27. நன்னெறியில் செல்வம்
செல்வத்தின் பயன் அதை நல்ல வழிகளிலே ஈட்டுவதுடன், வறியவர்களுக்கும், தன்னைச் சுற்றியவர்கள் துன்பத்தில் வாடியவர்களுக்கும் கொடுத்து இன்புறுவதே ஆகும். அதுவே நன்னெறி ஆகும். செல்வத்தில் கிடைக்கும் இந்த ஈகைப் பயனை, இன்பத்தை, அனுபவிக்காமல், யாருக்கும் கொடாமல், சேர்ப்பதிலேயே கவனம் செலுத்துவான் எனில், அவன் பரிதாபத்துக்கு உரியவன் ஆவான். செல்வம் என்றென்றும் ஒருவரிடமே நிலைக்காது, தங்காது என்னும் உண்மையை உணர்ந்து, கையில் உள்ள போது பிறர்க்கு உதவி செய்து வாழ்தல் வேண்டுமென முந்தைய அதிகாரத்தில் கூறப்பட்டது. இந்த அதிகாரத்தில் ஈட்டிய செல்வத்தை யாருக்கும் கொடுத்து உதவாமல் சேமித்து வைத்தால் அது எவ்வாறு பயனற்ற செல்வமாகும் எனக் கூறப்படுகிறது. நல்ல வழிகளிலே செலவழிக்கப்படாத செல்வம் பயனற்றது என்பதுடன் அது தீய வழிகளிலே செலவழிக்கப்படுமே ஆனால் தீமை தருவதாகவும் முடியும். செல்வம் நல்வழிப்பட அறிவு காரணமாகும். செல்வம் நல்வழிப்படாமல் தீவழிப்பட அறிவின்மை காரணமாகும்.
அடிப்பகுதி வெடித்த மேற்பட்டையுடன் கூடிய விளா மரம் ஏராளமான பழுத்த கனிகளுடன் பக்கத்திலேயே தொங்கிக் கொண்டிருக்கின்றன. ஆனாலும் அக்கனிகளை விரும்பி உண்ண ஏனைய மரங்களிலுள்ள வௌவால்கள் விளா மரத்தை நெருங்கா. அதுபோல், பெருமைக் குணம் இல்லாதோரின் நிறைந்த செல்வமானது, அருகிலேயே இருந்தாலும், எந்தக் காலத்திலும் ஏழைகளுக்கு உதவாது. விளா மரத்தில் உள்ள பழங்களை வௌவால்கள் உண்ணா. அவற்றுக்கு விளாம்பழத்தால் எந்தப் பயனுமில்லை. விளாம்பழம் பயனற்றது என்பது கருத்தன்று. பிறருக்குப் பயன்படும் விளாம்பழங்களால் வௌவால்களுக்குப் பயனில்லை. அதுபோல், கெட்டவர்களின் செல்வம் தீயோர்களுக்கே பயன்படும். ஏழைகளுக்கு உதவாது என்பது கருத்தாம். நற்குணம் அற்றவர்களின் செல்வத்துக்கு விளாம்பழம் உவமை.
அள்ளி எடுத்துக் கொள்ளும் வகையில் அழகான சிறிய அரும்புகளை மிகுதியாகக் கொண்டது கள்ளிச் செடி. எனினும், கள்ளிப் பூக்கள் சூடிக் கொள்ளும் தகுதி பெற்றவை அல்ல. ஆகவே, கள்ளிச் செடியின் பூக்களைக் கொய்ய அதன் மீது கை வைக்க மாட்டார்கள். அதுபோல், மிகுதியான செல்வத்தைக் கீழ்மக்கள் உடையவர்கள் என்றாலும், கற்றறிந்த மேன்மக்கள் ஒருபோதும் உதவி கேட்டு அவர்களை அணுக மாட்டார்கள். கள்ளி பூத்தது போன்றே கீழ்மக்களின் செல்வம். அது எவர்க்கும் பயன்படாமல் அழியும். கீழ்மக்களிடம் உள்ள செல்வத்துக்குக் கள்ளி அரும்பு உவமையாகும்.
மிகுந்த அலைகளைக் கொண்ட கடற்கரை அருகிலேயே வாழ்ந்தாலும், தூரத்தில் சிறிதளவே என்றாலும், உப்பு கரிக்காத சுவையான நீர் ஊறும் கிணற்றைத் தேடியே மக்கள் செல்வர். அன்றாடப் பயன்பாட்டுக்கும், தாகத்தைத் தணிக்கவும் அருகிலேயே கடற்கரை இருந்தாலும், அதன் உப்பு நீர் எதற்கும் உபயோகப்படாது. அதுபோல், யாருக்கும் எந்த உதவியையும் செய்யாத பெரும் செல்வந்தர்கள் அருகிலேயே வசித்தாலும், அவர்களால் மற்றவர்களுக்கு எந்தப் பயனுமில்லை. மாறாக, தான தருமம் செய்வோர் தொலை தூரத்தில் இருந்தாலும், வழங்கும் கொடை சிறிதளவே என்றாலும், அவர்களிடம் உதவி கேட்டே அறிவுடையோர் விருப்பமுடன் செல்வர். கீழ்மக்கள் செல்வந்தர்களாக அருகிலேயே இருந்தாலும், அறிவுடைய மேன்மக்கள் உதவி கேட்டு அவர்களை நாட மாட்டார்கள். பிறர்க்கு உதவும் செல்வர்க்கு உவர்ப்பில்லாத கிணறு உவமை. உதவாத செல்வர்க்குக் கடல்நீர் உவமை.
நெருங்கிய கடல்கள் சூழ்ந்த இவ்வுலகில் புண்ணியம், நல்வினைப் பயன் என்பனவெல்லாம் நாம் நினைப்பது போலில்லை. அவை வேறு விதமாக உள்ளன. அறிய வேண்டுவன எனச் சான்றோர் விதித்த அனைத்து நூல்களையும் கற்றறிந்த அறிவுடையோர், எந்தப் பொருளுமின்றி வறியவர்களாக இருக்கின்றனர். ஆனால், மதிப்பில்லாத, உண்டை, கறி முள்ளி, கண்டங்கத்தரிச் செடிகளைப் போன்ற அறிவிலிகள் பட்டாடைகள் உடுத்திக் கொண்டு செல்வச் செழிப்பில் மிதக்கின்றனர். அறிவுடையோர் ஏழைகளாகவும், அறிவில்லாதோர் பணக்காரர்களாகவும் வாழ்வது முன்வினைப் பயன் போலும் என்றே தோன்றுகிறது. நல்லவர்கள் துன்புறுகின்றனர். கெட்டவர்கள் இன்புறுகின்றனர். இதுவே உலகில் நாம் காணும் காட்சி. அறிவிலிகளுக்குக் கறி முள்ளி, கண்டங்கத்தரி ஆகியவை உவமைகள்.
வேல்முனை போன்ற நீட்சியான விழிகளைக் கொண்டவளே! அறிவுடையோர் மேன்மக்கள் நற்குணமுடையோர் வறுமையிலும் துன்பத்திலும் உழல்கின்றனர். ஆனால், அறிவிலிகள் கீழ்மக்கள் துர்க்குணமுடையோர் சீரும் சிறப்புமாகச் செல்வத்தில் திளைக்கின்றனர். ஆராய்ந்து பார்த்தால், முற்பிறவியிலே அவரவர் செய்த வினைப்பயனே ஆகும். வேறொரு காரணமும் தெரியவில்லை. முற்பிறப்பில், யாருக்கும் எந்த உதவியும் செய்யாதோர் இப்பிறவியில் வறியவராகவும், முற்பிறப்பில் உதவியோர் இப்பிறப்பில் செல்வந்தராகவும் பிறந்தனர் என்பது கருத்தாம்.
பூவின் நறுமணம் வீசாத புற இதழ்களைப் போன்று, ஜொலிக்கும் தாமரை மலர் மீது அமர்ந்திருக்கும் பொற்பாவையே, திருமகளே! மணம் வீசாத புற இதழ்களைப் போலவே நீயும் செந்தாமரை மேலிருந்தும், நற்குணம் இன்றி இருக்கின்றாய்! பொன்னைப் போல் ஒளிவீசும் கற்றறிந்த அறிஞர் மேன்மக்களிடம் சென்று நீ தங்குவதில்லை. மாறாக, அறிவிலிகளான கீழ்மக்களிடமே சென்று சேர்கின்றாய். எனவே நீ வாழ வேண்டாம். மணக்காத புற இதழ்களைப் போலவே காய்ந்து சருகாகி அழிந்து சாம்பலாகக் கடவாய் என, வறுமையில் வாடித் துன்புறும் அறிஞன், செல்வத்துக்கு அதிதேவதையான திருமகள் மீது கடுங்கோபம் கொண்டு சாபமிட்டான். பூவின் மணம் அதன் புற இதழ்களுக்கு இல்லை. அதுபோல் தாமரை மலர் மீதிருந்தும் அதன் மென்மைக் குணம் திருமகளுக்கு இல்லை என்பது கருத்தாகும்.
இந்த உலக நடை கண்டு வேல் போன்ற கூரான கண்களை உடையவளே! நீ வியப்பாயாக! உதவுகின்ற நற்குணம் கொண்ட மேன்மக்களிடம் வறுமை குடியிருக்கிறது. மாறாக, ஒருவருக்கும் உதவும் குணமற்ற கீழ்மக்களிடம் செல்வம் பிசின்போல் ஒட்டிக் கொண்டிருக்கிறது? இத்தகைய துர்க்குணம் கொண்ட வறுமைக்கும், செல்வத்துக்கும், வெட்கம் இருக்காதோ? இவ்விரு முரண்களுக்கும் காரணம் என்ன? உதவுவோரிடம் வறுமை உண்டு. செல்வம் இல்லை. உதவாதோரிடம் வறுமை இல்லை. செல்வம் உண்டு. இவ்விரண்டும் அந்தந்த இடங்களில் எந்தவொரு நன்மையும் செய்யாமல் நிலைபெற்றுள்ளன.
பிறர்க்கு உதவும் நற்குணமுள்ள, நாணமுள்ள யோக்கியர்கள், வறுமைக் காலத்தில், தொலைதூரம் காலாற நடந்து சென்று, சிறிது சிறிதாகக் கிடைக்கும் பிச்சைச் சோற்றை உண்டு காலம் கழிப்பர். ஆனால், யாருக்கும் உதவாத, நாணமற்ற அயோக்கியர்கள், வறுமையில் வாடாததால், பிச்சை எடுக்கக் காலாற எங்கும் அலைய மாட்டார்கள். நெய்யாறும், பாலாறும், தயிராறும் ஓட, பொரி கறிகளுடன், வகை வகையான ருசியான உணவுகளை, வீட்டுக்குள் இருந்தவாறே, கதவை அடைத்துக் கொண்டு, வேர்வை வழிய, உண்டு களிப்பார்கள்.
மழை பொழியாததால், பொன் போன்ற நிறமுடைய கதிர்களை ஈனக் கூடிய செந்நெற் பயிர்கள், உள்ளே பொதிந்திருக்கும் கருவோடு வாடிக் கொண்டிருக்கின்றன. ஆனால், மின்னலோடு விளங்குகின்ற கருமையான மேகங்கள் பயிர்களுக்குத் தேவையான மழையைப் பெய்யாமல், நீர் நிறைந்திருக்கும் கடலில் பொழிந்து வீணாகிறது. அதுபோல், அறிவிலிகள், தம்மிடம் உள்ள செல்வத்தைத் தகுதியான கற்றறிந்த மேன்மக்களுக்குத் தந்து உதவாமல், தகுதி இல்லாதோர்க்கே அளிப்பார்கள். மழை நீரானது யாதொரு பயனுமின்றிக் கடலில் பெய்து வீணாவது போல், அறிவிலிகளின் செல்வம் எந்தவொரு உபயோகமும் இல்லாது மூடர்களையே சேர்ந்து வீணாகும்.
உலகத்தோடு ஒத்து நடவாத பகுத்தறிவில்லாதோர், பல நூல்களைப் படித்திருந்தாலும் படிக்காதவர்கள் என்றே எண்ணப்படுவர். மாறாக, உலக நடையை அறிந்த பகுத்தறிவுடையோர், படிக்காவிட்டாலும் கூட அனைத்தையும் ஓதி உணர்ந்த படித்தவர்களாகவே கருதப்படுவர். அதுபோல், வறுமையில் வாடினாலும், யாரிடமும் கையேந்தாத மேன்மக்கள், உள்ளத் தூய்மை உள்ளோரெனச், செல்வந்தர்களாகவே எண்ணப்படுவர். மாறாக, செல்வந்தர்களே என்றாலும், இரந்தவர்களுக்குக் கொடாத கீழ்மக்கள், வறுமையில் வாடுவோராகவே கருதப்படுவர். சான்றோர்க்கு மனத் தூய்மை பெருமை தரும். செல்வந்தர்க்கு ஈகை மதிப்பைத் தரும்.
இன்பவியல் முற்றும்
(தொடரும்)