30. மானம்
‘மானம்’ மட்டுமே உலகில் ஒருவர்க்கு நீடித்து நிலைக்கும் மதிப்பும் கௌரவமும் ஆகும். எனவே மானம் சிறிதும் குலையாது பேணிப் பாதுகாக்கவும், மேன்மேலும் உயர்வுடையதாக்கிக் கொள்ளவும் முயலுதல் வேண்டும். மானம் உயர் நிலையிலிருந்து தாழும் சூழல் எப்போதேனும் நிகழுமெனில், மானத்தை இழப்பதை விடவும், உயிரைத் தந்து அதைக் காப்பதையே சான்றோர் சிறப்பாகக் கருதுவர். மானத்தை இழக்கப் பல்வேறு காரணிகள் இருப்பினும், வறுமையே முக்கிய அங்கம் வகிக்கிறது. மானத்தை இழந்து பிச்சை எடுத்து உண்ணும் நிலைக்கு வறுமை தூண்டுகிறது. உயர்குடிப் பிறந்தோர் இன்மைக் காலத்திலும் தமது நிலையிலிருந்து தாழார். ஒருவேளை ஊழ்வினைப் பயனால் தாழ்வு நேரிடின் உயிர் வாழார். எனவேதான் ‘இன்மை’ அதிகாரத்துக்குப் பிறகு ‘மானம்’ அதிகாரம் வைக்கப்பட்டுள்ளது. ‘மானம்’ வேறு ‘நாணம்’ வேறு என்பதை நன்கு அறிதல் வேண்டும். மானம் இழந்தபின் வாழ விரும்பாமல் உயிர் துறந்த சான்றோர் வரலாறுகள் இலக்கியங்களில் ஏராளம் உள்ளன.
கைவசம் செல்வம் அதிகம் இருக்கும் வலிமை காரணமாக, செருக்கினாலும், ஆணவத்தினாலும், நற்குணமற்ற தீயோர் வரம்பு மீறி நடந்துகொள்வர். அயோக்கியர்களின் எல்லை தாண்டிய நடத்தையைக் காணும் சான்றோர் உள்ளம் பதறித் துடிக்கும். உயிரை விடவும் மானத்தைப் பெரிதெனப் போற்றும் மேன்மக்கள் நெஞ்சம், வேதனை என்னும் நெருப்பால் நிறையும். மனம் வெதும்பித் துடிப்பர். காட்டில் பற்றி எரிந்து மளமளவெனப் பரவும் அக்கினி ஜுவாலைபோல் கொழுந்துவிட்டுக் கனன்று வேகும், கொதிப்படையும்.
தம்முடைய மானத்தைப் பேணிப் பாதுகாக்கும் தன்மை கொண்டவர்கள் சான்றோர் பெருமக்கள். அத்தகைய மேன்மக்கள் ஊழ்வினை காரணமாகச் செல்வம் இழந்து, வறுமையில் வாடும் நிலை வந்தாலும் தங்கள் நிலையிலிருந்து மாற மாட்டார்கள். உண்ண உணவின்றி, உடல் வற்றி, எலும்பும் தோலுமாகக் காட்சி தந்தாலும், நற்குணம் இல்லாத செல்வர்களிடம் செல்லமாட்டார்கள். தங்கள் வருத்தத்தைச் சொல்லி யாசகம் கேட்கவும் மாட்டார்கள். அதே சமயம் தங்களது வறுமையை வாய் திறந்து சொல்வதற்கு முன்பே, குறிப்பால் அறிந்து உதவும் நற்குணமுள்ள அறிவும் ஆற்றலுமுள்ள பெரியோரையே நாடிச் செல்வார்கள். வறுமை நிலையிலும் தீயோரிடம் பிச்சை கேட்கமாட்டார்கள். நல்லோரையே நாடுவார்கள்.
வறுமை நிலையிலும், நாமாக இருந்தால், நாடி வரும் விருந்தினர்களை இன்முகத்துடன் அன்புடன் வரவேற்போம். மேலும், வீட்டைச் சுற்றிக் காட்டி, இருப்பதைக் கொடுத்து உபசரிப்போம். இதுவே ஏழ்மையிலும் மேன்மக்களின் உயர் பண்பாகும். ஆனால், செல்வச் செருக்கும், இறுமாப்பும் கொண்ட கீழ்மக்களோ, தனது வீட்டை எளியோர் பார்த்த மாத்திரத்திலேயே, அதன் உறுதி அழிந்துவிடும் என்றும், கண் திருஷ்டி பட்டுவிடும் என்றும் எண்ணுவார்கள். (இல்லம் என்பதை மனைவி என்றும் பொருள் கொண்டு, எளியோர் இல்லாளைப் பார்த்த மாத்திரத்திலேயே அவள் கற்பு கெடும் என்றும் விளக்கம் கூறுவர்). எனவே, வீட்டுக்குள்ளேயும் அனுமதிக்காமல், வீட்டைச் சுற்றியும் காண்பிக்காமல், வெளியில், புறக்கடையில் உட்கார வைத்துச் சோறிட்டு அனுப்புவார்கள். ஆகவே, மானம் உடையோர் ஆணவம் கொண்ட அதுபோன்ற செல்வர்களுடன் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளமாட்டார்கள். மறந்தும் அவரைத் தேடிச் சென்று அவமானப்பட மாட்டார்கள்.
கஸ்தூரிச் சாந்தின் மணம் நன்றாக வீசுகின்ற நீண்ட கருங்கூந்தலை உடையவளே! மானம் உடையவர்களின் பெருமையும், மதிப்பும், கொள்கையும், இவ்வுலகில் என்றென்றும் நிலைத்து நன்மை பயக்கும். இப்பிறப்பில் நீடித்த புகழை வழங்கும். இந்தப் பிறவியில் நல்லொழுக்கத்தைக் கைவிடாமல் பின்பற்றுவதன் காரணமாகக் கிடைக்கும் புண்ணியம் அடுத்த பிறவியிலும் இன்பத்தையே அள்ளித் தரும். எனவே, மானத்தின் மேன்மையை உணர்வாயாக! மானம் உள்ளவர்கள் இம்மையிலும், மறுமையிலும் நன்மை அடைவார்கள்.
இறந்த பிறகும், பாவமும், அவமானமும், தம்மைத் தொடரும் என்பதால் அறிவு நிரம்பிய மானமுள்ள சான்றோர் அவற்றை உண்டாக்கும் பழிச்சொற்களைச் செய்யத் துணிய மாட்டார்கள். மரணம் என்பது என்றேனும் நிகழக் கூடியதே. யாராக இருப்பினும் சாவு நிச்சயம். அதனால் ஏற்படும் துன்பமும் துயரமும் ஒருநாளில் ஒரு சில நேரம் மட்டுமே. ஆனால் பழியும் பாவமும் வாழும் காலம் முழுவதும் மட்டுமின்றி, இறந்த பின்னரும் நிலைத்திருக்கும் கொடிய துன்பத்தைத் தரும். எனவே மேன்மக்கள் சாகும் நிலை வந்தாலும் பாவத்தையும், பழியையும் தரும் செயல்களைச் செய்ய விரும்பார். மானம் கெடும் செயல்களைச் செய்வதை விடவும், உயிரை இழப்பதே சிறந்ததாகும்.
வளமும் செழிப்புமுள்ள இந்தப் பெரிய உலகில், வாழ்கின்ற அனைவரை விடவும் மிகப் பெரிய செல்வந்தராகச் சிலர் இருப்பார்கள். இச்செல்வந்தர்கள் வறுமையில் வாடுவோர்க்கு எந்தப் பொருளும் ஈயாத, தான தரும செயல்களைச் செய்யாதவர்கள். இத்தகைய குணம் கொண்டோர் உண்மையில் செல்வந்தர்கள் இல்லை. அவர்களும் வறியவர்களே; தரித்திரர்களே என்பது அறிவுடையோர் கருத்து. வறுமை வாட்டித் துன்புறுத்தியும், வாடி வதங்கிய நிலையிலும், செல்வரிடம் சென்று யாசகம் கேட்டு இரவாத மேன்மக்கள். மானமுடைய இவர்களே பெருமுத்தரையரை ஒத்தவர் ஆவர். (பெருமுத்தரையர் = பெரிய அளவிலான முத்துக்களின் குவியலைக் கொண்ட பாண்டியர் என்றும் முத்தரசநல்லூர் என்னும் சிற்றூரை ஆண்ட கொடையில் சிறந்த பெருமுத்தரையர் என்றும் இருவகையாகப் பொருள் கொள்ளலாம்). வறுமையிலும் பிச்சை எடுக்காதவரே பெரும் செல்வராம். செல்வம் இருப்பதன் பயன் ஈதல் என்பதால் அதைக் கொடுப்போர் செல்வர், இரவாதோர் வறியர்.
காது வரை வில்போல் வளைந்த புருவங்களையும், வேல்போல் நீண்ட கூரான கண்களையும் கொண்டவளே! கீழான செயல்களைச் செய்யும் கடைமக்கள் வயிற்றை வருத்தும் பசிக்குப் பயப்படுவர். இடைமக்கள் தம்மிடம் போதிய பொருள் இல்லாமை, தண்டனை முதலிய துன்பங்களுக்கு அஞ்சுவர். ஆனால், உத்தம குணமுள்ள மேன்மக்கள், உலகத்தார் பழிச்சொல்லால் வரும் பாவத்துக்கும், மானக் கேட்டுக்கும் நடுங்குவர். எந்தத் தீமையையும், கீழான செயல்களையும் செய்யார். மேலான வாழ்வு வேண்டுமென விரும்புவோர் மானத்துக்கு அஞ்சி வாழ வேண்டும் என்பது கருத்தாம்.
முன்பு இவர் உத்தமர், நல்லவர், அன்புடையவர், இரக்கமுள்ளவர், இல்லையென்று சொல்லாத கருணையும், ஈகைக் குணமும் கொண்டவர். ஆனால், இன்றைக்கு வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் எனக் கடைக்கண்ணால் பார்த்தும், இகழ்வாகப் பேசியும், அவமானப்படுத்துவர். இத்தகைய சொற்களைக் கேட்டுச் சான்றோராகிய மேன்மக்களின் உள்ளம், கருமான் உலைக்களத்தில் ஊதி எழுப்புகின்ற நெருப்புபோல், மனத்துக்கு உள்ளேயே கொதித்துக் கனன்று கொண்டிருக்கும். மானம் கெடும். அடுத்தவர் பழிச்சொல்லுக்கும், அவமதிப்புக்கும், உயர்குடிப் பிறந்தோர், அஞ்சி உள்ளம் கொதிப்படைவர். அறிவுள்ள ஏழைகள், அறிவற்ற செல்வர்களின் இகழ்ச்சியான பார்வைக்கும், பேச்சுக்கும் வருந்துவர். உள்ளத்தின் துயருக்குக் கொல்லன் உலையிலுள்ள நெருப்பு உவமை.
பொருள் வேண்டி நம்மை ஒருவர் விரும்பி வந்து அணுகும் போது அதைத் தர இயலாமை ஒரு வகை நாணம். நாள்தோறும் தீயனவற்றைச் செய்ய அஞ்சுதலும் ஒரு வகை நாணம். இவை இரண்டும் நாணங்களே என்றாலும், இவற்றை விடவும் உண்மையான நாணம் ஒன்றுண்டு. நம்மை விடவும் குறைபாடு உடையவரும், அற்பரும், அறிவிலியும், நமக்குச் செய்த அவமானத்தையும், அவமதிப்பையும், பிறர் அறியச் சொல்லி வெளிப்படுத்தாமல் இருப்பதே, மானத்துக்கு உரிய நாணமாக, அனைத்தை விடவும் சிறந்த நாணமாகும். தாம் வறுமையில் வாழ்ந்த காலத்தில், நம்மை விடச் செல்வத்தில் உயர்ந்தவர், காலத்தால் செய்த உதவிகளையும், நன்மைகளையும், பிறரிடம் சொல்லாமல் ஒளிப்பதும், மறைப்பதுமே உண்மையான நாணம் என்றும் பொருள் கொள்ளலாம்.
புலியானது காட்டுப் பசுவைக் கொல்லும் போது அப்பசு இடப்புறம் விழுமே ஆனால், அதைப் புசிக்காது. உயிரே போகும் அளவுக்குப் பசித்தாலும் அதைப் புசிக்காமல் மரணத்தைத் தழுவும். (காட்டுப் பசு என்று குறிப்பிட்டிருந்தாலும் புலி அடித்துக் கொன்ற மதம் கொண்ட யானை என்றும் பொருள் கொள்ளலாம்). அதுபோல், உள்ள உறுதி கொண்ட கற்றறிந்த சான்றோர், செல்வமும், சுகமும் நிறைந்த மேலுலக சொர்க்கமே கிடைக்கும் என்றாலும், கொள்கையை விட்டுக் கொடுத்து, மானம் கெடும் எந்த இழிவான செயலையும் செய்ய மாட்டார்கள். (பாட்டில் வரும் ‘கடமா’ என்ற சொல் ‘யானை’யைக் குறிக்கும். ‘கடம் + ஆ’ எனப் பிரித்தால் ‘காட்டுப் பசு’ என்றும் பொருள்படும். புலி தான் கொன்று வீழ்த்திய விலங்கு இடப்பக்கம் விழுந்தால் அதை உண்ணாது என்பதைச் சங்க இலக்கியங்களும் கூறுகின்றன).
31. இரவச்சம்
தன்னிடம் பிச்சை கேட்டு வருவோரின் வறுமைத் துன்பத்தைப் போக்கும் வகையில், எதையேனும் தந்து உதவ வேண்டும் என்பது செல்வம் உடையோரின் கடமை என்பதை அறநூல்கள் வலியுறுத்துகின்றன. இருப்பினும், பிச்சை எடுப்பதைச் சான்றோர் ஒரு நெறியாக ஏற்றுக் கொள்கின்றனர் எனக் கருதுதல் கூடாது. இரத்தல் அதாவது பிச்சை எடுத்தல் எத்துணைக் கொடுமையானது, இழிவானது, என்பதைச் சொல்வதன் மூலம், அதைச் செய்யாமல் இருப்பதே சிறந்த வாழ்வாகும் என்பதை இந்த அதிகாரம் விளக்குகிறது.
ஆனாலும், வறுமையானது, மனத்துயரையும், துன்பத்தையும், இழிவையும் தரும் என்பதை மனத்தில் கொண்டு, யாசகம் கேட்போருக்குத் தவறாமல் உதவ வேண்டும் என்பதும் வலியுறுத்தப்படுகிறது. இரத்தலால் ஏற்படும் பல்வகைக் குறைபாடுகளை எடுத்துச் சொல்லி, அவற்றுக்கு அஞ்சி, பிச்சை கேட்பதைக் கைவிடக் கோரும் பகுதியாகும். யாசிப்பது மானம் கெடுவதற்குக் காரணம் என்பதால், மானமுடையோர் இரத்தலுக்கு அஞ்சுவர். பொருளைச் சம்பாதிப்பதற்கு உரிய பல நல்வழிகளுள் ஒன்றாகப் பிச்சை எடுத்தலைக் கொள்ளக் கூடாது.
இவரிடம் முயற்சியோ, ஆக்கமோ, ஊக்கமோ இல்லை. எந்தப் பொருளுமற்ற வறிஞர் என்பதால், இந்தப் பிச்சைக்காரர் எந்நாளும் நம்மால்தான் உயிர் வாழ்கிறார் என இகழ்ச்சியாக எண்ணும் செல்வந்தர்கள் உண்டு. தம்மை மேலானவராக நினைக்கும் செருக்குடைய மனம் கொண்டவர் பின்னே அறிவுடையோர் எந்நாளும் செல்ல மாட்டார்கள். ஒருவன் பணக்காரனாக இருப்பதும், மற்றொருவன் ஏழையாக இருப்பதும் முற்பிறவி ஊழ்வினைப் பயனே ஆகும். அடுத்தவர்க்குத் தானம் தருமம் செய்தல் வேண்டும். இதை அறச்செயல் என்று கருதாமல், தம்மால்தான் வறிஞர்கள் உயிர் வாழ்கிறார்கள் என எண்ணும் செருக்குடைய செல்வரை நாடி எந்நாளும் கற்றறிந்த சான்றோர் பெருமக்கள் செல்ல மாட்டார்கள்.
ஒருவன் இழிவுக்குக் காரணமான பாவச் செயல்களைச் செய்தும், பிச்சை எடுத்தும், வயிறார உண்டும், மகிழ்ச்சியாக வாழ்கின்றான். மற்றொருவன், பழி பாவங்களுக்கு அஞ்சி, எந்தத் தீய செயல்களையும் புரியாது, இரவாது, வறுமையில் பசியோடும் பட்டினியோடும் வாடுகிறான். இது தவறா என்றால் நிச்சயம் தவறு ஆகாது. இறந்த பின்னர் மனிதனின் இந்த உடல் அழிந்துவிடும். புதிய உடலெடுத்து மீண்டும் பிறக்கும் பிறப்பு, ஒரு மாத்திரை அளவு காலத்தில், கண் மூடிக் கண் திறக்கும் நேரத்தில் நிகழும். இந்த உடல் போனால் நொடிப் பொழுதில் வேறு உடல் கிடைக்கும். ஆனால், தீய செயல்களில் ஈடுபடுவதால் வரும் பழிச்சொற்களும், பாவங்களும், அடுத்த பிறவியிலும் விடாமல் பின் தொடரும். மானம் கெட்டுப் பிச்சை எடுத்து வயிறார உண்டு வாழ்வதைக் காட்டிலும், மானம் கெடாமல் பிச்சை எடுக்காமல் பட்டினி கிடந்து சாவதே மேலாகும். ஆறிலும் சாவு நூறிலும் சாவு என்னும் உண்மையை உணர்ந்தோர் வயிற்றுப் பசிக்காக இழிதொழில்களைச் செய்யார்.
பொருள் இல்லாமையால் ஏற்பட்ட வறுமை காரணமாக ஒருவர் பிச்சை எடுக்கும் அற்பமான வழியில் செல்லாமலும் இருக்க மாட்டார். ஊழ்வினைப் பயன் காரணமாகப், பிச்சை எடுக்க நேரிட்டாலும், மதியாதார் வீட்டு வாயிலில் நின்று யாசகமும் கேட்க மாட்டார். ‘எங்கள் வீட்டுக்கு வாருங்கள் உண்ணுங்கள்’ என்று, பார்த்த உடனேயே அன்புடன் அழைத்து உபசரிப்பவர்கள் இல்லங்களுக்கு மட்டுமே மேலானவர்கள் செல்வர்கள். யாசகமே என்றாலும், மனமுவந்து தான தருமம் செய்யும் நற்குணம் கொண்ட ஈயோரிடம் மட்டுமே சென்று இரந்து உண்க. முகம் சுளித்து அவமதிக்கும் கீழ்மக்களிடம் சென்று பிச்சை கேட்க வேண்டாம். ஆனால், பிச்சைக்காரர்களை ‘வாருங்கள் வாருங்கள் எங்கள் இல்லத்துக்கு வந்து உண்ணுங்கள்’ என வரவேற்போர் யாரேனும் உலகில் உண்டா எனில் ‘இல்லை’ என்பதே பதிலாகும். ஆகவே, பிச்சை எடுக்க அஞ்ச வேண்டும்.
பாடுபட்டுச் சேர்த்த செல்வம் கைவிட்டுப் போனாலும், ஊழ்வினை காரணமாகத் தெய்வமே தன்னைக் கோபித்துச் சினந்து வருத்தினாலும், மேன்மக்கள் உடல் தளர மாட்டார்கள். மனம் வருந்த மாட்டார்கள். ஊக்கம் கொண்ட உள்ளத்துடன், தம் உயர்வினையே பெரிதாக மதிப்பார்கள். மாறாக, யாருக்கும் பணத்தைக் கொடுத்து உதவாமல், பத்திரமாகச் சேர்த்து வைத்துப் பாதுகாக்கும் அறிவற்ற செல்வந்தர்கள், அற்பர்கள், பின் உயர்ந்தோர் செல்லமாட்டார்கள். தலை குனிந்தும், மானம் இழந்தும், மேன்மக்கள் உலோபிகளிடம் பிச்சை கேட்க மாட்டார்கள்.
பிச்சை கேட்டுத் தன்னை நாடி வருவோரிடம், எதையும் மறைத்து ஒளிக்காமல், பொருளோடு உள்ளத்தையும் அள்ளித் தரும் அன்புடையோர் உலகத்தில் இருக்கிறார்கள். எனினும், கண்போன்ற அத்தகைய மேலோரிடம் கூட, யாசிக்காமல் வாழ்வதே சிறந்த நல்வாழ்க்கை ஆகும். இரத்தல் அல்லது யாசித்தல் அல்லது பிச்சை எடுத்தல் என்னும் செயலை நினைத்த உடனேயே உள்ளம் உருகுகிறது. மனம் கரைந்து அழிகிறது. அவ்வாறு எண்ணும் போதே நெஞ்சம் வெந்து நடுங்குகையில், பிறரிடம் இரந்து பொருளைப் பெறும் யாசிப்போர் மனம் என்ன பாடுபடும்? பிச்சை எடுப்பதை விடவும் மானக் கேடான செயல் வேறெதுவும் இல்லை.
இன்பம் துன்பம் என்பன மனத்தின் குணங்களாகும். இன்பத்தைத் துன்பம் போலவும், துன்பத்தை இன்பம் போலவும், எண்ணித் திருப்தி அடைய வேண்டும். துன்பமே வந்தாலும் வரட்டும், இன்பமே போனாலும் போகட்டும், என மன உறுதியும் திண்மையும் இருந்தால், வறுமைத் துன்பம் அறவே நீங்கிவிடும். நெஞ்சம் நிமிர். அச்சம் தவிர். இவ்வாறாக, வறுமைத் துன்பத்தை மனத்தாலேயே நீக்கிப் பண்படுத்தாமல், பொருளுக்கு ஆசைப்பட்டு மனத்தைப் புண்படுத்தி, அடுத்தவரிடம் சென்று யாசித்தல் தேவையற்ற செயலாகும். அறிவுக்கண் மறைந்து அறிவிலிகளிடம் சென்று இரப்பதால், கிடைக்கும் பயன்தான் என்ன? எந்தப் பயனும் இல்லை. பிச்சை எடுப்பதே தவறு. அதனினும் பெரும் தவறு உள்ள உறுதியின்றி அறிவிலிகளிடம் சென்று யாசிப்பது.
பரந்து விரிந்த குன்றுகளின் மீதெல்லாம் பொன் நிறைந்து கிடக்கின்ற, பாய்ந்தோடும் அருவிநீர் வளமுள்ள, பாண்டி நாட்டு அரசனே! இவ்வுலகில் பிறப்பவர் இறப்பதும், இறப்பவர் மீண்டும் பிறப்பதும், பல கோடி ஆண்டுகளாகத் தங்கு தடையின்றித் தொடர்ந்து நடைபெறும் விஷயமாகும். நாள்தோறும் புதிய புதிய மனிதர்கள் பிறந்தாலும், இந்த உலகில் மீண்டும் பிறக்காதவன் ஒருவன் இருக்கிறான். தன்னை நாடி வந்த யாசகர்களை இகழாமல், அவர்களுக்கு வேண்டியதை உள்ளன்போடு எந்த மனிதன் தருகிறானோ, அவனே மீண்டும் இவ்வுலகில் பிறவாதவன் ஆவான். இரப்பவர்களை அவமதிக்காமல், ஆதரிக்கும் இயல்புடைய உத்தம மனிதனே, மீண்டும் பிறவாமல் நற்கதி அடைவான். நற்கதி எனில் முக்தி என்றும் முக்தி அடைந்தோர்க்கு மறுபிறவி கிடையாது என்றும் பொருளாம். பிறவித் துன்பங்களிலிருந்து விடுதலை பெற்று உய்வான்.
புறத்தே வறுமை உடலை வாட்டி வதைக்கிறது. உண்ண உணவின்றிப் பசியால் துடிக்கிறான். உயிரே போனாலும் இரந்து வாழ்தல் இழிவு என்றும் மனம் சொல்கிறது. ஆனால், அகத்தே, நல்லறிவை நீக்கி, தனது ஏழ்மை விலக, செல்வந்தரிடம் சென்று எனக்கு ஏதேனும் கொடுப்பாயாக எனக் கேட்கிறான். அறியாமையால் அயலான் ஒருவனை நாடிச் சென்று ஏதேனும் ஈவாயாக என யாசிக்க, அச்செருக்கு கொண்ட செல்வன் ‘இல்லை’ என மறுத்துவிட்டால், யாசித்தவன் நிலை என்ன? இரத்தலே இழிவு. அவ்வாறு மானமிழந்து பிச்சை கேட்டும், ஒருவன் ஈயவில்லை எனில், அது பெரும் இழுக்கு அல்லவா? இல்லை எனக் கேட்ட அந்த நொடியே யாசித்தவன், மரண வேதனையில் இறந்து போக மாட்டானோ? நிச்சயம் உயிர் துறப்பான்.
வறுமையில் வாடும் ஏழை மனிதன், செல்வந்தரைச் சென்றடைகிறான். அவர் ஏவலுக்கு இணங்க, காலால் இட்ட பணியைத் தலையால் செய்து முடிக்கிறான். இவ்வாறாக, வணங்கித் தாழ்ந்து வாழ்தல் உலக முறைமையே ஆகும். அடுத்தவரிடம் கைகட்டி வாய் பொத்திக் கூனிக் குறுகி வாழ்வது இழுக்கே எனினும், மானமின்றி, மதியிழந்து, பிச்சை கேட்டு உயிர் வாழ்வது அதைவிடக் கேவலமாகும். ஒரு வேலையும் செய்யாமல், பிறரைச் சார்ந்தும், அவரது ஏவல் கேட்டும், தொழுதும், உண்டு வாழும் துன்பத்தை விடவும், இரந்து உண்டு வாழ்தல் இன்னும் துன்பமாகும். பிச்சை எடுத்து மானம் கெட்டு உயிர் வாழ்வதை விடவும், அடுத்தவர்க்கு அடங்கி ஒழுகி, அதனால் கிடைக்கும் பொருளை உண்டு வாழ்தல், தீயது அன்று என்பதும் கருத்தாம்.
நெடுநாள் பழகிய நட்பைப் பற்றுக் கோடாகக் கொண்டு, அதன் காரணமாக, ஒருவர் நம்மை நாடி வந்து உதவி கேட்கிறார். அதே சிநேக உரிமையில், இயன்றது எதுவாக இருப்பினும், சிறிதளவே என்றாலும், மகிழ்ச்சியுடன் அவருக்குத் தருவீராக! அன்புடன் கொடுக்கும் பொருளைத் தேடி வந்து இரந்தவர், விரும்பி ஏற்றுக் கொள்ளாவிட்டால், உபசரித்த நண்பர் உள்ளம் என்ன பாடுபடும்? என்றும் நீங்காத வடுவாகப் பெரும் நெருப்பாகச் சுட்டெரிக்கும். பழைய நட்பைக் கருத்தில் கொண்டு வறுமை நீங்க நண்பரிடம் உதவி கேட்கிறார். பழகிய நட்புக்காக அவர் உதவக் கடமைப்பட்டவர். ஆனால், அந்த நண்பர் உதவி செய்யாமல் போனால், கேட்டவர் மனம் தீயால் சுட்டதுபோல் எரியும் என்றும் பொருள் கொள்ளலாம்.
துன்பவியல் முற்றும்
(தொடரும்)