18. நல்லினம் சேர்தல்
நாம் நல்லவர்களாக இருக்க வேண்டியது அவசியம். இதில் மாற்றுக் கருத்துக்கு இடமேயில்லை. நாம் நல்லவர்களாக நடந்தால் மட்டும் போதாது. நம்மைச் சுற்றியிருப்பவர்களும் நல்லவர்களாக விளங்க வேண்டும். அவர்கள் தீயவர்களாக இருப்பின், விரைவில் நமது நற்பண்புகளும் அழிந்துவிடும். நாமும் தீயோராக மாறக் கூடும். எனவே நல்லாரோடு சேர்ந்து வாழ்தலும் முதன்மையானது என்பது சான்றோர் கருத்தாகும். ‘உன் நண்பர்கள் யாரெனச் சொல்? உன்னைப் பற்றிக் கூறுகிறேன்’ என்று சொல்லக் கேட்டிருக்கிறோம். இனத்தால் ஒருவன் மதிக்கப்படுகிறான் என்ற உண்மையும் வலியுறுத்தப்படுகிறது. ‘நட்பு ஆராய்தல்’ என்னும் அதிகாரம் போன்று ‘நல்லினம் சேர்தல்’ தனித்தன்மை கொண்டதாகும். நாம் இணைந்திருக்கும் கூட்டத்திலுள்ள ஒவ்வொருவரும், நமக்கு நன்கு அறிமுகமானவர்களாகவும், நல்லவர்களாகவும், இருக்க வேண்டும் என்னும் அவசியமும் இல்லை, அது சாத்தியமும் இல்லை. ‘இன்னார் இந்த இனத்தைச் சேர்ந்தவர்’ என்ற ஒற்றை அடையாளமே அந்த இனத்துக்குரிய பெருமையைத் தந்துவிடும். நாம் நன்னெறியில் செல்வதுடன், நம்மைச் சேர்ந்தவர்களையும் தீநெறியிலிருந்து விலக்கி, நன்னெறியில் செலுத்தவல்ல குணம் கொண்டோரே பெரியோர் ஆவர்.
நன்மை தருவன இவையென்றும், தீமை விளைவிப்பன இவையென்றும், பிரித்துப் பார்த்து அறிய இயலாத இளம் பருவம். அந்தச் சிறு பிராயத்தில், ஒழுக்கமற்ற தீயவர்களோடு திரிந்தும், அயோக்கியர்களுடன் சேர்ந்து முறையற்ற செயல்களைச் செய்தும், குற்றங்கள் இழைத்தும், சேர்த்த பாவங்கள் அதிகம். இவ்வாறு சேர்ந்த பழி பாவங்கள் நீங்குவதற்கான ஒரே வழி, நல்வழியை உணர்த்தவல்ல பெரியோர்களுடன் இணைவதுதான். புல்லின் மீது படர்ந்துள்ள பனித்துளிகளைச் சூரியன் தனது கதிர்கள் மூலம் நீக்குகிறான். அதுபோல் புல்லாருடன் பழகியதால் சேர்ந்த பழிபாவங்கள், நல்லவர்களுடன் இணைவதன் மூலம் அகன்றுவிடும். நல்லினத்துடன் சேர்ந்தால் செய்த பாவங்களும், குற்றங்களும் விலகும் என்பது கருத்தாகும்.
எப்போதும் அறநெறி சார்ந்த தர்மத்தின் வழியை அறிந்து நடந்து கொள்ளுங்கள். நமது உயிரைப் பறித்துச் செல்ல எந்நேரமும் யமன் வரலாம் என்று அஞ்சி நல்லறங்களையே செய்யுங்கள். பிறர் கூறும் கடுமையான சொற்களுக்குப் பதிலுக்குப் பதில் இழிசொற்களை உரைக்காமல் பொறுத்துக் கொள்ளுங்கள். உங்கள் மனத்தில் புகா வண்ணம் வஞ்சக எண்ணங்களையும், செயல்களையும், விட்டொழியுங்கள். தீயோர் நட்பையும், தொடர்பையும், அறவே வெறுத்து ஒதுக்குங்கள். கற்றறிந்த அறிவார்ந்த பெரியோர் சான்றோர் பெருமக்கள் வாயிலிருந்து வரும் சொற்களை அறவுரைகளாக, தேவர்களின் ஆசீர்வாதமாகப் பெற்று மகிழுங்கள்.
நல்லறிவு தரும் நூல்களை ஆராய்ந்து பார்க்கையில், தாய், தந்தை, மனைவி, குழந்தைகள், உடன் பிறந்தோர், உற்றார், உறவினர், பழகிய நண்பர்கள் ஆகியோர் ஒரு கட்டத்தில் இறப்பதும், இன்ன பிற காரணங்களால் நம்மை விட்டு நீங்குவதும், இயற்கையாம். இவற்றுடன், மருந்துகளாலும் குணப்படுத்த முடியாத நோய்களும், பொருள் அழிவும், தீங்குகளும், இந்த உடலைப் பெற்ற மனிதர்களை ஒருங்கே வந்து சேர்ந்து வாட்டும். இவை அனைத்தும் இந்த மண்ணில் நாம் தோன்றியது முதல் மறையும் வரை, நம்மைத் தொடர்ந்து வாட்டி வதைத்துக் கொண்டே இருக்கும். எனவே, இன்று நேற்று தொடங்கியது என்றில்லாமல், காலம் காலமாகத் தொடர்ந்து வரும் இந்தப் பிறப்பானது, இன்பம் தராது, துன்பத்தையே தரும். எனவே, இந்த உண்மையை உணர்ந்த, பேரறிவு கொண்ட ஞானியரை, பெரியோரை, அறநெறியில் வாழும் சான்றோரைச் சென்றடைந்து, நெஞ்சம் அமைதி பெற வேண்டும்.
ஆராய்ந்து காண்கையில், மரணம், நோய், வறுமை, மூப்பு என எல்லா வகைகளிலும் இந்த மனிதப் பிறப்பு துன்பம் தருவதுதான். ஆனாலும், துயரம் தரும் இப்பிறப்பை இனிமையாக மாற்றிக் கொள்ள வாய்ப்புள்ளது. அது எவ்வாறு எனில், நல்லறம் செய்யும் மனத்தை உடைய கற்றறிந்த ஞானிகளுடன், ஆயுள் முழுவதும் அன்பு செலுத்தி, பிரியாமல் அவர்களுடன் நட்போடு பழக வேண்டும். அத்தகைய நல்லோருடனான நட்பு, துன்பம் தரும் பிறப்பைக் கூட இனிமையாக மாற்றிவிடும். சான்றோர், யாரையும் வெறுக்காமல் அனைவர் மீதும் விருப்பம் கொள்ளும் குணம் உடையவர்கள். பெரியவர்களுடனான நட்பும் தொடர்புமே, பிறப்பைப் பயனுள்ளதாகவும், அர்த்தமுள்ளதாகவும் மாற்றும்.
ஊரிலுள்ள கழிவு நீர்த் தொட்டிகளிலிருந்து வழிந்து செல்லும் சாக்கடை நீரானது, சிறப்புப் பொருந்திய ஆற்று நீருடன் கலந்தால், கழிவு நீரும் மேன்மை பெற்று, ஆற்று நீர் என்றே அழைக்கப்படும். சாக்கடை நீர், புனிதமான ஆற்று நீருடன் கலந்தால், அதுவும் புனிதமடைந்து புண்ணிய தீர்த்தம் என்றே அழைக்கப்படும். அதுபோல், குலப் பெருமை இல்லாத அறிவிலிகள், மதிக்கத்தக்க, நற்குடிப் பிறந்த, ஆன்றோர், சான்றோர், கல்வியறிவு பெற்ற ஞானியரோடு கலந்தால், மலைபோல் உயர்ந்து சிறப்புடன் விளங்குவர். பெரியாரோடு சேர்ந்தால் சிறியாரும் பெருமை பெறுவர்.
உயர்ந்த அழகிய அகன்ற இடத்தை உடைய ஆகாயத்தில், ஒளிரும் கதிர்களைக் கொண்ட பிரகாசமான சந்திரனோடு, முயலும் சேர்ந்திருப்பதாக நம்பிக்கை. சந்திரனைப் பழங்காலம் முதற்கொண்டே வணங்கி வருதல் வழக்கமாகும். முயலை வணங்க வேண்டும் எனக் கருதாவிட்டாலும், சந்திரனை வணங்கும் போது அதிலுள்ள முயலையும் இணைத்தே தொழுவார்கள். (பழங்கால இந்தியாவில் மட்டுமின்றி உலகெங்கும் உள்ள மக்கள், சந்திரனில் உள்ள இருண்ட அடையாளங்கள் முயலின் வடிவத்தைப் போலிருப்பதாகக் கருதினர். சந்திரனிலுள்ள களங்கத்தை முயலாகவும், மானாகவும், மலையாகவும், மரமாகவும், பூமியின் நிழலாகவும் கருதினர். இவற்றின் அடிப்படையில் சந்திரனில் முயல் இருப்பதாகக் கருத்தில் கொண்டு பாடலுக்கான உரையைப் படிக்கவும்). அதுபோல், சிறியோர் குறைந்த அளவே சிறப்புகள் உள்ளவர் என்றாலும், மலைபோல் வானுயர்ந்த சிறப்புள்ள பெரியோருடன் நட்பை வளர்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு, பெரியாரோடு இணைந்த காரணத்தால், சிறியாரும் மேன்மை அடைவர். சந்திரனோடு சேர்ந்த முயலும் தொழப்படுவதுபோல், பெரியாரோடு சேரும் சிறியாரும் மதிக்கப்படுவர்.
நன்கு ஆராய்ந்து பார்க்கும்போது, வெண்ணிறப் பாலோடு, நிறமற்ற தண்ணீரைக் கலந்தால், வெள்ளை நிறப் பாலின் நிறத்தைத் தண்ணீர் பெறுமே தவிர, நிறமில்லாத அதன் தன்மையை வெளிக்காட்டாது. பாலோடு கலக்கும் நிறமற்ற தண்ணீரும் வெள்ளை நிறமாக மாறிவிடும். அதுபோல் தீய குணங்கள் கொண்ட சிறியோர், கற்றறிந்த சான்றோர் பெரியாரோடு சேரும் போது, அவர்களின் அற்பத்தனமும், சிறுமையும், தீய குணங்களும் வெளியே தெரியாது. சிறியாரின் குணம் முற்றிலும் மாறாது எனினும், பெரியோருடன் பெருமைக் குணத்துடன் சேர்வதால், அவர்களும் மதிக்கப்படுவர்.
வயல் வெளிகளில் புன்செய் மற்றும் நன்செய் நிலங்களின் எல்லைகளிலுள்ள மரக்குற்றியோடு (மரத்தை வெட்டிய பின் எஞ்சியிருக்கும் அடிப்பகுதி) சேர்ந்து புற்களும் முளைத்திருக்கும். அவை எளிதில் களைந்து எடுக்கத்தக்க வலிமையற்ற புற்களே என்றாலும், உழவர்களின் உழுபடையின் (கலப்பை) மொழுமுனையால் அவற்றை அசைக்கக் கூட இயலாது. புற்கள் மென்மையானவை என்றாலும், வலிமையுள்ள மரக்கட்டையோடு சேர்ந்திருப்பதே அவற்றை அகற்ற முடியாததற்குக் காரணமாகும். அதுபோல், பலமற்ற மென்மையானவர்களே என்றாலும், கற்றறிந்த நல்லினப் பெருமக்களுடன் சேர்ந்தால், பகைவரின் சினம் செல்லுபடி ஆகாமல் போய் விடும். சான்றோர் துணையும் நட்பும் இருந்தால், சிறியோர் மீதான பகைவர் கோபமும், செயல்களும், பயனற்றதாகிவிடும்.
நிலத்தின் தன்மை பொறுத்தே பயிர் செழிக்கும். விளைநிலமாக இருந்தால் அதன் வளம் காரணமாக நெற்பயிர் நன்றாக வளர்ந்து பெருகும். அதுபோல் மனிதர்களும், தாங்கள் சேர்ந்திருக்கும் கூட்டத்தின் கல்வியறிவு, நல்லொழுக்கம், நல்லியல்புகள் காரணமாகச் சான்றாண்மை உடையவராகி மேன்மக்கள் ஆவர். மரக்கலம் அல்லது கப்பல் எவ்வளவுதான் திண்மையாகவும், உறுதியாகவும் இருந்தாலும், திடீரென வீசும் கடுங்காற்று அதைக் கவிழ்த்து மூழ்கடித்துவிடும். அதுபோல் ஞானமும், கல்வியும், அறிவும், சான்றாண்மையும் கொண்ட மேன்மக்களின் உயர் பண்பு, தீய குணமுள்ள கூட்டத்தினரோடு சேர்ந்தால் கெட்டு அழிவது திண்ணம். துர்க்குணம் கொண்டோர் தாம் தீயராக இருப்பதுடன், தம்முடன் சேர்வாரையும் தீயராக்கிக் கெடுத்து அழித்துவிடுவர். எனவே நல்லினமே சேர்தல் வேண்டும்.
நற்குணம் கொண்டவரே என்றாலும், மனத்தால் குற்றம் இல்லாதவரே என்றாலும், சேருமிடம் தீயோராக இருந்தால், கற்றறிந்த அறிவுடையோரால் அவமதிக்கப்படுவர் அல்லது இகழப்படுவர். இயற்கையிலேயே நற்குணம் உடையவர் எனினும், சேர்க்கை தவறாக இருப்பின், சான்றோரால் நிந்திக்கப்படுவர். அடர்ந்த காட்டில் தீப்பிடித்துக் கொண்டால், அந்த வனத்திலுள்ள எல்லா மரங்களும் எரிந்து சாம்பலாகும் என்பது அறிந்த விஷயமே. அக்காட்டிலுள்ள நறுமணம் வீசும் வாசனை மிகுந்த சந்தன மரங்களும், வேங்கை மரங்களும், ஏனைய மரங்களுடன் சேர்ந்து தீயில் வெந்து போகும். தீ, எவ்வாறு, அனைத்தையும் எரிக்கும் தன்மை கொண்டதோ, அவ்வாறே, தீயோரும் எல்லோரையும் அழிக்கும் குணம் உள்ளவர்.
19. பெருமை
பெருமை என்பது பெருந்தன்மை என்றே பொருள்படும். எந்தச் சூழலிலும், எந்தக் காலத்திலும், மனத்திலே கலக்கம் கொள்ளாமல், செய்ய வேண்டிய அறநெறிகளைச் செய்து, உயர்வை நிலைநிறுத்திக் கொள்ளும் உறுதிப்பாடாகும். இத்தகைய பெருமைதான் வாழ்விலே பலரும் போற்றும் புகழ் வாழ்வை ஒருவனுக்குத் தரும். தன்னளவில் சிறந்த பல நற்செயல்களைச் செய்தோம் என்னும் மன நிறைவையும் அளிக்கும். எனவே, இத்தகையப் பெருமையை அடைவதில் மனத்தைச் செலுத்துவது அனைவரின் கடமையாகும். நல்லினம் சேர்வதால் கிடைக்கும் பெருமையை முந்தைய அதிகாரத்தில் கண்டோம். மன உறுதிப்பாட்டால் கிடைக்கும் அத்தகைய பெருமையை இந்த அதிகாரம் விளக்குகிறது.
இல்வாழ்க்கைக்குப் பெருமை தருவது பொருளும், இளமையும் ஆகும். இவை இல்வாழ்வின் இரு கண்களாகக் கருதப்படும். பொருள் வளம் இல்லாத காரணத்தால் நம்மிடம் இரப்பவர்களுக்கு எந்த உதவியும் செய்ய முடியாமல் போகிறது. இளமைப் பருவமும் நம்மை விட்டு நெடுந்தூரம் விலகிச் சென்றுவிட்டது. இதனால் நம் மீது முன்பு அன்பு கொண்டு காதலித்த மங்கையர் விருப்பம் கொள்ளாததுடன், நினைப்பது கூட இல்லை. தற்போது பிச்சை கேட்போருக்குக் கொடுக்கப் பொருளும் இல்லை. சுக போகங்களை அனுபவிக்கும் இளமையும் இல்லை. இல்வாழ்வுக்கு அவசியமான இவ்விரண்டும் கை நழுவிப் போன நிலையில், சிற்றின்பத்தின் மீது ஆசை கொண்டு தடுமாறுவதில் கிடைக்கும் பயன்தான் என்ன? எதுவும் இல்லை. எனவே பொருள் ஆசை, பெண் ஆசை, மீதுள்ள விருப்பத்தை விட்டுவிட்டுத் துறவு நெறி மேற்கொள்வதே சிறப்பாம். இல்லறத்துக்கு அவசியமான பொருளும், இளமையும் போன பிறகு துறவறமே பெருமை தரும்.
கல்வி கற்காத அறிவிலார், இல்வாழ்வுக்கு உரிய மண், பொன், பெண் ஆகியவற்றால் தேவையான இன்பங்களைப் பெற்று நன்றாக வாழ்கிறோம் என நினைப்பர். எனவே இவ்வுலகில் நமக்கு எந்தக் குறையும் இல்லை எனக் கருதி இல்லறச் சுகத்திலேயே மூழ்கிக் கிடப்பர். பின்னர் வரும் துன்பத்தை மறந்து நடப்பர். மண்ணும், பொன்னும், பெண்ணும் நிலைபெற்று நீடித்த இன்பத்தை எந்நாளும் தருவனபோல் காணப்பட்டாலும், அவை நிலை பெறாதவை ஆகும். அழியும் தன்மை கொண்டவை ஆகும். இந்த உண்மையைக் கற்றறிந்த அறிவுள்ள மேன்மக்கள் மட்டுமே உணர்ந்து அவற்றின் மீது எக்காலத்திலும் பற்றோ, ஆசையோ, விருப்பமோ கொள்ளார். கை நழுவிப் போனாலும், வருத்தமும் அடையார். எனவே இல்வாழ்வின் நிலையாமை உணர்ந்து இளமையில் துறவறம் பூண்டு ஒழுகுதலே பெருமையாகும்.
உடலின் நரை, திரை, மூப்பு, இளமை, நிறம் உள்ளிட்ட தன்மைகள் மாறிக் கொண்டே இருக்கும். மேலும் நோய், வறுமை, பசி, பட்டினி ஆகியவையும் வாட்டி எடுக்கும். காரணமே தெரியாமல் வருத்தம் தருவதற்குரிய இடையூறுகள் நேரும். இவை அனைத்தையும் கற்றறிந்த அறிவுடைய மேன்மக்கள் உணர்ந்தே உள்ளனர். ஆகவே, மறுமை இன்பத்துக்கான நற்செயல்களையும், அறத்தையும் துணிந்து செய்வார்கள். உலக இன்பங்களில் மயக்கம் கொள்ளார். சிறுமைச் செயல்களிலும் ஈடுபடார். எனவே உடலின் நிலையாமையையும், காரணமின்றி வரும் மாறுபாடுகளையும் உணர்ந்து, மறுமைக்கான அறத்தைச் செய்து துன்பமின்றி வாழ்தலே பெருமையாம்.
கரு மேகங்கள் இன்றி மழை பெய்யாமல் பொய்த்த காலத்திலும், கிணறு / குளம் தனது ஊற்று நீரை பயிர்களுக்கு இறைத்தும், மக்களுக்கு அருந்தக் கொடுத்தும் உயிர்களைக் காப்பாற்றும். அத்தகைய வலிமையும், தன்மையும், ஊற்று நீரைச் சுரக்கும் கிணற்றுக்கு / குளத்துக்கு உண்டு. அதுபோல், தானம் தர்மம் செய்வதைக் கடமையாகக் கொண்ட கற்றறிந்த மேன்மக்கள், வறுமையினால் தளர்ந்து போன காலத்திலும், ஏதோவொரு வகையில் பிறர்க்கு உதவி செய்வர். அந்த ஈகைக் குணம் வறுமை நிலையிலும் பெரியோரை விட்டு நீங்காது. ஆனால், சிறியோரிடம் செல்வம் ஏராளமாகக் குவிந்து கிடந்தாலும், வறியவர்க்குக் கொடுக்கும் ஈகைக் குணம் அவர்களிடம் உண்டாகாது. வறுமையிலும் கொடை பெரியோர் பெருமை ஆகும்.
மாதம் மும்மாரி பெய்து உலகைச் செழிப்புற வைத்தது. வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி மிகுந்த நீரை பயிர் விளைச்சலுக்கும், மக்கள் அருந்தவும் வழங்கியது. ஆனால் திடீரென மழை பொய்த்துப் போனது. இருப்பினும் தண்ணீர் வற்றிய காலத்திலும், தன்னிடம் உள்ள ஊற்றைத் தோண்டுவோர்க்கு நீரைச் சுரந்து ஊட்டும் தன்மை கொண்டவை ஆறுகள். இத்தகைய ஆறுகளைப் போன்றவர்கள் பெரியோர்கள். தம்மிடம் உள்ள சொத்துக்கள் அனைத்தையும் பிறர்க்கு வாரிக் கொடுத்ததால், செல்வம் இழந்து வாடிய போதும், சக்திக்கு ஏற்றவாறு உதவுவார்கள். எந்த வகையிலேனும், தம்மை நாடி வந்தவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் கொடுக்கும் ஈகைக் குணம் கொண்டவர்கள் சான்றோர்கள். வற்றிய நிலையிலும் ஊற்று நீரைத் தந்து உதவும் ஆறுபோல், வறுமை நிலையிலும் இருப்பதைக் கொடுத்து உதவுவர் பெரியோர். அள்ளிக் கொடுக்க முடியாத நிலையிலும், கிள்ளிக் கொடுக்கும் ஈகைக் குணமே பெரியோர் பெருமையாகும்.
நெடிதுயர்ந்து மேகங்களை உரசும் மலைகளைக் கொண்ட நாட்டின் அரசனே! வெள்ளை வெளேரென்று வெண்மை நிறம் கொண்ட எருதின் மீது தீயினால் சுட்ட வடு பளிச்செனக் கண்களுக்குப் புலப்படும். அதுபோல் பெரியோரிடத்தே தோன்றும் தீமையானது, சிறிதே எனினும், எல்லோருக்கும் எளிதாகத் தெரியும். ஆனால் சிறியோர் அதே பெரிய வெள்ளை எருதைக் கொல்வதைப் போன்று தீய செயல்களைச் செய்தாலும், அக்குற்றம் பெரிய அளவில் வெளிப்படாமல் தானாகவே மறைந்துவிடும். பெரியோர் கடுகளவு தவறு செய்தாலும் பரவலாகத் தெரியும். ஆனால் சிறியோர் மலையளவு குற்றம் இழைத்தாலும், அது புலப்படாது. எனவே பெரியோர் எந்தப் பிழையும் செய்யாமல், ஒழுக்கம் நெறியில் வாழ்வதே பெருமையாகும்.
அற்பத்தனம் மிக்க, நற்குணமற்ற, நல்ல இயல்புகள் இல்லாத தீயோருடன் கொள்ளும் நட்பும், உறவும், என்றென்றும் துன்பமே தரும். ஆனால், விளையாட்டாகக் கூட, நடுக்கம் தரும் தீய செயல்களைச் செய்ய, நல்லறிவு கொண்ட பெரியார் அஞ்சுவர். அத்தகைய சான்றோருடன் நட்பாக இல்லாமல், பகைமையும், விரோதமும், பாராட்டினாலும் கூட, அவை நற்பயனைத் தருமே தவிர துன்பம் தராது. சிறியரோ, நண்பர்க்கும் தீங்கு இழைக்கும் குணம் கொண்டவர்கள். இக்கீழ்மைக் குணம் காரணமாக, சிறியாரோடு நட்பு இருப்பினும், தீங்கு வரின் அதிலிருந்து தப்ப முடியாது. ஆனால், பெரியோரின் பொறுமைக் குணம் காரணமாக, பகை இருப்பினும், தீங்கு வாராது; அப்படியே வந்தாலும் பனிபோல் விலகி விடும். இதுவே பெரியாரின் பெருமையாகும்.
வலிமையற்ற, மென்மைத் தன்மை கொண்டவரிடம் (பெண்கள் என்றும் கூறலாம்), அவரை விடவும் மிருதுவாகவே நடந்து கொள்ளுங்கள். மென்மைத் தன்மையற்ற, வலிமை மிகுந்த, பகைவரிடம், யமனும் அஞ்சத்தக்க வகையில் அவரை விடவும் பயங்கரமாகத் தோன்றுங்கள். உண்மையை உரைக்காமல் எந்நாளும் எப்போதும் பொய் பேசுவதையும், வஞ்சகம் செய்வதையும், தொழிலாகக் கொண்டோரிடம், அவரை விடவும் பொய்யுரைத்தும், வஞ்சமாகப் பேசுங்கள். ஆனால் கற்றறிந்த நல்லோரிடம், நற்குணம் உள்ளோரிடம், மேன்மக்களிடம், நல்லவராகவே பழகி, அவர்களின் அன்பைப் பெறுதல் அவசியமாகும். அயோக்கியரிடம் அயோக்கியராகவும், யோக்கியரிடம் யோக்கியராகவும் நடப்பதே பெருமையாகும். இதுவே வாழ்க்கையின் சட்டமாகவும், பழக்கத்தின் வரம்பாகவும் அமைதல் கட்டாயமாகும்.
முகத்தைக் கடுகடுப்பாக வைத்துக் கொண்டு, பிறர் மனம் நோகும்படியும், கலங்கும்படியும், அவர்களைப் பற்றிக் குறளை அதாவது கோள் சொல்லிக் கொண்டு திரியும் குணம் உடையோர் கல்வி கற்காத அறிவிலிகள். ஆனாலும், மனத்திலே எந்தவொரு சலனமும் இல்லாமல், வேறுபாடும் இன்றி, கலக்கம் கொள்ளாதவர் எவரோ, அவர்களே உயர்ந்தவர்கள். விளக்கிலிருந்து ஒளிரும் வெண்சுடர் தன்னைச் சேரும் அல்லது சாரும் பொருள்களைச் சுட்டெரிக்கும். மற்றபடி அப்பொருள்களால் தீச்சுடருக்கு எந்தத் தீங்கும் நேராது. அதுபோல், மூடர்களின் புறங்கூறல்களுக்குப் பெரியோர் செவி மடுத்துக் கலங்கவும் மாட்டார் அவர் சொல்வதை நம்பி மற்றவர்கள் மீது ஐயமும் கொள்ளவும் மாட்டார். தீச்சுடர்போல் தூய குணமே மேன்மக்கள் பெருமையாகும்.
சான்றோர்கள் தாங்கள் உண்பதற்கு உரிய உணவு இரு கவளங்கள் மட்டுமே என்றாலும் கவலை கொள்ளார். இரண்டில் ஒரு கவளத்தை, தினமும், தான தருமம் உள்ளிட்ட அறப் பணிகளுக்குக் கொடுத்து விடுவர். மீதமுள்ளது, ஒரேயொரு கவளமே என்றாலும், அதை மகிழ்ச்சியுடன் உண்டு களிப்பர். அவ்வாறு பிறர்க்கு வழங்கிய பின்னர், மீதம் இருக்கும் உணவை உண்பது மேன்மக்களின் நற்குணமாகும். இந்த அறச்செயல் காரணமாகக் காமம், வெகுளி, மயக்கம் ஆகிய மூன்று குற்றங்களால் வரும் பாவங்களும் நீங்கப் பெறுவர். மேலும், வாழ்நாள் முடியும் வரை துன்பங்களும், துயரங்களும் அவர்களை அண்டாது. இருப்பதைப் பகிர்ந்து, பசித்தவர்களுக்கு உணவளிக்கும் பெரியார் பெருமை போற்றப்படுகிறது.
(தொடரும்)