Skip to content
Home » அறம் உரைத்தல் #2 – கீழ்க்கணக்கு அல்லாத அற (நீதி) நூல்கள்

அறம் உரைத்தல் #2 – கீழ்க்கணக்கு அல்லாத அற (நீதி) நூல்கள்

ஔவையார்

பதினெண் கீழ்க்கணக்கு காலத்துக்குப் பின்னர் தோன்றிய அறநெறி நூல்களை ‘அற நூல்கள்’ என அழைப்பதில்லை. அவற்றை ‘நீதி நூல்கள்’ என்றே கூறுகிறோம். இவ்வகை நீதி நூல்களை இயற்றிய ஆசிரியர்கள் பலர். இவர்களுள் முதன்மையானவர் ஔவையார். தமிழ்வேள் முருகப் பெருமானால் ‘சுட்ட பழம் வேண்டுமா சுடாத பழம் வேண்டுமா?’ எனச் சோதிக்கப்பட்ட ஔவையார்; சங்க காலத்து ஔவையார்; திருக்குறளை அரங்கேற்ற வள்ளுவருக்கு உதவிய ஔவையார்; மன்னன் அதியமானிடமிருந்து நெல்லிக்கனி பெற்ற ஔவையார்; மன்னன் பாரி மகளிரான அங்கவை, சங்கவைக்கு மணமுடித்த ஔவையார்; கம்பர் காலத்து ஔவையார்; ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி ஆகிய நூல்களை இயற்றிய ஔவையார்; விநாயகர் அகவல் பாடிய ஔவையார்; தனிப்பாடல்கள் பாடிய ஔவையார் எனச் சங்க காலம் தொடங்கி பொ.ஆ.15ஆம் நூற்றாண்டு வரை காலந்தோறும் ஔவை என்ற பெயரில் ஒரு தமிழ் மூதாட்டியைப் பார்க்கிறோம்.

ஆத்திசூடி

‘ஆத்திசூடி’ என்ற நூலுக்கான பெயர், ‘ஆத்திசூடி அமர்ந்த தேவனை ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே’ என்ற முதல் தொடரால் பெயர் பெற்றது.

ஆத்திசூடி என்றால் ஆத்தி மாலையைச் சூடிய சிவபெருமான் என்பது பொருள்.

நூலாசிரியர் : ஔவையார்

தனித்தனி ஒற்றை அடிகளாக அமைந்த 108+1 (கடவுள் வாழ்த்து) பாட்டுகள்

அறம் செய விரும்பு,
ஆறுவது சினம்,
இயல்வது கரவேல்,
ஈவது விலக்கேல்,

என அகரவரிசைப்படி ஓரடிச் செய்யுள்கள் அமைந்துள்ளன. இந்நூலுக்குக் கிடைத்த அபரிமித வரவேற்பு காரணமாகப் பிற்காலப் புலவர்கள் பலரும் அவரவர் பாணியில் புதிய ஆத்திசூடிகளை இயற்றியுள்ளனர். அவர்களுள் மகாகவி பாரதியாரும், புரட்சிக் கவிஞர் பாரதிதாசனும் எழுதிய புதிய ஆத்திசூடிகள் புகழ்பெற்றவை. பின்னாளில் வ. சுபமாணிக்கம் (தமிழ்சூடி), தமிழண்ணல் (ஆய்வுசூடி), ந.ரா. நாச்சியப்பன் (நெறிசூடி), ச. மெய்யப்பன் (அறிவியல்சூடி), சோம இளவரசு (நீதிசூடி) என நீதி இலக்கிய மரபு தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

கொன்றைவேந்தன்

‘கொன்றைவேந்தன்’ என்ற நூலும் முதல் தொடரால் பெயர் பெற்ற நூலாகும். ‘கொன்றைவேந்தன் செல்வன் அடியிணை என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே’ என்பது முதல் செய்யுள். கொன்றை மலர் மாலையை அணிந்த சிவபெருமானைக் குறிக்கும்.

நூலாசிரியர் : ஔவையார்.

இந்நூலில் 91 ஓரடிப்பாக்கள்

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்,
ஆலயம் தொழுவது சாலவும் நன்று,
இல்லறம் அல்லது நல்லறம் அன்று

உள்ளிட்ட எளிய பாக்களைப் படிக்கும் போதே பொருளை அறியலாம்.

மூதுரை

‘மூதுரை’ என்ற நூலின் பெயர் முதற்செய்யுளான ‘வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம்’ எனத் தொடங்கும் விநாயகர் வாழ்த்தின் முதல் தொடரைக் கொண்டு அமைந்தது.

நூலாசிரியர் ; ஔவையார்.

இதில் 91 வெண்பாக்கள்

அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல்
உற்றுழித் தீர்வார் உறவல்லர் – அக்குளத்தில்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி உறுவார் உறவு.

என்பது இதிலுள்ள ஒரு செய்யுள். அதாவது குளத்தில் நீர் வற்றியவுடனே நீர்ப்பறவைகள் பறந்து சென்றுவிடும். அப்படிப்பட்ட நீர்ப்பறவைகள் போன்றவர்கள் உறவினர் ஆக மாட்டார்கள். நீர் வற்றினாலும் அந்தக் குளத்திலேயே இருக்கும் கொட்டி, ஆம்பல், நெய்தல் போன்ற தாவரங்களே நல்ல உறவினர்கள் ஆவர் என்பது பொருள்.

நல்வழி

நல்வழியில் கடவுள் வாழ்த்து உட்பட 41 வெண்பாக்கள்

நூலாசிரியர் : ஔவையார்.

மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை – தேனின்
கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்
பசிவந்திடப் பறந்துபோம்.

என்னும் இச்செய்யுளின் பொருளானது மானம், குலம், கல்வி, ஈகை, அறிவு, தானம், தவம், உயர்வு, தொழில், பெண் மீதான ஆசை ஆகிய பத்தும் பசி வந்தால் பறந்து போகும் என்பதாம்.

அறநெறிச்சாரம்

அறநெறிச்சாரம் நூலில் மொத்தம் 226 வெண்பாக்கள்.

நூலாசிரியர் : முனைப்பாடியார்.

காலம் : பொ.ஆ.பி.13ஆம் நூற்றாண்டு.

பலகற்றோம் யாம்என்று தற்புகழ வேண்டா
அலர்கதிர் ஞாயிற்றைக் கைக்குடையும் காக்கும்
சிலகற்றார் கண்ணும் உளவாம் பலகற்றார்க்கு
அச்சாணி அன்னதோர் சொல்.

என்னும் இச்செய்யுளின் பொருள் உலகுக்கே ஒளிதரும் சூரியக் கதிர்களின் வெப்பத்திலிருந்து பாதுகாக்கச் சிறு குடை போதும். அதுபோல் நிறையப் படித்துக் கற்றுவிட்டோம் எனப் பெருமை கொள்ள வேண்டாம். சில நூல்கள் கற்றவர் பேச்சிலும் அச்சாணிபோல் நல்ல சொற்கள் இருக்கும்.

வெற்றிவேற்கை

‘வெற்றிவேற்கை’ என்னும் நூலில் ஓரடியாகவும், ஈரடியாகவும், 82 அறிவுரைகள் உள்ளன. இந்நூல் ‘நறுந்தொகை’ என்றும் அழைக்கப்படும்.

நூலாசிரியர் : தென்காசியைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட அதிவீரராம பாண்டியர்.

காலம் : பொ.ஆ.பி.16ஆம் நூற்றாண்டு.

எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்,
கல்விக்கழகு கசடற மொழிதல்,
அறிஞர்க்கு அழகு கற்றுணர்ந்து அடங்கல்,
எக்குடிப் பிறப்பினும் யாவரே ஆயினும்
அக்குடியில் கற்றோரை மேல்வருக என்பர்,

உள்ளிட்ட உயர்ந்த அறிவுரைகள் அடங்கிய நூலாகும்.

நீதிநெறி விளக்கம்

‘நீதிநெறி விளக்கம்’ கடவுள் வாழ்த்து உட்பட 101 வெண்பாக்கள்

நூலாசிரியர் : காசிக்குச் சென்று மடம் அமைத்துத் தமிழ் பரப்பிய குமரகுருபரர்

காலம் : பொ.ஆ.பி.17ஆம் நூற்றாண்டு

மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார்
எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் செவ்வி
அருமையும் பாரார் அவமதிப்பும் கொள்ளார்
கருமமே கண்ணாயினார்.

என்ற செய்யுளின் அர்த்தம் ‘ஒரு வேலையில் முனைப்பாக இருப்பவர் வருத்தம், நோய்நொடி, பசி, தூக்கம், அடுத்தவர் செய்யும் கெடுதல், அவமதிப்பு எதைப் பற்றியும் கவலைப்பட மாட்டார்’.

நன்னெறி

‘நன்னெறி’ கடவுள் வாழ்த்துடன் 41 வெண்பாக்களைக் கொண்ட நூலாகும்.

நூலாசிரியர் : சிவப்பிரகாச சுவாமிகள்.

காலம் : பொ.ஆ.பி.17ஆம் நூற்றாண்டு

மாசற்ற நெஞ்சுடையார் வன்சொல் இனிது ஏனையவர்
பேசுற்ற இன்சொல் பிறிதென்க – ஈசற்கு
நல்லோன் எறிசிலையோ நன்னுதால் ஒண்கரும்பு
வில்லோன் மலரோ விரும்பு

என்னும் செய்யுளின் அர்த்தம், ‘ஈசன், நல்லான் சாக்கிய நாயனார் எறிந்த கற்களை அன்புடன் ஏற்றுக் கொண்டார். ஆனால் மன்மதன் கரும்பு வில்லான் எய்த மலர் அம்பை ஏற்காது எரித்தார். அதுபோல் தூய உள்ளம் உடையோரின் சொற்கள் கடுமையாக இருப்பினும் நன்மையே தரும். மாறாக தீயோர் சொற்கள் இனிமையாக இருப்பினும் துன்பமே தரும் என்பதாம்.

உலகநீதி

‘உலகநீதி’ 13 விருத்தப் பாக்களைக் கொண்ட இந்நூல் ‘வேண்டாம்’ என எதிர்மறையாகவே அறிவுரை கூறுகிறது. முருகனை வாழ்த்தும் பாடல்களைக் கொண்ட நூலாகும்.

நூலாசிரியர் : உலகநாத பண்டிதர்

காலம் : பொ.ஆ.பி.16ஆம் நூற்றாண்டு

ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்
வஞ்சனைகள் சொல்வாரோடு இணங்கவேண்டாம்
போகாத இடந்தனிலே போகவேண்டாம்
போகவிட்டுப் புறஞ்சொல்லித் திரிய வேண்டாம்
வாகாரும் குறவருடை வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே.

உள்பட நற்கருத்துக்களை எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையில் எழுதப்பட்ட நூலாகும்.

நீதிவெண்பா

நீதிவெண்பா என்னும் பெயருக்கேற்ப வெண்பாக்களால் ஆன நீதி நூலாகும்.

நூலாசிரியர் : பெயர் தெரியவில்லை.

மென்மதுர வாக்கால் விரும்பும் சகம்கடின
வன்மொழியினால் இகழும் மண்ணுலகம் – நன்மொழியே
ஓதுகுயில் ஏதங்கு உதவியது கர்த்தபந்தான்
ஏது அபராதம் செய்ததின்று.

என்னும் இச்செய்யுளின் பொருள், இனிய குரலுடைய குயில் போற்றுதலுக்கும், இனிமையற்ற கழுதையினுடைய குரல் வெறுப்புக்கும் உள்ளாவதுபோல், இனிமையான சொற்களைப் பேசுவோர் புகழப்படுவர். கடும் சொற்களைப் பேசுவோர் வெறுக்கப்படுவர்.

அருங்கலச் செப்பு

‘அருங்கலச் செப்பு’ என்ற நூலில் அருகன் துதி உட்பட 182 குறள் வெண்பாக்கள் உள்ளன.

நூலாசிரியர் : சமணர் (பெயர் தெரியவில்லை)

மெய்ப்பொருள் காட்டி உயிர்கட்கு அரணாகித்
துக்கம் கெடுப்பது நூல்

என்பது இதிலுள்ள ஓர் குறட்பா. இதன் பொருள், ஒரு நல்ல நூல் என்பது மெய்ப்பொருளை விளக்குவதாகவும், உயிர்களுக்கு உறுதிப் பொருளை உணர்த்துவதாகவும், தூக்கத்தைக் கெடுப்பதாகவும் அமையவேண்டும் என்பது கருத்து.

0

மேற்கண்ட நீதி நூல்களுடன் மேலும் பல நீதி நூல்கள் உள்ளன. அவை குறித்த விவரம் வருமாறு:

 • நீதிபோத வெண்பா (முத்துராமலிங்க சேதுபதி)
 • நன்னெறி (செழியதரையன் என்பார்)
 • நரிவிருத்தம் (திருத்தக்க தேவர்)
 • நீதிநூல், பெண்மதி மாலை (மாயூரம் வேதநாயகம் பிள்ளை)
 • ஆத்திசூடி வெண்பா
 • ஆத்திசூடி புராணம்
 • கபிலர் அகவல்
 • இராசகோபால மாலை

0

இடைக்காலத்தில் ‘சதகங்கள்’ எனப்படும் நூல்கள் எழுந்தன. ‘சதகம்’ என்றால் நூறு பாடல்களைக் கொண்ட நூல் என்று பொருள். சதகங்களின் பாடல் ஒவ்வொன்றும் இறைவனைப் போற்றுவதாக இருந்தாலும், அது இறுதி அரையடியில் மட்டுமே இடம்பெறும். பிற மூன்றரை அடிகளும் பல அறக்கருத்துகளையும் நீதிக்கருத்துகளையும் உணர்த்தும்.

 • குருபாத தாசர் இயற்றிய குமரேச சதகம்
 • அம்பலவாண கவிராயர் இயற்றிய அறப்பளீசுர சதகம்
 • சேலம் சிதம்பரப் பிள்ளை இயற்றிய கயிலாசநாதர் சதகம்
 • திருச்சிற்றம்பல நாவலர் இயற்றிய திருவேங்கட சதகம்
 • படிக்காசுப் புலவர் இயற்றிய தண்டலையார் சதகம்
 • நாராயண பாரதியார் இயற்றிய கோவிந்த சதகம்
 • முத்தப்ப செட்டியார் இயற்றிய செயங்கொண்டார் சதகம்
 • யோகீச்வர ராமன் பிள்ளை இயற்றிய நம்பி சதகம்
 • வித்வான் கே. அருணாசலம் இயற்றிய திருவேரக சதகம்
 • பொன்னுசாமி சோதிடர் இயற்றிய கரிவரதப் பெருமாள் சதகம்
 • நீதிசதகம்
 • அறப்பளீசுர சதகம்
 • குமரேச சதகம்
 • குமரேச சதகப் பாடல் ஒன்று உதாரணத்துக்கு
 • சேற்றில் பிறந்திடும் கமலமலர் கடவுளது திருமுடியின் மேலிருக்கும்
 • திகழ் சிப்பியுடலில் சனித்த முத்து அரசரது தேகத்தின் மேலிருக்கும்
 • போற்றியிடு பூச்சியின் வாயின்நூல் பட்டென்று பூசைக்கு நேசமாகும்
 • புகலரிய வண்டெச்சிலான தேன் தேவர்கொள் புனித அபிடேகமாகும்
 • சாற்றிய புலாலொடு பிறந்த கோரோசனை சவ்வாது புனுகு அனைவர்க்குமாம்
 • சாதி ஈனத்தில் பிறக்கினும் கற்றோர்கள் சபையின் மேல் வட்டமன்றோ
 • மாற்றிச் சரத்தினை விபூதியால் உடல்குளிர வைத்த மெய்ஞ்ஞான முதலே
 • மயிலேறி விளையாடு குகனே புல்வயல்நீடு மலைமேவு குமரேசனே.

0

பிறமொழிகளிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்ட மொழி பெயர்ப்பு நீதி நூல்கள் பல உள்ளன. அவற்றுள் குறிப்பிடத்தக்கவை –

 • வீரமார்த்தாண்ட தேவர் இயற்றிய பஞ்சதந்திரச் செய்யுள்
 • செழியதரையன் பஞ்சதந்திரம்
 • சாணக்கிய நீதிவெண்பா
 • நன்மதி சதகம் அல்லது சுமதி சதகம்
 • மனுநீதி சதகம்
 • மனுநீதி சாத்திரம்
 • விதுரநீதி
 • பீஷ்மநீதி
 • சுக்கிரநீதி
 • அர்த்தசாத்திரம்
 • நீதிசாத்திரம்
 • பர்த்ருஹரி நீதி சதகம்
 • நீதிசாரம்

0

‘தொகை’ நூல்கள் என்பன பிற நூல்களிலிருந்து பாக்களை எடுத்துத் தொகுக்கப்பட்டவை ஆகும். உதாரணம் விவேக சிந்தாமணி, தனிப்பாடல் திரட்டு, நீதித் திரட்டு ஆகியவை.

விவேக சிந்தாமணியில் இடம் பெற்றுள்ள செய்யுள்
கற்பூரப் பாத்தி கட்டி கத்தூரி எருப்போட்டுக் கமழ்நீர் பாய்ச்சி
பொற்பூர உள்ளியினை விதைத்தாலும் அதன் குணத்தைப் பொருந்தக்காட்டும்
சொற்பேதையர்க்கு இங்கு அறிவு இனிதாக வருமெனவே சொல்லினாலும்
நற்போதம் வாராது அங்கவர் குணமே மேலாக நடக்குந்தானே.

தாயுமானவர் ஸ்வாமிகள், அருட்பெருஞ்சோதி வள்ளலார் ஸ்வாமிகள், திருமூலர், சித்தர்கள், ஆகியோரின் பாடல்களிலும் அறக்கருத்துகள் குவிந்து கிடக்கின்றன.

(தொடரும்)

பகிர:
ஜனனி ரமேஷ்

ஜனனி ரமேஷ்

எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். ‘திருவள்ளுவர்’, ‘தமிழ் அறிஞர்கள்’ உள்ளிட்ட நூல்களும் ‘ஔரங்கசீப்’, ‘தேசத் தந்தைகள்’ உள்ளிட்ட மொழியாக்கங்களும் வெளிவந்துள்ளன. கட்டுரைகளும் எழுதிவருகிறார். விருதுகள் பெற்றவர். தொடர்புக்கு : writerjhananiramesh@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *