8. பொறை உடைமை
செல்வம் நிலையாமை தொடங்கி சினம் இன்மை வரையிலான முதல் ஏழு அதிகாரங்களும், அறத்துப் பாலின் முதற்கூறாகிய ‘துறவறம்’ பற்றியதாகும். இனி இரண்டாம் கூறாகிய ‘இல்லறம்’ பற்றிப் பார்ப்போம். இம்மை மறுமை ஆகிய இருமை இன்பங்களையும் அனுபவிப்பதற்கு உரிய இல்வாழ்க்கை நெறியில் நின்று, அதற்குத் துணையாகிய கற்புடைய மனைவியோடு செய்யும் தர்மமே இல்லறம் ஆகும்.
‘பொறை’ உடைமை என்பது பொறுமை உடையவராக விளங்குதல் ஆகும். இல்வாழ்வு என்பது தன் வீடு, தன் பொருள், தன் வாழ்வு எனப் புறப்பற்றினாலும், எனது என்னும் அகப்பற்றினாலும் நிலைபெறுவதாகும். ஏதோவொரு காரணத்தினாலோ, அறியாமை காரணத்தினாலோ, தம்மோடு கலந்தவர் பிழை செய்தால், அதைப் பொறுத்துக் கொண்டு இல்வாழ்க்கைப் பிணைப்பைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும். அறியாமை காரணமாகவும் பொறுமை இழக்கலாம். பொறுமை இழத்தலால் ஏற்படும் தீமைகளைக் கருத்தில் கொண்டு பொறுமை காக்க வேண்டும். இல்வாழ்பவர்க்கு உரிய பல குணங்களில் ‘பொறை உடைமை’ இன்றியமையாத சிறப்பு என்பதால், இல்லறவியலில் முதலில் வைக்கப்பட்டது. சினம் இன்மையும், பொறை உடைமையும் வெவ்வேறு இயல்புடையவை.
குளிர்ச்சி பொருந்திய மலைகள். அம்மலைகளில் இருந்து கொட்டும் அருவிகள். அவை வெள்ளிக் கீற்றுகளாக மாலைபோல் தோற்றம் தருகின்றன. இத்தகைய இயற்கை எழில் கொஞ்சும் நாட்டின் அரசனே! நான் சொல்வதைக் கேட்பாய்! அறிவில்லாத பேதைகளிடம் எப்போதும் எந்தச் சூழலிலும் எதையும் சொல்லாதே! அவன் ஏதேனும் பிழை செய்தால், அவனைத் திட்டாதே. பொறுமையைக் கடைப்பிடி. அப்படிச் சொன்னால் அவன் கோபம் கொள்வான். எதிர்த்துப் பேசுவான். அர்த்தமின்றி ஏட்டிக்குப் போட்டி உளறுவான். கடுஞ்சொற்களால் இகழ்வான். பேதைகள் சொல்லும் பொருளை உணராதவர்கள். நீ அவனிடம் கூறிய வார்த்தைகளை, அவன் அடுத்தவர்களிடம் திரித்தும், மாற்றியும், தவறுமாகச் சொல்லும் வாய்ப்புள்ளது. இதிலிருந்து தப்பிக்க ஒரேயொரு உபாயம்தான் உள்ளது. எவ்வளவு விரைவாக இயலுமோ, அவ்வளவு விரைவாக, அவனுடனான தொடர்பை விட்டு விலகி விடு. அறிவு இல்லாதவனிடமிருந்து நீங்குவதே உனக்கு நன்மை பயக்கும்.
சமமோ சமானமோ இல்லாத, ஈடற்ற, இணையற்ற, ஒப்பாகாத, நேர்மையான உயர்ந்த பண்பைக் காண முடியாத கீழ்மக்களுடன் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டாம். நற்குணம் அற்றவர்கள் சொல்லும் இனிமையற்ற சொற்களைக் கேட்டுக், கோபம் கொள்ளாதிருப்பதே ஒழுக்கத்தில் சிறந்தவர்கள் பண்பாகும். ‘சிறியோர் செய்த பிழை அனைத்தும் பெரியோர் பொறுப்பது கடனே’ என்பதற்கு ஏற்ப கீழ்மக்கள் சொல்லும் தகுதியற்ற சொற்களைப் பெரியோர் பொறுத்தலே புகழாம். தவத்தின் வலிமைக்குப் பொறை எனப்படும் பொறுமை இன்றியமையாதது ஆகும். எனவே கீழ்மக்களின் பழிச்சொற்களை எதிர்த்து இழிசொல் பேசாமல் அமைதியாக இருத்தலே நன்று. கடலால் சூழப்பட்ட உலகில் வாழும் பெரியோர், இந்தப் பொறுமைக் குணத்தையே புகழாகக் கொள்வார். பொறுமை இன்மையை இழிந்த குணம் என்பர்.
கண்ணுக்கு எட்டிய தூரம் வரை நீல நிறக் கடல். ஆர்ப்பரிக்கும் அலைகள் கரையில் வந்து மோதுகின்றன. மலர்களிலுள்ள தேனைக் குடிக்கும் அழகிய வண்டுகள் ரீங்காரம் இட்டு ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கின்றன. இத்தகைய கடலால் சூழப்பட்ட உலகின், குளிர்ச்சியான கடற்கரையை உடைய நாட்டின் மன்னனே! நம்முடைய நலனைப் பேணுபவர், நாம் நன்றாக வாழ வேண்டும் என்ற அக்கறை கொண்டவர் கிடைத்தால், அதை விடவும் மிகப் பெரிய பேறு உலகில் வேறொன்றும் இல்லை. நல்லது எது கெட்டது எது எனப் பகுத்து ஆராய்ந்து அறிவுரை சொல்பவர் கிடைக்கின், அதுவே முற்பிறவியில் நாம் செய்த நல்வினையின் பயனாகும். அத்தகைய நலன் விரும்பும் அன்புடையோர், செவிகளுக்கு இனிமை இல்லாத கடுஞ்சொற்களைக் கூறினாலும், அவை பின்னாளில் நன்மையே பயக்கும். ஆனால், நம் மீது அன்பில்லாத பகைவர் காதுகளுக்கு இனிமை தரும் கனிவான நற்சொற்களைக் கூறினும், அவை பின்னர் தீமையே விளைவிக்கும்.
அறிய வேண்டிய அரிய நூல்களைக் குறைவறக் கற்க வேண்டும். அவற்றிலுள்ள நன்மை தீமைகளை நுட்பமாக ஆராய்ந்து தெளிதல் வேண்டும். கற்பதோடு நில்லாமல் அவற்றில் கூறியுள்ள வழியில் அடங்கி நடத்தல் இன்னும் அவசியமாகும். அஞ்சி ஒதுங்குவதற்குரிய தீய செயல்களுக்கும், பழி பாவங்களுக்கும், பயந்து ஒதுங்குதல் நலமாகும். நாம் செய்யும் அறச் செயல்களைக் கண்டு உலகத்தார் சந்தோஷப்பட வேண்டும். அவர்களை மகிழ்விப்பதால் கிடைக்கும் பயன்களால், இன்புற்று வாழும் இயல்புடையோர் வாழ்வில், என்றுமே துன்பம் இல்லை. அடுத்தவர்களை மகிழ்விப்பதால் கிடைக்கும் சந்தோஷமே உலகில் மிகப் பெரிய சந்தோஷமாகும். அத்தகைய மகிழ்ச்சியையும், இன்பத்தையும் பெற்று அடக்கத்தோடும், பொறுமையோடும் வாழ்வோரைத் துன்பம் என்றுமே அண்டாது.
ஒரே அலைவரிசை எண்ணமும் சிந்தனையும் கொண்ட இருவர், வேற்றுமை இன்றி ஆழ்ந்த நட்புடன் பழகி வருகின்றனர். சாதி, மதம், வசதி ஏற்றத் தாழ்வு இன்றியும், நீ நான் என்னும் மாறுபாடு இன்றியும், ஒத்த கருத்தோடு மனம் கலந்த நண்பர்களாக விளங்குகின்றனர். அவ்வாறு ஒற்றுமையாக நேசம் பாராட்டிப் பழகும் காலத்தில், ஒருவனிடம் நம்ப முடியாத தீய பழக்கம் உண்டாகிறது. இது மற்றவனுக்குத் தெரிய வரும் போது, அவன் கோபமோ, ஆத்திரமோ கொள்ளாமல் பழகிய பழக்கத்துக்காகவும், நட்புக்காகவும், இயன்றவரை பொறுத்துக் கொள்ள வேண்டும். இனியும் பொறுக்க முடியாது என்னும் நிலை வரும்போது, நண்பனது தீய செயல்களை எல்லோரிடத்தும் சொல்லி அவனைத் தூற்றாமல், அவனது நட்பை மட்டும் தூரமாக விட்டுவிட வேண்டும். அவனைப் பழிக்கும் பட்சத்தில் உண்டாகும் மானக்கேடு அவனைப் பாதிக்கலாம். அப்படி ஒரு நிலை வந்தால் அவனுடன் இத்தனை நாள்கள் நட்புடன் பழகியதற்கு அர்த்தமின்றிப் போய்விடும். எனவே, அதற்கு மாறாக அவனுடன் எந்தச் சகவாசமோ, சிநேகிதமோ, வைத்துக் கொள்ளாமல், ஒதுங்குதல் நலம்.
காடுகள் நிறைந்த நாட்டின் தலைவனே! கூடிப் பழகிக் களித்த நண்பன் எப்போதும் மனத்துக்கு இனிமையான செயல்களையே செய்வான் என எதிர்பார்க்க முடியாது. ஏதேனும் ஒரு தருணத்தில், நண்பன் இனிமையற்ற துன்பம் அளிக்கும் செயல்களைச் செய்தாலும், அதன் காரணமாக அவனை விட்டு நீங்குதல் கூடாது. இதுநாள் வரை நட்பு கொண்டவனைப் பழிக்கவும் கூடாது. விட்டு விலகவும் கூடாது. நாம் முற்பிறவியில் செய்த தீவினையே, இப்பிறவியில் நண்பன் மூலம் இனிமையற்றச் செயல்களாக நம்மை வந்தடைந்தன என எண்ண வேண்டும். நம்மை நாமே நொந்து கொண்டு வெறுக்க வேண்டுமே தவிர, நண்பன் மீது கோபம் கொள்ளுதல் கூடாது. பகுத்தறிவு இல்லாத விலங்குகள் கூட நட்புடன் பழகியவர் தீமை செய்தால் விட்டு நீங்காது. மீண்டும் மீண்டும் அவரிடமே வந்து சேர்ந்து கொள்ளும். தீமையைப் பொறுக்கும் குணம் விலங்கிடம் காண்கிறோம். அதே பொறுமையை ஆறறிவு கொண்ட மனிதனும் கடைப்பிடிக்க வேண்டும்.
வானுயர்ந்த மலைகள். அந்த மலைகளில் இருந்து விழும் அருவிகள். அவை கொட்டும் போது ‘ஒல்! ஒல்!’ என்ற ஒலி எழுகிறது. அத்தகைய உயர்வான நல்ல நாட்டைக் கொண்ட தலைவனே! அறிவு ஒழுக்கங்களில் சிறந்த பெரியோரின் மேன்மையான நட்பையே எல்லோரும் நாடிச் சென்று விரும்பி ஏற்றுக் கொள்வர். இதற்கான காரணத்தை நீ அறிவாயா? சொல்கிறேன் கேள். சிறியோர் தெரிந்தோ தெரியாமலோ, அறிவின் சிறுமையால், செய்யக் கூடாத தீமைகளைச் செய்தாலும், அவற்றைப் பண்பில் சிறந்த அற வழி நிற்கும் பெரியோர் பொறுத்துக் கொள்வர். சிறியோர் அவர்களுக்குச் செய்த தீமையையும், குற்றத்தையும் பொருட்படுத்த மாட்டார்கள். மாறாக நன்மையே செய்வார்கள். தவறு இழைத்தவர்களுக்கும் நன்மையே செய்யும் நற்பண்பு கொண்ட பெரியோரை அனைவரும் நாடிச் சென்று நட்பு கொள்வார். நல்லவர்களைச் சுற்றி எப்போதும் மிகப் பெரிய நட்பு வட்டம் இருப்பதன் காரணம் இதுதான்.
உண்ண உணவின்றி வாடும் பசிக் கொடுமை துயரமானது. உயிர் வாழ ஒரு பிடி கவளம் கூட உணவு இல்லாமல் வறுமை வாட்டி எடுக்கும். வறுமையும், அதன் காரணமாகப் பசியும், சேர்ந்து கொண்டால் அவற்றை விடவும் துன்பம் வேறில்லை. கன்னங்கள் ஒட்டியும், வயிறு வாடியும் வதங்கியும் விட்டது. மொத்தத்தில் உடல் வற்றித் துரும்பாக இளைத்துப் போனது. ஆனாலும் அறிவிலும், பண்பிலும் சிறந்த பெரியோர் வறுமையையும், பசியையும் பொறுத்துக் கொள்வர். உண்ண உணவு இன்றி இறக்கும் நிலை ஏற்பட்டாலும், தனது வறுமை நிலையை நற்குணம் இல்லாதவரிடம் சொல்ல மாட்டார். உயிரை மாய்த்துக் கொள்ளும் துணிவு அற்றவர்கள், தங்கள் வறுமையை, உதவி செய்யும் பண்பு உள்ளோரிடம் மட்டும் சொல்லி யாசகம் கேட்கலாம், என்பதும் கருத்தாகும்.
உயர்ந்த மலைகளும், அவற்றில் வழிந்தோடிக் கீழே விழும் நீண்ட நெடிய அருவிகளையும் கொண்ட நாட்டின் வேந்தனே! ஒரு செயலை விரும்பிச் செய்கிறோம். அவ்வாறு செய்யும் போது அத்தொழிலால் நமக்கு இன்பம் வருகிறது. அதே தருணம் அந்த இன்பத்தோடு தாழ்மையும் வருமானால், அந்தத் தாழ்மையால் வரும் துன்பத்தைப் பொறுத்துக் கொள்ள வேண்டும். ஆனால், துன்பத்தைப் பொறுத்துக் கொள்ளாமல், தாழ்வுக்கு உட்பட்டுப் பழிக்கு ஆளாகக் கூடாது. இன்பம் இடைவிடாது கிடைப்பினும், அதை அறிவுடையோர் பழித்தல் கூடாது. அத்தகைய பழித்தல் இல்லாத இன்பமே தலையான இன்பம் ஆகும். இன்பமே அளிக்கும் செயல் எனினும், பழி வந்தால், அதைச் செய்யாமல் விடுவதே நலமாகும்.
தான் கெட்டு அழிய நேர்ந்தாலும், அந்தக் கெடுதலை நீக்கிக் கொள்வதற்காக, உயர் பண்புள்ள மேலானவர்களுக்குக் கேடு விளைவிக்க எண்ணாமல் இருக்க வேண்டும். பசி வயிற்றைக் கிள்ளுகிறது. பசியின் கொடுமையால் உடல் மெலிந்து, குடல் வற்றி, தசை அழிந்து போகிறது. அத்தகைய நிலை வந்தாலும், உண்ணத் தகாதவர் கையிலிருந்து கிடைக்கும் உணவைப் பெற்று உண்ணாது இருப்பீர். வறுமை நிலை நீங்க, வானம் தழுவிய இந்த உலகமே கிடைப்பதாக இருந்தாலும், பொய்யான சொற்களை இடையிடையே கலந்து சொல்லாமல் இருப்பதே உயரிய பண்பாகும்.
0
9. பிறர் மனை நயவாமை
காமத்தால் அறிவிழந்து அடுத்தவர் மனைவி மீது ஆசை கொள்ளாமை பற்றி இப்பகுதி விளக்குகிறது. இல்லற வாழ்வில் மனைவியுடன் கூடி இன்புற்று வாழ்ந்து அறச் செயல்கள் செய்பவனே உண்மையான இல்லறத்தான் ஆவான். பொறை உடைமை இல்வாழ்வில் அவசியமாகும். அத்தகையோர் பொறுத்தற்கு அரிய காமத்தைப் பொறுத்தல் முக்கியமாகும். பிறன் மனைவியை விரும்புவது பெரும் குற்றம் என்பதை உணர்த்தவே பொறை உடைமைக்கு அடுத்துப் பிறர் மனை நயவாமை வைக்கப்பட்டது. இல்லத் தலைவியின் அமைதியைப் பொருத்தே ஒருவனுக்கு வாழ்க்கை இன்பமாகவும், துன்பமாகவும் அமைகிறது. அடுத்தவன் இல்லத் தலைவியை விரும்புவதன் மூலம் ஒருவன் அக்குடும்பத்தின் அமைதியைக் கெடுப்பதுடன், அறத்தின் அடிப்படைக்கே ஊறு விளைவிக்கிறான். இது குடும்பக் கேடு மட்டுமின்றி, சமூகத்துக்கே கேடு என்பதால், அத்தீய செயலை விடுதல் வேண்டும்.
காமம் தலைக்கேறிய நிலையில் பிறர் மனைவி மீது ஆசை கொள்ளும் போது, யாரேனும் கண்டுபிடித்து விடுவார்களோ எனத் தோன்றும் பயத்தின் அளவு பெரியதாகும். அத்தீய ஒழுக்கம் காரணமாக விளையும் அச்சத்துக்குக் கைமாறாகக் கிடைக்கும் சிற்றின்பம், மிக மிகச் சிறிய அளவே ஆகும். தவறான செய்கையின் உண்மை நிலையை ஆராயும் இடத்து, பெரும் பாவச் செயலாகும். இந்தப் பிறவியில் அரசனால் மரண தண்டனையும், அடுத்த பிறவியில் நரகமும் கிடைக்கும். மாற்றார் மனைவிமேல் விருப்பம் கொள்வோர்க்கு இப்பிறவியில் மட்டுமின்றி மறுபிறப்பிலும் துன்பமே விளையும். எனவே பழி பாவங்களுக்கு அஞ்சுவோர் பிறன் மனைவி மீது ஆசைப்படார் என்பது கருத்து.
அடுத்தவர் மனைவி மீது விருப்பம் கொள்வோர்க்குப் புண்ணியம், புகழ், நல்ல நட்பு, பெருமை ஆகிய நான்கும் வந்து சேர மாட்டா. இதற்கு மாறாக அத்தகைய தீய ஒழுக்கம் உடையோரைப் பகை, பழி, பாவம், பயம் ஆகிய நான்கும் வந்து சேரும். பிறன் மனையாள் மீது வைக்கும் பற்றால், அப்பெண்ணைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, அக்கம் பக்கம், உற்றார் உறவினர், ஊரார், நண்பர்கள் உள்ளிட்டோரின் வெறுப்புக்கும், ஏச்சுக்கும், பேச்சுக்கும், ஆளாக நேரிடும். இதன் காரணமாக நாம் சேர்த்து வைத்திருந்த பெயர், புகழ், கௌரவம், நட்பு ஆகிய அனைத்தும் நம்மை விட்டு விலகும். பாவமும், பகையும், பழிச்சொல்லுமே மிஞ்சும்.
பயம்… பயம்… பயம்… எதைப் பார்த்தாலும் பயம். உட்கார்ந்தால் பயம், நடந்தால் பயம், எழுந்தால் பயம். அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பார்கள். அதுபோல் தப்பு செய்பவன், குறிப்பாக அடுத்தவன் பெண்டாட்டி மீது ஆசை வைக்கும் பாவத்தைச் செய்யும் கயவன், எப்போதும் அச்சத்திலேயே வாழ்வான். இன்னொருவன் மனைவியின் வீட்டுக்குச் செல்லும் போது பயம். அவள் வீட்டிலிருந்து திரும்பி வரும் போது பயம். அவளுடன் இன்பத்தைக் கூடி அனுபவிக்கும் போது பயம். அவளுடன் தனித்திருக்கும் போது யாரேனும் பார்த்துவிட்டால் என்னாவது என்ற அச்சம். அவள் வீட்டுக்குள் நுழையும் போதும் வெளியேறும் போதும் யார் கண்ணிலும் படாமல் இருக்க வேண்டுமே என்ற அச்சம். இந்தக் கள்ள உறவு வெளியே தெரியாமல் இருக்க அதை மறைப்பதிலும், பாதுகாப்பதிலும் அச்சம். இத்தீய ஒழுக்கம் இருக்கும் வரை, அச்சமும் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து கொண்டிருக்கும். அடுத்தவன் மனைவி மீது விருப்பம் கொள்வது எப்போதும் அச்சமே தரும் பாவச் செயல் என்பதால் அதைச் செய்யாதிருப்பீராக.
‘பிறன் மனை நோக்கா பேராண்மை’ என்கிறது வள்ளுவம். அடுத்தவன் மனைவியை ஏறிட்டுப் பார்க்காமல் இருப்பதே பேராண்மை என்கிறார் வள்ளுவர். இந்திரியங்களை அடக்குவதே உத்தம புருஷனுக்கு உரிய ஆண்மையாகும். அவ்வாறு புலன்களைக் கட்டுப்படுத்தாமல், அடுத்தவன் மனைவி மீது வைக்கும் தீய ஒழுக்கம் ஆண்மை இல்லாமை என்பதே சான்றோர் கருத்தாகும். அடுத்தவன் மனைவியோடு உறவாடுவது வெளிச்சத்துக்கு வந்தால் அவனுக்கு மட்டுமின்றி அவனது குடும்பத்துக்கே தீராத பழிச்சொல் வந்து சேரும். மாற்றான் மனைவியோடு அனுபவிக்கும் போது கையும் களவுமாகப் பிடிபட்டால் என்னவாகும் எனச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. தப்பு செய்ய இந்தக் கால்கள்தானே நடந்தன எனக் கால்களை முறிப்பார்கள். ஆரத் தழுவிய கைகளை உடைப்பார்கள். மேலோட்டமாக நாகரிகம் கருதிக் கைகளையும், கால்களையும் கூறினாலும், மற்ற உடல் உறுப்புகளுக்கும் இதே கதிதான் என உணர்தல் வேண்டும். கேவலமான இச்செயலைச் செய்யும் போது ஏற்படும் அச்சமும், அவமானமும், நீண்ட காலம் வேதனையைத் தரும். வாட்டி வதைக்கும். இந்நிலையில், ஒழுக்கமற்ற செயலைச் செய்யும் போது சொற்ப நேரமே கிடைக்கும் சுகம் எவ்வளவு? தேவையா? மானத்தை இழந்தேனும் இன்பத்தைப் பெற வேண்டுமா?
முற்பிறப்பிலே நடுவு நிலை சிறிதும் இன்றி, பண்பற்ற கீழான குணமுள்ள சிறியோருடன் சேர்ந்து பழகினாய். அத்தகைய, தீய ஒழுக்கம் கொண்டவர்களுடன் நட்பாக இருந்தவனே! சந்தனக் குழம்பால் எழில் கோலம் வரையப்பட்ட, இளமையும், பருவமும், திரட்சியும் கொண்ட மார்பகங்களும், அழகான தோள்களும் உடைய பெண்கள் மீது மோகம் கொண்டு அலைந்தவனே! பண பலத்தாலும், அதிகார பலத்தாலும் மாற்றான் மனைவிகளை அச்சுறுத்தி அனுபவித்தவனே! இத்தகைய பாவச் செயல்களைச் செய்த நீசர்களுக்கு என்ன தண்டனை தெரியுமா? ஆண் தன்மை இல்லாமலும், பெண் தன்மை இல்லாமலும், அலிகளாகவும், பேடிகளாகவும் பிறந்து, ஆடியும், பாடியும், பிச்சை எடுத்து வாழும் நிலை ஏற்படும். கடந்த பிறவியில், பிறர் மனைவிகள் மீது இச்சை கொண்ட காரணத்தால், இப்பிறவியில் அலியாகவும், பேடியாகவும், பிறந்தவர்களின் துன்பம் நிறைந்த வாழ்க்கையைக் கண்டேனும் இழிச்செயல் செய்யாதிருப்பீராக!
ஜாதகப் பொருத்தம் பார்த்து, நாள் நட்சத்திரம் குறித்து, நல்லதொரு சுபமுகூர்த்த வேளையில், மேள தாளம் முழங்க, நாதஸ்வரம் ஒலிக்க, உற்றார் உறவினர் நண்பர்கள் வாழ்த்துடன் திருமணம் கோலாகலமாக நடந்து முடிகிறது. நேற்று வரை தாய் தந்தை உடன் பிறந்தோர் எனக் கூடி வாழ்ந்த பெண், அனைவரையும் விட்டுவிட்டு கணவனே கண்கண்ட தெய்வம் எனப் புகுந்த வீட்டிற்கு வருகிறாள். மென்மையான குணங்களைக் கொண்ட அப்பெண் மணாளனை நம்பி அவன் மீதுள்ள விருப்பத்தால் தன்னை முழுமையாக ஒப்படைக்கிறாள். இத்தகைய அன்பும், அழகும் நிறைந்த மனைவி வீட்டில் காத்திருக்க, அவளைத் தன்னந்தனியே தவிக்கவிட்டு, இன்னொருவரின் மனைவியை நாடிச் செல்லும் காமுகனை என்னென்று சொல்வது? மனைவி வீட்டில் இருக்க அவளை விடுத்து பிறன் மனைவி தேடிச் செல்லுதல் பாவச் செயலாகும். அப்படி எனில், மனைவி இல்லாதவன் அடுத்தவர் மனைவியை விரும்பலாமா என்ற கேள்வி எழும்? அதுவும் கூடாது. வெறுக்கத்தக்க செயல் என்பது கருத்து.
பாம்பின் தோல் பளபளப்பானது. பளபளப்பாக இருக்கிறது என்பதற்காகப் பாம்பை யாரேனும் ஆரக் கட்டித் தழுவுவாரோ? ஆசையுடன் அதன் தலையை உச்சி மோந்து முத்தம் தந்து நாக்கால் நக்குவாரோ? அப்படி நக்கினால் பாம்பின் விஷம் பரவி உடனே மரணம் நிச்சயம் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. அறிவற்ற பேதையே இத்தகைய மூடத்தனமான செயலைச் செய்யத் துணிந்து உயிரை விடுவான். அதுபோல், கட்டிய மனைவி வீட்டிலிருக்க அவளை விட்டு நீங்கி பிறன் மனைவி மீது மோகம் கொள்பவன் நிலையும் இப்படித்தான் முடியும். ஒழுக்கக் கேடான இச்செயலைக் கண்டு அக்கம் பக்கம் வசிப்போர் பழிப்பர். காறி உமிழ்வர். உற்றார் உறவினரோ, பாவம் செய்த இவனால், நமக்கும் ஏதேனும் துன்பம் நேருமோ எனப் பயந்து நடுங்குவர். பளபளப்பான பாம்பின் தலையை நக்கினால் உண்டாகும் அபாயத்துக்கு இணையானது, மாற்றான் மனைவி மீது கொண்ட மோகத்தால் அவளுடன் கூடி உறவாடுவது.
காமம் கொடுமையான இயல்பினைக் கொண்டதாகும். அதனால் விளையும் இன்பத்தை விடவும் துன்பமே அதிகம். காமத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் அதன் மூலம் சிறிது நேரமே கிடைக்கும் சிற்றின்பத்தையே சிறியோர் விரும்புவர். ஆனால் அறிவில் சிறந்த பெரியோரும், உள்ளத்தில் உறுதி கொண்ட சான்றோரும், தவ வலிமையால் காமத்தை அடக்கும் திறன் பெற்றவர்கள். அவர்களிடத்தே காம நோய்கள் வளரா. அப்படி உள்ளேயே பெருகினாலும் வெளிப்பட மாட்டா. விதி வசத்தால், வினைப்பயன் காரணமாக, காமம் தப்பித் தவறிப் புறத்தே தோன்றினாலும், பிறன் மனை தேடிச் செல்லார். கீழான செயல்களில் ஈடுபடார். பழிச் சொல்லுக்கு அஞ்சியும், கேடு விளையுமே எனப் பயந்தும், காமத் தீயை உள்ளத்துக்கு உள்ளேயே அடக்கி அணைத்து விடுவர்.
வில்லை வளைத்துச் செலுத்தும் கூரிய அம்பும், கொழுந்து விட்டு எரியும் நெருப்பும், ஒளி பொருந்திய சூரியனின் வெப்பக் கதிர்களும், உடலைச் சுட்டு வாட்டி எடுக்கும் தன்மை கொண்டவை. அவற்றால் புறப் பகுதியான உடலை மட்டுமே சுட்டு வருத்தம் தர இயலும். ஆனால், பெண் ஆசையைத் தூண்டும் காமம் என்னும் கொடிய வெப்ப நோய், உடலை மட்டுமின்றி உள்ளத்தையும் கவலைக்கு உட்படுத்தி வருந்த வைக்கும். பெண் மீது மயக்கம் கொண்டவன், காம இச்சையை அடக்க முடியாமல் உடல் துன்பத்துக்கு மட்டுமின்றி உள்ளத்தாலும் பாதிக்கப்படுகின்றான். மன உளைச்சலுக்கு உள்ளாகிறான். எனவே உடல் சுடப்படுவதை விடவும் உள்ளம் சுடப்படுவதால் உண்டாகும் வேதனை அதிகம். ஆகவே, மூடனே, பிறன் மனை விரும்புதலைக் கைவிடுவாயாக! அம்பு, நெருப்பு, சூரியக் கதிர்களை விடவும், காமத்தினால் விளையும் மன வேதனைக்கு அஞ்சியே, பெண் ஆசையைத் துறக்க அறிவுடையோர் முற்படுவர்.
அஜாக்கிரதை காரணமாக அல்லது தீயவன் வஞ்சகச் செயல் காரணமாக, எங்கேயோ ஏற்பட்ட சிறு நெருப்புப் பொறி பெரு நெருப்பாகப் பற்றிக் கொண்டது. செந்நிற நாக்குகளுடன் ஊரையே அழிக்கும் அளவுக்குக் கொழுந்துவிட்டு எரிகிறது. சுட்டெரிக்கும் பெருந்தீயின் வெப்பத்திலிருந்து தப்பிக்க, அருகிலுள்ள ஆறு குளம் அல்லது நீர் நிலைகளில் விழுந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ளலாம். அல்லது நெடுந்தூரம் ஓடிக் குளிர்ச்சியான மலையில் ஏறியோ, சோலைக்குள் புகுந்தோ, குகைக்குள் ஒளிந்தோ, வெப்பம் தாக்காமல் பாதுகாத்துக் கொள்ளலாம். ஆனால் மாற்றான் மனைவி மீது கொண்ட மோகத்தால் ஏற்படும் காமத் தீ, நம்மைச் சுட்டு எரிப்பதிலிருந்து எளிதில் தப்பிக்க முடியாது. பிறன் மனைவி மீது விருப்பம் கொண்டு தவறு செய்பவன், புண்ணிய நதிகளில் நீராடுவதாலும், மலையேறி தெய்வங்களை வழிபடுவதாலும், தவம் செய்வதாலும், எந்தப் பயனும் இல்லை. அந்தப் பாவத்துக்கு மன்னிப்பே இல்லை. தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும்.
(தொடரும்)