பொதுவியல்
பொதுவியல் என்பது பொதுப்பட்டச் செய்திகளைக் கூறும் இயலாகும். இதில் ‘அவையறிதல்’ என்னும் ஒரேயொரு அதிகாரம் மட்டுமே உள்ளது. அவையில் தொடர்புடையோர் மட்டுமின்றிப் பல்வேறு தரப்பினரும், கருத்தினரும், தொழிலினரும் கூடியிருப்பர். ஆட்சித் தலைவன் வெவ்வேறு பிரிவினர் குழுமியிருக்கும் அவையின் போக்கை அறிந்து அதன்படி செயல்களை வகுக்கும் கடப்பாடு கொண்டவனாக இருத்தல் அவசியமாகும்.
32. அவையறிதல்
‘அவையறிதல்’ என்பது அவையில் உள்ளவர்களுடைய கல்வி, கேள்வி, தகுதி ஆகியவற்றின் தராதரங்களை நுட்பமாக ஆய்ந்தறிந்து, அதற்கு ஏற்ற வகையில் நடத்துவதாகும். அவையின் இயல்பை அறியாமல் சென்று அங்குக் கூடியிருப்போர் முன்பு உரையாடத் துணிபவன், பெரும் அவமானத்துக்கு உள்ளாகும் நிலையை அடைவான். ஆனால், அவையின் போக்கை அறிந்து கொண்டு அதற்கேற்ப நடப்பவனோ, அவையின் மதிப்பைப் பெறுவதுடன், உலகோர் புகழையும் பெறுவான். அறிவுடையோர் தம்மால் உரைக்கப்படும் பொருளைக் கற்றறிந்த சான்றோர் அவையில் கூறினால் மட்டுமே பயன்படும். எனவே, சபையின் இயல்பை அறிந்து உரைத்தல் வேண்டும். அங்ஙனம் இயல்பை அறியாமல் உரைத்தால், அவமதிப்பு உண்டாகும் என்பதால், மானமுடையோர் அறிந்துரைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் அதிகாரமாகும். பிச்சை எடுப்பது அவமானத்துக்கு இணை என்பதுபோல், அவை இயல்பு அறியாமல் உரைப்பதும் மானக் கேடாகும்.
நூற்பொருளைச் சந்தேகமின்றி உள்ளது உள்ளவாறு தெளிவாக உணர்ந்த, உண்மை அறிவு கொண்ட, மெய்மையான அறிவுடையோர் நிரம்பிய கூட்டத்தை, முறையாகச் சென்றடைதல் வேண்டும். அவ்வாறின்றி, அவையொன்றில், அறிவற்ற ஒருவன் சற்றும் பொருந்தாத, அஞ்ஞான வார்த்தைகளையே மிகுதியாகவும், திரும்பத் திரும்பவும் சொல்லிக் கொண்டும், பரப்பிக் கொண்டும் இருப்பான். அத்தகைய மூடர்கள் முன் அறிவில் சிறந்தவர்கள் தங்களது அறிவார்ந்த கருத்துக்களை அங்கே சொல்லாமல் விட்டுவிடுவதே விவேகமாகும். மூடர்களிடம் அறிவுள்ள சொற்களைக் கூறுவதில் பயனில்லை. சொன்னாலும் எடுபடாது.
வாய்க்கு வந்தபடி பாடங்களைக் கூறி,, சொற்களின் நயத்தினையும், உட்கருத்தினையும் உணர்ந்தவர்களைப் போலக் கருதிக் கொண்டு, பிறருக்கு அரைகுறையாகப் பொருள் சொல்லும் அறிவிலிகளும் உண்டு. அத்தகைய போலிகளின் கூட்டங்களுக்குக் கற்றறிந்த புலமை பெற்ற அறிவுடைய சான்றோர் ஒருக்காலும் போகார். போனாலும், அறிவுசார்ந்த கருத்துக்களை எடுத்துரைக்க மாட்டார்கள். நற்குணமுள்ள கற்றறிந்தோர் வருகையால் அந்தப் போலிப் புலவனின் பேச்சு தரம் தாழ்ந்தும், எடுபடாமலும் போகும். அவன் பேசியது தவறு என ஆட்சேபித்தால், தவற்றைத் திருத்திக் கொள்ளவும் மாட்டான். மாறாக, கோபமுற்று நற்புலவர்களின் குலத்தையும், குடியையும், குடும்பத்தையும் நிந்திப்பான். தோள்களைத் தட்டி வீண் சண்டைக்கும், வம்புக்கும், வருவான். எனவே, அறிவாளிபோல் நடிக்கும் அறிவிலார் கூட்டங்களுக்கு அறிவுடையோர் செல்லமாட்டார்கள்.
தம்மிடையே உள்ள சொல்லாற்றலையே பெரிதாக எண்ணிக் கொண்டு, அறிவிலிகள் ஆணவத்தோடும், அகம்பாவத்தோடும், மற்றவர்களுடன் வாதம் செய்யவே விரும்புவர். அந்த அவையில் உள்ளோர் தம்மை விடவும் கற்றறிந்த அறிவுடையோர் என்றும், சான்றோர் என்றும், ஆற்றல் உடையவர் என்றும், பேச்சு வல்லமை கொண்டோர் என்றும் உணரவும் மாட்டார். தாம் கற்றவற்றை, அடுத்தவர் புரிந்து கொள்ளும் வகையில், உள்ளத்திலே சென்று புகுமாறும், மனத்தில் பதியுமாறும், தெளிவாக உரைக்கும் சொல்லின் முறைமையையும் அறியார். வாதத்தில் தோற்போம் என்பதைக் கூட அறியாமல், எந்தப் பயனுமின்றி, வீணாகப் பலவற்றைச் சொல்லித் திரியும் இத்தகைய அறிவிலிகளே, உலகில் நிறைந்துள்ளனர்.
மூடன் ஒருவன் ஆசிரியரை வழிபட்டு முறையாகக் கல்வி கற்காமல், பள்ளியில் ஆசிரியர் கற்றுத் தருவதை மாணாக்கர் வாய்விட்டுப் பலமுறை திருப்பிச் சொல்வதைக் காதில் கேட்டான். இவ்வாறாக அரைகுறையாகக் காதில் விழுந்தவற்றை, அந்த மூடன், முழுவதுமாகப் படிக்காமலும், நுட்பமான பொருளை உணராமலும், கற்றறிந்த சான்றோர் அவையில் கூச்சமின்றித் தப்பும் தவறுமாக உளறிக் கொட்டினான். பேதமைக்கு நாணாமல் தனது அஞ்ஞானத்தை, புல்லறிவை வெளியிட்டான். ஆனால், நன்கு படித்தவனுக்கோ, அறிவாளிகள் நிறைந்த அவையில் உரையாற்றும் போது ஏதேனும் தவறு நேருமோ என்ற நாணம் உண்டாகும். இதனால் எச்சரிக்கையோடும், கவனத்தோடும் தவறு நேராத வகையில், ஒவ்வொரு சொல்லையும் ஆழ்ந்து யோசித்துப் பேசுவான்.
பிறரைத் தோற்கடித்து, எப்படியேனும் வென்றுவிட வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக மிருகத் தன்மையுடன் சிலர் நடந்து கொள்வர். அறிவுடையோர் கூறும் உண்மைப் பொருளை ஏற்றுக் கொள்ளாமல், போருக்குத் தயாராவதுபோல் சினந்தும், மனம் கொதித்தும், புழுங்கியும் இருப்பர். தனது கடுஞ்சொல்லைக் கேட்ட மாத்திரத்திலேயே நல்லறிவாளர் அடங்கிப் போவதே வெற்றி எனப் புல்லறிவாளர் எண்ணுவர். அத்தகைய அறிவிலிகளுக்கு நல்லதை அறிவுறுத்துவோர் அடையும் பயன் அவமதிப்பும், அவமானமுமே ஆகும். தானும் அறியாமல், பிறர் சொல்லியும் கேட்காமல், விலங்கை ஒத்த முரட்டு அறிவிலிகளுக்குப் புத்தி சொல்லக் கூடாது. சொந்தப் புத்தியும் இல்லாமல், சொல்வார் புத்தியும் இல்லாதவர்கள், சான்றோர் சொல்லை மதிக்காமல், கோபமுற்று, கன்னத்தில் அறைந்து, பற்களைத் தட்டிக் கையில் கொடுப்பார்கள்.
சில மூடர்கள் ஒரு பாட்டின் பொருள் நுட்பத்தை அறியாமலும், உணராமலும், மூலத்தை மட்டும் நன்றாக மனனம் செய்வர். அவையில் இத்தகைய மூடர்கள் சினம் கொள்ளத் தக்க வகையில் பேசுவர். அறிவிலிகளின் மூளையற்ற பேச்சைக் கேட்கும், அழிவில்லாத மேன்மை கொண்ட ஆன்றோர், அவர்கள் மீது கோபம் கொள்ளார். மறுத்தும் பதிலுரைக்க மாட்டார். வாதமும் செய்யார். மாறாக, பேதையைப் போல் பேசிய மூடரைப் பெற்ற தாய் மீது இரக்கப்படுவர். இவனை மகனாகப் பெற்று எந்தப் பயனையும் பெறவில்லையே என அந்தத் தாய் மீது பரிதாபப்படுவர். மூடனை அவமானப்படுத்தினால், அவனைப் பெற்ற தாய் வருத்தப்படுவாளே என இரக்கப்பட்டு, அவன் பேச்சைக் கேட்டு வெட்கிப் பொறுமை காப்பர். மகன் அறிஞனாக இருந்தால் அவனைப் பெற்ற தாய் புண்ணியம் செய்தவள் என்று பாராட்டுவர். மகன் மூடனாக இருந்தால் அவனைப் பெற்ற தாய் பாவம் செய்தவள் என இரக்கப்படுவர் என்பது கருத்து.
கற்கும் முறைப்படிக் கற்பவர்க்கு, எல்லா நூல்களும் எளிதாகக் கைவரும். சாஸ்திரங்களின் மூலபாடத்தையும், அதன் பதவுரையையும் மேலோட்டமாக அறிதல் என்பது, பெண்ணின் தோள்களைச் சேர்தல்போல் யாவருக்கும் எளிதே. சுலபத்தில் கிரகிக்கத் தக்கவையே. ஆனால், அவற்றின் சாரத்தையும், நுண்பொருளையும், ஆழமான கருத்தையும், உண்மை அர்த்தத்தையும், புரிந்து கொள்வது என்பது, பெண்ணின் உள்ளத்தைப் போலவும், மனத்தைப் போலவும், எளிதில் அறிய இயலாததாகும். கடல் ஆழத்தைக் கூட முயன்றால் தெரிந்து கொள்ளலாம், ஆனால் பெண்ணின் உள்ளத்தைத் தெரிந்து கொள்ள இயலாது என்பர். உயர்ந்த நூல்கள் பெண்ணின் உள்ளத்தைப்போல் எளிதில் புரியாது.
வீடு முழுவதும் புத்தகங்களை வாங்கிக் குவிப்பதிலும், சேர்த்து வைப்பதிலும் எந்தப் பயனுமில்லை. அப்புத்கங்களை ஆழமாகப் படித்து அவற்றின் நுண்பொருளை அறிதல் வேண்டும். வீடு நிறைய நூல்களை வைத்துப் பாதுகாக்கும் புலவர்கள் வேறு. அவ்வாறு சேர்த்து வைத்த புத்தகங்களை ஊன்றிப் படித்து பொருள் உணர்ந்து உள்ளத்தைத் தெளிய வைக்கும் புலவர்கள் வேறு. புத்தகங்களைச் சேர்த்து வைப்பது மட்டுமே புலமை ஆகாது. அவற்றின் ஆழமான கருத்துக்களைத் தாமும் கற்றுத் தெளிந்து, மற்றவர்க்கும் சொல்லிப் புரிய வைக்கும் அறிவுச் செழுமையே உண்மையான புலமையாகும். எவனொருவன் நூல்களைச் சேர்த்து வைப்பதுடன் நில்லாது, அவற்றின் நுண்பொருள் உணர்ந்து அடுத்தவர்களுக்குக் கற்றுத் தருகிறானோ, அவனே சிறந்த புலவனும், நல்லாசிரியனும் ஆவான்.
குற்றமில்லாத காட்டுப் பசுக்களைத் தம்மிடத்தே கொண்ட உயர்ந்த மலைகளைக் கொண்ட குறிஞ்சி நாட்டின் வேந்தனே! நூலின் பொருளைத் திரட்டிச் சுருங்கக் கூறுவது பொழிப்புரை ஆகும். விரித்துக் கூறுவது விரிவுரை ஆகும். சாரத்தைக் கூறுவது நுட்பவுரை ஆகும். வெளிப்படையாக இல்லாமல் குறிப்பாகவும் சொல்லாத செய்திகளைச் சொல்வதும் எச்சவுரை ஆகும். இவ்வாறாக, நான்கு வழிகளில் பொருளுக்கு உரை கூறுவதே இலக்கணமாம். எனவே ஒரு நூலுக்கு, நான்கு வழிகளிலும் மூலத்தை நன்கு ஆராய்ந்து, பொருளை உணர்த்து, மற்றவர்களுக்குப் புரியும்படி விளக்கிச் சொல்லாத சொற்கள், பயனற்ற வெற்று வார்த்தைகளே அன்றி, முழுமையான உரையோ, விளக்கமோ ஆகா.
நல்ல குடியிலே தோன்றினாலும், பிறந்த பிறப்பின் உயர்வை உணராதவர்கள், பற்பல நூல்களையும், சாஸ்திரங்களையும் படித்திருப்பர். நூல்களின் உட்கருத்தை அறியாத காரணத்தால், பிறரை இகழும் சொல் தன்னிடம் தோன்றாமல் பாதுகாத்துக் கொள்ளும் அடக்கமும் இல்லாதிருப்பர். பிறர் பேசும் போது குற்றம் கண்டுபிடித்துக் குறை சொல்லிக் கொண்டே இருப்பர். ஆனால், நற்குடியில் தோன்றி, பிறந்த பிறப்பின் உயர்வை ஆராய்ந்து உணர்ந்த நல்லறிவாளர்கள், அவையில் பிறர் பேசும் போது அதிலுள்ள நல்ல செய்திகளை மட்டுமே ஈர்த்துக் கொள்வர். குற்றம் குறை இருப்பினும் தங்களது கருத்தைக் கூறார். நூல்களின் உட்கருத்துக்களை அறியாத புல்லறிவாளர்களின் கீழ்த்தரமான அற்ப புத்தியைக் கவனியார். அது குறித்துக் கவலையும் கொள்ளார். அவரைத் தூற்றவும் செய்யார். பிறர் குற்றம் கண்டு இகழாது இருப்பவரே அவைக்கு உரியர் ஆவர்.
பொதுவியல் முற்றும்
(தொடரும்)