1. செல்வம் நிலையாமை
உலக வாழ்க்கையில் இன்பத்துக்கான அடிப்படைகளுள் செல்வம் முக்கியமாகும். அது இல்லாதபோது வருத்தப்படுவதும், அளவின்றி சேர்ந்த பிறகு அதைப் பாதுகாக்கக் கவலைப்படுவதும் மனித இயல்பு. ‘பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை’ என்பது வள்ளுவன் வாக்கு. செல்வம் ஓரிடத்திலும் நிலைபெற்று இருக்காமல், செல்வோம் செல்வோம் என்று ஓடிக் கொண்டே இருக்கும். எனவே நிலையில்லாச் செல்வத்தின் மீது பற்று வைக்காமல், அது கைவசம் இருக்கும்போதே பிறர்க்கு வழங்கி உதவவேண்டும்.
தித்திப்பு, புளிப்பு, கார்ப்பு, கைப்பு, உவர்ப்பு, துவர்ப்பு என அறுசுவைகளுடன் கூடிய உணவை காதல் மனைவி அன்புடன் கையில் எடுத்து வாயில் ஊட்டுகிறாள். மனைவி அன்புடன் ஊட்டும் போது வேண்டாமென மறுத்துவிட்டு, பின்னர் அதே பருக்கை உணவுக்காகத் தெருத் தெருவாகப் பிச்சை எடுக்கும் நிலை வரலாம். செல்வத்தின் நிலையாமை காரணமாக வறுமை உண்டாகலாம். உணவு இல்லயெனில் கூழேனும் கொடுங்கள் என யாசிக்கும் நிலைக்கும் தள்ளப்படலாம். எனவே நிலையற்ற செல்வத்தைப் பாதுகாக்காமல், அது கையிலிருக்கும் போதே அற வழிகளில் செல்வழிப்பதே அறிவுடைமை. செல்வம் துணை இருக்காது. உடன் வராது. அறம் ஒன்றே இம்மைக்கும், மறுமைக்கும், உறுதுணையாக இருக்கும்.
நடுநிலை பொருந்த எவரிடத்தும் செல்வம் நிலையாக நிற்பதில்லை. வண்டிச் சக்கரம் உருளும் போது ஆர்க்கால்கள் மேலும் கீழுமாக இடம் மாறிச் சுழல்வதுபோல், வாழ்க்கைச் சக்கரமும் உயர்வும் தாழ்வுமாகச் சுழன்று கொண்டே இருக்கும். எருது கொண்டு வயலில் பயிரிட்டு, உழுது, போரடித்து, விளைவித்த நெற்கதிர்கள் குற்றமற்ற செல்வமாகும். ஆனால், இந்தப் பெரும் செல்வம் குற்றமற்ற செல்வமே என்றாலும், யாருக்கும் தராமல் பூட்டி வைக்காதீர்கள். அதேபோல் உணவுப் பொருள்கள் விளைந்த காலத்திலேயே, அதைப் பதுக்கியும், சேர்த்தும் வைக்காமல், மக்கள் அனைவரும் பசியின்றி வாழவேண்டும் என்னும் அறச் சிந்தனையுடன் பகிர்ந்து உண்ணுங்கள். ‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்’ எனத் திருக்குறளும் இதே கருத்தை வலியுறுத்துகிறது.
யானைப் படை, குதிரைப்படை, தேர்ப்படை, காலாட்படை ஆகிய நான்கு வகைப் படைகளும் பின்தொடர, பட்டத்து யானையின் பிடரிக்கே தம்மால்தான் அழகு வந்தது என மிதப்புடன், அதன் மீதமர்ந்து, வெண்கொற்றக் குடையின் கீழ் வெற்றி உலா வந்த அரசர்கள் ஏராளம். ஆனால் முற்பிறவியில் செய்த தீவினை காரணமாக அரச வாழ்வு அழிந்து முற்றிலும் நிலை கெட்டு மாறுபட்டுப் போகலாம். துன்பத்தின் உச்சமாக முறையாகக் கட்டிய மனைவியைகூட பாதுகாக்க வலுவின்றி, எதிரிகள் அவளைச் சிறைப்பிடித்துச் செல்லலாம். இத்துயரமான காட்சியைக் கண்டு குமுறும் இழிநிலைக்கும் தள்ளப்படலாம். ஆட்சி அதிகாரம் செய்த நாட்டை மட்டுமின்றிக், கட்டிய மனைவியையும் மாற்றானிடம் இழக்க நேரிடலாம். ‘அரசியல் செல்வாக்கு’ நிலையற்றது என்பதால், பதவியும், செல்வாக்கும் உள்ள போதே அறச்செயல்களில் ஈடுபடுவீர்.
ஆண்டொன்று போனால் வயதொன்று கூடும். நாள்கள் செல்லச் செல்ல ஆயுள் குறைந்து கொண்டே போகும். யமனும் உயிரைப் பறிக்கக் கோபத்துடன் நெருங்கத் தொடங்குகிறான். எனவே நம் உயிரும், சேர்த்த செல்வமும், என்றென்றும் நின்று நிலைபெற்று நீடித்து நிலைக்காது என்னும் உண்மையை உணர்ந்து, செய்ய முடிந்த தருமச் செயல்களைச் செய்வீர். பாடுபட்டுச் சேர்ந்த செல்வமும், உயிரும் நிலைக்காது என்னும் உண்மை உணர்ந்து, செய்ய நினைக்கும் தான தரும புண்ணியங்களை தாமதமின்றி உடனே செய்யுங்கள்.
கூற்றம் என்னும் யமன் கொடிய தன்மையை உடையவன். அவன் நடுநிலையானவன் என்பதால் கடமையில் இருந்து சிறிதும் தவற மாட்டான். அருள் தன்மையே இல்லாத யமன், பாசக் கயிற்றால் கட்டி உயிரைப் பறித்துச் செல்வான். வாழும் காலத்தில் பொருளைச் சேமித்து வைக்காமல், பிறர்க்கு கொடுத்து உதவுங்கள். வழியில் குறுக்கிடும் வெம்மையான சுட்டெரிக்கும் நெருப்பு ஆற்றை எளிதில் கடக்க நீங்கள் செய்யும் அறச் செயல்கள் துணை நிற்கும். தீவினைக்குக் காரணமான நரகத்திலிருந்து, சிறிதளவே தர்மம் செய்தாலும், தப்பிச் சொர்க்கம் செல்லலாம். ஆனால் தர்மம் செய்யாமல், செல்வத்தைச் சேர்ந்து வைத்தவர்களோ நரகத்தையே அடைவார்கள். தர்மம் செய்வோர்க்குச் சொர்க்கமும், செய்யாதோர்க்கு நரகமும் கிட்டும்.
நாம் பிறக்கும் போதே நமது வாழ்நாள் இவ்வளவுதான் என முன்பே நிர்ணயிக்கப்பட்டு விடுகிறது. அவ்வாறு தீர்மானிக்கப்பட்ட ஆயுட்காலம் எந்தச் சூழலிலும் எல்லையைக் கடந்து செல்லப் போவதில்லை. அவ்வாறு வரையறுக்கப்பட்ட ஆயுளைத் தாண்டி ஒருவரேனும் உலகில் ஒரு வினாடிகூட அதிகம் வாழ்ந்ததாக வரலாறும் கிடையாது. எனவே தேவைக்கு அதிகமாகச் செல்வத்தைச் சேர்த்து வைத்திருப்போர், மிகுதியான பொருளை இல்லாதவர்க்குத் தான தருமம் செய்யத் தொடங்குங்கள். ஏனெனில், ‘தண்ணம்’ அல்லது’ தண்ணுமை’ எனப்படும் சாவுப் பறை / மேளம் ‘தழீஇம் தழீஇம்’ என உங்களைக் குறித்து எப்போது வேண்டுமானாலும் ஒலிக்க ஆரம்பிக்கலாம். நாளைக்கேகூட நீங்கள் இறக்க நேரிடலாம். எனவே இன்றைக்கே அறச் செயல்களில் ஈடுபடுங்கள்.
செங்கதிர்களின் பேரொளியால் உலகிலுள்ள ஜீவராசிகள் அனைத்தையும் விளங்கச் செய்யும் ஆற்றல் கொண்டது சூரியன். அந்தச் சூரியனையே நாழிகையாகக் கொண்டு யமன் நாள் தோறும் உங்கள் வாழ்நாளின் ஒவ்வொரு தானியத்தையும் (வினாடியையும்) அளந்து அளந்து உண்டு (கழித்துக்) கொண்டிருக்கிறான். எனவே, எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்துங்கள். மிகுதியாக அறச் செயல்களில் ஈடுபடுங்கள். யாராக இருப்பினும், அறம் செய்து அருளாளராக வாழாவிட்டால், நீங்கள் மனிதராகப் பிறந்தும், பிறவாதவராகவே கருதப்படுவீர்கள்.
நாங்கள் செல்வந்தர்கள் என ஆணவம் கொண்டோரும், இறந்த பிறகு செல்ல வேண்டிய இடம் பற்றி எண்ணாதோரும், அறிவு இல்லாதவர்களாகவே கருதப்படுவர். இத்தகையோர் சேர்த்து வைத்த பெரும் செல்வம், இரவிலே கரு மேகம் வாய் திறப்பதால் உண்டாகும் மின்னலைப் போல் திடீரெனத் தோன்றி, சிறிது நேரமே ஒளி வீசிப், பின்னர் இருந்த இடம் தெரியாமல் முற்றிலுமாக மறைந்துபோகும். பணக்காரர்கள் என்னும் அகந்தையோடு, அறத்தின் பயனை உணராமல் தர்மம் செய்யாத அறிவிலிகளின் செல்வம், மின்னலைப்போல் விரைவிலேயே இருந்த இடம் தெரியாமல் அழிவது நிச்சயம்.
வயிறார நன்கு ருசித்துச் சாப்பிட மாட்டான், காண்போர் வியக்கும் வண்ண ஒளியானது தன்னிடத்தே நிலைபெற்று இருக்குமாறு நல்ல ஆடை அணிகலன்களை அணிய மாட்டான், புகழைத் தரும் நல்ல செயல்களைச் செய்ய மாட்டான், பெறுவதற்கு அருமையான உறவுகளின் துன்பங்களைப் போக்க மாட்டான், தன்னை நாடி வந்து யாசிப்பவர்க்குக் கைம்மாறு கருதாமல் உதவ மாட்டான். தானும் அனுபவிக்க மாட்டான், அடுத்தவர் அனுபவிக்கக் கொடுக்கவும் மாட்டான். எந்த அறச் செயலையும் செய்யாமல், வீணாக நிலையில்லாப் பொருளே பெரிதென்று பூதம் காப்பதுபோல் பாதுகாத்துக் கொண்டிருப்பவனைப், பொருளைச் சேர்த்தான் எனக் கருதாமல், ஐயோ, பொருளை இழந்தான் என்றே சான்றோர் எண்ணுவர்.
ஆகாயத்தை மூட்டும் அளவுக்கு உயர்ந்த மலைகளைக் கொண்ட நாட்டின் அரசனே, நல்ல ஆடைகளை அணியாமலும், வாய்க்கு ருசியான உணவுகளைச் சாப்பிடாமலும், உடலை வருத்தி நோன்பு இருக்காமலும், இம்மைக்கும் மறுமைக்கும் பயனளிக்கும் நல்ல அறங்களைச் செய்யாமலும், மேலும் மேலும் பணத்தைச் சேர்த்து ஏழைகளுக்குக் கொடாமலும் இருப்பவர்கள் என்றேனும் ஒரு நாள் சேர்த்த செல்வம் அனைத்தையும் இழப்பார்கள். தேனீக்கள் பாடுபட்டுச் சேர்த்த தேனை, தானும் உண்ணாது அடுத்தவரையும் நெருங்க விடாது. தேனிக்களை விரட்டிவிட்டுத் தேனை யாரோ எடுத்துச் செல்வதுபோல், உழைத்துச் சேர்த்த செல்வத்தை எவனோ எடுத்துச் செல்வான்.
0
2. இளமை நிலையாமை
இளமைப் பருவதில் தடம் புரளாமல், ஆசைகளைக் கட்டுப்படுத்த வேண்டும். இளமை நிலைக்காது என்பதை உணர்ந்து நல்லொழுக்க நெறியில் வாழ்வதே சிறப்பாகும். இளமையின் நிலையாமை இயல்பு, பருவக் கோளாறுகளால் தவறு இழைக்காமை, உடலையும் உள்ளத்தையும் கட்டுப்படுத்தி ஒழுக்கமுடன் வாழ்வோர்க்குக் கிடைக்கும் நிலைத்த இன்பம், ஆகியவை குறித்து இந்த அதிகாரம் விளக்குகிறது.
இளமை ஊஞ்சலாடும் துடிப்பான பருவம். உடற்கட்டும், வனப்பும், எழிலும், காண்போரின் மனத்தில் பல்வகை எண்ணங்களைத் தூண்டிவிடுகின்றன. வேட்கை காரணமாக அதில் ஈடுபவோர் பலர். ஆனால் இந்த ஆர்வமும், அனுபவமும் என்றென்றும் நீடித்து நிலைக்குமென யாரேனும் உத்தரவாதம் தர இயலுமா? நிச்சயம் முடியாது. மயக்கம் தெளியும்போது இளமையும், பருவமும், மற்றவரைச் சுண்டி இழுக்கும் அழகும் நிலையற்றது என்னும் உண்மை தெரிய வரும். நரையும், திரையும், மூப்பும், யௌவனத்தின் நிலையாமையை உணர்த்தும்.
குற்றமற்ற அறிவை உடைய நல்லறிவாளர், இளமை மறைந்து முதுமை வரும் என்றும், கருமுடி நரைத்து வெள்ளை முடி தோன்றும் என்றும், முன்பே எண்ணி ஆசைகளைக் கட்டுப்படுத்தினர். இளம் பருவம் முதற்கொண்டே யான் என்னும் அகப்பற்றையும், எனது என்னும் புறப்பற்றையும் விலக்கினர். ஆனால், காமம் வெகுளி மயக்கம் நிறைந்த இளமைப் பருவத்தில் அவற்றை விலக்காமல் ஆடி மகிழ்ந்து களித்தவர்கள், முதுமைக் காலத்தில் எழுந்து நடக்க முடியாமல் கோலூன்றித் துன்பத்தில் உழல்வார்கள். இளமையில் இன்பங்களைத் துறந்தால், முதுமையில் சிறக்கலாம். இளமையில் ஆசைகளுக்கு அடிமையானால், முதுமையில் சுயமாக எழவோ, நடக்கவோ, இயலாமல் போகும்.
இளமையும் வனப்பும் உள்ளபோது பெண்களும், நண்பர்களும், உற்றார் உறவினர்களும் சுற்றி வலம் வருவார்கள். அன்பு செலுத்தி மகிழ்வார்கள். ஆனால் இந்த இளமையும், அழகும், வாழ்வும் நிலைக்குமா? தலையில் வெள்ளி முளைத்து நடை தள்ளாடும்போது, பின்னிப் பிணைத்திருந்த ‘நட்பு’ நார் அறுந்துபோகும். சுற்றிச் சுற்றி வந்த நண்பர்கள் கூட்டம் குறையும். ஆசையுடன் நாடி வந்த மகளிர் விலகிச் செல்வர். மனைவியும், உடன் பிறந்தோரும், பிள்ளைகளும், சொந்த பந்தமும், உற்றார் உறவினரும், முன்பு செலுத்திய அன்பின் அளவு குறையும். அன்புக் கட்டுகளும், அரவணைப்புகளும் தளரும். இளமையில் இன்பம், முதுமையில் துன்பம் என்னும் நிலையை ஆய்வு செய்து உணருங்கள். கடலில் கவிழ்ந்து அலைகளுக்கு இடையே தள்ளாடி மூழ்கும் மரக்கலம்போல், வாழ்க்கைக் கடலில் மூழ்கித் துன்பங்களில் சிக்கித் தவிப்பார்கள். இளமை நிலைக்குமென சிற்றின்பத்தில் உழன்று வாழ்வதால் கிடைக்கும் பயன் என்ன? ஏதுமில்லை.
இல்வாழ்க்கையில் நெருக்கம் உடையவராகவும், சிற்றின்பத்தில் ஆசை கொண்டவராகவும் உள்ளோர்க்கு, உயிருக்குப் பேரின்பத்தைத் தந்து அரண்போல் பாதுகாக்கும் துறவு நெறியில் மனம் செல்லாது. இதன் காரணமாக, பேசும் சொற்கள் தவறும், வாய் குழறும், பற்கள் உதிர்ந்து பொக்கையாகும், நடை தளரும், நடக்க முடியாமல் தடியை ஊன்றும் நிலைக்குத் தள்ளப்பட்டு, காண்போரால் பழிச்சொல்லுக்கு உள்ளாக நேரிடும். சிற்றின்பத்தில் ஈட்டுபட்டு, உடல் தளர்ந்து, நலிவடையாமல், இளமையின் நிலையாமை அறிந்து, காமத்தை வெறுத்துத் துறவு நெறியில் மனத்தைச் செலுத்துவதே உண்மையான பேரின்பமாகும்.
இளமையும் அழகும் வனப்பும் நிறைந்த பருவ மங்கையாக வலம் வந்தபோது அவள் மீது மோகம் கொண்டு அலைந்தவர் பலர். தனது அழகால் அனைவரையும் மயக்கினாள். அப்போது அந்த வழியே ஒரு கிழவி மூப்பு காரணமாக முதுகு கூனி, உடல் தளர்ந்து, தலை நடுங்கி, கீழே விழாமல் இருக்க ஊன்றுகோல் உதவியுடன் தடுமாறி நடந்து கொண்டிருக்கிறாள். அவளைக் காட்டி, இந்தக் கிழவியும் இளமைப் பருவத்தில் காமுகர்களுக்கு ஆசையை மூட்டத்தக்க கட்டழகுடன் இருந்தவள்தான். ஆனால் இன்றைக்கு வெறுக்கப்படும் நிலையில் உள்ளாள். ஆகவே இளமை என்பது தோன்றி மறையும் நீர்க்குமிழிக்கு ஒப்பானது. என்றென்றும் நிலைத்து நிற்காது. இந்தக் கிழவியைப் பார்த்தாவது, இளமையின் நிலையாமை உணர்ந்து, காமத்தை விடுத்து, துறவில் மனத்தைச் செலுத்துவதே உய்வதற்கான வழியாகும்.
இந்தப் பிறவியில் எனக்குத் தாயாக இருந்தவள், துடிதுடிக்க இந்த உலகில் தவிக்க விட்டுவிட்டு, தனக்கு இன்னொரு தாயைத் தேடி அடுத்த பிறவிக்குச் சென்றுவிட்டாள். அவளுக்குத் தாயாக இருந்தவளும் அவளை விட்டுவிட்டு இன்னொரு தாயைத் தேடிச் சென்று அவள் வயிற்றிலே பிறந்து வளர்ந்து இறக்கிறாள். இவ்வாறாக, இளமை, முதுமை, மரணம் என ஒவ்வொரு தாயும் மற்றொரு தாயைத் தேடிக் கொண்டே இருப்பதுதான் உலகின் இயல்பாகும். பிறந்தவர்கள் அனைவரும், இளமை கழிந்து முதுமை அடைந்து, இறக்கும் தன்மை உடையவர் என்பதால் இளமை நிலையற்றது என்பதை உணருங்கள்.
ரத்தக் கறை படிந்த பலிகொடுக்கும் கொலைக் களத்திற்கு, மஞ்சள் குங்குமம் தடவி அலங்கரிக்கப்பட்ட செம்மறி ஆட்டை, கழுத்தில் கயிறு கட்டிப் பூசாரி இழுத்துச் செல்கிறான். ஆட்டை வெட்டுவதற்குக் கொடுவாள் ஒரு கையில் உள்ளது. ஆட்டின் கழுத்திலே போடுவதற்கு இடையிடையே தளிர்களை வைத்துக் கட்டப்பட்ட பூமாலை இன்னொரு கையில் இருக்கிறது. ஆவேசத்துடன் வெறிகொண்டு ஆடுகிறான். இன்னும் சிறிது நேரத்தில் தனது தலை வெட்டப்பட்டு பலியாகப் போகிறோம் என்று உணராமல் அந்த ஆடு, அந்தப் பூசாரியின் கையில் தொங்கும் பூமாலையில் உள்ள தளிர்களை உண்டு சுவைத்துக் களித்துக் கொண்டிருக்கிறது. ஆடு, தானே இரையாகப் போவதை அறியாமல், தளிரை இரையாக உண்டு மகிழ்வது போல், மனிதன் விரைவில் அழியும் தனது இளமை / ஆயுளைப் பற்றி எண்ணாமல் சிற்றின்பங்களில் ஈடுபட்டுக் குதூகலிக்கிறான். என்னே அறியாமை?
குளிர்ச்சி பொருந்திய சோலை. ஏராளமான மரங்கள். பச்சைப் பசேலென்ற இலைகள். வண்ண வண்ணப் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. சுவையான பழங்கள் பழுத்துத் தொங்குகின்றன. ஆனால் இந்தச் சூழல் சில காலம் மட்டுமே. தட்பவெப்ப நிலை மாறும்போது பச்சிளம் இலைகள் சருகுகளாய் மாறும். பூக்கள் காய்ந்து போகும். பழுங்கள் கனிந்தும், வெம்பியும் கீழே விழும். மரங்களே கூட அழகை இழந்து பட்ட மரமாகக் காட்சி அளிக்கும். மனித வாழ்க்கையும் இத்தகையதுதான். இளமையில் வேல் விழிகள் என வர்ணிக்கப்பட்ட கண்களைக் கொண்ட அழகுப் பெண்கள் மீது ஆசை வைக்காதீர்கள். பழுத்த மரம் பட்ட மரம் ஆன பின் அனைவரும் புறக்கணிப்பதுபோல், பார்வை குறைந்து முதுகு வளைந்து கூனியாகி ஊன்றுகோல் எந்தும் முதுமைப் பருவம் எய்தும் மூதாட்டியை யாரும் விரும்ப மாட்டார்கள்.
உடல் நலம் எப்படி இருக்கிறது? தாடை ஏன் ஒட்டிக் கிடக்கு? பல் ஒண்ணு இரண்டாவது இருக்கா இல்லை மொத்தமும் விழுந்து விட்டதா? மூன்று வேளையும் சாப்பிட முடியுதா? முன்பைப்போல் உணவை நன்கு மென்று சாப்பிட முடிகிறதா? வயது எவ்வளவு எழுபதா எண்பதா? முதியவர்களைப் பார்த்து வழக்கமாகக் கேட்கப்படும் கேள்விகள் இவை. இளமை என்பது நிலையானது அல்ல. இளமையில் சாத்தியமான எதுவுமே முதுமையில் இல்லை. ஆரோக்கியம் குறையும், பற்கள் விழும், முதுகு கூன் விழும், நடை தளரும், ஊன்றுகோல் தேவைப்படும், கண் பார்வை மங்கும். ஒரு வேளை சாப்பிடுவதே பெரும்பாடு. கடினமான உணவை மென்று சாப்பிடு முடியாது. கெட்டியான உணவைக் குழைத்தும் கரைத்தும்தான் குடிக்க முடியும். எனவே இளமையின் வனப்பையும், தேகத்தின் வலிமையையும், அறிவுடையோர் அளவுக்கு அதிகமாக எண்ணி மகிழவோ, மதிக்கவோ மாட்டார்கள்.
இடி மின்னலுடன் மழை பெய்கிறது. கடுமையான காற்று வீசுகிறது. அதன் காரணமாக மரத்திலுள்ள பழுத்த பழங்கள் கீழே உதிர்ந்து விழுகின்றன. அந்தப் புயலில் கனிகள் மட்டுமின்றி, நல்ல காய்களும் கீழே உதிர வாய்ப்புண்டு. எனவே, இப்போது எழில் கொஞ்சும் இளமைப் பருவத்தில் இருக்கிறோம். வாழ்க்கையை நன்றாக அனுபவிப்போம். முதுமைக் காலத்தில் தான தருமங்களைச் செய்யலாம் எனக் காத்திருக்க வேண்டாம். ஆயுள் நம் கையில் இல்லை. இளமையும் நிரந்தரமல்ல. வயதான காலத்தில்தான் இறப்பு என்றில்லை. இளமை கொஞ்சும் எழில் பருவத்திலும் மரணம் நிகழலாம். எனவே கையில் பொருள் இருக்கும் போதே, யாசகம் கேட்டு வருவோர்க்கு, இல்லை என்று மறுக்காமல் அறம் செய்யுங்கள்.
கருணை சிறிதும் இல்லாத கூற்றுவன் எனப்படும் யமன் ஆயுள் முடிந்தவர்களைத் தேடித் தேடி அலையும் இயல்பைக் கொண்டவன். யமன் எப்போது வருவான்? யாரைக் கொண்டு செல்வான் என்று எவராலும் சொல்ல முடியாது. கருவில் உள்ள குழந்தையை வெளியே வரச் செய்து, பத்து மாதம் சுமந்து பெற்ற தாய் பீறிட்டு அலறக், கதறக் கதறப் பிள்ளையைக் கொண்டு செல்லும் அருளற்றவன் யமன். இந்த உண்மையை உணர்ந்து கூற்றத்தின் வஞ்சனையை மறக்காமல் தெளிவு கொள்ள வேண்டும். அடுத்த ஊருக்குப் பயணிக்கும் போது தோளிலே சுமந்து செல்லும் கட்டுச்சோற்று மூட்டை பசியைத் தீர்க்கும். அதுபோல், இறந்த பிறகு, அடுத்த உலகுக்குச் பயணிக்கும் போது, உயிருடன் வாழும் காலத்தில் செய்யும் நல்வினைகள் மட்டுமே துணை செய்யும்.
(தொடரும்)