23. நட்பிற் பிழை பொறுத்தல்
‘தகுதியுடைய நண்பர்’ என ஆராய்ந்து, தேர்ந்தெடுத்து, நட்பு கொண்டாலும் கூட, அவரும், சில தருணங்களில், தெரிந்தோ தெரியாமலோ, அறிந்தோ அறியாமலோ, விதிவசத்தாலோ, நமது மனம் புண்படும் வகையில் சில பிழைகளையும், தவறுகளையும், செய்தல் இயல்பாகும். நாம் ஆத்மார்த்தமாகவும், உண்மையாகவும், நண்பராக ஏற்றுக் கொண்டு நட்பு பாராட்டும் பட்சத்தில், அவர் செய்த பிழை காரணமாக வெறுப்பதோ, கடிந்துகொள்வதோ, புறக்கணிப்பதோ, நல்ல நட்புக்கான பண்பு அல்ல. நேற்று வரை நற்குணங்களுடன் திகழ்ந்தவர், இன்று திடீரென மாறிவிட்டாரே என அவரது மனநிலை மாற்றத்துக்காக வருந்தி, அவர் செய்த பிழைகளையும், தவறுகளையும், பொறுப்பதே சிறந்த நட்புக்கு அழகாகும்.
நட்பு நீடித்து நிலையாக வளர வேண்டுமெனில் யார் தவறு செய்தாலும் மற்றொருவர் அதைப் பொறுக்க வேண்டும். நட்பில் பிழை பொறுத்தல் இன்றி அமையாத குணமாகும். கவலையோ, துக்கமோ, பிரச்னையோ இல்லா மனிதர்கள் கிடையாது. மனிதன் உணர்ச்சிகளின் பிடியில் சிக்கித் தவிக்கிறான். மனநிலை தடுமாறுகிறான். இவை காரணமாக ஓரொரு சமயம் பிழை செய்தல் இயல்புதான் என்பதால், பிழை பொறுத்தல் பண்பு நட்பிற் சிறந்த இலக்கணமாகும். நண்பர்களின் பிரிவு துன்பம் தருவதால், கேண்மை கெடாதிருக்க, நட்பிற் பிழை பொறுத்தல் வலியுறுத்தப்படுகிறது.
நற்குணங்களும், நற்செய்கைகளும் கொண்டவர்கள் என ஆராய்ந்து, அறிந்து, தெளிந்து, விரும்பி, ஒருவரை நல்லார் என நம்பி நண்பராக ஏற்றுக் கொண்டு பழகுகிறோம். பின்னர் ஒரு காலத்தில் நமது எதிர்பார்ப்பின்படி அவர் நற்குணங்களோ, நற்செய்கைகளோ உடையவர் அல்லர் எனத் தெரிய வந்தாலும், அதை மற்றவர்களிடம் வெளிப்படுத்தாமல் மனத்துக்குள்ளேயே அடக்கிக் கொள்ள வேண்டும். அன்றாடம் நாம் விரும்பி உண்ணும் நெல்லுக்கும் (அரசி) பயனற்ற உமி என்னும் குறை உண்டு. தண்ணீருக்கும் பயனற்ற நுரை என்னும் அழுக்கு உண்டு. மலருக்கும் அதனைத் தழுவியுள்ள பயனற்ற புற இதழ்கள் என்னும் மணமற்ற காம்பிதழ்கள் உண்டு. சிறந்த குணங்களைக் கொண்ட உயர்ந்த பொருள்களிலும் சில குற்றங்கள் இருப்பது உலக இயல்பே. ‘குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை’ என்பதற்கேற்ப குற்றம் குறைகளையே நோக்கினால் யாருமே நண்பர் இல்லை. எனவே ஒருவரிடமுள்ள குற்றங்களை விடுத்துக் குணத்தை மட்டுமே கொள்ள வேண்டும் என்பது கருத்தாகும்.
தண்ணீரை விரும்பி நம்பி வாழ்கின்ற உழவர் பெருமக்கள், அடைக்க அடைக்க அணையை / தடுப்பை / கரையை உடைத்துக் கொண்டு தண்ணீர் வெளியேறினாலும் அதன் மீது கோபமோ வெறுப்போ பிணக்கோ கொள்ள மாட்டார்கள். மாறாக, மீண்டும் மீண்டும் அணையை / தடுப்பை / கரையைக் கட்டித் தண்ணீர் வழிந்தோடாமல் தேக்கி வைத்துப் பயன் பெறுவார்கள். அதுபோல், தாமே விரும்பி நண்பராக ஏற்றுக் கொண்டவர்கள், மனம் வெறுக்கும் அளவுக்குக் கொடுமையான செயல்களை மிகுதியாகச் செய்தாலும், அவரால் கிடைக்கும் பயனைக் கருத்தில் கொண்டு, அறிவுடையோர் அவரோடு பிணங்காது பொறுத்துப் போவார்கள். தண்ணீர் கரையை உடைத்துக் கொண்டு சென்றாலும், பயிர் விளையப் பயன்படுவதால் தண்ணீர் விரும்பப்படுகிறது. அதுபோல், நட்பினால் கிடைக்கும் நன்மை கருதி நண்பர் பிழைகளைப் பொறுத்தல் நன்று.
பொன்னிறம் கொண்ட கோங்க மலர்கள் மீது அழகிய வடிவம் கொண்ட வண்டுகள் ஆரவாரத்துடன் மொய்த்துக் கொண்டிருக்கும். அத்தகைய மலர்கள் பூத்துக் குலுங்கும் உயர்ந்த மலைகளைக் கொண்ட நாட்டின் அரசனே! ஆராய்ந்து அறிந்து தேர்ந்தெடுத்துப் பழகிய நண்பர் அளவுக்கு மீறிய தீயச் செயல்களைச் செய்தாலும், அறிவுடையோர் அவர் செய்த பிழைகளைப் பொறுப்பதே உண்மையான நட்புக்கு அடையாளமாகும். இருவர் நட்பில் யார் பிழை செய்தாலும் இருவரும் பொறுத்துப் போகுதல் சிறப்பாகும். ஒருவர் பொறுத்துப் போனாலும் இருவர் நட்பும் நிலைக்கும். மாறாக, எவரும் பிழை பொறுக்காவிடில் நட்பு கெடும். இப்பாடலில் இடம்பெறும் ‘ஒருவர் பொறை இருவர் நட்பு’ என்னும் சொற்றொடர் பரவலாக மேற்கோள் காட்டப்படும் வரியாகும்.
வளைந்து நெளிந்து மோதி மடிந்து விழுகின்ற அலைகள், கடலின் மேலே ஒளிவீசும் சிறந்த முத்துக்களைக் கொண்டு வந்து போடுகின்றன. ஜொலிக்கும் முத்துக்களைக் கடலிலே விரைந்து செல்லும் மரக்கலங்கள் கரையில் குவிக்கின்றன. அத்தகைய சிறப்பு மிக்க கடற்கரையைக் கொண்ட பாண்டிய மன்னனே கேள்! நட்பினைக் கைவிடுவதற்கு இயலாத நண்பர்கள், இயற்கை நற்குணம் அற்றவர்களாக இருப்பின், நமது மனத்தை எரிப்பதற்கு நாமே மூட்டிய நெருப்புக்கு ஒப்பாக இருப்பர். நட்போடு பழகியவரை விட்டுப் பிரிதல் கூடாது என்றாலும், அந்த நண்பரிடம் துர்க்குணங்கள் மிகுந்திருந்தால், மனத்துக்குத் துன்பமே தரும். நண்பர்கள் தவறு செய்தால் பிழை பொறுத்தல் சிறப்பு. பழகியவர் மனம் வருந்தும் என்பதால் தவறு செய்யாமல் ஒழுகுதல் இன்னும் சிறப்பாகும்.
பொன் உள்ளிட்ட செல்வங்களையும், நல்ல வீட்டையும் அழிக்கும் கொடுங்குணம் கொண்டது நெருப்பாகும். ஆனாலும், சாப்பிடுவதற்குச் சுவையான உணவைச் சமைக்கவும், விளக்கேற்றவும் உதவுவதால், அதன் பயன் கருதி, நெருப்பை வெறுக்காமல் நாள்தோறும் வீட்டில் மூட்டி வளர்க்கிறோம். அதுபோல், இடையிடையே நண்பர்கள் துன்பம் தரும் செயல்களை இழைத்தாலும், பிரியக் கூடாத சிநேகிதர்களைப் பொன் போலக் கருதிப் போற்ற வேண்டும். சுட்டெரிக்கும் நெருப்பும், தீமை செய்யும் நண்பரும் ஒப்பாவர். பொசுக்கினாலும் பயன் கருதித் தீயைப் பாதுகாப்பதுபோல், பிழை செய்தாலும் உபயோகம் கருதி நண்பரைப் பொறுத்தல் வேண்டும்.
வானத்தை முட்டுவது போலவும், மேகத்தை உரசிக் கிழிப்பது போலவும், உயரமாக வளர்ந்துள்ள மூங்கில் மரங்களையும், எளிதாக ஏறிச் செல்ல இயலாத செங்குத்தான மலைகளையும் கொண்ட நாட்டின் அரசனே கேள்! கண்களைக் குத்தின என்பதற்காக யாரும் கை விரல்களை வெட்டிக் கொள்வதில்லை. அதுபோல், துன்பங்கள் பல செய்தாலும், பிரிவதற்கு அரிதான நண்பர்களை, பிழை செய்தார் என்பதற்காக எவரும் விட்டு விலகுவதில்லை. நண்பர்கள் குற்றம் செய்தாலும், அவர்களை நம் உடலிலுள்ள உறுப்புகளைப் போன்றே கருதிப் பாதுகாக்க வேண்டும். கண்ணைக் குத்திய விரல்களைத் தண்டிக்காமல் மன்னிப்பதுபோல், குற்றம் இழைத்த நண்பர்களை வெறுக்காது பொறுத்தல் வேண்டும்.
நீர் நிறைந்த குளிர்ந்த கடற்கரையை உடைய பாண்டிய நாட்டின் அரசனே! துன்பங்கள் பல செய்தாலும், நற்குணங்களிலும், நற்செய்கைகளிலும், கல்வி கேள்விகளிலும் சிறந்த சான்றோர், ஆராய்ந்து அறிந்து தேர்ந்தெடுத்துப் பழகிய நண்பரிடம் பின்னாளில் குற்றம் குறைகள் கண்டாலும், அவற்றைப் பெரிதுபடுத்த மாட்டார்கள். ஒருவருடன் நட்புப் பாராட்டிச் சிநேகித்துக் கலந்த பிறகு, உறுதியான அறிவு இல்லாதவர்களே, நண்பரிடமுள்ள பிழைகளை வெளிப்படுத்துவர். குற்றம் குறை நோக்காது பொறுத்துப் போவதே மேன்மக்கள் குணமாகும். கற்றறிந்த மேன்மக்களாக இருந்தும், அடுத்தவர் குற்றம் பொறுக்காவிடின், கீழ்மக்களை விடவும் தாழ்வாகக், கடைநிலை மனிதராகவே கருதப்படுவர்.
ஒலிக்கும் மலை அருவிகளைக் கொண்ட நாட்டின் அரசனே! அயலார் செய்தது மிகுந்த தீமையைத் தரும் செயலே என்றாலும், ஆராய்ந்து நோக்குகையில், ஊழ்வினைப் பயனால், விதிவசத்தால் ஆனது எனின், வெறுப்பதற்கு என்ன இருக்கிறது? ஏதுமில்லை. அன்பு மிகுந்த நண்பர் விதியின் விளையாட்டால் ஓரொரு தருணம் செய்யும் பிழைகளை மனத்தில் எண்ணி ஆராய்ந்தால், அவை மனத்துக்குள்ளாகவே அடங்கி நிலை பெற்றுவிடும். குற்றம் குறையாக இல்லாமல், சிறப்புடையதாக மாறிவிடும். நண்பர் செய்த தீமைகளைப் பிறரிடம் கூறாமல் நெஞ்சினிலே அடக்கிக் கொண்டால், அவரே பின்னர் மனம் வருந்தித் திருந்திக் கூடுவர். அயலார் செய்த தீமைகளையே பொறுக்கும்போது, நண்பர் அன்புடன் செய்தது தீமையாக மாறினும் பொறுத்தல் வேண்டும்.
தமது நண்பர் என்று தம்மால் விரும்பி நட்பு கொண்டவர்கள், பின்னர் நண்பரெனக் கொள்வதற்கு ஏற்ற நற்குணங்கள் ஏதும் இல்லை எனத் தெரிய வந்தாலும், அவரைக் கைவிடுதல் கூடாது. உண்மையான நண்பரை விடவும் மேன்மையாகவும், சிறப்பாகவும், அவரை உளமார ஏற்க வேண்டும். அவரிடம் காணப்பட்ட குற்றம், குறைகள், பிழைகள் எதையும் வெளியே யாரிடமும் சொல்லாமல், மனத்துக்குள்ளேயே அடக்கி வைத்தலே கற்றறிந்த சான்றோர் குணமாம். நட்பிற்குத் தகுதி இல்லாதவர் என்று தெரிந்த பிறகும் அதைக் காட்டிக் கொள்ளாமல், அவரை மதிக்க வேண்டும். புறங்கூறிப் பழித்தல் கூடாது.
ஒருவரை சிநேகித்து நண்பராகக் கொண்ட பிறகு அவரிடம் உள்ள குற்றம் குறைகளையும் தீய குணங்களையும் ஆராய்ந்து கொண்டிருக்கக் கூடாது. அவ்வாறு செய்தால், அலைகள் ஒலிக்கின்ற கடலால் சூழப்பட்ட இந்த உலகம் நம்மை இகழும், சிரிக்கும். நண்பருடைய ரகசியங்களைக் காப்பாற்றாமல் மற்றவர்களிடம் வெளியிட்டவனை இந்த உலகம் துரோகி எனப் பழிக்கும். மரணத்துக்குப் பிறகு அவன் நரகத்தைச் சென்றடைவான். அதேபோல், நண்பரிடமுள்ள பிழைகளைத் தேடிக் கொண்டிருப்பவனும் இதே துன்பங்களை அனுபவிப்பான். உலகம் தூற்றும். இறந்த பிறகு நரகமே கிடைக்கும்.
24. கூடா நட்பு
‘கூடா நட்பு’ என்பது பொருத்தமற்ற சிநேகமாகும். இருவர் உள்ளத்திலும் கேண்மை உடையவராகித், தகுதியுடன் நண்பராக இருப்பதே உண்மையான நட்பாகும். அவ்வாறு இல்லாமல், உள்ளக் கலப்பின்றி, வெளியே நண்பர்கள்போல் நடிப்பது பொருந்தாத நட்பாகவே கருதப்படும். இவை மட்டுமின்றிக் குடிப்பிறப்பு, குணம், ஒழுக்கம், உள்ளம், அறிவுடைமை காரணமாகவும், இன்ன பிற தகுதியின்மைகளாலும், பொருத்தமற்ற நபர்களுடன் கொள்ளும் நட்பும் கூடா நட்பாகும். வீணே பொழுதைப் போக்கவும், வெற்றுப் பேச்சுப் பேசிக் கூடிக் கழிவதும் நட்பன்று. இன்பத்திலும் துன்பத்திலும் இணைந்திருப்பதும், பரஸ்பரம் ஒருவர்க்கு ஒருவர் உதவுவதுமே உண்மைச் சிநேகமாம். பிழை பொறுத்தல் நட்பில் சிறப்பு எனினும், பொருந்தாதவர்களுடன் நட்பு கொண்டு, அவர் செய்யும் குற்றம் குறைகள் அனைத்தையும் பொறுத்துப் போக வேண்டும் என்பது அவசியமில்லை. எனவே இந்த அத்தியாயம் கூடா நட்பைக் கூறி, அதை விலக்க வேண்டிய அவசியத்தையும் விளக்குகிறது.
மேகங்கள் சூழ்ந்த கருமையான மலைகளில் இருந்து அருவிகளாகப் பொங்கி வழியும் நீர்வளம் மிக்க மலைகளைக் கொண்ட நாட்டின் அரசனே! கட்டுக்கோப்பற்ற பழைய கூரை வீட்டிற்குள்ளே மழைக் காலத்தில் தண்ணீர் புகாதவாறு சேற்றினால் அணையக் கட்ட உதவுவார்கள். அதனுள் விழும் தண்ணீரை வெளியே இறைப்பார்கள்; அல்லது மேலிருந்து விழும் தண்ணீரைப் பாத்திரங்களில் சேமிப்பார்கள். இவ்வாறு செய்வது அவர்களின் இயற்கைக் குணம் அல்ல. நம்மிடம் ஏதேனும் ஒரு செயலை எதிர்பார்த்து அந்தக் காரியம் நிறைவேறும் வரை நமக்கு உதவியாக இருப்பதுபோல் காட்டிக் கொள்வார்கள். நாம் துன்பப்படும் போது நம்மோடு இணைந்து துன்புறுவது போலவும் நடிப்பார்கள். அவர்கள் எதிர்பார்த்து நாடி வந்த காரியம் முடிந்த அடுத்த வினாடியே, நம்மை விட்டு விலகிவிடுவர். இத்தகைய சுயநலம் மிக்கவர்களை நம்பி நட்பு பாராட்டி நண்பராகக் கொள்ளக் கூடாது.
ஒளி பொருந்திய வெண்மையான அருவி நீர் வளமுள்ள பாண்டிய நாட்டின் வேந்தனே! உயர்ந்த பண்புள்ள கற்றறிந்த மேன்மக்களுடனான கேண்மை சிறந்த நட்பாகும். மாதம் மும்மாரிப் பொழிவதுபோல், தவறாமல் பெய்யும் மழைபோல், பயனுள்ளதாகப் பெரியோருடனான நட்பு விளங்கும். ஆனால், நற்குணமற்ற தீயோருடனான நட்போ, எந்த நன்மையும் அளிக்காமல் கெடுதலையே தரும். உரிய காலத்தில் பெய்யாமல் மழை பொய்த்துப் போனால், ஏரி குளமெல்லாம் வறண்டு வறட்சி நிலவும். மழையின்றிச் சுட்டெரிக்கும் கோடைக் காலத்தில் என்னென்ன துன்பங்கள் உண்டாகுமோ அத்துணைத் துன்பங்களும் சிறியோருடனான நட்பும் விளங்கும். பயனற்றதாகவே திகழும். நல்லோர் கேண்மை மழைக்கும், தீயோர் கேண்மை மழையின்மைக்கும் உவமையாம்.
நல்ல நுட்பமான நூல்களைக் கற்ற அறிஞர்களுடன் நண்பர்களாகக் கூடி மகிழ வேண்டும். அவ்வாறு கிடைக்கும் இன்பமானது வானுலகில் சொர்க்கத்தில் பெறும் இன்பத்துக்கு நிகராகும். இதுவே அனைவரும் விரும்பத்தக்க நட்பும் ஆகும். ஆனால், சிறந்த நூல்களைக் கல்லாத அறிவிலிகளுடனான நட்பால் எந்தப் பயனும் விளையப் போவதில்லை. சிறியோருடனான கேண்மை நகரத்தில் கிடைக்கும் துன்பத்துக்கு ஒப்பாகும். விரும்பத் தகாத கேண்மையுமாகும். அறிஞர் நட்பால் கிடைக்கும் இன்பத்துக்கு வானுலகச் சொர்க்கம் உவமை. மூடர் நட்பால் கிடைக்கும் துன்பத்துக்கு நரகம் உவமை.
பார்க்கும் இடங்களில் எல்லாம் ஏராளமான சந்தன மரங்கள் அடங்கிய அடர்ந்த சோலைகளைக் கொண்ட மலை நாட்டு அரசனே! அன்பில்லாதவர் நட்பு ஆரம்பத்தில் பெருகி வளர்வது போலத் தோன்றும். ஆனால், அந்த நட்பு நீண்ட காலம் நிலைக்காது. வைக்கோல் போரில் பற்ற வைக்கப்பட்ட நெருப்பு நொடிப் பொழுதில் மளமளவெனப் பரவி கடைசியில் அனைத்தையும் எரித்துச் சாம்பலாக்கிவிடும். அதுபோல், உள்ளத்திலே நட்பு என்னும் பிணைப்பு இல்லாத அன்பிலார் தொடர்பும், முதலில் வளர்வதுபோல் காணப்பட்டாலும், சிறிது காலம் கூட நீடித்து நிலைக்காமல் முற்றிலும் அழிந்துவிடும். அன்பிலார் நட்பு, நிலைக்காத வைக்கோல் போரில் பிடித்த நெருப்புக்கு உவமானம்.
செய்ய முடியாத செயல்களைச் செய்வோம் என வாய்ச்சொல்லில் வீரம் காட்டுவதும், செய்ய முடிந்த செயல்களை உரிய காலத்தில் செய்து முடிக்காமல் காலம் கடத்தி வீணே பொழுதைக் கழிப்பதும் கூடவே கூடாது. இவ்விரண்டும், உண்மையாகவே இன்பம் தரும் பொருள்களை வேண்டாம் என வெறுத்து ஒதுக்கும் துறவிகளுக்குக் கூட அப்போதே துன்பம் தருவனவாம். செய்யக் கூடாதவற்றைச் செய்வோம் எனச் சொல்வோர் வெற்று ஆரவார மொழி பேசி ஆசை காட்டி மோசம் செய்வோர் ஆவர். செய்யக் கூடியதை உரிய காலத்தில் செய்யாதோர் நம்பிக்கைத் துரோகம் இழைக்கும் போலி அன்பினர் ஆவர். எனவே இவ்விரு வகைக் குணம் கொண்டாருடன் நட்பு வைக்கக்கூடாது.
குவளை மலரும், ஆம்பல் மலரும், ஒரே குளத்தில் பிறந்து ஒன்றாகவே நீண்டு வளர்கின்றன. இருப்பினும், விரிந்து பூத்து மணம் வீசும் குவளை (நீலோற்பலம்) மலர்களுக்கு இணையாக, அதே குளத்தில் பூக்கும் ஆம்பல் (அல்லி) மலர்களை ஒருபோதும் கூற முடியாது. அதுபோல், கற்றறிந்த பெருமைக் குணமுடைய மேன்மக்களின் செயல்களோடு ஒப்பிடுகையில், துர்க்குணம் மிக்க அறிவிலிகளின் செயல்கள் முற்றிலும் வேறாகவே இருக்கும். குணவான்களுடன் பழகினாலும் குணமற்றவர்களின் செய்கையும், செயலும் மாறாது. திருந்தவும் மாட்டார். எனவே, அறிவிலிகளுடன் எக்காலத்திலும் நட்பு பாராட்டக் கூடாது.
பருவ முதிர்ச்சி அடையாத சின்னஞ்சிறு இளைய பெண் குரங்கு அவரைக்காய் போன்ற தனது விரல்களால், தன் எதிரில் வந்த தந்தையான கிழ ஆண் குரங்கைக் கீறிக் கிழித்து அதன் கையிலுள்ள பழத்தைத் தட்டிப் பறித்து உண்ணும். இத்தகைய அழகிய இயற்கைக் காட்சிகள் நிரம்பிய மலைநாட்டுப் பாண்டிய மன்னனே! ஒருவருடன் கொள்ளும் நட்பு சிந்தையிலும், செயலிலும், ஒன்றுபட்டு ஆத்மார்த்தமாக இருக்க வேண்டும். அவ்வாறு மனம் ஒன்றுபடாமல், ஒற்றுமையின்றி, உதட்டளவில் மாத்திரமே உள்ள நட்பானது நீண்ட நாள்கள் நிலைக்காது. விரைவில் முறிந்துவிடும். துன்பமே தரும்.
நண்பன் ஒருவன் துன்பத்திலும், துயரத்திலும் வீழ்ந்து கிடக்கிறான். விரைந்து சென்று உடலும், உயிரும் உனதே என ஆறுதல் கூறி, உயிரைக் கொடுத்தேனும் அவனைக் காப்பாற்ற வேண்டும். அவ்வாறு, நட்பிற்கு இலக்கணமாக நண்பனுக்கு உதவாமல் இருப்பவன், அறிவுடையோர் ஏச்சுக்கும், பேச்சுக்கும், வசைக்கும், பழிச்சொல்லுக்கும், நகைப்புக்கும் உள்ளாவான். சிநேகிதனுக்கு இடுக்கண் நேர்ந்த காலத்து அவனுக்கு உறுதுணையாக இல்லாதவன் பெரும் பாவத்துக்கும் உள்ளாவான். இன்னும் குறிப்பாகச் சொல்வதெனில், நண்பனின் மனைவியைக் கற்பழிக்கும் காமுகன் செல்லும் நரகத்தையே, ஆபத்துக் காலத்தில் நண்பனுக்கு உதவாதவன் அடைவான்.
தேன் கூடுகள் நிறைந்த விண்ணை மூட்டும் மலைகள் நிறைந்த நாட்டை உடையவனே! நட்பின் இலக்கணத்தையும், இயல்பையும் அறியும் தன்மை கொண்டவர், சிநேகத்தை விட்டுவிட்டு, நட்பின் நற்குணத்தை அறியா அற்பப் புத்தி உடையவர்களோடு, சிநேகம் கொள்ளக் கூடாது. அவ்வாறு கொள்ளும் நட்பானது, பசுவின் நெய் ஊற்றி வைத்த பாத்திரத்தில் அந்நெய்யை எடுத்துவிட்டு, கசக்கும் வேப்ப எண்ணெய்யை ஊற்றி வைப்பதற்கு இணையாகும். நல்லார் நட்புக்குப் பசு நெய், தீயார் நட்புக்கு வேப்ப எண்ணெய் உவமைகளாம்.
அழகும், பெருமைக்குரிய சில நற்குணங்களும், ஒருவனிடம் இருந்தாலும், அவனிடம் ஊருக்கு உதவும் பரோபகார இயல்பு இருத்தல் வேண்டும். அது இல்லையெனில் எந்தப் பயனும் இல்லை. பசுவின் மடியிலிருந்து கறக்கப்பட்ட சுவையான கெட்டியான பாலில் நிறையத் தண்ணீரைக் கலந்தது போலாகும். பாலில் தண்ணீர் கலந்தால் சுவை குறைவதுபோல், அழகு இருந்தும் உதவும் மனம் இல்லையெனில் குணம் குன்றும். நன்மை தீமைகளை ஆராயும் அறிவுடையோர், தீயோரை நண்பர்களாக ஏற்றுப் பழகக் கூடாது. அவ்வாறு கொள்ளும் சிநேகம், ஆண் நாகப் பாம்பு, பெண் கட்டுவிரியன் பாம்போடு உறவு கொண்டு சல்லாபித்து உயிரை விட்டது போலாகும். தீயோருடன் நட்பு கொண்டால் உயிருக்கே ஆபத்தாக முடியும் (ஆண் நாகப் பாம்பு பெண் கட்டுவிரியன் பாம்போடு புணர்ந்தால் சாகும் என்பது பழமொழி).
நட்பியல் முற்றும்
(தொடரும்)