Skip to content
Home » ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #44 – அணிவகுத்த படையணிகள் கோட்டை கொத்தளங்கள்!

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #44 – அணிவகுத்த படையணிகள் கோட்டை கொத்தளங்கள்!

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு

விழுப்புரம், வழுதாவூர், விருத்தாசலம், திருவீதி (திருவதிகை), எலவனாசூர்கோட்டை, கோவளம், செங்கல்பட்டு உள்ளிட்ட இடங்களில் கோட்டை கொத்தளங்கள் இருந்ததை ஆனந்தரங்கர் நாட்குறிப்பின் வாயிலாக நம்மால் அறிய முடிகிறது. இங்கிலீஷ்காரர் வசமிருந்த கோட்டைகளைப் பிடிப்பதற்கான நடவடிக்கைகளை எல்லாம் விவரிக்கிறார் ஆனந்தரங்கர். பிரெஞ்சுக்காரர் வசம் கோட்டை வந்தடைந்த சேதியை எடுத்துவந்தவர்களுக்கு இனாம் வழங்கப்பட்டிருக்கிறது. திருவீதி கோட்டை விழுந்த தகவலை எடுத்துக்கொண்டு வந்த தகவலாளி இரவு பத்தரை மணிக்கு வந்திருக்கிறான். அந்நேரத்துக்கு ஆளுநருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, தூக்கத்தில் இருந்த அவர் எழுந்தார். மிகவும் சந்தோஷப்பட்ட ஆளுநர் தகவல் கொண்டு வந்தவனுக்கு அந்நேரத்தில் சாப்பாடு போட்டிருக்கிறார். மேலும், தன் கைப்பெட்டியிலே இருந்து 100 விராகன் பணத்தை எடுத்துக் கொடுத்ததோடு அல்லாமல், மூணு பாட்டில் சாராயமும் கொடுத்து அனுப்பி இருக்கிறார்.

ஒருமுறை ஹைதராபாத் நிசாம் ஆற்காடு வந்தார். அவருடன் அணிவகுத்து வந்தவர்கள் எழுபதினாயிரம் குதிரை மற்றும் யானைப்படை வீரர்கள். இவர்கள் ‘சமுத்திரம் பொங்கி வந்தாற்போலே வெகு ஆர்ப்பாட்டத்துடனே வந்தார்கள்’ என்கிறார் ஆனந்தரங்கர். ‘நிசாம் அவர்களுக்கு வயது 81. அவர் சரீரம் ஒல்லியாயிருக்கிறார். நல்ல சிகப்பு ரத்த வர்ணமாயிருக்கிறார்’ பிள்ளையின் வர்ணனை இது. நேரில் பார்க்கவில்லை. எழுதிவந்த சேதி தான். ஆனாலும் சலனப்படக் காட்சி போல் அனைத்தையும் நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார் ஆனந்தரங்கப்பிள்ளை.

ஆற்காடு

1743 பிப்ரவரி 21 மாசி 13 வியாழக்கிழமை

காலமே சாமத்து மேல் நிசாம் அவர்களும் அவர் பிள்ளைகளும் பந்து சனங்களுடன் பெரிய மனுஷர் உமறாக்களும் எழுபதினாயிரம் குதிரையனும் யானையுடனே கால் பலங்களும் கூட சமுத்திரம் பொங்கி வந்தாற்போலே வெகு ஆர்ப்பாட்டத்துடனே ஆற்காடு வந்து தாக்கலானார்கள். ஆனால் அதுகளுக்கு விபரம் வயணம் எழுதுகிறேன்.

நிசாம் அவர்களுக்கு வயது 81. அவர் சரீரம் ஒல்லியாயிருக்கிறார். நல்ல சிகப்பு ரத்த வர்ணமாயிருக்கிறார். அவருடைய குமாரன் மூத்த பிள்ளை நாசர்சங்கு. அவருக்கு வயது 30. அவருக்கு இளையவன் மகமது சயித்கான். அவருக்கு வயது 8. அவர்கள் இரண்டு பேர் அண்ணன் தம்பி. இரண்டு பேரும் ஒரு யானையின் பேரிலே ஒரு அவுதாவிலே கூட வருகிறதற்கு ஒரு டேராவிலேதானே இறங்கியிருக்கிறது.

இதல்லாமல் நவாபு மகனென்றும் சொல்லுகிறார்கள். அவர் பேர் சமாலத்தீனுகான். அவர் நிசாமவர்களுக்கு சரிசமானமாயிருக்கிறவராம். அவரும் வேறே ஒரு யானையின் பேரிலே நிசாமவர்களுடனே கூடத்தானே வருகிறதும் அவருடைய டேராவுக்கு அடுத்தாற்போலே சமீபத்திலே தானே இறங்கியிருக்கிறது. இதல்லாமல் கேவலம் ஆப்த பந்துக்களாயிருக்கிற உமறாக்கள் பெரிய மனுஷர் நாற்பது அவுதாக்காரர் நூறு பேரைக்கொண்டு கூட வரப்பட்டவர்கள்.

இதல்லாமல் பீரங்கிச் சாமான்கள் எடுத்துக்கொண்டு வருகிற யானையன் 200, மூட்டை முடிச்சுகள் எடுத்துக்கொண்டு வருகிற யானையன் 100, பின்னையும் சாமான்கள் எடுத்துக்கொண்டு வருகிற யானையன் 100, சபர்சங்குகளும் பீரங்கி தட்டுமுட்டுகளும் எடுத்துக்கொண்டு வருகிற யானையன் 100, நகாரா நகபத்து பின்னையும் வாத்தியங்களை எடுத்துக்கொண்டு வருகிற யானையன் 100. நிசாமவர்களுடைய சொந்த குதிரை 20,000. இதல்லாமல் நிசாமவர்கள் பிறகே வந்த சில்லரை சமேதராக் குதிரையன் 10,000. இதல்லாமல் நாற்பது அவுதாக்காரருக்கும் குதிரையன் 20,000. கடப்பை அப்துல் நபிகான் சாயபு அவருடைய பிள்ளையலும் கூட வந்திருக்கிறார்கள். அவர்களுடைய பேர் பத்தேமியா, படேமியா. அவர்களது 3000.

இதல்லாமல் பாளையக்காரர் அனுகொண்டவாரு, முனுகொண்டவாரு, பிராக்கட்டவூர்வாரு, நாடிக்கட்டவாரு, மயிசூரிவாரு, குடிநாடவாரு, சித்திரகண்டில்வாரு, சிருக்கேரிவாரு, கங்கேந்திரவாரு, ஆனைகொண்டிவாரு, யாச்சமன நாயனிவாரு, மட்டலவாரு, இங்கேவாரு, பொம்மராச்சவாரு, பின்னையும் சில்லரை பாளையக்காரர். இவர்களுடையதெல்லாம் 5000, 6000 குதிரையுண்டு. இதல்லாமல் பெண்டாரியன் கணக்கு வழக்கு ஒருமித்த எழுதப்போகாது.

இதல்லாமல் மறாட்டியரில் பெரிய மனுஷர். இவர்கள் பிறகே வந்தவர்கள் இராசா சந்திரசேன், இராசா நிம்பாலிசி யுதோசி என்கிற மராட்டியர். இவர்கள் 20,000 குதிரையுடனே திருப்பதிக்குப் போய் சுவாமி தரிசனம் பண்ணப் போனார்கள். இனிமேலவர்கள் திருப்பதியிலே யிருந்து காஞ்சிபுரத்து மார்க்கமாய் வருவார்களென்றும் சொல்லுகிறார்கள்.

இப்போ தண்டு வந்து இறங்கியிருக்கிறது பொன்னை முதல் வேலூர் கூட்டிக்கொண்டு காவேரிப்பாக்கம் ஏரிக்கரை மட்டுக்கும் வெகுதூரம் பாளையம் இறங்கியிருக்கிறதாம். இதல்லாமல் பதினைந்து இருபது நாள் ஆற்காட்டிலே யிருந்து அவர் குமாரன் நாசர்சங்குவை ஆற்காட்டிலே வைத்துவிட்டு நிசாம் அவர்களும் அவர்கள் பிறகே வரப்பட்ட குதிரை யானையன் சாமான்களுடனே திருச்சிராப்பள்ளிக்குப் போகிறார் என்று சொல்லுகிறார்கள். அவர்களிப்படி தெற்கே போகிறது எதினாலென்றால் திருச்சிராப்பள்ளியை வாங்கி மயிசூராருக்குப் கொடுத்துப் போகிறார்களென்று சொல்லுகிறார்கள். கானுபகதூர் பேட்டி பண்ணிக் கொண்டதாகவும் மற்றபேர் சகலமான பெரிய மனுஷரும் இவ்விடத்திலே இமாம் சாயபு அவர்கள் முகாந்திரமாய் நடக்கிறது. இனிமேல் என்ன நடக்குமோ தெரியாது. தண்டு பாளையம் இறங்கியிருக்கிறது பனிரெண்டு நாழிகை வழி சவுக்கமாய் இறங்கியிருக்கிறதாம். இப்படியாக ஆற்காட்டிலே யிருந்து எழுதி வந்தது.

வழுதாவூர் கோட்டை

1743 பிப்ரவரி 23 மாசி 15 சனிவாரம்

காலமே உதயத்துக்கு வழுதாவூர் கோட்டையிலே யிருந்த மீர்சத்து பாளையம் கூசசுப்பண்ணி பயணம் புறப்பட்டு நிசாமவர்கள் பேட்டிக்கு ஆற்காட்டுக்குப் போனார்.

1752 ஆகொஸ்து 5 ஆடி 25 சனிவாரம்

யித்தனாள் வெள்ளைக்காற சொலுதாதுகள் முன்னூறும் சட்டைக்காறர்கள் நூறு சிப்பாய்கள் துப்பாக்கிக்காறர்கள் அறுநூறு பேர்களும் யிதுகளுக்கு கொம்மாந்தாம் கெர்ஷாமும் யிந்தப்படிக்கு திட்டம் பண்ணி சொலுதாதுகள் வகையிரா யெல்லாரும் யித்தனாள் பிறப்பட்டு செஞ்சிக்குப் போகத்தக்கதாகப் பயணம் பிறப்பட்டு நாலு பெரிய பீரங்கியும் குண்டு மருந்து வகையிரா சிப்பாயிகள் வகையிரா சாமானுகள் பிடி பிடிச்சுக் கொண்டு வழுதாவூர் கோட்டைக்குப் போய் சேர்ந்தார்கள். முசியே கெர்ஷாம் நாளைக்கு வழுதாவூர் கோட்டையைப் போய் சேர்ந்தவுடனே சொலுதாதுகள் வகையிரா சாமானுகள் கூட செஞ்சிக்கு மமுதல்லிகான் பவுன்சும் பேரிலே சண்டைக்குப் போறதாய்ச் சொன்னார்கள்.

அரிகிருஷ்ணாபுரம்

1746 டிசம்பர் 20 மார்கழி மங்கள வாரம்

இதல்லாமலின்றைய தினம் அரிகிருஷ்ணாபுரத்தண்டையிலே சண்டையிலே இங்கிலிசுக்காரர் பிடித்துக்கொண்டு போனது. கும்பினீர் மாடும் தனி மாடுமாய் கால்நடை 250, 260. கூடாரம் 120, 130. துப்பாக்கி பெட்டி 5-க்கு துப்பாக்கி 250. சாராயம் மொண்டு வார்க்கிற சொப்புக் குடம் 60. சாராய பீப்பாய் 100. மருந்து பீப்பாய் 50. பன்றி 100. ஆடு 1400. கோழி 2000. ரொட்டி பிஸ்கோத்து பின்னையும் தட்டுமுட்டும் கொள்ளை போச்சுது.

அழிசபாக்கம் (அபிஷேகப்பாக்கம்)

1747 பிப்ரவரி 16 மாசி 8 வியாழக்கிழமை

இற்றைநாள் அழிசபாக்கத்திலே வீட்டைக் கொளுத்தின பெண்டாரிகள், கபாடக்காரரைப் பிடிக்கவேணுமென்று அரியாங்குப்பத்திலே யிருந்து முசியே லத்தூசு முப்பது பேர் சொல்தாதுகளும் இருபது பேர் மாயே சிப்பாய்களும் அழிசபாக்க மட்டுக்கும் போனார்கள். அவ்விடத்திலே போன உடனே இந்த வெள்ளைக்காரரைக் கண்ட மாத்திரத்திலே ஊரைக் கொளுத்தின பெண்டாரிகள், கபாடக்காரர் எல்லாரும் புறப்பட்டு ஓடிப்போனார்களாம். அதிலே மூன்று பேர் அகப்பட்டு அந்த மூன்று பேரையும் பிடித்துப் பின்கட்டு முறையாய் கட்டி இவ்விடத்துக்கு அனுப்புவித்தார்கள். அவர்கள் மூன்று பேரையும் கொண்டுபோய்த் துரையவர்கள் முன்னே விட்டவிடத்திலே இவர்களாரென்று கேட்டார். இவர்கள் தானய்யா அழிசபாக்கத்திலே வீட்டை கொளுத்தினவர்கள் என்று சொன்னார்கள். அந்த வார்த்தைச் சொன்னவுடனே துரையவர்களுக்குக் கோபம் வந்து அந்த மூன்று பேரையும் வேப்ப மரத்திலே கட்டச்சொல்லி, காப்பிரிகளை விட்டு ஐம்பதைம்படி அடிக்கச் சொல்லி, அந்த அடியின் பேரிலே உப்பும் காடியும் விட்டு மேலே தேய்க்கச் சொல்லி தேய்ப்பித்து கோட்டைக் கிடங்கிலே கொண்டு போய் போடச் சொல்லி உத்தரங்களைச் செய்தார். இவர்களை அடித்தது காப்பிரிகளானபடியினாலே அடி நன்றாய்த் தானே உறுதியாய் ரத்தமும் ஒழுகத்தக்கதாக அடிபட்டது.

திருக்கோயிலூர்

1748 சூலை 30 ஆடி 19 மங்களவாரம்

திருக்கோயிலூர் கோவிலிலே செஞ்சி அகம் மனுஷன் அமுல்தார் நூறு சுவார்களும் இருநூறு முன்னூறு சேவகருடனே இருந்து அமுல் பண்ணிக்கொண்டு அந்த சீர்மை நாட்டாரையெல்லாம் பிடித்துக் காவல் வைத்துக் கொண்டிருக்கச்சே நாட்டாரானவரும் வேட்டவலம் பண்டாரிக்குக் காகிதமெழுதி எங்களை விடுவித்துவிட்டால் அதற்குச் சிறிது திரவியம் கொடுக்கிறோமென்று சொல்லியனுப்பியதன் பேரிலே வேட்டவலம் பண்டாரி ஆயிரம் பேர் ராணுவமுடனே வந்து கோயிலைச் சுத்திக்கொண்ட மாத்திரத்தில் கோவிலிலே யிருந்த துலுக்கன் கதவை சாத்திக்கொண்டு தானும் முஸ்தீதாயிருந்தான். அதன் பேரிலே கோயில் கதவை சுடுங்காட்டிலும் உள்ளேயிருந்த துலுக்கரும் ராணுவமும் கவிலமேகி ஆயுதங்களை ஒப்புக் கொடுத்துப் போட்டு வெளியே வந்த உடனே ராணுவத்தையும் குதிரைக்காரரையும் விட்டுவிட்டு அமுலாயிருந்த துலுக்கனையும் பிடித்துக்கொண்டு அரண்மனைக்கு தரதாயிருந்த பணம் சிறிதாயிருந்ததாம். அந்தப் பணத்தையும் எடுத்துக் கொண்டு மூவாயிரம் கல தானிய மட்டுக்கும் இருந்ததாம். அதையும் எடுப்பித்துக் கொண்டு அமுல் துலுக்கனைக் கூட அழைத்துக்கொண்டு காவலில் பண்ணியிருந்த நாட்டாரையும் விட்டு அனுப்பிப் போட்டு தானுமிப்போது சதுரகர்காரத்தைப் போய்விட்டதாகவும் அதன் பேரிலே விழுப்புரத்திலே யிருந்த அப்துல்சலீல் அன்றைய தினம் பின்னையொரு கிராமத்திலே குடிசையிலே கிடந்து மறுநாள் செஞ்சியிலிருந்து சிறிது ராணுவம் அழைப்பித்துக் கொண்டு செஞ்சியே போய்விடுகிறதாய் இருக்கிறதாய் இருக்கிறானென்றும் பயந்து இருக்கிறானென்றும் எழுதி வந்தது.

