Skip to content
Home » அறம் உரைத்தல் #14 – நாலடியார் – அரசு இயல் (20)

அறம் உரைத்தல் #14 – நாலடியார் – அரசு இயல் (20)

அறம் உரைத்தல்

20. தாளாண்மை

உயிருக்கு உறுதி அளிக்கின்ற நற்செயல்களைச் செய்வதில் ஒருவனுக்குள்ள தளராத முயற்சி குறித்துக் கூறுவதே ‘தாளாண்மை’ ஆகும். உயிருக்கு நன்மை தராத பல செயல்களில், பற்பலத் தருணங்களில், மயக்க உணர்வு காரணமாக, தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருப்பவன் சாதாரண மனிதன். ஆனால், உயிருக்கு நிலையான நன்மை தருவன இவையே என்று உணர்ந்து, அவற்றில் மட்டுமே ஈடுபட்டு, ஏனையவற்றை விலக்கும், உண்மை அறிவினைக் கொண்ட பெரியோரே தாளாண்மை உடையவர் ஆவர். தளராத உறுதிப்பாட்டுடன், முயற்சிகள் சிதறாமலும், இடையிடையே பழுதுபடாமலும், கட்டுப்பாட்டுடன், நற்செயல்களை நிறைவு செய்யும் ஆற்றல் வேண்டும். இத்தகைய ஆற்றலே ‘ஆண்மை’ எனப்படும். இடைவிடாத முயற்சி, ஆளுமை, நற்செயல்களைக் கைகூட வைக்கும் குணம், பெருமை உடையோர்க்கு இன்றியமையாதவை என்பதால், பெருமை அதிகாரத்துக்குப் பின் வைக்கப்பட்டது. முயற்சி உடையோர்க்கே பெருமை வாய்க்கும்.

அந்தக் குளமானது, கொள்ளுதற்கு உரிய நீரை மிகுதியாகக் கொள்ளாமல், சிறிதளவே கொள்ளுகின்ற தன்மை கொண்டதாகும். இதனால், அக்குளத்தின் கீழ்ப்பகுதியில் விளைகின்ற நெற்பயிரானது, அதில் சிறிதளவு நீர் இருக்கும் வரை மட்டுமே, வளமோடும், செழிப்போடும் விளங்கும். நீர் வறண்டு வற்றிப் போனதும், நெற்பயிரும் தானாகவே வாடி விடும். அதுபோல், எந்தவொரு முயற்சியும் செய்யாமல், உறவினர்கள் தரும் உணவைத் தின்று வாழ்பவர்கள், திடீரென அன்பர்களால் கொடுக்க இயலாத போது துன்புறும் நிலைக்குத் தள்ளப்படுவர். கொடுப்போர் வறுமையில் வாடினால், அவர் தயவில் அத்துணைக் காலம் சோம்பேறிகளாகக் காலத்தைக் கழித்தவர்களும் வருந்த வேண்டியிருக்கும். கத்தி முனைமேல் நின்று நடம்புரியும் நங்கை மிக்க கவனத்துடன் ஆடுவாள். அதே தருணம் தனக்கு எந்த ஆபத்தும் வராத வகையில் நாலாபுறமும் கண்களைச் சுழலவிட்டும் ஆடுவாள். அதுபோல், முயற்சியும், உழைப்பும், கவனமும், சுறுசுறுப்பும் இருப்போரைத் துன்பமும், துயரமும் அண்டாது, ஒரு குறையும் வராது என்பது கருத்தாம்.

காற்றடித்தால் துவண்டு அசைகின்ற கொம்பைக் கொண்ட சிறிய மரக்கன்று. சாலையில் போவோர் வருவோரெல்லாம் பிடித்து இழுக்கும் அளவுக்கு அதன் இளங்கொம்பு தொங்கிக் கொண்டிருக்கிறது. ஆண்டுகள் உருண்டோட அதே மரக்கன்று இப்போது வளர்ந்து வைரம் பாய்ந்த பிரம்மாண்ட மரமாக ஓங்கி வளர்ந்து நிற்கிறது. இப்போது பலம் கொண்ட யானையையே கட்டும் அளவுக்கு வலிமையான தறியாக விளங்குகிறது. அதுபோல் வாழ்வின் தொடக்கத்தில் எளியோனாக இருப்பவன், தன்னுடைய நிலையிலிருந்து தளர்ந்தும், தாழ்ந்தும் போகாமல் கடுமையாக உழைக்க வேண்டும். சோம்பித் திரியாமல், முயற்சி செய்வோனாகத் தன்னை ஆக்கிக் கொண்டால், அவனது வாழ்க்கையும் யானையையே கட்டும் தூண் (கட்டுத்தறி) போல் உறுதி பெறும்.

வலிமை மிக்க புலியானது தனக்குத் தேவையான மிகப் பெரிய மிருகத்தின் இறைச்சி கிடைக்காத போது, அதற்காக உடலை வருத்திக் கொண்டு இறக்காது. இன்றைக்கு இல்லாவிடினும் நாளை பெரிய இறைச்சி கிடைக்கும் எனச் சின்னஞ்சிறு தேரை / தவளை கிடைத்தாலும் கூடப் பிடித்து உண்ணும். அதுபோல், தனக்கேற்ற பெரிய தொழில் எதுவும் கிடைக்கவில்லை எனக் கவலைப்படுவதால் யாதொரு நன்மையும் விளையப் போவதில்லை. மாறாகக் காலால் செய்யத் தக்க சிறிய தொழில் என ஏளனமாக எண்ணாமல், கிடைத்த தொழிலை, கையால் செய்யத்தக்க மேன்மையான செயல் என்றே அறிவுடையோர் நினைப்பர். சிறிய தொழில் என இகழாமல் அதைத் தலையில் வைத்துக் கொண்டாடிச் செய்யத் துணிவர். செய்யும் செயல்களை உயர்வென்றும், தாழ்வென்றும், கருதாமல், தெய்வமென எண்ணல் வேண்டும். சூழ்நிலைக்கு ஏற்றபடி முயற்சியுடன் செய்பவனுக்கு மேலான தொழிலும் கூடி வரும். வாழ்வில் உன்னத நிலையையும் அடைவான்.

கடல் அலைகள் தாழைகள் மீது மோதி அசையச் செய்யும், அழகிய கானற் சோலைகள் சூழ்ந்த குளிர்ந்த கடற்கரைக்கு உரிய தலைவனே! செய்யத் தொடங்கிய ஒரு செயல் எளிதில் முடியாது எனத் தெரிந்தும் அதை விட்டு விடுதல் கூடாது. இடையூறுகளுக்கு அஞ்சாமல், மனம் கலங்காமல், உள்ளம் தளராமல், கடுமையாக முயன்று, கடுமையான அச்செயலைச் செய்து முடிக்க வேண்டும். உடல் வலிமையைப் பறைசாற்றும் இந்த விடா முயற்சியே ஆண்மையாகும். இது ஆண் மகனுக்கான இயல்பாகும். மிக எளிதில் செய்து முடிக்கத் தக்கச் செயல் என்றால் அதை மென்மையான உடல் வாகு கொண்ட பெண்களே செய்து விடுவார்களே! இயற்கையிலேயே உடல் வலிமையுடன் படைக்கப்பட்ட ஆண் கடினமான செயல்களை முயற்சியுடன் செய்து முடிக்கும் உறுதியே தாளாண்மை ஆகும்.

உயர்குடிப் பிறப்பென்றும், இழிகுடிப் பிறப்பென்றும் சொல்லப்படுவன எல்லாம், சொல்லளவில் மட்டுமே இருக்கின்றன. இச்சொற்களுக்கு உரிய சிறந்த பொருள் இருப்பதாகத் தெரியவில்லை. தொன்றுதொட்டு வரும் சிறப்பினை உடைய ஒளியைத் தரும் பொருள், அறம், தவம், கல்வி, முயற்சி ஆகியவற்றால் கூடி அமைவதே உயர்குடி ஆகும். இயற்கையில் நல்ல குணம் என்றும், தீய குணம் என்றும் ஏதுமில்லை. பரம்பரைச் சொத்துக்களாலும், செல்வங்களாலும் வருவதில்லை. நல்ல அறச்செயல்களால் உயர்குடிப் பிறப்பென்றும், நற்செயல்கள் இல்லை எனில் இழிகுடிப் பிறப்பென்றும் ஆகும் என்பது கருத்து.

ஒரு செயலை முற்றிலுமாகச் செய்து முடிக்கும் வரை, சான்றோர் அதைச் செய்து முடிப்பதற்குத் தமக்குள்ள அறிவுத் திறனை வெளிப்படுத்த மாட்டார். அதை மனத்துக்குள்ளேயே அடக்கி வைப்பார்கள். முயற்சியும், ஊக்கமும், உணர்வுமுள்ள அறிவுடையோர் பிறரிடம் சொல்லியும் திரியார். காட்டிக் கொள்ளவும் மாட்டார். அதே தருணம், பிறருடைய மன வலிமையினை அவர்களுடைய முகம், கண் உள்ளிட்ட உடலுறுப்புகளின் அசைவுகளாலும், குறிப்புகளாலும், ஆராய்ந்து அறிந்து கொள்வர். இத்தகைய பேரறிவுடைய மேன்மக்களின் கருத்துக்கு உலகம் செவி மடுக்கும். கீழ்ப்பணிந்து நடக்கும். ஏவலுக்கும் அடங்கி நிற்கும். பெரியோர் உள்ளக் குறிப்பினைப் பிறர் அறிய மாட்டார். ஆனால், பிறரின் உள்ளக் குறிப்பைப் பெரியோர் அறிவர். அத்தகைய அறிவுத்திறனும், நுட்பமும், கொண்டோரே சான்றோர் ஆவர்.

பிரம்மாண்ட ஆலமரம் ஏராளமான விழுதுகளுடன், நூற்றுக் கணக்கான பறவைகள் குடியிருக்கக் கூடுகளையும், வழிப்போக்கர்கள் தங்கி இளைப்பாற நிழலையும் தந்து கொண்டிருக்கிறது. கரையான்கள் அரிக்கத் தொடங்கிய காரணத்தால் ஆலமரம் வீழும் நிலைக்குத் தள்ளப்பட்டது. ஆனாலும், அந்த ஆலமரம் சாய்ந்துவிடாமல் அதனின்றும் தோன்றிய விழுதுகள் தூணாய்த் தாங்கி நிற்கின்றன. அதுபோல், தந்தைக்குத் துன்பம் வந்த காலத்தில், செல்லரித்த ஆலமரம் வீழாமல் அதன் விழுதுகள் தாங்குவதுபோல், தகப்பன் தளர்ந்து போகாமல் பெற்ற பிள்ளைகள் பாதுகாப்பர்.

யானையின் புள்ளிகளையுடைய (புள்ளி இருப்பது யானையின் உயர் ரகத்தை உணர்த்தும்) முகத்தில், வலிமையான கால்களின் கூர்மையான நகங்களால், புண்களை ஏற்படுத்தும் சக்தி சிங்கத்துக்கு உண்டு. அத்தகைய சிங்கத்தைப் போன்ற ஆற்றல் கொண்டவர்கள் பெரியவர்கள். முன்வினைப் பயன் காரணமாக, தொழில் முயற்சிகளில் குறைபாடு உண்டாகி, பொருளின்றி, வறியவர் ஆகலாம். வீட்டிலேயே முடங்கிப் போகும் நிலையும் ஏற்படலாம். வறுமை காரணமாக இறக்க நேரிட்டாலும், உயிர் வாழ்வதற்காக மானம் கெட்ட செயல்களைச் சான்றோர் செய்ய மாட்டார்கள். ஒரு வேலையைச் செய்து முடிக்கத் தடைகள் வந்தாலும் முயற்சியைக் கைவிடார். தடைகளைத் தகர்த்து வேலையை முடிக்கக் கடுமையாக முயல்வார்களே தவிர, இறக்க நேரிட்டாலும் கூடக் கீழான காரியங்களில் மேன்மக்கள் ஒருபோதும் ஈடுபடார்.

திரண்ட காம்புடன், குதிரை சிங்கம் முதலியவற்றின் பிடரி மயிர் போன்ற மென்மையான குஞ்சமும் கொண்ட இந்தப் பூவானது, தேனோடு கூடி மணக்கும் வாசனையை இழந்து நிற்கிறது. இதற்குக் காரணம், மிக்க சுவையுள்ள இனிக்கும் கரும்பில் பிறந்தும் அதன் நுனியிலுள்ள மலருக்குத் தனித்துவமான எந்தச் சிறப்பும் இல்லை. அதுபோல், தனது பெயரை நிலை நிறுத்துவதற்கு உரிய கடுமையான முயற்சியும் திறமை இல்லாத ஒருவன், மிக உயர்ந்த குலத்தில் பிறந்தும் என்ன பயன்? எந்தப் பயனும் இல்லை. புகழ் மிக்க உயர் குலத்தில் பிறப்பதால் பிரத்யேகச் சிறப்பு எதுவும் இல்லை. மற்றவர்களால் செய்ய முடியாத அரிய செயல்களைச் செய்து முடிக்கும் முயற்சியும், உழைப்பும் இருந்தால் மட்டுமே பிறந்த பிறப்புக்குப் பயனுண்டு. இனிப்பான கரும்பின் நுனியிலுள்ள நறுமணம் இல்லாத பூவால் எந்தப் பயனும் இல்லை என்பதுபோல் உயர்குடியில் பிறந்தும் முயற்சி இல்லாதவனுக்கு எந்த மதிப்பும் இல்லை.

எந்தவொரு முயற்சியும், உழைப்பும் இல்லாமல் சோம்பித் திரியும் கீழ்மக்கள், பெருமுத்தரையர் எனப்படும் செல்வந்தர் மிகவும் விரும்பி அளிக்கும் கறிச்சோற்றை ஆர்வத்துடன் உண்டு மகிழ்வர். ஆனால், எந்தவொரு கறிச்சோற்றின் பெயரைக் கூட அறியாத மேன்மக்கள், கடுமையான உழைப்பினாலும், முயற்சியினாலும், கிடைத்தது நீர் உணவே என்றாலும், அதை அமிர்தமாகக் கருதி உண்பர். உழைக்காமல் பிறர் தரும் கறிச்சோற்றை உண்ணும் கீழ்க்குணத்தார் மற்றும் உழைத்துக் கிடைக்கும் நீர் உணவை அமுதமாக எண்ணி உண்ணும் உயர்குணத்தார் குறித்தும் விளக்குகிறது. (இப்பாட்டில் வரும் பெருமுத்தரையர் என்னும் செல்வந்தர் யார் எனத் தெரியவில்லை. பெரு + முத்து + அரையர் = பெரிய முத்துக்களை உடைய பாண்டிய நாட்டு அரசர்கள் என்றும்; பெரு + மு + தரையர் = சேர, சோழ, பாண்டியர் என்னும் பெரிய மூன்று நாடுகளின் அரசர்களான மூவேந்தர்கள் என்றும்; ஸ்ரீரங்கம் அருகேயுள்ள பெருமுத்தரசநல்லூர் ஊரின் அரசன் திருவரங்கனுக்குச் சேவை செய்த அரையர் என்றும் அர்த்தம் கொள்ளலாம்).

(தொடரும்)

பகிர:
ஜனனி ரமேஷ்

ஜனனி ரமேஷ்

எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். ‘திருவள்ளுவர்’, ‘தமிழ் அறிஞர்கள்’ உள்ளிட்ட நூல்களும் ‘ஔரங்கசீப்’, ‘தேசத் தந்தைகள்’ உள்ளிட்ட மொழியாக்கங்களும் வெளிவந்துள்ளன. கட்டுரைகளும் எழுதிவருகிறார். விருதுகள் பெற்றவர். தொடர்புக்கு : writerjhananiramesh@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *