பகையியல்
மனிதனுக்குப் பகையாவது ‘உட்பகை’ என்றும் ‘புறப்பகை’ என்றும் இரண்டு வகைப்படும். தன்னை ஒழித்த பிறராலும், பிறவற்றாலும், ஊழ்வினை மற்றும் அறியாமை காரணமாகத் தனக்கு எதிராக அமைவது ‘புறப்பகை’ ஆகும். ஆனால், உள்ளத்து உணர்வுகளை நெறிப்படுத்தாமையின் விளைவாக ஏற்படுவது ‘உட்பகை’ ஆகும். எனவே, யாரோடும் பகையின்றி வாழ வேண்டுமென விரும்புகிறவன், முதலில் உட்பகையை நீக்குவதிலும், ஒழிப்பதிலும், கவனம் செலுத்த வேண்டும். அத்தகைய உட்பகைகளுள், புல்லறிவாண்மை, பேதமை, கீழ்மை, கயமை ஆகிய அதிகாரங்களைப் பற்றிக் கூறுவதே பகையியல் ஆகும். நல்லன தீயன பகுத்தறிந்து, நல்லன கொண்டு தீயன விலக்கி, வாழ்தல் வேண்டும். இத்தகைய சீர்மிகு நேர்மையான வாழ்வுக்கு மேற்கூறியவை கேடு விளைவிப்பதால் அவற்றைப் போக்குதல் அவசியமாகும்.
33. புல்லறிவாண்மை
சிற்றறிவு கொண்டவன் கல்வியாலும் கேள்வியாலும் முற்றறிவு கொண்டவனாக மாற நினைக்காமல், தனது சிற்றறிவுடைமையே பேரறிவுடைமை என எண்ணுவான். செருக்கினாலும், அகம்பாவத்தினாலும், ஆணவத்தினாலும், உயர்ந்தோர் சான்றோர் அறிவுரைகளை ஏற்காமல் இருத்தலே புல்லறிவாண்மை ஆகும். கற்றறிந்தோர் நிறைந்த அவையில் புல்லறிவாளர்களுக்குத் தகுதியோ இடமோ இல்லை. கல்வியில் சிறந்த மேலோர் கூடியிருக்கும் அவையின் தன்மை அறியாது அதில் பிறர் கலந்து கொள்ளுதலும் புல்லறிவாண்மை ஆகும். எனவேதான் அவையறிதல் அதிகாரத்துக்குப் பின் புல்லறிவாண்மை அதிகாரம் அமைக்கப்பட்டுள்ளது. புன்மை + அறிவு = புல்லறிவு = சிறுமையான அறிவு. அதனை ஆள்பவர் புல்லறிவாளர் அதாவது சிற்றறிவாளர். அற்பமான அறிவை ஆளும் தன்மை கொண்டவர்.
பிற உயிர்களிடம் தமக்கு இயல்பாக உள்ள அருள் காரணமாக, அன்புடையோர் நீதி நெறி அறநெறிகளை எடுத்துச் சொல்வர். அறிவுடையோர் அவற்றைத் தமக்குப் பயன் தரும் மெய்ப் பொருளாகக் கருதி ஏற்றுக் கொண்டு அதன் வழி நடப்பர். பாத்திரத்தில் பால்சோறு சமைத்துக் கொண்டிருக்கிறோம். அது நன்கு வெந்திருப்பதை அகப்பையால் அவ்வப்போது கிண்டியும், கிளறியும் உறுதிப்படுத்திக் கொள்வோம். ஆனால் பால் சோற்றின் சுவையை அகப்பை அறியுமா எனில் அறியாதாம். அதுபோல், கல்வியறிவு இல்லாத மூடர்களுக்கு, அன்புடையோர் சொல்லும் அறநெறிகளின் பயனை அறிந்துணரும் ஆற்றலும், திறனும் இல்லாத காரணத்தால் அதனை இகழ்வர். அறிவுடையோர் சொல்லின் பயனை அறியாத புல்லறிவாளன், அவர்தம் நீதிமொழியை ஏற்க மாட்டான். அவையில் பேசுவதையும் அடக்கமின்றி இகழ்வான்.
விலங்குகளின் தோலை வாயினாலே கவ்வித் தின்னும் இயல்புடையது புலையர்களின் நாய். அத்தகைய குணம் கொண்ட நாய்க்கு மிருகங்களின் தோல் சுவையும், பால் சோற்றின் சுவையும் ஒன்றுதான். இனிப்பான பால் சோற்றின் சுவையை அறியும் தன்மையோ, தெளிவோ, நாய்க்குக் கிடையாது. அதுபோல், பொறாமை, குற்றம், குறை இல்லாத சான்றோர்கள் சொல்லும் தர்ம மார்க்க அறநெறியை, நற்குணமற்ற புல்லறிவாளர் செவி கொடுத்துக் கேட்கார். நல்ல நெறிகளில் மனத்தையும் செலுத்தார்; புன்மையானவற்றிலேயே விருப்பம் கொள்வர்.
வாழும் வாழ்க்கை நீடித்து நிலைக்காது. நிலையற்றது. கண் மூடிக் கண் திறக்கும் இமைக்கும் நேரத்தில், நமது இன்னுயிர் உடலிலிருந்து பிரிந்துவிடும். இவை அனைத்தையும் கண்ணால் பார்த்தும், தெள்ளத் தெளிவாக அறிந்தும், தினை அளவேனும் மனிதர்கள் நற்செயல்களைச் செய்ய வேண்டும். அங்ஙனம், சின்னஞ்சிறு அளவு கூட நல்ல காரியங்களைச் செய்யாத வெட்கமற்ற மனிதர்கள், இந்த உலகில் வாழ்ந்தால் என்ன? இறந்தால் என்ன? இருந்தாலும் எந்தப் பயனும் இல்லை? செத்தாலும் எந்த நஷ்டமும் இல்லை. உலகின் பார்வையில் இரண்டுமே ஒன்றுதான். புல்லறிவாளர் நல்ல விஷயங்களில் மனம் செலுத்த மாட்டார் என்பதால் அவர் இருந்தாலும், செத்தாலும் உலகுக்கு லாபமும் இல்லை, இழப்பும் இல்லை.
இந்த உலகில் நாம் வாழும் நாள்களோ மிகக் குறைவு. வாழ்க்கை யாருக்கும் நிரந்தரமில்லை. உடலை விட்டு உயிர் பிரியாமல் பாதுகாத்து நிற்கும் காவலோ, சக்தியோ யாதொன்றும் இல்லை. காலன் குறித்த நேரத்தில் உயிர் போவது நிச்சயம். வாழும் அற்ப ஆயுட் காலத்தில் நாம் செய்யும் தவறுகளுக்காகப் பலராலும் இகழ்ந்து பேசப்படும் பழிச்சொற்களே நம்மிடம் நிலைத்து நிற்கும். இந்நிலையில், ஒருவன் பலரோடும், தன் எதிரில் கண்டவர்களோடும், சிரித்துப் பேசாமல் விலகி நிற்பதில் என்ன பயன்? எல்லோருடனும் சண்டையிட்டும், பகையைப் பெருக்கிக் கொண்டும், வாழ்வதால் கிடைக்கும் நன்மைதான் என்ன? எந்தப் பயனுமில்லை. நன்மையுமில்லை. எனவே, யாரையும் பகைத்துக் கொள்ளாமலும், ஒன்றுபட்டும், நட்பு பாராட்டியும், இனிதாகக் கூடி வாழ்ந்தும், நல்லது செய்தும் வாழ்வதே சிறப்பாகும். எல்லோரிடமும் பகைமை கொள்வது புல்லறிவாளர் குணமாகும்.
கற்றறிந்தோர் நிறைந்த அவைக்குச் சென்று ஒருவன், அனைவர் முன்னிலையிலும் அங்கிருந்த சான்றோனை எள்ளி நகைத்தான், அவமதித்தான், திட்டித் தீர்த்தான். ஆனால், தன்னைத் திட்டியவன் மீது சினம் கொள்ளாமல் பெரியோன் அமைதி காத்தான். புல்லறிவாளன் தொடர்ந்து திட்டிக் கொண்டே இருக்க, சான்றோனோ பதிலேதும் உரைக்காமல் வாளா இருந்தான். இவ்வாறாகத், திட்டுப்பட்டவன் பொறுமையாக இருந்தால், நா கூசாமல் இகழ்ந்தவன் நலம் கெட்டுச் சீரழிந்து போவான். மாறாக, திட்டியவன் மீது கோபம் கொள்ளாமல் பொறுமை காத்தவன் சீரும் சிறப்புடன் வாழ்வான்.
உடலில் முதுமை வந்து சேரும் முன்னே, இளமை உள்ள போதே, அறச் செயல்களைச் செய்தல் வேண்டும். அவ்வாறு எந்த அறச் செயல்களையும், தான, தருமங்களையும் செய்யாதவன், கிழப் பருவம் எய்துகையில் வீட்டிற்கு உள்ளே ஒதுக்கி வைக்கப்படுவான். ‘உள்ளே இருக்காதே, இந்த இடத்தை விட்டுப் போய்விடு. வெளியே இரு’ என இனிமையற்ற சொற்களை, மானம் கெடும் வகையில் வீட்டு வேலைக்காரியே சொல்லும் நிலைக்குத் தள்ளப்படுவான். இளமையில் கைவசம் பொருள் உள்ள போதே அறம் செய்தல் வேண்டும். முதுமையில் தான தருமம் செய்யலாம் என நினைத்து, அப்போது கையில் பொருள் இல்லாவிட்டால், வீட்டு வேலைக்காரி கூட அவமதிப்பாள், அலட்சியப்படுத்துவாள் என்பது கருத்தாம். புல்லறிவாளரை ஏவலரும் ஏளனம் செய்வர்.
அற்ப அறிவு கொண்ட புல்லறிவாளர் பொருள் உடைய காலத்தில் தாமும் இன்புற மாட்டார்கள். தகுதியுடைய தக்கார்க்குக் கொடுத்தும் உதவமாட்டார்கள். உயிருக்குப் பாதுகாப்பாகவும், காவலாகவும் உள்ள, தான தருமங்களையும் செய்யமாட்டார்கள். நல்ல வழியிலும் செல்லமாட்டார்கள். துறவு வாழ்க்கையையும் மேற்கொள்ளமாட்டார்கள். உடலும், செல்வமும், என்றென்றும் நிலைத்து நிற்காது என்னும் நிலையாமை உண்மையையும் உணராமல், செல்வக் களிப்பில் மயங்கியும், மிதந்தும் கொண்டிருப்பர். மறுமைக்கு வேண்டிய அறப்பணிகளைச் செய்யாது, பயனற்ற முனைவுகளில் ஆயுளையும் வாழ்நாளையும் வீணே கழிப்பர். புல்லறிவாளர் தன்னிடமுள்ள செல்வத்தைத் தானும் அனுபவிக்காமல் மற்றவர்களுக்கும் ஈயாமல் சாவார்கள்.
மரணமடைந்த பிறகு செல்லும் இடத்துக்குரிய, தருமப் பயனான நல்வினை என்னும் கட்டுச் சோற்றை, இளமைப் பருவத்திலேயே அழுத்தமாகக் கட்டித் தோள் மூட்டையாகச் சான்றோர்கள் அமைத்துக் கொள்வர். இவ்வாறு அமைத்துக் கொள்ளாதோர் புல்லறிவாளர்கள். வாழ்நாள் முழுவதும் செல்வத்தைச் சிக்கென அழுத்தமாகப் பிடித்துக் கொண்டு ‘கடைசிக் காலத்தில் தான தருமம் பற்றிக் கருதுவோம்’ என்றிருப்பர். இத்தகைய புல்லறிவு கொண்ட மூடர் இறக்கும் தறுவாயில் தானம் செய்யலாம் என்றெண்ணிப் பேச நா எழாமல் ‘பொன் உருண்டை கொண்டு வா’ எனச் சைகை செய்வர். வாழ்நாள் முழுவதும் உலோபியாகவே வாழ்ந்த காரணத்தால், அவரது ஈயாத குணமறிந்தோர் ‘பொன் உருண்டை வேண்டுமென’ சைகை செய்தாலும், அதைப் ‘புளிக்கும் விளாம்பழம்’ கேட்கிறார் என்றே புரிந்து கொள்வர். இளமையில் தருமம் செய்ய வேண்டும். சாகும் தறுவாயில் அறம் செய்ய நினைத்தால் அவரது கருமித்தன இயல்பு அறிந்தோர் செய்யார். கடைசிக் காலத்திலும் ஆசை நிராசையாகிவிடும்.
சிறு புத்தியுள்ள புல்லறிவாளர், வறுமையில் வாடும்போதும், பெருநோயால் பாதிக்கப்பட்டபோதும் மட்டுமே, மறுமையில் நன்மை தரும் செயல்களைப் பற்றி நினைப்பர். ஆனால், கையில் பொருள் வந்த காலத்திலும், நோய் நொடி ஏதுமின்றி ஆரோக்கியமாக இருக்கும் போதும், மறுமைக்கு உரிய தான தரும செயல்களைச் செய்ய வேண்டும் என்ற எண்ணமே அவர்கட்குத் தோன்றாது. கடுகளவு கூட அறச் சிந்தனை எழாது. வறுமையும், நோயும் வாட்டும்போது மட்டுமே புல்லர்களுக்கு வரும் அறச்செயல் சிந்தனைகள், செல்வமும் ஆரோக்கியமும் கூடி வரும்போது முற்றிலும் மறந்துவிடும்.
உலகிலுள்ள புல்லறிவாளர்களுக்கும் மற்றவர்களைப் போன்று, தான தருமக் காரியங்களைச் செய்வதற்கே ஏற்ற மானுட தேகத்தை இறைவன் கொடுத்திருக்கிறான். வரம்பு கடந்த எல்லையற்ற அன்புடைய நெருக்கமான உறவினர் உயிரை யமன் எடுத்துக் கொண்டு செல்ல முயற்சிக்கிறான். இதைக் கண்ணால் பார்த்த பின்பும், மேன்மை மிகு உடலைப் பெற்றிருந்தும், தான தரும சிந்தனை இல்லாமல், அறச் செயலைச் செய்யாமல், அறிவிலிகள் வாழ்நாளை வீணே கழிக்கின்றனரே? இது என்ன அறிவின்மை? உறவுகள் இறப்பைப் பார்த்த பின்னரேனும், சாவதற்கு முன் அறச் செயல்களைச் செய்வோமென நினைக்காமல், புல்லறிவாளர்கள் வாழ்கின்றனர். யாருக்காகச் செல்வத்தைச் சேர்க்கிறார்களோ, அவர்களே இறந்த பிறகும், அறம் செய்யாமல், தொடர்ந்து பணத்தைச் சேர்க்கும் புல்லறிவாளர்கள் என்றும் பொருள் கொள்ளலாம்.
34. பேதைமை
பேதமை என்பது முழு மூடத்தனம் ஆகும். ‘புல்லறிவு’ என்பது சிறிது அறிந்தும், பெரிதும் அறியாமை மற்றும் செருக்கும் ஆகும். ஆனால், ‘பேதைமை’ என்பது தானாக எதையும் சிந்திக்கும் தன்மை இல்லாத நிலைமை ஆகும். தானும் அறியாமல், பிறர் சொல்வதையும் உணராத தன்மையாம். யாரேனும் எதையேனும் கூறின் அதன் தராதரங்களை முற்றிலும் ஆராய்ந்து உணராமல், அதையே பற்றிக் கொண்டு துன்பத்துக்கு உள்ளாகும் நிலையும் ஏற்படக் கூடும். மனிதனின் உட்பகையாக விளங்கி அவனது நற்செயல் முயற்சிகளுக்குத் தடையாக இப்பேதமைப் பண்பு இருப்பதால், பகையியலில் ஓர் அதிகாரமாகக் கொண்டனர். ‘கொளுத்தக் கொண்டு கொண்டது விடாமை’ என்னும் மாதர்க்கு அணிகலனாகிய (மடம்) பேதமையும், முழு மூடத்தனம் எனப் பொருள்படும் இந்தப் பேதமையும், ஒரே தன்மையைக் கொண்டவை அல்ல. இரண்டுக்கும் வேறு வேறு அர்த்தம் உண்டு.
(கொலை செய்வதில்) உயிரைப் பறிப்பதில் வல்லமை கொண்ட யமன் நம் உயிரைப் பறிக்கச் சரியான வேளையை எதிர்பார்த்துக் காத்திருக்கிறான். ஆனால், இதை அறியாமலும், உணராமலும், உலக வாழ்க்கை என்னும் வலையில் சிக்கிப் பெருமை பொங்கப் பேதை மனிதன் களித்துக் கொண்டிருக்கிறான். விலங்குகளைக் கொன்று உடலைப் புசிக்கும் வேடன், உலை நீர்ப்பாத்திரத்தை அடுப்பில் ஏற்றித் தீமூட்டி, அதில் உண்பதற்கு ஏற்ற வகையில் வேகுவதற்காக ஆமையைப் போடுகிறான். இன்னும் சிறிது நேரத்தில் கொதிக்கும் தண்ணீரில் வெந்து சாகப் போகிறோம் என்பதை அறியாமல் அந்த ஆமை, பாத்திரத்திலுள்ள தண்ணீரில் மூழ்கி மூழ்கி விளையாடிக் கொண்டிருக்குமாம். கொதிக்கும் தண்ணீரில் வெந்து இறக்கப் போவதை உணராத ஆமை அதில் நீந்திக் களிப்பதுபோல், யமனால் உயிர் பறிக்கப்படப் போவது தெரியாமல் உலக வாழ்க்கையில் பேதை மனிதன் களித்துக் கொண்டிருக்கிறான். பேதைக்கு ஆமை உவமானம்.
‘குடும்பத்துக்குத் தேவையான காரியங்களைக் குறைவின்றிச் செய்து முடித்த பிறகு, அறச்செயல்கள் செய்வது குறித்து யோசிப்போம்’ என்னும் கருத்து ஏற்புடையதன்று. இத்தன்மையானது கடலில் நீராடச் சென்றவர் ‘கடலின் பேரொலி முழுவதும் அடங்கிய பிறகு நீராடுவோம்’ எனச் சொல்வதற்கு ஒப்பாம். கடல் அலையும் ஓயாது, கடல் ஒலியும் அடங்காது என்பனபோல் குடும்பக் காரியங்களும் எந்நாளும் முற்றவும் நிறைவுறா. அன்றாடம் இடைவிடாமல் தொடர்ந்து கொண்டே இருக்கும். எனவே, குடும்பக் காரியங்களைச் செய்து முடித்த பிறகு அறம் செய்வோம் என எண்ணாமல், அறச் செயல்களில் தாமதிக்காமல் மனம் செலுத்துக. நன்மை செய்ய வேண்டுமென எண்ணுவோர் யாருக்காகவும், எதற்காகவும் காத்திருக்காமல் உடனே செய்தல் வேண்டும் என்பது கருத்தாம்.
உயர்குடிப் பிறப்பு, சிறந்த தவம், நல்ல கல்வி, குடும்பத்தைக் காப்பாற்றும் செல்வ வளம், ஒழுக்கத்தின் முதிர்ந்த வயது ஆகிய ஐந்தும் ஒருவன் ஒருங்கே பெற்றிருத்தல் வேண்டும். இவை பொருந்திய போதும், நன்மை மிகுந்த குற்றமற்ற பழமையான சீரும் சிறப்பும் புகழும் உடைய உலகத்துக்கு ஏற்றச் செயல்களை அறியாமலும், செய்யாமலும் இருப்பது பேதமை ஆகும். உயர்ந்தோராகிய அறிஞர்களின் பாராட்டைப் பெறாததும், உலகத்தோடு ஒட்டி வாழாதார் வாழ்க்கையும் அர்த்தமற்றது. பால் சோற்றில் சர்க்கரை உள்ளிட்ட இனிப்பான பொருள்களைக் கலந்தாலும், நெய் கலக்காவிட்டால் அதன் சுவை நிறைவடைவதில்லை. அதுபோல், இம்மையில் மேற்கூறிய ஐந்தும் பெற்றும், மறுமையில் சொர்க்கம் மோட்சம் பற்றி அறியாதிருப்பவனும், அடைவதற்கான எதையும் செய்யாதிருப்பவனும், பேதமையாளனே. நெய் கலக்காத பால் சோறு வெறும் வெண்ணிறமுடைய சோறு என்பதுபோல், உலகத்தாரோடு (சான்றோருடன்) ஒட்டி ஒழுகாத வாழ்க்கை வீண் என்பது கருத்தாம்.
உத்தமர், மத்திமர், அதமர் என மனிதர் மூவகையினர். அதமர் எனப்படும் கடைப்பட்ட மனிதர்களை விடவும், கற்றறிந்த சான்றோர் சொல் கேளாத அறிவிலிகளை விடவும், தாமும் அறியாது அடுத்தவர் பேச்சுக்கும் செவி மடுக்காத தற்குறிகளை விடவும், கற்கள் உயர்ந்தவையாம். யாருக்கும் எந்த உதவியையும் செய்யாத உயிருள்ள இத்தகைய பேதைகளைக் காட்டிலும், ஜீவனற்ற உணர்ச்சியற்ற கற்களே மேலானவை. கற்களுக்கும் சொந்தப் புத்தி இருக்காது, சொல்வதைக் கேட்காது, உணர்ச்சியும் இருக்காது. ஆனாலும், தம்மை வந்து சேர்ந்தவர்கள் நிற்கவும், நடக்கவும், உட்காரவும், படுக்கவும் உதவுவதால் மூடர்களை விடவும் கற்களே சிறந்தவையாம். உதவாத பேதையர் விடவும், உதவும் கற்களே மேலானவை.
பெறக் கூடிய பயனேதும் இல்லை என்றாலும், ஏதோவொரு பயனைப் பெற்றவன் போன்று, ஏழை மீது சினம் கொண்டு, துன்பம் தரும் சொற்களால் கடிந்து கொள்வான். தன் மீது பகை பாராட்டாத எளியோர் / உயர்ந்தோர் மீது கோபம் கொண்டு தூற்றுவான். அவர்களை வசை பாடாவிட்டால், அறிவற்ற அப்பேதையின் நாக்கில் தினவெடுக்கும், அரிப்பெடுக்கும். எந்தப் பயனுமின்றியும், ஆதாரமின்றியும், வாய்க்கு வந்தபடி நிந்தனைச் சொற்களைப் புதிது புதிதாகக் கற்பித்துத் திட்டித் தீர்க்காவிட்டால், மூடர்களுக்குத் திருப்தி இருக்காது. காரணமின்றிப் பிறரைப் பழிப்பதே பேதையர் குணம்.
நல்ல தளிர்களுடன் கூடிய புன்னை மரங்கள் பூத்திருக்கின்ற கடற்கரைச் சோலைகளைக் கொண்ட பாண்டிய வேந்தனே! அடக்கமும், நல்லொழுக்கமும் இல்லாத பேதையர் பின் சென்று அவருடன் நட்பு பாராட்டுவதும், உறவு கொள்வதும், வணங்கியும் அடங்கியும் விரும்பும்படியும் செய்துவிடுவோம் எனக் கூறுவதும், நடவாத செயலாகும். இத்தகைய இழிவான பேதையருடனான பழக்கமும், நல்லவராக மாற்றுவோம் எனச் சொல்வதும், கருங்கல்லைக் கைகளால் கிள்ளி எறிவேன் என்பதற்கு ஒப்பாகும். கைத்தோல்தான் பிய்ந்து போகும். கருங்கல்லைக் கையால் கிள்ளி எறிய முடியாததுபோல், ஒழுக்கமற்ற பேதைகளையும் திருத்தி நல்வழிப்படுத்த முடியாது.
பாத்திரத்தின் உள்ளே இருக்கும் நெய் உணவாகக் கிடைக்காது எனத் தெரிந்தும், எறும்புகள் எளிதில் அவ்விடத்தை விட்டு அகலாது. பாண்டத்தின் வெளிப்புறத்திலேயே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருக்கும். மேலும் கீழுமாக ஊர்ந்து கொண்டிருக்கும். அதுபோல் கைநிறைய செல்வம் இருந்தும், யாருக்கும் எதுவும் கொடுத்து உதவாத கஞ்சனாகச் சிலர் இருப்பார்கள். செல்வம் இருந்தும் உதவ மாட்டார்கள் எனத் தெரிந்தும் பேதைகள் அவர்களைப் பற்றிக் கொண்டு நீங்காதிருப்பர். ஏதேனும் கிடைக்காதா என்ற நப்பாசையில், விடாமல் உலோபியைச் சுற்றிச் சுற்றி வருவார்கள்.
குற்றமற்ற ஒழுக்கமுடைய அறிஞர்கள் நிறைந்த அவையை நாடார். நூல்கள் விளக்கும் தான தரும அறச்செயல்களைச் செய்யார். ஏதுமற்ற ஏழை எளிய வறியோர்க்கு எந்தப் பொருளையும் ஈயார். நற்குணமும் நற்செய்கையும் கொண்ட மனைவியின் தோள்களைத் தழுவி இல்லற வாழ்வில் கூடி மகிழார். கீர்த்தி உண்டாகும்படி புகழுடன் வாழார். இந்த மண்ணில் வாழும் நாளெல்லாம் வீணான பயனற்ற நாள்களே என அப்பேதைகளும் வெறுப்பார்கள். உலகோரும் வெறுப்பார்கள். (மனைவியின் தோள்களைத் தழுவார் எனில் பொது மகளிர் தோள்களைத் தழுவுவார் எனப் பொருள் கொள்ளலாம்.)
பல நூல்களை ஆராய்ந்து கற்றுணரும் ஆற்றலும் அறிவு இல்லாத பேதையை, நன்கு வியந்தும், மதித்தும், அவனது நட்பை விரும்பி ஒருவர் புகழ்ந்து பேசினார். ஆனால், அந்த நற்குணம் இல்லாதவன், அன்புடன் கூடிய புகழுரைகளை விரும்பவில்லை எனில், அவனுடன் கொள்ளும் நட்பினாலும், உறவினாலும், எந்தப் பயனுமில்லை. இத்தகைய புல்லறிவாளனை விரும்பி ஒருவர் விழைய, அந்த மூடனோ அன்பை ஏற்றுக் கொள்ள மறுத்துப் புறக்கணிக்கிறான். பேரொலியுடன் பாய்ந்து வரும் அலைகள் சூழ்ந்த இந்த உலகம் முழுவதையுமே தருவதாக இருந்தாலும், இந்த நட்பில் இனிமை இருக்காது. துன்பமே மிஞ்சும். ஆசையுடன் நாடி வந்து நேசிப்பவரை, தாமும் நேசிக்காத மூடருடனான உறவு, உலகையே பயனாகத் தருவதாக இருப்பினும், துன்பமே தரும். தம்மை மதிப்போரைத் தாமும் மதித்தல் பெரியோர் இயல்பு. தம்மை மதிப்போரைப் பதிலுக்குத் தாமும் மதியாது அவமதித்தல், பேதை இயல்பு. இருவரும் பரஸ்பரம் ஒருவர் மீது மற்றொருவர் கொள்ளும் அன்பே இன்பம் தரும்.
ஒருவனது பல நூல்களைக் கற்ற கல்விப் புலமையையும், மிகுதியாக உள்ள மென்மைக் குணத்தையும், உயர்குடிப் பிறப்பு மேன்மையையும், மற்றவர்கள் போற்றிப் புகழ வேண்டும். அதுவே உண்மையான பெருமையும் கௌரவமும் ஆகும். மாறாக, இவை அனைத்தையும் பெற்ற ஒருவன் தனக்குத் தானே தம்பட்டம் அடித்துப் பாராட்டிக் கொண்டால், பரிகாசம் செய்வோர் அதிகமாகி, மருந்து மாத்திரைகளாலும் தணியாத பித்தன் என்றும் பைத்தியம் என்றும் அனைவராலும் இழித்தும், பழித்தும், நகைக்கப்படுவான். தற்புகழ்ச்சி பேதைக் குணமாம்.
(தொடரும்)