1748 ஆகஸ்ட் 18 ஆவணி 6 ஆதிவாரம்

பதினொண்ணரை மணி வேளைக்கு என்னை அழைத்தனுப்பி வைத்து, மாபுசுகானைப் பிடித்துக் கொண்டார்களாம். ஊரெல்லாம் பேசிக் கொள்கிறார்களாம். நானரியேன். அப்படி மாபுசுகானை வேட்டவலம் பண்டாரி பிடித்துக்கொண்டு போனால் இந்த மட்டுக்கும் யாருக்கும் சேதி வராதா? அது பொய்யான வார்த்தை யென்கிறாப்போலே நீ நன்றாய் கபுறு விசாரிக்கவில்லை யென்று சொல்லிப்போட்டு தாட்டி அண்டைக்குப் போய் சொன்னது: அவன் மறுபடி திருக்கோயிலூரிலே ஒரு கோயிலிலே இருந்தானாம் அவனைப் போய் பிடித்துக் கொண்டாராம். பண்டாரத்தார் மனுஷர் போய் பிடித்துக்கொண்டு வந்தார்களாம் யென்று மறுபடி வந்து சொன்னார். அதற்கு நான் சொன்னது திருக்கோயிலூரிலே அப்துல் சல்லி உறவு முறையாயிருந்தவனை பிடித்துக்கொண்டு போய் அவனைப் பன்றிக்கறி கூட தின்ன வைத்தாரென்பதின் பேரிலே தான் நவாபு அன்வர்திகான் முதலான பேர் கூட பவுன்சு வந்து இறங்கினதென்று சொல்லி அவனைப் பிடித்து 25 நாளானதென்றும் சொன்னேன். அதன் பேரிலே தாட்டி அண்டைக்குப் போய் மறுபடி சொல்லிப்போட்டு வந்தான்.

விழுப்புரம் கோட்டை

1750 மார்ச்சு 11 பங்குனி 2 புதவாரம்

அப்பால் விழுப்புரத்து சமாசாரமெல்லாம் யென்னவென்று கேட்டார். நம்முடையவர்கள் போய் பத்தே பண்ணினார்கள் யென்கிற சேதி கேழ்க்கப்பட்டது. ஊர்ச்சிதமான சேதி இதோ வரப்போகுது யென்று சொல்லிக்கொண்டிருக்கச்சே விழுப்புரம் பத்தே ஆன சேதிக்கெல்லாம் கொலைக்காரன் காகிதங் கொண்டு வந்தான். அதிலே யென்ன சேதியென்றால் நம்முடையவர்கள் போயிறங்கியவுடனே விழுப்புரத்துக் கோட்டையிலே அப்துல் சல்லீல் மனுஷரென்று வந்திருந்த இங்கிலீசுக்காரரும் சட்டைக்காரரும் சேவு கருமாரி யிருந்தவர்கள் சண்டைபண்ணி அவர்களிலே பத்து பன்னிரண்டு பேர் செத்த உடனே கோட்டைய விட்டு ஓடினதாயும் அப்பால் நம்முடையவர்கள் விழுப்புரம் கோட்டையை பத்தே பண்ணிக்கொண்டு போயிருக்கிறதான யெழுதி வந்தது. அப்பாலிந்த சமாசாரம் கொண்டு வந்த கொலைகாரனுக்கு இரண்டு ரூபாய் இனாங் கொடுத்தனுப்பச் சொல்லி மறுபடி அப்ப நானே பதிலுக்கு சீட்டு ஒன்று எழுதி யிப்படியானால் சமீபத்திலே தண்டுவந்து இரங்கியிருக்கிறது தாங்கள் சீக்கிரமாய் புறப்பட்டு வரவுமென்று எழுதி அப்பதானே அனுப்புவித்தார்.

இறவாசநெல்லூர் (எலவனாசூர்கோட்டை)

1750 சூலை 5 ஆனி 25 ஆதிவாரம்

இத்தனாள் காலத்தாலே யெட்டு மணிக்கு துரையவர்கள் கோயிலுக்குப் போய் பூசை கேட்டு வந்து கபே குடிச்சு ஆன பிற்பாடு யென்னை அழைத்து யென்ன சேதியென்று கேட்டார். முந்தாம்நாள் இறவாசநெல்லூர் கோட்டை நம்முடவர்கள் வாங்கி வெள்ளைக்கோடி போட்டார்களென்று கபுறு சொன்னேனே இத்தனாள் சூரிய உதயத்துக்கு வந்த கபுறு என்னவென்றால் முன்னாடி ஓடிப்போய்விட்ட உசேன்சாயபு தாயாருடைய சுவார்களும் உளுந்தூர் றகுநாத நயினார் யென்கிறவனும் கூட பின்னையும் ஆயிரம் பேர் சேவுகர்களும் துப்பாக்கிக்காறர்களும் யிறநூறு சுவார்களும் கூட்டிக்கொண்டு வந்து கோட்டையிலே லக்கையேறினார்கள். நம்முடவர்கள் நூறுபேர் கற்னாடக சேவுகறான படியினாலேயும் கொத்தலங்களும் வீடுகளும் அந்த கோட்டையைச் சுத்திலும் யிருக்கிற படியினாலேயும் அடைய வளைஞ்சான் சார்பனாவான படியினாலேயும் அவர்கள் ஒரு மூலைக்கு வந்தது தெரியாமல் போனாலும் நம்முடவர்களும் நாற்பது முப்பது பேர்களைச் சுட்டுத்தள்ளிப் போட்டார்கள். காயக்காறர்களுமுண்டு.

அப்பால் ரெண்டாயிரம் பேர் கும்பலுமல்லாமல் சீமை அவர்களுக்கு வெகுநாளாய் நடந்துவருகிற படியினாலே கும்பல் வெகு விஸ்தாரமாய்க் கூடினபடியினாலே லக்கையேறிக் கோட்டையைப் பிடிச்சுக் கொண்டார்கள். அஞ்சாறு பேர்களை வெட்டிப்போட்டார்கள் யென்றும் பின்னையும் அஞ்சாறு பேருண்டு யென்றாப் போலேயும் முப்பது நாற்பது பேருக்கு காயமும் யென்றும் மத்தப்பேர்கள் ஓடிப்போய்விட்டார்கள் என்றும் அமுல்தாரன் வெங்கிட்டறாயனைப் பிடிச்சுக்கொண்டு போனார்களென்றும் சேதி வந்ததென்று சொல்லி…

விருத்தாசலம் கோட்டை

1750 செப்தம்பர் 6 ஆவணி 25 ஆதிவாரம்

இத்தனாள் காலத்தாலே துரையவர்கள் கோவிலுக்குப் போய் பூசை கேட்டு வந்தவுடனே என்னையழைச்சு விருத்தாசலம் கோட்டையை ஒப்பிச்சுப் போடுகிறோமென்றும் அந்தக் கோட்டையிலே யிருக்கிற சமேதார்கள் வகையறா வகையறாவிலே கேட்டனுப்பிவிச்ச படிக்கு கவில் யெழுதியிருந்தோமே இப்போ யிறுநூறு சிப்பாய்களையும் நாற்பது சுவார்களையும் அனுப்பிவிச்சால் நாங்களாய்க் கோட்டையை விட்டுப்போட்டு அவர்கள் மனுஷறாய்ப் போனார்களென்கிற பதிலாமையில்லாமல் கோட்டை பிடிக்க அவர்கள் மனுஷர்கள் வந்தார்கள். அவர்களுடனே பிடித்து சண்டை கொடுக்கப் பெலனிருக்குதா கவிலை வாங்கிக் கொண்டு கோட்டையை ஒப்புவிச்சுப் போடுகிறோமென்று சொல்லி அனுப்பினார்களாம். அதின் பேரிலே யிறநூறு சிப்பாய்களையும் நாற்பது சுவார்களையும் விருத்தாசலம் கோட்டையிலே போயிருக்கச் சொல்லி அனுப்பினார்களாம். விருத்தாசலத்துக்கும் திருவீதிக்கும் பறங்கி யேழரைகாதம் யெட்டுக்காதமுண்டென்று சொன்னேன். வெங்கிட்டாம் பேட்டைக்கும் திருவீதிக்கும் யெத்தனை காதமுண்டென்று கேட்டார். நாலுகாத முண்டென்று சொன்னேன்.

1753 சூன் 8 வையாசி 30 சுக்கிறவாரம்

இந்தநாள் சாயங்காலம் முசே மேசேன் கொமாந்தாம் விருத்தாசலம் கோட்டை யிங்கிறேசுக்காறர் வசமாயிருந்ததை வாங்கிக் கொண்டானென்று துரையவர்களுக்கு யெழுதி வந்ததுக்கு மறுஉத்திரம் அந்தக் கோட்டையைப் பிடிச்சுப் போடச் சொல்லி யெழுதியனுப்பிவிட்டார்கள். அந்தக் கோட்டையிலே யிருந்த யிங்கிறேசுக்காரர்கள் சனம் 15 பதினைஞ்சு தமிழ்ப் பாளையம் சனம் 200 இருநூறு சட்டைக்காறர் சனம் 15 பதினைஞ்சு யிந்த மட்டுக்கும் யிருந்தார்கள் யென்று சொன்னார்கள்.

கோவளம் கோட்டை

1752 செப்த்தம்பர் 22 ஆங்கிரசு பிறட்டாசி 10 சுக்கிறவாரம்

இத்தனாள் ராத்திரி ஏழரை மணிக்கு துரையவர்கள் அழைச்சனுப்பி வைத்து முசே பிளாம் செப்தம்புறு மாதம் 16-ந்தேதி சாயங்காலம் கோவளம் கோட்டையை ஒப்பித்துப் போட்டேனென்றும் அவர்கள் இரண்டாயிரம் பேர் மட்டுக்கும் வந்த படியினாலேயும் யெங்கே லக்கையேறுகிறார்களோவென்று ஒப்பித்துப் போட்டேன் யென்றும் யெழுதினான் யென்று சொல்லி கச்சோறு உள்க்கையாயிருந்து விட்டான். … இத்தனாள் ராத்திரி பத்து மணிக்கு கேழ்விப்பட்ட கபுறு மேஸ்தர் க்ளீஸ் யென்கிறவன் கோவளத்துக்கு அமில் பண்ணுகிறதுக்கு ஒரு பிறாமணனையும் சிறிது பேருகளையும் கோட்டைக்கு வைத்துப்போட்டு செங்கல்பட்டு கோட்டை வாங்கத் தக்கதாக நேத்தய தினம் காயத்தண்டையிலே போய் பவுன்சுடனே யிறங்கினானென்று சேதி வந்தது.

செங்கல்பட்டு கோட்டை

1752 செப்த்தம்பர் 24 புறட்டாசி 12 ஆதிவாரம்

இத்தனாள் துரையவர்கள் கோயிலுக்குப் போயிவந்த பிற்பாடு பத்து மணி வேளைக்கிப் போய் கபுறு சொல்லியானவுடனே செங்கல்பட்டு சேதியேதாகிலும் வந்துதாவென்று கேட்டார். மேஸ்தர் கிலேசு வெள்ளிக்கிழமை நாள் செங்கல்பட்டுப் போய்ச்சேர்ந்தானென்றும் கோட்டைக்கு யெதிரே பவுன்சு கண்டவுடனே கோட்டையிலே யிருக்கிற முசே விலாம் குமாந்தமும் முசியே மிலோமும் கோட்டையைப் பந்துபஸ்து பண்ணிக்கொண்டு சேவுகர்கள் சிப்பாயிகள் வகையிராக்களையும் வைத்துக்கொண்டு ரஸ்தும் ஒரு வருஷத்துக்குண்டாம் சேர்த்து வைத்துக் கொண்டிருக்காறதும் மருந்து குண்டும் அப்படி தாக்ஷியில்லாமல் வைத்துக் கொண்டிருக்கிறது பந்துபஸ்திலே குறைச்சலில்லை. தெய்வ யெத்தினம் தெரியாததல்லவே. யல்லாமல் மனுஷர்கள் யிருக்கிற பந்துபஸ்துகளிலே கோட்டையிலிருக்கிற அறணிப்புயிலே வாங்க மாட்டார்கள் அப்படி பெலத்து இருந்து கொண்டு சத்துருக்களைச் சேர் வொட்டாமல் அடிக்கிறார்கள் யென்று சொன்னேன்.

திருவீதி கோட்டை

1753 மாயு 7 சித்திரை 29 சோமவாரம்

இத்தனாள் ராத்திரி பத்தரை மணிக்கு திருவீதியின் பேரிலே யிறங்கியிருக்கிற நம்முட வூரிலேயிருந்து ஒரு வெள்ளைக்காரன் துவாருது குதிரை சுவார் வந்து வழுதாவூர் வாசற்படி மூடியிருந்த படியினாலே அகறத்தை ஓரமாயிருந்து ஒரு துப்பாக்கி வெடி சுட்டான். அந்த சத்தம் வாசற்படியிலிருக்கிற கொற்பறால் கேட்டு ஆர் யென்று யெச்சரித்த பிற்பாடு திருவீதி கோட்டை பத்தே ஆச்சுது அந்த கபுறு துரையவர்களுக்குச் சொல்ல வந்தேன் என்று குவாடுது குதிரை சவார் சொன்னானாம்.

அப்பால் வாசற்படி திறந்து அந்த கொப்புறால் அவனை அழைச்சுக்கொண்டு துரையவர்களண்டைக்குப் போனவுடனே அவர் நித்திரை போயிருக்கச்சே போய் எழுப்பி அந்தக் குவாடுது குதிரை சவார் துரையவர்களுடனே திருவீதி கோட்டை நம்முடவர்கள் யித்தனாள் சாயங்காலம் பத்தே பண்ணின சமாச்சாரம் சொன்ன மாத்திரத்திலே துரையவர்கள் மகா சந்தோஷப்பட்டு அவனுக்கு அன்னேரத்திலே தானே சாப்பாடு அழைப்பிச்சுக் குடுத்து சாப்பிடச் சொல்லி தம்முட கைப்பெட்டியிலே யிருந்த வீராகனிலே நூறு வீராகன் யெடுத்து அவனுக்கு யினாம் கொடுத்து மூணு போட்டிலும் சாராயம் கொடுத்து மறு காகிதமும் யெழுதி அவனுடனே ரெண்டு பேர் அறுக்காறுகளையும் பயணம் பண்ணி பதினொண்ணரை மணிக்கு அனுப்பிவிச்சார்.

ஆனாலிந்த திருவீதிக் கோட்டை பத்தே பண்ண சமாச்சாரம் அவரவர் சொல்லிக் கொண்டதென்ன வென்றால் நேத்து ஆதிவாரம் ராத்திரி தானே திருவீதி கோட்டையிலிருந்த யிங்கிறேசுக்காரர் சொலுதாதுகள் சிப்பாயிகள் வகையிராக்கள் அவரவர்கள் தட்டுமுட்டெல்லாம் வெளியே தேவனாம்பட்டணம் கோட்டைக்கு அனுப்பிப்போட்டு அவர்களும் ஆயுதங்களை எடுத்துக்கொண்டு சமஸ்தான பேரும் பிறப்பட்டுப் போனார்கள் யென்றும் அந்தச் சேதி நம்முடவர்களுக்குத் தெரியாமல் யித்தனாள் மத்தியானம் மட்டுக்கும் பீரங்கிகளும் மொருத்தியேயும் கோட்டையின் பேரிலே சுட்டார்கள்.

கோட்டையில் யாரும் யில்லாததனால் சபாபுயில்லாமல் போச்சுது. அவர்கள் சுடாமல் சும்மாயிருந்தது யென்னவோ மோசம் பண்ணியிருக்கிறார்கள் யென்று நம்முடவர்கள் ஆலோசனை பண்ணி சிறிதுபேர் கூலிக்காரரை அனுப்பிப் பார்த்து வரச்சொன்னார்கள். அவர்கள் போய் பார்த்து கோட்டையிலே யாருமில்லை யென்று வந்து சொன்னார்கள். அப்பால் நூறு சுவார்களையும் சிறிதுபேர் சிப்பாயிகளையும் சேவுகரையும் போய்ப்பார்த்து வரச்சொன்னார்கள். அவர்களும் போய்ப்பார்த்து வந்து யாருமில்லை யென்று சொன்னார்கள்.

அதன் பிற்பாடு நம்முட பிறான்சுக்காறர் தாலுக்கு பவுன்சும் முராரிராயன் வகையிராக்களும் கோட்டை அண்டைக்குப்போய் உள்ளே போய் நாலு பக்கமும் பார்த்து அப்பால் கோட்டையின் பேரிலே வெள்ளைக் கொடியைப் போட்டுக் கொண்டார்கள் யென்றும் கோட்டையிலே முன் யிங்கிறேசுக்காறர் காலம் பண்ணியிருந்த பிறான்சு சொலுதாதுகள் யிருபத்தொன்பது பேரும் பனிரெண்டு ஒபிசியால்மாரும் யிருந்தார்கள். அவர்களுடனே இங்கிறேசு ஒபிசியால் ஒருத்தனும் யிருந்தார்கள் என்றும் யிப்படியாக அவரவர் சொல்லக் கேழ்வியானேன்.

1753 மாயு 8 சித்திரை 30 அங்காரகவாரம்

தில்லை மேஸ்திரியை அழைப்பிச்சுக் கொண்டு கொலுத்துக்காறரையும் மேஸ்திரிகளையும் திருவீதிக்கு அனுப்பி கோட்டையை யிடிச்சுப்போடச் சொல்லி உத்தாரம் கொடுத்ததாய்ச் செய்தி கேழ்க்கப்பட்டுது.

(தொடரும்)

பகிர:
கோ. செங்குட்டுவன்

கோ. செங்குட்டுவன்

விழுப்புரத்தில் பிறந்து வளர்ந்து வசித்து வருபவர். ஊடகத்துறையில் 20 ஆண்டுகாலம் செய்தியாளராகப் பணியாற்றியவர். கலை, இலக்கியம், பண்பாடு மற்றும் வரலாற்று அமைப்புகளில் பங்கேற்று இயங்கி வருபவர். 'சமணர் கழுவேற்றம்', 'கூவம் - அடையாறு - பக்கிங்காம்: சென்னையின் நீர்வழித்தடங்கள்' உள்ளிட்ட நூல்களை எழுதியிருக்கிறார். தொடர்புக்கு : ko.senguttuvan@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *