சொன்னான். முசே துலார்ழ – என்னுடனே இப்படி கனகராயமுதலி என்னைக் கேட்டான். அதுக்கு நான் இப்படிச் சொன்னேன் என்று மேலே எழுதியிருந்தபடிக்குச் சொன்னான்.

அதுக்கு நான் இருந்து கொண்டு முன் இரண்டு தெண்டகம் முசே லெனுவார் நாளையிலே நான் கொடுத்ததில்லை. அந்தக் கணக்கு வேண்டுமானால் நீங்கள் பார்க்கலாம். இந்தப் பவழம் வாங்கிக் கொடுத்ததுக்கு கஷ்டகாலமானபடியாலே அய்யாயிரம் 5000 வராகன் மட்டுக்கும் பவழக்காரர்கள் செலுத்தாமல் போனாலும் கும்பினியாருக்கு நான் – அசலிலே கடன் வாங்கிக் கொடுத்தேன். அப்படி இருக்க என்னை வட்டி கேட்கிறது என்ன ஞாயமென்று பின்னையும் அநேகவிதமானபடி தெரியச்சொல்ல வேணுமோ அப்படியெல்லாம் தெரியச் சொன்னேன். அதன் பேரிலே முசே துலார்ழ இருந்து கொண்டு நான் துரையுடனே சொல்லட்டுமா என்று கேட்டான். நானிருந்து யோசனை பண்ணி கனகராயமுதலி ஒருவேளை சொல்லுவானோ சொல்ல மாட்டானோ தெரியாதே. அப்படியிருக்க இவனைக் கேட்கச் சொன்னதினால் நாம்தானே மறந்து போனவனை ஞாபகம் பண்ணுகிறாப்போல் காணும் என்று யோசனை பண்ணிக்கொண்டு துரை அவர்களைக் கேட்டால் நீ அதுக்குத் தக்கதாப்போலே சொல்லும். அவன் எச்சரிக்காவிட்டால் நீ எச்சரிக்கத் தேவையில்லையென்று சொன்னேன். அதுக்கு அவரும் நல்லதுதானென்று சொன்னார்.

அதன் பிற்பாடு முசே துலார்ழ இருந்துகொண்டு உனக்கு கனகராயமுதலிக்கு இத்தினத்திலே பவழம் வருவானென்று கேட்க அதற்கு நானிருந்துகொண்டு அவருக்கு நாங்கள் எத்தனை மனது வர நடந்தாலும் அவர் முன் முசே எபெர் நாளையிலே எங்கள் பேரிலே அனியாயமாய் மார்ச்சரியம் அடைந்து வச்சு அநேகம் காரியங்கள் நடப்பிச்சாரே அதை நீங்களும் அறிந்து இருப்பீர்களே. அந்த வயிரம் இப்போதும் பாராட்டி வருகிறாரென்று சொன்னேன். அதுக்கு அவரும் மெய்தானென்று சொன்னார். அதன் பிற்பாடு அவர் கையிலே அனுப்பிவிச்சுக் கொண்டு வீட்டுக்கு வந்துவிட்டேன்.

காளயுக்தி கார்த்திகை 12 1738 நவம்பர் 24 திங்கட்கிழமை

காலமே எட்டுமணிக்கு இப்போது குவர்னராயிருக்கிற முசே மொலந்தேன் வீட்டிலே நான் போயிருக்கச்சே காப்பி குடிக்கத்தக்கதாக கோன்செல்காரரும் மற்றுமுள்ள வெள்ளைக்காரரும் எல்லோரும் கூடியிருக்கச்சே முசே துலார்ழ கோட்டையிலே இருந்து வந்து பல்லக்கு விட்டிறங்கி கோன் சேல்ஸ் அறைக்குப் போகிறவன் என்னை அழைத்துப் பவழக் கணக்கு வட்டி போடச் சொல்லி குவர்னர் துரை உத்தாரங் கொடுத்தார். அவருக்கு நானும் தெரியப்படச் சொன்னேன். அதற்கு அவர் பவழக்காரன் கையிலே இவன் வட்டி வாங்கியிருக்க வட்டி விடக் காரியமென்ன என்று சொன்னார். ஆனபடியினாலே நீ அவரை சீக்கிறமத்துக்குப் போய் கண்டு பேச வேண்டும். அதற்கு எப்படி பக்குவப்படச் சொல்ல வேணுமோ அப்படி பக்குவப்படச் சொல்லு என்று சொல்லிப் போட்டு கோன்சேல் அறைக்குப் போனார். அப்போது என் மனதுக்குள்ளே தோன்றின விசாரத்தை கடுதாசியில் எழுதி முடியாது.

அதன் பிற்பாடு துரை அவர்கள் தனிமையாகக் கண்டு பேச வேண்டுமென்று யோசனை பண்ணி இவ்விடத்திலே இருந்தோமானால் இவர்கள் கோன்சேல் கூடியிருக்குமட்டும் இந்தப் பிரஸ்தாபம் ஒருவேளை நடந்தாலும் நடக்கும். நாமேன் இங்கே யிருக்க வேண்டும் என்று துரை வீட்டுக்கு போகிற மட்டும் சாராய கிடங்குக்குப் போய் அங்கேயிருந்து துரை வீட்டுக்கு வந்த பிற்பாடு அவரைக்கண்டு பேச வேண்டுமென்று போனேன். அவரும் அவர் கணக்கு எழுதுகிற கபினெத்திலே யிருந்தார். அப்போது அவர் சொந்தக் கணக்குப் பார்த்து நிலுவையிட்டுக்கொண்ட கணக்கைக் கையில் வைத்துக் கொண்டு அவர் எழுதுகிற கபினெத்துக்குள்ளே போய் ஆசாரம் பண்ணினேன்.

அதுக்கு அவர் என்ன கவையாய் வந்தீர் என்று கேட்டார். அதற்கு நானிருந்து கொண்டு உம்முடனே சொந்த கணக்கு உடனே சேர்த்து தீர்த்து நிலுவையிட்டுக் கொண்டேன் என்று சொன்னேன். அந்தக் கணக்கு நானும் பார்த்தேன், கணக்குச் சரியாயென்று கேட்டான். கணக்கு சரிதான் என்று சொன்னேன். அய்யா தேவரீர் முசே பில்லானை அழைத்து வட்டிப்போடச் சொல்லி சொன்னீராம். நீர் அந்தப்படிக்குப் போடச்சொன்னால் என்னாலே நிருவாகம் பண்ண மாட்டேன். ஏனென்றால் இந்தப் பவழக்காரருக்கு வாங்கிக் கொடுக்கிறத்திலே விசேஷித்த பிரயோசனம் இல்லை. கும்பினீர் சரக்கு விற்கவேண்டுமென்கிறதை குறிச்சு இந்தக் கொஞ்சப் பிரயோசனத்துக்காக வெகு பணத்துக்கு மேல் வாங்கிக் கொண்டு இதனாலே எனக்கு வெகு பணம் கஷ்டம் வந்திருக்குது. இப்போது கும்பினீருக்கு கொடுக்க வேண்டிய பணமெல்லாம் அசலிலே வட்டிக்கு வாங்கிக் கொடுத்து விட்டேன். அவர்கள் எனக்கு முதலிலே வராகன் மட்டும் கொடுக்க வேணும். இதல்லாமல் செத்துப் போனவர்கள் கெட்டுப்போனவர்கள் பேரிலே அய்யாயிரம் 5000 வராகன் மட்டும் வரவேணும்.

இப்படியெல்லாம் மிகுதியும் நஷ்டம் வந்திருக்க இதல்லாமல் முன் இரண்டு தெண்டகம் முன் லெனுவார் நாளையிலே கணக்கு தீர்த்துப் போட்டு இருக்கிறேன். நான் வட்டி கொடுத்ததில்லை. அப்படியிருக்க இப்போது தேவரீர் கொடுக்கச் சொன்னால் நான் எங்கேயிருந்து கொடுக்கப் போகிறேன். மெத்த நஷ்டப்பட்டுப் போவேன். தேவரீர் அவர்கள் வட்டிக் கொடுக்கச் சொல்லி சொல்லுவீர்கள் என்று கண்டால் நான் இந்த பவழச் சம்மதிக்கு மேல் வாங்கிக் கொள்ளுகிறதில்லை. எனக்கு பதினாயிரம் ஞாயம் இருந்தாலும் தேவரீரவர்கள் சொல்லுகிற உத்திரவுக்கு என்னாலே ஞாயம் சொல்ல மாட்டேன். நீர் தயவு பண்ண வேண்டுமென்று மிகுதியும் வருந்தி அநேகவிதமாய்ச் சொன்னேன்.

அதற்கு துரை அவர்கள் என் பேரிலே மிகுந்த ஓய்வுப்பண்ணிச் சொன்ன தென்னவென்றால் இந்த வட்டி உன்னைச் சேரும் என்று அறிந்தால் நான் இந்த பிரசங்கமே எடுக்கிறதில்லை. பவழக்காரருக்குக் கொடுக்கிறது என்று கேள்விப்பட்டேன். நீயாகிலும் ஒரு மித்தைக்கு முன்னே சொன்னால் இந்தப் பேச்சு நடவாதபடிக்கு மார்க்கம் பண்ணிப்போடுவேனே. இப்போது கோன்சேலிலே இந்தப் பேச்சைப் பிரஸ்தாபம் பண்ணிப்போட்டேன். இனிமேல் ரொம்ப பிரயாசையாயிருக்கும் என்று சொன்னார்.

அதற்கு நானிருந்து கொண்டு தேவரீர் எப்பொழுதும் கணக்குப் பார்த்துக் கொண்டிருக்கிறதாச்சுதே முன் இரண்டு தெண்டகம் நான் கொடுத்ததில்லையே. அந்தக் கணக்கிலே விசதமாய்த் தெரிந்திருக்குமே சொல்ல வேண்டியதென்ன என்று சொன்னேன். அதுக்கு அவர் நீர் கணக்கில் தீர்த்து எழுதியிருக்கிறதென்று சொல்லுகிறீர். ஆனால் கணக்கிலே அப்படி தீர்த்து இருக்கயில்லை. கணக்குப் பார்த்தால் எப்போதும் உன் பேரிலே சிமைத் துலையாயிருக்கிறது. முன் துரைத்தனம் பண்ணவர்கள் அப்படித் தீர்த்து எழுதி வைக்கயில்லையே என்றும் அந்த வட்டிகூட உன் பேரிலே கணக்கு எழுதியிருக்கிறதென்றும் இப்படியாகச் சொல்லி வந்தான்.

அதுக்கு நான் அதெல்லாம் நான் அறிவேன். அந்தந்த தடவைக்கு உண்டான பணம் உண்டானது செலுத்திப்போட்டு என் சீட்டும் வாங்கிக்கொண்டேன். நான் சொல்ல வேண்டியிருக்கிறது என்ன இருக்கிறது. நீர் தயவுபண்ணித்தீர வேண்டும் என்றும் மிகுதியும் வருந்திக்கொண்டு சொன்ன விதத்திலே நீர் ஒரு மாசத்திற்கு முன்னே சொன்னால் ஒரு பிரயாசையுமில்லை. இப்போது எனக்கு ரொம்ப பிரயாசை இருக்கிறது என்று சொன்னார். நீர் பிரயாசப்பட்ட நன்றி நான் மறக்கிறதில்லை. அதறிந்து நடந்துகொள்ளுவேன் என்று மிகுதியும் வருந்திச் சொன்னேன். அதுக்கு நான் கோன்சேயிலே நேராய்த் தானே தீர்த்துப் போடுகிறேன். நீர் ஒன்றும் யோசனை பண்ண வேண்டாம் என்று சொன்னார். அதுக்கு உம்முடைய தயவு இருக்கச்சே சிந்தையென்ன இருக்கிறது என்று பின்னையும் உபசாரமாய்ச் சொல்லிப்போட்டு வந்துவிட்டேன்.

காளயுக்தி கார்த்திகை 13 1738 நவம்பர் 25 செவ்வாய்க்கிழமை

காலமே சூரிய உதயவேளைக்கு முன்னே குவர்னர் துரை வீட்டுக்குப் போனேன். அவர் நித்திரை வேளை ஆனபடியினாலே வெளியே இருந்து அவர் எழுந்திருந்தவுடனே வீட்டுக்கு மேலே போய் அவர் கபினெத்திலே யிருக்கச் செய்கையிலே கொண்டுபோன பிராஞ்சை மேசைமேல் வைத்து உபசரணையான வார்த்தை சொன்னேன். அதற்கு அவரிருந்து கொண்டு இந்தக் காரியமானதின் பிறகு அப்படியே கைக்கொள்ளுகிறேன். இப்போது உன் வசத்திலே இருக்கட்டும். ஆனால் நீர் ஒரு மாசத்திற்கு முன்னே சொன்னால் எனக்குப் பிரயாசை இல்லை. கோன்சேயிலே உனக்கு யார் சிநேகிதம். முசே தீருவார் உடனே போய் நீர் தெரியப்படச் சொல்லிக்கொள்ளும் நானும் கோன்சேலிலே நேராய் உனக்கு பளுவில்லாமல் தீர்த்துப் போடுகிறேன் என்று சொன்னார்.

அதுக்கு நான் முசே தீருவார் அவர்களுக்கும் எனக்கும் சிநேகம் என்று சொன்னால் இவர் மனத்திலே என்னமாய்த் தோத்துமோவென்று யோசனை பண்ணி முசே தீருவார்க்கும் எனக்கும் சிநேகம் இல்லை. அவர் வீட்டுக்கு ஒருகாலும் போனதில்லை. அப்படியிருக்க இது முன்னிலையாய்ப் போனால் அவர் என்ன சொல்லுவாரோ தெரியாது. முசேதுலார்ழ்க்கும் முசே கோலாருக்கும் எனக்கும் கொஞ்சநஞ்சம் சிநேகமுண்டு. அவர்களுக்கு வேணுமென்றால் போய் சொல்லிக்கொள்ளுகிறேன் என்று சொல்லி அவர்கள் தொட்டு காரியம் என்ன இருக்கிறது. தேவரீரவர்கள் கிருபை பண்ண வேண்டுமென்றும் காரியம் ஆக வேண்டும் என்று சொன்னதுக்கு அவரிருந்து கொண்டு நல்லது நீர் ஆலோசித்துக் கொண்டு வந்த பிரசாஞ்சை தேவாள் காப்பாற்ற வேண்டும் என்று ரொம்பவும் வருந்தி சொன்ன விதத்தில் அவர் முகத்தை கடுகடுத்துக் கொண்டு கோபமாய் நீர் இந்த பிரசாஞ்சை கொண்டு போகாவிட்டால் உம்முடைய காரியம் நான் அனுகூலம் பண்ணிக் கொடுக்கிறதில்லை என்று சுருக்காய் சொன்ன மாத்திரத்திலே ஆனால் உம்முடைய அடிமையாய் இருக்கிற என் பேரிலே கிருபை பண்ணிக்காட்டி நடப்பிக்கிற காரியம் பாரம் உம்மது என்று பின்னையும் அநேக விதமாய் உபசாரம் எப்படிச் சொல்ல வேணுமோ அந்தப்படி எனக்குத் தோத்தினபடிக்குச் சொல்லிப்போட்டு வைத்து வந்துவிட்டேன். இப்புறம் வந்து நான் யோசனை பண்ணினதும் எனக்குத் தோற்றின தென்னவென்றால் வட்டித்தொகை விவரம் விஸ்தாரமாச்சுதே நாம் கொண்டுபோன gift (பிரசாஞ்சு) கொஞ்சம் என்று காரியத்திலே நம்முடைய பிரயாசையைக் காண்பித்து அதனால் விஸ்தாரமாய் வரப்பெறலாம் என்று யோசனை பண்ணினாப்போலே காணுது என்று தோன்றினது.

1738 நவம்பர் 27 கார்த்திகை 15 வியாழக்கிழமை

குவர்னர் முசே தும்மா அவர்கள் கோன்சேல் வீட்டிலே யிருந்து வீட்டுக்கு அவர் போகச்சே ரங்கப்பா வா, கண்டு பேசவேண்டியிருக்கிறது என்று சொல்லிப் போட்டு வீட்டுக்குப் போனார். நானும் அவர் பிறகே தானே வீட்டுக்குப் போனேன். அவர் கபினெத்திலே போய் என்னை அழைத்து பவழத்துக்கு வட்டிப் போட்டுப் பார்த்தாயா என்ன கூடுமென்று கேட்டார். அதற்கு நான் அய்யா வட்டிபோட்டுப் பார்த்ததில் நான் பார்க்க வேண்டியது என்னயிருக்கிறது நீர் தயவு பண்ண வேணும் என்று சொன்னேன். அதுக்கு அவர் முசே பிலவான் எழுதி வந்த வட்டி கணக்குப் பாரென்று சொல்லி அந்தக் கணக்கு எடுத்து காண்பித்து இந்த நாற்பத்து எட்டு பெட்டி சம்மதிக்கு மாத்திரம் கூடின வட்டி மூவாயிரத்து எழுநூற்றி மூன்றே சில்லரை வராகன். இதல்லாமல் முன் இரண்டு தெண்டகம் சம்மதி இரண்டாயிரத்து அறுநூற்று சில்லரை ஆக ஆராயிரத்து நானூத்தி சில்லரையாகிறது. வெகு பணம் கொடுத்தது என்று சொல்லலானார்.

அதற்கு நானிருந்து கொண்டு வட்டி சம்மதியைப் பார்த்தீர்களே யல்லாமல் எனக்கு முதல் பணத்திலே வெகு தாட்சி வந்து இருக்கிறது என்று உபசாரமாய் எப்படிச் சொல்ல வேணுமோ அந்த மார்க்கமெல்லாமும் சொல்லி ஆசைவார்த்தை யுடையவாறு சாடையுஞ் சொன்னேன். அதற்கு அவரிருந்து கொண்டு இது உன்னை அடைகிறதென்று ஒரு மீத்துக்கு முன்னே சொன்னால் இத்தனைப் பிரயாசம் எனக்கில்லை. ஆனால், இனிமேல் எனக்கு ரொம்ப பிரயாசம். ஆனால் உன் நிமித்தம் எப்படியும் காரியம் அனுகூலம் பண்ணித் தருகிறேன். நீர் ஒன்றுக்கும் சிந்தனை பண்ண வேண்டாம். வீட்டுக்குப் போ வென்று சொன்னார். அதின் பேரில் அவருக்கு மிகுந்த உபசரணையான வார்த்தைகள் சொல்லி அனுப்பி வைத்துக்கொண்டு வந்துவிட்டேன். ஞாயம் சொல்லாமல் பிரிய வசனம் சொன்னது எது நிமித்தியம் என்றால் அவர் கொடுக்க வேணும் எது நிமித்தியம் விட்டுவிடச் சொல்லுவீர் என்று அவர் சொல்லச்சே நாம் என்ன ஞாயம் சொல்ல வேணும் என்று சொல்லவில்லை. மூன்று நாளைக்கு முன்பாக கோட்டையிலே பிளவ பார்க்கச்சே முசே கோலார் என்னைப் பார்த்து உன் முகத்தைப் பார்த்தால் நீர் பவழ சம்மதி வட்டி சொல்லி நிமித்தியம் மனதிலே விசாரம் தோத்தியிருக்கிற சாடையாய் காணுது என்று நகைச்சு சொன்னதுக்கு நானிருந்து கொண்டு என் சம்பாத்தியம் என்ன? என் செலவென்ன? இந்தக் காரியத்துக்கு வட்டிக்குச் சொன்னால் நானெப்படி கொடுக்கப்பட்டுள்ளது என்று பவழக்காரர்களுக்கு வாங்கிக் கொடுக்கிறதிலே வருகிற பிரயோசனமும் அதினால் வந்திருக்கிற நஷ்டமும் இதுகளெல்லாம் விசதப்படச் சொல்லிவைக்க வேண்டுமென்று உம்முடைய வளவுக்கு நேத்தும் வந்தேன். நீர் இல்லாமல் போனீர். துரைக்கு எந்த வீதம் தெரியப்படச் சொல்ல வேணுமோ அப்படிச் சொல்ல வேணுமென்று சொன்னதுக்கு நல்லதென்று சொன்னான்.

1738 நவம்பர் 29 கார்த்திகை 17 சனிக்கிழமை

காலமே நான் முசே எலியாசு வீட்டுக்குப் போய் அவருடனே பேசியிருக்கச்சே கும்பனி சேவகன் வந்து கோன்சேல் கூடியிருக்கிறார்கள் துரை உங்களை அழைத்துக்கொண்டு வரச்சொன்னார் என்று சொன்னான். அதின் பேரிலே முசே எலியாசு கையிலே அனுப்பி வைத்துக்கொண்டு கோன்சேல் வீட்டுக்கு வந்த யிடத்தில் அங்கே கனகராய முதலி, சேஷாசல செட்டி, வாசுதேவ பண்டிதர், மேலுகிரி பண்டிதர் பிறகும் அநேகம் பேர் வர்த்தகர் துபாசிகள் இருந்தார்கள். நான் கோன்சேல் வீட்டுக்குள்ளே போக வேணுமென்று வாசல் படியிலே போய் முசே கோலாருக்கு சைகை காண்பித்தேன். அவர் வெளியிலே இருக்கச் சொல்லி சாடை சொன்னார். அதின் பேரிலே சாலையிலே வாசுதேவ பண்டிதருடனே கூட உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கச்சே கோன்சேல் வீட்டிலே யிருந்து முசே பொலோ வெளியே புறப்பட்டு என்னை கோன்சேல் வீட்டுக்குள்ளே போகச் சொல்லி சொன்னான். நானும் கோன்சேல் வீட்டுக்குள்ளே போய் துரையவர்களுக்கு ஆசாரம் பண்ணி நின்றேன்.

அப்போது துரையவர்கள் என்னை கிட்ட வரச்சொல்லி ரங்கப்பா உன் பேரிலே முசே பிலவுவான் மூவாயிரத்து எழுநூத்து சில வாணம் வராகன் வர வேணுமென்று கணக்கெழுதிக் கொண்டு வந்து கொடுத்திருக்கிறான் என்று சொன்னார். அதற்கு நானிருந்து கொண்டு நான் கொடுக்க வேண்டியதில்லை. எந்தச் சம்மதி என்று கேட்டேன். அதுக்கு அவரிருந்து கொண்டு 1734 வருஷத்தில் நாற்பத்தெட்டு பவழப் பெட்டி வாங்கின சம்மதிக்கு கெடுவு போக நின்ற நாளுக்கு வட்டி வர வேண்டியதென்று சொன்னார். அதற்கு நான் அய்யா பவழ சம்மதி வட்டி கொடுக்க மாட்டேன். இதற்குக் கும்பினிக்கு பெரிய காரியமல்ல. நான் பவழச் சரக்குக்கு நான் பிணை இருந்ததற்கு நாலாயிரம் அய்யாயிரம் வராகன் மட்டுக்கும் முழுகிப்போனது மல்லாமல் சிறிதுபேர் மானுஷமாய் செலுத்த தவறினவர்கள் பேரிலே மூவாயிரம் வராகன் மட்டுக்கும் வரவேணும். அதற்குக் கணக்கும் தஸ்தாவேசுகள் சீட்டுகள் எல்லாம் இருக்கிறதென்று சொல்லி இப்படி யெல்லாம் இருந்தாலும் உங்களுக்குக் கொடுக்க வேண்டிய பணம் வைக்கிறது நியாயமல்லவென்று, பிரத்தியிலே வட்டிக்கு வாங்கி உங்களுக்குச் சம்மதி பண்ணித் தீர்த்துப் போட்டேன். இதல்லாமல் பவழக்காரர் செலுத்துகிறது நாற்பதும் அன்பதும் பத்தும் அஞ்சும் இப்படியெல்லாம் கொண்டு வந்து செலுத்துகிறது. இதையெல்லாம் சேர்ப்பித்து உங்களுக்கு வகுப்பு வகுப்பாய் செலுத்துகிறது. இதல்லாமல் உங்களுக்குச் சரக்கு செலவழிக்கிறதுக்கு பிரயாசமாயிருக்கிறது. இப்படியெல்லாமிருக்கிறது. இதல்லாமல் முன் இரண்டு தெண்டகம் நான் வட்டி சேர்த்து செலுத்தியிருக்கிறேனா. நான் வட்டி கொடுத்ததில்லை. அந்தக் கணக்கும் நீங்கள் பாருங்கள். இப்படியெல்லாம் இருக்கச்சே என்னை வட்டி கொடுக்கச் சொல்லுகிறது ஞாயமில்லை ஆனதினாலும் நான் மெத்த நஷ்டமிட்டுப் போனேனே என்றும் இப்படியெல்லாம் சொல்லி ஆசாரமாயிங்கு அது விசேஷம் சொல்லி நீங்கள் தயவுபண்ண வேண்டுமென்று சொன்னேன்.

அதுக்கு துரையவர்கள் யிருந்து கொண்டு அதைத்தொட்டு எங்களுக்கு கவை என்ன. நீர் பின்னைச் சொன்ன மட்டுக்கும் எங்களுக்கு உம்முடைய கையிலே வாங்குகிறதே ஞாயம். நாங்கள் எதிர் வட்டி பவழத்திற்கு கூட்டி கொடுக்க யில்லையா? ஆனபடியால் நீயும் கொடுக்க வேணும் என்று சொன்னார். நீங்கள் ஓத ஞாயமில்லை தயவுபண்ண வேண்டுமென்று சொன்னேன். நாங்கள் ஆலோசனை பண்ண வேண்டும் நீர் அப்புறத்திலே போயிருக்க வேண்டுமென்று சொன்னார்கள். ஆசாரம் பண்ணிப்போட்டு கோன்சேல் வீடுவிட்டு வெளியே வந்து வாசுதேவ பண்டிதருடனே சாலையிலே பேசிக்கொண்டிருந்தேன். முன் எழுதப்பட்ட துபாசிகள் வர்த்தகர் சமஸ்தமான பேரும் இருந்தார்கள். அப்போது கோன்சேல் கலைஞ்சு வெளியே வந்தார்கள். சின்ன துரை அவர்களை மாத்திரம் முன்னே வீட்டுக்குப் போய்விட்டார்.

பெரிய துரையவர்களும் முன்னேயும் இவர் பிறகே முசே துலார்ழ முசே கோலாரும் முசே மீரானும் முசே எங்குராழும் கோன்சேல் விட்டு விட்டு சாலைக்கு வந்தார்கள். முன் சொல்லப்பட்ட துபாசிகள் உத்தியோகஸ்தர் வர்த்தகர் சகலமான பேரும் நானும் நின்று துரை அவர்களுக்கும் மற்ற கோன்சேல்லியவர்களுக்கும் ஆசாரம் பண்ணினோம். துரை அவர்கள் கனகராய முதலியை கபுறு கேட்க நடுச்சாலை வாசல்படியே போனார். பிறகே வந்த முசே கோலாரும் முசே துலோராமும் என்னைப் பார்த்து நகைச்சார்கள். அதிலே முசே கோலார் என்னைப் பார்த்து கை சைகையாய் உன்னைக் கொடுக்கச் சொல்லித் தீர்த்தோம் என்கிற சாடை காண்பித்தான். அதைப்பார்த்து முசே துலோர்ழம் முசே கோலார் பரியாசம் பண்ணுகிறான். அதை நீ மனதிலே எண்ண வேண்டாம் சந்தோஷமாய்த் தானே இரு என்று சொல்லி இவர்கள் துரையவர்கள் வீட்டைப் போன பிறகு சொல்லுவோமென்று நின்றார்கள். துரையவர்கள் வீட்டுக்குப் போகிறதுக்குப் பின்னையும் நாலு இரண்டு நாழிகை செல்லுமென்கிற சாடையாயிருக்கிறதினாலே நான்கூட நிற்கச்சே முசே துலார்ழம் முசே கோலாரைப் பார்த்து எனக்கு கவையிருக்கிறது ஆனபடியினாலே நான் போகிறேன். ரங்கப்பனுக்கு சந்தோஷ கபுறு சொல்லென்று சொல்லிப் போட்டு முசே துலார்ழம் வீட்டுக்குப் போனார். எனக்கு சாடை தெரிந்தது. பவழச் சம்மதி வட்டி கவையில்லை யென்று தீர்த்தார்கள் என்கிறது எனக்குச் சந்தேகமில்லை யென்று தோன்றி நான் சந்தோஷமடைந்தேன். இந்தச் சாடையெல்லாம் கனகராய முதலியும் பார்த்துக் கொண்டிருந்தான். ஆனாலும் நன்றாய் தெரியாது. அதன் பேரிலே துரையவர்கள் வீட்டுக்குப் போனார்.

அப்பொழுது முசே கோலார் என்னை கிட்ட அழைத்து நீ கொஞ்ச ஆதாயத்தைப் பார்க்கப் போய் அய்யாயிரம் ஆராயிரம் வராகன் மட்டுக்கும் சேதம் வந்ததே. குவர்னர் துரையிடம் நான் மிகவும் அடிச்சுவிட்டுப் பேசினேன். கடைசியிலே ஒன்று விட்டுவிட்டேன் என்று குவர்னர் துரை சொன்னார். இனிமேல் அப்படியே குரோஸ்ம் உன்னுடைய காரியங்கள் வந்தால் நான் பேசுகிறதில்லை யென்று சொன்னான். நானும் அய்யா இனிமேல் அப்படிப்பட்ட சோலிகளுக்குப் போகிறதில்லை. எல்லாம் நீர் நிர்வாகம் பண்ணினீர். உம்மைப் போலே நிர்வாகம் இப்ப நடக்கத்தக்க பேர் யார் இருக்கிறார்கள் என்று பின்னையும் சிறிது உபசாரமான வார்த்தையாக சொல்லிப்போட்டு அவனை அனுப்பிவிச்சுக் கொண்டு குவர்னர் துரை அவர்கள் வீட்டுக்கு வந்து அவர் காம்பியா விலே தனிச்சு இருக்கச்சே போய் ஆசாரம் பண்ணினேன்.

அதுக்கு அவர் போம் சூர-ரங்கப்பா என்று சொன்ன மாத்திரத்திலே தேவரீரவர்கள் என் பேரிலே கிருபை வைத்து இந்தப் பவழ சம்மதி வட்டி தீர்த்த சம்மதிக்கு நான் உமக்கு நன்றி அறிந்து நடந்துகொள்ளப் போகிறேனோ நான் எவ்வளவு மனுஷன். என் பேரில் தயவுபண்ணி பவழ சம்மதி வட்டி கவையில்லாமல் தீர்த்துப் போட்டீர்கள் என்று சொன்னேன். அதுக்கு அவரிருந்து கொண்டு இப்படி கோன்சேல் அறிய தீர்ந்து போனால் எனக்கு என்றைக்கும் சங்கையில்லை என்றும் பின்னையும் அநேக விசேஷம் ஆதரித்த விசேஷங்கள் சொன்னார். அதற்கு நான் தேவரீர் பண்ணின உபசாரத்துக்கு நான் சொல்லத்தக்கதும் செய்யத் தக்கதும் ஒன்றையும் காணோம். நான் எப்போதும் உமக்கு அதிசய மேன்பாடும் கீர்த்தியும் ஆரோக்கியமும் ஆயுசும் நீடிச்சு வாழ வேணுமென்று பிரார்த்திக்கிறேன் என்று நன்றியறிந்த உபசரணை சொல்லி வீட்டுக்கு வந்து ஸ்னானம் பண்ணி சுகிதனாக இருந்தேன்.

மறுநாள் கோன்சேல் காரர் வீட்டுக்குப்போய் நன்றியறிந்த உபசரணை சொல்லி வந்தேன். மற்றப்படி இப்போது சத்துகள் விர்த்தியாயிருக்கிறதற்கு சர்வஜீவ தயாபரனாய் ஆண்டவருடைய கிருபையினாலே அனுகூலமானதே அல்லாமல் மனுஷ எத்தனத்துக்குள்ளே ஆனதல்ல. சுவாமியினுடைய கிருபை எந்த மட்டுக்கும் இவன் பேரில் இருக்குதோ அந்த மட்டுக்கும் மனுஷரைத் தொட்டு வரப்பட்ட விஷகாதம் ஒண்ணும் செய்ய மாட்டாது என்று விவேகாளா யிருக்கப்பட்டவர்கள் எண்ணுவார்கள்.

(தொடரும்)

பகிர:
கோ. செங்குட்டுவன்

கோ. செங்குட்டுவன்

விழுப்புரத்தில் பிறந்து வளர்ந்து வசித்து வருபவர். ஊடகத்துறையில் 20 ஆண்டுகாலம் செய்தியாளராகப் பணியாற்றியவர். கலை, இலக்கியம், பண்பாடு மற்றும் வரலாற்று அமைப்புகளில் பங்கேற்று இயங்கி வருபவர். 'சமணர் கழுவேற்றம்', 'கூவம் - அடையாறு - பக்கிங்காம்: சென்னையின் நீர்வழித்தடங்கள்' உள்ளிட்ட நூல்களை எழுதியிருக்கிறார். தொடர்புக்கு : ko.senguttuvan@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *