Skip to content
Home » அறம் உரைத்தல் #19 – நாலடியார் – துன்ப இயல் (28-29)

அறம் உரைத்தல் #19 – நாலடியார் – துன்ப இயல் (28-29)

அறம் உரைத்தல்

துன்ப இயல்

மனிதர்களின் மனத்துக்குத் துன்பம் உண்டாதலைப் பற்றி இந்த இயல் கூறுகிறது. இன்பம் துன்பம் எனச் சொல்லப்படுவன அனைத்தும் அந்தந்த நிகழ்வுகளைப் பொருத்தன அல்ல. அவற்றைத் தத்தம் உள்ளத்திலே கொண்டு இன்பமாகவும், துன்பமாகவும் கருதி, அனுபவிக்கும் மன நிலையைப் பொருத்ததே ஆகும். நன்மை தீமைகளைப் பகுத்தறிந்து உள்ளமே நமக்கு உணர்த்துகிறது. இதன் காரணமாகவே, நன்மையென உணர்ந்தவிடத்து இன்பத்தையும், துன்பமென உணர்ந்தவிடத்துத் துன்பத்தையும் அனுபவிக்கிறோம். இந்த உண்மை அவரவர் உள்ளத்தில் விளங்கும் காரண காரியங்களின் தராதரங்களைப் பகுத்தறியும் தன்மையைப் பொருத்தே அமையப் பெறும். ஈயாமை, இன்மை, மானம், இரவச்சம் (பிச்சை எடுக்க வெட்கப்படுதல்) ஆகியவை மேன்மக்களின் உள்ளத்திலே துன்பம் தரக் கூடியவை.

28. ஈயாமை

அறங்களுள் மிகச் சிறப்பாகக் கருதப்படுவது ‘ஈதல்’ ஆகும். அதிலும், வறுமையில் வாடும் ஏழை எளிய வறியவர்களுக்கு ஈதல், கூடுதல் சிறப்பாம். வறியவர் ஒருவர் நாடி வந்து இரந்து நிற்கையில், அவருக்கு உதவ முடியாத சூழலில் ஏற்படின், அதற்காக மேன்மக்களே மிகவும் மனம் வருந்தித் துன்பப்படுவர். ஆனால், கீழ்மக்களோ, வசதியிருந்தும், இரந்து நிற்கும் வறியவர்களுக்குக் கொடுக்க மனமின்றி எதுவும் தராமல் அவரை அனுப்பிவிடுவர். அதனால், இரந்து வந்த வறியவர் மனம் பெரிதும் புண்படும். ஈய மறுத்தவர் அடுத்த பிறவியில் அளவற்ற துன்பத்துக்கும் துயரத்துக்கும் உள்ளாவார்.

தம்மிடத்தில் உள்ள சமைத்த உணவை, நண்பர்களுக்கும், நட்பில் இல்லாத அயலார்களுக்கும், சுற்றத்தார்களுக்கும், சம அளவில் பிரித்துப் பகுத்துக் கொடுத்து, தாமும் உண்பதே உண்மையில் சமைத்து உண்பதாகும். அவ்வாறின்றிச் சமைத்த உணவை, கதவை அடைத்துத் தான் மட்டும் தனியே உண்ணும் நற்குணமில்லாத பயனற்ற மனிதர்களுக்கு, மேலுலகக் கதவு திறக்காது, மூடப்பட்டிருக்கும். இம்மையில் விருந்தோம்பலில் சிறந்து விளங்குவோரை மறுமையில் தேவர்கள் சொர்க்கத்தின் கதவுகளைத் திறந்து வைத்து வரவேற்பார்கள். ஈதல் என்னும் அறச் செயலைச் செய்யாதோர்க்குச் சொர்க்கத்தின் கதவுகள் அடைக்கப்பட்டிருக்கும். உணவைப் பகுத்துண்டு வாழ்வோரே நற்கதி அடைவார்கள்.

எப்போதெல்லாம் இயலுமோ அப்போதெல்லாம், அவரவர்க்கு இயன்ற அளவினில், சிறு சிறு தர்மங்களே என்றாலும் செய்து வந்தவர்கள் எக்காலத்தும் மேன்மை அடைவார்கள். அவ்வாறு இல்லாமல், யாருக்கும் தானம் தருமம் செய்யாமல், பெருஞ்செல்வத்தைச் சேர்த்து வைப்பதிலேயே குறியாய் இருப்போரும் உண்டு. செல்வம் அடைந்த காலத்தில், கைவசம் பொருள் சேர்ந்த பிறகு, ‘அது பற்றி யோசிக்கலாம்’ என்ற நினைப்பில் வாழ்நாளை வீணே கழிப்போர், உலக நிந்தனை என்னும் கடலில் சிக்கி அழிந்து போவார்கள். அளவு சிறிதெனினும் ஈதல் என்னும் அறம் செய்வோர் மேன்மக்களாக மதிக்கப்படுவர். மாறாக, வயது முதிர்ந்து மூப்பு எய்திய காலத்தில், கையில் பொருள் சேர்ந்த பிறகு, அறம் செய்யலாம் என எண்ணுவோர், பழிச்சொல்லுக்கும், தூற்றலுக்கும் ஆட்பட்டுத் துன்பக் கடலில் மூழ்கி அழிவர்.

பாடுபட்டு உழைத்து அருமையாகச் சேர்த்த செல்வத்தைத் தானே அனுபவித்துக் காலம் கழிக்க வேண்டும். அல்லது, பொருள் வசதி அனைத்தையும் துறந்த துறவோர்க்கேனும் செல்வத்தைக் கொடுத்து உதவ வேண்டும். இவ்வாறின்றித் தானும் அனுபவிக்காமல், வறியோர்க்கும் தந்து உதவாமல், எந்தப் பயனுமின்றி வீணாகச் செல்வத்தைச் சேர்த்து வைத்து இறக்கின்றவன், மடையன் என்றும் உலோபி என்றும் கருதப்படுவான். அவன் தேடி வைத்த பொருளும் ‘என்னை நீ வறியோர்க்கும், துறவோர்க்கும் உதவி நன்கு பயன்படுத்திக் கொள்ளவில்லையே’ எனச் சிரிக்கும். ‘ஓடியாடிச் சேகரித்த பொருளை அறச் செயல்களுக்கு உபயோகப்படுத்தி மறுமைப் பேற்றை அடையாமல் வீணடித்துவிட்டாயே’ என அறிவுடையோரும் நகைப்பர். இவர்களுடன் இணைந்து ஈகை என்னும் பண்பும் கேலி பேசும். ஈகைக் குணம் இல்லாதோர்க்கு இம்மையிலும், மறுமையிலும் இன்பமில்லை என்பது கருத்தாம்.

வறியோர்க்குக் கொடுத்து மகிழ்ந்து இன்புற வேண்டும். அவ்வாறு இல்லையெனில் சேர்ந்த செல்வத்தைத் தானே அனுபவித்துக் களிக்க வேண்டும். தானும் அனுபவிக்காது அடுத்தவருக்கும் ஈயாது, செல்வத்தை பூதம்போல் பாதுகாப்பவனைக் கஞ்சன் என்றும் அறிவிலி என்றும் உலகம் கருதும். சீராட்டிப் பாராட்டி அன்போடும் ஆசையோடும் வளர்த்த பெண்ணை, பருவ வயது எட்டியவுடன் அயலான் ஒருவன் திருமணம் செய்து கொண்டு செல்வான். பெண்ணாகப் பிறந்தவள் என்றேனும் ஒருநாள் யாரையேனும் திருமணம் செய்து கொண்டு வேறு வீட்டுக்குப் போவது இயற்கை நியதி. கருமி சேர்த்த செல்வத்துக்கும், அதுபோல், குடும்பத்துக்கும் உதவாமல், தான தருமங்களுக்கும் பயன்படாமல், யாரோ ஒருவனால் அனுபவிக்கும் நிலை நிகழக் கூடாது என்பது கருத்து.

சீறி எழும் பெருத்த அலைகள் மோதுகின்ற கடற்கரையை ஒட்டி வாழ்ந்தாலும் வற்றாத கடல் நீரை யாரும் பயன்படுத்த மாட்டார். கடல் நீர் உப்பு நீர் என்பதால் அருகே குடியிருந்தாலும் மக்கள் அதைத் தேடிச் செல்ல மாட்டார்கள். ஆனால், தொலை தூரத்திலுள்ள சின்னஞ்சிறு கிணறு, அடிக்கடி வற்றினாலும், சிறிது சிறிதாக அதில் ஊறும் நீரைத் தேடிச் சென்று சுவையான நீரை அருந்துவார்கள். அதுபோல், உதவும் குணம் இல்லாதவர்கள், மறுமை இன்பத்தை அறியாதவர்கள், சேர்த்து வைத்த பயனற்ற பெரும் செல்வத்தை நாடி யாரும் போக மாட்டார்கள். மாறாக, வறுமை நிலையிலும், சிறிய அளவே என்றாலும், ஈகைக் குணமுடைய, மறுமை இன்பத்தை உணர்ந்த, சான்றோர்களைத் தேடிச் செல்வர். கருமியின் பெரும் செல்வத்தை விடவும், வறுமை நிலையிலும் சிறிதே உதவும் நல்லோர் உறவே சிறப்பாகும்.

அறிவற்றவன் தான் சேர்த்து வைத்த பொருளை எனது எனது எனச் சொந்தம் கொண்டாடி நினைத்துக் கொண்டிருப்பான். அவனோடும், அவனது செல்வத்தோடும், எந்தவொரு தொடர்பும் இல்லாத நானும் என்னுடையது என்னுடையது என்று சொல்லிக் கொண்டிருப்பேன். அச்செல்வம் அவனுடையது எனில் அதை அனுபவிக்க வேண்டும். அல்லது அடுத்தவனுக்கேனும் கொடுத்து மகிழ வேண்டும். இரண்டுமின்றி உலோபியாக உள்ளான். அந்தப் பொருளுக்கு எந்தச் சொந்தமும் இல்லாத வறியவனான நானும் அந்தச் செல்வத்தை அனுபவிக்கவும் இயலாமல், மற்றவர்களுக்குக் கொடுக்கவும் முடியாமல், பார்த்துக் கொண்டிருக்கிறேன். செல்வம் இருந்தும் ஈயாத உலோபியும், செல்வம் இல்லாத வறியவனும், இருவரும் வெறுமனே பொருளைப் பார்த்துக் கொண்டிருப்பதால் ஒன்றெனக் கருத்தாம்.

சேர்த்த பொருளைப் பிறர்க்கு வழங்கும் ஈகைக் குணமில்லாத, இம்மை மறுமை இன்பங்களை உணராதவர்கள், செல்வந்தர்களே என்றாலும் பழிச்சொல்லுக்கு ஆளாகி வறியவர்களாகவே கருதப்படுவர். ஆனால், செல்வம் இல்லாத வறியவர்களோ, பொருளை யாருக்கும் கொடாமல் சேர்ந்து வைத்தனர், கைகள் வலிக்கப் பற்றிக் கொண்டிருந்தனர், நிலத்தில் பள்ளம் தோண்டிப் புதைத்துப் பாதுகாத்தனர், கள்வர்கள் திருடியதால் துயரப்பட்டனர், என எந்த வகையான பழிச்சொற்களுக்கும், துன்பங்களுக்கும் ஆளாகாமல் தப்பித்தனர். ஈகைக் குணமற்ற செல்வந்தர்களே பழிச்சொல்லுக்கும், துயரங்களுக்கும் உள்ளாவர் என்பது கருத்தாம்.

பொருள் சொந்தமாக இருக்கும்போது யாருக்கும் தானம் தருமம் செய்து மகிழ மாட்டான். அவனது மரணத்தைத் தொடர்ந்து அவனது பங்காளிகளிடம் பொருள் கைமாறிப் போன பிறகு, தாயாதிகளும் எவர்க்கும் தந்து உதவ மாட்டார்கள். வாழும் போது ஈகைக் குணத்துடன் பொருளை வழங்கியிருந்தால் பங்காளிகள் தடுத்திருக்க மாட்டார்கள். அவன் இறந்த பின்னர் பங்காளிகள் பொருளைத் தானம் கொடுத்திருந்தால் இறந்தவனும் உயிருடன் திரும்பி வந்து தடுத்திருக்க மாட்டான். மொத்தத்தில், அச்செல்வம், இவன் வாழும் போதும் வறியவர்க்குப் பயன்படவில்லை, செத்ததைத் தொடர்ந்து பங்காளிகளிடம் சேர்ந்த பிறகும் ஏழைகளுக்கு உபயோகப்படவில்லை. கருமித்தனம் அவனிடம் மட்டுமல்ல பரம்பரையாகப் பங்காளிகள் உற்றார் உறவினர் அனைவரிடமும் உள்ளதாம்.

தன்னிடம் யாசகம் தேடி வருவோரைக் கன்றுபோல் கருத வேண்டும். கன்றைக் கண்டவுடன் பாலைத் தானாகச் சுரக்கும் பசுவைப்போல், ஈகைக் குணம் கொண்டோர் தம்மை நாடி வருவோர்க்கு வெறுப்பின்றி மகிழ்வோடும், மனமிரங்கியும், உவந்தும், தானம் தருமம் செய்ய வேண்டும். அத்தகையோரே வள்ளல் தன்மை கொண்ட மேன்மக்கள் ஆவர். அவ்வாறு இல்லாமல், கால்களை இறுகக் கட்டியும், மடியை அழுத்தியும், பல்வேறு தந்திரங்கள் செய்த பிறகே சில பசுக்கள் பாலைச் சுரக்கும். அதுபோல், வலியோரும், தீயோரும், வருத்தி, பல சூழ்ச்சிகள் செய்து வற்புறுத்திய பிறகே, இரக்கம் இன்றியும், மகிழ்ச்சி இல்லாமலும், கொடுப்பது கீழ்மக்கள் குணமாகும். இது உண்மையான கொடை ஆகாது.

பொருளைத் தேடித் தேடிக் கஷ்டப்பட்டுச் சேர்த்து வைக்கும் செயல் துன்பம் தருவதாகும். அப்படிப் பாடுபட்டுச் சேமித்த செல்வத்தைத் திருடர்கள் திருடிச் செல்லாமல் பாதுகாப்பது கூடுதல் துன்பமாகும். அப்படித் தூங்காமல் கண் விழித்துப் பாதுகாத்த செல்வத்தில் கொஞ்சம் குறைந்தாலும் துயரம். அச்செல்வம் மொத்தமாக அழிந்து போனால் சொல்லொணாப் பெரும் துன்பம். இருந்தாலும், இல்லாவிட்டாலும், குறைந்தாலும், மிகுந்தாலும், தொலைந்தாலும், எல்லா வகையிலும் துன்பம் தருவது செல்வம். துயரங்களுக்கும், வருத்தங்களுக்கும், உறைவிடமாகத் திகழ்வது செல்வம். எனவே ஈட்டிய பொருளைப் பாதுகாத்துச் சேமித்து வைக்காமல் வறியவர்களுக்கு ஈந்து இம்மைத் துன்பங்களிலிருந்து விடுபடுங்கள். மறுமை இன்பத்தைப் பெறுங்கள்.

29. இன்மை

இந்த உலகில் நலவாழ்வு வாழ வேண்டுமெனில் கைவசம் பொருள் வேண்டும். தானும் அனுபவித்து, மற்றவர்களுக்கும் கொடுத்து உதவி செய்து, இன்புற வேண்டுமெனில், பொருள் கட்டாயம் தேவை. பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை. எனவே, இன்றியமையாத பொருளைப் பெறாதவர்கள் அடையும் துன்பங்களையும், துயரங்களையும் கூறுவதன் மூலம், பொருளைத் தேடுவதன் அவசியம் உணர்த்தப்படுகிறது. தேடிய பொருளைச் சேமித்து வீணாக்காமல், அதை அற வழிகளில் தான தருமம் செய்து செலவிடும் சிறப்பும் வலியுறுத்தப்படுகிறது. ஐம்புலன்களால் அனுபவிக்கப்படுவதே பொருளாகும். அது இல்லையெனில் அனுபவங்களால் பெறுவது இன்பமில்லை. துன்பமே ஆகும். இம்மையில் வறுமை, முற்பிறப்பில் ஈயாமை காரணமாக வருவதால் ‘ஈயாமை’ அதிகாரத்துக்குப் பிறகு ‘இன்மை’ அதிகாரம் வைக்கப்பட்டது.

இடுப்பைச் சுற்றி காவி ஆடை உடுத்திக் கொண்டு, பார்வைக்கு எளிய, துறவு வாழ்க்கையே வாழ்ந்தாலும், எட்டு பத்து பணம் கைவசம் இருக்க வேண்டும். அவ்வாறு பொருள் உடையவராக இருந்தால் மட்டுமே துறவியே ஆனாலும், பலரால் மதிக்கப்படும் பெருமை கிடைக்கும். அறநூல்கள் கூறும் வழிநடந்து, ஒழுக்கமுள்ள உயர் குடியில் பிறந்தாலும், பொருள் வசதி இல்லாவிடின், மதிப்போ மரியாதையோ கிடைக்காது. செத்த பிணத்தை விடவும் கீழான கடைப்பட்டவராகவே எண்ணப்படுவர். பொருள் இல்லார்க்கு இந்த உலகம் இல்லை என்பதை இப்பாடல் மீண்டும் வலியுறுத்துகிறது. உலகில் பெருமையும் சிறுமையும் பொருள் உடைமை குறித்தே ஏற்படுகிறது. பிணத்துக்கேனும் ஈமக்கிரியைகள் செய்வார்கள். பொருள் இல்லார்க்கு அதுவும் கிடையாது என்பதால் பிணத்தை விடவும் இழிவு எனப்பட்டது.

தண்ணீரைக் காட்டிலும் நுட்பமானது நெய் என்பது அறிவுடையோர் கருத்தாம். அந்த நெய்யை விடவும் நுட்பமானது புகை என்பது கற்றார் மற்றும் கல்லாதவர் கருத்தாம். ஏழ்மையின் தன்மையை ஆராய்ந்து பார்த்தால், வறுமைத் துன்பத்தில் வாடுபவன் தண்ணீர், நெய், புகை ஆகியவற்றை விடவும் நுட்பமானவன் எனத் தெரிய வரும். தண்ணீர், நெய் மற்றும் புகை ஆகியவை நுழைய முடியாத சின்னஞ்சிறு துவாரங்களுக்கு உள்ளேயும் வறியோர் புகுந்து செல்வந்தர்கள் இருக்கும் இடங்களைச் சென்றடைவர். வறுமைத் துன்பத்தில் வாடி வதங்குபவனுக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை, காவலும் கிடையாது. தனது ஏழ்மை நீங்க வறியவன் எல்லாத் தடைகளையும் தகர்த்துச் செல்வந்தர்களைத் தேடிப் போவான்.

கொல்லைத் தினைப்புனத்தில் தினைக் கதிர்களை உண்ண வரும் கிளிகளை விரட்டக் குறவன் குறத்தியர் கற்களை வீசுவர். அத்தகைய சோலைகள் நிறைந்த குறிஞ்சி நாட்டின் தலைவனே! பெரிய கற்களையும், பாறைகளையும், கொண்ட நெடிதுயர்ந்த மலையின் மேலே காந்தள் செடிகள் மலரும். பூத்துக் குலுங்கும். அவ்வாறு அவை மலராவிடில் சிவந்த உடற்புள்ளிகளைக் கொண்ட வண்டினங்கள் மலை உச்சிக்குப் பறந்து போகாது. அதுபோல், பொருள் இல்லாதவரைத் தேடி உறவுகள் யாரும் செல்லார். வறியவர்களுக்குச் சொந்தம், பந்தம், உற்றார் உறவினர் யாரும் இல்லை. மலையில் காந்தள் மலராவிட்டால் வண்டுகள் செல்லாததுபோல், ஒருவனிடம் செல்வம் இல்லாவிட்டால் உறவுகள் போகார்.

செல்வம் நிறைந்திருக்கும் காலத்தில் தொண்டு செய்யவும், ஏவல் புரியவும், ஏராளமானோர் காத்திருப்பர். உயிர் பிரிந்து செத்துப் பிணமானால், அவனிடம் இருக்கும் பொருளைப் பிடுங்கித் தின்ன, காக்கைபோல் ஆயிரக் கணக்கில் மக்கள் கூட்டம் கூடிப் புலம்புவர். ஆனால், அவரே, பொருள் அனைத்தையும் இழந்து, வறுமையில் வாடி வதங்கி, தேனைத் தேடி அலையும் வண்டுபோல், உணவுக்காகத் திரியும் போது, ஒருவரும் நாடிச் செல்லார். அவரிருக்கும் திசைப் பக்கம் தலை வைத்தும் படுக்கமாட்டார். ‘நலமாக வாழ்கிறீர்களா?’ என உதட்டளவில் கூட யாரும் விசாரிக்கத் துணியார். வறியோரைக் கண்டால் வாய் வார்த்தை கூடப் பேசார். மனிதரிடம் உள்ள பண்புக்கு மதிப்பில்லை. பொருளுக்கே மதிப்பும் மரியாதையும் என்பது கருத்து. செல்வந்தர்களிடம் உள்ள பணத்தை பறிக்கச் சுற்றித் திரிவோர்க்கு, பிணத்தைத் தின்னும் காக்கைகள் உவமை கூறப்பட்டது.

பேரொலி முழங்க ஓடிவரும் அருவி நீர், கற்களின் மீதுள்ள அழுக்கைக் கழுவிக் கொண்டு ஆரவாரத்துடன் விழுகின்ற நெடிதுயர்ந்த மலைகளைக் கொண்ட பாண்டிய நாட்டின் அரசனே! கொடிது கொடிது வறுமையே. அதனினும் கொடியது வேறெதுவும் இல்லை. வறுமை பீடித்துத் துன்பத்தில் உழன்று கொண்டிருப்பவர்களுக்குப் பிறந்த குலத்தின் பெருமை ஒழியும். அவர்களிடமுள்ள அரியனவற்றைச் செய்யும் வல்லமையும், பேராண்மைக் குணங்களும் மறையும். என்றென்றும் நிலைத்து நிற்கும் எனச் சொல்லும்படிச் சிறந்து விளங்கும் மேன்மையான கல்வியும் பயனற்றதாக அழியும். செல்வமின்றி வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டால், பிறந்த நற்குடிப் பிறப்பும், வல்லமை ஆற்றலும், ஆண்மைக் குணமும், சிறந்த கல்வியும் ஏழைகளுக்கு உதவாமல் போகும். வறியவர்க்கு உயர்குடிப் பிறப்பு, ஆற்றல், கல்வி உள்ளிட்ட மேன்மைகள் இருந்தாலும் அவர் சிறப்படையார்.

வயிற்றின் உள்ளே தோன்றிய மிகுந்த பசியின் காரணமாக, ஒருவனிடம் உணவை வேண்டி பிச்சை கேட்கிறான். உள்ளூரிலேயே குடியிருந்தும், கொடுப்பதற்குப் பொருளும் உணவும் இருந்தும், எந்த உதவியும் செய்யாதவன், அதே ஊரில் வாழத் தகுதி இல்லாதவன். இவ்வாறு யாருக்கும் எந்தப் பயனுமின்றி, கருமியாக வாழ்க்கை வீணடிப்பதற்குப் பதிலாக, ஊரை விட்டு வெளியேறி, வேறொருவர் வீட்டில் விருந்தாளியாக, இரந்துண்டு, மீதமுள்ள காலத்தைக் கழிப்பதே நலமாகும். பொருள் இருந்தும் ஈகைக் குணம் இல்லாதவன், உள்ளூரில் செல்வந்தனாக வாழ்வதை விடவும், வெளியூரில் வறிஞனாகப் பிச்சை எடுத்து உண்ணலாம்.

முல்லை அரும்பின் சிறப்பை அழிக்கத்தக்க கூர்மையான பற்களை உடைய பெண்ணே! வறுமை என்று சொல்லப்படும் துன்பத்தில் உழல்பவர்கள் தங்களது நல்ல குணங்களை இழப்பர். அது மட்டுமின்றி, பூரணமாய்ச் சிறந்து விளங்கும் கூர்மையான அறிவு நுட்பம் உள்ளிட்ட ஏனைய சிறப்புகள் அனைத்தையும் இழந்து நிற்பர். வறுமை நற்குணத்தையும், நுண்ணறிவையும் அழித்துவிடும். வறுமையில் வாடும் ஏழையின் நற்குணமும், கல்வியறிவும், பயனின்றிக் கெடும்.

அற்பமான வறுமையின் பிடியில் அகப்பட்டுச் சிக்கித் தவிக்கையில், ஏதேனும் ஒரு பொருளையேனும் யாசகமாகக் கொடுங்கள் எனக் கேட்கும் போது, உதவ முடியாமல் போகும் நிலை வருமானால், அத்தகையோர்க்கு அவ்வாழ்க்கை இழுக்காகும். இத்தகைய உதவ இயலாத தாழ்ச்சியான வாழ்வை உள்ளூரில் வாழ்வதை விடவும், கண்காணாத நெடுந்தொலைவு உள்ள தூர தேசங்களுக்குச் செல்லலாம். அங்கே வரிசை வரிசையாக அமைந்திருக்கும் செல்வந்தர்களின் வீட்டு வாசலில் நின்று, கை நீட்டிப் பிச்சை எடுக்கலாம். அவர்கள் அளிக்கும் உணவை உண்டு கெட்ட வழியில் வாழ்தலே நலமாகும். உள்ளூரில் யார்க்கும் உதவ முடியாமல் வாழ்வதை விடவும், வெளியூரில் பிச்சை எடுத்து வாழ்வது சிறப்பாகும்.

செல்வச் செழிப்பில் வாழ்ந்த காலத்தில் அனுபவித்த இன்பம் தரும் பொருள்கள் அனைத்தும் அழிந்து போனதால், தற்போது வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளான். இருப்பினும், அக்குடியில் (முன்பு கைகளில் பொன் வளை அணிந்த) வாழ்கின்ற பெண்கள் செடிகளை வளைத்து இலைகளை / கீரைகளைப் பறித்து அவற்றைச் சமைப்பார்கள். கைவசம் வேறு பாத்திரங்கள் இல்லாததால், பனங்காய் மற்றும் தேங்காய் ஓடுகளை (கொட்டாங்கச்சி) நன்கு குடைந்து உண்ணும் கலங்களாகக் கொள்வார்கள். உப்பில்லாத, அரை குறையாக வெந்தும் வேகாத கீரையையும், இலையையும், உண்டு வாழ்வார்கள். செல்வம் கைவிட்டுப் போனால் இலைக்கறியைச் சமைத்து உண்ணும் துன்ப நிலைக்கு வறுமை தள்ளிவிடும். எனினும், செல்வச் செழிப்புடன், நற்குடி பிறந்த மகளிர், வறுமை நிலை வந்தாலும், பிச்சை எடுக்க மாட்டார்கள். துன்பத்திலும், இலை உணவைத் தின்று மானம் இழக்காமல் வாழ்வார்கள்.

நல்ல தன்மையுள்ள. நிறைவான குளிர்ந்த நீரையுடைய அருவிகள், ஒரு காலத்தும் மாறாமல் விழுகின்ற சிறப்பினை உடைய மலை வளத்தைக் கொண்ட அரசனே! உடலெங்கும் ஏராளமான புள்ளிகளைக் கொண்ட அழகான வண்டுகள், பருவ காலத்தில், பூக்கள் பூத்துக் குலுங்கும் கிளைகளைக் கொண்ட மரங்களை மட்டுமே நாடிச் செல்லும். பூக்கள் உதிர்ந்து மொட்டையாக இருக்கும் கிளைகளைக் கொண்ட மரங்களைத் தேடி வண்டுகள் செல்ல மாட்டா. அதுபோல், பொருள் உள்ள செல்வர்களையே அனைவரும் நாடிச் சென்று உதவி பெறுவார்கள். பொருள் இன்றி வறுமை நிலையில் வாடுவோரைத் தேடிச் சென்று யாரும் யாசகம் கேட்க மாட்டார்கள். செல்வம் இருக்கும் போது தேடி வந்த உறவுகள், செல்வத்தை இழந்தவுடன் விலகிச் செல்லும். ஏழைகளுக்கு உறவுகள் இல்லை. வறியவர்களுக்குப் பூக்கள் இல்லாத கிளை, உறவினர்களுக்கு வண்டுகள் உவமைகளாம்.

( தொடரும்)

பகிர:
ஜனனி ரமேஷ்

ஜனனி ரமேஷ்

எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். ‘திருவள்ளுவர்’, ‘தமிழ் அறிஞர்கள்’ உள்ளிட்ட நூல்களும் ‘ஔரங்கசீப்’, ‘தேசத் தந்தைகள்’ உள்ளிட்ட மொழியாக்கங்களும் வெளிவந்துள்ளன. கட்டுரைகளும் எழுதிவருகிறார். விருதுகள் பெற்றவர். தொடர்புக்கு : writerjhananiramesh@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *