நட்பியல்
மனிதன் தனித்து வாழும் இயல்பு கொண்டவன் அல்லன். கூட்டாக இணைந்து வாழும் தன்மை உடையவன். ‘பாசம்’ என்னும் பிணைப்பினால் பலருடன் கூடி வாழ்கிறான். மனிதனின் இந்தக் கூடி வாழும் இயல்பே உலகளவில் நாடு, அரசு எனக் கூட்டு அமைப்புகள் உருவாகக் காரணமாக அமைந்தன. மனிதன் இயல்பிலேயே கூடி வாழும் குணம் கொண்டவன் எனினும், கூடி வாழ வேண்டிய நெருக்கடி அவனுக்கு உண்டானதும் உண்மை. குற்றம் குறையற்ற மனிதன் எவரும் இல்லை என்பார்கள். மனிதன் தன்னிடமுள்ள குறையைப் போக்கிக் கொள்ள மற்றவரின் உதவியை நாடுகிறான். ‘நட்பு’ என்னும் பாச உறவு வளர்கிறது. இன்பத்தில் கூடிக் களிக்கவும், துன்பத்தில் தோள் கொடுக்கவும், நண்பர்கள் வேண்டும். இது குறித்து விளக்குவதே நட்பியல் அதிகாரமாகும். இதில் சுற்றந்தழால், நட்பாராய்தல், நட்பிற் பிழை பொறுத்தல், கூடா நட்பு என 4 அதிகாரங்கள் உள்ளன.
21. சுற்றந்தழால்
‘உறவு முறையார்’ என்போர் பெற்றோர் வழி வரும் உறவினர்களும், மணப்பெண் கொடுத்தல் எடுத்தல் வழி வரும் உறவினர்களும் ஆவர். பொதுவான நண்பர்களைக் காட்டிலும், இயற்கையான இயல்பான பிணைப்பின் காரணமாக வரும் இந்த உறவுகள் அதிகமான நட்பு செய்தற்கு உரியவர் ஆவர். வாழ்க்கையில் வாய்ப்பும், வசதியும் பெற்ற ஒருவன், தானும், தனது மனைவி பிள்ளைகள் மட்டும் இன்புறுவதிலும், செல்வத்தைப் பெருக்குவதிலும், கவனம் செலுத்தினால் மட்டும் போதாது. தன்னைச் சேர்ந்த உற்றார் உறவினர் துன்பம் நீங்கும் வரை, தன்னால் இயன்ற உதவிகளைச் செய்து அவர்களைப் பாதுகாக்க வேண்டும். உறவுகளை விட்டு நீங்காமல் அவர்களை அரவணைத்துச் செல்வதை உணர்த்தும் அதிகாரமிது.
வயிற்றில் கருவைச் சுமக்கும் காலத்தில் உண்டாகும் மசக்கை உள்ளிட்ட நோவுகள், இந்த நோவுகளாலும் பிறவற்றாலும் ஏற்படும் வருத்தங்கள், கரு உயிர்த்துக் குழந்தையைப் பிரசவிக்கும் போது ஏற்படும் நோவுகள் உள்பட, கருவைச் சுமந்து பிரசவிக்கும் முன்னும், பின்னும், தாயானவள் படும் வலிகளும், வேதனைகளும், வருத்தங்களும் பலப்பல. இருப்பினும், பிரசவம் முடிந்து குழந்தையைத் தன் மடியில் இருத்திய அடுத்த நொடியே தாயானவள் தனது வலி, வருத்தம் உள்ளிட்ட அனைத்தையும் மறந்துவிடுவாள். இதுவே தாய்மையின் குணமாகும். அதுபோல் பல்வேறு துன்பங்களால் வாடி வதங்கித் தளர்ந்திருக்கும் ஒருவனை அவனது உறவின் முறை சந்தித்து விசாரித்தாலே அவனது துயரங்கள் அவனை விட்டு நீங்கி விடுமாம். மடியில் இருத்திய குழந்தையைக் கண்டவுடன் தாயின் பிரசவ வேதனை மறைவதுபோல், உறவுகளைக் கண்டவுடன் ஒருவனது தளர்ச்சிகள் அனைத்தும் மறைந்து போகும். உறவுகளின் பாசம் வலுவாக இருக்க வேண்டிய அவசியம் வலியுறுத்தப்படுகிறது.
கோடை வெயில் சுட்டெரிக்கிறது. இருப்பினும், அந்த ஆலமரம் வெயிலைத் தாங்கிக் கொண்டு தன்னை நாடி வந்தோர்க்கு நிழலைத் தருகிறது. உயர்ந்தவர் தாழ்ந்தவர், அறிவாளி அறிவிலி, நல்லோர் தீயோர் என, வேறுபாடும் பேதமும் பார்க்காமல், அனைவருக்கும் குளிர்ந்த நிழலைத் தந்து வெப்பத்திலிருந்து பாதுகாக்கிறது. அதுபோல், உறவினர் வறுமையால் வாடி வதங்கி வெதும்பி நம்மை நாடி வரும் போது, நிழல் தரும் ஆலமரம்போல், இன்னார் இனியார் என வேறுபாடு பார்க்காமல், அனைவரையும் ஒரே நிலையில், சமமாகக் கருத வேண்டும். அவர்களின் குடும்ப பாரத்தைச் சுமந்து பாதுகாக்க வேண்டும். தன்னை நாடி வருவோர் குளிர் நிழலில் தங்கவும், பழங்களை உண்ணவுமே வருகின்றனர் என்னும் வருத்தத்தைத் தாங்கிக் கொண்டு, மரம் எதையும் எதிர்பார்க்காமல் நிழலையும், பழங்களையும் தருகிறது. அதுபோல், தன்னை நாடி வரும் உறவுகள் உதவி தேடித்தான் வருகின்றனர் என்பதை அறிந்தும், வசதி படைத்தோர் வருத்தத்தைத் தாங்கிக் கொண்டு, கைம்மாறு கருதாமல் உதவ வேண்டும். இதைத் தனக்கான தகுதியாகக் கருதுவதே ‘நல்ல ஆண்மகன்’ தன்மையுள்ள மனிதனின் கடமையாகும்.
கருங்கற்களை ஒன்றின் மேலொன்று அடுக்கி வைத்ததுபோல், நெருக்கமான மலைகளைக் கொண்ட நாட்டின் அரசனே! எடை அதிகம் கொண்ட காய்கள் எவ்வளவு காய்த்துத் தொங்கினாலும், மரத்தின் மரக்கிளைகள் காய்களை விட்டுவிடாமல் அவ்வளவையும் தாங்கிக் கொள்கின்றன. கனமான காய்களைச் சுமக்க மாட்டேன் என மென்மையான மரக்கிளை கூடச் சொல்வதில்லை. இது மரக்கிளையின் இயல்பான குணமாகும். அதுபோல், கற்றறிந்த பெருமைக்குரிய மேன்மக்கள் தம்மை அடைக்கலம் நாடி வந்தோரைப் பாதுகாக்க மாட்டோம் எனக் கூற மாட்டார். பெரிய குடும்பத்தில் சொந்த பந்தங்கள் உறவுகள் அனேகம் இருப்பர். தளர்ந்த நிலையில் இருந்தாலும், முகம் சுளிக்காமல், வறுமையை வெளிக்காட்டாமல், சுற்றத்தாரை ஆதரித்துக் காப்பது பெரியோர் இயல்பாகும்.
அற்ப குணமுடைய அறிவிலிகளுடனான தொடர்பு, உலகத்தார் அறியும் வகையில், ஆரம்பத்தில் குறையேதும் இன்றி, முற்றும் கலந்த உறவாகக் காணப்பட்டாலும், நிலைபெற்று நிலைத்து நிற்காது. சில நாள்கள் மட்டுமே நீடித்து முறிந்துவிடும். ஆனால், பிறரைத் தாங்கும் மனத்தில் தளர்ச்சி இல்லாமலும், தகுதியில் மாறுதல் இல்லாமலும், நல்ல குணங்களிலிருந்து பிறழாமலும் வாழும், கற்றறிந்த பெரியோர்களுடனான நட்போ, யோக நெறியில் நிற்போரின் உறுதிப்பாட்டைப் போன்றதாகும். தவ நிலையில் வேறுபடாமலும், தவ ஒழுக்கத்தின் பயனைப் பெறவும், ஒழுக்கமுடன் வாழும் மேலோருடனான உறவோ, என்றென்றும் நிலை மாறாது, ஒரே சீராக நீடித்து நிலைத்திருக்கும்.
இவர் இத்தன்மை கொண்டவர், இந்த வகையில் நம்முடன் தொடர்புடையவர், எமக்கு வேண்டியவர், உறவினர் என்றும், பிறர் தொடர்பற்றவர், அயலார், உறவில் இல்லாதவர், வேண்டாதவர் என்றும், எந்தவொரு சொல்லையும் கூறாத இயல்புடையோர் மேன்மக்கள். இத்தகைய பண்புடைய பெரியோர்கள், தமது உறவினர் நற்குணம் இன்றிக் குணக்கேடு கொண்டவர் என்றாலும் அதை ஒரு பொருட்டாகக் கருதார். மாறாக, உறவினருக்குத் துன்பம் நேர்கையில், அவர் செய்த குற்றம் குறைகள் அனைத்தையும் அக்கணமே மறந்து, தேவையான உதவிகளைச் செய்து காப்பதே உயர் குணம் எனக் கருதுவர். நல்லவர் தீயவர், உறவு பகை, என வேறுபாடு பார்க்காது, எல்லோரையும் சமமாகப் பாவித்துப், பாரபட்சமின்றி உதவி செய்தலே பெரியோர் ஒழுக்கமாம்.
பொன்னால் செய்யப்பட்ட பாத்திரத்தில் இடப்பட்ட, புலியின் நகம்போல் வெண்மையான சிறந்த சோற்றைச், தித்திக்கும் சர்க்கரையோடும் சுவையான பாலோடும் கலந்து, உறவினர் எனச் சொல்வதற்கு எந்த வகையிலும் பொருந்தாத ஒருவரின் வீட்டில் உண்பதைக் காட்டிலும், வேறு இழுக்கு எதுவும் இல்லை. உள்ளத்தில் அன்போ, பண்போ, பாசமோ இல்லாதவரின் கைகளால் உண்ணும் அமுதத்தை விடவும், உயிர் போன்ற உறவினர் தரும், உப்புசப்பு இல்லாத சுவையற்ற புல்லரிசிக் கூழை, நொய்க் கஞ்சியை, உண்ணுதல் சிறப்பாகும். பொற்கலத்தில் உறவில்லாதார் தரும் சுவையான சோற்றை விடவும், மண்கலத்தில் உறவினரின் சுவையற்ற கூழைக் குடிப்பது சிறப்பு. உணவின் சுவை, அளிப்பவர் அன்பின் தகுதியை ஒட்டியே அமையும், என்பது கருத்து.
நான் சொல்வதைக் கேட்பாயாக! உறவினர் அல்லாத அன்பில்லாதவர் வீட்டில், வேளை தவறாமல், உரிய நேரத்தில், பொரிகறியுடன் அறுசுவை உணவே வழங்கப்பட்டாலும், அது கசக்கும் வேம்புக்கு நிகரே தவிர இன்பம் தராது. ஆனால், வேளை தவறிய போதும், காலம் தாழ்ந்து, இலைக்கறி எனப்படும் கீரை உணவே என்றாலும், அன்பும் பாசமும் நிறைந்த உறவினர் வீட்டில் உண்டால், அது அமுதத்தை விடவும் இனிப்பாகும். உரிய காலத்தே அன்பிலார் செய்யும் பெரிய உதவியைக் காட்டிலும், காலம் கடந்தும் அன்புடையோர் செய்யும் சிறிய உதவியே சிறப்பாம்.
பெரிய சுத்தியான சம்மட்டி என்னும் கருவி, தான் செய்யும் தொழிலில் சோம்பலோ, ஒழிவோ இல்லாமல், தேவையான அளவு கிடைக்கும் வரை இரும்பைத் தொடர்ந்து அடித்துக் கொண்டே இருக்கும். அதுபோல், பழகும் பொழுதெல்லாம், நாள்தோறும், இன்னது வேண்டுமென வருந்தி வருந்திக் கேட்டு, பிறர் பொருளைச் சலிப்பின்றி வாங்கிச் சாப்பிட்டு உயிர் பிழைப்போரும் உண்டு. இரும்பை உருக்கக் குறடு என்னும் கருவி மூலம் இரும்பைப் பிடித்துக் கொண்டு நெருப்பில் காட்டுவார்கள். தீயின் வெப்பம் இரும்பைத் தாண்டி குறடைத் தாக்கும் போது, குறடு இரும்பை நெருப்பில் விட்டுவிடும். குறடுபோல், நற்குணமற்ற இயல்பினர், கேட்ட போதெல்லாம் அன்புடன் உதவி செய்தவர்களுக்குத் துன்பம் வரும் காலத்தில், அவர்களை விட்டுவிட்டு நன்றி மறந்து விலகிவிடுவார். ஆனால், சூட்டுக்கோல் (உலையாணிக்கோல்) இரும்போடு சேர்ந்து தன்னையும் தீயின் வெப்பத்தில் வாட்டி வருத்திக் கொள்ளும். அதுபோல், நற்குணம் கொண்ட நட்பான உறவினர், உலையாணிக்கோல் போன்று, உதவியவர்களுக்குத் துன்பம் வரும் போது அவர்களை விட்டு விலகாமல் தானும் உடனிருந்து வருந்துவர்.
நல்ல மணமுள்ள பூக்களால் தொடுக்கப்பட்ட குளிர்ந்த மாலையை அணிந்தவளே உரைப்பது கேட்பாயாக! நல்ல உறவினர் தாம் உயிரோடு இருக்கும் வரை, வாழ்நாள் முழுவதும், நல்ல நட்பில் உள்ளவரை விட்டுப் பிரியாமல் சிநேகத்தோடு இருப்பர். அவர் இன்புறும் போது அவருடன் சேர்ந்து தாமும் இன்பம் அடைவர்; அவர் துன்புறும் போது அவருடன் சேர்ந்து தாமும் துன்பம் கொள்வர். ஆனால், இப்பிறவியில், உறவினர் துன்பத்தில் துவளும் போது தானும் துன்புறாமலும், இன்பத்தில் திளைக்கும் போது தானும் இன்புறாமலும், இருப்பாரும் உண்டு. அத்தகைய நற்குணம் இல்லாதோர், மறு பிறப்பில் செய்யத் தக்க நற்செயல்தான் ஏதேனும் இருக்கிறதா? எதுவும் இல்லை. இம்மையில் நம்முடைய துன்பத்திலும் இன்பத்திலும் பங்கேற்று நல்ல பண்புடன் நடக்காதவர், மறுமையிலேனும் நடப்பாரா? நிச்சயம் நற்குணத்துடன் நடக்க மாட்டார் என்பதே கருத்தாம்.
தன் மீது விருப்பமும், அன்பும் இல்லாதவர் வீட்டில், பூனையின் கண்போன்ற ஒரு வகையான பளபளப்பான சூடான சோற்றை உண்பது, வேப்பங்காயைத் தின்பதுபோல் கசப்புக்கு நிகராகும். ஆனால், தன் மீது அன்பும், பாசமும், விருப்பும், கொண்டவர் வீட்டில் நீர் ஆகாரமே என்றாலும், குளிர்ந்த கூழைக் குடித்தாலும், அது உடலுக்கு ஏற்ற தேவலோகத்துச் சுவையான அமிர்தத்துக்கு இணையாகும். (வெருகு கண் அதாவது ஆண் பூனையின் கண்போல் ஒளிரும் சூடான சோறு)
22. நட்பாராய்தல்
‘நண்பர்கள்’ எனச் சொல்லப்படுவோர் பலப்பல வகையினராக நம்மோடு தொடர்பில் இருப்பார்கள். அவர்களுள் நல்லோர் யார், தீயோர் யார் என ஆராய்ந்து நல்லவர்களை மட்டுமே தேர்ந்தெடுத்து அவர்களை நண்பர்களாகக் கொண்டு, மற்றவர்களை ஒதுக்கிவிட வேண்டும். நல்ல நண்பர்கள் என நினைத்துப் போலியான நட்போடு பழகுவோரிடம் எச்சரிக்கை தேவை. அறியாமல் கொள்ளும் இந்த உறவினால் பின்னாளில் ஏற்படும் தீங்குகளைக் கருத்தில் கொண்டு, நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதில் கவனமும், விழிப்பும் அவசியமாகும். இன்ப துன்பங்களில் சமமாகப் பங்கு கொண்டு, கஷ்டப்படும் காலத்தில் உதவுவோரே உண்மையான நண்பர்கள். அவ்வாறின்றி, மகிழ்ச்சியும் சந்தோஷமும் நிறைந்த காலத்தில் கூடியிருந்து, துன்பமும் துக்கமும் கஷ்டமும் படும் காலத்தில் எந்தவொரு உதவியையும் செய்யாமல் நம்மை விட்டு விலகுவோர் உண்மையான நண்பர்கள் இல்லை. சிநேகம் கொள்ள முற்படும்போது குடிப்பிறப்பு, குணநலன், ஒழுக்கம் ஆகியவை உள்ளனவா என ஆராய்ந்து கேண்மை கொள்வதே நட்பாராய்தல் ஆகும்.
நூல்களிலே சொல்லப்பட்டுள்ள உட்பொருளை உணர்ந்தவர்கள், கற்க வேண்டிய அனைத்தையும் கற்றுத் தெளிந்தவர்கள் ஆகியோருடன் நட்பு கொள்ளல் வேண்டும். இத்தகைய மேன்மக்களுடனான நட்பானது கரும்பின் குருத்திலிருந்து அதாவது நுனிக் கரும்பிலிருந்து அடிக்கரும்பு நோக்கிச் சுவைப்பது போலாகும். நுனிக் கரும்பு ஆரம்பத்தில் சுவை குறைந்து காணப்பட்டாலும் போகப்போக இனிக்கும். அதுபோல், பெரியோர் சிநேகம் தொடக்கத்தில் இனிமை குறைந்து காணப்பட்டாலும், நாள்கள் செல்லச் செல்ல இனிமை அதிகமாகும். ஆனால், கல்வி கற்காத அறிவிலிகளுடனான நட்போ, அடிக்கரும்பிலிருந்து நுனிக் கரும்பைச் சுவைப்பது போல் ஆரம்பத்தில் இனித்துப் பின்னர் கசக்கத் தொடங்கும். அறிவுடையோர் நட்பு ஆரம்பத்தில் கசந்து நிறைவாக இனிக்கும். மாறாக, அறிவிலார் கேண்மையோ தொடக்கத்தில் இனித்துக் கடைசியாகக் கசக்கும். கற்றவர் நட்பே சிறப்பாகும்.
தங்கம்போல் ஜொலித்துக் கொண்டு விழுகின்ற அருவி நீரின் நிறத்துக்கும், இரைச்சலுக்கும் பயந்து அங்கும் இங்கும் சிறகடிக்கும் பறவை இனங்களைக் கொண்ட பூங்குன்ற மலைநாட்டின் அரசனே! உயர்குடிப் பிறந்த மேன்மக்கள் எப்போதும் எந்த நிலையிலும் சொன்ன வார்த்தை தவறமாட்டார்கள். இடையிலும் வேறுபடமாட்டார்கள். எனவே, இத்தகைய நல்ல தன்மையையும், நற்குணங்களையும் கொண்டவருடன் நட்பு கொள்வாயாக! ஒருவருடைய ஆழ் மனத்தில் என்ன இருக்கிறது என்பதை அறிந்து கொள்வது கடினமான செயலாகும். மனநிலையைத் தெரிந்து கொண்டு நட்பு பாராட்டுவது இன்னும் இயலாத காரியமாகும். எனவே, ஒருவருடன் சிநேகம் கொள்ள அவரது மனத்துக்குள் புகுந்து அறிய முடியாது என்பதால், எந்தச் சூழலிலும் உத்தம குணத்தை மாற்றிக் கொள்ளாத உயர்குடிப் பிறந்தோரோடு நட்பு கொள்ளுதலே நலம் தரும். நட்பிற்குக் கல்வியறிவு ஒரு குணம் என முந்தைய பாட்டில் பார்த்தோம். இப்பாட்டில் உயர் குடிப்பிறப்பு மற்றொரு குணமாம்.
இப்பாடலில் யானையின் குணமும், நாயின் குணமும் ஒப்பீடு செய்யப்படுகிறது. யானை பெருமையுடைய பிறப்பாகும். ஆனால், நாயோ கீழினும் கீழான பிறப்பாகும். யானை உருவத்தால் பெரிதெனினும் குணத்தால் சிறிது. மாறாக, நாய் உருவத்தால் சிறிதெனினும் குணத்தால் பெரிது. பலகாலம் பழகி, உணவு தந்து வளர்த்த பாகனையே சமயத்தில் கொல்லும் இயல்புடையது யானை. ஆனால், தன்னை வளர்த்தவன் எறிந்த வேலானது உடலில் குத்திக் கிழித்துக் குருதி வழியும் நிலையிலும், அவனைக் கண்டால் வாலைக் குழைத்து அன்பு காட்டும் குணம் கொண்டது நாய். எனவே, நன்றி மறக்கும் யானை போன்றவருடன் நட்பு கொள்வதை விட்டு, நன்றி மறவாத நாய் போன்றவருடன் நட்பு பாராட்டுதல் வேண்டும். நெடுங்காலம் பழகி, பற்பல உதவிகளைப் பெற்று, வளமோடு வாழ்ந்த நாள்களை மறந்து, என்றோ கோபத்தில் செய்ததை நினைவில் கொண்டு, நேரம் கிடைக்கும் போது பழி வாங்கும் யானைக் குணம் உடையவருடன் நட்பு கொள்ள வேண்டாம். மாறாக, பல துன்பங்களை இழைத்திருந்தாலும், என்றோ செய்த சிறிய உதவியை மறக்காமல் நெஞ்சில் நிறுத்தும் நாய்க் குணம் கொண்டாருடன் சிநேகம் கொள்ள வேண்டும் என்பது கருத்தாம். யானையின் நன்றி மறக்கும் மற்றும் நாயின் நன்றி மறவா ‘குணங்களை’ மட்டுமே, இங்கு சிறியார்க்கும் பெரியார்க்கும் உவமை கொள்ள வேண்டும். (‘மிகுதலும் குறைதலும் தாழ்தலும் உயர்தலும் பால் மாறுபடுதலும் பாகுபாடுடைய’ என்னும் தண்டியலங்காரச் சூத்திரத்தின்படி, நன்றி மறவாத நற்குணம் கொண்ட பெரியோர்க்கு, தாழ்ந்த விலங்காகிய நாயை உவமை கூறியது இழி உவமைக் குற்றம் ஆகாது.)
பல காலம் பக்கத்திலேயே குடியிருப்பவர்கள் என்றாலும் மனத்தளவில் நெஞ்சோடு சில நாள்கள் கூட ஒன்றுபடாதவர்கள் உண்டு. இத்தகைய பண்பற்றவர்களுடன் கற்றறிந்த அறிவுடையோர் எந்நாளும் நட்பு கொள்ள மாட்டார்கள். ஆனால், அருகருகே வாழாமல், நீண்ட காலமாக விலகி இருந்தாலும் கூட, கல்வியறிவுள்ள சான்றோர் அவரை விட்டு விலக மாட்டார்,, கைவிட்டு நீங்க மாட்டார். உண்மையான நட்புக்கு நெருக்கமாக இருக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. மனத்திலே அன்பின்றி அருகருகே இருந்தும் பயனில்லை. மாறாகத் தொலைதூரம் இருந்தாலும் நட்பு ஆழமாக உள்ளத்தில் ஊடுருவியிருக்க வேண்டும். மனத்தோடு மனம் கலந்திருக்க வேண்டும். சூரியனைக் கண்டால் தாமரையும், சந்திரனைக் கண்டால் அல்லியும் மலரும். அந்த அளவுக்குத் தண்ணீரில் உள்ள தாமரைக்கும், அல்லிக்கும், வெகுதொலைவில் வானத்தில் உள்ள சூரியனோடும், சந்திரனோடும் முறையே ஆழமான நட்பு உண்டு. ஆனால், அதே தாமரைக்கும், அல்லிக்கும், தமக்கு அருகிலேயே தண்ணீரில் வசிக்கும் தவளையோடு எந்தச் சிநேகமும் இல்லை.
மரக்கிளைகளில், கொம்புகளில், பூக்கின்ற பூக்கள், தொடக்கத்தில் மலர்ந்து, உதிரும் வரை கூம்பாமல் அதாவது குவியாமல், மலர்ந்த நிலையிலேயே இருக்கும். அதுபோல், பழக ஆரம்பிக்கும் போது ஒருவர் மீது மற்றொருவர் கொண்ட விருப்பம், இறுதி வரை மாறாத அன்போடு திகழ்தலே உண்மையான நட்பாகும். நட்பின் முறையைப் பேணிக் காக்கும் முறையும் இதுதான். ஆனால், தோண்டப்பட்ட நீர் நிலைகளில் உண்டாகும் பூக்கள், தொடக்கத்தில் மலர்ந்து பிறகு கொஞ்சம் கொஞ்சமாகக் குவிந்துவிடும். அதுபோல், ஆரம்பத்தில் பழகும்போது மலர்ந்த முகத்துடன் விரும்புவோரின் சிலரது அன்பு, காலப்போக்கில் குறைந்து பின்னர் முற்றிலுமாக மறைந்துவிடும். அத்தகையோருடன் சிநேகம் கொள்ள யாரும் விருப்பம் கொள்ளமாட்டார்கள். தொடக்கம் முதல் இறுதி வரை மாறாத அன்புடன் நட்பைத் தொடர வேண்டும் என்பது கருத்து.
எத்தகையோருடன் நட்பு கொள்ள வேண்டும் என்பதை விளக்க இப்பாடலில் பாக்கு / கமுகு, தென்னை மற்றும் பனை ஆகிய மூன்று மரங்களின் குணங்கள் உவமை கூறப்பட்டன. பாக்கு மரத்துக்கு நாள்தோறும் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டே இருந்தால் மட்டுமே நமக்குப் பயனளிக்கும். பாக்கு / கமுகு மரத்தின் குணம்போல் நட்புத் தன்மையில் கடை நிலையில் உள்ளோர்க்கு நாம் தொடர்ந்து உதவி செய்து கொண்டே இருந்தால்தான் பயன்படுவர். தென்னை மரத்துக்கு நாம் அன்றாடம் தண்ணீர் பாய்ச்ச வேண்டியதில்லை. விட்டுவிட்டு இடையிடையே தண்ணீர் விட்டால் போதும். தென்னை மரத்தின் குணம்போல் நட்புத் தன்மையில் இடை நிலையில் உள்ளோர்க்கு அவ்வப்போது உதவி செய்தாலே போதும் நமக்குப் பயன்படுவர். பனை மரத்துக்குத் தினந்தோறும் அல்லது நடுநடுவே தண்ணீர் பாய்ச்ச வேண்டும் என்ற அவசியமே இல்லை. விதைத்த அன்று தண்ணீர் பாய்ச்சியதோடு சரி. அதற்குப் பிறகு தண்ணீர் பாய்ச்சவோ, பராமரிக்கவோ வேண்டாம். பனை மரத்தின் குணம்போல் நட்புத் தன்மையில் முதல் நிலையில் உள்ளோர், நாம் என்றோ ஒரு முறை செய்த உதவியை நன்றியுடன் நினைத்து ஆயுள் முழுவதும் பயன்படுவர். கடை நிலை நட்புக்குப் பாக்கு மரமும், இடை நிலை நட்புக்குத் தென்னை மரமும், முதல் நிலை நட்புக்குப் பனை மரமும் உவமையாம். எனவே, பனைபோல் தன்மை மாறாத உயர்குணம் கொண்டாருடன் நட்பு கொள்வதே சிறப்பாகும்.
அரிசி கழுவிய தண்ணீரில் சமைத்த பசுமையான கீரை உணவே என்றாலும், அதை விழுமிய சிறந்த அன்புடைய நண்பரின் கையால் சாப்பிட்டால், அது தேவலோகத்து அமிர்தத்துக்கு இணையான சுவை கொண்டதாகும். மாறாக, சிறந்த முறையில் தாளிக்கப்பட்ட வகைவகையான காய்கறிகள், துவையல்கள் கலந்த, நறுமணம் மிக்க வெண்ணிற நல்லரிசிச் சோற்றை, அறுசுவை மிக்க உணவே என்றாலும், அதை உள்ளத்திலே அன்பில்லாத, நட்பு பாராட்டாதவர், கையால் சாப்பிடுவது இனிமை ஆகாது. எட்டி மரத்தின் கசப்பான காயை தின்பதற்கு ஒப்பாகும். உணவின் சுவை நட்பின் தகுதி அடிப்படையில் கொள்ளப்படும்.
நாயின் கால்களிலுள்ள சிறிய விரல்கள் ஒன்றுடன் ஒன்று மிக நெருக்கமாக இருக்கும். இவைபோல் சிலர் நம்மோடு மிக நெருக்கமாக இருப்பார்கள். அருகருகே இருந்தாலும், ஈயின் காலடி அளவு கூட துன்பம் நேரிடும் போது நமக்கு உதவ மாட்டார்கள். சிறு உதவி கூடச் செய்யாத இத்தகைய குணம் கொண்டவர்கள் நெருக்கமாக இருந்து என்ன பயன்? ஓர் உபயோகமும் இல்லை. பரந்து விரிந்த வயல்களின் விளிம்புகளில் வாய்க்கால்கள் வெட்டப்பட்டிருக்கும். வயல்களால் அங்குள்ள வாய்க்கால்களுக்கு எந்தப் பயனும் இல்லை. வயல்களால் தனக்கு எந்தப் பயனும் இல்லை என்றாலும் கூட, வாய்க்கால்கள் நெடுந்தொலைவில் ஓடும் தண்ணீரைக் கொண்டு வந்து வயல்களில் உள்ள பயிரை விளையச் செய்யும். எனவே, தன்நலம் கருதாமல் உதவும் வாய்க்காலை ஒத்த குணமுடையோர், வெகு தூரத்தில் இருந்தாலும், அத்தகைய பண்புடையோர் நட்பைத் தேடிச் சென்று பெற வேண்டும்.
தெளிவான கூரிய அறிவில்லாதவர்களுடன் கொள்ளும் நட்பை விடவும் பகை நல்லதாகும். எவ்வளவு மருந்து, மாத்திரை கொடுத்தும் குணமாகாமல் தீராத வியாதியோடு போராடித் துன்புறுவதைக் காட்டிலும் இறத்தல் நன்மையாகும்; ஒருவனுடைய பூ போன்ற நெஞ்சம் புண்படும்படி இல்லாத தீய குணங்களைச் சொல்லிப் பழித்தலைக் காட்டிலும் அவனைக் கொன்று விடுதல் இனிதாகும். நிறைவாக, ஒருவனிடம் இல்லாத நற்குணங்கள் அனைத்தும் இருப்பதாகப் போலியாகவும், பொய்யாகவும், புகழ்ந்து பாராட்டுவதை விடவும், அவனைத் தூற்றி இகழ்தல் நன்றாகும்.
ஒருவருடன் பழகுவதற்கு முன் அவர் இன்னார் இனியார் எனக் குணங்களை நன்கு ஆராய்ந்த பிறகே நட்பு கொள்ள வேண்டும். பலருடன் சேர்ந்து பல நாள்கள் கலந்து பழகி, உண்மையான தகுதி உடையவர் என மனத்தில் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். பரஸ்பரம் அனைவர் குணங்களும் ஒத்துப்போகும் அன்பர்களை மட்டுமே நண்பர்களாகக் கொள்ள வேண்டும். உயிரைப் பறிக்கும் விஷப்பாம்பே என்றாலும் கூட, அத்துடன் பழகிவிட்டால் அதை விட்டுப் பிரிவது துன்பம் தரும் செயலாகும். அதுபோல், பழகுவதற்கு முன் எத்தகையவர் என்பதை உறுதி செய்து கொண்ட பிறகு நட்பு கொள்ள வேண்டும். தீயோரின் நட்பைத் தொடக்கத்திலேயே விலக்கிவிட வேண்டும். நீடித்துப் பழகினால் பழகிய பாசம் காரணமாகத் தீயாருடனான நட்பை விலக்குவது எளிதாக இருக்காது. தீயாருடன் பழகிப் பின்னர் துன்பப்படுவதை விடவும், ஆரம்பத்திலிருந்தே விட்டு விலகிப் பழகாமல் இருப்பதே நலமாகும்.
(தொடரும்)