Skip to content
Home » அறம் உரைத்தல் #12 – நாலடியார் – அரசு இயல் (16-17)

அறம் உரைத்தல் #12 – நாலடியார் – அரசு இயல் (16-17)

அறம் உரைத்தல்

16. மேன்மக்கள்

மக்களுள் மேலான பண்பும் ஆற்றலும் உடையவர்களே மேன்மக்கள் என அழைக்கப்படுவர். இவர்கள் அரிய செயல்கள் செய்வோராகவும், கல்வியில் சிறந்த அறிவுடையோராகவும், மனத்தாலும் தீயன எண்ணாதவராகவும், நல்லன மட்டுமே செய்வோராகவும், பிறர்க்கு உதவும் அருளுடைமை கொண்டோராகவும், பிறர் குற்றம் காண முடியாதவராகவும், செருக்கு இல்லாதவராகவும், இருப்பர். மேன்மக்கள் இத்தகைய நற்குணங்களின் உறைவிடமாகத் திகழ்வர். நல்ல குடிப்பிறப்பினாலும், நல்ல பண்புகள் அமையப் பெற்றமையாலும் அவர்கள் மேன்மக்களாக விளங்குகின்றனர். அவர்களுக்குள்ளும், கீழோர் தொடர்பாலும், ஊழ்வினை வசத்தாலும் ஒரு சிலர், மேன்மக்கள் ஆகாமல் போகவும் கூடும். அதேபோல், கீழான குடியில் பிறந்தாலும், உள்ள உறுதியாலும், அயராத, தளராத முயற்சியாலும், முன் வினைப் பயனாலும், மேலான பண்பாளர்களாக விளங்குவோரும் உண்டு.

இந்த அதிகாரம் எத்திறத்தாலும் மேன்மையான பண்பு கொண்டவர்களைப் போற்றிப் புகழும் அதிகாரமாகும்.

அழகிய அகன்ற விரிந்த ஆகாயத்திலிருந்து, குளிர்ந்த பரந்த நிலவொளியை வீசிச் சந்திரன் புற இருளை அகற்றும். அதுபோல் கற்றறிந்த சான்றோர் பெருமக்கள், நீண்ட நெடிய நிலப்பரப்பில் இருந்து கொண்டு, தங்கள் குளிர்ந்த இனிமையான செய்கை மூலம், அக இருளை அகற்றுவர். இவ்வகை நற்குணங்களால் பெரும்பாலும் சந்திரனும், சான்றோரும், தம்முள் ஒத்திருப்பர். ஆனாலும், ஒரு சில விஷயங்களில் சந்திரனும், பெரியோரும், ஒத்துப் போக மாட்டார்கள். குறிப்பாகச் சந்திரன் தன் மீதான களங்கத்தைத் தானே பொறுத்துக் கொள்ளும். ஆனால் சான்றோர் முன் வினைப் பயன் காரணமாகச் சிறிது களங்கமே உண்டானாலும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். வருந்தி, வருந்தித் தங்களைத் தாங்களே அழித்துக் கொள்வர். பெரியோர் தம் நிலையிலிருந்து எப்போதும் தாழார். அங்ஙனம் ஊழ்வினையால் தாழ்வு வருமானால் உயிர் வாழாமை மேன்மக்களின் மானமுடைமை ஆகும்.

நரியின் மார்பைப் பிளந்து கிழித்துச் செல்லும் வேகமான அம்பை விடவும், சிங்கத்தைக் கொல்ல வைத்த குறி தவறி, அதைத் தப்பிப் போக வைத்த அம்பு, எந்த வகையிலும் குறைந்தது அல்ல. சிங்கத்தின் மீது அம்பு எய்தி அது தவறினாலும் பெருமை உண்டு. நரி மீது அம்பு எய்தி அது மார்பைப் பிளந்து கொன்றாலும் பெருமை இல்லை. அதுபோல், அறிவிற் சிறந்த மேன்மக்கள் தங்களால் ஒரு செயலை எளிதில் செய்ய இயலும் என்றாலும், எளிதாகச் செய்ய இயலாது என்றாலும், அச்செயலை யாருடைய பழி பாவத்துக்கும் இடமின்றிச் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்றே எண்ணுவர். சான்றோர் செய்தற்கு அரிய செயலைச் செய்ய முயன்று, அது தோல்வி அடைந்தாலும் பெருமை உண்டு. மாறாக, இழிவான செயலைச் செய்யத் தொடங்கி அதை வெற்றிகரமாக முடித்தாலும் எந்தப் பெருமையும் இல்லை. சான்றோர் பழிப்பு உண்டாகாத நற்செயலை மட்டுமே செய்வார்.

வறுமை காரணமாக உண்பதற்கு உணவில்லை. சரியான சாப்பாடு இல்லாத காரணத்தால் உடல் மெலிந்து நரம்புகள் புடைத்துக் கொண்டு வெளியே தெரிகின்றன. இத்தகைய தாழ்ந்த நிலை வரினும், நல்லொழுக்கம் என்னும் எல்லை தாண்டி மேன்மக்கள் குற்றச் செயல்களில் ஈடுபட மாட்டார்கள். பசியைத் தணித்துக் கொள்ள வரம்பு மீறி, இரத்தல் என்னும் இழிச்செயலையும் செய்யார். நல்லறிவையே கருவியாகக் கொண்டு, முயற்சி என்னும் கயிற்றால், கவலையைப் பற்றுகின்ற மனத்தைக் கட்டுவார்கள். உடல் இளைத்து, வறுமை வாட்டும் ஏழ்மை நிலையிலும், எல்லை தாண்டிக் குற்றம் இழைக்க மாட்டார்கள். தங்களிடம் உள்ள பொருளுக்கு ஏற்பச் செய்யத் தகுந்த நற்செயல்களையே மேன்மக்கள் செய்வார்கள்.

வானுயர்ந்த மலைகளைக் கொண்ட நாட்டின் அரசனே! போகும் வழியில் அன்றுதான், அப்போதுதான், முதன் முதலாக ஒருவர் கண்ணில் படுகிறார். இருப்பினும், கற்றறிந்த பெரியோர்களும், சான்றோர்களும், நீண்ட காலம் பழகியதைப்போல் அன்போடும், பண்போடும் அவருடன் சிநேகம் கொள்வர். பாசக் கயிற்றால் கட்டுண்டதுபோல் நட்பு பாராட்டுவார். ‘எறும்பூரக் கல்லும் தேயும்’ என்னும் பழமொழிக்கு ஏற்ப, சிறிய எறும்பாகவே இருந்தாலும், பாறையின் மீது தொடர்ந்து ஊர்ந்து கொண்டே இருந்தால் அது தேய்வது திண்ணம். அதுபோல் கரடு முரடாக முட்கள் நிறைந்த பாதையே என்றாலும், அடிக்கடி நடந்து சென்றால் நல்ல பாதை தானாகவே உண்டாகும். இவை சிறப்பல்ல. பல நாள்கள் பழகி ஒருவருடன் சிநேகம் கொள்வதும் சிறப்பு இல்லை. செல்லும் வழியில், கண்ட உடனேயே, பல நாள்கள் பழகியதுபோல் ஒருவரை நண்பராக்கிக் கொள்ளும் சான்றோரின் பண்பே உயர்ந்த குணமாகும்.

ஒரு விஷயம் குறித்த அர்த்தத்தைத் தெரிந்து கொள்ளும் அறிவற்ற, பயனற்ற கூட்டத்தைச் சேர்ந்த, கற்க வேண்டிய நூல்களைக் கற்காத மூடன் ஒருவன் உள்ளான். அவன் தனக்குத் தோன்றிய செய்தியை, பொருந்தாத சொற்களால், அர்த்தமின்றி, உண்மைக்குப் புறம்பாக, கூட்டத்தினர் இடையே ஏதோ உளறிக் கொட்டிக் கொண்டிருக்கிறான். தவறான அவனது பிதற்றலைக் கேட்டும் கற்றறிந்த மேன்மக்கள் எதுவுமே பேசாமல் கேட்டுக் கொண்டிருந்தனர். அவன் சொல்வது தவறு எனச் சுட்டிக் காட்டினால், சபை நடுவே அந்த அறிவில்லாதவன் அவமானப்பட நேரிடுமே, எனப் பரிதாபப்பட்டும், மனம் இரங்கியும், அமைதி காப்பது சான்றோர் குணமாகும். மூடர்கள் பேசுவதை மேன்மக்கள் அமைதியாகக் கேட்கக் காரணம் அவர்கள் மீதுள்ள இரக்கத்தால்தானே தவிர, அங்கீகரிப்பதற்காக அல்ல.

கரும்பை வாயால் கடித்துத் துண்டாக்கினாலும், கணுக்கள் நொறுங்க ஆலையில் போட்டுச் சிதைத்துப் பிழிந்தாலும், உலக்கை, கல் ஆகியவற்றால் இடித்துப் பொடிப்பொடியாக நொறுக்கினாலும், அதன் சாறு எந்த வடிவத்திலும் இனிப்பான சுவையையே தரும். அதுபோல், தீயோர் தம்மை இகழ்ந்தாலும், வசை பாடினாலும், பொய்க் குற்றம் சுமத்தினாலும், தகாத வார்த்தைகளால் இகழ்ந்தாலும், வரம்பு மீறிப் பேசினாலும், உயர்குடிப் பிறந்த சான்றோர் பெருமக்கள், தங்கள் நிலையிலிருந்து மாறுபட்டு, பண்பு தவறி வாயால் தீய சொற்கள் எதையும் கூறமாட்டார்கள். பிறர் தம்மைத் துன்புறுத்திய காலத்தும் சான்றோர் தங்கள் மேன்மை குணத்தைக் கைவிட மாட்டார்கள்.

குற்றமற்ற அறிவுடைய சான்றோர் பெருமக்கள் தமக்குச் சொந்தமில்லாத பிறர் பொருளைத் திருட மாட்டார்கள்.. கள் மதுபானம் உள்ளிட்ட போதை தருவனவற்றை அருந்த மாட்டார்கள். நூல்கள் விலக்கும் தீயவற்றைச் செய்யார். மற்றவர்களை இகழ்ந்தும், அவமதித்தும், நிந்தித்தும், ஒரு சொல் கூடப் பேசார். மறந்தும் தம் வாயால் பொய் சொல்லார். முற்பிறப்பு ஊழ்வினை காரணமாகப் பாடுபட்டுச் சேர்த்த செல்வமும் பொருளும் அழிந்தாலும் கூட மனம் தளரார். வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டுத் துயரமும், துன்பமும் வந்தாலும் கவலைப்படார். நற்குணங்கள் மற்றும் நல்லொழுக்கங்களிலிருந்து எந்தச் சூழலிலும் தவற மாட்டார்.

தன்னை நம்பிப் பிறர் சொன்ன ரகசியத்தை வெளிப்படுத்துவதில் செவிடனாகவும் (பிறர் சொன்னவை எதுவும் காதில் விழாததுபோல்), அடுத்தவர் மனைவியைப் பார்ப்பதில் கண் தெரியாத குருடனாகவும், மற்றவர் குறித்து அவர்கள் இல்லாதபோது தீமையான பழிச் சொற்களைச் சொல்வதில் வாய் பேச முடியாத ஊமையாகவும் இருக்க வேண்டும். பிறர் கூறிய ரகசியங்களைப் பாதுகாப்பவனாகவும், பிறர் மனைவியை ஏறெடுத்தும் பார்க்காதவனாகவும், பிறர் மீது பழிச்சொல் கூறாதவனாகவும் இருத்தல் அவசியம் ஆகும். அவ்வாறு ஒருவன் இருப்பானே ஆனால், அத்தகைய பண்பாளருக்கு, வேறு எந்த வகையான தர்மத்தையும், அறத்தையும், சான்றோர் போதிக்க வேண்டிய அவசியமில்லை. தருமங்களுள் இம்மூன்றும் சிறந்த தருமங்கள் என்பது கருத்து.

தம்மை நாடிப் பல நாள்கள் தினமும் தொடர்ந்து ஒருவர் வருவதைக் கண்டால் அத்தகையவர் ஏதேனும் ஒரு பொருளை விரும்பியே தன்னைப் பார்க்க வருகிறார் எனப் பண்பும், மேன்மைக் குணமும் இல்லாத கீழ்மக்கள் நினைப்பார்கள். அவ்வாறு எண்ணுவதுடன், நாடி வந்தவரை இழிவாகவும், தாழ்வாகவும் பேசி அவமானப்படுத்தியும் அனுப்புவர். ஆனால், விழுமிய உயர் குணம் கொண்ட சான்றோர் பெருமக்கள், தம்மை நாடி வந்தவர், எதை விரும்பிக் கேட்டாலும், அதை ‘நல்லது’ என்றே எண்ணி, அவரைக் காணும் போதெல்லாம் இன்முகத்துடன் வரவேற்றுச் சிறப்புச் செய்வார்கள். இம்மையில் உதவி செய்தால் அது மறுமையில் சிறப்பைத் தரும் எனக் கருதி மேன்மக்கள் ‘நல்லது’ என்பர்.

இவர் வசதியானவர், செல்வச் செழிப்பானவர் என உறுதியாகப் பற்றிக் கொண்டு கீழ்மக்களின் பின் சென்று சிலர் பிழைப்பார்கள். அவர்களிடம் இருக்கும் பொருளை ஆதாரமாகக் கருதிப் பாராட்டியும், போற்றியும், வயிறு வளர்த்து உயிர் வாழ்வார்கள். இதனால் கிடைக்கப் போவது என்ன? எதுவும் இல்லை. மாறாக, உயர் குடியில் பிறந்த, கல்வி கற்ற, அறிவுடைய, சான்றோர், மேன்மக்களுடன் சேர்ந்தால், தோண்டத் தோண்டச் செல்வம் கிடைத்துக் கொண்டே இருக்கும். வேண்டும் பொருள் எல்லாம் கிட்டும் சுரங்கம் போல் அல்லவா இருக்கும்? கீழ்மக்கள் நிரந்தரமற்ற பொருளுடன் செல்வந்தராகக் காட்சி தருவர். ஆனால் மேன்மக்கள் அறிவு, ஞானம், நற்குணம் ஆகியவற்றை உள்ளடக்கி நிரந்தரமான, அழியாத செல்வச் சுரங்கமாகவே திகழ்வர்.

17. பெரியாரைப் பிழையாமை

கற்றறிந்த சான்றோர்களாக விளங்கும் மேன்மக்களுடனான தொடர்பில் பலப்பல நன்மைகள் ஏற்படும். அவர்களுடன் அன்போடும், பண்போடும் பழக வேண்டும். தவறு ஏதுவும் நிகழாமல் பார்த்துக் கொள்ளுதல் இன்னும் அவசியமாகும். பெரியார் எனப் பொதுப்படக் கூறியதால், இது பல முறைகளிலும் உள்ள பெரியார் பலரையும் குறிக்கும். அரசர்கள், அமைச்சர்கள், சமூகத் தலைவர்கள், உயர்குடியினர், துறவியர், அறிவிலும் பருவத்திலும் ஒழுக்கத்திலும் சான்றோர், எனப் பலரும் பெரியார் என்னும் பட்டியலில் அடங்குவர். மேன்மக்கள் சிறப்பு அறிந்து அவர்களுடன் பழகுவோர்க்கு இருக்க வேண்டிய இன்றியமையாத குணம் ‘பிழையாமை’ ஆகும். பிழை பொறுத்தல் பெரியோர் இயல்பு என்றாலும் கூடப் பிழைகளும், தவறுகளும் நடைபெறா வகையில் அவர்களுடன் பழகுதல் நலம். சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதுபோல், பொறுமைக் குணம் மிக்க பெரியோரும் சினம் கொண்டால் நேரிடும் பெரும் கேட்டை மனத்தில் கொண்டு, அஞ்சி நடத்தல் வேண்டும், என்பதையே இந்த அதிகாரம் விளக்குகிறது.

நெடிதுயர்ந்த மலைகள் விண்ணை முட்டிக் கொண்டு நிற்கின்றன. அவற்றின் மீது தவழ்ந்தோடிப் பெரும் இரைச்சலோடு மண்ணில் விழுகின்ற அழகான அருவிகளைக் கொண்ட மலைநாட்டின் அரசனே! பெரியோர்கள் குற்றம் குறை இல்லாதவர்கள். பொறுமையின் சிகரமாக விளங்குபவர்கள். கோபம் என்பதைச் சிறிதளவேனும் அவர்களிடம் காண முடியாது. அத்தகைய உயரிய குணம் கொண்டவர்கள் எதைச் செய்தாலும் பொறுத்துக் கொள்வார்கள் என்னும் நினைப்பில் அவர்களை வெறுப்பூட்டும் எந்தச் செயலையும் செய்தல் கூடாது. அவர்கள் வெறுப்பில் கோபித்தால், அதனால் விளையும் கேட்டைத் தாங்கிக் கொள்ளும் சக்தி இங்கு எவர்க்கும் இல்லை. அதனால் ஏற்படும் துயரங்களையும், துன்பங்களையும், விலக்கவும் இயலாது. அப்படியே அவர்கள் கோபிக்காமல் பொறுத்தாலும், மனத்தளவில் கலங்கினால், அந்தத் தீவினையின் விளைவு பிறவி தோறும் பிழை செய்தோரைத் தொடர்ந்து வருத்தும்.

மேன்மைப் பண்பற்றவர்கள், பொன்னையும், பொருளையும் வாரிக் கொடுத்தாலும் கற்றறிந்த சான்றோர் பெருமக்களின் நட்பும், ஆதரவும் கிடைப்பது அரிதினும் அரிதான விஷயம். ஆனால், முன்வினைப் பயன் காரணமாக எந்த முனைப்பும் இல்லாமல், பொன், பொருள் உள்ளிட்ட எவற்றையுமே காணிக்கையாகத் தராமல், தானாகவே பெரியோரின் நட்பு சில பேதைகளுக்குக் கிட்டும். இத்தகைய அருமை பெருமையான வாய்ப்பு கிடைத்தாலும் கூட, அறிவிலிகள் அதைப் பயன்படுத்தி நன்மை பெறாமல், வீணாகக் கழிக்கின்றனரே! பெரியோரை அவமதிப்பது மட்டுமின்றி, அவரது தொடர்பு வலியக் கிடைத்தும், அதை நன்மைகளுக்கு உபயோகப்படுத்தாமல் வீணாக்குவது கூடப் பெரும் பிழையாகும்.

மதித்தாலும், அவமதித்தாலும், இரண்டையும் சமமாகக் கருதும் உயர்ந்த குணம் கொண்டவர்கள் அறிவில் சிறந்த ஆன்றோர் பெருமக்கள். இது பெரியோர்களுக்கு மட்டுமே உரித்தான போற்றத்தக்கத் தன்மைகளாம். நற்குணம் இல்லாதோர், ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்காத கீழ்மக்கள் பேசும் இழிவான பழிப்புரை அல்லது வாயாரப் பாராட்டும் புகழுரை, இரண்டையுமே, தெளிந்த நூல்களைக் கற்றறிந்த பெரியோர், தாழ்வாகவோ, உயர்வாகவோ எண்ண மாட்டார்கள். ஒரு பொருட்டாகவும் மதிக்க மாட்டார்கள். அற்பர்கள் தூற்றினாலும் சரி, போற்றினாலும் சரி, அதனால் பெரியோர்களுக்கு ஏற்றமும் இல்லை, இறக்கமும் இல்லை.

படமெடுத்து ஆடுகின்ற ஒளிபொருந்திய கருநாகம் ஆழமான வெடிப்பு நிலத்தில் பதுங்கி இருக்கும். இருப்பினும், செவிப்பறை கிழிய, வானத்தில் தொலைதூரத்தில், பேரொலியுடன் இடி முழங்கினால், அந்த இடியோசை கேட்டு பாம்பு அஞ்சும். அதுபோல், பெருமைக் குணமுடைய பெரியோர் கோபம் கொண்டால், அவரது கோபத்துக்குக் காரணமான பிழை செய்தோர், யாரும் நெருங்க முடியாத பலத்த பாதுகாப்புள்ள கோட்டைக்குள் பதுங்கி இருந்தாலும், சான்றோர் கோபத்திலிருந்து தப்பிப் பிழைக்க முடியாது.

நான் யார் தெரியுமா? என்னுடைய கல்வியறிவை நீங்கள் அறிய மாட்டீர்கள். என்னுடைய செல்வாக்கு உங்களுக்குத் தெரியாது? என்னைப் போன்றவர் இந்த உலகில் யாருமில்லை, என்றெல்லாம் நம்மை நாமே உயர்த்திப் பேசுவதாலோ, சிறப்பித்துக் கொள்வதாலோ, எந்தப் பயனும் இல்லை. எந்தப் பெருமையையும் தராது. இவ்வாறாகச் சிறியோரே தற்பெருமை கொள்வர். அறத்தை அறிந்து அதன் வழி நடக்கும் பெரியோர் தம்மைத் தாமே அருமையானவர், கல்வியறிவு மிக்க சான்றோர் எனத் தம்பட்டம் அடிப்பதில்லை. தனக்குத் தானே மகுடம் சூட்டுவதில்லை. தற்புகழ்ச்சி செய்து கொள்வோர் என்றென்றும் பெரியோர் ஆகார். நற்குணங்கள் உள்ளோரே பெரியோர். இன்னார் பெரியோர் எனச் சான்றோர் எவரை ஏற்று மதிக்கிறாரோ அவரே உயர்ந்தோர் மற்றோர் தாழ்ந்தோர்.

நீண்ட நெடிய கடலின் குளிர்ச்சி பொருந்திய கரையை உடைய நாட்டின் தலைவனே! சூரிய உதயம் தொடங்கி உச்சி வெயில் வரையிலான முற்பகல் நிழலுக்கும், நண்பகல் தொடங்கி சூரிய அஸ்தமனம் வரையிலான பிற்பகல் நிழலுக்கும் வேறுபாடு உண்டு. முற்பகல் நிழல் முதலில் நீண்டு பிறகு படிப்படியாகக் குறைந்து கொண்டே போகும். பிற்பகல் நிழல் முதலில் குறைந்து படிப்படியாக நீண்டு கொண்டே போகும். அதுபோல், கீழ்க்குணம் கொண்ட அற்பர்களுடனான நட்பு முற்பகல் காலை நேர நிழல்போல் முதலில் நீண்டாலும் பின்னர் குறையும். மாறாக உயர்குணம் கொண்ட மேன்மக்களுடனான நட்பு பிற்பகல் மாலை நேர நிழல்போல் தொடக்கத்தில் குறைந்தாலும் பின்னர் நீளும். சிறியோர் நட்பு குறையும். பெரியோர் நட்பு வளரும். எனவே பெரியோரைப் பழிக்காது, அவர்தம் நட்பைப் பேணிப் போற்றிப் பாதுகாக்க வேண்டும்.

அது, பரந்து விரிந்த நீண்ட கிளைகளோடும், அவற்றில் நெருக்கமான தளிர்களையும், இலைகளையும் கொண்ட பிரம்மாண்ட மரம் ஆகும். தம்மிடம் நிழல் தேடி வருவோரிடம் அது தகுதியைக் காண்பதில்லை. வேண்டியவர் வேண்டாதவர் என வித்தியாசம் பார்ப்பதில்லை. தன்னிடம் நெருங்கி வரும் அனைவருக்கும் அம்மரம் தேவையான குளிர் நிழலைத் தருகிறது. அதுபோல், இடைவிடாது நெருங்கி இருப்பவர்கள் மட்டுமே, அரசனது அளவற்ற செல்வத்தையும், பொது மகளிரின் அழகையும், அனுபவிக்க இயலும். தம்மிடம் வருவோர் உயர்ந்தோர், தாழ்ந்தோர், இன்னார், இனியார், என்ற பேதம் பார்ப்பதில்லை. இதற்கென எந்தப் பிரத்யேகத் தகுதியும் தேவை இல்லை என்பது கருத்தாகும். பெரியோர் சிறியோர் எனப் பேதம் பார்க்காமல் மன்னர் அனைவரையும் (பொது மகளிரைப் போலவும், மரத்தைப் போலவும்) ஒன்றெனக் கருதுதல் தவறாகும். இது பெரியாரைப் பிழைத்தலுக்குச் சமம் எனப் பொருள் கூறுவாரும் உண்டு. தன்னை நாடி வரும் அனைவர்க்கும் எதிர்பார்ப்பின்றி நிழல் தரும் மரத்தையும், தன்னைத் தேடி வரும் எல்லோர்க்கும் எதிர்பார்ப்போடு சுகம் தரும் பொது மகளிரையும், சம நிலையில் வைத்த காரணம் ஆய்வுக்கு உட்பட்டது.

வற்றாத கரிக்கும் நீரைக் கொண்ட மிகப் பெரிய கடலின் கரையைக் கொண்ட நாட்டின் தலைவனே! சிறந்த நூல்களைக் கற்காத, மெய்ப்பொருள் விளங்கும்படி ஆராயும் திறனற்ற, அறிவிலிகளுடன் வைத்திருந்த நட்பு பிரிந்தால் கூட, அது மிகப் பெரிய வருத்தத்தைத் தரும். அறிவில்லாத மூடர்களுடனான நட்பு முறிந்தாலே துன்பத்தைத் தரும் எனில், அறிவில் சிறந்த சான்றோர் பெருமக்களுடனான நட்பு முறிந்தால் அடையும் துயரத்தின் அளவைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. எனவே, எவரோடும் நெருக்கமான நட்பு பாராட்டாமல், ஆத்மார்த்தமாகச் சிநேகம் கொள்ளாமல் இருத்தல், கோடி நன்மை பெறும். நட்பு பிரிந்து துன்பப்படுவதை விடவும், நட்பு கொள்ளாமல் இருத்தலே நலமாகும். பெரியோரிடம் பிழை செய்தால் மட்டுமே பிரிவு வரும். எனவே பெரியோரோடு மதிப்பும் மரியாதையோடும் பழகுதல் வேண்டும் என்றும், சிறியருடன் பழகுதல் வேண்டாம் என்பதும் கருத்தாம்.

கற்க வேண்டிய நூல்களைக் கற்காமல் வீணாகக் கழித்த நாள்களும், சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளப் பெரியோரிடம் செல்லாமல் காலத்தைத் தண்டமாகக் கழித்த தினங்களும், வறியவர்களுக்குத் தன்னால் இயன்ற தான தர்மத்தைக் கொடுக்க முடிந்த பொருளைக் கொடுக்காமல் பயனின்றிக் கழித்த பொழுதுகளும், நற்குணம் கொண்ட பெரியோரிடத்துக் காணப்படா. கல்லாமை, பெரியோரிடம் செல்லாமை, ஈயாமை ஆகியவை தீய குணங்களாகும். கற்றறிந்த சான்றோர் பெருமக்கள் கால நேரத்தை வீணே கழிக்காமல், ஒவ்வொரு நாளும் செய்ய வேண்டிய நற்செயல்களைத் தவறாமலும், பயனுள்ள வகையிலும் செய்வார்கள்.

தற்பெருமை பேசாமை, ஆடம்பரம் கொள்ளாமை, செருக்கின்மை, எளிமை, பணிவு ஆகியவை பெரியோரிடம் உள்ள குணங்களாகும். ஒப்பும் உயர்வுமற்ற பரம்பொருளையே தியானித்துக் கொண்டு வீடு பேற்றை விரும்பும் மெய் ஞானிகளுக்கு உரிய பண்பாவது, மனம், மொழி, மெய்களின் அடக்கமுடைமை ஆகும். ஆராய்ந்து பார்க்கின், பொருட் செல்வம் உடையோர் என்றாலும், தம்மிடம் அடைக்கலம் தேடி வந்தோர் வறுமைத் துன்பத்தைப் போக்கினால் மட்டுமே உண்மையான செல்வர் ஆவார். கையில் பொருளிருந்தும், வறியோர்க்கு ஈதல் என்னும் நற்குணம் இல்லாதோர் செல்வந்தர் ஆக மாட்டார்.

(தொடரும்)

பகிர:
ஜனனி ரமேஷ்

ஜனனி ரமேஷ்

எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். ‘திருவள்ளுவர்’, ‘தமிழ் அறிஞர்கள்’ உள்ளிட்ட நூல்களும் ‘ஔரங்கசீப்’, ‘தேசத் தந்தைகள்’ உள்ளிட்ட மொழியாக்கங்களும் வெளிவந்துள்ளன. கட்டுரைகளும் எழுதிவருகிறார். விருதுகள் பெற்றவர். தொடர்புக்கு : writerjhananiramesh@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *