10. ஈகை
வறுமையில் வாடுபவர்கள் கையேந்திப் பிச்சை கேட்கும்போது, தம்மிடம் இருப்பதை இல்லை என்று சொல்லாமல் கொடுப்பதே ஈகை ஆகும். இதன் காரணமாக இரப்பவர்களுக்கு வறுமை நீங்கும். துன்பம் விலகும். இல்லை என மறுக்காமல் பிச்சை தருவோர்க்கு இந்தப் பிறவியில் புகழும், வரும் பிறவியில் இன்பமும் கிடைக்கும் என்பது சான்றோர் வாக்கு. இல்லற வாழ்க்கை வாழ்பவனுக்குப் பிறன் மனை நயவாமை போன்று ஈகையும் இன்றியமையாத நற்குணமாகும். முக்கியக் கடமைகளுள் ஒன்றாகும். ஈகைத் தன்மை கொண்டோர்க்கும், பிறன் மனை விரும்பாதோர்க்கும் இப்பிறவியில் புகழும், மறுபிறவியில் புண்ணியமும் கிட்டும். ஈகை இன்மையோடு, பிறன் மனை விரும்பும் கயவர்க்கு, இம்மையில் பழியும், மறுமையில் பாவமும் வந்து சேரும். இரப்பவரைக் காணும் போதெல்லாம் முகம் மலர்வதும், நெருங்கி வரும்போது இன்சொல்லுடன் உதவுவதும், ஈகைக் குணமாகும்.
நம்மை நாடி வந்து இரப்போர்க்குக் கொடுக்க வேண்டும் என்ற மனம் இருக்கிறது. ஆனால் அதிகப் பொருள் வசதி இல்லை. எனினும் தற்போதுள்ள நிலைமைக்கு ஏற்ற வகையில், பொருள் உள்ள காலத்தில் எவ்வாறு மனம் உவந்து மகிழ்ச்சியுடன் கொடுப்பார்களோ, அதே மகிழ்ச்சியுடன் அதிக வசதி இல்லாத நிலையிலும், சான்றோர், கைவசம் இருப்பதைத் தந்து உதவுவார்கள். ஏழ்மை நிலையிலும் மற்றவர்களுக்குத் தரும் குணம் கொண்டவர்களே உயர்ந்தவர்கள். இரப்பவர்களுக்கு இல்லை என்று எப்போதும் சொல்லாமல், இருப்பதை அமைதியாகக் கொடுப்பது நற்குணம் உள்ள பெரியவர்களின் இயல்பாகும். அத்தகையோரின், வருகையை எதிர்பார்த்து, மேலுலகில் உள்ளோர் சொர்க்கத்தின் கதவுகளை மூடாமல் திறந்து வைத்துக் காத்திருப்பர். ஈகைக் குணம் கொண்டோர்க்கே சொர்க்கத்தின் கதவுகள் திறந்திருக்கும். மற்றவர்களுக்கு அடைக்கப்பட்டிருக்கும்.
இந்தப் பூமியில் பிறவி எடுப்பதற்கு முன்பே, சாகும் நாளும், முதுமையும், வெறுக்கத்தக்கக் கிழத்தனமும், ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்டு உள்ளன. முன்வினைப் பயனாக நோய்களும், அதனால் உண்டாகும் வலியும், முன்னரே நிச்சயிக்கப்பட்டு, நம்மைத் தொடர்ந்து கொண்டே இருக்கும். இந்தப் பிணியும், மூப்பும், சாக்காடும் உலகில் பிறந்த அனைவருக்கும் பொதுவாகும். இதற்கு எவரும் விதிவிலக்கு அல்ல. யாரும் தப்பிக்கவும் முடியாது. துன்பத்தோடும், துயரத்தோடும் உழலும் மனிதர்களைக் கண்கூடாகப் பார்க்கிறோம். இவை அனைத்தையும் பார்த்த பிறகேனும் நமக்கும் இதுவே கதியென உணருங்கள். கையில் இருக்கும் பொருளை இல்லை என இரப்போர்க்குக் கொடுத்து உதவுங்கள். சேர்த்த செல்வத்தின் மீது பற்று கொண்டு அதை இறுகப் பற்றிக் கொள்ளாதீர். மேலும் மேலும் செல்வத்தைத் தேடி அலையாதீர். தனியாகச் சாப்பிடும் பழக்கத்தைக் கைவிடுங்கள். பிரம்மச்சாரி, வானப்பிரஸ்தன், சந்நியாசி, ஆதரித்தவரால் கைவிடப்பட்டவர், தரித்திரர், ஆதரவில்லாதவர், தென்புலத்தார், தெய்வம், விருந்தினர், சுற்றத்தார் ஆகியோருடன் அன்றாடம் உணவைப் பகிர்ந்து உண்ணுங்கள்.
ஊற்றுநீர் இறைக்க இறைக்கச் சுரந்து கொண்டே இருக்கும். அதுபோல் நம்முடைய நல்வினை காரணமாக நம்மிடையே வந்து சேரும் செல்வத்தைப் பிறர்க்குக் கொடுத்துத் தாமும் அனுபவிக்க வேண்டும். இதன் காரணமாகச் செல்வம் வளர்ந்து கொண்டே போகுமே தவிரக் குறையாது. ஆனால், இச்செல்வத்தை நம்மிடம் சேர்க்கும் நல்வினைப் பயன் அழியும் காலம் வந்தால், எவ்வளவுதான் செல்வத்தை இறுக்கிக் கட்டிப் பிடித்துக் கொண்டாலும், அது நிலை பெற்று நிற்காது. நம்மை விட்டு விலகிவிடும். நம்மிடம் சேர்ந்த பொருளை அடுத்தவர்க்குக் கொடுத்தால், ஈகைத் தன்மை வறுமை நிலைக்குத் தள்ளிவிடும் என எண்ணுதல் கூடாது. செல்வம் ஒருவரிடம் சேருவதும், விட்டு விலகுவதும், அவரவர் நல்வினை தீவினைக்குக் காரணமான வினைப்பயனே தவிர, ஈகைக் குணம் அல்ல. மற்றவர்களுக்குக் கொடுத்து வாழ்ந்தவர் உண்டே அன்றி, உதவி செய்த வீழ்ந்தவர் இல்லை. ஆனால், இந்த உண்மையை உணராத சிலர் வறுமையில் வாடி வதங்குவோரைக் கண்டும், அவர்களுக்கு எந்த உதவியும் செய்யாமல் கருமியாகவே இருப்பர். செல்வம் இருக்கும் போதே மற்றவர்க்குக் கொடுத்து நற்கதியைத் தேடிக் கொள்ளுங்கள்.
ஆழமான நீரைக்கொண்ட கடலால் சூழப்பட்ட இவ்வுலகில் தங்களுக்கான உணவைச் சமைக்காத அடுப்பைக் கொண்டவர் இருப்பர். இவர்கள் அடுத்தவர்களிடம் இரந்து உண்ணும் பிச்சைக்காரர்கள். இவர்களது இந்த நிலைக்குக் காரணம் முற்பிறவியில் யாசகம் கேட்டுத் தன்னிடம் வந்து இரந்தவர்களுக்கு உண்ண உணவு கொடுக்காது விரட்டி அடித்த கருமிகள். இவர்களை ஈயாத உலோபிகள் என அறிவுடையோர் கூறுவர். எனவே இப்பிறப்பிலேனும், தினமும், கையில் உள்ள பொருள்களில், இம்மி அளவு அரிசியே என்றாலும், அறத்தின் பொருட்டு அதைப் பிறருக்குக் கொடுத்து உண்ணுங்கள். அடுத்த பிறவியில் நீங்கள் பிச்சைக்காரர்களாகப் பிறக்காமல், செல்வந்தராகப் பிறக்க, இப்பிறவியில் இரந்தவர்க்கு இல்லை எனாது தருமம் செய்யுங்கள். சமைக்க உணவின்றி வெறும் அடுப்பு மட்டும் இருந்து என்ன பயன்?
இப்பிறவியில் வரும் பயனையும், மறுபிறப்பில் வரும் பயனையும், நன்கு ஆராய்ந்து உணர வேண்டும். பிறகு, பொருந்தும் வகையில், ஒருவன் தன்னால் கொடுக்க இயன்ற பொருள்களை இரவல் கேட்டு வருபவனிடம் கொடுக்க வேண்டும். இரந்தோர்க்குக் கொடுக்கும் ஈகை நிலை எல்லோருக்கும் எளிதில் அமைந்து விடாது. மறுமையில் சொர்க்க இன்பமும், இம்மையில் புகழும் பெருமையும் கிடைப்பதைக் கருத்தில் கொண்டு, இயன்ற வரை மற்றவர்க்குக் கொடுக்க வேண்டும். ஆனால், ஏழ்மையும், வறுமையும் காரணமாக, இரந்தோர்க்கு அளிக்க முடியாத நிலையும் ஏற்படலாம். அவ்வாறு கொடுக்க முடியாமல் போனாலும் பரவாயில்லை. ஆனால், அவற்றால் கிடைக்கும் மேம்பாட்டை விடவும், வறுமை காரணமாக மற்றவரிடம் பிச்சை எடுக்காமல் இருப்பின், அவற்றை விடவும் இரு மடங்கு மேம்பாடு கிடைக்கும். இன்பமும், புகழும் ஈட்டித் தரும் ஈகை சிறந்தது எனினும், வறுமைக் காலத்தில் அடுத்தவரிடம் பிச்சை எடுக்காமல் இருத்தல் அதை விடவும் சிறந்ததாகும். இரத்தலை இழிவெனச் சொல்லி ஈகையைப் பெருமைப்படுத்துகிறது.
ஊர் நடுவே பழம் தரும் ‘பெண்’ பனை மரமும், அதைச் சுற்றித் திண்ணையும் இருந்தால், மக்கள் அங்கே கூடுவது இயல்பு. திண்ணையில் அமர்ந்து உரையாடி மகிழ்வார்கள். பழங்களை உண்டு பசியாறுவார்கள். சோலைகளும், வயல்களும் நிறைந்த அழகான ஊர். அந்த ஊரின் நடுவே மேடை. எல்லோருக்கும் நல்லதையே நினைப்பவரை, பலரும் விரும்பும்படி வாழ்பவரைச் சுற்றி எப்போதும் மக்கள் திரள்வர். இத்தகைய அன்பும் அறனும் நிறைந்தவரே அனைவருக்கும் பயன் தரும் ‘பெண் பனைமரம்’ போன்றவர். ஊருக்கு உபகாரம் செய்யும் இவர்களைத் தேடி வந்து மற்றவர் உதவிகளைப் பெறுவார்கள். சுடுகாடு ஊருக்கு வெளியேதான் அமைக்கப்பட்டிருக்கும். அது ஒருவழிப்பாதை. அங்கே உயிரற்றவரே செல்வர். உயிரோடு யாரும் வெளியே வாரார். நினைத்த போது செல்வதற்கு இயலாத அச்சம் தரும் அசுத்தமான இடமும் கூட. அங்கேயும் ஒரு பனை மரம் உண்டு. ஆனால் அது ‘ஆண்’ பனை. ஆண் பனை காய்க்காது, பழுக்காது என்பதால் யாருக்கும் எந்தப் பயனும் இல்லை. சுடுகாட்டுக்கும் யாரும் விரும்பிச் செல்லார். அங்கே இருக்கும் ஆண் பனையையும் தேடிப் போகார். கருமிகள் இவர்களைப் போன்றவர்கள்தான். பணம் இருந்த போதும் யாருக்கும் தந்து உதவ மாட்டார்கள். எனவே, இவர்களை நாடி எவரும் செல்லவும் மாட்டார்கள். ஈயாத உலோபிகள், எவரும் தேடி வராத சுடுகாட்டுக்கும், எதற்கும் பயனற்ற ஆண் பனைக்கும் ஒப்பானவர்கள் என்பது கருத்தாகும்.
(கயல்) மீன்களின் இறைச்சி வாய்க்கு ருசியாக இருப்பினும், அவற்றின் துர்நாற்றம் குடலைப் புரட்டி எடுக்கும். ஆனால், அந்தத் துர்நாற்றத்தை அங்கேயுள்ள புன்னை மரங்களின் மலர்கள் தங்கள் நறுமணத்தால் போக்கிவிடும். அத்தகைய மீன்கள் நிறைந்த அலைகள் மோதுகின்றன குளிர்ச்சியான கடற்கரையையும், நறுமணம் வீசும் புன்னை மரங்களையும் கொண்ட நாட்டின் அரசனே கேள்! பருவம் தவறாமல் மழை பொழிய வேண்டும். எனவேதான் மாதம் மும்மாரி என்றார்கள். உலக மக்கள் உயிர் வாழ்வதற்கும், பயிர்கள் செழிப்பதற்கும், மழைநீர் இன்றி அமையாதது ஆகும். மழைநீர் பொழியாது போனால் நிலம் வறண்டு பாலைவனம் ஆகும். மழை பொய்த்தால் உயிர் பிழைப்பது கடினம். அதுபோல், உயர்ந்தோர் செய்யத்தக்க அறச் செயல்களைச் செய்யாமல் போனாலும், உலகத்து ஜீவராசிகள் உயிர் பிழைக்க வழி இல்லை. எதையும் எதிர்பாராது மழை பொழிவதுபோல், கைம்மாறு கருதாது உயர்ந்தோர் அறம் செய்வர்.
வளங்கள் நிறைந்த கடற்கரையைக் கொண்ட தலைவனே! இந்த உலகில் பிச்சை எடுத்து உயிர் வாழ்வதை விடவும் கொடுமையானது எதுவும் இல்லை. எதுவும் கொடுக்க முடியாவிட்டாலும், பிச்சை எடுக்காமல் இருத்தல் நல்லது. எனவேதான், இரத்தலை விடவும் இழிநிலை வேறெதுவும் இல்லை என்பது பெரியோர் வாக்கு. யாரேனும் கையேந்திப் பிச்சை கேட்டு வந்தால் இல்லை என்று மறுக்காது தர்மம் செய்வீர். பிச்சை கேட்பவர் நல்லவர், கெட்டவர், இன்னார், இனியார், நண்பர், பகைவர் என்ற பேதம் பார்க்காமல் கொடுக்க வேண்டும். இவருக்கு இவ்வளவு தரலாம், அவருக்கு அவ்வளவு தரலாம் என, வேறுபாடு நோக்காமல், இயன்ற அளவு வழங்குங்கள். முக்கியமாகப் பிரதி உபகாரம் எதுவுமே செய்ய இயலாத வறியவர்க்குக் கொடுப்பதே உண்மையான தருமம் ஆகும். மாறாக, நம்மிடம் உதவியைப் பெறுபவர் பின்னாளில் நமக்குப் பதில் உபகாரம் செய்யும் வசதி படைத்தவராக இருப்பின், அவருக்கும் செய்வது தர்மம் ஆகாது. பிரதிபலனை எதிர்நோக்கிக் கொழுத்த வட்டிக்குப் பணம் கொடுக்கும் கடனாகவே கருதப்படும். ஏழைக்குக் கொடுப்பதே கொடை. மற்றவர்க்குத் தருவது கடன் என்பது கருத்து.
கையேந்திப் பிச்சை கேட்கும் ஒருவனுக்கு இல்லை என்று சொல்லாமல் நம்மால் கொடுக்க முடிந்த அளவுக்குத் தருவதே ஈகையாகும். நம்மிடம் குறைவாக இருக்கிறது என்றோ, கொடுக்கும் அளவு சிறிது என்றோ, நினைக்காமல் தர வேண்டும். தர்மம் செய்வதுதான் முக்கியமே அன்றி, கொடுக்கும் அளவு முக்கியம் அல்ல. காலம், நேரம், இடம், தகுதி நோக்காமல், எந்நேரமும், எந்நாளும், எந்த இடத்திலும், எப்படிப்பட்டவராக இருப்பினும், எப்போதும் அறம் செய்ய வேண்டும். கையில் சிறிய பிச்சைப் பாத்திரத்துடன் வீடு வீடாகச் சென்று யாசகம் கேட்கிறான். ஒவ்வொரு வீட்டிலும் கிடைக்கும் அளவு சிறிதே என்றாலும் கடைசியில் அந்தப் பாத்திரம் நிறைந்துவிடும். அதுபோல், நாம் செய்யும் தர்மமும் அளவில் சிறிது என்றாலும், ஒவ்வொரு முறையும் செய்யும் அச்சிறிய அறம் பிச்சைப் பாத்திரம்போல் காலப்போக்கில் நிறைத்துவிடும். சிறுதுளி பெரும் வெள்ளம்போல், சிறு கொடையும் கொஞ்சம் கொஞ்சமாகப் புண்ணியப் பயனை முழுமை ஆக்கும்.
சிறிய தடியால் முரசு அல்லது பேரிகையை வேகமாக அடித்தால் அதன் ஓசை அதிகபட்சம் 1 காத தூரம் அதாவது 3½ கிமீ வரைதான் கேட்கும். மேகம் இடி இடிக்கும் முழக்கத்தை அதிகபட்சம் 1 யோசனை தூரம் அதாவது 14 கிமீ வரை கேட்கலாம். ஆனால், நாடி வந்து கேட்டவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல், வேண்டியதைக் கொடுத்து உதவியவர்களை, ஞானமும் ஈகையும் மிகுந்த சான்றோர் என அறிவுடையோர் பாராட்டுவர். இத்தகைய பெரியோர்களால் பாராட்டப்படும் புகழ்ச் சொல், ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கப்பட்டுள்ள பாதாள லோகம், மண்ணுலகம் மற்றும் விண்ணுலகம் ஆகிய மூன்று உலகங்களில் வாழ்வோரும் கேட்கும் வகையில் எதிரொலிக்கும்.
11. பழவினை
பழவினை என்பது முற்பிறவிகளில் செய்த நல்வினை தீவினை பற்றிக் கூறுவதாகும். பழவினை, ஒருவர் செய்யும் புண்ணியப் பாவங்களே அடுத்து வரும் பிறப்புகளில் இன்பத்தையும், துன்பத்தையும் தவறாமல் தரும். பழவினை ‘ஊழ்வினை’ என்றும் அழைக்கப்படும். கோவலன் கொல்லப்பட்டதையும், கண்ணகி கைம்பெண் ஆனதையும் ‘ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்’ எனச் சிலப்பதிகாரத்தில் இளங்கோ அடிகள் கூறுகிறார். ஊழ் மூன்று வகைப்படும். ‘சஞ்சிதம்’ என்பது பூர்வ ஜென்மக் கர்மங்களில் அனுபவித்தது போக மீதம் இருப்பவை. ‘பிராரப்தம்’ என்பது பூர்வ ஜென்மக் கர்மங்களில் எந்தக் கர்மத்தின் பலனாக இந்த ஜென்மம் வந்ததோ, அந்தத் தேகத்தினால் அனுபவிக்க வேண்டியவை. ‘ஆகாமியம்’ என்பது இந்தத் தேகம் எடுத்த பதினான்கு வயது முதல் செய்வதோடு பூர்வ ஜென்ம கர்மங்களும் சேர்வது. ‘ஊழ்’ என்ற அதிகாரத்தில் வள்ளுவரும் இதையே விளக்குகிறார். முற்பிறவிகளில் தானம், தருமம் உள்ளிட்ட அறச் செயல்களைச் செய்வோர் அடுத்து வரும் பிறவிகளில் பல நன்மைகளைப் பெறுவர். ஏனையோர் பசி, பட்டினித் துன்பங்களை அனுபவிப்பர்.
பசுமையான புல்வெளியில் நூற்றுக் கணக்கான பசுக்கள் மேய்ந்து கொண்டிருக்கின்றன. அந்தப் பசுக் கூட்டத்தின் நடுவே இளம் கன்றைக் கொண்டு போய்விட்டால் அது மிகச் சரியாகத் தனது தாய்ப்பசுவைத் தேடிச் சென்று மடியில் பால் அருந்தும். இது அந்தக் கன்றுக்கான வல்லமையும், திறமையும் ஆகும். ஒவ்வொரு பிறவியிலும் நாம் செய்யும் நல்வினை, தீவினைகளுக்கு ஏற்ப பாவ புண்ணியங்கள் சேர்ந்து கொண்டிருக்கும். அவை அந்தந்தப் பிறவியில் அனுபவித்தது போக மிச்சம் மீதி அடுத்தப் பிறவியிலும் விடாமல் துரத்தும். உலகில் கோடிக் கணக்கான மக்கள் வசித்தாலும், சம்பந்தப்பட்டவனை மிகச் சரியாகத் தேடிக் கண்டுபிடித்துக் கர்மா சென்றடையும். தாய்ப் பசுவைச் சேய்க் கன்று எவ்வாறு ஐயமின்றித் துல்லியமாக நாடிச் செல்கிறதோ, அதுபோல் முற்பிறவிப் பாவங்கள் வரும் பிறவிகளிலும் தொடரும். முன் செய்த வினைக்குக் கன்றைப்போல் ஆற்றல் உண்டாம்.
மேனி அழகும், வசீகரிக்கும் இளமையும், பெரும் பொருளும், செல்வம் காரணமாகப் பலரும் அஞ்சத்தக்க மதிப்பும், யாருக்கும் எந்தவொரு பிறப்பிலும் நீடித்து நிலைத்து நிற்கும் தன்மை கொண்டவை அல்ல. நிலையாமைத் தத்துவத்தை, இந்த உண்மையை, பிறவிதோறும் பார்த்து வருகிறோம். இருப்பினும் எந்தவொரு பிறப்பிலேனும், ஏதேனும் ஒரு நற்செயலைக் கூடச் செய்யாதவன் பிறந்தும், வாழ்ந்தும் என்ன பயன்? இந்த உலகில் பிறக்க உடலைப் பெற்றான், வாழ்ந்தான், இறந்தான் என்பதைத் தவிர அவனால் உண்டானது என்ன? அறத்தைச் செய்யாத அவனது பிறப்பும், வாழ்நாளும், வீணானதுதான் மிச்சம். பிறவியின் பயனே நல்லன செய்தல்தான். அவ்வாறு நல்வினை ஏதும் செய்யாமல் போனால் நல்லன எதுவும் கிட்டாமல் போகும்.
விளாங்காய் பார்ப்பதற்கு உருண்டு திரண்டு திரட்சியாக இருக்கும். ஆனால் இது மனித முயற்சியினால் உண்டானது என யாரும் சொல்ல மாட்டார்கள். களாப் பழமும் கருப்பு நிறத்தில் காட்சி அளிக்கும். இதற்குக் கரிய நிறத்தையும் மனிதர்கள் எவரும் கொடுக்கவில்லை. இவற்றின் குணமும், தோற்றமும், இயல்பான தன்மைகள். இயற்கையின் படைப்புகள். செல்வம் உள்ளிட்ட வளங்களால் சீரும் சிறப்புமாக வாழ வேண்டும் என விரும்பாதார் யாரேனும் உலகில் உண்டா? எல்லோருக்கும் அந்த ஆசை உண்டு. ஆனால் சுகமும், இன்பமும், துக்கமும், துன்பமும், அவரவர் முற்பிறவியில் செய்த நல்வினை தீவினைகளுக்கு ஏற்பவே அமையும். இப்பிறவியில் அனுபவிக்கும் போகமும், சுகமான அனுபவங்களும், முற்பிறவியில் அவரவர் செய்த ஊழ்வினையால், பாவ புண்ணியங்களால் அளவு செய்யப்பட்டுள்ளன. எனவே இன்பமும், துன்பமும் முன்வினைப் பயனால் வருவதே என உணர்ந்து இப்பிறவியிலேனும் அறம் செய்வீர்.
மழை பொய்த்துப் போனால் அதைப் பெய்விக்கும் சக்தி எவருக்கும் இல்லை. அதுபோல் மழை அளவுக்கு அதிகமாகப் பொழிந்து வெள்ளமெனப் பாய்ந்தால், அதைத் தடுத்து நிறுத்தும் ஆற்றலும் யாருக்கும் கிடையாது. முற்பிறவிகளில் செய்த நல்வினை தீவினை, புண்ணியப் பாவங்களாகப் பிறவிதோறும் தொடர்ந்து கொண்டே இருக்கும். ஊழ்வினைப் பயனால் நேரும் துன்பங்களைக் குறைப்பதோ, நீக்குவதோ, இயலாத செயல். இந்த ஆற்றல் கடுந்தவம் புரிந்து பல வரங்களைப் பெற்ற முனிவருக்கும் இல்லை. வரும் துன்பங்களையும், துயரங்களையும் எப்படித் தடுத்து நிறுத்த முடியாதோ, அதுபோல், இன்பங்களுக்கும், துன்பங்களுக்கும், யாரும் தடை போட முடியாது. அவை தானாகவே சேர வேண்டிய இடத்தைச் சென்றடையும். மழை வெள்ளமெனப் பெருக்கெடுத்துப் பொழியும் போது நிறுத்தவோ, மழை பொய்த்த போது வரவழைக்கவோ எவர்க்கும் வலிமை இல்லை. அதுபோல் நல்வினை தீவினையால் வரும் இன்ப துன்பங்களையும் தடுத்து நிறுத்தும் சக்தி முனிவர்களுக்கே இல்லை என்னும்போது சாதாரண மனிதனால் முடியுமா? வினைப் பயன்களை அனுபவித்தே தீர வேண்டும்.
வாழ்க்கை யாரையும் ஒரே இடத்தில் நிறுத்தி வைத்து அழகு பார்க்காது. மேலும் கீழுமாகச் சக்கரம் போன்று சுழன்று கொண்டே இருக்கும். செல்வம், கல்வி, அதிகாரம் ஆகியவற்றால் உயர்ந்த இடத்தில் இருப்பவர் திடீரெனத் தாழ்ந்த நிலைக்குத் தள்ளப்படுவர். பனைபோல் உயர்ந்த வாழ்க்கை வாழ்ந்தவர்கள், தினைபோல் அளவு குறைந்து தாழ்ந்து, பெருமை கெட்டு, ஒளி இழந்து, அனைத்தையும் அடக்கிக் கொண்டு வாழ்வர். உயர்வு, தாழ்வு நிலைக்குக் காரணம் அவரவர் வினைப் பயனே ஆகும். முற்பிறவியில் செய்த புண்ணியங்களே நம்மை உயர் நிலையில் வைத்திருக்கும் என்பதால் நற்செயல்களில் ஈடுபட வேண்டும்.
நல்லதுக்கும் காலமில்லை, நல்லவனுக்கும் வாழ்க்கை இல்லை என்னும் புலம்பல்களை அடிக்கடி கேட்கிறோம். பல நூல்கள் கற்றறிந்து பிறப்பின் பயன் உணர்ந்த சான்றோர் அற்ப ஆயுளில் இறப்பதையும், வாழ்வின் பொருளை உணராத கல்வி கல்லாத மூடர்கள் நீண்ட காலம் வாழ்வதையும் கண்கூடாகப் பார்க்கிறோம். இதற்கான காரணத்தை ஆராய்ந்து பார்த்தால் உண்மை தெளிவாகப் புரியும். யமன் பாசக் கயிற்றோடு யார் யார் உயிரைப் பறிக்கலாம் என வலம் வருகிறான். நல்லறிவு எனச் சொல்லப்படும் ‘சாரம்’ கல்வி கற்காத அறிவற்ற மூடர்களின் உள்ளத்தில் இல்லை. எனவே யமன் அவர்களை வெறும் ‘சக்கை’யாகக் கருதி விட்டுவிடுகிறான். ஆனால் கற்றறிந்த சான்றோர் பெருமக்களின் உள்ளங்கள் நல்லறிவு என்னும் சாரத்தைக் கிரகித்துக் கொள்கிறது. எனவேதான் யமன் ‘சாரம்’ நிறைந்த கற்றோர் உயிரை இளம் வயதில் பறித்துக் கொண்டு, ‘சக்கை’ நிறைந்த மூடர்களை மண்ணில் நீடு வாழ வைக்கிறான் போலும்.
அடம்பங் கொடியின் மலர்களை அன்னப் பறவைகள் மூக்கால் கொத்திக் கிழித்து விளையாடும். இத்தகைய ரம்மியமான இயற்கை எழில் கொஞ்சும் இடத்தையும், அலைகள் தவழும் குளிர்ந்த கரைகளையும் கொண்ட நாட்டின் தலைவனே கேட்பாயாக! ‘வறுமைத் துன்பம் மிக்க மனமுடையோராகச் சிலர், எல்லோரும் தம்மைக் காணும்படியாகச் செல்வந்தர்களின் வீட்டு வாசலில் சென்று பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்படுவர். இத்தகைய வருந்தும் நிலைக்கு, இழி நிலைக்கு, இறந்துபடாமல் இரந்து வாழ்வதற்குக் காரணம் முற்பிறப்பில் செய்த தீவினையே காரணம். வேறொன்றும் இல்லை. எனவே இப்பிறவியிலேனும் அறச் செயல்கள் செய்து வரும் பிறவிக்குப் புண்ணியத்தைத் தேடிக் கொள்வீர்.
காற்று நில்லாமல் வேகமாக வீசுகிறது. தேனைச் சொரிகின்ற நெய்தல் நிலப் பூக்களின் வாசனையைப் பரப்புகிறது. பெரிய கடலின் குளிர்ந்த கரையைக் கொண்ட நாட்டின் மன்னா! அறிய வேண்டிய நூல்கள் அனைத்தையும் குறையின்றிக் கற்றறிந்தவர். எதையும் அறியாதவரும் அல்லர். இருப்பினும், அறிதற்கு உரியனவற்றை அறிந்திருந்தும், அடுத்தவர் நிந்தனைக்கும், பழிப்புக்கும் உள்ளாகும் வகையில் சில தீய செயல்களைச் செய்வார். இதற்குக் காரணம் முற்பிறப்பில் செய்த தீவினைப் பயனே அன்றி வேறொன்றும் இல்லை. நல்லது கெட்டது கற்றுணர்ந்த அறிவுடையோராகவே இருந்தாலும், தெரியாமல் சில தீய செயல்களைச் செய்வதற்கு, முற்பிறவியில் செய்த தீவினையே அடிப்படை. நல்வினைக்கு நல்வினைபோல், தீவினைக்குத் தீவினையே காரணம். நல்லறிவு கெடுவதற்கும் தீவினையே உறுதுணையாக உள்ளது.
இந்த உலகம் பெரும் கடலால் சூழப்பட்டுள்ளது. இந்தப் பூமியில் வாழும் மக்கள் யாராக இருப்பினும், எத்தன்மை கொண்டவராக இருப்பினும், சின்னஞ்சிறு அளவு தீய செயலையும் அதனால் விளையும் துன்பத்தையும் விரும்ப மாட்டார்கள். நற்செயலையும் அதன் பொருட்டு வரும் நன்மை மற்றும் இன்பத்தின் மீதே ஆசை கொள்வர். ஆனால், நம் விருப்பம் போலவா அனைத்தும் நடக்கின்றன? நிச்சயமாக இல்லை. நினைப்பது ஒன்று நடப்பது வேறு என்பதே யதார்த்த நிலை. எப்போதும் நல்லதே நடக்க வேண்டும் என நாம் எண்ணுவது இயல்பு. ஆனால், நன்மையும், தீமையும், முன்வினைப் பயனுக்கு ஏற்பவே நடக்கும் என்பதே நிஜம். விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், ஊழ்வினைப் பயன் துரத்திக் கொண்டே இருக்கும். தீண்டாமல் விடாது.
கருவில் உயிர் உருவாகும்போதே முற்பிறப்பின் நல்வினை தீவினையின் புண்ணியப் பாவங்கள் விதிக்கப்படுகின்றன. எனவே யாரும் தப்ப முடியாது. அவரவர் விதிப்படியே இன்ப துன்பங்களை அனுபவித்தே தீர வேண்டும். இவை அளவில் குறையவும் மாட்டா. அதிகமாக வளரவும் மாட்டா. ‘இன்பமே வா! வா!’ என அன்புடன் அழைத்தாலும் வராது. ‘துன்பமே என்னை நெருங்காதே’ எனப் போ போவென விரட்டினாலும் விலகாது. இன்பமோ, துன்பமோ, முறை தவறியும் வாராது. வர வேண்டிய நேரத்தில், சரியான அளவில், வந்தே தீரும். துன்பம் நிகழும் காலத்தில் ஊன்றுகோலாக எந்த உதவியும் செய்யாது. ஆனால் உதவி செய்ய வேண்டிய காலம் வரும்போது அழைக்காமலேயே ஊன்றுகோலாகத் தாங்கிப் பிடிக்கும். சுமைதாங்கியாக நமது பாரத்தைக் குறைக்கும். எனவே, துன்பம் வரும் போது கவலைப்பட்டும், வருந்தியும் ஆவது ஏதுமில்லை. அழுது புலம்புவதாலும் எந்தப் பயனும் இல்லை.
(தொடரும்)
பாடல் இடம் பெற்றால் இன்னும் மெருகு கூட்டும்