Skip to content
Home » அறம் உரைத்தல் #10 – நாலடியார் – இல்லற இயல் (12-13)

அறம் உரைத்தல் #10 – நாலடியார் – இல்லற இயல் (12-13)

12. மெய்ம்மை

மெய்ம்மை என்பது உண்மையை உணர்த்துவது. அதாவது பொருள்களின் இயற்கையான தன்மையை, உலக இயல்பை எடுத்துக் கூறுவது. இதனை அறிந்து தெளியும் அறிவே உண்மையான அறிவுடைமை ஆகும். மயக்க உணர்வின் காரணமாகப் பொருள்களின் தன்மைகளைத் தவறாக உணர்ந்தால், அதனால் விளையும் தீமைகள் பலவாகும். மனிதன் பல்வகைப் பொருள்களுடன் வாழ வேண்டியவன். அவற்றின் உண்மை இயல்புகளை அறிந்து அவற்றைப் பயன்படுத்துதல் அவசியம். எனவே மெய்ம்மை இல்லறவியலில் அமைக்கப்பட்டது. பொருள்களின் தன்மையை உள்ளவாறு உணர்ந்து தெளியும் ஆற்றல் ஊழ்வினை காரணமாகவே வருவதால், பழவினைக்குப் பின்னும் வைக்கப்பட்டது.

வரிசையாகப் பல வளையல்களை அணிந்துள்ளவளே! இல்லை என நம்மிடம் யாசிக்கும்போது இல்லை என மறுப்பது அறம் ஆகாது. ஆனால் கொடுப்பதற்குப் பொருள் வேண்டுமே? தருவதற்கு இயலாத பொருளை நம்மிடம் யாசிக்கும்போது இல்லை என்று சொல்லுதல் எவர்க்கும் குற்றம் ஆகாது. இது உலகத்தாரின் இயல்பு என்பதால் எந்தப் பழியும் பாவமும் வந்து சேராது. ஆனால் யாசிக்கும் பொருளை நம்மால் கொடுக்க முடியுமா முடியாதா என்பதை அப்போதே உடனுக்குடன் சொல்ல வேண்டியது பண்பாகும். கொடுப்பவனைப் போல் நடிப்பதோ, இரப்பவன் மனத்தில் ஆசையைத் தூண்டிவிடுவதோ தவறாகும். இன்று தருகிறேன், நாளை தருகிறேன் என அலைக்கழிப்பதும், நெடுங்காலம் கழித்து யாசிப்பவன் கேட்கும்போது ஏதும் தராமல் இல்லை எனச் சொல்வதும், பொய் உரைத்தலும், ஏய்த்தலும், கொடுமையிலும் கொடுமையாகும். செய்த உதவியை மறந்த நன்றி கெட்டதனத்தைக் காட்டிலும், வள்ளலைப்போல் நடிப்பதும், நம்ப வைத்துக் கழுத்தறுப்பதும், தருவதாக வாக்களித்து ஏமாற்றுதலும் பெரும் குற்றமாகும்.

வாய்மை உள்ளிட்ட உயர்ந்த குணம் கொண்ட தகுதியுள்ள யோக்கியரும் பெரியோரும், பொய்மை உள்ளிட்ட தாழ்ந்த குணம் கொண்ட தகுதியற்ற அயோக்கியரும் சிறியோரும், எப்போதும், எந்தக் காலத்திலும், தங்களது இயல்பான இயற்கை குணங்களிலிருந்து மாறுபட மாட்டார்கள். சர்க்கரையையும், கரும்பையும் நல்லோர், தீயோர், உயர்ந்தோர் தாழ்ந்தோர் யார் தின்றாலும் இனிப்பாகவே இருக்கும். ஆனால் வேப்பங்காயைத் தேவர்களே உண்டாலும் கசக்கத்தான் செய்யும். எந்தக் காலத்திலும் வேம்பு தித்திக்காது. சர்க்கரைக்கு இனிப்பும், வேம்புக்குக் கசப்பும் இயற்கைக் குணங்கள். இவை எந்தக் காலத்திலும் யாருக்காகவும் மாறவே மாறாது. அதுபோல், எந்தச் சூழலிலும், அறிவு ஒழுக்கங்களில் சிறந்த சான்றோர் நல்ல குணங்களையும், தகுதியற்ற அறிவிலிகள் கீழ்மைப் பண்புகளையும் கொண்டிருப்பர்.

குளிர்ந்த மலைகளைக் கொண்ட நாட்டின் தலைவனே கேள்! செல்வம், செல்வாக்கு, வசதி இருக்கும் காலத்தில் ஒருவனைச் சுற்றி சொந்தம், பந்தம், உற்றார், உறவினர் எனப் பலர் கூடி இருப்பார். கூப்பிட்ட குரலுக்கு ஓடி வரவும், ஊழியம் செய்யவும் அநேகம் இருப்பர். விலகிச் சென்றவர்கள் கூட உறவு கொண்டாடி வருவர். இந்த உறவினர் எண்ணிக்கை வானத்தில் உள்ள நட்சத்திரங்களை விடவும் அதிகமிருக்கும் எனில் மிகையல்ல. ஆனால் இவை எதுவும் நிலையானது அல்ல. காலச் சக்கரம் சுழன்று கொண்டே இருக்கும். முன் செய்த தீவினை காரணமாகப் பணம், பட்டம், பதவி உள்ளிட்ட அனைத்தும் கைவிட்டுச் செல்லும் காலம் வரலாம். வறிய நிலைக்கும், துன்பத்துக்கும் ஆளாக நேரும்போது, சுற்றி இருந்த பெரும்பான்மை நட்பும், உறவும், சொந்த பந்தமும் கண் இமைக்கும் நேரத்தில் மறைந்துவிடும். நட்பிலும், தொடர்பிலும் உள்ளோம் என்று சொல்லிக் கொள்ளவும், உதவி செய்யவும் வெகு சிலரே இருப்பர். இருப்போர்க்கு எல்லாம் சொந்தம். இல்லார்க்கு நிழலும் சொந்தமில்லை. எனவே, செல்வமும், செல்வாக்கும் உள்ளபோது பொய்யுறவு காட்டித் திடீரென வந்து ஒட்டிக் கொள்வோர் மீது சற்று எச்சரிக்கையுடனே இருக்க வேண்டும்.

குற்றமற்ற இந்த உலகத்தில் அறம், பொருள் மற்றும் இன்பம் ஆகிய மூன்று உறுதிப் பொருள்களும் போற்றத் தக்கவை ஆகும். இம்மை – மறுமை – வீடு ஆகிய மூன்றையும் தருவதால் அறம் முதலிலும், இம்மை – மறுமை ஆகிய இரண்டைத் தருவதால் பொருள் நடுவிலும், இம்மை ஒன்றை மட்டுமே தருவதால் இன்பம் இறுதியில் வைக்கப்பட்டது. இம்மூன்றினுள், நடுவில் சொல்லப்பட்ட பொருளை ஒருவன் அடைந்தால், அவனுக்கு முதலில் சொல்லப்பட்ட அறத்தையும், கடைசியில் சொல்லப்பட்ட இன்பத்தையும் அடைவான்.. இடையில் கூறப்பட்ட பொருளை அடையாதவனோ, கொல்லன் உலைக்களத்தில் இட்டுக் காய்ச்சினால் விளையும் துன்பத்தைப் போன்ற துயரத்தைப் பெறுவான். செல்வம் மற்றும் வறுமையின் இயற்கைத் தன்மை கூறப்படுகிறது. செல்வம் இருந்தால் தான தருமங்கள் செய்து இம்மையில் இன்பங்களை அனுபவிக்கலாம். செல்வத்தைப் பெறாமல் போனால் இரந்து வாழ்ந்து துன்பங்களில் உழல்வான்.

இளம் கன்றாகவே இருந்தாலும், உயர் சாதிப் பசுவின் கன்றாக இருப்பின், சந்தையில் நல்ல விலை போகும். அதுபோல், கல்வி அறிவு இல்லாதவராக இருப்பினும் செல்வமும், செல்வாக்கும் பெற்றவராக இருந்தால், அவருடைய சொல்லை அனைவரும் ஏற்பார்கள். முட்டாள் என்றாலும், அவரிடமிருந்து பலன் பெறலாம் எனக் கருதி அவர் கூறுவதை அப்படியே ஒப்புக் கொள்வர். வயலில் ஈரம் அதிகம் இருந்தால்தான் ஆழ உழ முடியும். ஈரம் குறைவாக இருப்பின் கலப்பையில் உள்ள கொழு (இரும்பு ஆணி) நிலத்தில் ஊடுருவிச் செல்லாமல் மேலேயே நிற்கும். அதனால் எந்தப் பயனும் இல்லை. அதுபோல் செல்வம் இல்லாத வறியவர்களின் சொற்கள் யாருடைய உள்ளத்திலும் ஆழமாகப் பதியாது. அவர்களுடைய சொற்கள் அறிவார்ந்தவையாக இருந்தாலும் மேலோட்டமாக ஒப்புக்குத் தலையை அசைப்பார்களே தவிர, ஆத்மார்த்தமாக ஏற்க மாட்டார்கள். சான்றோர் சொல்லில் உண்மை இருந்தாலும், ஏழையாக இருந்தால் அம்பலம் ஏறாது.

அகன்ற விசாலமான பெருமை உடைய கண்களைக் கொண்டவளே கேள்! அடக்கம் இல்லாத தன்மை அற்றவர்கள், மெய்ஞானத்தை உணர்த்தும் தத்துவ நூல்களை என்றும் எப்போதும் தொடர்ந்து படித்து வந்தாலும் அடங்கி ஒழுக மாட்டார்கள். இயற்கை அறிவினால் அடங்காத அறிவிலிகள், செயற்கை அறிவினால் அடங்க மாட்டார்கள். பேய்ச்சுரைக்காய் இயற்கையிலேயே கசக்கும் தன்மை கொண்டதாம். உப்பு, நெய், பால், தயிர், பெருங்காயம் ஆகியவற்றைப் பேய்ச்சுரக்காயுடன் சேர்த்துச் சமைத்தாலும் அதன் இயற்கை கசப்புத் தன்மையை எந்நாளும் மாற்றவே முடியாது. அதுபோல் அறிவிலிகள் நல்லறிவையும் ஞானத்தையும் தரும் பற்பல நூல்களைக் கற்றாலும், அடங்காமை என்னும் அவர்களின் இயற்கை குணத்தை மாற்றுவது இயலாத செயலாகும்.

புலால் துர்நாற்றத்தை விரட்டி அடிக்கும் புன்னை மரங்களின் பெருமை மிக்க நறுமணம் வீசும் மலர்ச் சோலைகளையும், கடற்கரையையும் கொண்ட நாட்டின் அரசனே! எந்தவொரு காரணமும் இன்றி நம்மை இகழ்வாரை, நிந்திப்பவர்களை நாம் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருத்தல் கூடாது. சற்றும் தாமதிக்காமல், உடனடியாக, நம்மைக் கேவலப்படுத்தியவரை அங்கேயே அப்போதே பதிலுக்குக் கடிந்து பேசிப் புறக்கணிக்க வேண்டும். இதில் எந்த வகையான தயவும் தாட்சண்யமும் கூடாது. நம் முற்பிறவி வினைகளுக்கு ஏற்பப் புண்ணியமும் பாவமும் தானாகவே விதிப்படி வந்து சேரும். நம்மை ஒருவர் பழிக்கும்போது, பதிலுக்கு நாமும் பழித்தால், என்ன தீங்கு விளையுமோ என அஞ்சுதல் கூடாது. அவரைக் கடிந்து கொள்வதே பழித்தவர் வாயை அடக்கும் ஒரே வழியாகும்.

பசுக்கள் வெவ்வேறு வகைகளையும், பிரிவுகளையும், உருவங்களையும், நிறங்களையும் கொண்டவை. இருப்பினும் அவற்றின் பால் அனைத்தும் ஒரே வெண்மை நிறத்தில் இருக்குமே தவிர வெவ்வேறு வண்ணங்களில் காணப்படாது. தோற்றங்களிலும் மாறுபடாது. அதேபோல் இந்த உலகில் ஒழுக்கங்களை ஆதரிக்கும் அறநெறிகள் பலப்பல. அறநெறிகளால் செய்யப்படும் தருமங்களும் ஒரே தன்மையைக் கொண்டவை. இவற்றால் விளையும் பயன் நற்கதி ஒன்றே ஆகும். பசுக்கள் வேறு வேறு இனத்தைச் சேர்ந்தவையாக இருப்பினும் அவற்றின் பால் வெண்மையாக இருப்பதுபோல், தர்மங்கள் பலப்பலவாக இருப்பினும் அவற்றால் கிடைக்கும் புண்ணியம் ஒரே தன்மையைக் கொண்டிருக்கும்.

உலகத்தில் வாழும் மனிதர்களின் வாழ்க்கையை ஆராய்ந்து பார்க்கும்போது ஓர் உண்மையைத் தெரிந்து கொள்ளலாம். நிந்தையும், பழிச்சொல்லும் இல்லாதவர் உலகில் யாரேனும் உண்டா? இல்லை. உபாயமோ, தந்திரமோ செய்து மண்ணில் வாழாதவர் யாராவது உளரா? இல்லை. வாழ்க்கையில் துன்பமோ, துயரமோ அடையாமல் யாரேனும் இருக்கிறார்களா? இல்லை. வாழ்நாள் முழுவதும் செல்வத்தை அனுபவித்துச் செழிப்பிலே வாழ்ந்தோரும் உள்ளார்களா? இல்லை. பூமியில் எல்லோரும் ஏதாவதொரு நிந்தையை அடைதலும், உபாயத்தால் வாழ்தலும், துன்பத்தை அடைதலும், செல்வத்தை இழத்தலும், இயற்கை நியதி. முன்வினைப் பயன். யாராலும் மாற்ற முடியாது. அனுபவித்தே ஆக வேண்டும்.

நூல்கள் அனைத்தையும், எல்லா வகையிலும் ஆராய்ந்து, ஆலோசித்தால் ஒரு விஷயம் புலப்படும். யமன் பாசக்கயிறு கொண்டு நம்மை இழுத்துச் செல்லும் காலம், நாம் இறந்து போகும் அந்தத் தருணம், நம்முடன் வருபவை செய்த நல்வினை தீவினைகளே. வகை வகையான சுவையான உணவுகள், ஆரோக்கியமான ஊட்டச் சத்துக்கள், அலங்கார ஆடைகள், அணிகலன்கள், வாசனைத் திரவியங்கள் ஆகியவை மூலம் போற்றிப் பாதுகாத்த அழகான உடம்பு நம்முடன் வராது. பாடுபட்டுச் சேர்ந்த செல்வமும் வராது. கூற்றுவன் உயிரைப் பறித்துக் கொண்டு செல்லும் போதுதான், ஊட்டச் சத்துக்களாலும், வாசனைத் திரவியங்களாலும், பேணிய இந்த உடலால் எந்தப் பயனும் இல்லை என்னும் உண்மை தெரியவரும். உயிர் பிரியும்போது உடலே வாராது பயனற்றுப் போகும் எனில் மற்ற எவையும் வாரா, பயன் தாரா, என்பது தெளிவு.

13. தீவினை அச்சம்

பொருள்களின் மெய்ம்மை உணர்வதன் அவசியம் குறித்து முந்தைய அதிகாரத்தில் பார்த்தோம். அவ்வாறு ஒவ்வொரு பொருளையும் நுணுக்கமாக ஆராய்ந்து உண்மையைக் காணும்போது அவற்றுள் நல்லன எவை தீயவை எவை என்பதைப் பகுத்தறிவதும் முக்கியமாகும். மெய் உணர்வின் பயனால், வினைகளில் நன்மை விளைவிப்பன எவை என்பதையும், தீமை தருவன எவை என்பதையும் அறியலாம். நன்மை தீமைகளைப் பகுத்தறிந்து, ஊசலாடும் மனத்தை ஒருமுகப்படுத்தி, தீமைகளை நீக்கி, நன்மைகளில் கவனம் செலுத்த வேண்டும். தீவினைப் பயனால் இந்தப் பிறவியில் மட்டுமின்றி அடுத்தடுத்து வரும் பிறவிகளிலும் பழவினை தொடர்ந்து நம்மைப் பற்றிக் கொண்டே வரும். எனவே, பிறவிதோறும் நம்மை வருத்தி வாட்டியெடுக்கும் தீவினையைச் செய்யாதிருக்க வேண்டும். தீவினை செய்யும் முனைப்பு சில நேரங்களில் ஏற்பட்டாலும், அதன் பின்விளைவுகளுக்கு அஞ்சி நீக்க வேண்டும்.

பிற உயிர்களைக் கொன்று அவற்றின் இறைச்சியை உண்பது கண்டிக்கத்தக்கது. புலால் உண்ணும் தீவினைக்கு அஞ்சுதல் வேண்டும். இல்லறம் என்னும் பெருங்கடலில் துன்பங்களில் கிடந்து உழல்வோர் பலர். இல்லறத்தை விடுத்து உயிர்க்கு உறுதி தரும் துறவறத்தை மேற்கொள்ளாமல், சம்சார சாகரத்தில் வீழ்ந்து துயரங்களை அனுபவிக்கும் மனிதர்களின் பிணங்களையே, சுடுகாடுகள் மிகுதியாகக் கொண்டிருக்கின்றன. ஆனால், இத்தகைய மனிதர்களுடைய பிணங்களைக் கொண்ட சுடுகாட்டை விடவும் பன்மடங்கு இழிந்த இடுகாடு ஒன்றுண்டு. அது மிருகங்கள், பறவைகள் ஆகியவற்றைக் கொன்று இறைச்சியை உண்டு பசியாறும் நல்லறிவு இல்லாத அறிவற்ற அற்பர்களின் ‘வயிறு’ ஆகும். புலாலைப் புசிப்பவன் வயிறு சுடுகாட்டை விடவும் இழிவானதாகும். தீவினைகளுள் புலால் தலையாய தீவினை என்பதால் நல்லறிவாளர் அதை விலக்க வேண்டும்.

வண்டினங்கள் ஆர்ப்பரிக்கும் அழகிய காடு. அந்த காட்டில், இயற்கை எழில் கொஞ்சும் வனத்தில், மிருகங்களும், பறவைகளும், இன்ன பிற உயிரினங்களும் மகிழ்ந்து கூடிக்குலவி வாழ்ந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இறைச்சியை உண்டு வாழும் மனிதன் காட்டிலுள்ள கௌதாரியையும், காடையையும், பிடித்துக் கூண்டில் அடைத்து வளர்க்கிறான். அவற்றின் புலாலை விற்கிறான். பறவைகள் விலங்குகள் ஆகியவற்றின் இறைச்சியை உண்பது மட்டுமின்றி அவற்றைப் பிடித்துக் கூண்டில் அடைப்பதும், விற்பதும், தீவினை ஆகும். இத்தீவினைப் பயனை அடுத்த பிறவியில் அனுபவித்தே தீர வேண்டும். பறவைகள், விலங்குகளின் இறைச்சியை உண்போரும், கூண்டில் அடைத்து வளர்ப்போரும், விற்போரும், அடுத்த பிறவியில் பகைவர்களின் அடிமைகளாக வாழ்வர். அவர்களது கால்களில் கட்டப்பட்ட இரும்புச் சங்கிலிகள் ஓசை ஒலித்துக் கொண்டிருக்கும். வறண்ட நிலங்களிலும், செழிப்பான வயல்களிலும் கடுமையான பணிகளைச் செய்யும் இழிநிலைக்குத் தள்ளப்படுவர்.

பொதுவாகப் பறவைகள் விலங்குகள் இறைச்சியை உண்பதால் உண்டாகும் தீவினை பற்றிப் பார்த்தோம். இப்பாடல் ஊர்ந்து செல்லும் உயிரினமான நண்டைப் பிடித்து அவற்றில் கால்களை ஒடித்துச் சுட்டுச் சாப்பிடுவதால் உண்டாகும் தீவினை பற்றி விளக்குகிறது. முந்தைய பிறவியில் நண்டைச் சாப்பிட விரும்பி அதன் கால்களை ஒடித்த பாவம் இந்தப் பிறவியில் தொடர்கிறது. உள்ளங்கை மட்டும் சங்குமணியைப் போல வெண்ணிறமாய் இருக்கும். விரல்கள் அனைத்தும் அழுக, வெண்குஷ்டத்தால், தொழுநோயால் துன்பப்படுவர். இம்மையில், பறவைகள், விலங்குகள் இறைச்சியை உண்டால் மறுமையில் பெருநோய் வரும்.

நெய் உட்கொண்டால் பல வகைகளிலும் உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும் இதமான மற்றும் மென்மையான ஊட்டச் சத்தாகும். ஆனால், அதே நெய் நெருப்போடு சேரும் காலத்தில், அதாவது, தீயிலிட்டுச் சூடாக்கிய பின்பு, உடலில் பட்டால் சருமம் வெந்துவிடும். நெருப்பில் வாட்டுவதற்கு முன்பு உண்ண இதமாக இருந்த நெய், தீயோடு சேர்ந்த சூடான பிறகு குடலைச் சுட்டெரித்துத் துன்பப்படுத்தும். அதுபோல் நல்லொழுக்கங்களில் சிறந்து விளங்கும் யோக்கியர்களுக்கும், பாதகச் செயல்களைச் செய்யும் அயோக்கியர்களுடன், முன்வினைப் பயன் காரணமாக, சகவாசம் வைத்துக் கொள்ளும் நிலை ஏற்படும். அவ்வாறு தீயோருடன் சேரும் பட்சத்தில், தவறான சேர்க்கை காரணமாக, நல்லோரும் ஒழுக்கம் கெட்டுக் கொடிய தொழில்களைச் செய்வர். உடலுக்கு இதமான நெய் நெருப்பில் காய்ந்தால் உடலை எரிப்பதுபோல், நல்லன செய்யும் சான்றோர், தீயோருடன் சேர்ந்தால் ஒழுக்கமற்ற செயல்களைச் செய்வர். எனவே தீவினைக்கு அஞ்சுவது மட்டுமின்றித் தீயவரோடு பழகவும் அஞ்ச வேண்டும்.

பௌர்ணமியைத் தொடரும் தேய்பிறை நாள்களில் வானத்தில் தவழும் சந்திரன் அளவில் குறையத் தொடங்கும். அமாவாசைக்குப் பிந்திய வளர்பிறை நாள்களில் விண்ணில் நீந்தும் நிலவு அளவில் வளர ஆரம்பிக்கும். அதுபோலத்தான் பெரியோர் நட்பும். அறிவில் சிறந்த பெரியோர்களுடனான நட்பு இளம் பிறையைப்போல் தொடக்கத்தில் சிறியதாக இருந்தாலும் வளர்பிறைபோல் அனுதினமும் வளர்ந்து இறுதியில் முழுநிலவாய் ஒளி வீசும். ஆனால் சிறியோருடனான நட்பு ஆரம்பத்தில் பௌர்ணமி நிலவுபோல் பெரிதாகத் தோன்றினாலும், நாள்கள் செல்லச் செல்லத் தேய்பிறையாகக் குறையத் தொடங்கி கடைசியில் மறைந்தே போகும். பெரியோர் நட்பு வளர்பிறைக்கும், சிறியோர் நட்பு தேய்பிறைக்கும் உதாரணமாகும். எனவே இருவரது நட்பையும் உணர்ந்து சிறியாருடன் நட்பு கொள்ள அஞ்சுதல் நலமாகும்.

சிலரை, எல்லா நற்குணங்களும் நிறைந்த சான்றோர் என மதித்து அவர்களுடன் நட்பு கொள்கிறோம். அவர் மீது நேசமும், பாசமும் வைக்கிறோம். ஆத்மார்த்தமாகப் பழகுகிறோம். ஆனால் காலப்போக்கில் நாம் நட்புப் பாராட்டிச் சிநேகித்தவர்களிடம், எதிர்பார்த்த நற்குணங்கள் இல்லை எனத் தெரிய வருகிறது. ஆராயாமல் கொண்ட நட்பு நிச்சயம் வருத்தத்தையும் துன்பத்தையும் தரும். அவற்றுக்கான பலன்களை அனுபவித்தே தீர வேண்டும். யோசிக்காமல் சிநேகம் கொண்டவனே, இதனால் வரும் தீமை பற்றிச் சொல்கிறேன் கேள்! உன் நிலை இப்போது எப்படி இருக்கிறது என்பதையும் கூறுகிறேன் கேள்! அழகான சிமிழ் அல்லது செப்பு ஒருவன் கண்ணில் படுகிறது. அதற்குள் சந்தனம் உள்ளிட்ட வாசனைத் திரவியங்கள் இருக்கும் என்ற ஆவலில் மேல் மூடியைத் திறந்து பார்த்தானாம். அதற்குள் நறுமண வாசம் வீசும் பொருளைக் காண்பதற்குப் பதிலாகப் பாம்பைப் பார்த்தால் அவன் நிலைமை எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது உன் நிலைமை. நட்பை எதிர்பார்த்த உனக்குத் துரோகமே மிஞ்சியது. எனவே ஒருவருடன் பழகுவதற்கு முன் நன்கு ஆராய்ந்த பின்பே நட்பு கொள்ள வேண்டும்.

மலைச்சாரல்களில் பளபளவென ஒளிரும் இரத்தினங்களும், நவமணிகள் நிலைபெற்று நிறைந்திருக்கும் நாட்டின் அரசனே கேட்பாயாக! ஒருவருடைய உள்ளத்தில், மனத்தில், என்ன இருக்கிறது என்பதை ஆராய்ந்து அறியும் வல்லமை இந்த உலகில் யாருக்குமே இல்லை. மனிதன் ஒரு வித்தியாசமான படைப்பு. அவன் எண்ணமும் செயலும் வேறு வேறாக உள்ளன. மனமும், செயலும் ஒன்றுபட்டு இல்லாமல், மாறுபட்டுக் கிடக்கின்றன. எனவே ஒருவரது உள்ளம் இத்தன்மையைக் கொண்டது என அவரது செய்கை மூலம் முடிவுக்கு வர இயலாது. பல நாள்கள், பல வழிகளில், ஆராய்ந்த பிறகே ஒருவருடன் நட்பு கொள்ள வேண்டும். மனத்தில் நினைத்தபடி, சொன்னபடி, செய்யாமல், வஞ்சனை புரிபவருடன் நட்பு பாராட்ட அஞ்ச வேண்டும். இல்லையெனில் சிறியோர் தீய குணம், சான்றோர் நற்குணத்தையும் கெடுத்து விடும்.

சேற்றை அலசிக் கழுவுகின்ற தெளிந்த தன்மையுடன் கூடிய அருவிகளைக் கொண்ட நீர் வளம் மிக்க அழகிய மலை நாட்டு அரசனே! ஒருவருடனான நட்பு மனத்தினாலும், உள்ளத்தினாலும், ஆத்மார்த்தமாகவும், ஆழமாகவும், இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் கிடைக்கும் பயனுக்கு ஏற்பப் பழகும் நட்பு பெரும் குற்றமாகும். உண்மையான அன்பு கொண்டவர் என நம்பும் வகையில், உறுதியான செயல்களைச் செய்து வஞ்சனையாக உறவு கொள்வோரும் உண்டு. மனத்தால் நட்பு கொள்ளாமல், கள்ளத்தனமாக அன்பு செய்பவரின் நட்பு, மனத்திற்கு வேதனை தரும் குற்றமாகவே கருதப்படும். போலியான நட்பு ஏமாற்றத்தையே தரும். எனவே, நுனிப்புல் மேய்வதுபோல், மேலோட்டமாகச் செய்யும் அன்புக்கு அஞ்சுதல் வேண்டும்.

கடுமையான போர் நடக்கிறது. எதிரியைக் கொல்ல உருவிய பிரகாசமான கூரிய வாள், யாரை அழிக்க நினைத்தோமோ அந்தப் பகைவனின் கைகளில் தவறிக் கிடைத்து விட்டால் என்னவாகும்? அழிய வேண்டிய பகைவன் தப்பிப்பதுடன், நமது ஊக்கமும், வலிமையும் குறைந்து பலவீனமாகி விடும். இது இப்பிறவியில் மறுக்க முடியாத உண்மையாகும். ஆனால் அறிவற்ற மூடர்களுக்குச் செய்யும் உபகாரம், இப்பிறவியில் மட்டுமின்றி அடுத்த பிறவியிலும் நம்மை வருத்தி வாட்டி எடுக்கும். பகைவர் கைகளில் கிடைக்கும் வாளால், இம்மையில் உயிர் பிரிந்தாலும் மறுமையில் வீர சுவர்க்கம் கிடைக்கும். ஆனால் மூடர்களுக்குச் செய்யும் உதவி, இம்மையில் பழியையும், மறுமையில் பாவத்தையும் தருவதால், அவர்களிடமிருந்து விலகியிருப்பது நலம். எனவே பகைவர் கைகளில் கிடைக்கும் வாளினால் ஏற்படும் தீமையை விடவும், அறிவிலார்க்குச் செய்யும் உபகாரத்தால் உண்டாகும் தீமை அதிகம் என்பதால் அஞ்ச வேண்டும்.

நெஞ்சமே சொல்வதைக் கேள்! இல்லற வாழ்வில் வீழ்ந்து கிடப்பவனுக்கு மனைவி குழந்தைகள் ஆகியோர் மீதுள்ள பந்த பாசத்திலிருந்து எளிதில் விடுபட முடியாது. மனைவி மீது கொண்டுள்ள அன்பையும், காதலையும் துறக்க இயலாது. பெற்ற குழந்தைகளின் எதிர்காலம் செழிக்க, அவர்களுக்காகச் சொத்து சேர்த்து வைக்க வேண்டும் என்ற ஏக்கத்தையும் விலக்க முடியாது. கிடைத்திருப்பது ஒரேயொரு வாழ்க்கைதான். எத்தனை நாள் வாழப் போகிறோம் என்பதும் தெரியாது. சம்சாரச் சாகரத்தில் உழன்று, மனைவி மக்கள் மீது அன்பைப் பொழிந்து, அவர்களுக்காக ஏங்கி வாழ்நாளை வீணடித்து, இறுதியில் மரணத்தைத் தழுவுவதைத் தவிர வேறெந்தப் பயனும் இப்பிறவியில் விளையப் போவதில்லை. எனவே, இல்லறத்தின் மீதான பற்றை விடு. மனைவி மீதான காதலை ஒழி. குழந்தைகள் மீதான பாசத்தைத் துற. உடலோடு கூடி சிறிது காலமே இந்த உயிர் தங்கப் போகிறது. வாழும் குறைந்த ஆயுள் காலத்திலேனும், இம்மையின் பயனை அடையச் சிறிதளவே ஆயினும், அறத்தைச் செய்வாயாக! பிறவிதோறும் உடன் வரும் அறத்தைத் தவிர, வேறு துணை மனிதர்க்கு இல்லை.

இல்லறவியல் – அறத்துப்பால் முற்றும்

(தொடரும்)

பகிர:
nv-author-image

ஜனனி ரமேஷ்

எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். ‘திருவள்ளுவர்’, ‘தமிழ் அறிஞர்கள்’ உள்ளிட்ட நூல்களும் ‘ஔரங்கசீப்’, ‘தேசத் தந்தைகள்’ உள்ளிட்ட மொழியாக்கங்களும் வெளிவந்துள்ளன. கட்டுரைகளும் எழுதிவருகிறார். விருதுகள் பெற்றவர். தொடர்புக்கு : writerjhananiramesh@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *