5. தூய்தன்மை
‘தூய்தன்மை’ என்னும் சொல்லைப் பிரித்து இரு மாறுபட்ட பொருள்களைக் கொள்ளலாம். இதை ‘இரட்டுற மொழிதல் அணி’ என்றும் ‘சிலேடை அணி’ என்றும் இலக்கணம் கூறும். தூய்தன்மை = தூய்து+அன்மை எனப் பிரித்தால் (உடலின்) சுத்தமில்லாத தன்மை என்றும், தூய்தன்மை = தூய் + தன்மை எனப் பிரித்தால் (உடலை விரும்பாத) சுத்தமான தன்மை என்றும் இரு பொருள்படும்.
உடலை ஊளைச் சதை என்றும் சதைப் பிண்டம் என்றும் பாடியுள்ளனர். உடல் கவர்ச்சி எனப் பொதுவாகக் கூறினாலும், பெண்களின் உடல் கவர்ச்சி குறித்தும், அதில் மயங்கி அழிந்தோர் குறித்துமே அதிகம் பாடப்பட்டுள்ளது. ‘துறவு’ என்ற தலைப்பில் அடுத்த அதிகாரம் இடம் பெற்றாலும், துறவைத் தடுப்பது பெண்கள் மீதான மயக்கம் ஆகும். எனவே உடலை விரும்பும் சுத்தமில்லாத தன்மை மற்றும் உடலை விரும்பாத சுத்தமான தன்மை ஆகியவற்றை விளக்கும் ‘தூய்தன்மை’ அதிகாரம் முதலில் வைக்கப்பட்டது. பெண் இச்சை கொள்ளாமல், நன்னெறி தவறாமல், துறவு மேற்கொண்டு, உயிருக்குத் திண்மை தரும் முயற்சிகளில் ஈடுபடுதல் அவசியம்.
செக்கச் சிவந்த அழகு, மாந்தளிர் போன்ற மேனி, இளமையும் வனப்பும் கொண்ட பருவப் பெண் என்றெல்லாம் மங்கையைப் பாராட்டும் மானிடர்கள், கல்வி அறிவு நிறைவாகப் பெறாத மூடர்கள் ஆவர். நீங்கள் மயங்கித் திரியும் அந்த உடல் காற்றடைத்த பையாகும். வயதானால், முதுமையும், நோயும் வாட்டி எடுக்கும். நிலையற்ற வீடாகிய உடலை விட்டு உயிர் ஒரு நாள் நிச்சயம் பிரிந்து செல்லும். உங்களால் போற்றப்பட்ட இந்த அழகிய பெண்ணின் உடலில், சின்னஞ்சிறு ஈயின் ஒரு பக்கச் சிறகை விடவும் குறைந்த அளவில் புண் ஏற்பட்டால் அது துர்நாற்றம் வீசத்தான் செய்யும். அதில் ஈ மொய்க்கும். அந்தப் புண்ணைக் கொத்துவதற்கு வரும் காக்கையை அடித்து விரட்ட ஒரு கொம்பு தேவைப்படும். புகழ்ந்த அழகால் பயன் ஏதும் இல்லை.
கண், செவி, மூக்கு, வாய், ஆசனவாய், சலத் துவாரம் ஆகியவை கண்ணுக்குத் தெரிந்த ஒன்பது துவாரங்கள். இவை தவிரப் புலப்படாத சருமத் துளைகள் பல உண்டு. உடலை மூடிய ஆடை அணிகலன்களைப் பார்த்து ரசிக்கிறோம். மயங்குகிறோம். அவற்றை அகற்றினால் உடலின் மீதுள்ள அசுத்தங்கள் தெரிய வரும். அதுபோல், இந்த உடம்பு பல துளைகளைக் கொண்ட தோலால் போர்த்தப்பட்டுள்ளது. அது உள்ளிருக்கும் அசுத்தங்களை மறைக்கிறது. நன்கு ஆராய்ந்து பார்த்தால் மட்டுமே உடம்புக்கு உள்ளே இருக்கும் பல அசுத்தங்கள் தெரிய வரும். பை காண்பதற்கு மேலோட்டமாக அழகாக இருந்தாலும் அதைத் திருப்பிப் பார்த்தால் உள்ளிருக்கும் அழுக்கு தெரியும். அதுபோல், தோலால் மூடப்பட்டுள்ள காம இச்சைகளைத் தூண்டும் உறுப்புகளை ஆராய்ந்து, உண்மையை உணர்ந்து, துறவாகிய நன்னெறியில் ஈடுபட வேண்டும்.
எவ்வளவுதான் உண்ணும் பொருள்களில் இயற்கையாகவும், செயற்கையாகவும், பலவற்றைச் சேர்த்து உண்டாலும் அவை என்றென்றும் உடல் நீடித்து நிலைக்கும் வாசனையைத் தரும் என அறிவுடையோர் எண்ண மாட்டார்கள். உடலை நன்கு அலங்கரித்துக் கொண்டாலும், கொள்ளாவிட்டாலும், உடலின் மீது அழுக்கும், வியர்வை நாற்றமும் வீசத்தான் செய்யும். இந்த உண்மையை உணர்ந்து பெரியோர்கள் அழியும் உடலின் மீது காம இச்சை கொள்ள மாட்டார்கள். ஆனால் இதை உணராமல், தக்கோலம் என்னும் நறுமணம் வீசும் மலரைத் தின்றாலும், வால் மிளகு வெற்றிலை பாக்கை மென்றாலும், தலை நிறைய மணம் கமழும் மல்லிகை மலர்களைச் சூடினாலும், வாசனைத் திரவியங்களைப் பூசினாலும், ஆடை அலங்காரங்களைச் செய்தாலும், உடலிலிருந்து வீசும் வியர்வை துர்நாற்றத்தைத் தடுக்க முடியாது. எனவே துர்நாற்றம் அடிக்கும் உடலின் மீது ஆசை கொள்ளாமல் துறவறம் மேற்கொண்டு அறம் செய்யுங்கள்.
காண்போரைச் சுண்டி இழுக்கும் காந்தம் என்றும். தண்ணீரிலேயே மலர்ந்துள்ள குவளை மலர்கள் என்றும், கயல்மீன்கள் என்றும் வேல் விழிகள் என்றும் பெண்ணின் கண்களை வர்ணிக்கிறோம். புகழ்கிறோம். பனம் நுங்கைத் தோண்டி எடுத்து உள்ளிருக்கும் நீரைக் களைந்து போக்கிவிட்டால், அவ்விடத்தில் குழிதான் தென்படும். அதுபோலக் காந்தமாக, குவளை மலராக, வேலாக, கயலாகப் புகழும் கண்களில் உள்ள நீரை அகற்றிவிட்டால், அழகு மறைந்து குழிதான் இருக்கும். இந்த உண்மையை உணர்ந்த அறிவுடையோர் பெண் உடலின் மீது பற்றி வைக்காமல் துறவறம் மேற்கொள்வர்.
வெண்நிற முத்து என்றும், முல்லை அரும்பு என்றும், இளநகை என்றும், இன்னும் பலப்பல ஒப்பீடுகளுடன் பெண்களின் பற்களை வர்ணித்துப் பிதற்றுகிறான் நல்ல நூல்களைக் கற்காத அறிவற்றவன். இவை அனைத்தும் புறத்தோற்றம் ஏற்படுத்தும் மயக்கங்கள். இந்த உடலை விட்டு உயிர் பிரிந்த பின்னே சுடுகாட்டில் தகன மேடையில் உடலைக் கிடத்தித் தீ மூட்டுவர். உடல் எரிந்து சாம்பலான பின் அங்கே சிதறிக் கிடைக்கும் எலும்புத் துண்டுகளும், பற்களும், உண்மை நிலையை உணர்த்தும். இதுதான் உலக வாழ்க்கை. இக்காட்சியைக் கண்ட பிறகும் பற்களை மெய் என்று நம்புவோரும், புனைவுகளைக் கேட்டுச் சலனம் அடைவோரும், ஊக்கத்தை விடுவோரும் அறிவிலரே ஆவர். பேரறிவு பெற்றோர் நிச்சயம் மயங்கிப் பிதற்ற மாட்டார்கள்.
குடல், கொழுப்பு, இரத்தம், எலும்பு, நரம்பு, தோல், சதை, தசை எனப் பல்வேறு உடல் உறுப்புகளால் முழுமை பெற்றவள் பெண். ஆனால் இவற்றைத் தனித்தனியாகப் பிரித்துப் பார்த்தால் ஒவ்வொன்றும் அழகற்ற அசுத்தங்களே. வாடாத குளிர்ச்சி உடைய மலர் மாலையை அணிந்து கொண்டிருக்கும் இந்தப் பெண் மேலே குறிப்பிட்டுள்ள உடலின் பல்வேறு பகுதிகளுள் எந்தப் பகுதியைச் சேர்ந்தவள் எனக் கேட்டால் கூற முடியாது. எனவே நிலையற்ற அசுத்தம் நிறைந்த பல்வேறு பாகங்களால் ஆன பெண்ணின் புறத்தோற்றம் கண்டு மயங்க வேண்டாம். இந்த உண்மையை அறிந்தோர் காம வேட்கையுடன் மங்கையர் பின் செல்ல மாட்டார்கள். ஆகவே துறவறம் மேற்கொண்டு நல்லறம் செய்வதே மாண்புடையோர் செயலாகும்.
வெறுக்கத்தக்க மலக் குழம்பு சுரந்து, ஒன்பது வாசல்கள் எனப்படும் ஒன்பது துவாரங்களாகிய உறுப்புகள் வழியே சிதறி, உடலிலிருந்து வெளியேறுகிறது. ஆனால் இவை வெளியே தெரியாத வகையில் தோலால் இந்த உடம்பு போர்த்தப்பட்டுள்ளது. மலம் தங்கும் கும்பம் எனப்படும் குடம் இந்த உடல். ஆனால், அறிவில்லாதோர், உடலுக்குள் இருக்கும் அசுத்த மலத்தை உணராமல், அதைப் போர்த்தி உள்ள தோலில் மனத்தைப் பறிகொடுத்து, பெரிய தோள் கொண்டவள் என்றும் கலகலவென ஓசை தரும் வளையல்கள் அணிந்தவள் என்றும் மயங்கித் திரிகின்றனர்.
மேனி எங்கும் பூசப்பட்ட சந்தனத்தையும், சூடிய மலர் மாலையையும் பார்த்து மயங்குவார்கள். துர்நாற்றம் வீசும் அசுத்தமான தன்மை கொண்டது இந்த உடல். மிகப் பெரிய தேராக இருப்பினும் அச்சு முறிந்துவிட்டால் தேர் குடை சாய்ந்து விழுந்து நொறுங்கிவிடும். அதுபோல் உயிர் என்னும் அச்சு உடலிலிருந்து போய்விட்டால் அது உடல் அல்ல சடலம் அதாவது பிணம். செத்து விழுந்த உடலைக் கழுகு உள்ளிட்ட பறவைகள் கொத்தித் தின்னும். ஆனால் இந்த உண்மையை அற்பர் அறியாது நிலையில்லா உடலை அலங்கரித்து ஆராதனை செய்து கொண்டிருப்பர். இறந்த பிறகு உயிரற்ற உடலை ஈக்கள் மொய்க்கும், புழுத்துப் போகும், கழுகுகள் கொத்தித் தின்னும் என்பதை அறிந்து துறவறம் கொள்ளுங்கள்.
அழகும், வசீகரமும் கொண்ட எழில் வதனம். சந்திர பிம்பமோ எனப் பார்ப்பவர்களை மீண்டும் மீண்டும் திரும்பிப் பார்க்க வைக்கும் அழகு முகம். சாமுத்ரிகா இலட்சணத்துக்கு இலக்கியமாகத் திகழ்ந்தவள் திடீரென மாண்டு போனாள். அவளது உடலைத் தீயிலிட்டு எரித்தார்கள். கண்டோரை மயக்கிய அவளது அழகு முகம் எரிந்து இப்போது பயமுறுத்தும் மண்டை ஓடாகக் காட்சி தருகிறது. காமக் கணைகள் வீசி நெஞ்சைப் பறித்தவளின் கண்கள் இப்போது அஞ்சி நடுங்கும் வகையில் குழி விழுந்து பள்ளமாகி விட்டது. பற்கள் வெளியே தெரியும்படி வாய் பிளந்து கிடக்கும் மண்டை ஓடு ஏளனமாக நகைத்து ‘உடலின் தன்மை இதுதான். புற அழகைக் கண்டு மயங்காதீர்கள். துறவறம் மேற்கொண்டு அறத்தைக் கடைப்பிடியுங்கள். நாளை உங்களுக்கும் இதே நிலைதான்’ என மற்றவர்களுக்கு அறிவுரை சொல்வதுபோல் உள்ளது.
நேற்று இருந்தவன் இன்று இல்லை என்பதுதான் இந்த உலகின் பெருமை. உயிரோடு இருக்கும் போது சிகை அலங்காரம் செய்து சிங்காரித்துக் கொள்கிறோம். ஆனால் சுடுகாட்டில் உடலை நெருப்பிலிட்டு எரித்த பிறகு உடலில் இருக்கும் தோலும், தசையும் சாம்பலாகிவிடும். தோலும் தசையும் இல்லாத செத்தவனின் வெள்ளை மண்டை ஓடு பற்களைக் காட்டியபடி வாய் திறந்து காண்போரைப் பயப்பட வைக்கும். அந்தச் சிரிப்பொலி, இல்வாழ்க்கை இன்பத்தை நுகர்ந்தபடி அனுபவிப்பவர்களை எச்சரிப்பதுபோல் இருக்கும். அந்த ஏளனம் சிற்றின்ப மயக்கமாகிய குற்றத்திலிருந்து நீங்கச் செய்யும். மயக்கம் தெளிந்தவர் மண்டை ஓட்டைக் கண்கூடாகப் பார்த்து உடலின் தன்மை நிலையாமை என உணர்வார். இல்லற உடல் இன்பங்களை விட்டு விலகி அவற்றின் சுகபோகங்களில் மனம் செலுத்தாமல் துறவறத்தில் நாட்டம் கொள்வார்.
6. துறவு
இல்லறம் மற்றும் துறவறம் என வாழ்க்கை நெறி இருவகைப்படும். இல்லறம் என்பது மனைவியோடு இன்புற்று, இனம் பெருக்குவதுடன், உறவுகளோடும் மனம் மகிழ்ந்து, அறம் செய்து நற்கதி அடைதலாகும். துறவறம் என்பது செல்வமாகிய புறப்பற்றையும், உடலின்பம் என்னும் அகப்பற்றையும் விடுத்து, உயிரின்பம் கருதி மேற்கொள்ளும் ஒழுக்கமாகும். முற்பிறப்பில் செய்த நல்வினை காரணமாகவே இப்பிறப்பில் உடலெடுத்துப் பிறந்துள்ளோம். இதற்கான நோக்கம் உயிருக்கான உறுதிப் பொருளை நாடுவது. பற்றை நீக்கினால் மட்டுமே நன்மை தீமைகளைப் பகுத்தறிய முடியும். சான்றோர் நாடும் சிறப்புடைய துறவு நெறி பற்றி விளக்குவதே இந்த அதிகாரமாகும்.
ஓரிடத்தில் இருள் மண்டிக் கிடக்கிறது. கையில் விளக்கு ஏந்தி அவ்விடத்துக்குச் சென்றவுடன் அங்குள்ள இருட்டு சட்டென மறைந்து விடுகிறது. அதுபோல், ஒருவன் செய்த முற்பிறவியில் பாவம் மலையெனக் குவிந்து கிடக்கிறது. ஆனால் அவன் துறவறம் மேற்கொண்டு, தவம் செய்யத் தொடங்கும் அடுத்த நொடியே, முன் செய்த பாவம் இருந்த இடம் தெரியாமல் விலகிவிடும். ஒளி வந்தவுடன் இருள் விலகுவதுபோல், ஒருவனுடைய தவமாகிய ஒளியின் முன்னே அவன் செய்த பாவமாகிய இருள் முற்றிலும் அழிந்துவிடும். இருளை அகற்றும் நெய் தீபம் எரிந்து கொண்டிருக்கிறது. நெய்யின் அளவு குறையக் குறைய வெளிச்சமும் குறையத் தொடங்கும். விளக்கு முற்றிலுமாக அணைந்தவுடன் மீண்டும் இருள் பரவத் தொடங்கும். அதுபோல், தவம் செய்வதற்குக் கருவியான துறவு என்னும் புண்ணியம் நீங்கும் இடத்தில் பாவம் வந்து சேரும். துறவறத்துக்கு விளக்கும், பாவத்துக்கு இருளும் உவமையாகும்.
கற்றறிந்த அறிவுடைய மேலோர் செல்வம், இளமை மற்றும் உடலின் நிலையற்ற தன்மையை நன்கு உணர்ந்தவர்கள். எனவே செல்வம் அழிவதையும், இளமை மூப்படைந்து கிழத்தன்மை அடைவதையும், உடல் நோய் நொடிகளால் பீடிக்கப்படுவதையும், சாக்காடு என்னும் மரணம் நேர்தலையும் அறிவர். அவற்றை எண்ணி ஆராய்ந்து துறவறம் பூண்டு செய்ய வேண்டிய கருமத்தை மறக்காமல் செய்வார்கள். உயிர்க்கு உறுதியான நற்செயல்களில் ஈடுபடுவார்கள். ஆனால் கல்வி கற்காத அறிவிலிகள் செல்வம், இளமை, உடல் ஆகியவற்றின் நிலையாமை குறித்து உணராமல், அவை என்றென்றும் நிலைத்திருக்கும் என நம்புவார்கள். துறவறம் பூண்டு தான தருமங்கள் செய்யாமல், தர்க்கம் மற்றும் சோதிட நூல்களைக் கூறுவதை விடாமல் சொல்லிக் கொண்டு பித்தர்கள் போல் திரிவார்கள். ஞான நூல்களைக் கற்காமல் அர்த்தமற்ற ஆரவாரம் மிக்க நூல்களைக் கற்பதில் பேதைகள் வீணே காலம் கழிப்பர்.
மனைவியோடு வாழும் இல்வாழ்க்கை; அந்த வாழ்வினை அனுபவித்து இன்புறுகின்ற இளமை; அந்தப் பதின்பருவத்தில் காணப்படும் அழகு, எழில், வனப்பு; சமூகத்தில் கிடைக்கும் செல்வாக்கு; சேரும் பெரும் செல்வம்; உடல் வலிமை; மனோபலம்; இவை அனைத்துமே காலப்போக்கில் அழிந்து போகும். நிலையற்றவை, நீடித்து நிலைக்கும் தன்மை இல்லாதவை என்பதை அறிவு ஒழுக்கங்களில் முதன்மையானோர் நன்கு உணர்ந்தவர்கள். இவை மெள்ள மெள்ள நிலை பெறாமல் கழிதலைக் கண்கூடாகக் கண்டவர்கள். எனவே மயக்கம் கொள்ளாமல் காலம் தாமதிக்காமல் யான், எனது ஆகிய பற்றுகளை விடுத்துத் துறவறம் மேற்கொள்வர்.
பொழுது புலர்ந்தால் போதும் பற்பலத் தொல்லைகள். பிரச்னைகள். எப்போதுதான் சிக்கல்கள் இன்றி விடியுமோ என அன்றாடம் துன்பத்திலேயே கிடந்து வருந்துகிறோம். இல்வாழ்க்கையில் இவை சகஜமான நிகழ்வுகள். ஆனால் விடிவெள்ளிபோல் என்றேனும் ஒருநாள் திடீரென இன்பம் கிடைக்கும். அறிவு இல்லாதவர்கள், இல்வாழ்வில் காலமெல்லாம் துன்பத்தில் வாடி வதங்கியது குறித்துக் கவலைப்படாமல், எப்போதோ ஒரு முறை கிடைக்கும் இன்பத்தைப் பெரிதும் மதித்து விரும்புவார்கள். ஆனால் அறிவுடைய சான்றோரோ, இன்பத்தின் நிலையாமை பற்றி நன்கு அறிந்தவர்கள். இன்பம் நீடித்து நிலைக்காது. நிலையற்ற தன்மை கொண்டது. மாறும் இயல்பு உடையது. மனித வாழ்க்கையில் இன்பம் குறைவு, துன்பம் மிகுதி என்பதை உணர்ந்தவர்கள். எனவே, சில காலமே சிற்றின்பம் தரும் இல்லறத்தின் மீது பற்று கொள்ளாமல், என்றென்றும் பேரின்பம் தரும் துறவறத்தையே நாடுவார்கள்.
ஓ! அடங்காத மனமே! இளமைப் பருவம் சிற்றின்பங்களில் ஈடுபட்டுப் பயனின்றி அழிந்து போனது. ஆரோக்கியமான உடலை நோய்கள் ஆக்கிரமித்துள்ளன. முதுமை ஆட்கொண்ட காரணத்தால் நாடி நரம்புகள் வலுவிழந்து போய்விட்டன. யௌவனம் மறைந்து கிழத்தனம் வந்துவிட்டது. மனம் அடங்காத இயல்பு உடையது. மனம் ஒரு குரங்கு எனச் சொல்வதற்கு ஏற்ப அங்கும் இங்கும் அலைபாய்ந்து குதித்துக் கொண்டிருக்கிறது. மனத்தை ஒருநிலைப்படுத்திக் கட்டுப்படுத்துவது கடினமான செயலாகும். மனத்தின் வழியாகவே ஆன்மா இன்பங்களையும், துன்பங்களையும் அனுபவிக்கிறது. இல்வாழ்வில் இளமை அனைத்தையும் கழித்துவிட்டேன். மூப்புடன் நோயும் சேர்ந்துள்ளது. இப்போதேனும் என் விருப்பப்படி நற்கதி கிடைக்கவும், முக்தி பெறவும் துறவறம் செல்ல ஒத்துழைத்து வழி நடத்துவாயா? என வேண்டுகிறான்.
உற்றார் உறவினர் நண்பர் புடை சூழ திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. ஆனால் அந்தப் பெண்ணிடம் அச்சம், மடம், நாணம், உள்ளிட்ட மாட்சிமை பொருந்திய நற்குணங்கள் எதுவும் காணப்படவில்லை. மணமாகிச் சில ஆண்டுகளும் உருண்டோடி விட்டன. வம்ச விருத்திக்கான பிள்ளைப் பேறும் உண்டாகவில்லை. ஆனாலும் அப்பெண்ணைத் திருமணம் செய்து கொண்டவன் மேற்கூறிய காரணங்களைச் சொல்லி அவளை விட்டு நீங்குவதோ, விலக்குவதோ, முடியாத செயலாகும். இல்லறம் என்னும் வலையில் சிக்கிக் கொண்டால், இத்தகைய துன்பங்களை அனுபவித்தே தீர வேண்டும் என்பதைக் கற்றறிந்தோர் முன்பே அறிந்திருந்தனர். எனவே, இல்லறம் மூலம் வரும் வருத்தங்களை உணர்த்த முற்காலத்தில் திருமணம் என்பதை ‘கடி’ என்ற சொல் மூலம் குறித்து, விவாகத்தைக் கடிந்து நீக்குக என விளக்கினர். திருமணம் செய்து கொண்ட பிறகு எந்தக் காரணத்தை முன்னிட்டும் மனைவியை விட்டு விலகுவது முடியாத செயலாகும். எனவே இளமையில் இல்லறம் மீது நாட்டம் கொள்ளாமல் துறவறம் நாடுக என்பது பொருளாகும்.
விரதம் எனப்படும் நோன்பு இருத்தல் கடினமான செயல். உடலையும் மனத்தையும் ஒருமுகப்படுத்தி நம்மை நாமே வாட்டிக் கொள்ளும் கடுமையான முயற்சியாகும். அவ்வாறு வருத்தி ஏற்றுக் கொண்ட விரதங்களைக் கடைப்பிடிக்கும்போது அவை கெடும்படி பல இடையூறுகள் வரலாம். உடலை நோய் பீடிக்கலாம். மனத்தைக் காமம் ஆக்கிரமிக்கலாம். மற்ற மனிதர்களாலும், விலங்குகளாலும் தடைகள் வரலாம். புயல், மழை, இடி, மின்னல் என இயற்கைச் சீற்றங்களும் ஏற்படலாம். ஆனாலும், எத்தகைய துன்பங்கள் வரினும் அவை கண்டு அஞ்சி மேற்கொண்ட விரதத்தைப் பாதியிலேயே விட்டுவிடக் கூடாது. எத்தனைப் பிரச்னைகள் வந்தாலும் அவற்றை உடல் உறுதியோடும், மன வலிமையோடும், தாங்கி விரதத்தை முடிக்க வேண்டும். இத்தகைய உள்ளத் திண்மை உடையவர்களால் மட்டுமே உயிருக்கு நிலைத்த நன்மையைத் தரும் துறவு ஒழுக்கத்தைப் பேணும் சிறப்பினைப் பெற்றவர் ஆவர். அவர்களே உண்மைத் துறவிகள்.
பொறுமைக்குப் பூமியை உதாரணம் சொல்வார்கள். தன்னை ஆழமாக அகழ்வார் மீது கோபம் கொள்ளாது. தோண்டும் போது உண்டாகும் வலியைத் தாங்கிக் கொள்ளும். அவ்வாறு தாங்கிக் கொள்வதோடு ஆழ உழுது பயிரிடுவோர்க்குத் தானியங்களாக நல்ல விளைச்சலையும் தரும். அதுபோல் உயர்ந்தவர்கள் கெடுதல் ஏதும் மற்றவர்களுக்குச் செய்யாத போதும், பேதைகளால் தூற்றுதலுக்கும், இழிச்சொல்லுக்கும், பழிச்சொல்லுக்கும் உள்ளாவது உண்டு. அந்நிலையிலும், மேன் மக்கள் அவர்களது இகழ்ச்சியைப் பொறுத்துக் கொள்வர். பதிலுக்குப் பதில் வசைபாட மாட்டார்கள். மாறாக, ‘இந்த அப்பாவிப் பேதைகள் என்ன பேசுகிறோம் எனத் தெரியாமல் இகழ்ந்தனர். இத்தீவினை காரணமாக மரணத்துக்குப் பிறகு நெருப்பு கொழுந்துவிட்டு எரியும் நகரத்துக்கு அல்லவா சென்று துன்பப்படுவார்கள்’ என அவர்களுக்காக அறிவுடையோர் இரக்கம் காட்டுவார்கள். நமக்குத் துன்பம் இழைத்தவர்களுக்குத் துன்பம் நேரிடக் கூடாது என எண்ணும் இரக்க குணமே உண்மையான துறவுக்கான இலக்கணம். பொறுமையும், பரிவும், இரக்கமும், அருளும், நிதானமுமே தவ ஒழுக்கம் நிறைந்தவரின் கடமையாகும்.
உடம்பு, வாய், கண், மூக்கு, காது ஆகிய ஐம்புலன்கள் வழியே உணர்ச்சி, சுவை, ஒளி, வாசனை, ஓசை ஆகியவற்றின் மீது வேட்கை உண்டாகும். பொருளைப் பெற வேண்டும் என்னும் அவா உண்டாகும். இந்த வேட்கை என்னும் ஆசையை மனம் கலங்காமல் கட்டுப்படுத்த வேண்டும். ஆனால் ஐம்பொறிகளை அடக்குவது இல்லற வாழ்வில் சாத்தியமே இல்லை. புலன் இச்சைகளில் மனம் சிதறாமல், உள்ளத்து உறுதியுடன் திகழ, தவ வாழ்க்கையே சிறந்த நெறியாகும். எனவே இல்லறம் விடுத்துத் துறவறம் மேற்கொண்டு, மன வலிமையுடன், எவர் தவநெறியில் ஈடுபடுகிறாரோ, அவரே முக்தி அடைகிறார். மற்றவர்களால் வீடு பேற்றை அடைய முடியாது.
துன்பங்களுக்குக் காரணம் ஆசை. ஐம்புல நுகர்ச்சிப் பொருள்களை விரும்பித் தேடுவதால் துன்பம் நம்மைச் சேருகிறது. இல்வாழ்க்கையால் உண்டாகும் இத்துன்பம் நாள் தோறும் தொடர்ந்தும், அதிகரித்தும் கொண்டே இருக்கிறது. இல்வாழ்க்கையில் படும் துன்பங்களின் அளவோடு ஒப்பிடுகையில் கிடைக்கும் சிற்றின்பம் மிக மிகக் குறைவே. இல்வாழ்க்கை என்னும் சுழலில் சிக்கித் தவிக்கும் அறிவிலார் துன்பம் மிகுதியாக வரும் என்பதை உணர்ந்தே இருக்கின்றார். ஆனாலும், இல்வாழ்வை விடுத்துத் துறவு நிலையை அடைய எண்ணாமல், இல்வாழ்வில் குறைவாகக் கிடைக்கும் சிற்றின்பத்தையே நினைத்துக் கொண்டிருப்பர். அறிவுடைய மேன்மக்களோ, இல்வாழ்க்கையில் கிடைக்கும் சிற்றின்பம் மீது ஆசையோ, மயக்கமோ, கொள்ள மாட்டார்கள். இன்பம் தங்களை நெருங்கி வரும்போது அந்த இன்பத்தைத் தொடர்ந்து துன்பம் வருமென, நிலையாமையைச் சீர்தூக்கி ஆய்வு செய்வர். இல்வாழ்க்கை மீது மனம் செலுத்தாமல் துறவு நெறியை மேற்கொள்வர்.
(தொடரும்)