3. யாக்கை நிலையாமை
செல்வம் ஓரிடத்தில் தங்காது. நிலைத்து நிற்காது. அதுபோல் இளமையும் என்றென்றும் நிரந்தரமல்ல. பச்சை இலை பழுத்து, காய்ந்து, சருகாய் உதிர்வதுபோல், இளமையும் நரை, திரை மூப்படைந்து மரணத்தைத் தழுவும். இளமையிலும் இறப்பு நிகழ்வதுண்டு. எனவே செல்வமும், இளமையும் இருக்கும்போதே அறம் செய்ய வேண்டுமென முந்தைய அதிகாரங்களில் பார்த்தோம்.
இந்த அதிகாரம் செல்வமும், இளமையும் மட்டுமல்ல, யாக்கை அதாவது உடலும் நிலையற்றதே என விளக்குகிறது. நரம்பு, எலும்பு, தசை, தோல், இரத்தம், கொழுப்பு, சுக்கிலம் (ஆண், பெண் இனப்பெருக்கச் சத்து) உள்ளிட்ட ஏழு வகைத் தாதுக்களால் யாக்கப்பட்டது உடல். யாத்தல் என்றால் கட்டுதல் எனப் பொருள்படும். எனவே யாக்கை எனப்பட்டது. உயிரின் நன்மைக்கான செயல்களில் ஈடுபடுவதற்கான கருவியே உடலாகும். உயிரின் நன்மை கருதி, இளமையுடன், ஆரோக்கியமாக இருக்கும்போதே அறம் செய்யத் தொடங்க வேண்டும்.
மலையின் மீது காணப்படுகின்ற முழு நிலவைப்போல, பட்டத்து யானையின் தலைமேல் வட்டமாக உள்ள ஒற்றை வெண்கொற்றக் குடையின் கீழ் ஆட்சி செய்பவர்கள் பேரரசர்கள். ஆனால், கொடிகட்டிப் பறந்த சக்ரவர்த்திகளும் இந்த உலகில் ஒரு நாள் செத்து மடிந்தவர்களே என அறிவுடையோர் சுட்டிக் காட்டுகின்றனர். நோய் நொடி வராமல், ஆரோக்கியம் குறையாமல், எச்சரிக்கையுடன் வாழும் மன்னர்களுக்கே யாக்கை நிலையானது இல்லை. எனவே மரணத்திலிருந்து தப்பி மண்ணில் உயிர் வாழ்ந்தவர் என எவருமே கிடையாது. யாக்கை அழியும் இயல்பைக் கொண்டது என்பதால், அது உள்ள போதே அறம் செய்தல் நன்று.
வாழும் காலத்தை நம்மால் அளக்க முடியாது. கிழக்கிலே உதிக்கும் ஒளிரும் சூரியன் மேற்கிலே மறைந்து மறுநாள் மீண்டும் உதிக்கும் வரையிலான காலத்தை ஒரு நாள் எனக் கணக்கிடுகிறோம். இவ்வாறாக ஏழு நாள்களை ஒரு வாரம் என்றும், முப்பது நாள்களை ஒரு மாதம் என்றும், பன்னிரு மாதங்களை ஒரு வருடம் என்றும் கணக்கிடுகிறோம். கண்ணுக்குத் தெரியாத அருவமான காலத்தை, கண்ணுக்குப் புலப்படும் உருவமான சூரியனின் உதயம், அஸ்தமனம், மீண்டும் உதயம் கொண்டு அளக்கிறோம்.
நிலையற்ற தன்மையுள்ள யாக்கை அழிவதற்கு முன் அறங்களைச் செய்து நலமான வாழ்வுக்கான வழியைத் தேடுங்கள். இன்று வேண்டாம், நாளை அல்லது மறுநாள் அறம் செய்யலாம் எனத் தள்ளிப் போட்டுக் கொண்டே சென்றால், காலம் உங்களுக்காகக் காத்துக் கொண்டிருக்காது. இளமை மறைந்து, ஆயுள் குறைந்து, மரணம் திடீரென உங்களைத் தழுவிக் கொள்ளும். எனவே விண்ணுலகம் செல்ல, வாழும் போதே துறவறம் மேற்கொண்டு நல்லறம் செய்யுங்கள்.
திருமண ஏற்பாடு கோலாகலமாக நடைபெறுகிறது. நாகஸ்வரம் தவிலுடன் செவிகளில் இனிய மங்கல இசை முழங்குகிறது. மண்டபம் முழுவதும் மணம் கமழும் பூச்சரங்கள் தொங்க விடப்பட்டுள்ளன. எங்கு பார்த்தாலும் ஆடல், பாடல் கொண்டாட்டங்கள். ஆனால் யாருமே எதிர்பாரா வண்ணம் திடீரென மண வீட்டில் பிணம் விழுகிறது. மங்கல இசை பறை இசையாக மாறுகிறது. உற்றார் உறவினர் நண்பர்கள் புடைசூழ, சிரிப்பும் கும்மாளமுமாகக் குதூகலித்த மண்டபத்தில், இப்போது அழுகைக் குரல்கள், ஒப்பாரிச் சத்தம். கண நேரத்தில் எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது. ஆகவே, மண நாளே கூடப் பிண நாளாக மாறலாம் என்னும் நிலையாமையைக் கொண்டது உடம்பு என்பதை உணருங்கள். துன்பம் நிறைந்த இல்வாழ்விலிருந்து தப்பிக்க, இன்பம் தரும் துறவை மேற்கொண்டு அறம் செய்வதையே, மாட்சிமை பொருந்திய அறிவுடையோர் மனம் விரும்பும்.
இறந்து போனவரின் வீட்டிற்குச் சென்று பறை மேளம் இசைப்போர் ஒரு முறை அடிப்பார்கள். சிறிது இடைவெளி விட்டு இரண்டாம் முறை முழங்குவார்கள். மூன்றாம் முறை பறை கொட்டுவதற்குள், இறந்தவன் பிணத்தைக் கோடித் துணியால் மூடி, தீச்சட்டியுடன் அழுது கொண்டே, இனி இறக்கப் போகிறவர்கள் சுமந்து செல்வார்கள். இதுவே இயற்கையின் நியதி ஆகும். இன்று செத்தவனைப் பார்த்து இனி சாகப் போகிறவன் அழுவது விதியின் விந்தை அல்லவா? எனவே யாக்கையின் நிலையாமை எண்ணிச் சிற்றின்பங்களில் ஈடுபடாமல், துறவறம் மேற்கொண்டு அறச் செயல்களில் மனத்தைச் செலுத்துங்கள்.
நேற்று இரவு கூட நன்றாக உண்டு கலகலப்பாகச் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தவர் இன்று விடியற்காலை திடீரென மரணமடைந்து விட்டார். உற்றார் உறவினர் எல்லோரும் கூட்டமாகக் கூடிப் பெரும் கூச்சலிட்டு அழுது புரண்டு புலம்பினர். பின்னர் பிணப் பறை ஒலிக்க அவரைத் தூக்கிக் கொண்டு சுடுகாட்டுக்குச் சென்று தீக்கிரையாக்கும் காட்சியைக் கண்கூடாகப் பார்க்கிறோம். இதுதான் வாழ்க்கை. அடுத்த நொடி என்ன நடக்குமெனத் தெரியாது.
முதல் நாள் இரவு சிரித்தவர் விடியலில் சடலமாகிப் போனார். இவை அனைத்தையும் பார்த்த பிறகும் கூட, திருமணம், பணம், பெண் என நிலையற்ற இன்பங்களின் மீது ஆசை வைக்கும் அறிவற்றவனை என்ன சொல்வது? இத்தகைய சிற்றின்பங்களில் மீது பற்றும் பாசமும் வைப்பவர்களுக்கு, இழவு வீட்டில் ‘தொண் தொண்’ என ஒலிக்கும் சாக்காட்டுப் பறை யாக்கையின் நிலையாமையை எடுத்துச் சொல்லும். உடலுக்கும் இதுதான் கதி என உணர்த்தும். இதை அறிவுடையோர் புரிந்து கொண்டு இல்லறம் விடுத்துத் துறவறம் தேடுவர்.
காயமே (உடல்) இது பொய்யடா. காற்றடைத்த பையடா (உடல்). உடலாகிய இந்தத் தோல் பையில் தங்கும் உயிர், முன் செய்த இரு வினைகளுக்கான பயனை முற்றுப் பெற வைக்கும். உடம்பினில் இருக்கும் போது பார்க்கும் அனைவரும் வியக்கும் வகையில் பல்வகைத் தொழில்களைச் செய்யும். வாழும் போது செய்த வினைகளுக்கு ஏற்பவும் பல்வேறு வடிவங்கள் எடுத்து இயங்கும். இவை உயிரின் இயல்பாகும். கூத்தாடியாகிய உயிர்தான் உடலுக்கு அனுபவமாகிய இன்பத்தையும், துன்பத்தையும் அளிக்கிறது. உயிர் போன பிறகு உடல் உணர்வற்றுப் போய்விடும்.
உடலை விட்டு உயிர் நீங்கிய பிறகு அந்த உடலை நாரால் கட்டிப் பாடையில் இழுத்துச் சென்றால் என்ன? பூமாலைகளால் அலங்கரித்தால் என்ன? மேடையில் விறகுகளை அடுக்கித் தீயிலிட்டுப் பொசுக்கினால் என்ன? சந்தனக் கட்டைகளை அடுக்கி எரித்தால் என்ன? பூமியில் குழி தோண்டி அடக்கம் செய்தால் என்ன? கண்ட இடத்தில் வீசி எறிந்தால் என்ன? போற்றிப் புகழ்ந்தால் என்ன? தூற்றிப் பழித்தால் என்ன? கூத்தன் என்னும் உயிர் போன பின் அந்த உடலை எதுவும் பற்றுவது இல்லை. ஆதலால், உயிரற்ற உடலால் எந்தப் பயனும் இல்லை. எனவே உடலில் உயிர் இருக்கும் போதே அறம் செய்க.
கனமழை பொழிகிறது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. விழுகின்ற மழைநீரில் நீர்க்குமிழிகள் தோன்றி மறைகின்றன. இந்த உடலின் தன்மையும் அதுதான். பலமுறை தோன்றி மறையும் நீர்க்குமிழிகள் போல மீண்டும் மீண்டும் பிறந்து இறக்கும் நிலையாமை கொண்டது இந்த உடல். நிரந்தரமற்ற இந்த யாக்கையை எண்ணி, மன மயக்கத்தாலும் மாயையாலும் ஏற்படும் தடுமாற்றங்களைப் அறிவுடையோரே போக்கிக் கொள்வர். ஆனால் அவ்வாறு அறிந்து உணரும் திண்மையான அறிவு பெற்றவர்கள், இந்த நீண்ட நெடிய பரந்த உலகில் யார் இருக்கிறார்கள்? யாரும் இல்லை. அவ்வாறு இருப்பின் அவர்களுக்கு இணையானவர்களும் யாரும் இல்லை.
வானத்தில் நீந்தியும், மலை முகடுகளில் தவழ்ந்தும், வெண் மேகங்கள் செல்கின்றன. அவை ஓரிடத்தில் தோன்றி, அங்கேயே நிலைத்து நிற்காமல், திடீரென அவ்விடம் விட்டு அகலும் இயல்பினைக் கொண்டவை. தோன்றி மறையும் மேகத்தைப் போல் இந்த உடலும் தோன்றி மறைந்துவிடும். நிலைத்து நிற்கும் தன்மையற்ற உடலைப் பெற்றவர்கள், முதுமையாலும், நோயாலும் தளர்வது இயற்கை நியதி. யாராலும் மாற்ற முடியாது. எனவே, உயிர் பிரிவதற்கு முன்பே, நற்செயல்களில் ஈடுபட்டு நற்பயன்களைப் பெறுதல் வேண்டும்.
மனத்துக்கு இதமான சில்லென்ற காற்று வீசுகிறது. பனிப்பொழிவு காரணமாகக் குளிர் வாட்டுகிறது. இரவு முழுவதும் பனி பெய்த காரணத்தால் இலைகள் மீது பனித்துளிகள் அமைதியாக உறங்கிக் கொண்டிருக்கின்றன. பொழுது விடிந்து கிழக்கே வெள்ளி முளைத்து ஆதவன் தன் கதிர்களைப் பரப்பத் தொடங்குகிறான். இலைகள் மீது படர்ந்திருந்த பனித் துளிகளைச் சூரியனின் ஒளிக் கீற்றுகள் ஈர்க்க அவை மெல்ல மெல்ல மறைந்தே விட்டன.
அதுபோல் ஒருவன் பிறந்தான். தவழ்ந்தான். நடந்தான். வளர்ந்தான். ஓடி ஆடினான். திடீரென ஒருநாள் உட்கார்ந்தான், படுத்தான். உறங்கினான். ஆனால் எழாமல் மீளாத உறக்கத்தில் ஆழ்ந்துவிட்டான். உறவுகள் பரிதவிக்க மரணத்தைத் தழுவினான். முதல் நாள் இரவு கண்ணுக்குக் குளிர்ச்சியாக, முத்து முத்தாக, இலைகளில் மிதந்த பனித் துளிகளை, மறுநாள் வெங்கதிரோன் பறித்துக் கொண்டான். பனித்துளியின் நிலையாமையை ஒத்தது யாக்கை. எனவே உடலோடு உயிர் ஒட்டியிருக்கும் போதே இன்றே, இன்னே, இப்போதே அறச் செயல்கள் செய்து நற்கதி அடைவீர்கள்.
நல்வினை தீவினை காரணமாக, மனிதர்கள் ‘நாங்கள் வரலாமா’ என்று கேட்க மாட்டார்கள். இன்னார் வீட்டில் பிறக்கப் போகிறோம் என்றும் சொல்ல மாட்டார்கள். கருவிலே திருவாக உருவாகி, ஒரு குடும்பத்தில் அவர்கள் உணராமலேலே உறவினர்களாக வந்து பிறப்பார்கள். பின்னர் ‘நாங்கள் போகலாமா’ என்று சொல்லாமல் கொள்ளாமல், திடீரென ஒரு நாள் கிளம்பிச் சென்று விடுவார்கள். வீட்டை விட்டு மட்டுமல்ல, மண்ணுலகை விட்டே இன்னொரு உலகுக்கு, குடும்பத்தினர் உணராத வகையில், உடலை விட்டுச் சென்றுவிடுவார்கள். தனக்குப் புகலிடம் கொடுத்து, முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்க இடம் தந்து, வளர்த்த மரத்தின் கூட்டை விட்டு விலகித் தொலைதூரம் வேறு இடம் தேடிப் பறவை பறந்து செல்லும். அதுபோல் மனிதர்கள் இருவினைப் பயனை அனுபவிக்க மண்ணில் பிறந்து, அனுபவித்த பிறகு, உடலை விட்டுப் பிரிந்து செல்வார்கள்.
0
4. அறன் வலியுறுத்தல்
செல்வம், இளமை, யாக்கை ஆகிய மூன்றும் நிலையற்றவை என்பதை முந்தைய அதிகாரங்களில் பார்த்தோம். ஆனால், இவை போலன்றி என்றென்றும் நிலையான புகழும், உயிர்க்கு உறுதியும் அளிக்கும் அறத்தின் தன்மை உணர்ந்து, அதை அனைவரும் மேற்கொள்ள வேண்டும் என்பதை இந்த அதிகாரம் வலியுறுத்தும். இம்மை, மறுமை, வீடு ஆகிய மூன்றையும் அறம் மட்டுமே தரும். ‘தர்மம்’ என்னும் வடசொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் ‘அறம்’ ஆகும். ‘இம்மை’ என்பது மண்ணுலக வாழ்வு. ‘மறுமை’ என்பது செய்த நல்வினை தீவினைக்கு ஏற்பக் கிடைக்கும் சொர்க்கம் / நரகம். ‘வீடு’ என்பது பேரின்ப நிலை. இம்மூன்றை அறம் மட்டுமே வழங்கும் என்பதால் அதைச் செய்தலைப் பிறந்த பிறப்பின் நோக்கமாகக் கொள்ளல் வேண்டும்.
முற்பிறவியில் செய்த தவத்தின் பயனாக இப்பிறப்பில் நல்லறிவுடன் தோன்றுவார்கள். இளமையிலேயே தான தருமங்கள் செய்து மன உறுதியோடு தவநெறி வாழ்க்கை வாழ்வார்கள். ஆனால் இப்பிறப்பில் செல்வச் செருக்கோடு, அடுத்தவர்க்கு எந்த உதவியோ செய்யாமல், மன உறுதி இன்றி, போலித்தனமாக தவம் செய்ய முயல்வோரும் உண்டு. அத்தகையோர், மறுமைக்கு வேண்டிய எந்த அறச் செயலையும் செய்ய மாட்டார்கள். செய்த தீவினைப் பயனாக, அடுத்த பிறப்பில் பசியால் துன்பமும், துயரமும் அடைந்து வறுமையில் உழல்வார்கள்.
அக்கம் பக்கம் பெரிய செல்வந்தர்களின் வீடுகளை அண்ணாந்து பார்த்து ‘இந்த வீட்டில் உள்ளோரே உண்மையாக வாழ்பவர்கள்’ என அவர்களிடம் பிச்சை எடுக்கப் பங்களாவுக்குள் நுழைய முற்படுவார்கள். ஆனால் அங்கே வெளியிலுள்ள வாயிற்காப்போன் உள்ளே நுழைய விடாமல் துரத்தி அனுப்புவான். இது கண்டு மனம் வெதும்பியும், தம் நிலை குறித்து வருந்தியும், அவ்வீட்டின் பின்புற வாயிலைப் பற்றிக் கொண்டு, யாதொரு முயற்சியும் செய்யாமல் இருப்பார்கள். எனவே நிலையில்லா இளமை மற்றும் யாக்கை மீதான பற்றை விடுத்து, பிறவிதோறும் பேரின்பப் பயனளிக்கும் தவ வாழ்வு வாழ்ந்து தருமம் செய்யுங்கள்.
வாழும் காலமெல்லாம் தருமம் ஏதும் செய்யாமல் செல்வத்தைத் தேடி அற்பர் அலைந்து கொண்டிருப்பர். சம்பாதித்த பணத்தைக் காப்பதிலேயே அவர்களது வாழ்நாள் கழிந்து போனது. அந்திமக் காலத்தில் மனத்தை நோக்கிக் கழிவிரக்கமுடன் ‘அற்பத் தனமான எண்ணங்களைக் கொண்ட நெஞ்சே! இனி என்ன செய்வது? நிலைத்து நிற்காத, அழியும் தன்மை கொண்ட செல்வம் பெருகும் என்றும், இளமையும், யாக்கையும் நிலைக்கும் என்றும், செழிப்போடு வாழ்வோமென மனக்கோட்டை கட்டினேன். வாழ்நாள் வீணே கழிந்ததுதான் மிச்சம். இனி என்ன செய்வது?’ எனப் பிதற்றி ஆவது ஏதுமில்லை.
செய்ய வேண்டிய அறச் செயல்களை மறந்தேன். தரும காரியங்களைத் தவிர்த்தேன். இன்னும் இன்னும் பணம் வேண்டுமென்ற பேராசையில், செல்வத்தின் பின்னால் ஓடினேன். ஓய்வு ஒழிவில்லாமல் நிலையற்ற செல்வத்தை நாடி, நிலையுள்ள தருமம் செய்ய மறுத்தேன். மறந்தேன். இவ்வாறாக செல்வத்தைச் சம்பாதிப்பதிலேயே இளமை கழிந்தது. இனியேனும் மீதமுள்ள நாள்களை வீணடிக்காமல் செய்ய மறந்த அறச் செயல்களை இம்மையில் செய்து, மறுமைக்கான நல்வினைகளைச் சேர்க்க எண்ணுங்கள். வாழும்போது அறம் செய்யாவிடில் இப்படித்தான் கடைசிக் காலத்தில் புலம்ப நேரிடும்.
முற்பிறவியில் செய்த தீவினை காரணமாக இப்பிறவியில் துன்பம் வரும்போது, அதை எதிர்கொள்ளத் துணிவின்றி அறிவில்லாதவன் கடுமையாகப் பெருமூச்சு விடுவான். மனத்துக்குள் அதை எண்ணி எண்ணி வருந்திக் கவலைப்படுவான். உடலாலும் உள்ளத்தாலும் தளர்ந்து போவான். ஆனால் இத்துன்பங்களுக்குக் காரணம் முற்பிறவியில் செய்த தீவினைகள் என அறிவுடையவர்களே உணர்வார்கள். எனவே வரும் பிறவிகளில் எந்த வகையான துன்பமும் நேராதிருக்கத் தருமச் செயல்களில் ஈடுபடுவர். அவ்வாறு அறம் செய்வோரே பிறவித் தடுமாற்றத் துக்கங்களிலிருந்து விடுபட்டுப் பேரின்ப நிலையை அடைவார்கள். இந்த அறிவு கூட முற்பிறப்பில் செய்த நல்வினை காரணமாகவே வருவதாகும்.
கடந்த பிறவியில் செய்த பெரும் பேறு காரணமாகவே, யாக்கை என்னும் இந்த மனித உடல், இப்பிறவியில் கிடைத்துள்ளது. அந்த உடலைப் பெற்றதன் பயனாக, உயிருக்குப் பெரும் பயனாக விளங்கும் தர்மங்களை அதிகமாகச் செய்ய வேண்டும். கரும்பை ஆலையில் இட்டு சக்கையாகப் பிழிந்து துன்புறுத்தினாலும், அந்தக் கரும்பு இன்பம் தரும் இனிப்பான சாற்றையே கொடுக்கும். அதுபோல் இப்பிறவியில் உடலை வருத்தித் தருமம் செய்தவர்களுக்கு, அந்தத் தர்மம் மறுபிறப்பில் மேலான இன்பத்தைத் தரும். சாறு பிழியப்பட்ட சக்கை வீசி எறியப்படுவதுபோல், உயிர்போன பின் உடலும் பயனற்றுப் போய்விடும். கரும்பு தன்னைப் பிழியினும் சாற்றைத் தருவதுபோல் தன்னை வருத்திக் கொண்டேனும் அறம் செய்ய வேண்டும்.
கரும்பை ஆலையில் ஆட்டிப் பிழிந்து சாறு எடுத்து அதிலிருந்து வெல்லக் கட்டியைத் தயாரிப்பது வழக்கம். தேவையான சாற்றைப் பிழிந்து வெல்லக் கட்டியைத் தயாரித்த பிறகு, அந்தச் சக்கையைத் தூக்கி எறிந்து விடுவார்கள். நெருப்பில் எரிந்து சாம்பலாகும் சக்கை குறித்து யாரும் கவலைப்பட மாட்டார்கள். அடுத்தவர்க்கு உதவ வலியைத் தாங்கிக் கொண்டு உடல் உழைப்பைத் தருகிறோம். விரதம் நோன்பு உபவாசம் என்றும் உடலை வருத்திக் கொள்கிறோம். சரீரம் எடுத்ததன் காரணமாகத் தர்ம காரியங்களைச் செய்பவர்கள் அறப் பயனைப் பெறுவார்கள், அத்தகையோர், பாசக் கயிறை வீசி யமன் உயிரை எடுக்கும் மரண காலத்தில், உடம்பின் அழிவைப் பற்றி எந்தக் கவலையும் படமாட்டார்கள். அறம் செய்தோர் மரணத்தைக் கண்டு அஞ்ச மாட்டார்கள். அறம் செய்யாதோரே அஞ்சுவர்.
இளமையில் அல்லது முதுமையில் அல்லது நடுத்தர வயதில் மரணம் எப்போது வரும் எனத் தெரியவில்லையே எனக் குழம்ப வேண்டாம். அது குறித்துக் கவலைப்பட்டு விவாதிக்கவும் வேண்டாம். யமன் உயிரை எடுக்கும் பொருட்டு தக்க தருணத்துக்காக நம் பின்னே நின்று கொண்டு காத்திருக்கிறான். வாழ்க்கை நிரந்தரமல்ல. இதுவே யதார்த்தம். இந்த உண்மையைத் தெரிந்து கொண்டு தீமையான செயல்களை இன்றோடு விட்டொழியுங்கள். பாவங்களில் ஈடுபடாதீர்கள். ஆன்றோர்கள், சான்றோர்கள், அறிவுடையோர் வழிநின்று தர்மங்களைச் செய்து நற்கதியைத் தேடுங்கள். இல்லறத்தைப் பொருள் நிலைக்கு ஏற்பவும், துறவறத்தை உடல் நிலைக்கு ஏற்பவும் மேற்கொள்ளுங்கள்.
இந்த உலகில் மக்களாகப் பிறந்ததால் கிடைத்த பெரும் பயன்களை ஆராயும் போது, அவை அளவில் சிறியதாக இருப்பினும் செய்வதற்குப் பலவாக உள்ளன. எனவே, முற்பிறவியில் செய்த புண்ணியங்கள் காரணமாகக் கிடைத்த, ஏழு தாதுக்களான இந்த உடலுக்கு ஒத்த நன்மைகளை செய்யக் கூடாது. உடல் இச்சைகளிலே மனத்தைச் சிதற விடக் கூடாது. மாறாக, இறந்த பிறகு, மேலுலகில் கிடைக்கும் பேரின்ப வாழ்வுக்காக, உயிர்க்கு ஒத்த நன்மைகளை அதாவது அறச் செயல்களைச் செய்யுங்கள்.
ஆலமரத்தின் விதை மிகவும் சிறியதாகும். ஆனால், பூமியில் புதைக்கப்பட்ட அந்த விதை, மண்ணைப் பிளந்து கொண்டு, முளைத்து, வளர்ந்து, விழுதுகளைப் பரப்பி பிரம்மாண்ட ஆலமரமாக ஓங்கி நிற்கிறது. ஏனைய மரங்களை விடவும் அதிகமான கிளைகளைப் பரப்பி வெயிலுக்கு நிழலாகவும், மழைக்குக் குடையாகவும் விளங்குகிறது. நூற்றுக் கணக்கான பறவைகள் கூடு கட்டி வாழும் சரணாலயமாக அடைக்கலமும் தருகிறது. சிறிய விதை எவ்வாறு பெரிய ஆலமரமாக வளர்ந்து அபயம் தருகிறதோ, அதுபோல், சிறிய அறச் செயலும் மிகப் பெரிய பயனைத் தரும். அறம் சிறிதாக இருப்பினும், அறிவும் ஒழுக்கமும் மிக்க தகுதி உடையவரின் கைகளுக்குச் செல்லுமாயின், அதன் பயன், பரந்து விரிந்த வானத்தை விடவும் பெரிதாகித் தனக்குள் அடக்கிவிடும்.
தினமும் காலை சூரியன் உதிக்கிறது. மாலை மறைகிறது. ஒவ்வொரு நாளும் இரவும் பகலுமாகக் கழியும் போது, நம் வாழ்நாளும் குறைகிறது. இந்த உண்மையை அறிவார்ந்த பெரியோர்கள் அறிவார்கள். ஆனால், இந்த யதார்த்தத்தை உணராத அறிவிலிகள், தவறாது அன்றாடம் நிகழும் சூரிய உதயத்தையும், அஸ்தமனத்தையும் கண்டு ரசித்துக் கொண்டிருப்பார்கள். வாழ்ந்தாள் குறைகிறதே என்ற உண்மையை உணர மாட்டார்கள். ஒவ்வொரு நாளும் விடியும் போது ஆயுளில் ஒரு நாள் குறைகிறது என்று நினைக்காமல், இன்று நாம் உயிருடன் உள்ளோம், ஆயுள் இருக்கிறது, என அற்பத்தனமாக எண்ணி மகிழ்ச்சி அடைவார்கள். எனவே இந்த உண்மையை உணர்ந்து மறுமைப் பயனுக்கு வழிகோல, ஆயுள் உள்ள போதே அறம் செய்ய வேண்டும்.
அறச் செயல்களுக்கு விரோதமாக, ஈனச் செயல்களைச் செய்து ஈட்டிய பொருளில் உடலைப் போற்றி வளர்ப்பார் சிலர். அவ்வாறு கீழ்த்தரமான காரியங்கள் ஈடுபட்டு உடலைப் பேணிப் பாதுகாத்தாலும், அது நோய் நொடி இல்லாமல் நீடித்து நிலைக்கும் என்று யாரும் உத்தரவாதம் தர முடியாது. அப்படி யாரேனும் உறுதிமொழி அளித்து, உடல் என்றென்றும் நீடிக்கும் என்றால், உயிரினும் மேலான மானத்தை இழந்து பிச்சை எடுக்கும் தாழ்வான இழிசெயலைச் செய்தேனும் அழியாத உடலைப் பெறுவேன் என்பது மேலோட்டமான பொருள். ஆனால், எப்படி பேணிப் பாதுகாத்தாலும் உடல் அழியக் கூடியதே. மானத்தை இழந்தால் மீட்க முடியாது. மானத்தை இழந்து வாழ்வதிலும் அர்த்தம் இல்லை என்பதே உட்கருத்து. ஏனவே, நிலையற்ற உடலைக் காக்க இழிசெயலைச் செய்வதை விடவும், மறுமைக்கான அறத்தைச் செய்வது நன்று எனப் பொருள் கொள்க.
(தொடரும்)