Skip to content
Home » அறம் உரைத்தல் #1 – கீழ்க்கணக்கு அற நூல்கள்

அறம் உரைத்தல் #1 – கீழ்க்கணக்கு அற நூல்கள்

அற நூல்கள்

‘கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடி தமிழ்க்குடி’ என ‘புறப்பொருள் வெண்பா மாலை’ கூற்றிலிருந்து தமிழ்க்குடியின் தொன்மையை அறியலாம். ‘வட வேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறும் நல்லுலகம்’ என மூவாயிரம் ஆண்டு பழைமையான தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியப் பாயிரம் கூறுகிறது. இதை எழுதிய பனம்பாரனார் வடக்கே வேங்கடத்துக்கும், தெற்கே குமரியாற்றுக்கும் இடைப்பட்ட நிலப்பரப்பு தமிழகம் என்றும் பேசப்பட்ட மொழி தமிழ் என்றும் அவற்றின் பழமையைப் போற்றுகிறார். இலங்கை வேந்தன் இராவணனால் சிறை வைக்கப்பட்ட சீதாப்பிராட்டியோடு ‘மதுரமான’ மொழியில் அனுமன் பேசினான் என்கிறது வால்மீகி இராமாயணம். அந்த மதுரமான மொழி தமிழ் என்பதிலோ, அதன் தொன்மையிலோ, செழுமையிலோ மாற்றுக் கருத்தில்லை.

இலக்கிய மற்றும் இலக்கண வளம் செறிந்தது தமிழ் மொழி. இலக்கியத்துக்குப் பின் வருவதே இலக்கணம் என்பது மொழிக்கான பொது விதியாகும். அவ்வகையில் தமிழில் கிடைத்துள்ள ‘தொல்காப்பிய’ இலக்கண நூலின் தொன்மையே ஐயாயிரம் ஆண்டுகள் எனில், தமிழ் இலக்கியத்தின் தொன்மை அதை விடவும் இன்னும் பல்லாயிரங்கள் பழமையாகத்தான் இருத்தல் வேண்டும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

தமிழ்நாட்டைச் சேர, சோழ, பாண்டியர்கள் ஆகிய மூவேந்தர்களும், பற்பல குறுநில மன்னர்களும், ஆண்டதாக சங்கம் மற்றும் சங்கம் மருவிய கால இலக்கியங்கள் தெரிவிக்கின்றன. தமிழைப் போற்றிப் பாதுகாக்க இம்மன்னர்கள் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்தனர். இச்சங்கங்களில் வீற்றிருந்த தமிழ்ப் புலவர்கள் தமிழ் ஆய்வில் ஈடுபட்டதாகவும், தமிழ்ச் செய்யுள்கள் இயற்றியதாகவும், சங்க இலக்கியங்களும், இறையனார் களவியல் உரை உள்ளிட்ட நூல்களும் தெரிவிக்கின்றன.

இன்புறுத்துவதும், அறிவுறுத்துவதுமே இலக்கியங்களின் முக்கியப் பணியாகும். இவற்றில் இடம்பெறும் அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கு பொருள்களும் விழுமியங்கள் ஆகும். ஒரு நூல் ‘காப்பியம்’ என்னும் தகுதியைப் பெற இந்நான்கு விழுமியங்களையும் தன்னகத்தே கொள்ளல் வேண்டும் என்பது விதியாகும்.

‘அறம்’ என்னும் சொல் ‘அறு’ என்ற வினைச்சொல்லின் அடியாகப் பிறந்ததாகும். இதற்கு அறுத்துச் செல், வழியை உண்டாக்கு, வேறுபடுத்து எனப் பல்வேறு பொருள்கள் உள்ளன. மனிதன் தனக்கென வரையறுத்துக் கொண்ட ஒழுக்க முறைகளின் தொகுதியே ‘அறம்’ என்பர். பிறவிதோறும் மனிதனைப் பற்றிவரும் தீவினையை அறுத்து எறிவதே அறம் ஆகும். தனிமனித ஒழுக்கத்தைப் பெரும்பான்மை மக்கள் பின்பற்றத் தொடங்கும்போது அதுவே ஒழுக்கம் என்னும் பண்பாக மாறுகிறது. செயலுக்கு நன்றாக இருக்க வேண்டுமெனில் சொல்லும், எண்ணமும், மனமும் மாசு இல்லாமல் தூய்மையாக இருத்தல் வேண்டும். ‘Ethos’ என்னும் கிரேக்கச் சொல்லிலிருந்து வந்த ஆங்கிலச் சொல் ‘Ethics’ ஆகும். இதன் பொருள் மக்களின் நடத்தை குறித்த ஆய்வியல் ஆகும். தமிழில் ‘அறவியல்’எனலாம்.

‘தொல்காப்பியம்’ இலக்கண நூலைத் தொடர்ந்து தமிழுக்கு இலக்கியங்களாகக் கிடைத்த ஒப்பற்ற ஈடு இணையற்ற பொக்கிஷங்கள் ‘கணக்கு நூல்கள்’. சங்க காலத்தில் தோன்றிய ‘எட்டுத் தொகை’ (நற்றிணை, குறுந்தொகை, பதிற்றுப்பத்து, ஐங்குறுநூறு, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு) மற்றும் ‘பத்துப்பாட்டு’ (திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப் பாலை, மலைபடுகடாம்) ஆகிய பதினெட்டு நூல்களை ‘மேல் கணக்கு’ என்றும், சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய பதினெட்டு நூல்களை ‘கீழ்க்கணக்கு’ என்றும் அறிஞர்கள் வகுத்துள்ளனர்.

‘அடிநிமிர்வு இல்லாச் செய்யுள் தொகுதி
அறம் பொருள் இன்பம் அடுக்கி அவ்வகைத்
திறம்பட உரைப்பது கீழ்க்கணக்காகும்’

எனப் பன்னிரு பாட்டியல் கூறுவதன் பொருள் ‘நான்கு அடிகளுக்கு மிகாமல், குறைந்த அடிகளில் அறம், பொருள், இன்பம் ஆகிய முப்பொருள்களையும் சிறப்புற உரைப்பது கீழ்க்கணக்கு நூல்களின் இயல்பாகும்.

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களைச் சுட்டும் வெண்பா:

நாலடி நான்மணி நானாற்பது ஐந்திணைமுப்
பால்கடுகம் கோவை பழமொழி – மாமூலம்
இன்னிலைக் காஞ்சியுடன் ஏலாதி என்பவே
கைந்நிலையும் ஆம்கீழ்க் கணக்கு

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் பெயர்கள்:

1. திருக்குறள்
2. நாலடியார்
3. நான்மணிக்கடிகை
4. இன்னா நாற்பது
5. இனியவை நாற்பது
6. திரிகடுகம்
7. ஆசாரக்கோவை
8. பழமொழி
9. சிறுபஞ்சமூலம்
10. ஏலாதி
11. முதுமொழிக்காஞ்சி
12. கார் நாற்பது
13. ஐந்திணை எழுபது
14. ஐந்திணை ஐம்பது
15. திணைமொழி ஐம்பது
16. திணைமாலை நூற்றைம்பது
17. கைந்நிலை
18. களவழி நாற்பது

இவற்றுள் 1 முதல் 11 வரையிலான திருக்குறள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி நானூறு, சிறுபஞ்சமூலம், ஏலாதி, முதுமொழிக் காஞ்சி ஆகியவை 11 அற நூல்களாகும். 12 முதல் 17 வரையிலான கார் நாற்பது, ஐந்திணை எழுபது, ஐந்திணை ஐம்பது, திணைமொழி ஐம்பது, திணைமாலை நூற்றைம்பது, கைந்நிலை ஆகிய 6 அக நூல்கள். 18 வது களவழி நாற்பது புறநூலாகும்.

0

மேற்கூறிய 11 அறநூல்கள் பற்றிய சிறுகுறிப்பு:

1. திருக்குறள்

தமிழின் சிறந்த அற இலக்கியம்

ஆசிரியர் – திருவள்ளுவர்.

பெற்றோர் – ஆதி பகவன்

காலம் – பொ.ஆ.மு. 1ஆம் நூற்றாண்டு

வேறு பெயர்கள் – உலகப்பொதுமறை, முப்பால், உத்திரவேதம், தெய்வநூல், வாயுறை வாழ்த்து, பொய்யாமொழி எனத் திருக்குறளுக்கு வேறு பெயர்கள் உண்டு.

அமைப்பு – (குறள்) வெண்பாவால் ஆன நூல், 1330 குறட்பாக்கள்,

அறத்துப்பால் (38 அதிகாரங்கள் – 4 இயல்கள் – பாயிரவியல், இல்லறவியல், துறவறவியல், ஊழியல்)

பொருட்பால் (70 அதிகாரங்கள் – 7 இயல்கள் – அரசியல், அமைச்சியல், அரணியல், கூழியல், படையியல், நட்பியல், குடியியல்)

இன்பத்துப்பால் (25 அதிகாரங்கள் – 2 இயல்கள் – களவியல், கற்பியல்)

 

2. நாலடியார்

திருக்குறளுக்கு அடுத்த நிலையில் பாராட்டத்தக்கது.

ஆசிரியர்கள் – சமண முனிவர்கள்

தொகுத்தவர் – பதுமனார்

காலம் – பொ.ஆ.பி. 2ஆம் நூற்றாண்டு

வேறு பெயர்கள் – நாலடி நானூறு, வேளாண் வேதம்

அமைப்பு – வெண்பாவால் ஆன நூல், 400 பாடல்கள், அறத்துப்பால் (13 அதிகாரங்கள் 130 பாடல்கள்), பொருட்பால் (26 அதிகாரங்கள் 260 பாடல்கள்), இன்பத்துப்பால் (1 அதிகாரம் 10 பாடல்கள்)

 

3. நான்மணிக்கடிகை

ஒவ்வொரு பாடலிலும் மணி போன்ற நான்கு கருத்துகள் உள்ளன.

ஆசிரியர் – விளம்பிநாகனார்

காலம் – பொ.ஆ. பி.2ஆம் நூற்றாண்டு

அமைப்பு – வெண்பாவால் ஆன நூல். 104+2 (கடவுள் வாழ்த்து) பாடல்களைக் கொண்டது.

 

4. இன்னா நாற்பது

ஒவ்வொரு பாடலிலும் மக்களுக்குத் துன்பம் தரும் ‘இன்னா’தவை நான்கு இடம் பெற்றுள்ளன.

ஆசிரியர் – கபிலர் (சங்கப் புலவரா? பிற்காலத்தவரா? என்ற ஐயம் உண்டு)

காலம் – பொ.ஆ. 2ஆம் நூற்றாண்டு

அமைப்பு – வெண்பாவால் ஆன நூல். 40+1 (கடவுள் வாழ்த்து) பாடல்களைக் கொண்டது.

 

5. இனியவை நாற்பது

இன்னா நாற்பது கூறும் கருத்துகளுக்கு எதிரான ‘இனிய’ மற்றும் மக்கள் நன்னெறியில் வாழக் கடைப்பிடிக்க வேண்டிய கருத்துகள் உள்ளன

ஆசிரியர் – பூதஞ்சேந்தனார்

காலம் – பொ.ஆ.பி. 2ஆம் நூற்றாண்டு

அமைப்பு – வெண்பாவால் ஆன நூல். 40+1 (கடவுள் வாழ்த்து) பாடல்களைக் கொண்டது.

 

6. திரிகடுகம்

சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய மூன்று பொருள்களால் ஆன மருந்துப்பொருள் திரிகடுகம். இது உடல் நோயைப் போக்குவதுபோல், இந்நூலின் ஒவ்வொரு பாடலிலும் உள்ள மூன்று கருத்துகள் மனநோயைப் போக்கும். ஆதலால் திரிகடுகம் என்பது காரணப் பெயராக அமைந்துள்ளது.

ஆசிரியர் – நல்லாதனார்

காலம் – பொ.ஆ.பி. 2ஆம் நூற்றாண்டு

அமைப்பு – வெண்பாவால் ஆனது. 100+1 (கடவுள் வாழ்த்து) பாடல்களைக் கொண்டது.

 

7. ஆசாரக் கோவை

ஆசாராம் என்பது ஒழுக்கம், தூய்மை, நன்மை, முறைமை, நன்னடத்தை, வழிபாடு, கட்டளை, வழக்கம் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.

ஆசிரியர் – பெருவாயில் முள்ளியார்

காலம் – பொ.ஆ. பி. 3ஆம் நூற்றாண்டு

அமைப்பு – வெண்பாவால் ஆன நூல். 100 + 1 (கடவுள் வாழ்த்து) பாடல்களைக் கொண்டது.

 

8. பழமொழி

பழமையான மொழி. அனுபவசாலிகள் கூறும் மொழி.

ஆசிரியர் – முன்றுறையரையனார்.

காலம் – பொ.ஆ.பி.3ஆம் நூற்றாண்டு

அமைப்பு – வெண்பாவால் ஆன நூல். 400 + 1 (தற்சிறப்புப் பாயிரம்) – முதல் இரண்டு அடிகளில் ஆசிரியர் தாம் கருதிய பொருளையும், மூன்றாம் அடி பெரும்பான்மை ஆண்மக்களையும் சிறுபான்மை பெண்மக்களையும் விளிக்கும், நான்காம் அடியில் பழமொழி இடம் பெற்றிருக்கும்.

 

9. சிறுபஞ்சமூலம்

கண்டங்கத்திரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி ஆகிய ஐந்தின் வேர்களால் ஆன மருந்துப் பொருள் சிறுபஞ்சமூலம். இம்மருந்துப் பொருள் உடல் நோயைத் தீர்க்கும். அதுபோல் இந்நூலில் உள்ள ஒவ்வொரு பாடலிலும் உள்ள ஐந்து கருத்துகள் மன நோயைப் போக்கும். எனவே இந்நூலுக்கு சிறுபஞ்சமூலம் என்பது காரணப் பெயராயிற்று.

ஆசிரியர் – காரியாசான். இவர் ஏலாதி ஆசிரியரான கணிமேதாவியாருடன் பயின்றவர்.

காலம் – பொ.ஆ.பி. 5ஆம் நூற்றாண்டு.

அமைப்பு – வெண்பாவால் ஆன நூல் , 100 + 2 (கடவுள் வாழ்த்து + பாயிரம்) பாடல்கள்

 

10. ஏலாதி

ஏலம் + ஆதி = ஏலாதி. ஏலக்காயுடன் 1 பங்கு ஏலக்காய் + 2 பங்கு இலவங்கம் பட்டை + 3 பங்கு நாககேசுரம் + 4 பங்கு மிளகு + 5 பங்கு திப்பிலி + 6 பங்கு சுக்கு என்ற விகிதத்தில் சேர்த்து செய்யப்பட்டக் கூட்டு மருந்துதான் ஏலாதி ஆகும். இம்மருந்து உடல் நோயை நீக்கி, உடலுக்கு வலிமை சேர்ப்பதுபோல் இதன் கருத்துகள் அறியாமையை நீக்கி மெய்யுணர்வைத் தரும்.

ஆசிரியர் – கணிமேதாவியார். இவர் மற்றொரு பதினெண் கீழ்க்கணக்கு நூலான திணைமாலை நூற்றைம்பது என்ற நூலையும் எழுதியுள்ளார்

அமைப்பு – வெண்பாவால் ஆன நூல், 80 + 2 (கடவுள் வாழ்த்து, சிறப்புப் பாயிரம்) பாடல்கள்.

 

11. முதுமொழிக் காஞ்சி

சான்றோர்களின் அனுபவத் தொகுப்பாக, மனித வாழ்வின் நிலையாமையைக் கூறும் நூல்.

ஆசிரியர் – மதுரை கூடலூர் கிழார்.

அமைப்பு – வெண்செந்துறை என்னும் பாவகையால் ஆன நூல், 100 பாடல்கள். ஒவ்வொரு பாடலும் இரண்டு அடிகள் கொண்டது, முதல் அடி ‘ஆர்கலி உலகத்து மக்கட்கெல்லாம்’ என்று தொடங்கும், சிறந்தபத்து, அறிவுப்பத்து, பழியாப்பத்து, துவ்வாப்பத்து, அல்லப்பத்து, இல்லைப்பத்து, பொய்ப்பத்து, எளியப்பத்து, நல்கூர்ந்தபத்து, தண்டாப்பத்து எனப் 10 பிரிவுகளும், ஒவ்வொரு பிரிவுக்கும் தலா 10 பாடல்கள் வீதம் உள்ளன.

(தொடரும்)

பகிர:
nv-author-image

ஜனனி ரமேஷ்

எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். ‘திருவள்ளுவர்’, ‘தமிழ் அறிஞர்கள்’ உள்ளிட்ட நூல்களும் ‘ஔரங்கசீப்’, ‘தேசத் தந்தைகள்’ உள்ளிட்ட மொழியாக்கங்களும் வெளிவந்துள்ளன. கட்டுரைகளும் எழுதிவருகிறார். விருதுகள் பெற்றவர். தொடர்புக்கு : writerjhananiramesh@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *