Skip to content
Home » அறம் உரைத்தல் #11 – நாலடியார் – அரசு இயல் (14-15)

அறம் உரைத்தல் #11 – நாலடியார் – அரசு இயல் (14-15)

அறம் உரைத்தல்

பொருட்பால்

தனிமனிதன் அறநெறியிலே நின்று ஒழுகுதல் வேண்டுமென அறத்துப்பால் வலியுறுத்தக் கண்டோம். அத்தகைய அறநெறியின் வழிப்பட்டு வரும் பொருளினைப் பற்றிய கருத்துகளைச் சொல்லி, பொருளியல் வாழ்வை இந்தப் பொருட்பால் அதிகாரம் விளக்குகிறது. பொருளின் பாகுபாட்டை உணர்த்துகிறது. இல்வாழ்வின் நுகர்ச்சிக்கு உதவுவது பொருள் என்பதுடன், புகழான வாழ்வுக்கு உரிய தானம், தருமம் உள்ளிட்ட செயல்களைச் செய்வதற்கும் பொருளே உதவியாக உள்ளது. எனவே பொருளைத் தவறாது பேணுதல் தவறில்லை என்பதே பெரியோர் கருத்தாகும். இம்மை, மறுமை, வீடு ஆகிய மூன்றைத் தரும் அறத்தை முன்பு பார்த்தோம். இம்மை, மறுமை ஆகிய இரண்டைத் தரும் பொருளை இனி பார்ப்போம். மறுமை வேறு, வீடு வேறு (மறுமை = சொர்க்கம், வீடு = முக்தி).

1 முதல் 13 வரை 13 அதிகாரங்களைக் கொண்டது அறத்துப்பால். 14 முதல் 37 வரை 24 அதிகாரங்களையும் கொண்டது பொருட்பால். 24 அதிகாரங்களும் 7 இயல்களுக்குள் அடங்கும். 7 இயல்களையும், அவற்றுள் அடங்கும் 24 அதிகாரங்களையும் பார்ப்போம்.

1. அரசியல் – (கல்வி, குடிப்பிறப்பு, மேன்மக்கள், பெரியாரைப் பிழையாமை, நல்லினஞ்சேர்தல், பெருமை, தாளாண்மை).

2. நட்பியல் – (சுற்றந்தழால், நட்பாராய்தல், நட்பிற் பிழை பொறுத்தல், கூடா நட்பு).

3. இன்பவியல் – (அறிவுடைமை, அறிவின்மை, நன்றியில் செல்வம்),

4. துன்பவியல் – (ஈயாமை, இன்மை, மானம், இரவச்சம்).

5. பொதுவியல் – (அவையறிதல்).

6. பகையியல் – (புல்லறிவாண்மை, பேதமை, கீழ்மை, கயமை).

7. பன்னெறியியல் – (பன்னெறி).

அரசியல்

அரச நெறியை நடத்தி வரும் நாட்டுத் தலைவனுக்கு உரிய தன்மையை விளக்கிக் கூறும் பகுதியாகும். உலக மக்கள் யாவரும் பசி, பட்டினி, பகை இன்றி உண்ண உணவும், உடுக்க உடையும், இருக்க இடமும் கொண்டவர்களாக இன்பமுடன் வாழ வேண்டும். அவ்வாறு வாழ வேண்டுமெனில் அவர்களை நன்கு வழி நடத்திச் செல்ல ஒரு தலைவன் வேண்டும். அத்தலைவன் மக்களின் தேவைகளை நன்கு உணர்ந்தவனாகவும், கடமைகளை நிறைவேற்றும் தகுதி கொண்டவனாகவும் இருப்பது அவசியம் ஆகும். தகுதி இல்லாதவன் தலைவன் ஆனால் நாடு சீரழியும், மக்கள் நலன் கெடும். நாட்டின் வளமும், மக்கள் வாழ்வும் தலைவனின் நற்பண்புகளைப் பொறுத்தே அமைவதால், அவன் தகுதியையும், ஆற்றலையும், சான்றோர் ஆராய்ந்து வகுத்துக் கூறினர்.

0

14. கல்வி

மனிதன் தெளிந்த அறிவுடன் வாழ்வதற்குக் கற்கத் தகுதியுள்ள நூல்களைக் கற்பது அவசியமாகும். கல்வி அனைவருக்கும் இன்றியமையாதது எனினும், மக்களை ஆண்டு, நாட்டைப் பேணிப் பாதுகாக்கும் பொறுப்பில் உள்ளவர்களுக்குப் பன்மடங்கு கட்டாயமாகும். அவரவர் தொழிலுக்கு ஏற்பக் கற்றலும், பொருள்களின் விளக்கம் கேட்டு அறிதலும், அதன் வழி நிற்றலும், மற்றவர்க்கு வகுத்துக் கூறுதலுமே கல்வியாகும். முன்னோர் வாழ்ந்த மரபுகள், மாண்புகள், எண்ணங்கள், வாழ்வு சிறப்பதற்கான பற்பல தெளிவான முடிவுகள் உள்ளிட்ட அனைத்தையும் தருவது கல்வி மட்டுமே. எனவே அனைவரும் கல்வி கற்பது கட்டாயமாகும்.

அலைபோல் நீந்தும் கருங்குழலைக் கருநாகமெனப் பின்னிய கூந்தலைச் சீவி முடித்துச் சிங்காரிப்பதால் கிடைக்கும் அழகும், உடலைச் சுற்றிக் கட்டிய ஆடைகளின் வண்ணக் கரைகளால் ஏற்படும் அழகும், மஞ்சள் மற்றும் வாசனைத் திரவியங்களை உடலிலே பூசிக் கொள்வதால் உண்டாகும் அழகும், ஒருவர்க்கு உண்மையான அழகு அல்ல. மேற்கூறிய உடல் அழகுகள் அனைத்துமே நம்மைப் பார்க்கும் பிறர்க்கே அழகாகத் தோன்றுவன. இன்பம் தருவன. ஆனால், மனத்தளவில் உண்மையாக நடந்து கொள்கிறோம், ‘நாம் நல்லவர்கள்’ என்னும் நடுவுநிலைக் கருத்தை, ஒழுக்கமான வாழ்க்கையைக் கல்வி மட்டுமே வழங்குகிறது. ஆகவே, உள்ளத்துக்கு உயர்ந்த அழகு, உண்மையான அழகு கல்வி மட்டுமே ஆகும். மூலப் பாட்டில் ‘குஞ்சி’ என்னும் சொல் ஆண் சிகையையும், ‘மஞ்சள்’ என்னும் சொல் பெண் பூசும் பொருளையும் உதாரணங்களாகக் கூறுகிறது. எனவே, கல்வியை ஆணுக்கும், பெண்ணுக்கும் பொதுவாக வைத்து, இருபாலரும் கல்வி கற்க வேண்டிய அவசியம் இந்த முதல் பாடலில் வலியுறுத்தப்படுகிறது.

செல்வம் பிறர்க்குக் கொடுக்கக் கொடுக்கக் குறையும். ஆனால், கல்வி அடுத்தவர்க்குப் போதிக்கப் போதிக்க மேன்மேலும் வளருமே தவிர எள்ளளவும் குறையாது. கற்றவரைப் பெருமைப்படுத்தி அவர்தம் புகழை நெடுந்தூரம் பரவச் செய்யும் சக்தி கல்விக்கே உண்டு. கற்றவர் உயிரோடு வாழும் வரை அவர் கற்ற கல்வி அழியாது. அவரோடு நிலைபெற்று விளங்கும். கள்வர்களால் செல்வத்தைக் கவர்ந்து செல்ல முடியும். ஆனால், கல்வியைத் திருடிச் செல்ல முடியாது. செல்வம் அறிவை மறைத்து அறியாமையை வளர்க்கும். ஆனால், கல்வி அறியாமை என்னும் நோயை ஒழிக்கும் மருந்தாகச் செயல்படும். கல்வி அறிவையும், திறனையும் வளர்க்கும் ஆற்றல் கொண்டதாகும். கல்வியானது இம்மைப் பிறப்பின் பயனாகிய தத்துவ ஞானத்தைத் தரும். எனவே, தேவலோகத்து அமிர்தத்தை விடவும் சிறந்தது கல்விதான்.

களர் அதாவது உவர் நிலத்தில் உண்டான உப்பைச் சான்றோர்கள் விழுமிய விளை நிலத்தில் தோன்றிய நெல்லை விடவும் உயர்வாகக் கொள்வர். அதுபோல் கடைக்குடியில் பிறந்தவர் எனினும், நல்ல நூல்களைக் கற்றுக் கல்வியில் சிறந்து விளங்குவோரைப் பெரியோர் மேன்மையாகக் கருதிச் சிறப்பு செய்து போற்றுவார்கள். பெருமைப்படுத்திக் கௌரவிப்பார்கள். ஒருவர் பிறந்த சாதியைக் கொண்டு உயர்வு தாழ்வு பார்க்காமல், அவர்தம் கல்வியறிவைக் கொண்டு பாராட்டுதல் வேண்டும். தாழ்ந்த குடியில் பிறந்தும் கல்வியறிவு பெற்றவரிடம், உயர்குடியில் பிறப்பினும் கலவி பெறாதவர் கட்டுப்படுதல் வேண்டும்.

கள்வர்கள் செல்வத்தைத் திருடிச் செல்வார்கள். வைத்த இடத்திலிருந்து காணாமலும் போகக் கூடும். மற்றவர்களுக்குச் செல்வத்தைக் கொடுப்பதால் குறையும். அரசர்களுக்குக் கோபம் வந்தால் ஒருவனுடைய செல்வத்தைப் பறிக்க உத்தரவிடலாம். ஆனால், கல்வியைத் திருடர்களால் களவாட முடியாது. வைத்த இடத்திலிருந்து (மனத்தில்) கல்வி காணாமல் போகவும் வாய்ப்பில்லை. கல்வியை மற்றவர்களுக்குப் போதித்தாலோ, கற்றுக் கொடுத்தாலோ, பெருகுமே தவிரக் கடுகளவும் குறையாது. மன்னனுக்குக் கோபம் வந்தால் அவனிடம் இருக்கும் கல்வியை அபகரிக்க ஆணையிட முடியாது. எனவே எல்லா நிலைகளிலும் செல்வத்தை விடவும் கல்வியே மேலானது. செல்வத்துக்கு உள்ள அபாயங்களும், அச்சுறுத்தல்களும் கல்விக்கு இல்லை. எனவே ஒருவன் தனது பிள்ளைகளுக்குச் செல்வத்தைச் சேர்ந்து வைப்பதற்குப் பதிலாக, பலப்பல பெருமைகள் பெற்ற கல்வியைப் போதித்து அவர்களைக் கல்வியறிவு உடையவர்களாக ஆக்குவதே சிறப்பாகும்.

வித்தைகள் பற்பல. கடலைப்போல் பரந்து விரிந்து கரையேதும் இல்லாமல் முடிவின்றி விளங்கும் கல்வியின் பிரிவுகளும் பலப்பல. அதனால், கல்வி அனைத்தும் கற்றுத் தெளிந்துவிட்டேன் என்று சொல்வது பேதமை ஆகும். கல்வி கற்போர் வாழ்நாள்கள் குறைவு என்பதால் முழுவதும் கற்று முடிக்க ஆயுளும் போதாது. வாழும் காலத்திலேனும் கல்வி கற்கலாம் என யோசித்தால், இடையிடையே நோய்களும் வந்து நம்மை வாட்டுகின்றன. பாலும் தண்ணீரும் கலந்திருப்பினும், தண்ணீரை ஒதுக்கிவிட்டுப் பாலை மட்டுமே அருந்தும் அபூர்வக் குணம் கொண்டது அன்னப் பறவை ஆகும். ஆகவே, அன்னத்தைப் போல், பகுத்தறிந்து, தெளிவாக ஆராய்ந்து, பொருத்தமான, தேவையான, நூல்களை மட்டுமே அறிவுடையோர் படிப்பர். கற்கும் நூல்களும், அறிவுக்கு வளம் தரும், உண்மைப் பொருள் கூறும் ஞான நூல்களாக இருத்தல் வேண்டும். அத்தகைய நூல்களை மட்டுமே கற்க வேண்டும்.

ஆழமான ஆறு. அதைக் கடந்து அக்கரை செல்ல வேண்டும். அதற்கு உதவும் படகு அல்லது தோணியைச் செலுத்துபவன் பழமையான சாதிகளுள் கடைப்பட்ட சாதியைச் சேர்ந்தவன் என்பதும் தெரியும். எனினும், ஆற்றைக் கடக்கப் படகைச் செலுத்தும் படகோட்டி உயர்ந்த சாதியாகத்தான் இருக்க வேண்டும் என யாரும் கேட்க மாட்டார்கள். அவன் தாழ்ந்த சாதி என அறிந்தும் யாரும் இகழ மாட்டார்கள். அவன் திறமையாக மரக்கலத்தைச் செலுத்தி, நல்லபடியாக ஆற்றைக் கடந்து அக்கரை சேர்க்க வேண்டும் என்றே எல்லோரும் நினைப்பர். அதுபோல், பல நூல்களையும், சாஸ்திரங்களையும் கற்றுக் கல்வியறிவில் சிறந்து விளங்குபவன், எந்த வகுப்பைச் சேர்ந்தவனாக இருந்தாலும், தாழ்ந்த சாதியே என்றாலும், குருவாக ஏற்றுப் பாடம் படிக்க வேண்டும். பிறப்பினால் உண்டாகும் பெருமையை விடவும், கல்வியினால் ஏற்படும் பெருமையே உயர்வாகும். ஆசானாக இருக்கத் தக்கவன், கல்வியறிவில் உயர்ந்தவனே அல்லாமல், குலத்தில் உயர்வு கொண்டவன் அல்லன். கல்வியால் குலப் பிறப்பு இழிவு போகும், உயர்வு கிடைக்கும் என்பது கருத்து.

தவறேதும் செய்யாதவர்களும், தொன்றுதொட்டு வழிவழியாகப் பரம்பரையாக வரும் பழைமையான குற்றமற்ற நூல்களின் தன்மையை உடையவர்களும், நல்லொழுக்கத்தைக் கொண்டவர்களும், பகைமைக் குணம் இல்லாதவர்களும், புத்திக் கூர்மை உள்ளோரும், கற்றறிந்த அறிவுடையோரும், தம்முள் மகிழ்ந்து உரையாடும் அவையில், ஒன்று கூடிக் கலப்பதைக் காட்டிலும் இன்பம் அளிப்பது வேறெதுவும் இல்லை. விண்ணுலகில் தேவர்கள் வாசம் செய்யும் அமராவதி நகரும் கூட இதற்கு ஈடு இணையாகாது. கற்றவரோடு கூடிப் பழகி அவர்களுடன் நட்பு பாராட்டி அனுபவிக்கும் மகிழ்ச்சி, சொர்க்கத்தில் கிடைக்கும் சந்தோஷத்தை விடவும் சிறப்பாகும்.

ஓயாது எழும் அலைகள் காரணமாக ஒலி முழங்கும் கடலின் குளிர்ந்த கரைகளைக் கொண்ட நாட்டின் வேந்தனே! கரும்பை நுனியிலிருந்து அடிநோக்கித் தின்றால் முதலில் சற்று உவர்ப்பாக இருந்தாலும் போகப் போக்க இனிப்பைத் தரும். அதுபோல் கற்றறிந்த அறிவுடையோரின் நட்பு தொடக்கத்தில் உவர்ப்பாக இருந்தாலும் நாள்கள் செல்லச் செல்ல நிறைவாக அடிக்கரும்பு போல் இன்பத்தையே தரும். ஆனால், கரும்பை அடியிலிருந்து மேல் நோக்கித் தின்றால் முதலில் சுவைத்தாலும் பின்னர் உவர்க்கும். அதுபோல் கல்வி கற்காத, பண்பற்ற, அன்பில்லாத அறிவிலிகளுடனான நட்பும், ஆரம்பத்தில் இனிமையாகத் தோன்றினாலும், போகப் போக நுனிக் கரும்புபோல் உவர்த்து வெறுப்பையே தரும். கற்றாருடனான நட்பு இன்பத்தையும், கல்லாதவருடனான நட்பு துன்பத்தையும் தரும்.

பாதிரிப்பூ நறுமணம் மிக்கது. நன்கு மலர்ந்த பாதிரிப் பூக்களை புதிய மண்பானையில் போட்டு வைத்து, சிறிது நேரம் கழித்துப் பூக்களை எடுத்துவிட்டு, அதில் தண்ணீரை ஊற்றுவார்கள். தொன்மையான இயற்கையான பிரகாசமான நிறத்தைக் கொண்ட பாதிரிப் பூக்களைப் மண்பானைக்குள் போடுவதன் மூலம், அதன் வாசனை மண்பானை முழுவதும் பரவும். மண்பானையில் ஊற்றப்படும் தண்ணீருடன் கலந்து நறுமணம் வீசும். பாதிரிப் பூக்களுடன் சேர்ந்தால், வாசனையற்ற தண்ணீர் கூட மணம் கமழும் குளிர்ந்த நீராகி விடும். அதுபோல் கல்வி கற்காத மூடர்களாகவே இருந்தாலும், கல்வி கற்ற அறிவுடையாருடன் சேர்ந்து, அவர்க்கு இணக்கமாக நடந்தால், நாள்தோறும் நல்லறிவு வளரும். கல்லாதவரே என்றாலும், கற்றாருடன் தொடர்பு வைத்துக் கொண்டால் அறிவு பெருகும்.

உலகிலுள்ள எண்ணற்ற நூல்களுள், தத்துவ மெய்ஞானத்தைத் தருகின்ற சாஸ்திரங்கள் உள்ளிட்ட அறிவு நூல்களைக் கற்காமல், தர்க்கம் (நியாயவாதம்), வியாகர்ணம் (இலக்கணம்) உள்ளிட்ட உலக நூல்களைக் கற்பதால் உண்டாகும் பயன் என்ன? பொருள் ஈட்டவும், பாவங்களைச் சேர்க்கவும், கலகல என கூச்சலிட்டுக் கூப்பாடு போட்டுச் சலசலப்பை ஏற்படுத்துவதைத் தவிர, வேறெந்தப் பலனும் கிடைக்கப் போவதில்லை. ஆனால், ஞான ஸ்வரூபியான கடவுளைத் தொழுவதாலும், ஆகமங்கள் போன்ற மெய்ஞான சாஸ்திர நூல்களைக் கற்பதாலும், பிறவித் துன்பங்களிலிருந்து விடுபட்டுத் தடுமாற்றத்தை நீக்கிக் கொள்ளலாம். எனவே உயிர்க்கு உறுதி தரும் ஞான நூல்களைக் கற்பதே சிறந்தது.

15. குடிப்பிறப்பு

தமிழ் அற நூல்கள் பிறப்பினால் உயர்வு தாழ்வு என்னும் நிலையினை வன்மையாக மறுத்துக் கூறுகின்றன. எனினும், ஒவ்வொரு குடியின் பழக்க வழக்க மாறுபாடுகளால், சில உயர்குடியாகவும், சில உயர்குடி அல்லாதவையாகவும் விளங்குவதை ஏற்றுக் கொண்டுள்ளன. சாதிக்குச் சாதி, இனத்துக்கு இனம், பழக்க வழக்கங்கள் நிலவுவது உண்மையே. சமூகத்தின் பல்வேறு சூழல்கள் காரணமாக, காலப்போக்கில் சாதிகள் அல்லது இனங்கள் தத்தம் வாழ்வு முறையை அமைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் நேரிடுகிறது. இதன் நீட்சியாக ஒவ்வொரு குடும்பமும் தனக்கென ஒரு வகையான பண்பாட்டு ஒழுக்கத்தைப் பேணிப் பாதுகாத்துக் கொண்டிருக்கிறது. இத்தகைய சூழலில் பிறக்கும் மனிதர்களும் சம்பந்தப்பட்ட பண்பாட்டைக் கொண்டவர்களாகவும், பின்பற்றுபவர்களாகவுமே விளங்குகின்றனர் என்பதும் மறுக்க முடியாத உண்மையாகும். சூழல், வாய்ப்பு, வசதி காரணமாக உயர் குடியினரிடையே கல்வியும், நல்லொழுக்கமும் இயல்பாகவே படிந்திருக்க வேண்டும். நற்குடிப் பிறப்பின் சிறப்பையே இந்த அதிகாரம் விளக்குகிறது. ஊழ்வினைப் பயனால் வருவதே நற்குடிப் பிறப்பு என்பது சான்றோர் கொள்கை.

பசித்தாலும் புலி புல்லைத் தின்னாது எனச் சொல்லக் கேட்கிறோம். ஆனால் இப்பாடலில் கடுமையான பசி வந்த போதும் சிங்கம் கொடியாகப் படர்ந்திருக்கும் புல்லை மேயாது எனக் கூறுகிறது. அதுபோல், உடுக்கும் ஆடை பொலிவிழந்து, பசி பட்டினி வறுமை உள்ளிட்ட காரணங்களால் உடம்பு மெலிந்து அழியும் நிலை வந்தாலும், உயர்குடிப் பிறத்தலை உடையோர், தம் குலத்துக்கு உரிய ஒழுக்கத்திலிருந்து வேறுபட மாட்டார்கள். சிங்கம் உயிர் வாழ்வதற்காக இயல்பை மாற்றிக் கொண்டு பசியாறப் புல்லைத் தின்னாது. அதுபோல், உயர்குடிப் பிறந்தோர் ஜீவித்திருப்பதற்காக ஒழுக்கம் குன்றியச் செயல்களில் ஈடுபடமாட்டார்கள்.

சுவர்க்கத்தை உரசும் அளவுக்கு வானளாவிய உயரம் கொண்ட மலைகளையும், அவற்றைத் தவழுகின்ற மேகங்களையும் கொண்ட நாட்டின் அரசனே! உயர்குடிப் பிறந்தோர் பற்பல அறிவு நூல்களைக் கற்றுக் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவர். நற்குணங்களால் அவற்றை ஆளுகின்ற பெருந்தன்மை, பழக்க வழக்கங்களிலே மென்மை, நல்ல ஒழுக்கம், ஆகிய மூன்றையும் கிடைக்கப் பெறுவர். இதன் காரணமாகப் புகழால் சுவர்க்கத்தை அடையும் பேறும் உயர்குடிப் பிறந்தோர்க்கு மட்டுமே வாய்க்கும். மாறாகப் பெரும் செல்வமும், வசதியான வாழ்க்கையும், கொண்டவராக இருந்தும், உயர்குடிப் பிறப்பு இல்லாதவர்களிடம் மேற்கூறிய மூன்று பண்புகளும் உண்டாகாது என்பது கருத்தாம். சான்றாண்மை முதலிய நற்குணங்கள் உயர்குடிப் பிறப்பால் மட்டுமே வரும். செல்வத்தால் வருவன அல்ல.

பணியத்தக்க சான்றாண்மை உடைய பெரியவர்களைக் காணும் போது அமர்ந்திருக்கும் இருக்கையை விட்டு எழுந்து நின்று மரியாதை செய்வதும், அவரை எதிர் கொண்டு வரவேற்று அழைத்து வருவதும், வாசல் வரை சென்று வழியனுப்புவதும், அவர் விடை கொடுத்தால் மட்டுமே விட்டுப் பிரிவதும், உள்ளிட்ட நற்குணங்களை, எந்தவொரு காலத்திலும் கெடாத ஒழுக்கங்களாகக் கொண்டவர்களே உயர்குடிப் பிறந்தவர்கள். இத்தகைய நற்குணங்களை உயர்குடிப் பிறப்பில்லாத இழி குடியில் பிறந்த கயவர்களிடம் எதிர்பார்க்க முடியாது. உயர்குடிப் பிறந்தோரும், இழி குடிப் பிறந்தோரும், கல்வி அறிவற்ற மூடர்களும், உருவத்தால் ஒத்திருப்பினும், மேற்கூறிய ஒழுக்கங்களால் வேறுபட்டே இருப்பர்.

உயர்குடியில் பிறந்தவர்கள் தான தருமம் உள்ளிட்ட நற்செயல்களைச் செய்தால் அது அவர்களின் இயல்பு, இயற்கைக் குணம் என்றே கொள்ளப்படும். சிறப்பாகக் கொள்ளப்பட மாட்டாது. ஆனால், தீய செயல்களைச் செய்தால், பலருடைய பழிச் சொல்லுக்கும், தூற்றுதலுக்கும் உள்ளாவர். எனவே, முன்வினைப் பயனால் இம்மையில் எல்லாவற்றையும் அறியவல்ல உயர்குடியில் பிறப்பதால் அவருக்குக் கிடைக்கும் ஊதியம் அதாவது பயன்தான் என்ன? உயர்குடிப் பிறந்தவர்களுக்கு நல்லொழுக்கத்தால் பெரும் புகழ் உண்டாவதில்லை. ஆனால், சிறிதளவே ஒழுக்கம் கெட்டாலும் பெரும் பழி வந்து சேர்கிறது. ஆனால் தாழ்ந்த குலத்தில் பிறந்தோர்க்கு இத்தகைய சங்கடங்கள் இல்லை. ஒழுக்கம் தவறினாலும் இயல்பு என்றே கொள்வார்கள். பெருந் தீய ஒழுக்கமே எனினும் சிறுபழி மட்டுமே உண்டாகும். மாறாக, சிறிது நல்லொழுக்கமும் அவர்களுக்குப் பெரும் புகழைத் தேடித் தரும். தீயொழுக்கம் சிறிதளவே ஆயினும் பெரும் பழி வருமென்பதால் சான்றோர் அஞ்சித் தவறு செய்யார். உயர்குடிப் பிறப்பு பயனற்றது எனப் பழிப்பதுபோல், அதைப் புகழ்வதால் வஞ்சகப் புகழ்ச்சியாம்.

நம்மிடம் யாரேனும் ஒரு கேள்வியைக் கேட்கும் போது, அது குறித்த விடை தெரியாமல் கல்லாது இருந்துவிட்டோமே என அச்சம் கொள்வர். இழிதொழில்களைச் செய்யவும் அஞ்சுவர். பொய், கோள் சொல்லுதல், கடுஞ்சொற்கள் ஆகிய பயனில்லாத தீய சொற்களை எங்கேனும், எப்போதேனும் வாய் தவறிச் சொல்லிவிடுவோமோ என்றும் பயந்து கொண்டே இருப்பர். சொல்லும் ஒவ்வொரு சொல்லையும் கவனமோடும், எச்சரிக்கையோடும், எண்ணி எண்ணி அளந்து பேசுவர். யாரேனும் தம்மிடம் யாசகம் கேட்டால் அவர்க்கு கொடுக்க முடியாமல் போய்விடுமோ என்றும் பயம் கொள்வர். மேற்கூறியவை உள்படப் பல்வகை அச்சங்கள் உயர்குடிப் பிறந்தோரிடம் மட்டுமே காணப்படும். ஆனால் மாட்சிமை இல்லாத இழிகுலத்தோரிடம் எத்தகைய அச்சமும் இருக்காது. மரக்கட்டைபோல் உணர்ச்சியின்றி இருப்பர்.

சிறந்த மாணிக்கங்களும், ரத்தினங்களும், நவமணிகளும், முத்துக்களோடு சேர்ந்து ஒளிவீசிப் பிரகாசிக்கின்றன அலைகள். அவை ஆரவாரம் செய்து முழங்கும் கடலின் குளிர்ச்சி பொருந்திய கடற்கரையை உடைய வேந்தனே! துன்பப்படும் போது உதவிக்கரம் நீட்டும் நல்ல நண்பரைப் பெறுதலும், கடுஞ்சொற்கள் கூறாது இனிய சொற்களைச் சொல்லுதலும், இல்லை என யாசிக்கும் வறியவர்க்கு இல்லை எனாது வேண்டிய பொருளை ஈதலும், மனத் தூய்மையோடு இருத்தலும், நல்ல குடியில் பிறந்த சான்றோர்களின் உயர் குணங்களாம். மேற்கூறிய நற்குணங்கள் உயர்குடியில் பிறந்தவர்களிடம் மட்டுமே காணப்படும். அவை இழிகுலத்தில் பிறந்தவர்களிடம் காணப்படாது என்பது தெளிவு.

பெரிய வீடு ஒன்று கவனிப்பார் இன்றிக் கிடக்கிறது. கட்டுக் குலைந்து இடிபாடுகளுடன் கிடக்கிறது. வீடெங்கும் மண்டிக் கிடந்த கறையான்கள் அழகிய மர வேலைப்பாட்டுடன் கூடிய கதவுகளையும், ஜன்னல்களையும் அரித்துத் தின்றுவிட்டன. இருப்பினும், பாழடைந்த நிலையிலும், மழை, காற்று, வெயில் ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பு அளிக்கும் வகையில் அந்த வீட்டின் ஏதேனும் ஒரு பகுதி நிச்சயம் இருக்கும். அதுபோல், உயர் குடியில் பிறந்த சான்றோர் எத்தகைய வறுமைத் துன்பத்தில் வருந்திய போதும், தாங்கள் செய்ய வேண்டிய கடமைகளில் இருந்து தவற மாட்டார்கள். உயர்குடியில் பிறந்தோர் கஷ்ட காலத்திலும் தங்களால் இயன்ற நற்செயல்களைச் செய்வர். செய்வதற்கு உரிய செயல்களையே செய்வர் எனக் கூறுவதால், செய்யத் தகாத காரியங்களை உயர்ந்தோர் செய்யார் என்பது கருத்து.

கிரகணக் காலங்களில் பூமியின் நிழல் சந்திரனை மறைக்கிறது. ஆனால் இச்செயலை இராகு என்னும் கரும்பாம்பும், கேது என்னும் செம்பாம்பும் செய்வதாகச் சொல்வது புராண வழக்காகும். இவ்வாறாகச் சந்திரனின் ஒரு பாகத்தை இராகு என்னும் பாம்பு பிடித்திருந்தாலும், அதன் மற்றொரு பாகம் அழகிய பெரிய பூமியைப் பூரண சந்திரனாகப் பிரகாசிக்க வைக்கிறது. அதுபோல் உயர்குடியில் பிறந்தவர்கள் வறுமைத் துன்பத்தில் உழன்றாலும், பிறர்க்கு உதவி செய்வதற்கு மனம் தளர மாட்டார்கள். தங்கள் முயற்சிகளை ஈடேற விடாமல் கிரகணம் போல் தடை வந்து தடுத்தாலும், அடுத்தவர்க்கு உபகாரம் செய்வதிலிருந்து பின்வாங்க மாட்டார்கள்.

சேணம், கடிவாளம் உள்ளிட்ட போர்க் கோலங்களைத் துள்ளியோடும் கலைமானுக்கு அணிவித்தாலும், இயற்கையாகவே பாய்ந்தோடும் தன்மை கொண்ட குதிரையைப் போல், போர்க்களத்தில் செயல்படும் வல்லமை கலைமானுக்கு இல்லை. அதுபோல், தாழ் குடிப் பிறந்த சிறியோர், செல்வச் செழிப்பும் வசதியும் இருந்தாலும், எந்த நற்செயல்களையும் செய்ய மாட்டார்கள். செய்யவும் இயலாது. ஆனால், உயர்குடிப் பிறந்த பெரியோர் வறுமை நிலையிலும், இயற்கை குணம் காரணமாகச், செய்ய வேண்டிய தரும காரியங்களைச் செவ்வனே செய்வார்கள். கீழோர் வாய்ப்பிருந்தும் நற்செயல்கள் செய்யமாட்டார்கள். மேலோர் வாய்ப்பற்ற நிலையிலும் நற்செயல்களை இயன்றவரை செய்வார்கள்..

ஒரு காலத்தில் இந்த அகன்ற நீண்ட ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. ஆனால் இன்று தண்ணீர் முழுவதும் வற்றி வறண்டு காய்ந்து பாலைவனம் போல் காட்சி தருகிறது. ஆனால், தண்ணீர் வற்றிய நிலையிலும், ஆற்றுப் படுகையைத் தோண்டினால் தெளிந்த நீர் விரைந்து ஊற்றெடுக்கும். அதுபோல் உயர்குடியில் பிறந்தோர், யாதொரு வசதியும் இன்றி, வறுமையில் கதியற்று வாழும் நிலையிலும், தம்மை நாடி உதவி கேட்டு வந்தவர்களுக்கு, இல்லை என்று சொல்ல மாட்டார்கள். தம்மால் இயன்றதைக் கொடுத்து அவர்கள் தளர்ந்து விடாமல் ஊன்றுகோல் போல் தாங்கி உறுதுணையாக இருப்பர்.

(தொடரும்)

பகிர:
ஜனனி ரமேஷ்

ஜனனி ரமேஷ்

எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். ‘திருவள்ளுவர்’, ‘தமிழ் அறிஞர்கள்’ உள்ளிட்ட நூல்களும் ‘ஔரங்கசீப்’, ‘தேசத் தந்தைகள்’ உள்ளிட்ட மொழியாக்கங்களும் வெளிவந்துள்ளன. கட்டுரைகளும் எழுதிவருகிறார். விருதுகள் பெற்றவர். தொடர்புக்கு : writerjhananiramesh@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *