திருடுவது, பொய்க்கணக்கு எழுதுவது, செய்த குற்றத்தை மறைப்பது, குற்ற நிகழ்வைத் தடுக்காமல் இருந்தது, ராணுவத்தைவிட்டு ஓடுவது உள்ளிட்டவை புதுவை மண்ணில் பிரெஞ்சு ஆட்சியில் குற்றச்செயல்களாகக் கருதப்பட்டன. கைகால் விலங்கிட்டு இருட்டறையில் அடைப்பது, ரத்தம் வருமளவிற்குக் கசையடி கொடுப்பது, அதிலே உப்பைத் தடவுவது, காதுகளை அறுப்பது என இக்குற்றங்களுக்கானத் தண்டனைகளின் பட்டியல் நீள்கிறது. அதிகபட்சத் தண்டனை, அனைவரும் அறியும்படி ஊருக்கு நடுவில் வைத்து துப்பாக்கியால் சுட்டுக்கொல்வது, கம்பம் நட்டுத் தூக்கில் போடுவது. இப்படித் தூக்கில் ஏற்றப்படுவதை விரும்பாத ஒருவன் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டான். ஆனாலும் அவனது சடலத்தை அனைவரும் அறியும்படியாகத் தெருத்தெருவாக இழுத்து வர உத்தரவிடப்பட்டது.
அரசாங்கத்தின் காவல் காக்கும் தளவாய் பொறுப்பில் இருந்தவர் வீராநாயக்கன். அவர் வீட்டில் குடியிருந்தவரிடம் திருட்டு அரங்கேறியது. இதனால் வீராநாயக்கனையும் அவரது மகனையும் சிறையில் தள்ளியது பிரெஞ்சு அரசாங்கம்.
கொடுக்கல் வாங்கல் விவகாரம் ஒன்று அரசாங்கத்தின் பார்வைக்கு வந்தது. இங்குத் தண்டனை வழங்குவதற்கு மாற்றாக, ஈஸ்வரன் கோயிலில் விளக்கை அணைத்து சத்தியம் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டது. பொய் சத்தியம் செய்த இந்த நிகழ்வை அழகாக வர்ணிக்கிறார் ஆனந்தரங்கர்!
1738 ஆனி 1 சூன் 11 புதவாரம்
… அதிலே நடந்த அதிசயம் என்னவென்றால் முன்னாலே இவ்விடத்திலேயிருந்து ஓடிப்போன சொல்தாது ஒருவனைப் பிடிச்சு வந்து பதினைந்து நாள் கிடங்கிலே போட்டு வச்சிருந்து எல்லோருக்கும் பட்டம் வருகிற நிமித்தியமாய் அன்றைய தினம் இந்த சொல்தாதுவைக் கொண்டு போய் கோட்டைக்குத் தென்பாரிசத்திலே கோட்டை அகழி ஓரத்திலே கொண்டு வந்து முழங்காலின் பேரிலேறியிருக்கச் சொல்லி லேஞ்சுவினாலே கண்ணைக்கட்டிப்போட்டு மூணுபேர் துப்பாக்கிக்காரர் எதிரே நின்று துப்பாக்கியில் மருந்து இடிச்சு சுட்டுத்தள்ளிப் போட்டார்கள். இந்த அதிசயம் இன்றைக்கு நடந்தது.
1739 சூலை மாதம் 8 ஆனி 28 புதன்கிழமை நாள்
சாயங்காலம் நாலு மணிக்கு வெள்ளைக்காரர் ஒருத்தனை கோட்டைக்குத் தென்னண்டை இருக்கப்பட்ட வெளியிலே கொண்டு போய் கண்ணைக் கட்டி முழங்காலிலே நிக்க வச்சு நாலுபேர் துப்பாக்கியிலே இரட்டைக் குண்டு போட்டு சமீபத்திலே நிண்ணு நாலுபேரும் ஒருமிக்க துப்பாக்கியை மாருக்குப் பிடிச்சு சுட்டுப் போட்டார்கள். அவனை அப்படி சுட்டுப்போடத்தக்கதாக என்ன நோக்கமென்றால் …….
1739 நவம்பர் 21 கார்த்திகை 9 சனிவாரம்
சாயங்காலம் அஞ்சு மணிக்கு இந்தப் புதுச்சேரி பட்டணத்திலே நடந்த அதிசயம்: முன்னாலே பழய நயினார் இருந்தாரே அவருட மனுஷனை விட்டு தங்களுடைய காவலில் முத்தியா பிள்ளை இவர்களுக்கு கொடுக்கலாமா என்று அங்கலாய்ப்பினாலே பட்டணத்திலே திருடச்சொல்லி ஒருத்தனை அனுப்பினார்களாம். அவன் வந்து வெகுநாளாய் திருடிக் கொண்டே திரிஞ்சான். இப்படி திருடச்சே நாலஞ்சு மாசத்துக்கு முன்னே ஒருநாள் வேளையிலே அகப்பட்டான்.
அதன் பேரிலே அவனைப் பிடித்து வந்து அடிச்சுப்பிடிச்சுக் கேட்கிறபோது தான் பூருவோத்திரமும் இவ்விடத்திலே திருடி அவரவர் வீட்டிலே வச்சதும் இதுகளெல்லாம் வயனமாய்ச் சொன்னதின் பேரிலே கண்டவன் கேட்டவன் தட்டுமுட்டு வாங்கி வச்சவன் இந்தத் திருடனுக்கு இடம் விட்டவர்கள், இவர்களை எல்லாம் பிடிச்சுக் கொண்டுவர பதினஞ்சு பதினாறு பேர் ஆச்சுது. இவர்கள் எல்லோரையும் கூட கிடங்கில் போட்டு வச்சிருந்து கோன்சேலிலே கேட்டு அவரவர் பேரிலே கொஞ்ச நேரமான படியினால் எல்லாரையும் விட்டுவிட்டு திருடனுடனே கூட ஒடவி வீரப்ப மேஸ்திரி, ஒரு தட்டான், சாந்தி பிர்மன், குமரப்ப நயினார், இவர்கள் அஞ்சு பேரையும் கூட கிடங்கிலே போட்டிருந்து கோன்சேலிலே தீர்த்து ஆக்கினை யிட்ட வயணம் நடுப்பட்டணத்திலே கடைத்தெருவிலே முத்திரைச் சாவடிக்கு எதிரே தூக்கு மரம் கொண்டு வந்து நட்டு இன்றைய தினம் சாயங்காலம் அஞ்சு மணிக்குச் சாவடியிலே முசே துளோராம் வந்திருந்து திருடனை மாத்திரம் தூக்கில்போடச் சொல்லி உத்தாரங் கொடுத்தார். அப்படியே சகலமான சனங்களும் பார்க்கத்தக்கதாக தூக்கில் போட்டார்கள்.
மற்ற அஞ்சு பேரிலே ஒடவி வீரப்ப மேஸ்திரியும் தட்டானையும் பேருக்கு ஐம்பது ஐம்பது அடியடித்து பேருக்கு இரண்டிரண்டு காதையும் அடியோடே அறுத்து குண்டுக்கு வெளியே துரத்திவிட்டார்கள். மற்ற மூன்று பேர் சாந்தி பிர்மன், குமரப்ப நயினார் இவர்கள் மூன்று பேரையும் வரிசையாய் கட்டி இருபத்தைந்து அடி அடித்து மறுபடி கிடங்கிலே போட்டு வைத்தார்கள். இன்னும் இரண்டு மூன்று ஞாயத்துக்கு அடித்து சும்மா விட்டுவிடுவார்கள். இவர்களுக்கு வேறே ஆக்கினையில்லை.
1741 ஜனவரி 22 தை 13 ஆதிவார நாள்
புதுச்சேரி பட்டணத்திலே நடந்த அதிசயம் என்னவென்றால் …… விட்டில் பண்டிதரையும் அவருடைய குமாரன் இளையவன் …….. இவர்கள் இரண்டு பேரையும் கோட்டைக்கு அழைப்பிச்சு கோட்டையிலே தானே காவல் பண்ணி வச்சார்கள். இன்றைய தினம் புதிதாய் ஒரு தூக்கு மரத்திலே இரண்டு பேரையும் போடத்தக்கதாய் நூதனமாய் ஒரு மரம் செப்பனிட்டு சாயங்காலம் ஐந்து மணிக்கு முத்திரைச்சாவடிக்கெதிரே கொண்டு போய் நட்டார்கள்.
1741 மார்ச்சு 29 பங்குனி 4 புதன்கிழமை நாள்
சாயங்காலம் மீராபள்ளியிலே ஒரு கிலாசுக்காரன் சாராயத்தைக் குடிச்சுப் போட்டு தன் பெண்சாதியை கத்தியினாலே குத்திக் கொன்று போட்டான். அவனைப் பிடிச்சு காலுக்கும் கைக்கும் விலங்குபோட்டு கோட்டைக் கிடங்கிலே போட்டுவிச்சார்கள்.
1741 ஆகஸ்ட் 7 ஆடி 27 திங்கள்கிழமை நாள்
சாயங்காலம் அஞ்சு மணிக்கு ஒரு சொலுதாது உலாந்த காரனை சுட்டுப் போட்டார்கள். அவன் என்ன நேரம் செய்தானென்றால் தான் வெளியே புறப்பட்டு ஓடிப்போகிறவன் தன்னுடனே கூட நாலு பேர் வெள்ளைக்காரரை கூட அழைச்சுக் கொண்டு ஓடிப்போனான். கூடப்போன நாலு பேரும் மிஞ்சிப்போய் தேவனாம்பட்டணம் சேர்ந்தார்கள். இவன் ஒருத்தன் மிச்சமாய் குடிச்சுக் கொண்டிருந்த படியினாலே ஓட மாட்டாமல் வழியிலே அகப்பட்டுக் கொண்டான். ஆனபடியினாலே இவனைப் பிடிச்சுக் கொண்டு வந்த மறுநாளைக்குத் தானே சுட்டுப் போட்டார்கள்.
1742 சூன் 5 வைகாசி 26 செவ்வாய்க்கிழமை நாள்
காலமே நடந்த அதிசய மென்னவென்றால், கோட்டையிலே வேலை செய்கிற கட்டுக்காரர் கோட்டைக் கிடங்கிலே மிளகு திருடி அவர்கள் மூன்று பேராய் கொண்டு போய் பங்கிட்டுக் கொண்டு கடையிலே இருக்கப்பட்ட கடைக்காரரை அழைத்து வந்து நிறுத்திவிடப் போகச்சே தலையாரியைக் கண்டுபிடித்துக் கொண்டு வந்து முத்தியாபிள்ளையவர்களுடனே சொன்னவிடத்திலே அவரும் பாவத்துக்குப் பயந்து யோசனை பண்ணி பத்துப்பேர் அறிஞ்ச காரியம் வெளியானால் மடிப்பு வருமென்கிறதாக துரையவர்களுடனே சொல்லிப் போட்டார்கள். ஆனால் இந்த மூன்று பேர் கட்டுக்காரரும் செய்த காரியம் மடிப்பு தான். அதென்னவென்றால் இரண்டு மூட்டை மிளகும் ஒரு மூட்டை மெழுகும் மூன்று மூட்டை கட்டி எடுத்துக்கொண்டு போனார்கள். போகச்சே வழியிலே தானே புறவாய் வெளியாய்ப் போன படியினாலே அந்த விசேஷம் துரையவர்கள் கேட்ட வுடனே கோபித்துக் கொண்டு கிடங்கில் போடச் சொன்னார்கள். பிற்பாடு மத்தியானத்துக்கு மேல் மூன்று மணிக்குக் கோட்டையிலே கொண்டு வந்து கீழண்டை வாசல் படியிலே இரண்டு புறத்திலே இரண்டு பேரையும் மேலண்டை வாசல் படியிலே ஒருத்தனையுமாக இருட்டுக் கிடங்கிலே போட்டார்கள்.
1742 சூன் 11 ஆனி முதல் தேதி திங்கள் கிழமை நாள்
சாயங்காலம் மரந்தை முதலியை சாவடியிலே காவலில் வச்சார்கள். அதெதினால் என்றால் அங்கன் பெண்சாதி நோவாளி கிடங்குக்கு இரண்டு லக்ஷம் குச்சுக் கட்டைக்கு குச்சு போட்டதை நாலு லக்ஷம் என்று கும்பினீரிலே கணக்கு எழுதிவச்சு வராகன் வாங்கினானென்று பித்திசாமன் எழுதிப் போட்டதின் பேரிலே அவனைப் பிடித்துக் காவல் பண்ணினார்கள்.
சூன் 20 ஆனி 10 புதன்கிழமை நாள்
சாயங்காலம் முன்னாலே கோட்டைக் கிடங்கிலே வைத்திருந்த கட்டுக்காரர் மூன்று பேரையும் அழைத்துக் கோட்டைக் கிடங்கைவிட்டு முத்திரைச் சாவடியிலே கொண்டு போய் வைத்து வெள்ளிக்கிழமை நாள் காலமே எட்டு மணிக்குச் சின்ன துரையவர்கள் சாவடிக்கு வந்து ஞாயம் விசாரித்து அந்தக் கட்டுக்காரர் மூன்று பேரையும் அழைத்து மரத்திலே மூன்று பேரையும் கட்டச் சொல்லி 50-50 அடி அடித்து சொணக்கு முத்திரைப் போட்டு ஊர்கடக்கக் கொண்டு போய் விட்டு வந்தார்கள். அவர்களுடைய உயிர் தப்பினது ஆராலென்றால் முதலாவது சுவாமியும் இரண்டாவது ஆனந்தரங்கப் பிள்ளையவர்கள் புண்ணியத்தினாலே அவர்கள் பிராணன் தப்பித்தது. அதேதென்றால் துரையவர்களுடனே ரொம்பவும் நேரிடச் சொல்லி மனுவாய்க் கேட்டுக்கொண்டபடியினாலே அவர்களும் பிள்ளையவர்கள் பேரிலிருக்கிற பக்ஷத்தினாலே தட்டிச்சொல்ல மாட்டாமல் விட்டுவிட உத்தாரங் கட்டளையிட்டார்கள்.
1743 சூன் 5 வையாசி 26
மீரா வெளியிலே ஒரு துலுக்கன் வீட்டிலே திருடின திருடனை இன்றைய தினம் நாலு மணிக்கு சாவடிக்கெதிரே கொண்டு வந்து தூக்கிலே போட்டார்கள்.
1744 நொவம்பர் 1 அற்பிசி 20 ஆதிவாரம் நாள்
ராத்திரி பதினோரு மணிக்கு தளவாய் வீராநாயக்கனையும் அவருடைய குமாரன் கிருஷ்ணனையும் ஆறுமுக மென்கிறவனையும் மூன்று பேரையும் பிடித்துக் கிடங்கிலே போட்டார்கள். அந்த மூன்று பேரையும் ஒருத்தருடனே ஒருத்தர் பேசாமற்படிக்கு வெவ்வேறு கிடங்கிலே போட்டார்கள். அதெதினாலே யென்றால் அவர்கள் வீட்டுக்குக் கீழண்டை வீட்டிலே குடியிருந்த பெருமாள் செட்டி வீட்டிலே களவுபோன சம்மதிக்காகப் பிடித்துக் காவல் பண்ணினார்கள்.
1744 நவம்பர் 28 கார்த்திகை 12 திங்கட்கிழமை நாள்
சாயங்காலம் தளவாய் வீரநாயக்கனுக்குப் பதிலாய் அவன் தம்பி வேங்கடாசலத்தைக் கிடங்கிலே வைத்து வீரநாயக்கனை வெளியே விட்டார்கள். அவனை வெளியிலே விட்டது என்னவென்றால், காளவாய் கொமரப்பன் ரொக்கப் பிணைச் சொல்லச் சொல்லிக்கொண்டு பணஞ்சம்பாதித்துச் சம்மதி வேண்டிய நிமித்தம் வெளியிலே விட்டார்.
1745 பிப்ரவரி 12 மாசி 5 சுக்கிரவாரம்
சாயங்காலம் நாலு மணிக்கு ஆறுமுகமென்கிற தேவடியாள் பிள்ளையாண்டானை மசுக்கரைக்குப் போகிற கப்பலிலேற்றிவிட்டார்கள். இவனை எதினாலேற்றிவிட்டார்களென்றால் முன்னாலே ஆற்காட்டுப் பெருமாள் செட்டி வீட்டிலே களவுபோன சம்மதிக்காக வீராநாயக்கனையும் அவர் குமாரனையும் இந்த ஆறுமுகத்தையும் மூன்று பேரையும் பிடித்துக் காவல் பண்ணியிருந்தார்கள். அப்படியிருக்கையில் ஒருநாள் அவர்கள் மூன்று பேரையும் அழைத்துத் தனித்தனியே கேட்டவிடத்திலே வீராநாயக்கன் இந்த முகம் தலையிலே சுமத்தி வைக்கிற நிமித்தியம் நான்தான் எடுத்தேன் என்று சொல்லடா வென்று புசுலாய்ச்சுச் சொல்லி வந்தபடிக்கு அவனுடைய கிராசார வேளையினுடைய குணம் அப்படித்தானே சொன்னான். அதின் பேரிலே வீராநாயக்கன் மட்டுக்கும் செலவுப்பண்ணித் தானும் தன்னுடைய மகனும் வெளிப்பட்டான். அந்த மட்டிலே அவர்கள் குடும்பத்தோடே குண்டுக்கு வெளியே கொண்டுபோய் விட்டுவிட்டு வந்தார்கள். இனிமேலவர்கள் நேரஸ்தரான படியினாலே என்றைக்கும் புதுச்சேரி பட்டணத்துக்கு உள்ளே வரப்போகாது என்று குமிசேல் கூடித் தீர்த்தார்கள். அதின் பேரிலே இந்த ஆறுமுகம் என்கிறவன் பேரிலே நேரத்தைச் சுமத்தி மசுக்கரைக்கு ஏற்றிவிட்டார்கள்.
1745 தெசெம்பர் 31 மார்கழி 20 வெள்ளிக்கிழமை நாள்
ராத்திரி கிரிமாசி பண்டிதரும் தலையாரி சேவகருமாய்ப் போய் தேவனாம்பட்டணம் வக்கீலாய் இவ்விடத்திலேயிருந்த ஆதியப்பனையும் அவனுடன் கூடேயிருந்த குட்டை வடுகச் சேவகனையும் பின்னையும் இரண்டு துலுக்கச் சேவகரையும் ஆக நாலு பேரையும் முதலியார்பேட்டையிலே ஒரு வீட்டிலே குடியிருக்கும் போது அவன் காகிதம் எழுதி, இரண்டு பேர் துலுக்கர் சேவகர் கையிலே கொடுத்ததைப் பார்த்துக்கொண்டிருந்து பிடித்துக்கொண்டு வந்து சாவடியிலே வைத்து அதின் பிறகு அவன் எழுதின காகிதத்தைப் படித்துப் பார்த்து உடனே ஆதியப்பனை மாத்திரம் மறுநாள் ராத்திரி கோட்டை வாசலிலே மேல்புறத்திலே இருக்கிற பாதாளக் கிடங்கிலே பெரிய மாச்சு விலங்கு போட்டு மேலே இருந்த புடவையையும் பிடுங்கிக் கொண்டு அரைஞாண் கயிற்றையும் அறுத்துப்போட்டு வைத்தார்கள். … அவனுக்கும் கும்பினியார் சோறு கொடுக்கச் சொல்லிப் பரசுராமப் பிள்ளைக்கு உத்தாரங் கொடுத்தார்கள். அவன் நித்தியம் தோசையும் மோரும் அனுப்புகிறார்கள். அதைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறான்.
1746 அவ்ரீல் 13 சித்திரை 4 புதன்கிழமை
… பத்துமணி நேரத்திலே நடந்ததென்ன வென்றால், வந்தவாசி திருவேங்கடப் பிள்ளை காவலிலே யிருந்தவனையும் திருச்சிராப்பள்ளி தளவாய் கஸ்தூரி ரங்கய்யன் பெண்சாதியையும் அழைத்து வந்தார்கள். இரு திறத்தாரையும் அழைப்பித்து அவளானால் கொடுத்தேன் என்று சொன்னால். நீயானால் வாங்கினதில்லை யென்று சொல்லுகிறாய். நீ வாங்கினதில்லையென்று வேதபுரியீஸீவரன் கோயிலிலே தீபத்தை நிறுத்தி சத்தியம் பண்ணிக்கொடு என்று சொல்லி வீராசெட்டி என்கிறவனையும் இந்தச் சீட்டு நான் எழுதினதில்லை யென்று விளக்கு நிறுத்தி சத்தியம் பண்ணிக்கொடு யென்று சொன்னார்கள். நல்லதென்று திருவேங்கடமும் வீராசெட்டியும் சொன்னான். அதின் பேரிலே திருவேங்கடத்தைப் பார்த்து, கும்பினீர் உத்தியோகஸ்தனா யிருந்து சத்தியம் பண்ணுகிறது நியாயமில்லை யென்று துரை சொன்னதற்கு உங்கள் தயவினாலே உங்கள் உத்தரவு ஆன பிற்பாடே காரைக்காலுக்குப் போகிறேன் என்று சொன்னானாம். அதற்குச் சும்மாயிருந்தார்.
அதின் பிற்பாடு அந்தப் படிக்கு பொய் சத்தியம் பண்ணச் சொல்லி உத்தாரங் கொடுத்து தானப்ப முதலியார் மனுஷன் ஆசாரப்ப முதலி மச்சான் முத்துக்குமரனும் தளவாய் கிரிமாசி பண்டிதரும் அண்ணாமலை நயினாரும் கூடப்போய் கிட்டேயிருந்து சத்தியம் பண்ணிவித்து வரச்சொல்லி அனுப்பிவித்தார்கள். அவர்கள் போகையிலே நானிருக்கிற பாக்குக் கிடங்கிலே வந்து நடந்த பூருவோத்திர மெல்லாம் சொல்லி சத்தியத்துக்குப் போகிறோமென்று சொன்னார்கள். பள்ளங்கண்ட இடத்திலே தண்ணீர் நிற்குது. திருவேங்கடம் பிள்ளையும் சத்தியம் பண்ணினாற்போலே காவல் விடுதலையாய் வீட்டுக்குப் போனான்.
இந்த வியாச்சியம் நடந்தது குரோதன ஐப்பசி 7. சேவகர் வந்து கஸ்தூரி ரங்கய்யன் பெண்சாதி ஆயிரம் வராகனும் வட்டியும் கொடுக்க வேண்டும் என்று சொல்லி மறிப்பு வந்திருந்தது. 25ம் தேதி மேலண்டை கோட்டை வாசற்படியிலே கொண்டு போய் காவல் வைத்ததும் அதற்குப் பிற்பாடு கீழண்டை வாசற்படியிலே சிறிது நாள் காவலிலிருந்தும் அதின் பிற்பாடு சாவடியிலே காவலிலே யிருந்ததும், இன்றைய தினம் விடுதலையான மட்டுக்கும் ஆறு மாசத்திற்கு மூன்று நாள் குறைச்சலாய் விடுதலையாச்சுது.
இந்த ஆறுமாதம் காவலிலிருக்கப் பிராப்தி யிருக்கிறபோது இதற்கு முன்னே என்ன பிரயத்தனம் பண்ணினாலும் நடக்குமா? சுவாமி சங்கல்பத்தைத் தள்ளுகிறதற்கு ஒருத்தராலேயும் ஆகாது. இவளுக்குக் கஷ்டகாலம் இன்றைக்கு நிவர்த்தியான படியினாலே விடுதலையாச்சுது. பிரபுவுக்கு விவேகமில்லை யென்று சொல்லலாம். எப்படி யென்றால், இந்தச் சீட்டு சம்மதி ஆயிரம் வராகனும் கொடுத்து விடுகிறோம். இந்தச் சீட்டை நியாமாம் படிக்கு நாலுபேர் மத்தியஸ்தரிலே போட்டு விசாரித்து அவள் பேரிலே நிசமிருந்தால் சீட்டுப் பொய்யென்று சமஸ்தான உங்களுக்கு மனதிலே சத்தியம் என்னயிருக்கிறது. ரகசியமும் எல்லாம் தீர்ப்பா என்று சொல்லிப்போகச் சொன்னேன். அந்தப்படிக்கு வேதபுரி யீசுரன் கோயிலுக்குப் போனார்கள்.
போய் சத்தியம் பண்ணும்போது வந்தவாசி திருவேங்கடப்பிள்ளை சொன்னது: நானிவளுடனே மூன்று தரம் போய் இருபத்தொன்பது பணமும் இரண்டு வேளை படி அரிசியும் கொடுத்தது அறிவேன் அல்லாமல் மற்றப்படிக்கு இவள் கையிலே வராகன் வாங்கினதுமில்லையென்று சொல்லித் தீபத்தை அணைத்துச் சீட்டையும் கிழித்தான். வீராசெட்டி என்கிறவன் இந்தக் கடன் சீட்டு நான் எழுதினதில்லை. இந்தச் சீட்டு வரலாறும் நான் அறியேன் என்று தீபத்தை அணைத்தான். அப்போது கஸ்தூரி ரங்கய்யன் பெண்சாதி சொன்னது: இப்படிக்கு முன் சொன்னதினாலே தான் நானிப்படி செய்தேன். இன்னும் வாய்க்கொழுப்பு போகவில்லையென்று அந்தச் சாடையிலே சொன்னாள். அதின் பிற்பாடு கஸ்தூரி ரங்கய்யன் பெண்சாதிக்கு வெளிக்காவலாய்ப் பார்த்துக் கொண்டிருந்த இரண்டு தலையாரி, செட்டிகளிருந்தவர்களையும் நயினாத் துரையவர்கள் உத்தாரப்படிக்கு வாங்கிவரச் சொன்னார். அந்தப்படிக்கு வாங்கிப் போனார்கள்.
பேரும் அறிய தண்டித்து ஊர்கடக்கத் துரத்திவிடும் என் பேரிலே நேரமிருந்தால் கும்பினீருக்கு அவள் தானமும் கொடுத்து நேரஸ்தனாகப் போகிறேன். இந்தப்படிக்கு நடப்பிக்கச் சொல்லி எத்தனை தரம் சொன்னாலும் கேளாமற் படிக்குத் தன்னுடைய கணக்கு ரங்கப்பிள்ளை பேச்சைக் கேட்டுக்கொண்டு எவர்கள் சொன்னாலும் கேளாமற்படிக்கிருந்தவன் ஊரிலே கடைக்காரர் தங்களை அநியாயம் பண்ணிக் கட்டாயம் போட்டு எங்கள் குடிகளைக் கெடுத்துப் போட்டார் துரை அவர்கள் என்று கோன்சேல்காரருக்கும் சம்பா கோயில் பாதிரிமாருக்கும் பெத்திசியோமெழுதிப் போட்டதுமல்லாமல் துரையுடனே எதிராடுகிற சாடையைப் பார்த்து இதினாலே ரொம்ப போராட்டம் இருக்கிறது.பிராது ரொம்ப வருகிறது.
1746 டிசம்பர் 7 கார்த்திகை 25 புதவாரம்
இற்றைநாள் துரையவர்கள் கோன்சேலியேர் கூட காலத்தாலே கோவிலுக்குப் போய் பூசை கேட்டு வந்து கோன்சேல் கூடி இரண்டு மாசத்தின் போது நம்முடைய வீட்டுக்கு எதிரே யிருக்கிற மிஸ்ஸியோனேர் கோவிலிலே இரண்டு பேர் திருடி ஒருத்தன் அகப்பட்டு ஒருத்தன் ஓடிப்போனது. அகப்பட்டவனை இற்றைநாள் கோன்சேலிலே தீர்த்து முத்திரை சாவடிக்கு எதிரே போட்டிருக்கிற தூக்கு மரத்திலே போடத்தக்கதாகத் தீர்த்தார்கள். அந்தப்படிக்குச் சாயங்காலம் ஐந்தரை மணிக்குக் கொண்டு போய்த் தூக்கி ஆறுமணி அடித்த பிற்பாடு இறக்கிக் கல்லறையிலே கொண்டுபோய்ப் புதைத்தார்கள்.
1747 பிப்ரவரி 16 மாசி 8 வியாழக்கிழமை
இற்றைநாள் அழிசபாக்கத்திலே வீட்டைக் கொளுத்தின பெண்டாரிகள், கபாடக்காரரைப் பிடிக்க வேணுமென்று அரியாங்குப்பத்திலேயிருந்து முசியே லத்தூசு முப்பது பேர் சொல்தாதுகளும் இருபது பேர் மாயே சிப்பாய்களும் அழிசபாக்க மட்டுக்கும் போனார்கள். அவ்விடத்திலே போன உடனே இந்த வெள்ளைக்காரரைக் கண்ட மாத்திரத்திலே ஊரைக் கொளுத்தின பெண்டாரிகள் கபாடக்காரர் எல்லாரும் புறப்பட்டு ஓடிப்போனார்களாம். அதிலே மூன்று பேர் அகப்பட்டு அந்த மூன்று பேரையும் பிடித்துப் பின்கட்டு முறையாய் கட்டி இவ்விடத்துக்கு அனுப்புவித்தார்கள். அவர்கள் மூன்று பேரையும் கொண்டுபோய் துரையவர்கள் முன்னே விட்டவிடத்திலே இவர்களாரென்று கேட்டார். இவர்கள் தானய்யா அழிசபாக்கத்திலே வீட்டைக் கொளுத்தினார்கள் என்று சொன்னார்கள். அந்த வார்த்தைச் சொன்னவுடனே துரையவர்களுக்குக் கோபம் வந்து அந்த மூன்று பேரையும் வேப்ப மரத்திலே கட்டச்சொல்லி காப்பிரிகளை விட்டு ஐம்பதைம்படி அடிக்கச் சொல்லி அந்த அடியின் பேரிலே உப்பும் காடியும் விட்டு மேலே தேய்க்கச் சொல்லி தேய்ப்பித்து கோட்டைக் கிடங்கிலே கொண்டு போய்ப் போடச் சொல்லி உத்தரங்களைச் செய்தார். அந்தப்படிக்குக் கொண்டுபோய்க் கோட்டையிலே போட்டார்கள். ஆனால் இவர்களை அடித்தது காப்பிரிகளானபடியினாலே அடி நன்றாய்த் தானே உறுதியாய் ரத்தம் ஒழுகத்தக்கதாக அடிபட்டது.
1747 ஏப்ரல் 8 பங்குனி 29 சனிவாரம்
இற்றைநாள் நடந்த அதிசயமென்னவென்றால்: துரையவர்கள் வளவிலே கின்னரி வாத்தியம் பண்ணுகிற வெள்ளைக்காரன் ஒருவன், துப்பாக்கியிலே இரண்டு குண்டு போட்டுக் கெட்டித்துத் தன்னுடைய கையினாலே தானே சுட்டுக்கொண்டு சாயங்காலம் நாலு மணிக்குச் செத்துப் போனான். முன்னாலே மாசி 16, 19 மாபூசுகான் வந்து சமாதானம் பண்ணிக்கொண்டு போன சந்தடியிலே சின்ன மீராவுடைய தொப்பியை இந்தக் கின்னரி வெள்ளைக்காரன் திருடிக்கொண்டு போய் இந்த மட்டுக்கும் ஒளித்து வைத்துக் கொண்டிருந்து அதை நேற்றைய தினம் எடுத்து ஒருத்தனுக்கு விலை காண்பித்து அதை நின்னை நினைப்பவர் ஒருத்தன் கையிலே கொடுத்து விற்றுக்கொண்டு வரச்சொல்லிக் கொடுத்தவிடத்திலே அவன் போய் விலை காண்பிக்கப் போனவிடத்திலே சின்ன மீரா கண்டு அடையாளம் பிடித்து, உன் கையிலே இதை யார் கொடுத்தார் என்று கேட்க, அதைக் கொண்டு வந்து தன் கையிலே கொடுத்த வெள்ளைக்காரனைக் காண்பிக்க, அதன் பேரிலே இவனை அழைத்து இந்தத் தொப்பியுனக்கு யார் கொடுத்தார் என்று கேட்க, நான் அமானிக்காரர் கையிலே வாங்கினேன் என்று சொல்ல அதிலே அவர் போய் சின்னதுரையுடனே சொல்ல, சின்னதுரை யிருந்துகொண்டு அமானிக்காரரை யெல்லாரையும் அழைப்பித்து, நீயவன் கையிலே வாங்கினாப்போலே சொல்லு என்று கேட்க, இவர்களெல்லாமல்ல இன்னும் வேறேயிருக்கிறார்கள் அவனை நாளைக்குக் காண்பிக்கிறேனென்று சொன்னான்.
ஆனால், இன்னும் நாலத்து ரெண்டு பேர் அமானிக்காரர் வரவேண்டிய பேரையும் அழைத்துக் கொண்டு சாயங்காலத்துக்கு எல்லாரும் வாருங்கோள், விசாரிப்போ மென்று சொன்னார். அந்தமட்டிலே அவரவர் வீட்டுக்குப் போய்விட்டார்கள். அதன் பேரிலே யிந்த கின்னரி வெள்ளைக்காரன் யோசனை பண்ணி, தான் இந்த மட்டுக்கும் மனுஷனாய்ப் பிழைத்தவனான படியினாலேயும் துரையண்டையிலே வரப்போக யிருக்கிறவனான படியினாலேயும் இனிமேல் என்ன மனம் தாக்ஷி வருமோ தெரியாதே, அதன் பிற்பாடு நாலு பேருக்குள்ளே சரீரத்தை வைத்துக்கொண்டு என்னமாய் முகத்திலே விழிக்கப் போகிறேன் என்கிற மானத்தினாலே தீர்க்க யோசனை பண்ணி அவனுக்குப் பிரபல்யம். இந்த மூலியமாய்ச் செத்து இன்ன பாடுபடுவாயென்று எழுதியிருந்த படியினாலே இவனுக்கு இந்தப் புத்தி வந்தது. ஒரு சின்ன வேலையிலேபிராணனைப் போக்கிக் கொள்ளத்தக்கதாக வந்தது.
இதைத் துரைகள் வந்து பார்த்து இவன் பலவந்தமாய் நேரஸ்தனாய்ச் செத்தவனான படியினாலே இவனை வண்டியிலே கட்டி, பட்டணத்திலே வீதிக்கு வீதி இழுத்தெறிந்து போடச் சொல்லி உத்தாரம் கொடுத்தார்கள். இன்றைய தினம் பொழுதுபோன படியினாலே நாளை காலமே அந்தப்படிக்கு இழுத்தெறிந்து போடச் சொன்னார்கள்.
(தொடரும்)