1760 மார்ச் மாதம். பிரெஞ்சு ஆளுகையில் இருந்த புதுச்சேரிப் பட்டணத்தைப் போர் மேகங்கள் சூழ்ந்திருந்தன. இங்கிலீசுப் படைகள் பட்டணத்தின் நாலா பக்கங்களிலும் தாக்குதல் நடத்தி, நெருங்கிக் கொண்டிருந்தன. வழுதாவூர் அவர்கள் வசமானது. வில்லியநெல்லூரும் அவர்களிடம் விழுந்தது. இங்கிலீசுக்காரர்கள் எப்பொழுது வேண்டுமானாலும் புதுச்சேரிக்குள் நுழைந்துவிடுவார்கள். இதனால் கலவரப்பட்ட பொதுமக்கள் பட்டணத்தைவிட்டு வெளியேறிக் கொண்டிருந்தனர். ஆனந்தரங்கரும் அவரைச் சேர்ந்தவர்களும்தான் பட்டணத்திற்குள் இருந்தார்கள்.
அதேநேரம் படைவீரர்களுக்குச் சம்பளம் கொடுக்க முடியாமல் திணறியது பிரெஞ்சு அரசாங்கம். இதனால் வெள்ளாழர், அகம்படையர், கோமுட்டியாள், செட்டியள், யெலவாணியர் என சகல சாதியினரையும் அழைத்த அரசு நிர்வாகம், ஒவ்வொரு சாதியினருக்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையின்படி, 1300 சிப்பாய்களுக்குச் சம்பளம் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
இதேபோல், ஆனந்தரங்கரும் 50 சிப்பாய்களுக்கு 6 ரூபாய் வீதம் மாதம் 300 கொடுக்க வேண்டும் என்றும், அந்தச் சிப்பாய்கள் தொடர்பான வழக்கு விசாரணையை இவரே மேற்கொள்ளலாம் என்றும் சொல்லப்பட்டது. ‘பட்டணம் மூழ்கிப் போக உள்ள நிலையில் இந்த நடவடிக்கை சரியானதுதான்’ என வரவேற்ற ஆனந்தரங்கர், ‘நாம் அன்பது வருஷமாய் பிரான்சுக்காரனுடைய கொடியின் கீழே யிந்தப் பட்டணத்திலே யிருந்து கும்பினீரையும் சேவிச்சிருக்கச்சே கும்பினீர் உடமையைச் சாப்பிட்டு யிந்த சரீரத்திலே யிருக்கிற ரத்தம் அவர்களுதாயிருக்கச்சே நாம் அல்லவென்று சொல்ல யில்லை’ என்று நேர்மை, விசுவாசத்துடன் பேசுகிறார். அதேநேரம், ‘யென்னுடைய மன வற்த்தனை சிலவுக்கு, அரிசி, பருப்பு, நெய், காய்கறி, கோழியிதுகள் வாங்கினது பதினாயிரம் ரூபாய் மட்டும் ஊரிலே குடுக்க வேண்டியிருக்குது. அவர்களெல்லாம் வந்து பணம் கேழ்க்கிறார்கள். என்னுடைய காரியங்களெல்லாம் நாலு விதத்திலேயும் ஒண்ணுமில்லாமலிருக்கச்சே நான் எப்படிச் சிப்பாய்களுக்குச் சம்பளம் கொடுப்பது’ என்றும் கேட்கிறார். இது, ஆனந்தரங்கருக்கு இருந்த பொருளாதார இக்கட்டினைக் காட்டுகிறது.
மேலும், வரி கேட்டு, பட்டணத்தில் இருக்கும் வர்த்தகர் மற்றும் மகாநாட்டார் கடும் நெருக்கடிக்கு ஆளாக்கப்பட்டனர். கொடுக்க மறுத்தவர்கள் சிறையில் தள்ளப்பட்டனர். எதிரிகள் பட்டணத்தைச் சூழ்ந்துள்ள நேரத்தில் அவர்களை வெற்றிகொள்வது எப்படி என்று சிந்திக்காமல் மக்களிடம் பணம் வசூலிப்பதிலேயே பிரெஞ்சு அரசாங்கம் குறியாக இருக்கிறதே எனவும் வருத்தப்படுகிறார் ஆனந்தரங்கர்.
1760 மார்ச் 8 மாசி 29 சனிவாரம்
இத்தனாள் முன் 23 தேதி, 24 முதல் துவக்கி யின்றைய தினம் மத்தியானம் பதினைஞ்சு நாழிகை வரைக்கும் பட்டணத்திலேயுள்ள குலம் பூந்தவர் சோனகர், கோமுட்டியள், செட்ட்டியள், பிராமணர் சகல சாதியிலேயும் வெகுசனங்கள் வெளியே போயி விட்டார்கள். யினிமேல் பட்டணத்திலே யிருக்கிறது அல்ப்ப சொல்ப மெல்லாமல் பின்னை வேறேயில்லை. பிராமணத் தெருவிலே யிருக்கிறவர்கள் அய்யண சாஸ்திரி, கோபாலகிருஷ்ணய்யன், குலசேகரம் வெங்கிட்ட நாராயணப் பய்யர் யிப்படி மூணு நாலு வீட்டுக்காரர் போகச்சே … மத்தப்படி வெகுசனங்கள் வெளியே போயிவிட்டார்கள். பகலைக்கு மேலாக வெளிபோகிற செனங்களை வழியிலே போகவொட்டாமல் மறிச்சு மத்தியானம் வரைக்கும் உத்தாரம் யினிமேல் போற பேருக்கு முசியே லாலி அவர்கள் கடுதாசி வேணுமென்று போற செனங்களை யெல்லாம் போக வொட்டாமல் யெல்லாரையும் திருப்பிவிட்டார்கள். யிதிலே அய்யண சாஸ்திரி வீட்டுப் பெண்டுகள் குலசேகரம் வெங்கட்ட நாராயணப்பய்யன் வீட்டுப் பெண்டுகள் பிள்ளையும் பிராமணத் தெருவிலே ரெண்டொருத்தர் வெளியே போகச்சே தெத்திலே மறிச்சு போற பேருக்கு முசே லாலி அவர்கள் சீட்டு வேணும், காட்டாமல் விடத்தக்கனதில்லையென்று அவர்களைக் கூட்டிக்கொண்டு கோட்டைக்கு முசியே லாலி அண்டைக்கு அனுப்பிவிச்சதாய் சமாச்சாரம் கேழ்விப்பட்டுது.
1760 மார்ச் 9 மாசி 30 ஆதிவாரம்
மத்தப்படி பெண்டுகள் எனப்பட்டவர்கள் யெல்லாம் சமுசாரத்துடனே போயி விட்டார்கள். நாமும் நம்மைச் சேர்ந்தவர்களும் சமுசாரத்துடனே யிருக்குறோம். மத்தப்படி பட்டணத்திலேயுள்ள செனங்களெல்லாம் வெளியே போயிவிட்டார்கள்.
1760 மார்ச் 11 பங்குனி 2 செவ்வாய் வாரம்
இத்தனாள் காலமே சின்னதுரை முசே கில்லியார் நம்முடனே வீட்டுக்கு வந்து நேத்திய தினம் குமிசேலிலே உம்மை அழைச்சுச் சொல்லச் சொன்னது யிங்கிலீசுக்காரருடைய கலாபம் துறுசா யிருக்கிற படியினாலே ராசாவுடைய ஒப்பிசேல்மார் சொலுதாதுகள் நம்முடவர்கள் தானே பட்டணத்தை கொள்ளையிட்டுப் போடுகுறதாயிருக்குது. ஆனபடியினாலே சிப்பாயிகளை வச்சு கொத்தளங்களை யெல்லாம் ஒவ்வொரு குமிசெல்க்காரரும் யிருந்து கோட்டையைக் காப்பாத்த வேணும் அதுக்கு ஒரு கொத்தளத்துக்கு உம்மை அன்பது பேர் சிப்பாயிகளை வைச்சு அவர்களுக்குச் சம்பளம் மாசம் ஒன்றுக்கு சனம் ஒண்ணுக்கு ரூ.6 விழுக்காடு மாசம் 1-க்கு முன்னூறு ரூபாய் குடுத்து, அந்தக் காரியம் கபுறு யெல்லாம் நீர் விசாரிக்கிறது. அவர்களுக்கு ஒடுதி மத்ததெல்லாம் நீர் குடுக்கிறது. பின்னையும் பட்டணத்திலேயுள்ள தமிழருக்கும் யிந்தப்படிக்கி அவரவருக்குத் தக்கினாப்போலே சிப்பாயிகளை வைச்சு அவர்களுக்கு அவரவர் சம்பளம் குடுத்து விடுகுறது. அந்த சிப்பாயிகளையும் நீர்தான் விசாரிச்சுக் கொள்ளுகிறது. அவர்களுக்கு ஒடுதி காரியம் யெல்லாம் நீர்தானே சொல்லுகுறது. யிந்தபடி நீர் யிதுகளுக்கெல்லாம் யெசமானாயிருந்து விசாரிக்கச் சொல்லி குமிசேலிலே தீர்ந்ததாய் வந்து சொன்னார்.
அதுக்கு நாம் சொன்னது உத்தரவு மெய்தான். யிந்த வேளையிலே மெய்தான் குடுக்க வேண்டியதும் விசாரிக்க வேண்டியதும். நமக்கு சாகிராயிருந்த திருமங்கலம், நெற்குணம் என்கிற ரெண்டு கிராமம் கட்டிக்கொண்ட படியினாலேயும் வருஷமாய் நமக்கு உத்தியோகம் பேருக்கு யிருக்குதென்கிற பேர் மாத்திரம் யல்லாமல் ஒரு காரியத்திலே யாகிலும் யில்லாமல் படிக்கி முசே லெறி பண்ணிப்போட்டார். நானும் ஒரு காரியத்திலேயும் யில்லாமல் படிக்கி வீட்டிலே தானே சும்மாயிருக்குறேன். தேவனாம்பட்டணம் சீமையிலே யெனக்கு அஞ்சு கிராமம் நடந்தது. அதை இங்கிலீசுக்காரர் கட்டிக்கொண்டார்கள். அந்தச் சமாச்சாரமும் சீமைக்கு மினிஸ்தருக் களுக்கும் முசியே துப்ளேக்சு திக்கிளர் சாம் எழுதியிருக்கிறார்.
யிப்ப தேவனாம் பட்டணம் சீமை யிவர்கள் வசமாயிருக்குது. அப்படியிருக்க அந்தக் கிராமமாகிலும் நமக்கு நடக்குறதுக்கு யில்லை யிதல்லாமல் யென்னுடைய மனவற்தனை சிலவுக்கு, அரிசி, பருப்பு, நெய், காய்கறி, கோழியிதுகள் வாங்கினது பதினாயிரம் ரூபாய் மட்டும் ஊரிலே குடுக்க வேண்டியிருக்குது. அவர்களெல்லாம் வந்து பணம் கேழ்க்கிறார்கள். என்னுடைய காரியங்களெல்லாம் நாலு விதத்திலேயும் ஒண்ணுமில்லாமலிருக்கச்சே, முசே லெறி தான் யெப்படி சொல்லுவார்களென்று? சொன்னதின் பேரிலே முசியே கில்லியாரிருந்து கொண்டு, யிதுகளெல்லாம் மெய்தான். நானும் குமிசேலிலே யிதுகளை யெல்லாம் பேசுகுறேன். ஆனால் நீர் யிந்த வேளையிலே ஆனாதென்று சொன்னால் பட்டணத்திலே யிருக்குற தமிழரெல்லாம் ஒருத்தரும் சம்மதியில்லாமல் காபராப்பட்டுப் போவார்கள் யென்று சொன்னார்.
ஆனால் கும்பினி முழுகிப் போற வேளையாய் வந்திருக்கச்சே, நாம் அன்பது வருஷமாய் பிரான்சுக்காரனுடைய கொடியின் கீழே யிந்தப் பட்டணத்திலே யிருந்து கும்பினீரையும் சேவிச்சிருக்கச்சே கும்பினீர் உடமையைச் சாப்பிட்டு யிந்த சரீரத்திலே யிருக்கிற ரத்தம் அவர்களுதாயிருக்கச்சே நாம் அல்லவென்று சொல்லயில்லை. ஆனால் யெனக்கு யின்னம் சிறிது வீடுகள் யிருக்குது. சிறிது சாமான்களிருக்குது. அதுகளையாகிலும் வித்து முன்னூறு ரூபா குடுத்து விடுகுறேன். அந்தச் சிப்பாயிகள் காரியம் கவையும், நாம் ஒடுதி குடுக்கிறதும் நமக்குத் தேவையில்லை. யென்றும் சொன்னதின் பேரிலே, நல்லது யிதுகளெல்லாம் முசே லெறியுடனேயும் குமிசேலிலேயும் பேசி மறு உத்திரம் சொல்லி அனுப்பி வைக்குறோம் என்று சொன்னார். பின்னையும் முன் நடந்ததும் பின் நடந்ததும் யிப்படிச் சிறது சம்மதியெல்லாம் பேசிக்கொண்டிருந்து பிறப்பட்டுப் போய்விட்டார்.
இத்தனாள் சாயங்காலம் கனகராய முதலியார் தம்பி தானியப்ப முதலியாரையும் பெரியண்ண முதலியாரையும் ராமச்சந்திர ராயன் வகையிரா யிவர்களை யெல்லாம் சின்னதுரை முசே கில்லியார் சாயங்காலம் அழைப்பிச்சு நீங்கள் அன்பது அன்பது பேர் ஒவ்வொருத்தர் சிப்பாயிகளை வைச்சு அவர்களுக்கு சம்பளம் கொடுத்து ஒவ்வொரு …
1760 மார்ச் 18 பங்குனி 9 செவ்வாய்க்கிழமை
இத்தனாள் கேழ்க்கப்பட்ட சேதியென்ன யென்றால் வெள்ளாழர், அகம்படையர், கோமுட்டியாள், செட்டியள், யெலவாணியர் யிப்படி சாதியாரெல்லாரையும் அழைச்சு வெள்ளாழருக்கு சிப்பாயிகள் முன்னூறு பேரும் அகம்படியருக்கு நானூறு பேரும், செட்டியளுக்கு முன்னூத்தன்பது பேருக்கும் கோமுட்டி யளுக்கு நூத்தன்பது பேருக்கும் யெலவாணியருக்கு அன்பது பேருக்கும் யிந்தப்படிக்கி சாதி சாதிக்கும் யேகத்துக்கு ஆயிரத்து முன்னூறு பேர் சிப்பாயிகளுக்கு சம்பளம் குடுக்கச் சொல்லியும் மாசம் 1க்கு அன்பது பேர் சிப்பாயிகளுக்கு முன்னூத்தன்பது மூணு ரூபாய் விழுக்காடு குடுக்கச் சொல்லிச் சொன்னதாயும் அதுக்கு யிவர்களெல்லாம் தாளும் தாளாதென்று சொல்லிக்கொண்டதாய் சேதி கேழ்க்கப்பட்டது. மத்தப்படி யிங்கிலீசுக்காரருடைய பவுன்சு முன்னே வந்து குண்டுசாலை மட்டும்.
1760 மார்ச் 28 பங்குனி 19 சுக்கிரவாரம்
இத்தனாள் பின்னையொன்றும் விந்தையாய் சமாச்சாரம் கேழ்க்கப்படயில்லை. சின்னதுரை முசே கில்லியார் மகாநாட்டாரை யெல்லாரையும் அழைச்சு சிப்பாயிகள் சம்பளத்துக்கு மாசம் 1-க்கு அய்யாயிரம் ரூபாய் விழுக்காடு ரெண்டு மாசத்தைக்குப் பதினாயிரம் ரூபாயி குடுக்கச் சொல்லித் தீர்ந்ததாய், அவர்களும் சம்மதிச்சதாய் அந்தப்படிக்கி சாதி சாதிக்கும் பிறிச்சிசெழுதி வைக்கிறதாய் சமாச்சாரம் கேழ்க்கப்பட்டது.
1760 அபிரேல் 11 சித்திரை 3 சுக்கிரவாரம்
இத்தனாள் பகலைக்கு மேலாய் கேழ்க்கப்பட்ட சேதி ராமலிங்க பிள்ளை, பாபுராயன், ராமச்சந்திர ராயன், குண்டூர் பாலிசெட்டி, சஞ்சய செட்டி யிவர்களை அழைச்சு சிலவுகளுக்கு குடுக்க வேண்டியதென்று முசே லாலி கேட்டவிடத்திலே ராமலிங்கபிள்ளை மாத்திரம் நாலாயிரம் ரூபாய் ரொக்கமும் சிறிது சாமானுகளும் குடுக்குரோமென்று உடம்படிக்கை பண்ணிக்கொண்டு வந்துவிட்டதாயும், மத்தப்பேரை பணம் கேட்டவிடத்திலே நாங்கள் முன்னேயும் குடுத்திருக்கிறோம், யெங்களுக்கு குடுக்கிறதுக்கு யில்லை யென்று சொன்னவிடத்திலே மூணு நாளைக்குள்ளே பணம் குடுத்தால் ஆச்சுது. யில்லாவிட்டால் உங்களை அப்படி செய்வோம் யிப்படி செய்வோம் கசோத்திலே போடுவோம் யென்றும் சொல்லி பிறகே வீட்டுக்கொரு சேவுகரை சேருவைக்காறனை அனுப்பி வாசற்படியிலே வச்சார்கள் என்கிறது கேழ்க்கப்பட்டது. …
1760 அபிரேல் 15 சித்திரை 7 செவ்வாய்க்கிழமை
… பட்டணத்திலே ரெண்டு மூணு நாளாய் வற்தகரைப் பிடிச்சு பணம் குடுக்கச் சொல்லி கோட்டையிலே காவல் பண்ணியிருந்தவர்கள் நேத்தய தினம் மகாநாட்டாரண்டைக்கி வந்து வற்தகர் எங்களுக்கானால் லக்ஷபத்திருபதி னாயிரம் ரூபாயி வரிபோட்டுக் குடுக்கச் சொல்லுகுறான். யிதை நீங்கள் மகானாட்டார் பேரிலே போட்டுக் கொண்டு யெப்படியாகிலும் யிதுக்கு மார்க்கம் பண்ணவேணும். யில்லாவிட்டால் அவரவர் ஆஸ்தியெல்லாம் நாங்களெடுத்து எழுதிக்குடுப்போம் என்று சொன்னதின் பேரிலே மகாநாட்டார் உங்கள் பேரிலே போட்ட வரிக்கி எங்களுக்கென்ன கவையென்று நேத்து சாயங்காலம் சொன்னதின் பேரிலே யின்றைய தினம் போயிகள் வந்து வற்தகரை அழைச்சுப் போயி கோட்டையிலே மறுபடியும் காவல் வைச்சார்கள். யிந்த காபராவினாலே பட்டணத்திலேயுள்ள செனங்களெல்லாம் ரொம்ப காபராப்பட்டு வெகுசனங்கள் வெளியே போயி விடுகுறார்கள்.
1760 அபிரேல் 16 சித்திரை 8 புதவாரம்
… யித்தனாளும் வழுதாவூர் கோட்டையின் பேரிலே சண்டை நடந்து கொண்டிருக்குது. இத்தனாள் ராத்திரி யேழு மணிக்கி இங்கிலீசுக்காரரை கொல்னேல் மேஸ்தர் கூத் தென்கிறவனும் வழுதாவூர் கோட்டையின் பேரிலே லக்கை யேறி கோட்டையைப் பிடிச்சுக் கொண்டு கோட்டையிலே யிருந்த பிரான்சுக்காரருடைய சொலுதாதுகள் சிப்பாயிகளை யெல்லாம் காவல் பண்ணிக்கொண்டு கோட்டையிலே இங்கிலீசுக்காரர் கொடியும் போட்டுக்கொண்டார்களென்றும் சேதி கேழ்க்கப்பட்டது.
1760 அபிரேல் 17 சித்திரை 9 குருவாரம்
இத்தனாள் இங்கிலீசுக்காரர் வந்து வில்லியநெல்லூர் கோபுரத்தின் பேரிலே இங்கிலீசுக் கொடியும் போட்டுக்கொண்டு வில்லியநெல்லூர் சீமை தமாம் குண்டுசாலை வரைக்கும் தோறணம் கட்டிக்கொண்டு யெங்கும் குண்டுசாலை வரைக்கும் இங்கிலீசுக்காரர் மனுஷராய்த்தானே யிருக்குறார்கள். யித்தனாள் நம்முடவர்களுக்கும் யிங்கிலீசுக்காரருக்கும் பிரம்பை மேட்டிலே சண்டை யாயி நம்முடையவர்கள் முறிஞ்சு கொஞ்சம் சேதமாய் பிறப்பட்டு ஒழுகரை யெல்லைப் பிள்ளைச்சாவடி யிவ்விடங்களிலே நம்முடவர்கள் வந்து விட்டார்கள்.
குண்டுசாலை அரியாங்குப்பம் தவிர மத்தயிடங்களெல்லாம் யின்றைய வரைக்கும் இங்கிலீசுக்கார ருடைய தோறணம் ஆச்சுது. பெருமாள் நாயக்கன்சாவடி, குண்டுசாலை, அரியாங்குப்பம் யிதுவரைக்கும் இங்கிலீசுக் காரராய் யிருப்பார்களென்று கப்பா சோசியர் சொன்னபடிக்கி சாஸ்திரம் யிதுவரைக்கும் சரி யினிமேல் யென்ன நடக்குமோ அதுவும் அறிய வேண்டியது. முன் பவ வருசம் வரைக்கும் நம்முடவர்களுக்கு அரியாங்குப்பம் முருங்கப்பாக்கம் ஒழுகரை குண்டுக்கிராமம் காலாபேட்டு யிந்த அதிரிலே யெப்படி யிருந்தார்களோ அந்தப்படிக்கி காலாப்பேட்டு தவிர மத்த அரியாங்குப்பம் முருங்கப்பாக்கம் ஒழுகரை குண்டுகிராமம் குண்டுசாலை யிந்த அதிரிலே யின்றைய வரைக்கும் நின்னார்கள். நாளை முதல் கொண்டு யென்ன கதி நடக்குமோ அது அறிய வேண்டியது.
இத்தனாள் முசே கெதி வேல் என்கிறவன் பாளையக்காரனாயிருக்கிற வெள்ளைக்காரன் மகாநாட்டாரை அழைப்பிச்சு பணம் தண்டியாச்சுதா யென்று கேட்டதின்பேரிலே யின்னம் தண்டியாகவில்லை யென்றும் யிவர்கள் சொன்னதின் பேரிலே அவன் மகானாட்டாருக்குள்ளே செட்டியள் ரொண்டருத்தரை கையாடி நீங்கள் முன்னாலே முசே கில்லியாருக்கு அய்யாயிரம் ரூபாயிக் குடுக்குறோமென்றல்லவா உடம்படிக்கை பண்ணிக் கொண்டீர்கள். யிப்பயென்ன யெண்ணாயிரம் ரூபாயாய் குடுக்கவேணும் யில்லாவிட்டால் காவலிலே வைப்பேன் என்று சொன்னதின் பேரிலே மகாநாட்டாரெல்லாம் வந்து சட்டப்பெருமாள் அய்யன் மடத்திலே கூடி வரிப்பிறிச்சு யெழுதுகுறார்களே என்குறதாய் சேதி கேழ்க்கப்பட்டது.
யிதல்லாமல் பாபுராயன் ராமச்சந்திர ராயன் கணக்கு ரங்கப்ப முதலி குமாரன் கும்பினி வர்த்தகர் வகையிரா பதிமூணு பேரைக் காவல் வைச்சு லக்ஷத்திருபதினாயிரம் (120000) ரூபாயி குடுக்கச் சொல்லி வைச்சு யிருக்கிறபடிக்குத் தானே யிருக்குது. பட்டணத்திலே யிருக்கிற செனங்கள் எல்லாம் யிங்கிலீசுக்காரர் வந்து வில்லியநெல்லூர் கோபுரத்தின் பேரிலே கொடி போட்டுக்கொண்டு அவர்களும் வந்து நம்முடவர்கள் வெளியே யிறங்கி யிருக்கிற பவுன்சின் பேரிலே சண்டை பண்ணுகுற படியினாலேயும் இவ்விடத்திலேயும் வரிகளைப் போட்டு பணங்காசுகளுக்கு சுறுக்குப் பண்ணுகிற படியினாலேயும் வெளியே போயிருந்து வந்த செனங்கள் எல்லாம் மோசம் வந்தது. யினிமேல் யிருக்கப் போகாதென்று யின்னைய தினம் வெகுசனங்கள் வெளியே பிறப்பட்டுப் போயிவிட்டார்கள்.
யின்றைய தினம் பட்டணத்திலேயுள்ள செனங்கள் அதலகுதலப்பட்டு தத்தளிக்குறது கடுதாசியிலே எழுதி முடியாது. தேவடியாள் முத்தப்பிள்ளை பேரிலே நமக்குப் பதினாயிரம் அய்யாயிரம் வரவேண்டியதுக்கு ராமலிங்கம் பிள்ளை யிப்ப சத்தியமாய் நானூறு ரூபாயி வாங்கிக்கொள்ளச் சொல்லி உடம்படிக்கைப் பண்ணினதின் பேரிலே யிவ்விடத்திலே பணம் கேட்டவிடத்திலே யிங்கே பணமில்லை. கிராமத்துக்கு வந்தால் தாரோமென்று சொன்னான். அதன்பேரிலே ராமலிங்கம்பிள்ளை காகிதம் ஒண்ணு குடுத்தான். அந்தக் காகிதம் கொண்டு நம்முடைய சேவுகரும் போயி திருவெண்ணைநல்லூர் யிவ்விடங்களெல்லாம் தேவடியாள் முத்துப்பிள்ளையைத் தேடிப்பார்த்துக் காணாமல் படிக்கி மறுபடி நம்முடைய சேவுகர்கள் ராமலிங்கம் பிள்ளை எழுதிக்குடுத்த கடுதாசி கொண்டுவந்து விட்டார்கள்….
1760 அபிரேல் 18 சித்திரை 10 வெள்ளிக்கிழமை
இத்தனாள் கேழ்க்கப்பட்ட சேதி ராமச்சந்திர ராயன் பாபுராயன் கணக்கு ரங்கப்ப முதலி மகன் கும்பினி வர்த்தகர் வகையிரா பதிமூணு பேரை பணம் குடுக்கச் சொல்லி கோட்டையிலே காவல் வச்சு சாப்பாட்டுக்கு விட்டு மறுபடியும் காவல் வச்சு பணம் கேட்டுக்கொண்டு யிருந்தார்களே. அவர்கள் முசே லெறி கோவர்ணதோர் அவர்களைக் கண்டுபேசி நீங்கள் எங்களைக் காவலிலே வச்சுப் பணம் கேட்டால் நாங்கள் எங்கேயிருந்து குடுக்கப் போறோம், முன்னே தானே யிருக்கிறதைக் குடுத்தோம். யிப்பவும் மகாநாட்டாரையும் அழைச்சு அவர்களுடனே சொல்லி எங்களையும் கூட்டிவிட்டால் அவர்களும் நாங்களும் யோசனை பண்ணிக்கொண்டு முன்னே யெழுதின வரிப்படிக்கு வரியெழுதி பணத்துக்கு ஒரு மார்க்கம் பண்ணுகுறோம் என்று சொன்னதின் பேரிலே முசே லெறி கோவர்ணதோர் மகாநாட்டாரை எல்லாம் அழைச்சு கும்பினி சிலவுக்கு ரெண்டு லக்ஷம் ரூபாய் யிப்ப குடுக்க வேணும் என்று சொன்னதுக்கு நீங்களும் யிவர்களும் யோகோபிச்சுக் கொண்டு லக்ஷம் ரூபாயிக்கு மத்தத்துப் படுத்தி குடுக்க வேணும் என்று சொன்னதின் பேரிலே மகானாட்டாரிடமிருந்து சொன்னது,
‘நாங்கள் முன்னே தானே நாலு விதத்திலேயும் யிருக்கிற தட்டுமுட்டுகளும் வித்து குடுத்துவிட்டோம். யினிமேல் யெங்களுக்கு குடுக்கிறதுக்கு யில்லை யென்று சொன்னதின் பேரிலே அப்படியல்ல, யிந்த வேளைக்கு சிலவுக்கு யில்லாதபடியினாலே நீங்கள் யில்லையென்று சொல்லப் போகாது. பாபுராயன் கும்பினி வர்த்தகர் வகையிரா பதிமூணு பேரையும் வைச்சுக் கொண்டு பணத்துக்கு யெந்த விதத்திலே தகப்படுத்த வேணுமோ அந்தப்படிக்கி யோசனை பண்ணிக்கொண்டு சம்மதி பண்ணுங்கோள்’ என்று சொன்னதின் பேரிலே,
மகானாட்டாருக்குள்ளே ரெண்டொருத்தரை வெள்ளாழக் கனகசபை உள்க் கையாயி ராமச்சந்திரராயன் போட்டுக் கொண்டபடியினாலேயும் அவர்களுக்கு மாத்திரம் யிந்த விசேஷம் சம்மதி. மத்தப் பேரும் மகானாட்டாருக்கு சம்மதியில்லாத படியினாலே அவர்கள் சொன்னது, ‘நாங்கள் மகாநாட்டார் வந்து யேழை. முன்னே தானே யிருக்கிறதை குடுத்துவிட்டோம். யினிமேல் குடுக்குறதுக்கு யெங்களுக்கு நிறுவாக மில்லை. யெங்கே பணம் யிருக்குதோ அங்கே வாங்கிக் கொள்ளுங்கோள் அவர்களுக்கும் எங்களுக்கும் வியாச்சியம் யென்ன யிருக்குது,’ அக்கரையில்லை யென்றும் சொன்னதுக்கு,
உன் பேரிலே முசே லெறி கோவர்ணதோரை முன்னே தானே கட்டிக்கொண்டு யிருக்கிற படியினாலேயும் மகாநாட்டாருக்குள்ளே ரெண்டொருத்தர் உள்க்கையா யிருக்கிறபடியினாலேயும் முசே லெறி சொன்னது, தில்லை மேஸ்திரி பேசச்சே காதிலே ரெண்டு கடுக்கனும் கையிலே ரெண்டு மூணு மோதிரமும் போட்டுக்கொண்டு போனதைப் பார்த்து யிப்படி அவரவர் கடுக்கனும் மோதிரமும் வித்துக் குடுத்தால் யிந்தப்பணம் சரியாயிப்போம். போங்கள் நீங்களெல்லாம் கூடி யோசனை பண்ணிக்கொண்டு பணத்துக்கு சம்மதி பண்ணுங்களென்று நயினாரை அழைச்சு யிவர்களை யெல்லாம் ஒரு தாவிலே சேத்து வரிப்பிறிச்சு எழுதி அவரவர் பேரிலே பணம் எவ்வளவு சொல்லுகுறார்களோ அதை அவர்கள் கையிலே பணம் வாங்கிப்போடச் சொல்லி அழைச்சுக் கொண்டு போகச் சொல்லி சொன்னதாகவும் சேதி கேழ்க்கப்பட்டுது.
இதல்லாமல் மகாநாட்டார் சொன்னது பட்டணத்திலே யிருக்கிற செனங்களெல்லாம் வெளியே பிறப்பட்டுப் போயி விட்டார்கள். ஆர் கையிலே பணம் வாங்குறது யென்று சொன்னதுக்கு உன் பேரிலே ஆனால் செனங்களை ஒருத்தரையும் வெளியே போகாமல் தாக்கீது பண்ணி வைக்குறோம் வெளியே போனவர்களிலே யெசமான் மாத்திரமிருந்து மத்தப்பேர் போயிவிட்டால் அவர்கள் வீடு எழுதத் தேவையில்லை யென்றும் பெண்டுகள் பிள்ளைகளிருந்து யெசமான் வெளியே போயிருந்தால் அவர்கள் வீடுகளை யெல்லாம் எடுத்து எழுதச் சொல்லி சாவடிக் கணக்கப் பிள்ளைகளை யெல்லாம் அழைச்சு முசே லெறி கோவர்ணதோர் உத்தாரம் பண்ணதாய் சேதி கேழ்க்கப்பட்டது. அந்தப்படிக்கி தெருவுகளிலே சிறிது வீடுகளை எடுத்து எழுதுகிறதாய் சாவடி மணியக்காரர் வந்து நமக்கு கபுறு சொன்னார்கள்.
இங்கிலீசுக்காரர் வழுதாவூர் வாங்கிக் கொண்டு வெளி சீமையெல்லாம் தோரணம் வைச்சுக்கொண்டு அந்த மட்டுக்கும் உள்ளே யிருக்குறார்கள். யினிமேல் என்ன நடப்பிப்பார்களோ அது அறிய வேண்டியது. நம்முடவர்களும் பட்டணத்திலே யிருக்கிற செனங்கள் கையிலே பணம் வாங்கிக்கொள்ள வேணும் என்கிற நினைவின் பேரிலே யிருக்குறார்களே யல்லாமல் சத்துருவின் பேரிலே எதித்து சண்டை பண்ணி செயம் பண்ணுவோம் என்கிற நினவுயில்லை. அந்தக் கறணியும்ல்ல யிவர்களும் அந்த மட்டிலே யிருக்குறார்கள். யித்தனாள் ராத்திரி யெட்டு மணிக்கு குண்டு சாலைகளுக்கெல்லாம் பட்டணத்திலே யிருக்கிற செனங்களை ஒருத்தரையும் வெளியே விடாமல் படிக்கி தாக்கீது பண்ணதாய் சேதி கேழ்க்கப்பட்டுது.
1760 அபிரேல் 20 சித்திரை 12 ஞாயிற்றுக் கிழமை
இத்தனாள் பனிரெண்டு மணிக்கி மகாநாட்டாரெல்லாம் கூடி ஒருத்தொருக்கொருத்தர் ஆஸ்தி பாஸ்தி யெழுதி கையெழுத்தும் போடச்சொல்லி விசேஷங்கள் நடந்த விடத்திலே, ராமச்சந்திர ராயனும் பாபு ராயனும் கையெழுத்துப்போடச் சம்மதியாமல் போனபடியினாலே, நல்லது யெல்லாரும் போயி முசே லெறியுடனே சொல்லி சொல்லிக்கொள்ளுவோ மென்று போனவிடத்திலே, முசே லெறி யிருந்து கொண்டு ரெண்டு லக்ஷம் ரூபாயி நீங்கள் குடுக்க வேணுமென்று சொன்னதின் பேரிலே, மகானாட்டாரிந்து கொண்டு, நாங்கள் குடுத்துக் குடுத்துக் கெட்டுப்போனோம். யெங்களுக்கு குடுக்குறதுக்கு யில்லை யென்று சொன்னதின் பேரிலே, யிவர்களை யெல்லாம் காவலிலே போட்டு வையும் யென்று உத்தாரம் பண்ணதாகவும் அதன் பேரிலே ராமச்சந்திர ராயன் பாபுராயன் கும்பினி வர்த்தகர் வகையிரா பதிமூணு பேரும் மகானாட்டார் நாட்டாமைக்காரரிலே பதிமூணு பேரும் ஆக யிருபத்தாறு பேரும் மேலண்டை கோட்டை வாசற்படி மேலே காவலில் வைச்சதாய்ச் சேதி கேழ்க்கப்பட்டுது.
(தொடரும்)