Skip to content
Home » ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #46 – ஆனந்தரங்கரின் ஜோதிட நம்பிக்கை!

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #46 – ஆனந்தரங்கரின் ஜோதிட நம்பிக்கை!

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு

நாள், நட்சத்திரம், கிழமை, சகுனம், ஜோதிடம் இவற்றில் மிகுந்த நம்பிக்கை உடையவர் ஆனந்தரங்கர். இவரது நாட்குறிப்பின் வழிநெடுகிலும் இவற்றை நாம் பார்க்கலாம். இவற்றின் மூலமாக இரண்டு நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட மக்களின் வாழ்வியலை, பழக்க வழக்கங்களை நாம் அறிந்து கொள்ள முடிகிறது. ஆனந்தரங்கரின் ஜோதிட நம்பிக்கைகளுக்கு அடிநாதமாக இருப்பவர்கள் வைப்பூர் சுப்பா ஜோதிடர் மற்றும் கோபால சுவாமி ஜோதிடர். இவர்கள் குறித்துக் கொடுக்கும் ஜோதிடம் தப்பாது என்பது ஆனந்தரங்கரின் அசைக்க முடியாத நம்பிக்கை! ஜோதிடர்களின் கணிப்பைப் பெறுவதில் மட்டுமல்ல; தானே கணிப்பதிலும் வல்லவராக இருந்திருக்கிறார் ஆனந்தரங்கர்.

கிரகணம் நிகழ்வது, பகலில் நட்சத்திரம் காண்பது, வால் நட்சத்திரம் தென்படுவது, ஓயாமல் அடித்த காற்று, கோயில் தேர் முறிந்து விழுவது, சொப்பனம் (கனவு) காண்பது இவற்றின் பலாபலன்களைக் கண்டறிவதில் தீவிர கவனம் செலுத்தினார் ஆனந்தரங்கர், இவரது ஜோதிடத்திற்கு சந்தாசாயபு படுகொலையும் தப்பவில்லை!

தனக்கு நெருக்கமானவர்களின் ஜாதகக் குறிப்புகளைப் பதிவு செய்து வைத்திருக்கிறார் ஆனந்தரங்கர். அந்த வகையில் அவரது மகன் ஜனனம், தம்பியின் மரணம் தொடர்பான ஜாதகக் குறிப்புகள் குறிப்பிடத்தக்கன. மற்றவர்களின் ஜாதகக் குறிப்புகள் மட்டுமல்ல; தனது ஜாதகக் குறிப்புகளையும் ஆங்காங்கே குறிப்பிட்டு அவ்வப்போது சரி பார்த்துக் கொள்கிறார் ஆனந்தரங்கர்.

தனக்கு ஐம்பது வயது முடிந்து ஐம்பத்தொன்றாவது வயது தொடங்கும் போது, ‘யித்தனாள் வலது பாரிசத்திலே கீழ் வரிசையிலே ஒத்தைப்பல் வரிசையிலே அந்திய ஒத்தைப்பல் மத்தியானம் பனிரெண்டு நாழிகைக்கு ஒத்தைப்பல் ஒண்ணு விழுந்தது. இதன் பலா பலன் அறிய வேண்டியது’ எனக் குறிப்பிடுவது ஆனந்தரங்கரின் ஜோதிட நம்பிக்கையின் உச்சக்கட்டம்!

1739 சூலை மாதம் 20 ஆடி 8 திங்கட்கிழமை

இந்த நாள் சாயங்காலம் அஸ்தமித்து நாலு நாழிகைக்கு மேல் சந்திர கிரணம் பதினோரு மணிக்கு விட்டுப்போச்சுது. ஆனால் இந்தக் கிரணம் 9/10 கிரணம் முக்காலே மூணுவீசம்.

1739 டிசம்பர் 8 கார்த்திகை 26 செவ்வாய்க்கிழமை

இந்த நாள் இராத்திரி நடந்த அதிசயம் என்னவென்றால் சவரிமுத்து முதலி மகனுக்கு ஆச்சாரப்பனுக்கு சரீரம் சுவஸ்தமில்லாமலிருந்த படியினால் அந்த வீட்டிலே அந்த வியாதியஸ்தனுடனே கூட படுத்துக்கொண்டிருந்த பேர் ஐயா மேஸ்திரி, கனகப்ப முதலி, அம்மையப்ப முதலி மைத்துனன் பேர்விளங்கன், வெள்ளாழப் பிள்ளையாண்டான் ஒருத்தர் ஆக நாலு பேர் படுத்திருக்கும் போது இராத்திரி நாலு நாழிகைக்கு மேல் நாலு தடிக்காரரும் ஒருவன் சேருவைக்காரன் போலேயும் ஆக அஞ்சு பேருமாய் வந்ததாய் தலைக்கடையிலே படுத்திருந்தவன் சொப்பனம் கண்டானாம்.

அப்படியிருக்கச்சே தானே அந்த அஞ்சு பேரும் மெய்யாக வந்ததாய் அவன் கண்ணுக்குத் தோத்தப்பட்டு அதின்பேரிலே அவனை ஒரு தடிக்காரன் ஓங்கி ஒரு அடி போட்டானாம். அவன் அந்த மட்டிலே திண்ணைமேல் படுத்திருந்தவன் தாழ விழுந்து பயந்து பயந்து குப்புறப்படுத்துக் கொண்டு விட்டானாம். அப்படி இருக்க அவனை விட்டுப்போட்டு உள் கட்டுக்குப் போய் கதவை இடிச்சார்களாம். உள்ளே படுத்திருந்த பேர் ஆரோ தெரியாது என்று பேசாமல் இருந்தார்களாம். அப்படியிருக்க நாலு தரம் ஆறுதரம் மறுபடியும் கதவை இடிச்சார்களாம். அதின் பேரிலே அய்யா மேஸ்திரி என்கிறவன் எழுந்திருந்து ஆரடா அது கதவை இடிக்கிறது என்று கதவைத் திறந்து பார்த்தான். அந்த மட்டிலே போய் படுத்துக் கொண்டான்.

பின்னையும் சத்து நேரத்துக்குள்ளே எல்லாம் சரீர சுஸ்தமில்லாமல் இருக்கிற ஆசாரப்பனுக்கு சலவை போலே கண்டு, பேச்சு மூச்சு இல்லாமல் பிராண அவஸ்தை கண்டது. அப்படி கண்டவுடனே இந்த வயித்தியன் அய்யா மேஸ்திரியை எழுப்பி பார்க்கச் சொன்னார்கள். இவன் எழுந்திருந்து கிட்டப்போய் கையைப் பிடிச்சு பார்த்த மாத்திரத்திலே இவனுக்கு சொர்னை தெரியாமல் அந்த மட்டில் மல்லாக்க விழுந்து இவனும் பேச்சு மூச்சுயில்லாமல் போகிறது வருகிறதுமாய் தலையும் நாணிப்போய் காங்கையெல்லாம் சோர்ந்து போச்சுது.

அந்த மட்டில் இரண்டு மூணு பேராய் கூடி கைவாகிலே எடுத்துக்கொண்டு போய் அய்யா மேஸ்திரி வீட்டிலே கொண்டு போய் போட்டுவிட்டு வந்துவிட்டார்கள். உள்ளே படுத்திருந்த பேருக்குள்ளே இரண்டு பேர் பேச்சு பிறள இப்படி ஆச்சுதே பின்னை ஒருத்தன் வெள்ளாழப் பிள்ளையாண்டான் பெட்டி மேலே படுத்திருந்தவனை அழைத்து அழைக்க பேச்சு மூச்சுயில்லாமல் கிடந்தவன் கிடந்தபடியே சுரணை தெரியாமல் பிடவையுடனே மூத்திரம் பேஞ்சுக்கொண்டு அவன் பேச்சும் ஆயிப்போனதாய் தீந்தது. அதின் பிறகும் மந்திரவாதியான சோனகன் இப்படிப்பட்ட பேர்களை அழைப்பிச்சு பார்க்கச் சொன்னார்கள். அவர்கள் வந்து பார்த்து அதுக்கொத்தபடிக்கு கோழி கொண்டுவந்து சுத்தியும் சோறு சுத்திப் போட்டும் கழிப்பு கழிக்கிறதென்று சொல்லியும் தமிழ் ஞாயத்துக்குள்ளே எப்படி நடக்குமோ அதைப்பார்க்கப் பின்னையும் பத்துப்பங்கு அதனமாயும் மந்திரவாதியன் நடப்பிச்சார்கள். அதுகளுக்கெல்லாம் அவர்களும் சம்மதிச்சு இவர்கள் கேட்டதெல்லாம் கொண்டுவந்து கொடுத்து சம்மதியானபடிக்கு பார்க்கச் சொன்னார்கள்.

எப்படி நடப்பீர்கள் என்று பிராது பண்ணினார்கள். அதின் பேரிலே கனகராய முதலி சொன்னது இப்படி யெல்லாம் பார்த்தபடியினாலே இந்தப் பிள்ளை பிழைச்சுது. இப்படிப் பாராமல் உங்கள் பேச்சைக் கேட்டல்லவா முன்னே என் பிள்ளை விருதாவிலே செத்துப் போச்சுது என்று ரொம்பவும் நிந்தையாய்ச் சொன்னார். அதின் பேரிலே அவர்கள் பேசாமலிருந்தார்கள்.

1743 ஒக்தோபர் 31 அற்பிசி 18

கோபால நாராயணய்யர் அனுப்பிவித்துக் கொண்டு பயணம் புறப்பட்டுச் சாயங்காலம் ஊருக்குப் போய்விட்டார். கோபால நாராயணய்யர் சேஷாசல செட்டியாருக்குக் கடன் கொடுக்க வேண்டிய சம்மதிக்காக முன்னாலே கிராணத்தின் போது மாயே துலுக்கர் போய் மரிகிருஷ்ணாபுரத்திலே பிடித்துக் கொண்டு வந்து கோட்டையிலே பாதாளக் கிடங்கிலே போட்டு வைத்திருந்து பிற்பாடு உடன்படிக்கை பண்ணிக்கொண்டு முத்தியாபிள்ளையவர்கள் வளவிலே யிருந்தவர் இந்த நாள் வியாழக்கிழமை நாள் மத்தியானம் பதினோரு மணிக்கு நம்முடைய வளவுக்குச் சேஷாசல செட்டியாரும் கோபால நாராயணய்யரும் வந்து தண்டாபாரிக்குப் பண்ணி நம் முன்பாகத் தீர்த்துக்கொண்டு பாரீக்தும் எழுதிக்கொடுத்துத் தீர்த்து துரையவர்கள் உத்தாரப்படிக்கு இருவருக்கும் சமாதானம் பண்ணிவித்து இவர் கை பாக்கு வெற்றிலை அவருக்கும், அவர் கை பாக்கு வெற்றிலை இவருக்கும் வாங்கிக் கொடுத்துச் சமாதானம் பண்ணி அனுப்பிவிட்டோம்.

1743 டிசம்பர் 2 கார்த்திகை 20 திங்கட்கிழமை நாள்

மத்தியானம் முத்தைய முதலியை பயணம் பண்ணி காரைக்காலுக்கு அனுப்பினார்கள். என்ன நிமித்தமானால் காரைக்காலிலே நம்முடைய குத்தகைக் கிராமத்து கவைகாரியம் பார்க்கத்தக்கதாக மாதம் 1க்குச் சம்பளம் வராகன் 2½ விழுக்காடு சம்பளம் பண்ணி சாயங்காலம் அனுப்பினார்கள். நாளது திங்கட்கிழமை நாள் சென்னப்பட்டணம் முத்துப் பிள்ளையை சென்னப்பன் நாயக்கன் பாளையத்துக்கு அனுப்பினார்கள். அவ்விடத்திலே ராமலிங்கய்யருடனே கூடமாட யிருந்து காரியம் பார்க்கச் சொல்லி அனுப்பிவித்தோம். முத்தையா முதலி காரைக்காலுக்குப் பயணமாய்ப் போயினர். அரியாங்குப்பம் மட்டுக்கும் போய் சகுனத்தடையாயிருக்கிற தென்கிறதாய் போகாமல் புறப்பட்டு வந்துவிட்டார்.

1743 டிசம்பர் 19 மார்கழி 8 வியாழக்கிழமை நாள்

இற்றைநாள் சாயங்காலம் நாலுமணிக்குக் கண்ட அதிசயமென்ன வென்றால் இதுவரைக்கும் பத்துப்பதினைந்து நாளாய்ப் பட்டப்பகலிலே நக்ஷத்திரம் கண்டு கொண்டு வந்தது. பிற்பாடு இரண்டு நக்ஷத்திரம் கண்டுகொண்டு வந்தது. அதென்னமோ விபரீதமென்றும் பட்டம்பகலிலே நக்ஷத்திரம் காணுகிறது ஆச்சர்யமாயிருக்கிறதென்று சொன்னார்கள். அப்படியிருக்க இற்றைநாள் சாயங்காலம் நாலு மணிக்கு வாயு மூலையிலே ஒரு நக்ஷத்திரம் பூசணிக்காய் பருமனிலே எரிந்துகொண்டு விழுந்தது. அதை இந்தப் பட்டணத்திலுள்ள பேர்களெல்லோரும் கண்டார்கள். ஆனாலிதனாலே என்ன விபரீதம் பிறக்குமோ தெரியாது என்று சகலமான பேரும் சொல்லிக் கொண்டார்கள். பட்டம் பகலிலே நக்ஷத்திரம் எரிந்து விழுந்தது ஒரு காலாகாலங்களிலேயுமில்லை என்றதாக சகல சனங்களும் சொல்லிக் கொண்டார்கள்.

1743 தெசம்பர் 29 மார்கழி 18 ஆதிவாரம் நாள்

சாயங்காலம் மேற்கே ஒரு நக்ஷத்திரம் வால் முளைத்த நக்ஷத்திரம் கண்டது. அதை தூமகேது வென்று சொன்னார்கள். இது நல்ல நாளைக்குக் காணாதாம். இதினாலே என்ன காலக்கேடோ தெரியாதென்று வெகுசனங்கள் அங்கலாய்த்தார்கள்.

1745 நவம்பர் 23 கார்த்திகை 12 செவ்வாய்க்கிழமை நாள்

ராத்திரி ஒரு சாமமட்டும் காற்றடித்தது. ஆனால் முன் அற்பிசி 21 அடித்த காற்றிலே நாற்பதிலே ஒரு பங்கு காணும். மறுபடியுமிப்போ எதிர்காற்று அடிக்கக் காரணமேதென்றால்… அமாவாசை கேட்டை நக்ஷத்திரம் செவ்வாய்க் கிழமையும் ஒன்றாய்க் கூடினபடியினாலே காற்றுக்கு யோகமிருக்குதென்று சொன்னார்கள். அந்தப் படிக்கு சாஸ்திரம் தப்பாமல் சாடையாய் அடித்துவிட்டது.

1746 ஒக்தோபர் 22 அற்பிசி 9 சனிவாரம்

இந்தநாள் நவமியான படியினாலே அற்பிசி முதல் பெருங்காற்று மழையும் துவக்கினவுடனே தென்றல் காற்று திரும்பினது. இன்றைகாலமே வரைக்கும் அடித்து அப்பால் வாடை திரும்பி மூசாப்பாய் மப்பும், மழையும், காற்றும் உறங்கண்ட படியினாலே குவர்னதோர் பனிரெண்டு மணிக்குக் கப்பல்காரரை யெல்லாம் கப்பலின் பேரிலே ஏறச்சொல்லி அந்த க்ஷணமே ஏற்றியனுப்பி விட்டார்.

1746 நவம்பர் 18 கார்த்திகை 6 சுக்கிர வாரம்

இற்றைநாள் சுப்ரமணியர் சஷ்டியானபடியினாலே சின்ன பரசுராப்பிள்ளை பெண்சாதி சஷ்டி உத்தியாபனை விரதம் பண்ணினதும் ஆறு கலசம் வைத்துச் சகல சம்பிரமும் தானமும் நானூறு வராகன் மட்டுக்கும் செலவழித்தார்கள்.

1747 அவ்ரில் 10 சித்திரை 1 திங்கட்கிழமை

இற்றைநாள் சாயங்காலம் முசியே லத்தூசு சென்னப்பட்டணத்திலேயிருந்து வந்து சேர்ந்தான். ஆனாலிந்த பிரபவ பிறந்து என் கஷ்டகாலம் போய் நல்ல காலம் பிறந்தது. வைப்பூர் சோசியன் எழுதினபடிக்கு இந்த வெகு அதிசயமாய் நடந்து ஆதாயமும் வந்து தின விமோசினமாகவேணும். இப்படி சுவாமி ரக்ஷிப்பார் என்று முழுமனதுடனே நம்பியிருக்கிறேன்.

1747 ஏப்ரல் 22 சித்திரை 13 சனிக்கிழமை

இற்றைநாள் நடந்த சுபாதிசய மென்னவென்றால்: நம்முடைய பல்லக்குப் போய் ராம என்கிறவன் மத்தியானம் பதினொன்றரை மணிக்கு நல்ல வெய்யிலான படியினாலே பல்லக்கு அண்டையில் இருந்தவன் அங்கே தானே படுத்துக் கொண்டு அசந்து நித்திரை போனவிடத்திலே ஒரு சொற்பனங்கண்டு திடுக்கென்று விழித்துக்கொண்டு எழுந்து வந்து நான் இருக்கிற பாக்குக் கிடங்குக்கெதிரே திகைத்தாப்போலே நின்று சுற்றும் பார்த்துக்கொண்டு நிற்கிறதைக் கொண்டு எளைச்சியப்பனிருந்து கொண்டு, என்னடா பயித்தியம் பிடித்தது போல் நிற்கிறாய் என்னவென்று கேட்டதற்கு அவன் சொன்ன வயணம்:

நான் பல்லக்கண்டையிலே படுத்துக்கொண்டு நித்திரை வந்தது. இப்போது தான் கண்ணை மூடினேன். இதற்குள்ளே இரண்டு பெண்கள் எவ்வர்ணமாய் மெத்த சிவப்பாயிருக்கிறார்கள். அவர்களுடைய அழகைக் கண்கொண்டு பார்க்கப்போதவில்லை. சர்வாபரண பூஷிதமாய் நவரத்தினமும் தரித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களிரண்டு பேரும் ஒரு சுடர் பெண்களாய்த் தலை மயிர் சடை பின்னிப்போட்டுக் கொண்டு, தங்கமயமாய்த் தகத்தகாயமாய் ஆபரணம் பூண்டுகொண்டு வந்தபடியினாலே எனக்கு பிரமித்துப் போய், அவர்கள் கட்டியிருக்கிறது இன்ன புடவையென்று எனக்குப் புரியவில்லை.

அவர்கள் இரண்டு பேரும் மேற்கேயிருந்து வந்தார்கள். அவர்கள் பிறகே நூறு பேருக்குண்டு. கும்பல் அவர்களைச் சூழ்ந்துகொண்டு வந்தார்கள். அவர்கள் பிறகே ஒருத்தி ரெட்டிச்சிப்போலே யிருக்குது. அவள் பிறகாலே வந்தாள். இத்தனை கூட்டத்தோடே முன்னே வந்த இரண்டு பெண்களும் சரேலென்று பாக்குக் கிடங்குக்குள்ளே நுழைந்து முன்னண்டையிலே யிருக்கிற கீழ்ப்பக்கம் திண்ணையின் பேரிலே பிள்ளையவர்கள் தலையணையின் பேரிலே சாந்து கொண்டிருக்கச்சே இரண்டு பக்கத்திலும் வந்து இரண்டு பெண்களும் உட்கார்ந்தார்கள். அந்தப்படியே அவர்கள் பிறகே வந்த கும்பலெல்லாம் தெரு நிறைந்ததென்று தண்டு வந்திறங்கினாப்போலே யிருக்குது. அதற்குள்ளே திடுக்கென்று விழித்துக்கொண்டு தெருவிலே பார்த்தால் ஒன்றையும் காணோம்.

அதன் பேரிலே எழுந்திருந்து இப்போது வந்து உள்ளே நுழைந்தவர்களாரோ பார்ப்போமென்று வந்தேன். உள்ளே ஒருத்தரையும் காணோம். ஆனால் சொற்பனம் கண்டேனாங்காட்டுமென்றும் திகைத்தா போலே நின்று இங்கே ஆராகிலும் பெண்டுகள் வந்தார்களாவென்று இங்கேயிருக்கிற பேர்களைக் கேட்கப் போகிறேனென்று நிற்கிறேன் என்று சொன்னானாம். அதைக்கேட்டு வந்து இரண்டு மணியடித்து நான் வளவுக்குப் போகவேணும் என்று பயணமாயிருக்கச்சே இந்தச் சேதியை எளைச்சியப்பன் கேட்டுவந்து என்னுடனே சொன்னான். இதனுடைய பலன் என்ன சுபம் நடக்குதோ அறியவும் வேணும்.

1747 ஒக்தோபர் 22 அற்பிசி 9 ஆதிவாரம்

இற்றைநாள் நடந்த அதிசயமென்னவென்றால்: நானொரு சொற்பனம் கண்டேன். அதென்னவென்றால்: ஒரு பெண்சாதி ஒருத்தி கையிலே சீகாய் முத்திரைகளும் திறவுகோல்களும் ஒருக்காலே கொண்டு வந்து என் கையிலே கொடுத்து இது ஏழு எட்டுக் கோட்டைச் சாவிகளும் முத்திரையளுமிதுகளெல்லாம் நீர் வைத்துக் கொண்டு சகலத்துக்கும் அதிகாரியாயிருக்கப் போகிறீர். நான் கொண்டு வந்து கொடுத்தேனே இது முதலாக உமக்குச் சிரேசுகரமாய் நடக்குமென்று சொல்லிக் கொடுத்தாள். அதை வாங்கிக் கையிலே பிடித்துக்கொண்டு ஒரு கையிலே பிரம்பை ஊன்றிக்கொண்டு மெத்தையின் பேரிலே ஏறிப்போகிறாப்போலே யிருக்குது. அப்படி யிருக்கச்சே ஆறுமுகம் கிசாழத்தைக் கொண்டு வந்து கையிலே வைத்துக்கொண்டு தட்டியெழுப்பினான். அவன் தட்டினது என்னமாயிருந்த தென்றால் மெத்தையின் பேரிலே போகச்சே கால் நோவினாலே சாரப்போகுது என்று அவன் எச்சரித்தாப்போலே கண்டது. அதற்குள்ளே நான் விழித்துக் கொண்டேனே!

மெத்தை மேலே கட்டியிருக்கிற மணி ஐந்தடித்தது. அடித்தவுடனே எதிரிலே யிருக்கிற பாதிரி கோவிலிலே பூசைமணி விஸ்தாரமாய் அடித்தது. அந்த மட்டிலே எழுந்திருந்து இப்புறத்திலே வந்து உட்கார்ந்தேன். மெழுகுவத்தியைக் கிட்டே கொண்டுவந்து வைத்தான். வைத்தவுடனே பலபலவென்று பூவு மூன்று தரம் உதிர்ந்தது. ஆறபடியினாலே இன்றைய தினம் நான் கண்ட சொற்பனத்திற்கு எழுந்திருந்தவுடனே மணி அடித்ததும் மயினப்புவனத்திலே புறாவீனதும் என்னுடைய மனதுக்கு இருக்கிற சந்தோஷமும் பார்த்தால், இன்று முதலாக மகத்தான அயிசுவரியமும் வரும். மெத்த மேன்பாடாய் நடக்கும். அதற்குப் பின்னையும் ஒன்றும் சந்தோஷமில்லை.

அந்தப்படிக்குக் கெட்டியாய் சுவாமி தயவுபண்ணி வைப்பார் எனறெண்ணிக் கொண்டதுமல்லாமல் சுக்கிர திசையிலே சனிபுத்தி இன்றைய தினத்துடனே நிவர்த்தி யானபடியினாலேயும் நாளைய தினம் முதற்கொண்டு சுக்கிர திசையிலே புதன் புத்தியானபடியினாலேயும் நாளைய தினம் முதற்கொண்டு கெசாந்த அயிசுவரியமும் பனிரெண்டு பட்டணத்துக்கு அதிகாரமும் வருமென்றும் எழுதினதற்கு ஏஷியமாயிருக்குதென்று எண்ணிக்கொண்டு வந்து உட்கார்ந்த விடத்திலே தான் விளக்கிலே பூ உதிர்ந்தது. இனிமேல் நடக்கிற காரியம் மேலே எழுதப்பட்ட சொற்பனமும், சோசியமும், சகுனமும் விளங்கப்பண்ண வேண்டியது.

1748 சனவரி 7 மார்கழி 27 ஆதிவாரம் ரேவதி நக்ஷத்திரம் அஸ்த அஷ்டமா

… அப்பால் நித்திரை பண்ணி எழுந்திருக்கிற வேலையிலே சாயங்காலமான ஆறு மணியாச்சுது.‌ அப்போது திருவேங்கடப் பிள்ளையவர்கள் மருமகள் மங்காத்தா வயிறு நொந்து படுகிறாளென்று வந்து சொன்னார்கள். … அப்போது நான் எழுதிக்கொண்டிருக்கிற கபினேத்திலே இருக்கச்சே, ராமநாதமுதலி, ஞாதி குமாரப்ப முதலி மகன் வெங்கடாசலம் வந்து ஆண்பிள்ளை பிறந்ததென்று சொன்னான். அப்படியே லக்னம் கடக லக்னம்.

… செனனி சென்ம சௌக்கியானாம் வர்த்தனீ குலசம்பதாம் பதவீ பூர்வ புண்ணியா னாம் லிக்கியதே சென்மபத்ரிகா. பெற்றார் பிறந்தார் பிறவித்துயர் தீர உற்றார் குலந்தழைக்க உண்மையாய்த்தே ராமனெழுதியபடியதனை எல்லாரும் காண வழுத்தினோம் பத்திரிகை வாய்த்து சுவஸ்த சாலிவாகன சகாப்த 1669- கலியுகாப்த 4848க்கு மேல் செல்லா நின்ற பிரபவ மார்கழி 27 ஆதிவாரம் பூர்வ பக்ஷம் சப்தமி 23¾ , ரேவதி நக்ஷத்திரம் 50க்கு, சிவநாம யோகம் 52 7/8 , வணிகரணம் 21½ , திரி 24½ உத்திராடம் கலி சூரியன் 24 ½ , திருவோணம் 2-ல் சுக்கிரன் 26 உத்திரட்டாதி 25-14க்கு மேல் ரேவதிக்கு சுபதினத்தில் பிரம்பூர் தி.திருவேங்கடப் பிள்ளையவர்கள் குமாரன் ஆனந்தரங்கப்பிள்ளை அவர்களுக்கு மத் புண்ணிய குமாரர் செனனமானதற்குக் காலக்கிரக நிலை:

இராத்திரி 2-3¼ க்கு மேல் கற்கடக லக்கினத்தில் செல்லு 2-2 1/3 க்கு கடுசந்திர வோரை விருச்சிகச் செவ்வாய், திரிகரணம் விருச்சிக செவ்வாய், நவாங்கிசம் தனுர் குரு, துவாதி சங்கிசம், குத்திரிங்காங்கிசம் 104. வேளை சென்ம லக்கினம் கற்கடக லக்கினத்திலே ஆயில்யம், 4-ங் காலில் மீனாமிசையில் கற்கடக லக்கினத்தில் கேது. துலாமிடமான துலாத்தில் சுவாதி, 4-ங் காலில் மீனாமிசையில் சனி, ஆறாமிடமான தனுசில் உத்திதற்காலில் தனுராமிசையில் இராகு. இதில் திருவோணம், ரெண்டாங்காலில் ரிஷபமாமிசையில் சுக்கிரன் இதில் உத்திராடம். 4-ங் காலிலே மீனாமிசையில் ராசா. எட்டாமிடமான கும்பத்தில் சதயம். மூன்றாங் காலில் கும்பாமிசையில் செவ்வாய். 9-ம் இடமான மீனத்திலே ரேவதி. மூன்றாங் காலில் கும்பாமிசையில் சந்திரன் ரேவதி. ஆதியந்தம் 2-61க்கு மூன்றாம் பாதத்தில் செல்லு 2-7 நின்ற நாழிகை 8 ¼ புதன் மகாதிசையில் செல்லுக்கு 10 ½ நின்ற வருஷம் 6½. புத்தி அறிய புதனில் ராகுபுத்தி. வருஷம் 1½. நாள் 15. சுபமஸ்து. தீர்க்காயுஷ்யமஸ்து.

கார்த்திகை 6 1748 நவம்பர் 17 ஆதிவாரம்

என் ஜாதகப்படிக்கு கோபால்சுவாமி எழுதிகொடுத்துப் பிரகாரம் சுக்கிற திசையிலே ஐந்து மாதம் நாளிருப்பதற்கு நேத்து அஞ்சு தேதி வரைக்கும் நாள் சரி. ஆனால் முன் போகப்பட்ட சுக்கிர சித்திரத்திலே பூருவராததன் திரவியம் வந்தாலும் சத்துருக்கு விருத்தியாயிருந்து அப்பால் வுத்திரார்த்தம் வந்தாப்போலே சத்துருக்கள் எனக்கு யெப்படி விருத்தியாய் காரிய பாகங்களும் அவ்விடத்துக்கும் அவ்விடம் நின்று தோட்டங்கள் முதலானதுகளெல்லாம் நஷ்டம் வந்தது; நஷ்டம் வந்ததனால் அப்பால் குடியாயிருந்தது மல்லாமல் சத்துருக்கள் அபாண்டமாய் சொன்னதுகள் மிதமில்லாமல் இருந்தபடியினாலே பட்டணத்துக்கும் கலகம் முதலானது களெல்லாம் நடந்தது. இன்றைய தினம் ஆதிவாரம் நாள் முதல் சுக்கிர திசையிலே புதபுத்தியிலே சூரிய சந்திரன் அன்பத்தொரு நாளிலே என்ன நடக்குதோ அறிய வேண்டும்.

1750 மாயு 6 சித்திரை 27 புதவாரம்

… யிப்போ பதினஞ்சு நாளைக்கு முன்னே சென்னப்பட்டணத்திலே யேகாம்பரீஸ்வரன் கோயில் திருநாள் நடத்தின போது தேர் ஓடச்சே தேர் விழுந்ததென்றும் கோட்டையிலே பெரிய நக்ஷத்திரம் எரிஞ்சுக்கொண்டு விழுந்ததென்று யிதனாலே செனத்துக்கு இசைகேடு வரும் தப்பாதென்று முன் அக்ஷய ஆவணி 1746 ஆகஸ்டு செப்தம்பர் பிள்ளையார் சவுத்திக்குச் சரியாய் அன்றைய தினமே சிந்தாதிரிப் பிள்ளையார் தேர் உற்சவத்துக்கு அப்படித்தான் ரதம் விழுந்ததென்றும் உடனே அக்ஷய பிரட்டாசி 6 1746 செப்தம்பர் 21 பிறான்சக் கொடி விழுந்ததென்றும் ஆனபடியினாலே அந்த பொல்லாத குறிப்பைத் தொட்டு சென்னப்பட்டணம் போதென்றும் அதுக்கடுத்த யேஷியம்….

1752 சூன் 18 ஆனி 8 ஆதிவாரம்

சந்தாசாயபுக்கு இது கெண்டகாலம் தப்பிதமில்லை. எப்படி யென்றால் வைப்பூர் சீத்தாராம் சோசியன் சோசியப்படிக்கு சனிப்பாச்சல் வருஷம் ஆனபடியினாலே இந்தக் கெண்டம் தப்பாது. சனிப்பாச்சல் பனிரெண்டு வருஷத்துக்கு ஒரு திரம் பாயுரதான படியினாலே இந்தக் கெண்டம் தப்பாது.

1754 செப்தம்பர் 8 ஆவணி 27 ஆதிவாரம்

இத்தனாள் ராத்திரி பதினோரு மணிக்கு நான் சாப்பிட்டு இருக்கச்சே, பதினொன்றரை மணிக்கு தம்பிக்கு ஊர்த்த சுவாசம் போலே கண்டுது. அப்பால் நான் கிட்டப்போய் செய்விக்க வேண்டிய சடங்குகளெல்லாம் செய்விச்சு, அவனும் சொல்லத்தக்க சேதிகளெல்லாம் சொல்லி ஆன பிற்பாடு, பனிரெண்டு மணி சரியாய் அடிச்சவுடனே தம்பி சரீரத்தை விட்டு ஆத்துமா சுவாமியுடைய பாதார விந்தத்தை அடைந்தது.

இவனுடைய சனனம்- விசைய வருஷம் மார்கழி மாசம் 7ஆம் தேதி திங்கட்கிழமை. பூராட நக்ஷத்திரம் ராத்திரி யிருபத்தைந்து நாழிகைக்கு துலா லக்னத்தில் ரெண்டாமிடமான விறுச்சகத்தில் சுக்கிரன், ராகு: மூணாமிடமான தனுசில் ரவி, புதன் சந்திரன்: நாலாமிடமான மகரத்தில் அங்காரகன்; அஞ்சாமிடமான கும்பத்தில் குரு; எட்டாமிடமான விருஷபத்தில் கேது; பத்தாமிடமான கடகத்தில் குளிகன்; பதினோராமிடமான சிங்கத்தில் சனி, யிப்படி நவக்கிரகங்களு மிருக்கிற வேளையிலே பிறந்த பிரம்பூர் திருவேங்கடப் பிள்ளை அவர்களுக்கு திவ்விய குமாரனாகிய திருவேங்கடப் பிள்ளை அவர்கள் சனனம்.

யிவருக்கு கலியாணம் ராட்சஸ வருஷம் ஆனி மாசம் 11ஆம் தேதி புத்திர சனனம் நள வருஷம், மாசி மாசம் 19ஆம் தேதிக்குச் செவ்வாய்க்கிழமை ராத்திரி நாழிகை 27க்கு மகர லக்கனம். புத்திரி சின்னம், ரவுத்திரி வருஷம் அற்பிசி மாதம் 10ஆம் தேதி சனிவாரம் ராத்திரி 24 நாழிகைக்கு கன்னியா லக்கனத்தில், யிப்படி யெல்லா மிருந்து சகல சவுக்கியத்திலேயும் போகத்துக்குள்ளே தேவேந்திரனைப் போலேயும் தானத்துக்குள்ளே கருணன் போலேயும் புத்தியிலே யூகி மந்திரியைப் போலேயும் தைரியத்திலே யிமாசலத்தைப் போலேயும் காம்பிரயத்திலே சமுத்திரத்தைப் போலேயும் யிப்படியாக – நாற்பது வருஷமும் யெட்டு மாசமும் யிருபது நாளும் சுகமாயிருந்து, பவ வருஷம் ஆவணி மாசம் 27ஆம் தேதி ஆதிவார நாள் ராத்திரி பதினஞ்சு நாழிகைக்கு மேல் பதினாறு நாழிகைக்குள்ளாக வைகுண்ட பிறாப்த்தி ஆனார்.

அப்போது நமது வீட்டுக்குள்ளே யிருந்த சனங்கள் சகலமான பேருக்கு யிருந்த மனது பிறபஞ்சம் முழுகினாப் போலே யிருந்ததே யல்லாமல், பின்னை ஒரு விதமாயிருக்கவில்லை. மரண லக்கனம், மிதுனம், நக்ஷத்திரம் ரோகுணி; தத்துக்கால பஞ்சாங்கம் : பவ வருஷம் ஆவணி மாசம் 27ஆம் தேதி ஆதிவாரம் அமரபக்ஷம், ஷஷ்ட்டி திதி நாழிகை 6 ¾ க்கு மேல் சப்தமி காற்திகை, நாழிகை 20 ¾ , ஆறுஷணம் 26 ½ பத்திரவாக்கரணம் 6 ¾ , திவா ராத்திரி வற்சியம் பூச்சியம் பிருதுக்கு தத்கா கிரக நிலை மூண்மிடமாகிய சிங்கத்தில் குரு, சூரியன், புதன், நாலாமிடமாகிய கன்னியில் சுக்கிறன், செவ்வாய், ராகு; ஏழாமிடமான தனுசில் சனி, பத்தாமிடமாகிய மீனத்தில் கேது; பனிரெண்டாமிடமான விருஷபத்தில் சந்திரன்; யிப்படி நவக்கிரக நிலை நிற்க மறணத்தை அடைந்தார்.

1760 மார்ச்சு 31 பங்குனி 22 திங்கள் கிழமை

இத்தனாள் யென் சாதகப்படிக்கி அன்பத்தோராம் வருஷம் ஆயி அன்பத்தி ரெண்டாம் வருஷம் வந்து முதல் நாளானபடியினாலே சிம்சுமார் சக்கிறப்படிக்கி, சூரிய கெதிப்படிக்கு, பூமண்டலத்துக்கு யெல்லாம் யின்று முதல் கொண்டு சல்லிய சக்கரம் திரும்பி விடுகுறதான படியினாலே, யிந்த சல்லிய சக்கிரம் மேஷ சக்கரமானது முதலாய் கன்னியா ராசி வரைக்கும் ஆறு சக்கிரத்துக்கும் வருஷம் அன்பத்து நாலும் யிந்த நாலு சக்கரம் 1க்கு ராசியின் பேரிலே வருஷம் ஒன்பதாக, வருஷம் அன்பத்து நாலும் யிந்த ஆறு ராசியின் பேரிலே சூரியன் போடுகிற படியினாலே, யிது பகல்க்காலம் ஆனபடியினாலே சல்லிய சக்கிரம் யென்று சொல்லப்பட்டுது. முன் கெண்டம் நடந்துது. துலா ராசி முதலாய் மீன ராசி வரைக்கும் ராசி ஆறுக்கு வருஷம் அன்பத்து நாலும் ராத்திரி காலம் ஆனபடியினாலே அபசல்லிய சக்கிரமென்று சொல்லபபட்டுது.

அபசவ்விய சக்கிரம் மூணு ராசியும் பூறுவாத்துமமான படியினாலே முன்னிருந்த பலனுக்கு யிறக்கம் குடுத்தாலும் அது தெரியாமல் வந்தது. யிப்பறம் உத்தாரார்த்தம் மூணு ராசியும் அதிக யிறக்கமாய் வரையறவாய் அடிபடுகுற ராசியான படியினாலே மீன வரைக்கும் உள்பட்ட ராச்சியத்திலே கடிக்ஷரம் தாம்பிறங்களினாலே ராசாக்களுடைய அந்தக் கலகத்தினாலே ராச்சியங்களெல்லாம் ரக்ஷிக்கப்பட்டு திரவியம் சகியாது முதலான ரச வர்க்கங்கள் யெல்லாம் முன் சவ்விய சக்கிரத்துக்கு யெப்படி சகலமும் உற்பத்தியாச்சுதோ அப்படி யிந்த அபசவ்விய சக்கிரத்துக்கு அந்நியம் மீன சக்கிரமான படியினாலே பூமியிலே முன் யெப்படி உற்பத்தியாச்சுதோ அப்படி சகலமும் அகப்பட்டுப் போச்சுது. யின்னைய வருசம் மட்டுக்கும் முன் யெப்படி வயக்கப்பட்டுப் போச்சுதோ அப்படி உற்பத்தியாயி தினம் தினம் அபிவிருத்தியாய் சகலமும் நடக்கும்.

யென் சாதகப்படிக்கும் சிமிசுமார சக்கிரப்படிக்கும் நாளை இருபத்தி மூணாந்தேதி செவ்வாய்க்கிழமை முதல் கொண்டு விக்கிறம வருசம் சித்திரை மாசம் முதல் தேதியன்று கணக்குப்பார்த்துக்கொள்ள வேண்டியது. பூமி சக்கிரப்படிக்கிப் பஞ்சாங்கக்காரர் சொல்லுகுறபடி சவுரமான படிக்கி விக்கிரம வருசம் சித்திரை மாசம் முதல் கொண்டு பார்த்துக்கொள்ள வேண்டியது. பலாபலன் பூமியிலே நடக்கிற படியினாலே பூச்சக்கிரப்படிக்கி விக்கிறம வருசம் சித்திரை மாசம் முதல் புதன்கிழமை முதல் கொண்டு பலாபலன் பார்த்துக்கொள்ள வேண்டியது.

யித்தனாள் வலது பாரிசத்திலே கீழ் வரிசையிலே ஒத்தைப்பல் வரிசையிலே அந்திய ஒத்தைப்பல் மத்தியானம் பனிரெண்டு நாழிகைக்கு ஒத்தைப்பல் ஒண்ணு விழுந்தது. யிதுக்கு முன் தாது வருஷம் கார்த்திகை மாசத்தையிலே யிடது பாரிசத்திலே மேல் வரிசையிலே ரெட்டைப் பல்லிலே கடைசி பல்லுக்கு யிப்புறத்துப் பல்லு ஆதியாய் வெகுதானிய வருசம் கார்த்திகை மாதத்துக்கு வருஷா வருஷம் காற்திகை மாசத்தையிலே மூணு பல்லு விழுந்தது. அங்கே ஆடி மாசம் முதல் ரோகம் ஆரம்பமாம் என்கிறது. கார்த்திகை மாசத்தையிலே அதிகமாயி நிவற்தியாகிறது. யிந்த வருஷம் கார்த்திகை மாதம் ரோகம் ஆரம்பிச்சபடியினாலே பங்குனி மாசம் 22 தேதி பனிரெண்டு நாழிகைக்கு வலது பாரிசத்திலே கீழ் வரிசையிலே ஒரு பல்லு விழுந்தது. ரோகம் நிவர்த்தி ஆகி சொஸ்தமாச்சுது. ஆனபடியினாலே, யிது முதல் சவ்விய சக்கிரத்துக்கு மேஷ சக்கிர முதலாய்ப் பார்க்க வேண்டியது. ஆனபடியினாலே பலாபலன் யினி அனுபோகத்திலே அறிய வேண்டியது.‌ யிது வரைக்கும் ராசி சூரியன் மீனத்திலே யிருந்தபடியினாலே அபசவ்விய சக்கிரபலன் யிதுவரைக்கும் நடந்தது. அமிசை சூரியன் தனுசிலே யிருந்தபடியினாலே சவ்விய சக்கிர பலன் மேஷாதியாய்ப் பார்த்துக்கொள்ள வேண்டியது.

(தொடரும்)

பகிர:
கோ. செங்குட்டுவன்

கோ. செங்குட்டுவன்

விழுப்புரத்தில் பிறந்து வளர்ந்து வசித்து வருபவர். ஊடகத்துறையில் 20 ஆண்டுகாலம் செய்தியாளராகப் பணியாற்றியவர். கலை, இலக்கியம், பண்பாடு மற்றும் வரலாற்று அமைப்புகளில் பங்கேற்று இயங்கி வருபவர். 'சமணர் கழுவேற்றம்', 'கூவம் - அடையாறு - பக்கிங்காம்: சென்னையின் நீர்வழித்தடங்கள்' உள்ளிட்ட நூல்களை எழுதியிருக்கிறார். தொடர்புக்கு : ko.senguttuvan@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *